27 Nov 2020

சேர்ந்து வாழத் தயார்!

சேர்ந்து வாழத் தயார்!

செய்யு - 638

            இதுக்கு மேலயும் தொடந்தாப்புல பேசிக்கிட்டெ இருக்க மாட்டாங்க. இந்த அழைப்புல எதாச்சும் ஒரு முடிவெ பண்ணி வுட்டுப்புடுவாங்கங்ற நெனைப்புக்கு வந்தாரு சுப்பு வாத்தியாரு. ஆக இந்த நாலாவது அழைப்புக்குச் சுப்பு வாத்தியாரு கைப்புள்ளையத் தயாரு பண்ணிக்கிட்டாரு. விகடுவையும் கூப்புட்டுக்கிட்டாரு. வேற கூப்புடுறதுக்கு அவருக்கு ஆளும் இல்ல. வக்கீலக் கூப்புட்டுப் பாத்தாரு. அதுக்கு வக்கீலு, "வர்றதப் பத்தி ஒண்ணுமில்லங்கய்யா! உள்ளார அனுமதிக்க மாட்டாங்க!"ன்னாரு. "செரித்தாம் அப்பிடின்னா நாஞ்ஞ பாத்துட்டு வந்து வெசயத்தச் சொல்றேம்!"ன்னுட்டாரு. கொஞ்சம் நம்ம பக்கம் ஆளுங்க இருந்தா தேவலாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. அதெப் பத்தி விகடுகிட்டெ சொல்லிக்கிட்டும் வந்தாரு. இன்ன ஒரே ஒரு ஆளு கூட இருந்தா தேவலாமுங்றது சுப்பு வாத்தியாரோட நெனைப்பு. செய்யுவோட பஞ்சாயத்துச் சம்பவத்துக்குப் பெறவு சுப்பு வாத்தியாருக்கு உறவுலயும் தொணையில்லாமப் போச்சு. ஊருலயும் கூட மாட தோள் கொடுக்க ஆளில்லாமப் போச்சு. தோப்புல ஒதுங்கிப் போயி நிக்குற ஒத்த மரம் கணக்கா அவரு நின்னாரு. நல்ல நேரத்துல மனுஷங்க தொணை கேக்காமலயே வந்துப்படும். கெட்ட நேரத்துல கெஞ்சிக் கூப்புட்டாலும் ஆளாளுக்குக் கழட்டிக்கப் பாப்பாங்களே தவுர தொணைக்கு நிக்க மாட்டாங்க. அப்படி கெட்ட நேரத்துல ஒவ்வொருத்தரும் கழட்டிக்கிறாப்புல சம்பவங்களும் அதுவா அமைஞ்சுப் போயிடும். அவுங்க சமுக நீதி மையத்த அடைஞ்சப்போ, நல்ல வேளையா விகடுவுக்குத் தெரிஞ்ச ரொம்ப நெருக்கமான வாத்தியாரு ஒருத்தரு வந்தாரு. அவர்ரப் பாத்துக் கையக் காட்டி, விகடு அவருகிட்டெப் போயிப் பேசுனாம்.

