24 Nov 2020

இத்தோட முடிச்சிக்கலாமா?

இத்தோட முடிச்சிக்கலாமா?

செய்யு - 635

            வெள்ளிக் கெழம மகளிர் காவல் நிலையத்துல வர்ற சொன்னாங்கன்னா, வியாழக் கெழம சமூக நீதி மையத்துல வர்றச் சொல்லியிருந்தாங்க. அதுக்கு இடையில வக்கீல் திருநீலகண்டன் போன் பண்ணி பாலாமணி திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துல முன்ஜாமீன் பெட்டிஷன் போட்டிருக்கிறதா சொன்னாரு. எந்த ஸ்டேஷன்லயும் கம்ப்ளெய்ண்ட் இல்லாம எப்பிடி முன்ஜாமீன் கொடுக்குறதுன்னு ஜட்ஜ் கேட்குறதாவும் சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு. ஒவ்வொரு நாளும் அந்த பெட்டிஷன் தொடர்பா கோர்ட்டுல நடக்குறதெ போன் பண்ணிச் சொல்லிக்கிட்டெ இருந்தாரு.

            புதன் கெழம ராத்திரி போன் பண்ணப்போ பாலாமணிக்கு வியாழக் கெழமெ அல்லது வெள்ளிக் கெழமெ முன்ஜாமீன் கெடைச்சிடும்ன்னும் அதுக்குப் பெறவு பாலாமணிய அரெஸ்ட் பண்ணணும்ன்னு நெனைச்சாலும் முடியாதுன்னும் சொன்னாரு வக்கீல். ச்சும்மா மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்மா சொன்ன ஒரு மெரட்டலுக்கே பாலாமணி அன்ன பயம் பயந்துகிட்டு ஹை கோர்ட்லேந்து வக்கீல கொண்டாந்து வெச்சி முப்பதாயிரம் வரைக்கும் சிலவெ பண்ணிட்டு இருக்குறதாவும் வக்கீல் சொன்னாரு. பாலாமணி ஒரு வாரமா திருவாரூர்லத்தாம் தங்கி இருக்கிறதாவும் பெரிய கூட்டத்தெயே தன் பின்னாடி வெச்சிக்கிட்டு அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருக்குறதாவும் வக்கீல் சொன்னாரு. ஆள போட்டோவுல பாத்ததெ வுட, இப்போ நேர்ல பாக்குறதுக்கு நல்ல பாக்குறதுக்கு யானைக்குட்டி போல பொத பொதன்னு போயிட்டதாவும் சொன்னாரு. ஆக பாலாமணி மகளிர் காவல் நிலையத்துக்கு வர்றாம டேக்கா காட்டுனாலும் உள்ளுக்குள்ள பயந்துக்கிட்டு அந்தப் பயத்தெ வெளியில காட்டிக்கிடாம அதுக்கு என்னத்தெ செய்யணுமோ அதெ யாரும் அறியாதபடிக்குக் செஞ்சிக்கிட்டுத்தாம் இருக்காங்றது சுப்பு வாத்தியாருக்கு ருதுவாச்சு. நாம்ம செய்யுறதுக்கு எதுவும் நடக்கலங்றது நெனைக்க வேண்டியதில்ல, ஏதோ நடந்துகிட்டுத்தாம் இருக்கு, அத்து நமக்கு முழுசா நமக்குத் தெரியலங்ற ஒரு திருப்தி அவரு மனசுக்குள்ள உண்டாச்சு.

