பொறுத்திருந்து பார்!
செய்யு - 636
இன்னோவா போனதுக்குப் பெறவும் அந்த எடத்தெ
வுட்டு நகர செய்யுவுக்கு விருப்பமில்ல. அப்பிடியே பித்துப் பிடிச்சாப்புல நின்னா. நிரம்பவே
அவனுங்ககிட்டெ தெகிரியமா பேசிருந்தாலும் இப்போ அந்த தெகிரியம் இல்ல. சோந்தாப்புல
இருந்தா. அவ்வே எந்த அளவுக்குப் புகாரா அனுப்பிச்சி எதாச்சும் நடந்துடும்ங்ற நம்பிக்கையோட
வந்தாளோ, அந்த அளவுக்கு நம்பிக்கை வடிஞ்சி இப்போ நின்னா. அவ்வே தளந்திருந்ததப் பாத்து,
"செரித்தாம் வுடு! அவ்வேம் பக்கம் முப்பத்தாயிரத்தெ சிலவு பண்ணித்தாம் இதெ சாதிக்க
முடிஞ்சிருக்கு. அவ்வேம் கையிகாசி முப்பத்தாயிரம் அழிஞ்சிருக்குன்னு நெனைச்சிச் சந்தோஷப்பட்டுக்கோ!"ன்னாரு
கைப்புள்ள அவள ஆறுதல் பண்ணுறாப்புல.
"இதுக்குந்தாம் அவனுங்களே பதிலச்
சொல்லிப்புட்டானுவோ. அவனுங்க சொன்னதெ மாத்திக் கேள்விய உண்டு பண்ணுறீயளா? அத்து
அவ்வேம் காசில்ல! நம்ம காசித்தாம்! அதெ எடுத்துதாங் சிலவெ பண்ணிருப்பாம்! இனுமெ கொடுக்கப்
போற காசியில அதெ கழிச்சித்தாம் சொல்லுவாம்ன்னு அவனுங்களேத்தாம் சொல்றாம் பாருங்களேம்!"ன்னா
செய்யு அவரு ஆறுதல் பண்ணுறது புடிக்காம.
"ஏதோ நம்மால முடிஞ்சதெ செஞ்சிட்டெம்!
எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் வுட்ட வழி. அதுக்கு மேல அடுத்தா சமூக நீதி மையத்துலப்
பாப்பேம்! முடியலன்னா கோர்ட்டுக்குப் போயிடுவேம்! யிப்போ நமக்கு பசி கூட ல்ல. கட்டிட்டு
வந்த சாப்பாடு அப்பிடியே இருக்கட்டும். வூட்டுக்குப் போயி சூடா சாப்பாட்டச் சாப்புடுவேம்.
இன்னிக்கு சூடான சாப்பாடு வூட்டுலன்னு எழுதிருக்கு நமக்கு! அதெ நெனைச்சும் சந்தோஷப்பட்டுக்கோ!"ன்னாரு
கைப்புள்ள வுடாம செய்யுவ ஆறுதல் பண்ணுறாப்புல.
"அதல்லாம் முடியாது. இப்போ நாம்ம
வக்கீலப் பாத்துப் பேசிட்டுத்தாம் வருவேம்!"ன்னா செய்யு பிடிவாதமா.
"அது வேறயா? அவனெப் பாக்கப் போனா
மிச்சப்பட்ட பொழுது கரைஞ்சாப்புலத்தாம். போன்ல சொல்லிட்டுப் போயிட்டே இருப்பமே?"ன்னாரு
கைப்புள்ள அவளோட பிடிவாதத்துக்கு ஒரு பதிலச் சொல்றாப்புல.
"வந்தது வந்தாச்சு. மேக்கொண்டு அவரு
என்னத்தெ செய்யப் போறாங்குற கேள்வி நமக்குள்ள இருக்கு? அவரு யோசனப்படி ஒண்ணு பண்ணி
இப்பிடி நிக்குது! அடுத்ததா பண்ணி எப்பிடி நிக்கும்ங்றதெ அவரு வாயாலேயே கேட்டுக்கிடணுமா
இல்லியா?"ன்னா செய்யு தன்னோட மனத்தாங்கல கொட்டித் தீர்க்குறாப்புல. வக்கீலப் ஒடனே
பாத்தாவணும்ன்னு அவ்வே ரொம்ப பிடிவாதமாவே நின்னா. அதுக்கு மேல என்னத்தெ பண்டறதுன்னு
கைப்புள்ள வக்கீலுக்குப் போன அடிச்சி வெவரத்தச் சொல்லி, "பாப்பா பாக்கணுங்குது!"ன்னாரு.
