26 Nov 2020

ஆம்பளைங்கன்னா அப்படித்தான்!

ஆம்பளைங்கன்னா அப்படித்தான்!

செய்யு - 637

            எடந்தாம் மாறுனுச்சே தவுர நெலமே மாறல. மின்னாடி மகளிர் காவல் நிலையத்துல போயி நின்னதப் போல இப்போ சமூக நீதி மையத்துல போயி நிக்க வேண்டியதா இருந்துச்சு. ஒண்ணுலேந்து இன்னொண்ணு மாறுனுச்சே தவுர எல்லாம் அனுமாரு வாலப் போல நீண்டுகிட்டெ இருந்துச்சு. நம்ம கதெயே இன்னொருத்தரு கேட்டு அதெப் பத்தி ஒரு முடிவுக்கு வாரதுக்குள்ள அத்து இன்னொருத்தர்ர நோக்கிப் போயிடுது. திரும்ப மொதல்லேந்து மாறுன இன்னொருத்தரு நம்ம கதெயெ கேட்டு ஒரு முடிவுக்கு வாரணும். அப்படி வர்ற நேரத்துக்குள்ள அத்து இன்னொருத்தர நோக்கிப் போயிடும். இப்பிடித்தாம் இந்தச் சிக்கலு சங்கிலித் தொடர் போல போயிக்கிட்டெ இருந்துச்சு. இடியாப்ப சிக்கலுன்னு சொல்லுவாங்களே, அதோட ஆரம்பத்த எங்க பிடிச்சி அதெ அப்பிடியே தொடர்ந்துகிட்டு எங்கப் போயி முடிக்கிறது? போண்ணுங்களோட வாழ்க்கெ பெரச்சனெங்றது இதுதாம். இதெ நெனைச்சித்தாம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன், கண்ணைக் குத்துனாலும் கண்ணாளன், மண்ணை அள்ளிப் போட்டாலும் மணாளன்னு வாழ்ந்துடறாங்க போல. 

            வாரத்துக்கு ஒரு மு‍றை மாவட்ட சமூக நீதி மையத்துலேந்து செய்யுவுக்கு அழைப்பு வந்துகிட்டெ இருந்துச்சு. மகளிர் காவல் நிலையத்துலப் போயிக் காத்துக் கெடந்ததெ போல ரொம்ப நேரம் வெசாரணைக்காகக் காத்துக் கெடக்க வேண்டிய அவசியம் இல்லங்றதுதான் இதுல இருந்த ஒரே செளகரியம். போனதுக்குச் சாட்சியா ஒரு கையெழுத்தப் போடச் சொல்லிட்டு ரொம்ப நேரம் பேசிட்டு அனுசரனையா சில வார்த்தைகள சொல்லிட்டு அனுப்பிடுவாங்க. இப்படி ரண்டாவது தடவெ போனப்போ திரும்பவும் செய்யுவோட கதெய மொதல்லேந்தே கேட்டாங்க வெசாரணை அதிகாரி. அவுங்க ஒரு பெண்மணி. அந்த அம்மா கூட போயிருந்த சுப்பு வாத்தியாரையும் உக்கார வெச்சி அவரு எப்பிடிப்பட்ட முடிவுல இருக்கார்றதயும் கேட்டுக்கிட்டாங்க. அவுங்க அனுபவத்துல அவுங்க கையாண்ட பல வெதமான குடும்ப விசயங்களயும் பகிர்ந்துக்கிட்டாங்க. எதிர உக்காந்து பேசுறவங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்து மனசுல உள்ளதெ வெளியில சொல்றதுக்கு எல்லா வாய்ப்பையும் கொடுத்தாங்க.