            கலெக்டர் ஆபீஸூக்கு ஒரு வேலையா வந்ததாவும், இன்னிக்கு ஒரு நாளு இங்கயே கெடந்தாத்தாம் அந்த வேலை ஆவும்ன்னு சொன்னாரு அந்த வாத்தியாரு. நல்லதாப் போச்சுன்னு நெனைச்ச விகடு இங்க வந்திருக்குறதுக்கான கதெயச் சொல்லி கொஞ்சம் கூட நின்னு தொணைக்குப் பேச முடியுமான்னு கேட்டதும், "ல்ல சார்! இந்த மாதிரி விசயங்கள்ல நாம்ம தலையிடுறது யில்ல. நீஞ்ஞளே பாத்துக்கிடுங்க. தப்பா நெனைச்சுக்காதீங்க சார். இதுல நம்ம பேரையும் பதிவு பண்ணாங்கன்னா வெச்சுக்கோங்க கோர்ட்டு கேஸூன்னு நம்மாள அலைஞ்சிக்கிட்டு இருக்க முடியாது!"ன்னு அவரு சொன்னதெ கேட்டு, "இதுல இப்பிடி ஒரு விசயம் இருக்குறது நமக்குத் தெரியாமப் போயிட்டுங்கய்யா! யப்பாத்தாம் யாராச்சும் கொஞ்சம் தொணையிருந்தா தேவலாம்ன்னு நெனைச்சாங்க. அந்த நெனைப்புல வந்துக் கேட்டுப்புட்டேம். நல்ல வேள இதுல அப்பிடி ஒரு பெரச்சனெ இருக்குறதெ சொன்னீங்க. எஞ்ஙப் பெரச்சனெ எஞ்ஞளோட போவட்டும். ஒஞ்ஞள வந்து சுத்த வாணாம்! ரொம்ப நல்லதுங்கய்யா! இதுல வந்த மாட்டிக்கிடாம போனீங்களேய்யா! நல்ல நேரத்து கௌம்புங்கய்யா!"ன்னு சொல்லிட்டுத் திரும்புனாம் விகடு.

            திரும்புன அவனெ தடுத்து நிறுத்தி, "ன்னா சார் பெரிய தங்காச்சி? அவ்வேம் புருஷன் வூட்டுக்கு அடிச்சித் தொரத்துங்க சார்! இப்பிடில்லாம் அலைஞ்சி நம்மாள சமாளிக்க முடியாது!"ன்னாரு அந்த வாத்தியாரு.

            விகடு ஒண்ணும் சொல்லாம நடக்க ஆரம்பிச்சாம். "ன்னா சார் ஒண்ணும் சொல்லாம் போறீயே?"ன்னாரு அந்த வாத்தியாரு.

            "சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்கய்யா! அடிச்சித் தொரத்துறதுக்காக அழைச்சாந்து வெச்சிக்கிடலங்கய்யா!"ன்னு பதிலச் சொல்லிட்டு வந்தாம் விகடு. அந்த வாத்தியாரு என்னவோ விகடுவெ அதிசயமா பாக்குறாப்புல பாத்துட்டு அந்தாண்ட நகந்து அவரு ஒரு தெசையிலப் போனாரு. வாத்தியாரு சொல்ற பாடத்தெ இந்தக் காலத்துல எவ்வேம் கேக்குறாம்ன்னு நெனைச்சிருப்பாரு போல அவரு.

            அதே நேரத்துல இந்த நாலாவது அழைப்புக்கு பாலாமணி தரப்புல வராம இருக்குறதுக்கும் வாய்ப்பு இருக்குன்னு நெனைச்சாரு சமூக நீதி மையத்துக்கு வெளியில நின்னு காத்துகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு. ஆன்னா பாலாமணி நாலாவது அழைப்புக்கு இன்னோவால ஒரு பட்டாளத்தோட வந்து எறங்குனாம். அந்தப் பட்டாளத்துல ஹைகோர்ட்டு வக்கீல்ன்னு சொன்னவரு, பழைய பரமசிவம், ராசாமணி தாத்தா, இன்னும் ரண்டு மூணு பேரு தாட்டிகமா உள்ளவங்க இருந்தாங்க. அன்னிக்கு ரண்டு வெசாரணைகள வேகமா முடிக்க வேண்டியது இருந்துச்சு வெசாரணை அதிகாரியா இருந்த அம்மாவுக்கு. அவுங்க அதெ வேகவேகமா முடிச்சிட்டு மொதல்ல பாலாமணிய வெசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதெத் தொடந்தாப்புல ராசாமணி தாத்தா, கூட வந்த ஆளுங்கள ஒவ்வொருத்தரா தனித்தனியா வெச்சி வெசாரிச்சாங்க.

