24 Feb 2020

நஞ்சாக்கெ சுத்திகிட்டு... ஊரெல்லாம் வெரட்டிக்கிட்டு...

செய்யு - 368

            நடக்கக் கூடாத ஒரு விசயம் ஒரு மனுஷனுக்கு நடக்குறப்போ மனுஷனோட பகுத்தறிவு போற எடம் தெரியாம போயிடுது. அப்படி ஏன் தனக்கு மட்டும் நடக்குதுன்னு அது சதா யோசிக்க ஆரம்பிச்சு அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு மூட நம்பிக்கையான ஒரு காரணத்துல அது சிக்கிக்கும் போலருக்கு. சங்கு சுப்பிரமணியெம் வாழ்க்கையில அப்படி ஒரு சம்பவம் ஆகிப் போச்சு. அதுக்குப் பிறவுத்தாம் அவரு பகுத்தறிவையெல்லாம் தூக்கி துர வெச்சிப்புட்டு பக்திப் பழமா மாறி சோசியக்காரரு ஆயிட்டாரு.
            வாழ்க்கையில சில சம்பவங்க நடக்கறப்ப நாம்ம என்னத்தாம் செய்ய முடியுது? எம்மாம் பெரிய பயில்வானா இருந்தாலும் சரித்தாம், எம்மாம் பெரிய புத்திசாலியா இருந்தாலும் சரித்தாம் நடக்குறது நடந்துதாம் தீருது. வாழ்க்கையில எல்லாமுமா மனுஷனோட கட்டுல இருக்கு. மனுஷனோட கட்டுல இல்லாத எவ்வளவோ விசயங்க இருக்கே. ஒரு புயலு அடிக்கிது, ஒரு பூகம்பம் வருது. இதெல்லாம் மனுசனோட கட்டுல இருக்குற விசயங்களா என்னா? இது எல்லாத்தியும் விட மனுசனோட கட்டுல இருக்க முடியாத ஒரு விசயம்ன்னா பிறத்தியாரோட மனசுதாம். ஒரு புயல சமாளிச்சிடலாம், ஒரு பூகம்பத்த சமாளிச்சிப்புடலாம், பிறத்தியில இருக்குற ஒரு மனச சமாளிக்க முடியாது. அது என்ன முடிவு எடுக்குதோ அதாங் அதுக்கு எல்லாமே. அதெ கட்டுப்படுத்திக் கொண்டு வர்றதுங்றது இமய மலைய உருட்டிப் பெரட்டிக் கொண்டு வர்றது போலத்தாம். அந்த மனசுல இருக்குற ரகசியம் இருக்கே. அதெ ஆரு அறிஞ்சிக்க முடியும்? மனசுல ஒரு ரகசியத்த வெச்சிக்கிட்டுப் பிறத்தியில ஒருத்தரு ஒண்ணு பண்றதுக்கு யாரு என்னா பண்ண முடியும்? ஆனா மனசு இருக்கே அது அப்பிடியா யோசிக்கும்? அப்படி யோசிக்காது. கொஞ்சம் கவனமா இருந்திருந்தா சரி பண்ணிருக்கலாமுன்னுல்லா யோசிக்கும்.
            ஊருல பல பேருக்குக் கல்யாணங் காட்சிய பண்ணி வெச்சி சந்தோஷப்பட்ட சங்கு சுப்பிரமணியத்துக்குப் பொண்ணு பாத்தாச்சின்னா ஊரு எப்பிடி அல்லோகலப்பட்டிருக்கும்னு சொல்லவா வேணும்? பொண்ணு பாத்து முடிஞ்சதும் மாப்புள்ளயப் பாத்து நிச்சயத்த எழுத பொண்ணு வூட்டுக்கார ஆளுக கொத்தூருக்கு வாராங்க. அப்போ பொண்ணு ஊரு சனங்க வண்டி கட்டிக்கிட்டும், சைக்கிள்லயுமா வாராங்க. சங்கு சுப்பிரமணியத்து வூட்டுக்கு மின்னாடி மாட்டு வண்டியுமா, சைக்கிளுமா கெடக்குது. தன்னோட சிஷ்யப்புள்ளைக்கிக் கல்யாணம்னு மூலங்கட்டளெ வாத்தியாரும் வந்திருக்காரு. வந்தவரு அங்கன இங்கன நின்னுகிட்டு பேசிட்டு இருந்தவரு, நிப்பாட்டியிருந்த சைக்கிளு கேரியர்ல சித்தெ உக்காந்தாரு பாருங்க. "எவம்டா அது? நம்ம வண்டியோட கேரியர்ல உக்காந்திருக்கிறது?" அப்பிடின்னு ஒரு கொரலு கேட்டதுதாம் தாமசம். அந்தக் கொரலக் கொடுத்த ஆளப் பிடிச்சி வாத்தியாரோட சிஷ்யப் புள்ளைங்க ஆளுங்க அடிச்சாங்க பாருங்க அடி. ஒங்க வூட்டு அடி, எங்க வூட்டு அடியில்ல, ஒங்க ஊரு அடி, எங்க ஊரு அடியில்ல அப்பிடி அடியோ அடியின்னு அடிச்சதோட வுட்டுத் தொலையாம நஞ்சாக்கெ வேற சுத்திகிட்டு அந்த ஆளோட மொகரைப் பேந்துப் போறாப்புல சுத்திக்கிட்டே அவனெ வெரட்டிக்கிட்டே போறாங்க. அவ்வேம் கொத்தூரோட அத்தென தெருவுலயும் பூந்து ஆளு தப்பிச்சாம் பொழைச்சாம் போதும்னு ஓடுறாங். தொரத்துற கூட்டமும் அவனெ விட்டாம் பாருன்னு தொரத்திக்கிட்டு ஓடுது.
            இதுல இந்த நாஞ்சாக்கெ சுத்தி அடிக்கிற சங்கதியப் பத்தி பேசியாவணும். சங்கு சுப்பிரமணியெம் கம்பு, குஸ்தி, சுருளு, மான்கொம்புன்னு கத்து கொடுத்துட்டு இருந்தப்போ, கொத்தூர்லேந்து ஒறவுக்கார கலியாணத்துக்குக் கோயம்புத்தூரு போன ஆளு ஒருத்தெம் அங்க கராத்தே கத்துக் கொடுக்குறப் பாத்து அதுல ஆசெ வந்து அங்கயே தங்கி கராத்தேயைக் கத்துக்கிட்டு ஊரு வந்து சேந்தாம். வந்துச் சேந்தவெம் கையில நஞ்சாக்கை வெச்சிச் சுத்திக்கிட்டு கராத்தெ கத்துக்கிட்டவம்தான் பெரிய வஸ்தாத்து, கம்பு சுத்துறவெல்லாம் தம்மா துண்டு வஸ்தாத்துத்துன்னு வாயளக்க ஆரம்பிச்சிட்டாம். இந்த சேதி சங்குவோட காதுல விழப் போவ, அந்தப் பயலெ வரவெச்சி, "நீயி ன்ன பெரிய வஸ்தாத்து? செஞ்சிக் காட்டுடா ஒம்மட வித்தைய?"ன்னுட்டாரு. சங்கதியெ கேள்விப்பட்டு ஊரு பயலுக அத்தென பேரும் கூடிட்டானுவோ. அந்தப் பய "ஹம் ஹூம்"ன்னு மூச்செ ஒரு மாதிரி பண்ணிக்கிட்டு அப்படியும் இப்படியுமா கராத்தேயில குத்து விட்டுக் காட்டுறாம்.