            வியாழக் கெழம சமூக நீதி மைய விசாரணைக்குச் சுப்பு வாத்தியாரும் செய்யு மட்டுந்தாம் போனாங்க. ஏற்கனவே மகளிர் காவல் நிலையத்துல எல்லாரும் போயி தேவையில்லாம காத்துக் கெடந்த அனுபவத்தெ நெனைச்சி, போலீஸ் ஸ்டேசனுக்கே வர்றாதப் பயெ சமரச மையத்துக்கு என்னத்தெ வந்துக் கிழிக்கப் போறாங்ற அலட்சியத்தோடத்தாம் போனாங்க. அவுங்க நெனைச்சது தப்புல்லங்கிற மாதிரிக்கி பாக்குக்கோட்டையிலேந்து யாரும் வாரல. கலெக்டர் ஆபீஸூல தரை தளத்துல இருந்த சமூக நீதி மையத்துல மகளிர் காவல் நிலையத்தப் போல ரொம்ப கூட்டமில்ல. ரெண்டு மூணு கேஸூங்கத்தாம் இருந்துச்சு. அதெ வெசாரிச்சி முடிச்சிட்டு செய்யுவக் கூப்புட்டு வெச்சி அவ்வே கதைய கேட்டுப்புட்டு, எதிர் தரப்பு வர்லங்றதால ஒரு மணி நேரத்துக்குள்ள அனுப்பி வெச்சிட்டாங்க. ரொம்ப நேரம்லாம் அவுங்க காக்க வைக்கல. சுப்பு வாத்தியாரும், செய்யுவும் அது முடிஞ்சதும் கோர்ட்டுக்குப் போயி வக்கீலைப் பாத்து சேதியச் சொல்லிட்டு வூடு வந்துச் சேந்தாங்க. மறுநாளு வெள்ளிக் கெழம மகளிர் காவல் நிலையத்துல நிச்சயம் இந்த தடவையாவது எதாச்சும் நிச்சயம் விசாரணை இருக்குங்றதால பழையபடியே சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடு, செய்யுன்னு நாலு பேருமா சேந்துப் போனாங்க.

            நாலாவது தடவே போனப்பவும் மகளிர் காவல் நிலையத்துல கூட்டத்துக்கு எந்தக் கொறைவும் இல்ல. அவ்வளவு கூட்டத்துலயும் வெளியில வந்த போலீஸ்கார அம்மா ஒண்ணு, "செய்யு தரப்புல யாரு வந்திருந்தாலும் உள்ளார வாங்க!"ன்னாங்க போன கொஞ்ச நேரத்துல.

            "இன்னிக்கு நேரடியா வெசாரணைத்தாம். இன்னிக்கு எல்லாம் முடிஞ்சிடும். இத்தனெ நாளு காத்திருந்ததுக்கு இன்னிக்குத்தாம் பலன் கெடைக்கப் போவுது!"ன்னு ஆவலாதியா எல்லாரையும் உள்ளார அழைச்சிக்கிட்டுப் போனாரு கைப்புள்ள.

            இன்ஸ்பெக்டர் அம்மா தொடந்தாப்புல போன அடிச்சிக்கிட்டே இருந்தாங்க. "ஒம் புருஷனுக்குத்தாம் அடிக்கிறேம். எடுக்கவே மாட்டேங்றாம்! செரியான ஜகதலபிரதாபனா இருப்பாம் போலருக்கு. அன்னிக்கு நாம்ம போன்ல பேசுனதெ அப்பிடியே ரிகார்ட் பண்ணி நம்ம மேல புகார் கொடுத்திருக்காம் டியெஸ் ஆபீஸ்ல. இவனெ மாதிரி கிரிமினல் பயல நாம்ம பாத்ததில்ல. நாம்ம என்ன பண்ணிட்டேம்? புருஷன் பொண்டாட்டிப் பெரச்சனெ. அதெ பேசித் தீக்கலாம் வாடான்னு கூப்புட்டது ஒரு தப்பா? அந்தப் பயெ வர்றாம இருந்தவாசித்தாம் அப்பிடிப் பேச வேண்டியதா போயிடுச்சு. பாத்தும்மா அந்தப் பயெகிட்ட எச்சரிக்கையா இருந்துக்கோ. அவ்வேம் இந்த மாதிரி செஞ்சதால அவனெப் பத்தி எல்லா விசயத்தையும் நோட்டம் வுட்டுட்டுத்தாம் இருக்கேம். பயெ இஞ்ஞ டவுன்லத்தாம் இருக்காம். இன்னிக்கு வந்திடுவான்னுத்தாம் போன அடிக்கிறேம். எடுக்க மாட்டேங்றாம். அதாம் மொத இதாவே ஒன்னோடத எடுத்துப்புடுவேம்ன்னு வாரச் சொன்னேம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா கொஞ்சம் லேசா பதற்றப்பட்டதப் போல. அவுங்க பத்து மொறைக்கு மேல அடிச்சதுக்குப் பெறவு பாலாமணி போன எடுத்து, "ஏம் மேடம் அடிக்கடிப் போனப் பண்ணி டார்ச்சர் பண்ணுறீங்க? முக்கியமான கேஸ்ஸப் பாத்துட்டு இருக்கேம். வந்துக்கிட்டுத்தாம் இருக்கேம். போன வையுங்க!"ன்னு அலட்சியமா சொல்லி போனைக் கட் பண்ணிட்டாம்.