            அதுக்குப் பெறவு செய்யுவக் கூப்புட்டு வெசாரிக்க ஆரம்பிச்சாங்க. அத்து முடிஞ்சதும் வெளியில வந்த அவ்வே விகடுவெப் பாத்து, "ஒங்கிட்டெ பேசணும்ன்னு உள்ளார வாரச் சொன்னாங்க!"ன்னா.

            "ஒங்கிட்டெ என்னத்தெ கேட்டாங்க?"ன்னாம் விகடு.

            "அதெ கதெதாம். மூணு தடவெ சொன்னது பத்தாதுன்னு நாலாவது தடவெயா சொல்லிட்டு வந்திருக்கேம். நீயி இப்பத்தானே மொத மொறையா வர்றே. போயிச் சொல்லு. இதெயேத்தாம் இன்னும் நாலைஞ்சு தடவெ சொல்றாப்புல இருக்கும். சொல்றப்பவே நல்லா மனப்பாடம் பண்ணி வெச்சுக்கோ!"ன்னு ஒப்புக்குச்சப்பா சொன்னா.

            விகடு உள்ளாரப் போனாம். வெசாரணை அதிகாரிக்குப் பக்கத்துல ஓரமா பாலாமணியோட வந்த வக்கீலு உக்காந்திருந்தாரு. விகடுவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு, திருநீலகண்டன் வக்கீலு சொல்றப்போ உள்ளார வக்கீல அனுமதிக்க மாட்டாங்கன்னு சொன்னாரு, உள்ளார எப்பிடி ஒரு வக்கீலு உக்காந்திருக்காருன்னு?

            அந்த அம்மா, "ன்னா முடிவு பண்ணிருக்கீங்க? தங்காச்சிய அழைச்சிட்டுப் போவ ஒஞ்ஞ மச்சினம் தயாரா இருக்காரு. அனுப்பிச்சிடலாமா?"ன்னாங்க விகடுவப் பாத்து.

            "எந் தங்காச்சியக் காப்பாத்தி வுட்டுப்புடுங்க. அதெ எப்பிடி பண்ணுறதுன்னு புரியாமத்தாம் போலீஸ் ஸ்டேசன், வக்கீலு, இஞ்ஞன்ன அலைஞ்சிட்டு இருக்கேம். அப்பிடி அனுப்பணும்ன்னு நெனைச்சா எந் தங்காச்சியோ உசுருக்கு நாம்ம உத்திரவாதம்ன்னு கையெழுத்துப் போட்டுக் கொடுத்துப்புட்டு அனுப்பிச்சி வுடுங்க!"ன்னாம் விகடு.

            "அதல்லாம் நாம்ம பண்ண முடியாது!"ன்னாங்க அந்த அம்மா.

            "அப்பன்னா அனுப்பிச்சிடாதீங்க அம்மா! ஒஞ்ஞளுக்கு நல்லதாப் போவும். ஒஞ்ஞ புள்ளெ குட்டிங்க நல்லா இருக்கும்!"ன்னு சொல்லிட்டு வெளியில வந்தாம் விகடு. அவ்வளவுதாம் அவ்வேம் பேசுனது. அவ்வேம் அதெ சொன்னதும் சித்தெ வெளியில இருங்கன்னு அவ்வேங்கிட்ட வெளியில இருக்க சொல்லிட்டு அடுத்ததா சுப்பு வாத்தியார்ர உள்ளார கூப்புட்டாங்க. விகடுகிட்டெ கேட்ட அதெ கேள்வியத்தாம் சுப்பு வாத்தியாருகிட்டெயும், "மருமவ்வேம் மனசு மாறி பொண்ண அழைச்சிட்டுப் போவ தயாரா இருக்காரு. செஞ்ச தப்பையெல்லாம் தப்புன்னு ஒத்துக்கிட்டாரு. பொண்ணு அனுப்பிச்சிடலாமா? வாணாமான்னு நீஞ்ஞ ஒங்க கருத்தெச் சொல்லணும்!"ன்னு கேட்டாங்க அந்த அம்மா.