            அவுங்ககிட்டெ பேசிட்டு வர்றப்போ கொஞ்சம் தெளிவா இருக்குறாப்புல இருக்கும். வூட்டுக்கு வந்ததும் கொழப்பமாயிடும். ஒரு முடிவுக்கு வர்றாம இருக்குற வரைக்கும் அனுசரணையும் ஆறுதலும் ரொம்ப உபயோகமாத்தாம் இருக்கும். ஒரு முடிவுக்கு வந்தப் பெறவு அந்த முடிவெ எட்டுனாத்தாம் அனுசரணையும், ஆறுதலும் உண்டாவும். அந்த வெசாரணை அதிகாரி பெரும்பாலும் சேர்ந்து வாழ்றதத்தாம் அதிகமா வலியுறுத்துனாங்க. சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "எத்தனெ காலந்தாம் ஒஞ்ஞப் பொண்ண பாசத்துல ஒஞ்ஞ கூடயே வெச்சிக்கிட முடியும்ன்னு நெனைக்குதீயே? பொண்ண இன்னொருத்தம் கையில பிடிச்சித்தாம் கொடுத்தாவணும். நல்லவனோ, கெட்டவனோ அவ்வேங் கூட வாழப் பொம்பளைங்க பழகித்தாம் ஆவணும். ஒரு ஆம்பளெ கெட்டவன்னு நெனைச்சு அவ்வேம் கூட வாழ முடியாதுன்னு இந்த நாட்டுல இருக்குற பொம்பளைங்க முடிவெடுதுதாங்கன்னா வெச்சுக்கோங்க நூத்துக்கு தொண்ணூறு பொம்பளைங்க குடும்பமே நடத்த முடியாது. நாட்டுல நூத்து ஆம்பளைக்குப் பத்துப் பேருதாம் நல்லவனா இருக்காம். பாக்கித் தொண்ணூறு பேரா இருக்குற கிரிமினல் கூடயோ, சைக்கோ கூடயோத்தாம் பொம்பளைங்க வாழ்க்கைய ஓட்டியாவ வேண்டியதிருக்கு!"ன்னாங்க.

            செய்யுகிட்டெ பேசுறப்பயும், "ஒரு ஆம்பள தொணை பொம்பளைக்கு இந்தச் சமூகத்துல வேண்டியதா இருக்கு. இல்லன்னா ஆம்பளைங்க பொம்பளைங்களப் பத்தித் தப்பா சொல்றது இல்ல. பொம்பளைங்களே கூடி தப்பாப் பேசுறாப்புல ஒலகம் இருக்கு. சமூகத்துல ஒரு ஆம்பளையோட இருக்குறதுதாங் ஒரு பொம்பளைக்குப் பாதுகாப்பா இருக்கு. ஒரு ஆம்பள தொணையா இல்லன்னா, பாக்குற ஆம்பளைங்க எல்லாம் கண்ணு வைக்குறதும், படுக்க வான்னு கூப்புடுறதும் இந்தச் சமூகத்துல ரொம்ப சகஜமா இருக்கு. என்னத்தெ பண்ணுறது? சொசைட்டிக்குத் தகுந்தாப்புலயம் கொஞ்சம் வளைஞ்சிக் கொடுத்துதாம் வாழ வேண்டியதா இருக்கு!"ன்னு பேசுனாங்க.

            ரெண்டு அழைப்புக்கும் பாலாமணி வாராட்டியும் அவுங்க பேசுறதெல்லாம் பாலாமணிக்குச் சார்பா அவனோட சேர்ந்து வாழப் போறதப் பத்தித்தாம் அதிகமாப் பேசுனாங்க. அவுங்கப் பேசப் பேச பாலாமணிகிட்டெ காசி வாங்கிட்டுப் பேசுறாங்களோங்ற சந்தேகம் கூட வந்திடுச்சு செய்யுவுக்கு. "கட்டுனவன் கொலையே பண்ணாலும் அதெ ஏத்துக்கிட்டு கொலையுண்டுப் போறதத்தாம் பெருமயா பேசுறாங்ற எல்லா எடத்துலயும். ஆம்மா அத்தோட பெரச்சனெ முடிஞ்சிடுது. இப்போ பாத்தா பெரச்சனெ வளந்துக்கிட்டுல்லா இருக்கு!"ன்னு அதெ பத்தி விரக்தியா அந்த வெசாரணை அதிகாரிகிட்டெயே சொன்னா செய்யு.