            இன்ஸ்பெக்டர் அம்மா செய்யுவப் பாத்து, "சித்தெ வெளியில வெயிட் பண்ணுங்க. அந்தப் பயெ வந்துப்புடட்டும். வெசாரணைய வெச்சிப்போம்!"ன்னு சொல்லி வெளியில அனுப்பி வெச்சாங்க. வெளியில வந்து அதெ பழைய வேப்ப மரத்தடியில நின்னப்போ செய்யு சொன்னா, "அவ்வேம் வர மாட்டாம்ப்பா! அவனையெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. பிராடாவே பொறந்து பிராடவே வளந்தவேம். எந்த ஓட்டையிலப் பூந்து எப்பிடி வெளியில வாரணுங்றது அவனுக்குத் தெரியும்!"ன்னா மனசெ விட்டுப்புட்டவளப் போல. சுத்தமா மனோபலத்தை இழந்துட்ட ஒருத்தி இன்ன அளவுக்கு ஈடுகொடுத்து இப்படி இந்த அளவுக்கு வர்றதே பெரிசுங்ற மாதிரிக்கு அவளெ தெம்பு பண்ணுறாப்புல, "இப்பிடி அவ்சரப்பட்ட எப்பூடி? பொறு! இன்னிக்கு அவ்வேம் வந்துத்தாம் ஆவணும். நாக்கெ புடுங்கிகிறாப்புல நாலு கேள்வியக் கேளு. நீயி கேக்காட்டியும் போலீஸ்கார அம்மா கேட்டுப்புடுவாங்க! போதுமா?"ன்னாரு கைப்புள்ள.

            ஸ்டேசனுக்கு வெளியில டீ விக்குறவரு மும்மரமா யேவாரத்துல இருந்தாரு. சனங்க அது பாட்டுக்குப் புண்ணியத் தலத்துக்கு வர்றாப்புல வந்துகிட்டெ இருந்துச்சுங்க. வந்ததும் வாராதுமா ஸ்டேசனப் பாக்குறதுக்கு மின்னாடி டீ விக்குறவர்ரப் பாத்து டீத்தண்ணிய வாங்கி ஊத்துனுச்சுங்க. ஊத்திக்கிட்டெ, "இஞ்ங வர்றதுல இத்து ஒண்ணுத்தாம் உருப்படியா நடக்குது. நம்மால ஒருத்தரு சம்பாதிக்கிறாரு. நாலு வூட்டுல இப்பிடிச் சண்டெ நடந்தா இவரு காட்டுலத்தாம் மழெ!"ன்னு சொல்லிக்கிட்டெ சிரிச்சுக்கிட்டெ காசியக் கொடுத்துச்சுங்க. டீ விக்கற ஆளும் ஒண்ணும் சொல்லாம சிரிக்கிச்சிட்டெ கொடுத்த காசிய வாங்கி சைக்கிள் ஹேண்டில்பார்ல மாட்டியிருந்த சின்ன துணிப்பையிக்குள்ளப் போட்டுக்கிட்டாரு.

            ப்ளாஸ்க்ல டீத்தண்ணியப் போட்டுக் கொண்டிருந்தாலும் சுப்பு வாத்தியாரும் டீ விக்குறவர்ர கூப்புட்டு ஆளுக்கு ஒரு சுக்கு டீய வாங்கிக் கொடுத்தாரு. அதெ வாங்கிட்டு, "இதென்ன அதிசயமா இருக்கு? கொண்டாந்த டீத்தண்ணியக் குடிக்கிறது வுட்டுப்புட்டு, காசிக் கொடுத்து வாங்கிக்கிட்டு? ஆத்துல தண்ணி ஓடிட்டு இருக்குறப்போ ஏம் ஊத்த நோண்டிக் குடிக்கணும்?"ன்னாரு கைப்புள்ள சிரிச்சிக்கிட்டெ.

            "ஒரு ஒழைப்பாளிக்கு ஒதவுனதா இருக்கட்டுமே!"ன்னு சொல்லிட்டுச் சிரிச்சாரு சுப்பு வாத்தியாரு.