            இதாங் சங்கதியான்னு பிடிச்சிக்கிட்ட சங்கு என்ன பண்றார்ன்னா குஸ்தியில அத்து மாதிரிக்கி இருக்குறதெ செஞ்சிக் காட்டி, "இதாம்லா கராத்தேயில ஹம் ஹூம்னு பண்ணுறாம்!"ன்னு சொல்லப் போவ, அந்தப் பய ச்சும்மா இருக்காம, யாய், ஹியாய்ன்னு வரிசெ போட்டு கையி காலு வெச்சி பிடியில்லாம் போட்டு காட்டியிருக்காம். பிடி போடுறதுல சங்கு சுப்பிரமணியெம் பெரிய்ய ஆளு. ஆனா அதெ செஞ்சிக் காட்டவும் மாட்டாரு, சொல்லிக் கொடுக்கவும் மாட்டாரு. சில பிடிகளப் போட்டு ஒரு முறுக்கு முறுக்குனா போதும் எதிராளி ஆளு செத்துப் போயிடுவாம். அப்பிடிப்பட்ட கொரங்குப் புடி, உடும்பு புடியெல்லாம் அவரு அறிஞ்சவரு. மூலங்கட்டளெ வாத்தியாரும் அந்தப் பிடிகள சங்கு சுப்பிரமணியத்தெ தவுர வேற யாருக்கும் பெரிசா சொல்லிக் கொடுக்கல. பேருக்கு ரண்டு பிடிய சொல்லிக் கொடுப்பாரே தவுர முக்கியமான பிடியச் சொல்லிக் கொடுக்க மாட்டாரு.
            "வாடா பயலே வரிசெய கட்டி!"ன்னு வேட்டிய தார்ப்பாச்சால கட்டிக்கிட்டு கோதாவுல எறங்கிட்டாரு சங்கு சுப்பிரமணியெம். அந்தப் பயலும் வெவரம் புரியாம கைய கால ஆட்டிக்கிட்டு ஆய், ஹாய், ஹியாய்ன்னு கத்திக்கிட்டு வந்து ஹம் ஹூம்னு மூச்செ பிடிச்சிக்கிட்டு வரிசையெ கட்டுனா, ஒரே பிடித்தாம் அவனெ, பய கைய கிய்ய ஆட்ட முடியாம அவனோட ரண்டு கையும் அவனோட பொரடிக்குப் பின்னால சங்கு சுப்பிரமணியத்தோட கையில இருக்கு. முன்னால இருந்த கையில எப்பிடி பின்னால முறுக்கிக்கிட்டு போச்சுன்னு ஒருத்தருக்கும் புரியல. எல்லாம் கண்ணு இமைக்குற நேரத்துல நடந்து முடிஞ்சிடுச்சி. பயெ வசமா மாட்டிக்கிட்டாம். சங்கு சுப்பிரமணியெம் ஒரு இறுக்கு இறுக்குனா போதும் அவ்வேம் கையால அவ்வேம் கழுத்து நெரிஞ்சிப் போயி பரலோகம் போவ வேண்டியதுதாம். "ன்னடா பயலே?"ங்றாரு இப்போ சங்கு. "விட்டுடுங்க வாத்தியாரே!"ங்றாம் அவ்வேம் குரலு கம்மிப் போயி.
            இப்போ நெசமாவே பய வாயடைச்சிப் போயிட்டாம். அவ்வேம் அத்தோட வாயடைச்சிப் போயி நிக்காம, நாஞ்சாக்கெ பத்தி அடுத்ததா எடுத்து வுட்டுச் சுத்திக் காட்டியிருக்கிறாம். தோளு பட்டைக்கு உள்ளார விட்டு, வெளியில வுட்டு, காலு கவுட்டிக்கு உள்ளார வுட்டு, வெளியில வுட்டு, தலையைச் சுத்தி, ஒடம்பைச் சுத்தி அப்பிடி இப்பிடின்னு ரவுண்டு கட்டியிருக்கிறாம். பாத்த சங்குக்குக் கொஞ்சம் பிரமிப்புத்தாம். பய அந்த அளவுக்குப் பெரமாதமா நாஞ்செக்கெ சுத்துறாம், சுத்திக்கிட்டே அப்பிடியும் இப்படியுமா நகர்ந்து எதிராளிய எப்டியெல்லாம் தாக்கணுங்றதெ வரிசைப் போட்டுச் செஞ்சிக் காட்டுறாம். அதெ பாத்துப்புட்டு நெத்தியச் சுருக்குன சங்கு அவங்கிட்டெ, "மறுக்கா ஒரு தபா செஞ்சிக் காட்டு!" அப்பிடின்னிருக்காரு.

            அந்தப் பயெ செரித்தாம் இப்போ சங்கு அசந்துப் போயிட்டார்ன்னு நெனைச்சிக்கிட்டு மறுக்கா சுத்திக் காட்டியிருக்கிறாம். சங்கு அவ்வேம் நஞ்சாக்கெ சுத்துறதெ நல்லா கவனிச்சிக்கிட்டாரு. முழிய அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பல. அவ்வேம் நஞ்சாக்கெ சுத்தி முடிச்சதெ நிப்பாட்டுனதும், சங்கு பக்கத்தால இருந்த ஆளுகிட்டெ சிலம்பக் கம்ப கொண்டு வாரச் சொல்லிருக்காரு. கம்பு அவரு கைக்கு வந்ததும் ஏது சங்கு கம்போட சண்டைக்கித்தாம் வாரப் போறாரோன்னு அந்தப் பயெ நெனைச்சிக்கிட்டு இருக்கிறப்போ, சங்கு கம்பெ வெச்சிக்கிட்டு அந்தப் பெய நஞ்சாக்குல சுத்துன அத்னெ சுத்தையும் வரிசையையும் செஞ்சுக் காட்டுனாரு பாருங்கோ, பயெ அசந்துப் போயி சங்குவோட கால்ல விழுந்துப்புட்டாம். "மன்னிச்சிப் போடுங்க வாத்தியாரய்யா! நம்ம மண்ணோட கலைய பெரிசில்லன்னு நெனைச்சிக்கிட்டு சீமைக்கார்ரேங் கலைய பெரிசா நெனைச்சிக்கிட்டு ஒங்களையும், நம்ம மண்ணோட கலையையும் மருவாதிக் கொறைவா பண்ணுறாப்புல நடந்துக்கிட்டேம்!"ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாம்.
            சங்கு அவ்வேம் முதுகுல தட்டிக் கொடுத்துப்புட்டு, "பரவால்லடா பயலே! கோவம்புத்தூருக்குப் போயி ச்சும்மா வேடிக்கெ பாத்துட்டு வந்துடாம அத்தெ கத்துக்கிட்டு ஊரு வந்துச் சேந்தே பாரு அத்தாம்டா இந்த மண்ணோட கொணம். எந்தக் கலையா இருந்தாலும் அத்தெ கத்துக்கணும்டா. நம்மோட கலைத்தாம் ரொம்ப பெரிசின்னு மண்டெ கனமா இருந்துப்புடக் கூடாது. நீயி நஞ்சாக்கெ பிடிச்சி சுத்துனதப் பாத்தப்ப நமக்கே ஆசெ வந்துப்புட்டுடா. கம்பு, சுருளு, மான் கொம்போட அத்‍தெயும் சேத்து நாம்ம சொல்லிக் கொடுப்போம்லா!"ன்னுருக்காரு. அந்தப் பயலுக்குச் சந்தோஷம்னா சந்தோஷம். சுத்தி நின்ன ஆளுகளுக்கும் கொண்டாட்டம்.