"ஒண்ணும் பெரச்சனெ யில்ல. நமக்கும்
கோர்ட்டு முடிஞ்சிடுச்சு. அஞ்ஞயே இருங்க. நாம்ம இருவது நிமிஷத்துல வந்துப்புடுறேம்!"ன்னாரு
வக்கீல் திருநீலகண்டன் போன்ல எல்லாரும் ஆச்சரியப்படுறாப்புல. வக்கீலு வர்றதுக்கு இருவது
நிமிஷம் இருக்குறதால அவரு வர்றதுக்குள்ள கொண்டாந்த மத்தியானச் சாப்பாட்ட உக்காந்து
சாப்புட்டுப் புடலாம்ன்னு தோணுச்சு. ஆன்னா யாருக்கும் சாப்புடுற மனநெலையே யில்ல. பழைய
பரமசிவம் பாட்டுக்கு பேசிட்டுப் போயிட்டாரு. அவரோட பேச்சு அவரு போனதுக்கு அப்புறமும்
பல வெதமா மனசுல எதிரொலிச்சிக்கிட்டெ இருந்துச்சு எல்லாத்துக்கும். அவரு பேசுனது ஒரு
மொறைதாம். இப்போ மனசுக்குள்ள எதிரொலிச்சிக்கிட்டு இருக்குறது பல மொறையா இருந்துச்சு.
வழக்கத்தெ போல இருவது நிமிஷத்துல வர்றதா
சொன்ன வக்கீலு ஒரு மணி நேரம் கழிச்சித்தாம் டிவியெஸ் ஸ்டார்சிட்டி பைக்குல வந்தாரு.
அவரு வர்ற வரைக்கும் நடந்ததெப் பத்தியே சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடு, செய்யுன்னு
ஆளாளுக்கு ஒவ்வொரு கோணத்துலப் பேசிட்டு இருந்தாங்க. வக்கீல் திருநீலகண்டன் வந்ததும்
வாரதுதுமா ரொம்ப வேகப்பாட்டோட எல்லாரையும் அழைச்சிக்கிட்டு இன்ஸ்பெக்டர் அம்மா மின்னடிப்
போயி நின்னாரு. அப்பிடியே அவுங்களப் பாத்து ஒரு கும்புட்டப் போட்டாரு. இன்ஸ்பெக்டர்
அம்மாவும் வக்கீல் திருநீலகண்டனப் பாத்தாங்க. பதிலுக்குச் சிரிச்சாப்புல கும்புட்டப்
போட்டாங்க. இந்தக் கும்புடுகளுக்கு ஏதோ உள்ளார்த்தம் இருக்குறாப்புல அவுங்க பேச ஆரம்பிச்சாங்க.
"எப்பா தெய்வமே! திருநீலகண்டா! ஏற்கனவே
மொரட்டுத்தனமா மெரட்டுனதா ரண்டு கேஸூ நம்ம மேல கோர்ட்டுல ஓடிட்டு இருக்கு. இந்தப்
பயெ வேற நாம்ம பேசுனதெ ரிகார்ட் பண்ணி வெச்சிக்கிட்டு எவிடென்ஸோட மெரட்டிட்டு இருக்காம்.
போறப் போக்க பாத்தா ரண்டு கேஸூ மூணு கேஸா ஆயிடும் போலருக்கு. இத்து எத்தாச்சும்
கேஸானுச்சுப் பாரு. நீந்தாம் எடுத்து நடத்துறாப்புல இருக்கு. அதுக்குப் பைசா காசி தர்ற
மாட்டேம். நம்மளோட புரோமோஷன் ஆனவெ ஆர்குடி இன்ஸ்பெக்டரு இருக்காளே! அவ்வே இப்போ
சர்க்கிள் இன்ஸ்பெக்டர்ரா புரோமோஷன் ஆயிட்டா சங்கதித் தெரியும்ல. நாம்ம இன்னம் இப்பிடியே
இருக்கேம் கேஸ்ல மாட்டிக்கிட்டு. அந்த ரண்டு கேஸையும் சீக்கிரமா விடுவிச்சு வுட்டு,
இந்த மூணாவது கேஸூ வாராம இருந்தா அடுத்த லிஸ்ட்லயாவது நம்ம பேரு வந்துடும். ல்லன்னா
இதுக்கு ஒரு கேஸ்ஸப் போட்டுத்தாம் நாம்ம புரோமோஷன் வாங்கணும்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர்
அம்மா வக்கீலப் பாத்து.