            "புண்ணியமான வேலத்தாம்யா ஒமக்கு. வவுத்தெரிச்சலோட வர்றவங்களுக்கு வவுத்துப் பசிய ஆத்துறே!"ன்னாரு கைப்புள்ள டீ விக்கற ஆளப் பாத்து. அதெ கேட்டதும், "பீடி இருக்குது. வாணுமா?"ன்னாரு அந்த ஆளு.

            "நம்மளப் பாத்தா பீடி வலிக்குற ஆளு மாதிரி தெரியுதா?"ன்னாரு கைப்புள்ள முன்மண்டெயத் தடவிக்கிட்டு.

            "இந்தக் காலத்துல யாருங்க பீடி வலிக்காம இருக்காக. டீய வுட பீடி யேவாரந்தாம் அதிகம்! அதாங் பீடியும் வெச்சிருக்கேம் யேவாரத்துக்கு!"ன்னு சொல்லிக்கிட்டு டீ விக்குற ஆளு அடுத்த யேவாரத்தப் பாக்கப் போனாரு.

            பன்னெண்டு மணி வாக்குல ஸ்டேசன் மின்னாடி இன்னோவா காரு ஒண்ணு வந்து நின்னுச்சு. அதெ உத்துப் பாத்த விகடுவுக்குக் கலியாண நாளு அன்னிக்கு வந்த அதெ காருதான்னு புரிஞ்சது. அதெப் பாத்ததும், "பாக்குக்கோட்ட சனங்க வந்துட்டாங்க போல!"ன்னு ஸ்டேசனுக்கு உள்ளார கெளம்ப தயாரானாம். கைப்புள்ள விகடுவோட கையப் பிடிச்சி அமத்துனாரு. "போலீஸ்காரவுக வந்து கூப்ட்டு வுடட்டும். அப்ப போனத்தாம் கெளரவம். இல்லன்னா இதுக்காக வந்து வந்துக் காத்துக் கெடக்குறதா அசிங்கமா நெனைச்சிப்புடுவானுவோ அந்தப் பயலுவோ!"ன்னாரு கைப்புள்ள.

            இன்னோவாலேந்து ஒரு கருப்பு கோர்ட்டு போட்டிருந்த வக்கீலும், பழைய பரமசிவம்ன்னு ரண்டு பேருதாம் எறங்குனாங்க. வேற யாரும் அதுக்குள்ள இருக்குறாப்புலயும் தெரியல. மின்னாடி டிரைவரு மட்டுந்தாம் இருந்தாரு கதவெத் தொறக்காம.

            உள்ளாரப் போனவங்க அஞ்சு நிமிஷத்துல சட்டுன்னு வெளியில வந்தாங்க. அவுங்க வெளியில வந்ததும் ஸ்டேஷனுக்கு வெளியில வந்து, "செய்யு தரப்புல இருக்குறவங்க உள்ளார வாங்க. இன்ஸ்பெக்டர் அம்மா கூப்புடுறாங்க!"ன்னு சத்தம் போட்டாங்க போலீஸ்கார அம்மா ஒண்ணு.

            உள்ளாரப் போனதும் இன்ஸ்பெக்டர் அம்மா ஒதட்டப் பிதுக்குனாங்க. "தப்பிச்சிட்டாம் மாப்ளே! முன்ஜாமீன் வாங்கிருக்காம். நீஞ்ஞ சோஷியல் வெல்பேர்லயும் காயிதம் கொடுத்திருக்கியளா?"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா.