            சரித்தாம் இந்த நாஞ்சாக்கெ எங்ஙன வாங்குறது, என்ன வெலைக்கி வாங்குறதுன்னு சங்கு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்பவே, சங்கு நாஞ்சாக்கெ வித்தையச் சொல்லிக் கொடுக்குறதுல சேத்துக்கிட்டாருங்ற சங்கதி ஊரு முழுக்கப் பரவி மறுநாளே அவனவனும் கயித்துலயும், எருமை மாட்ட கட்டுற சங்கலியிலயும் கம்பையும், அங்கன இங்கன கெடந்த இரும்புத் துண்டையும் ரண்டுப் பக்கத்துக்கும் கட்டிக்கிட்டு வெத வெதமா அவனுங்களே தயாரு பண்ண நஞ்சாக்கோட வந்து நின்னுக்கிட்டு, "கத்துக் கொடுங்க வாத்தியாரய்யா!"ன்னு நிக்குறானுவோ. அவனவனும் அவனுகளா செஞ்சிக்கிட்டு வந்து நின்ன நஞ்சாக்கெ பாத்ததும் சங்குவுக்குச் சிரிப்பு காங்கல. சர்தாம் பயலுகளோட ஆர்வத்தெ கொறைச்சிப்புடக் கூடாதுன்னு அன்னிக்கே மாட்டு வண்டிய கட்டிக்கிட்டு ஆர்குடி, திருவாரூன்னு அப்போ அலைஞ்சி அங்கன எங்கயும் கெடைக்காம நேரா வண்டிய தஞ்சாரூக்கு வுட்டு அங்கனத்தாம் கராத்தே சொல்லிக் கொடுக்கற ஆளுகளுகிட்ட நஞ்சாக்கெ இருக்குறதெ கேள்விப்பட்டு அம்பது நஞ்சாக்கெ வெல கொடுத்து வாங்கிட்டு வந்தாரு.
            அன்னியிலேந்து இந்த ஊருக்கார பயலுவோலுக்கு நஞ்சாக்கெ சுத்துறதுன்னா அல்வா சாப்புடுற மாதிரிக்கி ஆயிடுச்சி. பொழுது போகாம அங்கன இங்கன போற பயலுக கூட இடுப்புல நஞ்சாக்கெ சொருவி வெச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாம். ச்சும்மா நடந்து திரியுறப்போ அப்பிடி இப்பிடி போறப்பயே கைய காத்துல வீசி நாஞ்சாக்கெ சுத்துறாப்புல அவனுங்க பண்ணுன அலப்பறை இருக்கே அதெ வார்த்தையில சொல்லிட முடியாது. இப்போ கிரிக்கெட்டு வெளையாடுற சுடுகுஞ்சி வரைக்கும் ச்சும்மா நடந்துக்கிட்டு போறப்ப பந்து வீசுறாப்புல, பேட்டிங் பண்ணுறாப்புல கைய காத்துல வீசுவானுங்கோ பாருங்கோ அந்த மாதிரிக்கி அப்போ நாஞ்சாக்குப் பித்துப் பிடிச்சி அலைஞ்சானுவோ கொத்தூர்ல கெடந்த அத்தனெ பயலுகளும்.
            அந்த நஞ்சாக்கெ வெச்சித்தாம் மூலங்கட்டளெ வாத்தியார்ர ஒரு வார்த்தைக் கேட்டுப்புட்டார்ன்னு ஊருக்காரனுவோ சைக்கிள்காரனெ அந்த வெரட்டு வெரட்டு வெரட்டுனானுவோ. அந்த ஆளோட மூஞ்சி மொகரையெல்லாம் ரத்தம்னா ரத்தம் அம்மாம் ரத்தம். அவ்வேம் வடவாதி வரைக்கும் ஓடிக் களைச்சி பிற்பாடுதாம் பின்னாடி ஓடி வந்த மூலங்கட்டளெ வாத்தியாரால கூட்டத்தெ பிடிக்க முடிஞ்சிது. கூட்டத்தெ பிடிச்சி நிறுத்துனா மூலங்கட்டளெ வாத்தியாரு தோளுல போட்டு இருந்த துண்டால அத்தனெ பயலுகளயும் விசிறி விசிறி அடிக்கிறாரு. அவரு அப்பிடி அடிக்க அடிக்க ஒவ்வொரு பயலும் சிரிக்கின்னா சிரிக்கி அப்பிடிச் சிரிக்கிறாம். பின்னெ அவரு கம்பாலே அடிச்சாலே பயலுக பம்மிக்கிட்டு நிப்பானுவோ வலி தெரியாத மாதிரிக்கி. துண்டால அடிச்சா அவனுகளுக்கு எம்மாத்திரம் அது.
            அடிபட்ட ஆளெ பிடிச்சிக்கிட்டு கூட்டத்தெ பாத்துப் பேசுனாரு, "எலே வித்தெக்காரனுக்கு பெரிய வீரம்னா கோவத்தக் கட்டுப்படுத்துறதாங். நெதானம்டா பெரிய வித்தெ. அமைதிய்யா இருக்கோணும்டா. அதாங் வித்தெ. ஒமக்கு வித்தெ தெரிஞ்சிருக்குன்னு வெளியில ஒரு ஈயி காக்காயிக்குத் தெரியப்படாது. அவ்வேம்தாம் வித்தைக்கார்ரேம். கோவப்பட்டு வித்தையே எடுத்து வெளியில வுடுறவேம் வித்‍தெக்காரனெ கெடையா தெரிஞ்சிக்கோங்க. எவ்வம்டா அத்து நஞ்சாக்கெ மொதல்ல தூக்குனது?"ங்றாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
            வித்தையெ காட்டுறப்போ ஒருத்தனுக்கொருத்தெம் விரோதி மாதிரிக்கி அடிச்சிப்பானுங்களே தவுர ஒரு தப்பு நடந்துப் போச்சின்ன்னா ஒருத்தனெ காட்டிக் கொடுக்காம, நமக்கு தெரியா, ஒமக்குத் தெரியான்னு நிக்குற பயலுகளாச்சே இவுனுங்க. ஒரு பயலும் காட்டிக் கொடுக்குற மாட்டேங்றானுவோ. அத்தென பயலுக கையிலயும் நஞ்சாக்கு வேற இருக்குது. எவ்வேம் மொதல்ல அடிச்சான்னு எப்பிடிக் கண்டுபிடிக்கிறது? இதெப் பேச இப்போ நேரமில்லன்னு மூலங்கட்டளெ வாத்தியார்ரே வடவாதியில இருந்த வாடவைச் சைக்கிளு கடையில ஒரு சைக்கிள எடுத்துக்கிட்டு அதுல அடிவாங்குன ஆளெ பின்னாத்துல உக்கார வெச்சி பக்கத்துல அப்போ சாத்தனூர்ல இருந்த கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கி மிதிக்கிறாரு. கூட்டத்துல இருந்த அத்தன பேரும் பின்னாலயே ஓடி வர்றானுவோ அந்த ஆளையும் பிடிச்சிக்கிட்டு, சைக்கிளையும் தள்ளிக்கிட்டு. மூலங்கட்டளெ வாத்தியாரு சைக்கிள மிதிக்குறதுக்குத் தேவையில்லாம தள்ளிக்கிட்டு ஓடுறானுவோ கூட்டத்துல.
            அங்ஙன ஆஸ்பத்திரியில வெச்சி கட்டுக்கிட்டுல்லாம் போட்டுட்டு ஊருக்கு வர்றப்பத்தாம் கேக்குறாரு, "எலே சங்கய்யாவுக்குக் கலியாணச் சோலியில இப்பிடி பண்ணுனா பொண்ணு வூட்டுக்காரனுவோ பொண்ணு கொடுப்பானுவோளா மாட்டானுவோளா? நீஞ்ஞ இப்பிடி பண்ணி வெச்சிருக்கீங்களீயேடா! அஞ்ஞ என்னா சங்கெதி நடந்திருக்கோன்னு வேற தெர்யலையடா! பொண்ணு தர்ற மாட்டேன்னுப்புட்டானுவோனா நம்மாள கல்லாணம் நின்னது மாதிரில்லடா ஆயிப்புடும்டா!"ன்னு குசுகுசுன்னு சத்தம் போட்டுக்கிட்டு வர்றாரு.