"சொல்லுங்க ஒரு கேஸ்ஸ பேஷா போட்டு
வுட்டுப்புடுவேம்!"ன்னாரு திருநீலகண்டன் ஒரு வெடிச்சிரிப்பப் போட்டுக்கிட்டு.
"ஒனக்கென்னய்யா திருநீலகண்டா! நீயிப்
பாட்டுக்கு கேஸ்ஸப் போட்டு வுட்டு புரமோஷன வாங்கிக் கொடுத்துப்புடுவே. மேல இருக்குறவங்ககிட்டெ
வேல பாக்கணுமே. மித்த டிபார்ட்மண்ட் மாதிரின்னு நெனைச்சுக்கிட்டீயா? கோர்ட்டுக்குப்
போயி புரோமஷன் வாங்குன்னா டார்ச்சர் பண்ணுற டிபார்ட்மெண்ட் இத்து. மேல இருக்குறவங்களா
மனசு வெச்சிப் பண்ணணும். அதுக்கு மொதல்ல ரண்டு கேஸையும் இல்லாம அடி. அதெச் சொல்லித்தாம்யா
மேல இருக்குறவங்க நம்மள அமுக்கி வைக்குறாங்க. அத்து மட்டும் இல்லன்னா வெச்சுக்கோ அவுங்கிகிட்டெ
சண்டெ போட்டே புரோமஷனெ வாங்கிடுவேம்! அந்த ஒண்ணாலத்தாம் நாமளே யோசிக்க வேண்டிக் கெடக்கு.
டிபார்ட்மண்ட் ப்ரசீஜர்ன்னு ஒண்ணு இருக்குல்லா. அதெ நாமளே மதிக்கிலன்னா எப்பூடி?"ன்னாங்க
இன்ஸ்பெக்டர் அம்மா தன்னோட நெருக்கடிய சொல்லுறாப்புல.
"அதெ வுட்டுத் தள்ளுங்க. போகுற போக்குல
ன்னா பண்ணுறேம் பாருங்கோ! இப்போ இந்தப் பொண்ணுக்கு ஒரு வழியச் சொல்லுங்கோ!"ன்னாரு
திருநீலகண்டன் செய்யுவக் காட்டி.
"எம் திருநீலகண்டமே! நாமளே ஒங்கிட்டெ
ஒரு வழியக் காட்டி வுடுங்றேம். நீயி நம்மகிட்டெ வழிய கேக்குறே? ஏம் போட்டு ஸ்டேசன்,
சோஷியல் வெல்பேர்ன்னு அலைய வுடுறே? ஸ்ட்ரைட்டா டொமெஸ்டிக் வயலன்ஸ் கேஸ்ஸ ஒண்ணப் போட்டு
வுடு. போட்டு அதுல நம்மளயும் ஒரு சாட்சியா இழுத்து வுடு. கோர்ட்டுல வந்து சொல்றேம்.
அவனையெல்லாம் பக்கவா பண்ணி இழுத்து வுட்டுத்தாம் வழிக்கு வருவாம்? நம்ம மெரட்டல்லாம்
அவ்வேங்கிட்டெ செல்லாது பாத்துட்டேம். நாமளும் டாக்கடர்ரா இருக்கானே! நெறையப் படிச்சவனா
இருப்பாம்! பயந்துடுவாம்ன்னு நெனைச்சேம். கட்டக் கடெசீயா நாம்ம பயந்து நிக்குறதுதாம்
மிச்சம்!"ன்னாங்க இன்ஸ்பெக்டர் அம்மா மேசைய சலிப்பா ஒரு தட்டு தட்டிக்கிட்டு.
அதுக்கு மேல இன்ஸ்பெக்டர் அம்மாகிட்டெ
பேசுறது அர்த்தமில்லன்னு நெனைச்சாரோ என்னவோ, "மிக்க நன்றிகள் ஆய்வாளர் அம்மாவுக்கு.
விரைவில் சரக ஆய்வாளர் ஆகப் போகும் அம்மாவுக்கு வாழ்த்துகள். இப்போ கெளம்புகிறேன்.
விரைவில் அடுத்த வழக்கில் சந்திக்கிறேன்!"ன்னு சொல்லி எல்லாரையும் கெளப்பிக்கிட்டு
வெளியில வந்தாரு திருநீலகண்டன். கெளம்புறப்ப சுப்பு வாத்தியாரு சகிதம் எல்லாரும் அம்மாவுக்கு
கும்புட போட மறக்கல.