            ஆமாங்ற மாதிரிக்கி எல்லாரும் தலையாட்டுனதப் பாத்து, "ரொம்ப பெரமாதமா வெல பண்ணிருக்காம். வக்கீல வுட்டு இந்த வெசயத்த சோஷியல் வெல்பேர்லயே மேக்கொண்டு டீல் பண்ணிக்கிறதாவும், எனக்கும் எம் பொண்டாட்டிக்கும் எந்தப் பெரச்சனெ இல்லன்னும், நாம்மதாம் பெரச்சனைய உருவாக்கிட்டு இருக்குறதாவும், அவனெ நாம்ம மெரட்டுறதாவும், அதால இங்க அவனுக்கு ஞாயம் கெடைக்காதுன்னும், சோஷியல் வெல்பேர் மூலமாவே சமரசம் பண்ணிக்கிறதாவும் காயிதத்துல எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்து அனுப்பிருக்காம். அதால மேக்கொண்டு இதுல எதுவும் பண்ண முடியாத நெலமெ. நீஞ்ஞ சோஷியல் வெல்பேர்க்குப் போங்க. ஒத்து வாரலன்னா அவுங்களே கோர்ட்ல கேஸப் போட்டு வுட்டுப்புடுவாங்க. கோர்ட்டு கேஸூன்னு அலைஞ்சத்தாம் அந்தப் பெய சரிபட்டு வருவாம்! ஒஞ்ஞள நாம்ம கைவுட்டுப்புட்டதா நெனைக்காதீயே. கோர்ட்டுல எதாச்சும் வெசாரணைன்னு வந்தா நம்மளயுந்தாம் கூப்புடுவாங்க. அப்போ வெச்சிக்கிறேம் மாப்புள்ளைக்கு பட்டாச! பாத்துக்கிடலாம் அச்சப்படாம போங்க. அவ்வேம் தலைக்கு மேல கத்தித் தொங்கிட்டு இருக்குறது நெசம். எப்போ அந்தக் கத்தி அந்து விழுங்றதுதாம் யிப்போ தெரியல. அவனுக்கு கன்பார்ம் பனிஷ்மெண்ட் இருக்கு. பயப்படாம போங்க!"ன்னு சொல்லி வெளியில அனுப்பி வெச்சாங்க. சுப்பு வாத்தியாருலேந்து விகடு, கைப்புள்ள, செய்யு வரைக்கும் எல்லாரும் மேக்கொண்டு என்ன பேசுறது, என்ன செய்யுறதுன்னு புரியாம அவுங்கள கையெடுத்துக் கும்புட்டுட்டு வெளியில வந்தாங்க.

            வெளியில இன்னோவா காரு அந்தாண்ட இந்தாண்ட நகராம அங்கேயே கெடந்துச்சு. அதுக்குப் பக்கத்துலயே வக்கீலும், பழைய பரமசிவமும் நின்னுகிட்டு இருந்தாங்க. வெளியில வர்ற சுப்பு வாத்தியார்ரப் பாத்துட்டு ரண்டு பேருமே பக்கத்துல வேப்பமரத்தடிய நோக்கி வந்தாங்க.

            "அழகா முடிச்சித் தர்றேம்ன்னு சொன்னேம். காசி பணத்தையும் கூட கொறைச்சலு ஏத்தோ பேசி வாங்கத் தர்றேம்ன்னுத்தான சொன்னேம். ஏம்ய்யா கொடுக்குறதெ வாங்கிட்டு அசிங்கப்படாம போயிடுன்னு சொல்லியும் இப்பிடி ஸ்டேசன்ல வந்தா புகார்ர கொடுக்குதீயே? யிப்ப என்னவாச்சு? மாப்புள்ள ஸ்டேசனுக்கே வர்றாம கதையெ முடிச்சிட்டாரு. இதுல என்னத்தெ கண்டீரு? சொன்ன மாதிரி செஞ்சேமா இல்லியா? இப்பிடி முடிக்கிறதுக்கு இதுல மட்டுமில்ல வேற எதுவா இருந்தாலும் செரித்தாம் எஞ்ஞளுக்கு ஓராயிரம் வெசயம்ங்க தெரியும். அதுலப் பாரும்யா! எஞ்ஞ மாப்புள ஸ்டேசன்ல காலடியில கூட எடுத்து வைக்கல. பொண்ண போட்டு இப்பூடி ஸ்டேசன் ஸ்டேசனா இழுத்துக்கிட்டு அசிங்கப்படுறீயேய்யா! நீயெல்லாம் படிச்ச வாத்தியா? முட்டா கூதியா? கேக்குறேம். படிச்சிப் படிச்சிக் கிளிப்புள்ளைக்குச் சொல்றாப்புல சொல்றேம் கேக்குணுமா இல்லியா? நீயே யிப்பிடி மரமண்டையா இருந்தா ஒங்கிட்டெ பாடம் படிச்ச குஞ்சு குலுவானுங்க படிச்சிக் கிழிச்சி வெளங்கியிருக்கும். சுத்தமா ஒண்ணும் புரியாத தொன்னையா இருக்கியேய்யா! இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. கொடுக்குற காசியில முப்பதாயிரத்தெ கொறைச்சிக்கிட்டு வாங்கிட்டுப் போறதுன்னா சொல்லு. ஒடனே முடிச்சி வுடுறேம். அதுல பாருய்யா! ஏம் முப்பதாயிரம் கொறையுதுன்னா இஞ்ஞ வர்றாம இருக்குறதுக்கு அவ்ளோ காசி சிலவாயிருக்கு. அதால அந்தக் காசிய கழிச்சிக்கிட்டு மிச்சத்தத்தாம் தர்றாப்புல இருக்கு. யில்ல நாம்ம வேற மொறையிலத்தாம் பாப்பேம்ன்னா பாத்துக்கோ. சிலவழிஞ்சிப் போவப் போறது எஞ்ஞகிட்டெ இருக்குற ஒங் காசித்தாம். ஒங்காசிய வெச்சே நீயி பண்ணுற ஒவ்வொரு வேலைக்கும் காசிய அழிப்போம். எஞ்ஞளுக்கு ன்னா கைநட்டம் ஆயிடப் போவுது? அடுத்ததா சோஷியல் வெல்பேர்ரா? போ! தாராளமா போ! அஞ்ஞயும் இப்பிடித்தாம் நடக்கும். ஒரு மசுரையும் புடுங்க முடியாது. கவர்மெண்ட்ல இதெயல்லாம் ச்சும்மா ஒரு பேருக்கு வெச்சிருக்காம். பெறவு இதெல்லாம் இல்லன்னா வக்கீலுக்கும், போலீசுக்கும், சமரச மையத்துல இருக்குறவங்களுக்கும் ன்னா வேல இருக்குச் சொல்லு? இதுல உள்ளவங்கல்லாம் சம்பாதிக்க வேணும் இல்லியா? அத்துப் புரியாம கிறுக்குப் பய புள்ளெ போல நடந்துக்கிறீயேய்யா! ன்னா ரண்டுல ஒண்ணுத்தெ சொல்லு! முடிச்சிக்கிடலாமா? தொடந்துக்கிடலாமா?"ன்னாரு பழைய பரமசிவம் மெரட்டுறாப்புல.