            "எஞ்ஞ வாத்தியாரிக்கி வாத்தியாரு நீஞ்ஞ. ஒஞ்ஞள ஒரு வார்த்தெ பேசுனா ச்சும்மா விட்டுப்புடுவோமா! ஒடம்புல உசுர தங்குனது பெரிசிங்கய்யா வாத்தியாரய்யா!" அப்பிடிங்கிறானுவோ கூட்டத்துல ஆளாளுக்கு.
            "அடிச் செருப்பால!"ங்றாரு மூலங்கட்டளெகாரரு.
            "அதாங் வாத்தியார்ரே! ஒங்க கையால அடிபட்டா அவ்வேம் பெரிய வித்தெக்காரனாயிடுவோனுவோ. அடிங் வாத்தியார்ரே!"ன்னு அவனவனும் முன்னால வந்து நிக்குறாம்.
            "போக்கத்த பயலுவோளா! எஞ் சிஷ்யெம் சங்கய்யா பாருங்கடா! வித்தெ தெரிஞ்சவம்தாம். ஒரு சண்டென்னா அந்த எடத்துல அவனெ பாக்க முடியா. அத்தாம்டா வித்தெக்கார்ரேம். ஞாயம் இல்லாம ஒரு சம்பவெம் நடக்குறப்பத்தாம் ஞாயத்தெ நெலநாட்ட வித்தைய கையில எடுக்கணும். ஒங் கோவத்துக்கு, ஒங் ஆசா பாசத்துக்குல்லாம் கையில எடுக்குறதுக்கு வித்தெ ஒம்மட இஷ்டத்துக்கு ஆடுற மசுராடா?"ங்றாரு மூலங்கட்டளெ வாத்தியாரு. ஒரு பயலும் ஒண்ணும் பேசல. எல்லாப் பயலும் மூஞ்சியிலயும் ஈயாடல. என்ன ஆவப் போவுதோ, ஏது ஆவப் போவுதோ? நெலமைய சமாளிக்க எப்பிடி வார்த்தைய வுடுறதுன்னு வரிசெ பண்ணிக்கிட்டு மூலங்கட்டளெ வாத்தியாரு கொத்தூருக்கு வந்தா, பொண்ணு வூட்டுக்காரனுவோ எந்தக் கொறையும் சொல்லாம மூலங்கட்டளெ வாத்தியாரு கைய பிடிச்சிக்கிட்டு, "தப்பு நடந்துப் போச்சி. மன்னிக்கோணும்!"ங்றாங்க. மூலங்கட்டளெ வாத்தியாருக்கு ஒண்ணும் புரியல. "யப்பா அடிச்சிது நம்மப் பயலுக! நாமுல்லா மன்னிப்புக் கேக்கோணும். நீஞ்ஞ மன்னிப்புக் கேட்டு நம்மள வுட உசரத்துல நிக்குதீயேளே?"ங்றாரு.
            "அடிபட்ட பயெ சண்டியரு கணக்கா ஊருல திரியுற பயெ. ரொம்ப அட்டாதுட்டி பண்ணிட்டு திரியுறவேம். ஊருல ஒருத்தெம் சொல்ல கேக்குறதில்ல. ஊருல அவனெ தட்டி வைக்கணும்னு அவனவனும் நிக்குறாம். ஆனா எவ்வேம் தட்டி வைக்கிறது? ஆரு பூனைக்கி மணியக் கட்டுறதுன்னு யோஜனெ. அவ்வேம் கொத்தூரு வந்து தட்டுப்படணும்னு இருந்திருக்கு. நல்ல சங்கதிதாங் நடந்திருக்கு. மெத்த சந்தோஷமுங்க. இனுமேலாவது அந்தப் பயெ ஒழுங்கு மருவாதிய இருப்பாம். இனுமே ஊர்ல பேச வாயெடுக்கட்டும், கொத்தூர்ல போயிக் கொட்டுப்பட்ட பயதானேம்ன்னே கெக்கலி கொட்டுவோம்லா!"ங்றாங்க பொண்ணு வூட்டுக்காரவுங்க. "அடடா கெட்ட வெசயத்திலயும் ஒரு நல்ல வெசயம்! அதானெ பாத்தேம்! நம்ம சிஷ்யக்கார பயலுவோ அந்த மாதிரிக்கி தப்பா எதெயும் செஞ்சிப்புட மாட்டோனுவோளே!"ன்னு பெருமூச்செ ஒண்ணு விட்டுக்கிட்டாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
            பெறவு என்னா? கலியாணச் சோலித்தாம். கலியாணச் சாப்பாடுதாம். இந்தக் கல்யாணம்தாம் சங்குச் சுப்பிரமணியத்தெ சோசியக்காரரா மாத்திச்சு. ஒரே மூச்சுல அந்தக் கதெய முடிச்சிப்புடலாம்னு பாத்தா முடியல பாருங்க! இன்னொரு மூச்செ இழுத்து விட்டுத்தாம் சொச்சக் கதெய சொல்லியாவணும்.
*****


23 Feb 2020

கம்புல கட்சி வளத்தவரு!

செய்யு - 367

            கொத்தூரு திட்டைக்குத்‍ தெற்கால நாலு மைலு தொலைவுல இருக்குற ஊரு. அங்க ஒரு சோசியரு சங்கு சுப்பிரமணியெம். அவரு குடும்பத்துல யாரும் முன்ன பின்ன சோசியரு கெடையாது. அவர்தாம் மொத சோசியரு. அவரு சோசியரு ஆன கதெய சுத்துப்பட்டுல எல்லாரும் பேசிக்கிறது உண்டு. சங்கு சுப்பிரமணியெம் ஆளு கட்டையாத்தாம் இருப்பாரு. நல்ல செவப்பு. ஒடம்பு நல்ல கனத்த ஒடம்பு. கம்பு விளையாட்டுல பெரிய ஆளு. மூலங்கட்டளை சிலம்ப வாத்தியார்கிட்ட கம்பு கத்துகிட்டவரு. இவரு ஒருத்தருதாம் வாத்தியார்கிட்டயிருந்து சுருளு சுத்துறது, மான்கொம்புல வெளையாடுறது, குஸ்திப் போடுறதுக்கான சலாம் வரிசைப் போடுறதுன்னு அத்தனையும் கத்து முடிச்சவரு. மித்தபடி வந்தவங்க எல்லாம் சிலம்பத்துல மயங்கி அதெ மட்டும் கத்துக்கிட்டு போனவங்கத்தாம். மூலங்கட்டளை சிலம்ப வாத்தியாரோட தலைப்புள்ள வரிசையில அதாச்சி மொத செட்டு வகையறாவுல வர்றவங்கள்ல இவரும் ஒருத்தரு. அதுக்குப் பெறவு ஏழெட்டு செட்டுகளுக்குப் பெறவுதாம் ரகுநாதெம்லாம் வாத்தியார்கிட்ட வந்து சிலம்பம் கத்துகிட்டது.