            சுப்பு வாத்தியாரு ரொம்ப தீர்க்கமா சொன்னாரு, "காரு வாங்குறதுக்குன்னு பத்து லட்சம் காசியக் கொடுத்தேம். காரு வாங்கல. அந்தக் காசிய எம் பொண்ணு பேர்ல டிபாசிட்டுலப் போடச் சொல்லுங்க. பொண்ணுக்குன்னு நூறு சவரன் நகெயெப் போட்டிருக்கேம். அதெ பொண்ணுக்குக் கொண்டாந்துப் போடச் சொல்லுங்க. அந்த நகைக்குன்னு எம் பொண்ணு பேர்ல பாங்கியில ஒரு லாக்கர்ர ஓப்பன் பண்ணச் சொல்லி அதுல அவளே வெச்சிக்கிறாப்புல ஒரு ஏற்பாட பண்ணுங்க. இதெ மொதல்ல செஞ்சிட்டு வந்தா எம் பொண்ண அனுப்ப தயாருதாம்ங்க!"ன்னு. அப்பிடிச் சொல்லிட்டு அந்தம்மா செரித்தாம் கௌம்பிச் சித்தெ வெளியில இருங்க, ஒங்க குடும்பத்துச் சார்பா யாராச்சும் வர்றதா இருந்தா உள்ளார வாரச் சொல்லுங்கன்னு சொன்னதும் வெளியில வந்தாரு.

            வெளியில வந்த சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "யப்பா! அந்த வக்கீலு பக்கத்துலத்தாம் இருந்தாரா?"ன்னு கேட்டாம் விகடு.

            "நம்மள வெசாரிக்கிறப்பவும் அந்த வக்கீலு பக்கத்துலத்தாம் இருந்தார்ண்ணா. என்னவோ நாம்ம சொல்ல சொல்ல பேப்பர் எழுதிக்கிட்டாம்! நம்மள வெசாரிக்கிறப்ப அவுங்க வக்கீலு இருக்குறப்போ, அவுங்கள வெசாரிக்கிறப்ப நம்ம வக்கீலு இருக்கணும்தானேப்பா?"ன்னா செய்யு.

            "நம்ம வக்கீலுத்தாம் உள்ளார அனுமதி கெடையாதுன்னு சொல்லிட்டாரே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அவ்வேம் கெடக்காம். டூப்பு அடிப்பாம். இன்னிக்கு அவனுக்குக் கோர்ட்ல கேஸூ இருந்திருக்கும். அதெ பாத்தா நாலு காசி கெடைக்கும்ன்னு அஞ்ஞப் போயிருந்திருப்பாம்!"ன்னாரு கைப்புள்ள.

            "நாமளும் இஞ்ஞ வர்றதுக்கு வக்கீலுக்குக் காசியக் கொடுப்பேம்!"ன்னாம் விகடு.

            "நம்மக் குடுமபத்துச் சார்பா ஒருத்தர வர்றச் சொன்னாங்க. நாம்ம ஒஞ்ஞளப் பத்தித்தாம் சொல்லிருக்கேம். சடுவா உள்ளாரப் போங்க! அதெ வுட்டுப்புட்டுப் பேசிட்டு இருக்கேம். போயிட்டு வந்த பெற்பாடு நாம்ம பேசுறதெ பேசிக்கிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கைப்புள்ளயப் பாத்து.

            உள்ளாரப் போன கைப்புள்ள, "வக்கீலு பக்கத்துல இருந்தா நாம்ம எதுவும் சொல்ல மாட்டேம்!"ன்னு சொல்ல, உள்ளார ஓரமா நாற்காலிப் போட்டு உக்காந்திருந்த வக்கீலு வெளியில எழுந்திரிச்சி வந்தாரு. அதுக்குப் பெறவு கைப்புள்ள, பொண்ணுக்குப் போட்ருக்குற நகநெட்டு, கொடுத்திருக்குற காசிப் பணத்தெ வாங்கிக் கொடுத்துப்புட்டா பெரச்சனெ இல்லாம ஒதுங்கிக்கிறோம்ன்னு சுப்பு வாத்தியாரு பேசுனதோட அதே சாராம்சத்தெ சொல்லிட்டு வெளியில வந்தாரு.