            "நல்ல குடும்பத்துலப் பொறந்துட்டு இங்க வந்து நிக்குறதே அசிங்கம். இதுக்கும் மேல சமரச மையம், கோர்ட்டுன்னுப் போயி நிக்காதீங்க. கூண்டுல ஒரு பொண்ண ஏத்துனா பச்சைப் பச்சையாத்தாம் கேள்வியக் கேப்போம்! நாண்டுகிட்டுச் சாவுறாப்புல ஆயிடும். ஏற்கனவெ பொண்ணு ஒரு சூசைட் அட்டம்ப்ட் பண்ணிருக்குல்ல. இன்னொரு அட்டெம்ப்ட்டுக்குப் போவாதுங்றதுக்கு எந்த நிச்சயம் இல்ல. அதுவும் கூண்டுல ஏத்துனா தொங்காதுங்றதுக்கு எந்த உத்திரவாதமும் கெடையாது!"ன்னாரு கூட வந்த வக்கீலும் சுப்பு வாத்தியார்ரப் பாத்து மெரட்டுற தொனியில.

            "எப்பிடித் தோது? காசியும் போயி, உசுரும் போயி தேவையா அதெல்லாம்?"ன்னாரு பழைய பரமசிவம் தொடந்தாப்புல ஒத்து ஊதுறாப்புல.

            சுப்பு வாத்தியாரு என்ன பேசுறதுன்னுப் புரியாம நின்னுகிட்டு இருந்தாரு.

            "வாலில்லாத பட்டமும், ஓட்டையில்லாத சட்டமும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்படல. தெறமையான வக்கீலால கொலைகாரனையும் விடுவிச்சிட முடியும். அப்பாவியையும் கொலைகாரனா மாத்தி உள்ளார தள்ளிட முடியும். இதுக்குன்னே விடிய விடிய தூங்காம யோஜிச்சுக்கிட்டு இருப்பேம்யா பாத்துக்குங்க!"ன்னாரு கூட நின்ன வக்கீலு ஓங்கிப் போட்டுத் தாக்குறாப்புல.