            சங்கு சுப்பிரமணியெம் வாத்தியார்கிட்ட கத்துக்கிட்டதோட எங்க சிலம்பம், குஸ்தின்னு கேள்விப்பட்டாலும் அரிக்கேன் லைட்டைக் கொளுத்திக்கிட்டு கையோட நாலைஞ்சு ஆளுகளப் புடிச்சிப் போட்டுக்கிட்டு வண்டிக் கட்டிகிட்டுக் கெளம்பிடுவாரு. அங்கப் போயி தன்னோட வாத்தியாரோட பெருமைய நெலைநாட்டுறதுல ஒரு வெறித்தனம் அவருக்கு. அப்போல்லாம் இன்னின்ன வாத்தியார்கிட்ட கத்துக்கிட்ட ஆளுங்கள்ல நாம் பெரிசா? நீயி பெரிசா? ஒம்மட வாத்தியாரு பெரிசா? எம்மட வாத்தியாரு பெரிசா?ன்னு போட்டி பந்தா நடக்குறது சகஜம். அதுலப் போயி செயிச்சிட்டு வந்து அதெ கதை கதையா அளக்குறது அவங்களுக்கு ஒரு சந்தோஷம். அப்பிடிச் செயிக்கிறப்போ எந்த ஊர்ல போயி செயிக்குறாங்களோ அந்த ஊருக்காரவு பண்ணுற மருவாதிய அவுங்கச் சொல்றதெ கேக்குறப்ப கம்பு வெளையாட்டப் பத்தி ஒண்ணும் தெரியாத பயலும் கம்பு சுத்துறதெ கத்துக்கிடணும்னு கெளம்பிடுவாம். சில ஊர்கள்ல மூலங்கட்டளெ வாத்தியாரோட சிஷ்யப் புள்ளேங்றதெ கேள்விப்பட்ட ஒடனே எதிரு சுத்து சுத்த வர்ற ஆளு மெரண்டுப் போயி துண்டக் காணும் துணியக் காணும்னு ஓடுறதெ ரொம்ப சிரிக்காட்டிச் சொல்லுவாரு சங்கு.
            சங்கு சுப்பிரமணியெம் ஆளும் கொத்தூருல பெருங்கையி. கொத்தூர்ல மொத மாடி வூட்டக் கட்டுனவரு இவருதாம். சொத்துப் பத்து நெல நீச்சுக்கு ஒண்ணும் கொறைவில்ல. இவரோட வயலுகள்ல வேலை பாக்குற அத்தனை ஆளுகளும் இவருகிட்ட சிலம்பம் கத்தாவணும்ங்றது எழுதப்படாத கட்டளெ. கத்துக்கிட்டு இவரோட மோதிப் பாத்தாவணும். அத்தனெ ஆளுகளுக்கும் நீல நெறத்துல குழாய்க் கால் சட்டெ, அதெ நீல நிறத்துல கை வெச்ச பனியன் மாதிரியான சட்டெ அவரோட காசுல வாங்கி தச்சிக் கொடுத்து வெச்சிருப்பாரு. அதெ போட்டுக்கிட்டுத்தாம் வயலு வேலையா இருந்தாலும், கம்பு சுத்துறதா இருந்தாலும் வந்தவாணும். அந்தக் காலத்துலயே இப்பிடி தங்கிட்ட வேலை பாக்குற ஆளுகளுக்குச் சீருடைய அறிமுகம் பண்ணுன ஆளு அநேகமா இவராத்தாம் இருந்தாவணும். இவருகிட்டே அப்பிடிக் கம்பு வெளையாட்டைக் கத்துக்கிட்டு கரும்புக் கொல்லைக் காவலுக்குச் சுத்துப்பட்டு ஊர்கள்ல வேலைக்கிப் போயி சம்பாதிச்ச ஆளுங்க நெறைய இருக்காங்க. மூலங்கட்டளெ வாத்தியாரோட சிஷ்யப்புள்ள சங்கு வகையறா கம்பு சுத்துற ஆளுங்கன்னால பண்ணையக்காரவுங்க மறுபேச்சில்லாம கரும்புக்கொல்ல காவலுக்குச் சேத்துக்கிடுவாங்க.
            சங்கு சுப்பிரமணியெம் ஆளு கொஞ்சம் முற்போக்கான ஆளு. அண்ணா கட்சி ஆரம்பிச்ச காலத்துலேந்து திராவிட முன்னேற்றக் கழகத்துல முக்கியமான பொறுப்புல இருந்த ஆளு வேற. அதால அவருக்கு ஆம்பளெ, பொம்பளென்னு பிரிச்சிப் பாக்கக் கூடாது, சாதி வேத்துமையெல்லாம் பாக்கக் கூடாதுன்னு நெனைக்கிற ஆளு. அதால அவரு எப்பிடி ஆம்பளெ ஆளுகளுக்கு நீல நெறத்துல குழாய்க் கால் சட்டெ, அதெ நீல நிறத்துல சட்டை வாங்கித் தச்சிக் கொடுத்தாரோ அதே போல பொம்பளெ புள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுத்து பொம்பளெ புள்ளைகளையும் சிலம்பத்துலயும், குஸ்திலயும் தயாரு பண்ணி வெச்சிருந்தாரு. இப்பிடி ஆம்பளெ, பொம்பளென்னு வேத்துமெ இல்லாம உடுப்புல ஒரு குக்கிராமத்துல பெரிய புரட்சியையே பண்ணவரு.வடவாதியில திராவிட முன்னேற்றக் கழகத்தோட கூட்டம்னா போதும் கொத்தூர்லேந்து ஆளுங்க கம்புச் சுத்திக்கிட்டுக் கெளம்பிடும். மூணு நாலு மைலு தூரம் வரைக்கும் ஆம்பளெ, பொம்பளென்னு கம்புச் சுத்திக்கிட்டு போறதுன்னா சும்மாவா? எந்த ஆளும் அசராது.
            அதுல கம்புல வெத வெதமான கலர் கலரு நாடாவையெல்லாம் கட்டி அப்போ கம்பெ சுத்துறப்போ பாக்குறப்போ ரொம்ப ரம்மியமா வேற இருக்கும். சங்கு சுப்பிரமணியெம் முன்னால முன்னத்தியா சுத்திட்டுப் போவாரு. அவரு கம்புல முன்னயும், பின்னயும் கருப்பு, சேப்பு நாடா கட்டியிருக்கும். தாங் கட்சிக்கார ஆளுங்றதெ அதுலயும் காட்டியாவணும் அவருக்கு. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் சுத்திட்டுப் போனாலும் அலுப்போ, சலிப்போ அவங்களுக்கு வாராதான்னு பாக்கற சனங்க மூக்குல வெரல வைக்கும்.

            அப்போ திராவிட முன்னேற்றக் கழகத்துப் பேச்சாளர்களோட பேச்சக் கேக்கறதுக்குன்னே கட்சிப் பேதமில்லாம பெருங்கூட்டம் கெளம்பி வரும்னா, சங்கு சுப்பிரமணியத்தோட ஆளுக சுத்துற கம்பு வெளையாட்டைப் பாக்குறதுக்குன்னே ஒரு பெருங்கூட்டம் தெரண்டு வரும். அதுலயும் அவருகிட்ட கம்பு உசரம் இல்லாத பொடிசுக சுத்துற கம்பு வெளையாட்டப் பாக்குறதுக்கு ரொம்பவே வேடிக்கையா இருக்கும். அதெ பாக்குறதுக்குன்னெ ஊருல கெடக்குற பொட்டுப் பொடிசுக எல்லாம் கூட்டத்துக்கு வர்ற ஆளுகள நூலு பிடிச்சி வந்து நிக்குமுங்க. வர்ற கூட்டத்துல முக்காவாசிக் கூட்டம் கம்பு வெளையாட்டைப் பாக்கறதுக்குன்னு சொன்னாக்கா அத்து சரியாத்தாம் இருக்கும். அப்பிடி கம்ப வெச்சி கட்சி வளத்த ஆளு.