            வெசாரணை அதிகாரி இப்பிடியே பேசிட்டு இருந்ததுல, மூணாவது தடவெ அழைப்பு வந்து அதுக்குப் போனதுல கொஞ்சம் சலிச்சிப் போனா செய்யு. வக்கீல் திருநீலகண்டன்கிட்டெ போனப் பண்ணி இன்னும் எத்தனெ தடவெ இதுக்கு அட்டென்டென்ஸப் போடணும்ன்னு கேட்டா எரிச்சலா. எல்லா வழிமுறையும் தலையச் சுத்தி மூக்கெ தொடுறாப்புல இருக்குறதா அவளுக்குள்ள ஒரு விரக்தி வந்திருந்துச்சு. இந்த ரண்டு அனுபவங்களால தானே கூட அப்பங்காரரு தொணையில்லாம சமூக நீதி மையத்துக்கு வந்துட்டுப் போயிடலாங்ற நெனைப்பு அவளுக்கு வந்துட்டு. யாரு வந்தும் எந்தக் காரியமும் நடக்கப் போறதில்லங்றப்போ ஏம் மத்தவங்களோட நேரத்தெ வீணாக்கிட்டுன்னு புலம்பிக்கிட்டுக் கெடந்தா அவ்வே.

            வழக்கமா அழைப்புக்குப் போயிட்டு வூட்டுக்கு வந்தா அடுத்த அழைப்புக்கான காயிதம் தபால்ல வந்துச் சேரும். மூணாவது தடவெ சுப்பு வாத்தியாரும் செய்யுவும் போனப்ப முன்கூட்டியே நாலாவது அழைப்புக்கு அடுத்த வாரத்துல பொதன் கெழமெ வாங்கன்னு உறுதியாச் சொன்னாங்க விசாரணை அதிகாரி. என்னடா இது இந்த மொறை வந்ததுக்குப் பேசுறதுக்கு மின்னாடியே அடுத்த மொறை வர்றதப் பத்திப் பேசுறாங்களேன்னு நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. அப்படித்தாம் ஆரம்பிச்சுக்கு அந்தப் பேச்சு. அப்படி வர்றப்போ சமரசம் பேசுறதுக்கு ஏத்தாப்புல ஒங்க தரப்பு ஆளுங்களையும் அழைச்சிக்கிட்டு வாங்க. வெச்சிப் பேசுவோம்னாங்க அந்த விசாரணை அதிகாரி. ஒவ்வொரு மொறை போறப்பவும் அவுங்க ரொம்பவே கரிசனம் எடுத்துக்கிட்டு அனுசரணையாப் பேசுறாப்புல நெனைச்சிகிட்டுத்தாம் பேசுனாங்க. செய்யுவுக்கு அதெ அப்பிடி எடுத்துக்கிட முடியல. அவ்வே பாலாமணியப் பத்தின ரொம்ப மோசமான அனுபவத்தால நெறையவே மனசளவுல பாதிக்கப்பட்டிருந்தா. ஆம்பளைங்களோட சில கொணங்கள மாத்த முடியாதுன்னு அடிக்கடிச் சொன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி. அத்தோட இந்த மொறையும் குடும்ப வாழ்க்கைங்றது நாம்ம அணுகுற மொறைத்தான் சொல்லி செய்யுவ சேர்ந்து வாழத்தாம் அவுங்க அதிகமா அறிவுறுத்துனாங்க. அதுல செய்யுவுக்குக் கொஞ்சம் மனவருத்தம் உண்டாயிடுச்சு. ஆனா இந்த மூணாவது மொறை பேசப் போனது ரண்டாவது மொறைப் பேசப் போனதோட ரொம்ப நேரம் நீண்டுச்சு.

            வெசாரணை அதிகாரி பேசுனதையெல்லாம் கேட்டுகிட்டு, "நாம்ம இவ்வளவு கொடுமெய அனுபவிச்சதா சொல்லியும் நீஞ்ஞ சேந்து வாழச் சொல்றீகளே யம்மா?"ன்னா செய்யு.