            சுப்பு வாத்தியாருக்கு அவுங்க சொல்றதெ கேக்க கேக்க நடுக்கமாத்தாம் இருந்துச்சு. இதுவரைக்கும் வந்ததே போதுமான்னு கூட ஒரு நிமிஷம் பட்டுன்னு நெனைச்சாரு. கைப்புள்ளையும் பாக்குறதுக்குக் கொஞ்சம் தயங்குனாப்புலத்தாம் தெரிஞ்சாரு. பொண்ணப் பெத்தவரோட மனசு புரியாம நாம்ம பாட்டுக்கு வார்த்தைய விட்டுப்புடக் கூடாதுங்ற தவிப்புல அவரு இருந்தாரு. விகடுவுக்கும் வெசாரிக்காம கூட இப்பிடி அனுப்புவாங்கன்னு கொஞ்சம் கூட நெனைப்புத் தோணல. சொல்லியடிக்குறாப்புல பாலாமணி பண்ண இந்த ஏற்பாட்டைப் பாக்க மலைப்பாத்தாம் இருந்துச்சு.

            "இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல. ஒத்துக்கிட்டா இத்தோட முடிச்சிக்கிடலாம். இல்லன்னா கோர்ட்லத்தாம் பாக்குறாப்புல ஆயிடும்!"ன்னாரு பழைய பரமசிவம் சுப்பு வாத்தியாருக்கு ரண்டு ஆப்ஷன்களக் கொடுக்குறாப்புல.

            "கோர்ட்ல பாத்துக்கிடறோம்!"ன்னா பட்டுன்னு செய்யு. அந்தப் பதிலெ சுப்பு வாத்தியாரு கூட எதிர்பாக்கல. அதெ கேட்டதும், சுப்பு வாத்தியாரு ஒவ்வொரு வார்த்தையா கோத்துச் சொன்னாரு, "ன்னா ஆனாலும் செரித்தாம். இப்பிடியாச்சும் அந்தப் பயெ நம்மகிட்ட கறந்த காசிய செலவழிச்சி தீக்கட்டும். மொத்தத்துல நம்ம காசி நம்ம கைக்கும் வந்தாலும் பரவாயில்ல. இப்பிடி இந்த வழியில செலவழிஞ்சிப் போனாலும் பரவாயில்ல!"ன்னாரு கொஞ்சம் கூட பிசிறடிக்காம.

            ரொம்பச் சாதாரணமான பதிலுதாம் அத்து. ஆன்னா அந்தப் பதிலு அவுங்க ரண்டுப் பேத்தையும் மெரண்டுப் போறாப்புல செஞ்சது. இருந்தாலும் அந்த மெரட்சிய வெளியிலக் காட்டிக்கிடாம, "அப்போ ஆட்டத்தெ ஆடிப் பாக்கணும்ன்னு ஆசப்படுறீங்க? நல்லதாப் போச்சு. ரொம்ப நாளைக்குப் பெறவு நாமளும் இந்த அளவுக்குக் களத்தெ பாத்து நாளாச்சு. அப்போ அடுத்ததா சந்திப்போம்! கையில இருக்குற காசிப் பணம் பத்தாது. நெறைய தோது பண்ணிக்கிடுங்க! காசி ச்சும்மா தண்ணியா செலவாவும்!"ன்னாரு பழைய பரமசிவம் ஒரு நக்கல் சிரிப்புச் சிரிச்சிக்கிட்டு.

            சுப்பு வாத்தியாரோட இந்தப் பதிலுக்குப் பெறவு கைப்புள்ள தெகிரியமாயிட்டாரு. "என்னவோ காசியக் கொடுத்து ஒதவுறாப்புல பேசிட்டு நிக்குறே? நீயே ஒரு எடுப்புதானே. பையிதூக்கின்னா பையத் தூக்கிட்டுப் போயிகிட்டே நிக்கணும். இப்பிடி நின்னு ஆட்டிக்கிட்டு இருக்கக் கூடாது. தலெ இருக்குறப்ப ஏம் வாலு ஆடுதுன்னா வால ஒட்ட நறுக்கமா வுடுறதுதாம். அதாங் வால ஒட்ட நறுக்கி வுட்டாப்புல பதிலு கெடைச்சுச்சுல்லா. பெறவென்ன கெளம்புறது?"ன்னாரு கைப்புள்ளயும் பதிலுக்கு ஒரு நக்கல் சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.

            "இவரு யாரு தெரியுமா? ஹைகோர்ட்லேந்து கொண்டாந்திருக்கேம்!"ன்னாரு பழைய பரமசிவம் பக்கத்துல நின்னுகிட்டு இருந்த வக்கீலப் பாத்து.