வெளியில வந்த திருநீலகண்டன், "சாப்பாட்டு
நேரமாச்சா? ஒஞ்ஞள வேற காத்திருக்கச் சொல்லிப்புட்டேன்னா. அதெ நெனைப்புலயே வந்துப்புட்டேம்.
இப்பப் பாருங்கோ பசி வயித்தெ கிள்ளி எடுக்குது. எதாச்சும் வவுத்துலப் போட்டாத்தாம்
யோசனைய எடுத்து வெளியில தள்ளுவேம்ங்குது மூளை!"ன்னாரு திருநீலகண்டன் ஒரு நமுட்டுச்
சிரிப்ப சிரிச்சுக்கிட்டு.
"நாஞ்ஞ கட்டுச்சோத்தோட வந்தாச்சு.
நீஞ்ஞ வேணுன்னா வூட்டுலப் போயிச் சாப்புட்டு வாஞ்ஞ! ஒஞ்ஞளுக்குச் சாப்பாடு வாங்கிக்
கொடுத்து நமக்குக் கட்டுபடியாகாது!"ன்னாரு கைப்புள்ளயும் நமுட்டுச் சிரிப்போட.
"ஏம் வூட்டுக்குப் போயிட்டு? அதுக்கு
ஒரு அரை மணி நேரம் ஆவும். கட்டுச் சோத்த அவுத்து ஒரு கட்ட நம்மகிட்டெ கொடுங்க. மிச்சத்தெ
நீஞ்ஞச் சாப்புடுங்க!"ன்னாரு திருநீலகண்டன் பட்டுன்னு வேற மேக்கொண்டு யோசிக்க
விரும்பாதவர்ரப் போல.
"அதெல்லாம் வாணாம். கட்டுச்சோறு
பாட்டுக்கு கட்டுனபடியே இருக்கட்டும். ஓட்டல்ல போயி நல்ல வெதமாவேச் சாப்புடுவோம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு அடுத்துக் காரியத்துல எறங்குறாப்புல. கைப்புள்ள அதுக்கு ஒரு வெத்துச்
சிரிப்பு சிரிச்சதோட சரி. மேக்கொண்டு ஒண்ணும் சொல்லாம நின்னாரு.
அதாஞ் சரின்னு எல்லாருமா வண்டியக் கெளப்பிக்கிட்டு
ஒடம்போக்கி ஆத்தாங்கரை பக்கத்துல இருக்குற ஓட்டல் வாசன்ல சாப்புடுறதுன்னு கெளம்பி
வந்தாங்க. எல்லாருமே முழுச்சாப்பாடு சாப்புடுறதுன்னு முடிவாயி உக்காந்து சாப்புட ஆரம்பிச்சாங்க.
சாப்பாட்ட சாப்புட்டுக்கிட்டெ வக்கீலு பேசிட்டே இருந்தாரு. சாப்பாடு பாட்டுக்குச் சாப்பாடு
உள்ளார போயிட்டு இருந்துச்சு, பேச்சுப் பாட்டுக்குப் பேச்சு வெளியில வந்துக்கிட்டெ
இருந்துச்சு.
"நம்ம சர்வீஸ்ல இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரப்
பயல பாத்ததில்லம்மா! பெரச்சனைய முடிச்சிட்டுப் போடான்னா அவ்வேம் பாட்டுக்கு வளத்துக்கிட்டுப்
போறாம்! தேவையில்லாமப் போயி முன்ஜாமீன் எடுக்குறாம். நம்மகிட்டெ வந்து பேசிருந்தான்னா
நம்ம ஆபீஸ்ல அழகா ஒரு சிட்டிங்கப் போட்டு முடிச்சிருப்பேம். பயெ நெருங்கவே மாட்டேங்றானே?
சரியான வீம்புக்கார பயெ! இவனோடல்லாம் எப்பிடி குப்பெ கொட்டுனீயோ?"ன்னாரு திருநீலகண்டன்
செய்யுவப் பாத்து.
"அவ்வேம் ன்னா ஹைகோர்ட் லெவல்லப்
போயிட்டு இருக்காம். நீஞ்ஞப் பாட்டுக்கு இன்னம் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் லெவல்லயே யோஜிச்சிக்கிட்டு
இருந்தா எப்பூடி?"ன்னாரு கைப்புள்ள வக்கீல நிமுண்டி விடுறாப்புல.