            அத்தோட மேடையில பேச்சாளரு பேசுறதுக்கு மின்னாடி சங்கோட குஸ்தி வரிசை ஒண்ணு நடக்கும். அதெ பாக்குறதுக்குக் கூட்டம் அள்ளும். வேட்டிய தார்ப்பாய்ச்சால வரிச்சிக் கட்டிக்கிட்டு, ஒடம்பெல்லாம் வேர்வே மினுமினுக்க அவரு போடுற ஆட்டம் கெட்ட ஆட்டமா, செம்ம காரம்மாத்தாம் இருக்கும். அதெ பாத்துப்புட்டு அதே மாதிரிக்கி ஊருக்கு வந்த பிற்பாடு பாத்தவெம் போட்டுப் பாத்தா அத்து வராது. அப்பிடி அதுல பல நுணுக்கங்கள பண்ணி வெச்சிருப்பாரு மனுஷம். அதாலயே பாத்தாக்கா அவர மேடைய வுட்டு எறங்குன ஒடனே ஒரு கூட்டம் அவர்ர சுத்திக்கும். இந்த வரிசையெ எப்பிடிப் போட்டீங்க வாத்தியாரய்யா? அந்த வரிசையெ எப்பிடிப் போட்டீங்க வாத்தியாரய்யா?ன்னு கேள்விக் கேட்டு அவர்ரப் போட்டுத் தொலைச்சிப்புடுமுங்க. பேச வர்ற பேச்சாளரும், இதெ சொல்லிப்புட்டுத்தாம் பேச்சே தொடங்குவாரு, "முதலில் ‍‍மேடையில் நிகழ்ந்ததோ மல்யுத்தம். இனி நடக்க இருப்பதோ சொல்யுத்தம். அந்தக் காலத்திலே யுத்தக் களத்தில் நடந்ததோ வில் யுத்தம். ஆகவே மல்லுக்கு நிற்பதோ, சொல்லுக்கு நிற்பதோ தமிழனிடம் ஆகாது. ஆகவே ஆகாது" அப்பிடின்னு தொடங்குனா கைதட்டலு நிக்குறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஆவும்.
            அப்பிடிக்கி கம்பு வெளையாட்டுலயும், கட்சி மேலயும் அம்புட்டு ஆசெ சங்குவுக்கு. இதுக்குன்னே சென்னைப் பட்டணத்துக்குப் போயி அண்ணாகிட்டேயும், கலைஞர்கிட்டயும் கம்பு வெளையாட்ட ஆடிக் காட்டி அவங்க ரசிச்சுப் பாராட்டுனதெ எப்பயும் சொல்லிக்கிட்டே இருப்பாரு சங்கு சுப்பிரமணியெம். அதெ பாத்ததுலேந்து அண்ணாவோ, கலைஞரோ திருவாரூ பக்கமோ, தஞ்சாவூரு பக்கமோ வந்தா இவர்ரப் பத்தி கேக்காம இருக்க மாட்டாங்க. அப்பிடிக் கேட்குறப்பவே அவுங்க மின்னாடி போயி இந்தா இருக்கேன்னு நானுன்னு போயி முகத்தெ நீட்டுவாரு சங்கு. தமிழ்நாட்டுல எங்க கட்சியோட பெருங்கூட்டம்னாலும் அங்கப் போயி தலையில காட்டலன்னா அவருக்குத் தூக்கம் வாராதுன்னுத்தாம் சொல்லணும். அதுக்கு அவரு மட்டும் போவா நாலு பேத்தையாவது செலவு பண்ணி வேற அழைச்சிட்டுப் போவாரு.
            எங்க கம்பு வெளையாட்டோ, குஸ்தி வெளையாட்டோ நடந்தாலும் வண்டிக் கட்டிக்கிட்டுல்லா போவாருன்னு சொன்னோம்ல. அங்கப் போயி அங்க மல்லுக்கு நின்னு சோலியக் காட்டிப்புட்டுத்தாம் திரும்புவாரு ஆளுகளோட சங்கு. ஒருவேள இவுகளுக்குத் தெரியாத சங்கெதி எதாச்சிம் இருந்துப் போச்சின்னா வண்டியோட அங்கேயே டேராவப் போட்டு அதெ கத்துக்கிட்டுத்தாம் ஊரு திரும்புறது. வண்டியில போறப்பயும், வர்றப்பயும் வாய்க்கா ஓரமா கெடக்குற கோரைப்புல்லுன்னு சொல்லுவாங்களே அந்தக் கோரையப் பிடிடுங்கி வண்டியோட ஆளுக வெச்சாவணும். சங்கோட கையிச் சும்மா இருக்காது. வண்டி போயிட்டு இருக்கிறப்பவே கோரைய ரண்டு கையிலயும் எடுத்து வெச்சி கம்பு போல சுத்துவாரு. சங்கப் பொருத்த வரைக்கும் கோரைய கையில வெச்சி சுத்துறதுதாம் கம்பு வெளையாட்டுக்கு மொத பயிற்சி. அதெ நல்லா சுத்த வந்தாத்தாம் மணிக்கட்டு நல்ல பெரளும்பாரு. சங்கீத ஆளுங்க சாதகம் பண்றாப்புலத்தாம் கோரைய வெச்சுக்கிட்டு சுத்துறதுங்றது அவரோட கருத்து. அப்பிடிக் கோரைய வெச்சிக்கிட்டு சுத்துறப்போ புதுப்புது மொறைகள கண்டுபிடிக்க முடியுங்றது அவரோட இன்னொரு கருத்து. அதுவும் வண்டியோடிட்டு இருக்குறப்போ அதுல உக்காந்துகிட்டு கோரையச் சுத்துனா அவருக்குப் புதுப்புது மொறைகளா தோணிக்கிட்டே இருக்கும்.
            வழக்கமா கம்பு வெளையாட்டுக்குன்னு பெரம்பு கம்புகள வெச்சி பயிற்சிப் பண்ணுனா, சங்கு சுப்பிரமணியெம் அதுலயும் வித்தியாசமா நல்லா எடையா உள்ள கல்லு மூங்கிக் கழியா தயாரு பண்ணி நெருப்புல கொடுத்து வாட்டி வெச்சிருப்பாரு. அதெ வெச்சி சொழட்டுறதுன்னா அதுக்கே ஒரு பலம் கைக்கு வேணும். அதெ வெச்சி சுத்துறதெ இரும்புக் கம்பிய வெச்சு சுத்துறாப்புல இருக்கும். அதெ சுத்தி முடிச்சிட்டு மணிக்கெட்ட பாத்தா வலியில விண்ணு விண்ணுன்னு தெறிச்சிட்டு இருக்கும். ஒரு நாளு இப்பிடி பயிற்சிக்கு வர்றவேம் மறுநாளு வர மாட்டாம். அவ்வேம் வராட்டியும் என்னா சங்கு அவ்வேம் வூட்டுக்கு மின்னாடி நின்னு கொண்டாந்துடுவாரு. இப்பிடிப் பயிற்சிக் கொடுத்துப்புட்டுத்தாம் பெரம்புக் கம்ப கையில கொடுப்பாரு. அப்போ கம்ப சுத்துறப்போ பெரம்புக் கம்பு காத்த விசிறி அடிக்கும் பாருங்க. அத்து அப்பிடியே புயலுக் காத்தப் போல இருக்கும். அந்தக் காத்துச் சத்தத்துக்கே எதிர்த்து நின்னு கம்பச் சுத்துறவேம் அரண்டு போயி காலுல விழுந்துடுவாம்.