            "சுப்ரீம் கோர்ட்டுலேந்து வாணும்ன்னாலும் வக்கீலக் கொண்டா. அதுக்கு ஒன்னய யாரும் தடெ போட முடியாது. அதெப் போல எஞ்ஞ நோக்கத்துக்கு நாஞ்ஞ வாழ்றதுக்கும் யாரும் தடெ போட முடியாது. இப்பிடி உருட்டி மெரட்டி பயமுறுத்திக் காரியம் சாதிக்க நெனைக்குறதுல்லாம் வாணாம். ஏற்கனவே எவ்வளவு பயப்படணுமோ அவ்ளோ பயந்தாச்சு! பயந்தவம் மெரண்டா நாடு தாங்காது!"ன்னாம் விகடு.

            "இதென்னடா பயந்தவேம் மெரண்டா நாடு தாங்காதுன்னு புதுக்கதெயா இருக்கு. நல்லாவே ஆளாளுக்குப் பேசுதீங்க. இதெல்லாம் பேச்சுக்குத்தாம் நல்லாருக்கும். நடைமொறைக்கு ஒதவாது. நாம்ம நடைமொறையச் சொன்னேம். போயிச் சொவத்துல மோதிக்கிட்டுத்தாம் நிப்பேம்ன்னா நில்லுங்க. சொவத்துக்கென்ன அதுல நஷ்டம்? ஒஞ்ஞ டவுனுக்கே வந்து ஒஞ்ஞ டவுன்லயே இருந்துக்கிட்டு ஸ்டேசனுக்கு வர்றாம இருக்க எம்மாம் தில்லு இருக்கணும்ன்னு நெனைச்சிப் பாக்கணும். யிப்போ மாப்புள்ள டவுனுக்குள்ளுத்தாம் இருக்காரு. ஒஞ்ஞளால என்ன பண்ண முடியுது? இதெ நீஞ்ஞ இந்த மாதிரிக்கு ஒரு நெலமெ ஆயி பாக்குக்கோட்டெயில் நின்னீங்கன்னா வெச்சுக்குங்க பாத்த எடத்துலயே ரத்த ஆறே நாஞ்ஞ ஓட விட்டிருப்பேம். ச்சும்மா வாய்ச்சவடாலு வுட்டா போச்சா? நாம்ம சொல்றதெ நெனைக்கத் தெரியாத மாங்கா மடையனுங்ககிட்டெ பேசிப் புண்ணியமில்ல! கௌம்புவோம் வக்கீல் சார்ரே!"ன்னாரு பழைய பரமசிவம் பயங்கர தெனாவெட்டா.

            "போ! போ! மொதல்ல கெளம்பு கெளம்பு! ஒம்மட ஆளு நாக்கெ தொங்கப் போட்டுக் காத்திக்கிட்டுக் கெடப்பாம். அவ்வேம் தூக்கிப் போடுற எச்ச எலும்பப் பொறுக்கிக்கிட்டு பாக்குக்கோட்டைப் போயி சேர்ற வழியப் பாரு! எஞ்ஞளால யிப்போ எதுவும் முடியாம இருக்கலாம். எஞ்ஞளால என்ன முடியுங்றதெ வரக் கூடிய காலங்கள்ல காட்டுறோம்!"ன்னாரு கைப்புள்ளயும் தெனாவெட்ட வுடாம.

            "ஒண்ணும் இல்லன்னா ஒஞ்ஞளுக்குப் பேச்சக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லடா!"ன்னு எளக்காரமா சொல்லிக்கிட்டெ இன்னோவாவுல ஏறப் போனாரு பழைய பரமசிவம். கூடவே வக்கீலும் போனாரு. அவுங்கப் போகப் போக, "இதெல்லாம் ஒரு பொழைப்புன்னு வந்துப்புட்டானுங்க. சேர்றானுவோ பாருங்க ஆளுங்க அவனுக்குன்னு? பெறவு எப்பிடி அந்தப் பயலுக்கு புத்தி வரும்? பிச்சை எடுக்குதாம் பெருமாளு, அதெயும் புடுங்குதாம் அனுமாருன்னு ஆளுகளும்,‍ மொகரைகளும்!"ன்னாரு கைப்புள்ள கார்ல ஏறுனவங்களோட காதுலு போயி நல்லா வுழுறாப்புல.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...