"எந்த கேஸா இருந்தாலும் இங்கயிருந்துதாம்
மேல போயாவணும். ஹைகோர்ட்டுல டேரக்டா பண்ணிட முடியமாங்றேம்? ன்னா பெரிய ஹைகோர்ட்டு
வக்கீலு? அஞ்ஞப் போயிப் பாத்தீங்கன்னத்தாம் தெரியும். ஆயிரத்தெட்டு கேஸ்ஸூ கெடைக்காம
அஞ்ஞயந்தாம் ஆளாளுக்குக் கெடக்குறாம். அதுல ஒருத்தனெ பிடிச்சாந்திருப்பாம் போல. பயெ
நல்லாவே உதாரு வுடுறான். நானுந்தாம் ஹை கோர்ட்டுலப் போயி வாதாடுவேம்! இதெல்லாம் ஒரு
பெரிய விசயமா? நாம்ம போயி ஹைகோர்ட்ல வாதாடுறதுங்றது வேற. ஹைகோர்ட்டுல இருக்குறவேம்
இஞ்ஞ எறங்கி வந்து வாதாடுறதுங்றது வேற. இப்போ ஒங்களுக்கு விசயம் புரிஞ்சிதோ?"ன்னாரு
திருநீலகண்டன் கைப்புள்ளைய அசமடக்குறாப்புல.
"மத்தியானச் சாப்பாட்டுக்கு எஞ்ஞ
தலையில தொப்பியப் போட்டுக்கிட்டு இந்த மாதிரியெல்லாம் பேசக் கூடாது!"ன்னாரு
கைப்புள்ளயும் வக்கீல அசட்டுத்தனமா மடக்குறாப்புல.
"சாப்பாடு ன்னா பெரிய சாப்பாடு? நாமளே
சாப்பாட்டுக்குக் காசியக் கொடுக்குறேம் போங்க! ஸ்டேசன் கோர்ட்டுன்னு வந்தப் பெறவு
இதெ நெனைச்சில்லாம் பயப்படக் கூடாது. மோதிப் பாக்கணும். ரண்டுல ஒண்ணுத்தாம் இனுமே?
என்னா நாம்ம சொல்றது?"ன்னாரு திருநீலகண்டன் ரண்டுல ஒண்ணுத்தெ பாக்குறாப்புல.
"யிப்போ அடுத்து என்னத்தாம் பண்ணுறது?
அதெ நெனைச்சே பயமா இருக்கு! அதாங் ஒஞ்ஞளப் பாத்துட்டுத்தாம் போவேம்ன்னு நாம்ம நின்னது!"ன்னா
செய்யு படபடப்புத் தாளாம.
"அதுக்கும் சில வழிமொறைகள வெச்சிருக்காமலா
இருப்பேம்! கவலப்படாதே பொண்ணு! இப்போ நல்லா சாப்புடு. அப்பத்தாம் ஒடம்புல தெம்பு
வரும். ஒடம்புல தெம்பு வந்தாத்தாம் மனசுல தெம்பு வரும்!"ன்னாரு திருநீலகண்டன்
அவளெ சாந்தப்படுத்துறாப்புல.
"அதாங் ன்னா வழிமொறைன்னு கேக்கறேம்?"ன்னா
செய்யு.
"மொதல்ல பயப்படக் கூடாது. நம்ம பயந்தாம்
அவனுங்களோட தைரியம். நாம்ம தைரியமா இருந்தா அதெப் பாத்துட்டு அவனுங்க பயந்துட்டு இருப்பானுங்க.
பயப்படமா அவனுங்க எப்பப் பேசுனாலும் கண்ண உருட்டி தெரட்டி நல்லா முழிச்சிக்கிட்டு,
மொறைச்சிக்கிட்டுப் பேசணும் இப்பிடி! இதெ பாத்தாலே பயம் வருதா எப்பிடி?"ன்னு
தன்னோட கண்ண உருட்டி மெரட்டிக் காம்பிச்சாரு திருநீலகண்டன்.
"நாம்ம ஒண்ணு கேட்டா நீஞ்ஞ ஒண்ணு
சொல்லுதீயே! நாம்ம பயப்படல்லாம் யில்ல. அடுத்ததா ன்னா பண்ணப் போறீங்கன்னு சொன்னா
அதுக்கு அவ்வேம் ன்னா பண்ணுவான்னு யோஜிக்குறதுக்குத்தாம் கேக்குறேம்!"ன்னா செய்யு
உசாரா கேக்குறாப்புல.