            "நாம்ம அந்த வக்கீலு இல்லாமத்தாம் பேசிட்டு வந்தேம்!"ன்னாரு கைப்புள்ள. இப்பிடி ஒரு யோசனெ நமக்கு வரலையேன்னு நெனைச்சாம் விகடு. அந்த நேரம் பாத்து பழைய பரமசிவம் இந்தப் பக்கம் வந்தாரு. இங்க நின்னுகிட்டு இருந்த எல்லாரையும் பாத்து, "மாப்புள்ள சேந்து வாழணும்ன்னு பிரியப்படுறாரு. சேந்து வாழணும்ன்னு நெனைக்கிறவர பிரிச்சிப் புடாதீங்க. அதுக்குத்தாம் இவ்வளவு மெனக்கெடுறாரு. பெரியவங்க நீஞ்ஞ. புரிஞ்சிப்பீங்கன்னு நெனைக்கிறேம்! எளஞ் சோடிகளப் பிரிச்சி வெச்ச பாவம் நமக்கெதுக்கு?"ன்னாரு பரிதாபமா பேசுறவர்ரப் போல.

            "சேந்து வாழணும்ன்னு நெனைக்கிறவேம் வூட்டுலயே வந்து அழைச்சிக்கிட வேண்டித்தானே. வூட்டுல வந்து அழைச்சிக்கிறேம்ன்னு சொல்லிட்டு வாராம இருந்துக்கிடுறது. பஞ்சாயத்தெ வெச்சி அழைச்சிக்கிறேம்ங்றது. பஞ்சாயத்துலயும் வந்து கலாட்டாவ பண்ணுறது. செரித்தாம்ன்னு ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா ஸ்டேசனுக்கும் வர்றாம ஆளுகளெ அனுப்பி வுடுறது. இப்போ இஞ்ஞ வர்றாம இருக்க முடியாதுங்ற நெலையில வந்து இஞ்ஞ வெச்சி பொண்ணு அழைச்சிக்கிறேங்றது. ன்னய்யா வெளையாட்டாப் பண்ணுதீயே? நாஞ்ஞ இனுமே வாழ வைக்குறாப்புல யில்ல. நீஞ்ஞ என்ன நெனைச்சிக்கிட்டாலும் செரித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு காட்டமா.

            "நீஞ்ஞக் கோவப்படுறதுல அர்த்தம் இருக்கு. நாம்ம ல்லன்னு சொல்ல மாட்டேம். ஆன்னா பாருங்க மாப்புள்ள பையேம் இப்பத்தாம் பல வெசயங்கள நெனைச்சி வருத்தப்படுறாம். தப்புப் பண்ணிட்டதா சொல்லி அழுவுறாம். நமக்கே பாக்க பாவமா போச்சுது! ஒரு நல்ல விசயத்துக்காக எறங்கி வந்து பேசுறதுல அர்த்தமில்லங்றதால எறங்கி வந்துப் பேசுறேம்!"ன்னு ரொம்ப எறங்கி வந்துப் பேசுறாப்புல பேசுனாரு பழைய பரமசிவம்.

            "மின்னாடி என்னவோ கொடுக்குற நகெநட்டு, பணங்காசிய வாங்கிட்டு பேயாம போயிடுங்கன்ன மெரட்டுனீயே? யிப்போ எஞ்ஞயிருந்துய்யா வந்துச்சு இந்த ஞானோதயம்?"ன்னாரு கைப்புள்ள பழைய பரமசிவத்தப் பாத்து.