            "இவ்வேம் சரியில்லன்னு இவனெ வெட்டி வுட்டுப்புட்டு இன்னொரு கலியாணத்தெ பண்ணுறேன்னு வெச்சிக்கோ, அவ்வேம் இவனெ வுட மோசமா இருந்தா என்னத்தெ பண்ணுவே?"ன்னாங்க அந்த அம்மா.

            "மறுபடியும் அந்தப் பயலப் பத்தியும் ஒஞ்ஞகிட்டெ வந்து ஞாயம் வைப்பேம்!"ன்னா செய்யு. வெசாரணை அதிகாரிச் சிரிச்சாங்க. "எஞ்ஞளுக்கு ஒன்னால எப்பயும் வேல இருந்துகிட்டெ இருக்கும் போலருக்கு. அப்பிடில்லாம் நடக்கக் கூடாது. நாம்ம ச்சம்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம். சேர்ந்து வாழ்றதுங்றது ஒம் முடிவுதாம். இருந்தாலும் சேர்ந்து வாழ்றதுக்கான அத்தனெ சாத்தியங்களப் பத்தியும் ஒங்கிட்டெ நாம்ம அழுத்தம் திருத்தமா சொல்லணுங்றதுக்காகச் சொல்றேம். நீயி சொல்ற கதெயெல்லாம் வெச்சிப் பாக்கும் போது ஒம் புருஷனெ வெசாரிக்கிறப்ப நாமளே ரொம்ப கவனமாத்தாம் இருந்தாவணும்!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            "பாத்தீங்களா யம்மா! நீஞ்ஞளே அவனெக் கேட்டுப்புட்டு என்ன மாதிரியான முடிவுக்கு வந்திருக்கீயே! அவ்வேம் கூடயே இருந்த குடித்தனம் நடத்துன நமக்கு எப்பிடி இருந்திருக்கும்?"ன்னா செய்யு அவுங்கள மடக்குற மாதிரி.

            வெசாரணை அதிகாரியும் விடல. அதுக்கேத்தாப்புல விளக்கத்தெ வேற வெதமா நீட்டி மொழக்குனாங்க. "இந்த மாதிரி ஆளுங்க ஒரு சில விசயங்கள்ல சுலுவா கோட்டை வுட்டுப்புடுவானுங்க. அத்து எதுன்னு கண்டுபிடிச்சேன்னா இவ்வேம் கூட வாழ்றது ரொம்ப சுலுவுன்னு சொல்ல வர்றேம். கடுகுப் போன எடத்தெ ஆராய்ச்சிப் பண்ணுறவனுக்குப் பூசணிக்காயிப் போற எடம் தெரியாதும்பாங்களே அந்த மாதிரித்தாம் இருப்பாம் இவனும். ஒண்ணும் அவசரமில்ல. இத்து வாழ்க்கைப் பிரச்சனெ. நிறுத்தி நிதானமா யோசனெ பண்ணி முடிவெடுக்கலாம். அதுக்குத்தாம் நாஞ்ஞ பெரும்பாலும் இந்த மாதிரி கேஸ்கள ரொம்ப இழுக்கப் போடுறது. இழுக்கப் போடறப்போ காலம் ஓடும். கால ஓட்டம் மனசுக்குள்ள ஒரு மாறுதல உண்டு பண்ணும். பொதுவா இந்த மாதிரி நேரத்துலத்தாம் நெறைய பேசணும். பேசுனாவே ஒரு தீர்வு கெடைச்சிடும். பேசாம இருந்தா பைத்தியந்தாம் பிடிக்கும். சரியோ தப்போ ஒங் கருத்தெ தெகிரியமா எடுத்துச் சொல்லு!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            "ஒரே கதெயச் சொல்லி சொல்லி அலுத்துச் சலிச்சுப் போச்சும்மா. இதெ கதைய பஞ்சாயத்துல சொல்லிருக்கேம். மகளிர் காவல் நிலையத்துல சொல்லிருக்கேம். ஒஞ்ஞகிட்டெயும் ரண்டு மூணு மொறை சொல்லிட்டேம். எல்லாரும் பொதுவா சொல்ற கருத்துன்னா ஆம்பளைக்குத் தகுந்தாப்புல அடங்கிப் போவணுங்றதுதாம். அப்பிடிப் போவலன்னா இப்பிடில்லாம் வந்து அசிங்கப்படணுங்றதுதாம். அதெ சொன்ன மொறையில, வார்த்தைகள்ல வித்தியாசம் இருக்கலாம். சாராம்சம் இதுத்தாம். நமக்கு மட்டும் ன்னா? இப்பிடில்லாம் கட்டுனவன வுட்டுப்புட்டு வந்துக் கெடக்கணும்ன்னு தலையெழுத்தா? முடியாமத்தாம் வந்து நிக்குறேம். அத்துப் புரியாம பிடிவாதமா வந்து நிக்குறதாவே நெனைச்சி எல்லாரும் பேசுதீங்கம்மா!"ன்னா செய்யு.