"ஓ! அடுத்த வக்கீலா ஆவப் போறீங்க
அப்பிடித்தானே? ஆக அத மட்டும் சொல்ல மாட்டேம். எல்லாம் சஸ்பென்ஸ்தான். சோஷியல் வெல்பேர்ல
ஒரு ஹியரிங்கதான போயிருக்கு. இன்னும் ரண்டு போவட்டும். நாம்ம யாருன்னு காட்டுறேம்!
அப்போ தெரியட்டும் எல்லாம்!"ன்னாரு திருநீலகண்டன் செய்யுவப் பாத்து.
"இப்பவே காட்டுனா என்னாவாம்?"ன்னா
செய்யு என்ன நடக்கும்ங்ற தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல.
"நேரம் வரும் போது ஒனக்கே புரியும்!"ன்னாரு
திருநீலகண்டன் அவளுக்கு சட்டுன்னு ஒரு பதிலச் சொல்றாப்புல.
"இன்ஸ்பெக்டர் அம்மா டொமஸ்டிக் வயலன்ஸ்
கேஸ் போடலாம்ன்னு சொன்னாங்களேய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலப் பாத்து.
"அதெல்லாம் அவ்ளோ அவசரப்பட்டுப்
போட்டுட்டா அதுக்கு மதிப்பே இருக்காது. சப்புன்னு போயிடும். அதுக்கு முன்னாடி வேற
ஒண்ண போடணும். அவசரப்படாதீங்க சார்! ஆட்டமே இப்பத்தாம் ஆரம்பிச்சிருக்கு. நிதானமா
நின்னு ரசிச்சுப் பாருங்க!"ன்னாரு திருநீலகண்டன் சுப்பு வாத்தியார்ரப் பாத்து.
"அப்போ இதுவரைக்கும் நடந்ததெல்லாம்?"ன்னா
செய்யு வக்கீலப் பாத்து.
"அதெல்லாம் சின்னபுள்ள வெளையாட்டு.
அதெ மறந்துபுடணும். அடுத்து ஆடப் போற ஆட்டத்துல அவனே செத்துப் போனாலும் போவாம்.
இல்ல அவுங்க குடும்பத்துல ஒருத்தன் செத்துப் போவாம். ஆள காலி பண்ணுற ராசிய ஆண்டவன்
எப்பவும் நமக்குக் கொடுத்திருக்காம். நாம்ம வக்கீல் நோட்டீஸ் அனுப்புனதுக்கு வெஷம்
குடிச்ச ஆளுங்கல்லாம் இருக்கு! நமக்கு திருநீலகண்டன்னு பேரு வெச்சிருக்குக் கூடாது.
எமதர்மன்னு பேரு வெச்சிருக்கணும். அதையும் பாக்கத்தானே போறீங்க!"ன்னு அவரு சொல்லவும்,
அவரு சாப்புட்டு முடிக்கவும் சரியா இருந்துச்சு. சாப்புட்டு முடிச்சதும் ஒரு ஏப்பத்தெ
வுட்டாரு திருநீலகண்டன். "இப்பிடித்தாம் அந்தப் பயலுகளயும் விழுங்கி ஏப்பத்தெ
விடப் போறேம்!"ன்னாரு வுடாம திருநீலகண்டன்.
"எதையோ செஞ்சா செரி!"ன்னாரு
கைப்புள்ள இப்போ அலட்சியமா.
"என்னாங்க இத்து? எம் மேல கொலப்பாவம்
விழப் போவுதுங்ற பயமே இல்லாம பேசுறீங்க? அந்த நீலகண்டனப் போல விசத்த வுழுங்குறவேம்
இல்ல இந்த திருநீலகண்டன். விசத்த மத்தவங்கள
விழுங்குறாப்புல பண்ணுறவேம் இந்த திருநீலகண்டன். கூடிய சீக்கிரமெ ஒரு உசுரு இந்த மண்ண
வுட்டுப் போறதுக்குக் காரணமா இருக்கப் போறாம் இந்த திருநீலகண்டன். அந்தப் கொலை பாவத்துக்கான
பூசை புனஸ்கார பரிகாரங்களையெல்லாம் ஏற்பாடு பண்ணுங்க போங்க!"ன்னு சொல்லிச் சிரிச்சாரு
திருநீலகண்டன். அந்தச் சிரிப்புல அவர்ரப் பாக்குறதுக்கு அச்சு அசல் சினிமா படத்துல
வர்ற வில்லனப் போலவே இருந்தாரு.
*****
No comments:
Post a Comment