            கம்புச் சுத்துறவேனுக்குக் கையி பலத்தோட காலு பலம் முக்கியம்பாரு சங்கு. அதுக்குன்னே உசரத்துல மூங்கில கட்டி வெச்சி அதுல கால மாட்டிக்கிட்டு தெனமும் அரை மணி நேரத்துக்குத் தொங்க வெச்சிப்புடுவாரு. தொங்க தொங்க வலியில உசுருப் போவும். அந்த வலிய தாங்கிட்டு வந்தா கொட்டி வெச்சிருக்கிற களிமண்ணு சகதியில வழுக்கிக்காம சகதிய மிதிச்சாவணும். அது ஒரு அரை மணி நேரத்துக்குச் செஞ்சாவணும். கம்பு வெளையாட்டுல காலு பெரள்றது ரொம்ப முக்கியம். அப்பிடி பெரளுறதுக்கும், பெரளுறப்போ எக்காரணத்தெ கொண்டும் தடுமாறி விழுந்திடப் படாதுன்னும் இப்பிடி ஒரு பயிற்சியெ கொடுக்கிறதா சொல்லுவாரு.
            கம்பு சுத்துறப்போ கையடிய விட, காலடியத்தாம் ரொம்ப உன்னிப்பா பாப்பாரு சங்கு. காலடி வந்துப்புட்டா கையடி வந்துடுங்றது அவரோட கணக்கு. காலடிய தப்பா அவரு பாக்க வெச்சிப்புட்டா வெச்சவெம் தொலைஞ்சாம். அதுக்கு தரையில வரைபடம் மாதிரிக்கி போட்டு ரண்டு வட்டக்காலு ஆட்டம், மூணு வட்டக்காலு ஆட்டம், நாலு வட்டக்காலு ஆட்டம்னு நாளு பூராக்கிச் செய்ய வெச்சிடுவாரு. இப்பிடி பயிற்சியிலத்தாம் ஆளு கொடூரமா நடந்துப்பாரே தவிர ரொம்ப இரக்கமனசுக்காரரு சங்கு சுப்பிரமணியெம். கம்பு வெளையாட்டுல ரொம்ப கறாரா இருந்தாலும் வம்பு தும்புன்னா ஆளு ஏழு கடலு, ஏழு மலையத் தாண்டியப் போயிடுவாரு. அட்டாதுட்டின்னா அவருக்குப் பிடிக்காது. ஒதவின்னு வந்துட்டா மொத ஆளா நிக்குறவரு அவரு. பல பேத்தோட கல்யாணத்தெ காசு பணம் பாக்காம பண்ணி வெச்சிருக்கிறாரு. அத்தனெ கல்யாணமும் சீர்திருத்த கல்யாணம்தாம். கல்யாணச் சாப்பாடுல்லாம் இவரு செலவுதாம். எல்லாத்திலயும் ரொம்ப பகுத்தறிவா வேற சிந்திக்குற மனுஷம். இப்பிடிச் சீர்திருத்தக் கல்யாணமும், பகுத்தறிவும் பேசுனவரு எப்பிடி சோசியரா ஆனாருங்றதுலத்தாம் கதெயே இருக்கு.
*****


22 Feb 2020

நாட்டியத்தாங்குடி சோசியரு!

செய்யு - 366

            கல்யாண தெச இருக்கா இல்லியாங்றதுக்கு ஒண்ணுக்கு ரெண்டா சோசியர்ரப் பாக்குறது ஒரு வழக்கம். ரெண்டு சோசியர்ரும் ஒரே மாதிரிக்கி சொன்னா அது சரி. ரெண்டு பேரும் ரெண்டு வெதமா சொன்னா மூணாவதா ஒரு சோசியர்ர பாக்குறதும் உண்டு. இங்க சுற்று வட்டாரத்துல அப்பிடி ரெண்டு சோசியர்ருங்க பெரிய ஆளுங்க. சொன்னா சொன்னபடிக்கி நடக்கும். அதுல ஒருத்தரு நாட்டியத்தாங்குடியில இருக்குறவரு. இன்னொருத்தரு கொத்தூர்ல இருக்குறவரு.
            நாட்டியத்தாங்குடியில இருக்குறவரு கிட்ணாமூர்த்தி தேசிகரு. ஆளு நல்லா ஓங்கு தாங்கலா இருப்பாரு. சேப்புன்னா சேப்பு அப்பிடி ஒரு சேப்பு. கணிச்சுச் சொன்னார்னா அப்பிடியே நடக்கும்னு ஒரு பேச்சு இருக்கு. என்னா ஒரு கொணம் இவர்கிட்டன்னா சாதக்கத்தெ பார்த்தார்ன்னா சட்டு புட்டுன்னு கணிச்சி முடிச்சிடுவாரு. மொதல்ல வயசு சரியான்னு பொறந்த வருஷத்துலேந்து கணக்கப் போட்டு ஒரு கேள்விய கேப்பாரு. அவரு சொல்றதுக்கு சரின்னு நாம்ம சொன்னாக்கா, நட்சத்திரத்தெ சொல்லி அது சரியாம்பாரு. அதுவும் சரின்னு சொன்னாக்கா ராசிய சொல்லி அதுவும் சரியாம்பாரு. அதுவும் சரின்னு சொன்னாக்கா பொறந்த நேரத்த சொல்லி அதுவும் சரியாம்பாரு. அதுவும் சரின்னு சொன்னாக்கா பெறவு சரவெடி வெடிக்கும் பாருங்க, அப்பிடி வெடிக்க ஆரம்பிச்சிடுவாரு. நல்லது கெட்டதுன்னு பாக்க மாட்டாரு சாதகக் கட்டத்துல என்ன தெரியுதோ அதெ அப்பிடியே சொல்லிடுவாரு.
            பெரும்பாலான சோசியருங்க நல்ல வெதமா தெரிஞ்சாத்தாம் அதெ சொல்லுவாங்க. நல்ல வெதமா தெரியலன்னா கொஞ்சம் மழுப்புனாப்புல சொல்லி ஒரு வருஷம் கழிச்சிப் பாக்கலாம், ரண்டு வருஷம் கழிச்சிப் பாக்கலாம்னு சொல்லுவாங்க. அதுலயே சோசியத்தெ பாக்க வந்தவங்க புரிஞ்சிக்கணும். கிட்ணாமூர்த்தி தேசிகருகிட்ட அப்பிடி ஒரு கொணம் கெடையாது. பொட்டுல அடிச்சாப்புல சாதகத்தெ பாக்கறப்ப தோணுறதெ சொல்லுவாரு. உதாரணத்துக்கு ஒரு கதையெ சொல்லணும்னா... இப்பிடித்தாம் கிட்ணாமூர்த்தி தேசிகர நம்பி மாயூரத்துலேந்து பொண்ணுக்கு சாதகம் பாக்க வந்திருக்காங்க. மாயூரம் எங்க இருக்கு? நாட்டியாத்தாங்குடி எங்க இருக்கு? ரொம்ப தூரம்தாம். இருந்தாலும் அவர்ர அப்பிடி பாக்க வர்ற ஆளுங்க இருக்காங்க. அதுக்குக் காரணம் அவரும் சொல்றபடித்தாம் நடக்குங்ற நம்பிக்கெ உண்டாயிப் போயிடுச்சு.
            மாயூரத்துலேந்து வந்தவங்களோட பொண்ணுக்கான சாதகத்தெ பாத்திருக்காரு தேசிகரு. பாத்து முடிச்சவரு சாதக நோட்டெ தூக்கி மின்னாடி இருந்த மேசையில பொட்டுன்னு போட்டுருக்காரு. அப்பிடிப் போட்டா சாதகம் நல்ல வெதமா இல்லேங்றது ஒரு குறிப்பு. அப்பிடிப் போட்டுட்டார்ன்னா அதெ பாத்துப்புட்டு வெளியில கெளம்பி ஓடியாந்திடறது நல்லது. கெட்ட விசயமா சொல்லப் போறார்ன்னு அதுக்கு அர்த்தம். என்னா இப்பிடி நோட்டெ பொட்டுன்னு தூக்கிப் போட்டுட்டார்ரேன்னு மாயூரத்துக்காரங்க தெகைச்சிப் போனாக்கா, தேசிகரு சொல்லிருக்காரு, "ஒஞ்ஞ பொண்ணுக்கு நீஞ்ஞ கல்லாணம் பண்ணி வைக்க முடியாது. அப்பிடி ஒரு ஆசெ ஒஞ்ஞளுக்கு வாணாம்"ன்னு.