            "அப்பியில்லா பொண்ணு! நீயி தப்பா புரிஞ்சிக்கிட்டெ. குடும்ப விசயங்க அப்பிடித்தாம். விட்டுக் கொடுத்துதாம் போவணும். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது. ஒன்னோட ஒரு விசயத்தால பாரு ஒன்னோட ஒட்டுமொத்தக் குடும்பமே வேற வேலயப் பாக்க முடியாம இதுக்கே அலையுறாப்புல இருக்குல்லா. அதெயெல்லாம் சேர்த்து யோசனெப் பண்ணணுங்றதெ சொல்றேம்!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            "அதுவும் செரித்தாம் யம்மா! அவனோட போயிருந்தா இந்நேரம் போயிச் சேந்திருப்பேம். வூட்டுலயும் நம்மள அள்ளி சுடுகாட்டுல வெச்சிப்புட்டு சாம்பல கரைச்சிப்புட்டாவது ஒரு சோலி முடிஞ்சதேன்னு நிம்மதியா இருந்திருப்பாங்க. அவ்வேம் கூட அப்பிடிப் போவவும் தெகிரியம் வர்ற மாட்டேங்குதேம்மா!"ன்னு அழுதுட்டா செய்யு. அதெ பாத்ததும் வெசாரணை அதிகாரிக்கு மனசு எறங்கிப் போச்சு.

            "ன்னா பொண்ணும்மா நீயி? ஒம் மனசுல அப்பிடித்தாம் தோணுதுன்னா அதுக்கு நாஞ்ஞ குறுக்க நிக்க மாட்டேம். இந்த மாதிரி விசயங்கள எப்பிடி அணுகணும், பேசணும்ன்னு எஞ்ஞளுக்குச் சொல்லியிருக்காங்களோ அதுப்படி பேசுறதுதாம். அதுல கொஞ்சம் அனுபவத்தோடயும் பேசுறது அவ்வளவுதாம். இப்பிடிப் பெரச்சனைகளோட வர்ற நெறைய பேத்துக்கு செகண்ட் லைப்பும் சரியா அமையாமப் போயி, அப்பவே கொஞ்சம் அழுத்திப் பேசி வுட்டிருந்தீங்கன்னா இப்பிடி ஒரு நெல வந்திருக்காதுன்னு இஞ்ஞ வந்து நின்னவங்களும் இருந்திருக்காங்க. அவுங்கள மனசுல வெச்சிக்கிட்டுப் பேசுனதுதாம். மித்தபடி ஒன்னோட மனச காயப்படுத்தணுங்றதுக்காகவோ, ஒன்னோட முடிவு தப்புங்றதுக்காகவோ சொல்ல வாரல! ஒம் முடிவு எதுவா இருந்தாலும் அதெ எடுக்க ஒனக்கு சுதந்திரமும் உரிமெயும் இருக்கு. அப்பிடி எடுக்குற ஒம் முடிவால எதிர்காலம் எப்பிடில்லாம் போவலாங்ற அனுமானத்தெ நாஞ்ஞ ஒனக்குச் சொல்ல வேண்டிய கடமெயும் எஞ்ஞளுக்கு இருக்கு. பொதுவா புருஷன் பொண்டாட்டி ரண்டு பேத்தையும் பிரிச்சி வைக்க யாருக்கும் மனசு வாராது பாத்துக்கோ. அப்பிடிப் பிரிச்சு வைக்குறது பாவங்கற மாதிரிக்கி நம்மட மனசுல ஒரு கருத்து இருக்கு. அந்தக் கருத்துக்குத் தகுந்தபடியும் நாம்ம பேசியிருக்கலாம்லா. நீயி நம்மளோட மனநெலையிலேந்தும் கொஞ்சம் பாக்கணும்ன்னு ஒங்கிட்டெ சொல்லிருக்கேம்!"ன்னாங்க அந்த வெசாரணை அதிகாரி.