            "அப்போ இருந்த மனநெலங்றது வேறங்க. இப்போ இருக்குற மனநெலங்றது வேறங்க. மாப்புள்ள பையேம் மனசு மாறவே கூடாதுங்றீயளா? மனுஷன் தப்பு பண்ணுறது சகஜந்தாம். அதுலேந்து திருந்தி மனசு மாறி வர்றப்போ அதெ ஏத்துக்கிடணும். அன்னிக்கு மாப்புள்ளப் பையேம் சொன்னாப்ப நமக்கும் ஆத்திரமாத்தாம் இருந்துச்சு. அதால அன்னிக்கு அப்பிடிப் பேசுனேம். இன்னிக்கு அழுவுறப்ப பாவமால இருக்கு. மனசுன்னா எரக்கம் வேணும்ங்க. மனசுல ஈரம் வேணும்ங்க. நாம்ம ஈரமுள்ள ஆளுங்க. கோவமாத்தாம் சமயத்துலப் பேசுவேம். ஆன்னா கோவம் இருக்குற எடத்துலத்தாம் கொணம் இருக்கும்பாங்க. மனசுல பட்டதெ அப்பிடியேப் பேசிப்புடுவேம். அதெ ஒளிச்சி மறைச்சில்லாம் வெச்சிக்கிட மாட்டேம். மனசுல ஒண்ணு சொல்லுல ஒண்ணுன்னு பேச மாட்டேம். மனசுல பட்டதெத்தாம் சொல்லுல சொல்லுவேம். சொல்லுல சொல்றதெத்தாம் மனசுலயும் வெச்சிருப்பேம். வெள்ளந்தி மனுஷம்யா நாம்ம!"ன்னாரு பழைய பரமசிவம் தன்னை நியாயப்படுத்திருக்கிறாப்புல.

            "நீஞ்ஞ நெனைச்சா ஒண்ணு பேசுவீயே? நெனைக்காட்டி ஒண்ணுத்தெப் பேசுவீயே? அதெல்லாம் கேட்டுக்கிட்டு நாஞ்ஞ தலைய ஆட்டிக்கிட்டு நிக்கணும். நாளைக்கே பொண்ணு புடிக்கலன்னாலும் அழைச்சாந்துப் போனப் போண்ண திரும்பக் கொண்டாந்து விடுவீயே! நாஞ்ஞ அதுக்கும் ஒண்ணும் சொல்லாம கால்ல வுழுந்து நக்கிட்டே இருக்கணும். அதாம்யா ஒஞ்ஞ எண்ணம்? எஞ்ஞள அப்பிடியே அடிமையா வெச்சே அடிச்சுத் தொவைக்கணும்ன்னு நெனைக்குதீயே? அதுக்கு வேற ஆளப் பாருங்க!"ன்னாரு கைப்புள்ள கொதிச்சுப் போனவரப் போல.

            "ரொம்பக் கோவத்துல இருக்கீயே! ஒஞ்ஞ கோவத்துல ஞாயமும் இருக்கு. இருந்தாலும் நாம்ம சொன்னதெ யோஜனெ பண்ணுங்க. ஒடனே மனசு மாறணும்ன்னு அவ்சியமில்ல. வூட்டுக்குப் போயி மாறுனாலும் நம்ம போனு நம்பர்ரத்தாம் கொடுத்திருக்கே. ஒரு போன அடிங்க. பொண்ண ராசகுமாரியாட்டம் வெச்சிக் கொண்டுட்டுப் போறேம்!"ன்னாரு பழைய பரமசிவம் கைப்புள்ளைய சாந்தம் பண்ணுறாப்புல.

            "எதுக்கு ராசகுமாரியாட்டம் கொண்டுட்டுப் போயி பாடையில எறக்குறதுக்கா?"ன்னு கைப்புள்ள கேட்க, "எல்லாரும் உள்ளார வாஞ்ஞ. அம்மா கூப்புடுதாங்க!"ன்னு அங்க வேலப் பாக்குற ஒரு ஆளு வந்து சத்தம் கொடுத்தாரு. அத்தோட அங்கப் பேசிக்கிட்டு இருந்த பேச்சு ஒரு முடிவுக்கு வந்து எல்லாரும் விசாரணை அதிகாரியோட அறைக்குள்ள ஒவ்வொருத்தரா நொழைய ஆரம்பிச்சாங்க.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...