            செய்யு பேசாமலயே உக்காந்திருந்தா.

            "நாம்ம ஒன்னோட மனசெ ஹர்ட் பண்ணிருக்கிறதா நெனைச்சா ஐயாம் சாரி!"ன்னாங்க அந்த அம்மா.

            "அப்பிடில்லாம் இல்லம்மா! பழசெ நெனைக்குறப்பவே கோவம் கோவமா வருதும்மா. அதெயேத்தாம் ஒவ்வொரு எடத்துலயும் ஞாபவம் பண்ணிச் சொல்லச் சொல்லுதீயே! அவனெ தொலைச்சிக் கட்டிட்டுத் தலைய முழுவிட்டுப் போயித் தொலைஞ்சா தேவலாம்ன்னு இருக்கு. எஞ்ஞ யப்பாவும், யண்ணனும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணங்காசி, நகெநட்டு, சீரு சனத்தி எல்லாம் அவ்வேங்கிட்டெ இருக்கு. அதெ மட்டும் அவ்வேங்கிட்டெயிருந்து வாங்கிக் கொடுத்துப்புட்டா எங் கடெம முடிஞ்சிடும். பெறவு நாம்ம பாட்டுக்கு நமக்குத் தோணுற மாதிரி போயிட்டே இருப்பேம்!"ன்னா செய்யு.

            "அதுக்கு நாஞ்ஞ கேரண்டி. அதெப் பத்தி நீயி கவலையே பட வாணாம். நீயி நெக்ஸ்ட் ஹியரிங் மட்டும் கட்டாயமா வா! வர்றப்போ ஒன்னோட நலம்விரும்பிக சில பேத்தையும் அழைச்சிக்கிட்டு வா!"ன்னாங்க அந்த அம்மா.

            "நமக்கென்ன யம்மா! நீஞ்ஞப் போடுற ஒவ்வொரு காயிதத்துக்கும் வந்துட்டுதானே இருக்கேம். அவுங்க தரப்புலேந்து வந்தாத்தானே பேச முடியும். நாம்ம பாட்டுக்கு நெறைய பேர்ர அழைச்சி வந்து இந்த மூணு தடவெயும் ஒண்ணும் காரியம் ஆவாம திரும்பிப் போனாப்புல அடுத்த தடவெயும் போனா நல்லாவா இருக்கும்?"ன்னா செய்யு.

            "இந்தத் தடவெ அப்பிடி நடக்காது. ஒம் புருஷனுக்குப் போன போட்டுப் பேசிட்டேம். அதுக்கும் அவ்வேம் வரலன்னா சமூக நலத்துறை சார்பா அவ்வேம் மேல வன்கொடுமை தடுப்புச் சட்டத்துல வழக்கப் போட்டுடுறதா இருக்கேம். அதெயும் அவ்வேங்கிட்ட சொல்லியாச்சு. அதால எப்பிடி இருந்தாலும் அவ்வேம் வந்துததாம் ஆவணும். வராம இருக்குறது அவனுக்குத்தாம் ஆபத்து. இந்த மூணு தடவெ வந்ததுப் பெரிசில்ல. நாலாவது தடவெ வாரதுதாம் பெரிசு. தவறாம வந்துப்புடு!"ன்னாங்க அந்த அதிகாரி. சுப்பு வாத்தியாரையும் கூப்புட்டு தவறாம அடுத்த மொறை உங்க சார்பா பேசுறதுக்கு முக்கியமான ஆளுங்கள அழைச்சிட்டு வாங்கன்னும் கூடிப் பேசி நல்ல ஒரு முடிவுக்கு வருவோம்ன்னும் சொன்னாங்க.

            பேசிட்டு வெளியில வர்றப்போ சுப்பு வாத்தியாருக்குத் தெரிஞ்ச ஓய்வூதியரு சங்க தலைவரு ஒருத்தரு அந்தப் பக்கமா போனாரு. சுப்பு வாத்தியார்ரப் பாத்ததும் அடையாளம் தெரிஞ்சிக்கிட்டுச் சிரிச்சாரு அந்த ஆளு. சுப்பு வாத்தியாரு ஓடிப் போயி அவருக்கு அந்த எடத்துல எல்லாம் நல்லா அறிமுகம் இருக்கும்ன்னு அவருகிட்டெ தன்னோட நெலமையையும் கதெயையும் சொல்லி, "கொஞ்சம் அவுங்ககிட்டெ சொல்லி சீக்கிரம் முடிக்க ஏற்பாட்ட பண்ணி வுடணும்!"ன்னு கேட்டுக்கிட்டாரு.

            அதுக்கு அந்த ஆளு, "அவுங்க சரியாத்தாம் செய்வாங்க. பிராசஸ்படி போவாங்க. ரொம்ப கரெக்டா பேசுவாங்க. கவலெபடுறதுக்கு ஒண்ணும் இல்ல. கொஞ்சம் அலைச்சலப் பாக்க வாணாம். முடிவ கரக்ட்டா எடுத்துக் கொடுப்பாங்க. நமக்கு கலக்ட்ரேட்ல மேல கொஞ்சம் வேல இருக்கு. பெறவு பேசுவோம்! நீஞ்ஞப் பாருங்க!"ன்னு அவசர அவசரம பட்டும் படாம பேசுனதப் போல பேசிக்கிட்டுப் போயிட்டே இருந்தாரு. அத்து சரி நம்ம சார்பா பேசுறதுக்கு ஒலகத்துல யாருமே இல்லங்றப்போ இவரு மட்டும் எப்பிடிப் பேசுவாருன்னு நெனைச்சிக்கிட்டு, வக்கீல அப்பிடியே பக்கத்துல இருந்த கோர்ட்டுல பாத்துட்டு சேதியச் சொல்லிட்டு அங்கேயிருந்து கெளம்பி வந்தாரு சுப்பு வாத்தியாரு. வக்கீல் வழக்கம் போல பாத்துக்கிடலாம், போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பி வெச்சாரு.

            ரெண்டு மூணு மாசம் ஒரே விசயத்துக்காக அலைஞ்சி காரியம் ஒண்ணும் ஆவ மாட்டேங்குதுன்னு நெனைக்குறப்போ மனசு கொஞ்சம் தளந்துதாம் போவுது. அத்தோட ஒரு விசயத்தெ திரும்ப திரும்ப பேசுறப்போ நாம்ம எடுத்த முடிவு தப்போங்ற எண்ணமும் வந்துப் போவுது. அப்பிடித்தாம் இருந்துச்சு சுப்பு வாத்தியாரோட மனநெலை அப்போ. மனசுல ரொம்ப தெகிரியம் இருந்தா அந்தப் பயெ என்ன பண்ணாலும் பரவாயில்லன்னு பேசாம கூட உக்காந்திருக்கலாம். அவ்ளோ தெகிரியம் எப்பவும் மனசுல இருக்கணுமே. ஒரு நேரத்துல இருக்குற தெகிரியம், இன்னொரு நேரத்துல இருக்காது. மனசு அப்பிடித்தாம் இருக்குது. அதெ நெனைச்சித்தாம் நடக்கறதுக்குத் தகுந்தாப்புல எல்லாம் போவ வேண்டியதா இருக்குன்னு நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...