            "புரியலீங்களே!"ன்னு மாயூரத்துக்காரவங்க தலையச் சொரிஞ்சிருக்காங்க.
            "பொண்ணே மாப்பிள்ளையப் பாத்திடுச்சி. அத்து ஓடிப் போயிடும்!"ன்னுருக்காரு.
            மாயூரத்துக்காரவங்களுக்குக் கோவம் வந்து அடிக்கப் பாய்ஞ்சிருக்காங்க. "போங்கய்யா! ஓடிப் போவப் போற பொண்ண காபந்து பண்ண பாக்குறதெ விட்டுப்புட்டு நம்மள அடிக்க வர்றீங்களே!"ன்னு தேசிகரும் அடிக்க பாய்ஞ்சிருக்காரு. ஒரே களேபரமாப் போயி அக்கம் பக்கத்துல இருந்தவங்க சமாதானம் பண்ணி வெச்சி மாயூரத்துக்காரவங்கள அனுப்பியிருக்காங்க. இந்தச் சேதி ஊரு பூரா பரவிப் போயி, அந்த மாயூரத்துக்குகாரவங்களோட பொண்ணுக்கு இவரு சொல்ற மாதிரித்தாம் நடக்குதா? யில்ல வேற மாதிரி நடக்குதா?ன்னு ரொம்ப எதிர்பார்ப்பு ஆயிடுச்சு. இதுக்குன்னே ஆளாளுக்கு அவங்கவங்களுக்கு மாயூரத்துல இருக்குற சொந்தக்காரவங்கள்கிட்ட இந்த மாதிரிக்கிச் சேதின்னு சொல்லி, என்னா நடக்குதுன்னு வெவரத்தெ சொல்லுங்கன்னுச் சொல்லி வெச்சி விசாரிக்கிற அளவுக்கு ஆயிப் போயிடுச்சி. பிற்பாடு நடந்தது அப்பிடித்தாம் தேசிகரு சொன்னது போல ஆயிப் போச்சி. அப்பிடி ஆயிப் போன பிற்பாடு அந்த மாயூரத்துக்காரவங்களே தேசிகர்ர வந்துப் பாத்து அவரோட கால்ல வுழுந்து மன்னிப்புக் கேட்டது ஒரு கதெ. இதுல இன்னும் ரொம்ப பிரபலமா ஆயிட்டாரு கிட்ணாமூர்த்தி தேசிகரு. பிரபலமாயிட்டார்ன்னு சொன்னா எப்பிடின்னா ஒரு மாடி வூடே கட்டிக்கிற அளவுக்கு ஆயிப்புடுச்சி அவரோட சோசியச் சம்பாத்தியம். அந்த வூட்டுக்குப் பக்கத்ததுல ஒரு கீத்துக் கொட்டகெ. அதுதாம் அவரோட ஆபீஸூ.
            வெளியிலேந்து யாரு சாதகெம் பாக்குறதுன்னாலும் தனி ரேட்டு. ஊருகாரவுங்களுக்கு தனி ரேட்டு. வெளியாளுங்களுக்கான அந்த ரேட்ட ஒரு போர்டாவே எழுதி மாட்டி வெச்சிருக்காரு, சாதகம் கணிக்க இம்மாம், பொருத்தம் பார்க்க இம்மாம், பரிகாரம் பண்ணி வுட இம்மாம்னு. அதுப்படித்தாம் வசூலிக்கிறாரு. சோதிடச் சக்கரவர்த்தின்னு சமீபத்துல பட்டத்தெ அவருக்கு அவரே கொடுத்து பேர்ர போட்டு போர்டையும் வெச்சிருக்காரு. அவருகிட்டத்தாம் சுப்பு வாத்தியார்ரு சாதகத்தெ எடுத்துகிட்டுப் போவலாம்னு முடிவுல இருக்காரு. கூட்டம்னா கூட்டம் அள்ளுது. ஒரு டாக்குடருகிட்ட உக்காந்துப் பாக்குற மாதிரித்தாம் அவருகிட்ட உக்காந்துப் பாக்க வேண்டிருக்கு. எம்மாம் கூட்டமா இருந்தாலும் சட்புட்டுன்னு கணிச்சிச் சொல்லி அனுப்பிக்கிட்டே இருப்பாரு மிஷினு மாதிரி. ஒரு சாதகத்தெ பாத்துக் கணிக்க அவருக்கு ரண்டு நிமிஷம் போதும். அடுத்த ரண்டு நிமிஷத்துல விசயத்தெ சொல்லிப்புடுவாரு. அடுத்த ஒரு நிமிஷத்துல சாதகத்தெப் பத்திக் கேக்க வந்தவங்க பணத்தெ கொடுத்துப்புட்டு எடத்தை காலி பண்ணியாவணும். இப்பிடி கால அட்டவணைப் போட்டுக்கிட்டு அவரு சாதகத்தெ பாத்துக்கிட்டு இருக்காரு.

            சுப்பு வாத்தியாரு வூட்டுல யாருகிட்டேயும் சொல்லாம அதிகாலையில டிவியெஸ்ஸ எடுக்குறார்ன்னா ஏதோ முக்கியமான சங்கதின்னு அர்த்தெம். ஏம் இப்பிடி காலாங் காத்தாலயே கெளம்புறீங்கன்னு அவருகிட்ட கேக்க முடியாது. கேட்டாலும் சொல்ல மாட்டாரு. உம்மானாம்மூஞ்சியாட்டம் அவரு பாட்டுக்குக் கெளம்பிப் போயிட்டே இருப்பாரு. முக்கியமான சோலி விசயமா கெளம்புறப்போ அவருகிட்டே யாரும் அது பத்திக் கேக்கக் கூடாது. அவர்ரா சோலியெல்லாம் முடிஞ்சி பிற்பாடுத்தாம் சொல்லுவாரு. அது வரைக்கிம் வூட்டுல இருக்குறவங்க வெயிட்டிங்கிலத்தாம் இருந்தாவணும். இவரு திட்டையில வண்டிய கெளப்பிக்கிட்டு நாட்டியத்தாங்குடி போறப்ப மணி அஞ்சரை இருக்கும். பொழுது விடிஞ்ச மாதிரிக்கும், விடியாத மாதிரிக்கும் இருக்குது. அந்த நேரத்துலயும் நாட்டியத்தாங்குடி சோசியரு வீட்டுக்கு மின்னாடி நாலஞ்சு காருக, ரெண்டு சக்கர வாகனங்க மூணு நாளு கெடக்குது. மொத ஆளா சாதக்தெ பாத்துப்புட்டுக் கெளம்பிடணும்னு நெனைச்சு வந்த சுப்பு வாத்தியாருக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு.
            மொத ஆளா பாக்க முடியாது போலருக்கேன்னு நெனைச்சா அப்பத்தாம் நல்ல வேளையா கிட்ணாமூர்த்தி தேசிகரு பக்திப் பழம் மாதிரிக்கி குளிச்சி முடிச்சிட்டு வேட்டியக் கட்டிக்கிட்டு மேலுக்கு ஒரு வேட்டிய போர்த்திக்கிட்டு வர்றாரு. கழுத்துல உத்திராட்ச மாலை தொங்குது. கையில பஞ்சலோகத்துல ‍செஞ்ச மொடா காப்பு. மேலுக்குப் போத்தியிருக்கிற வேட்டிக்கு எடையில அவர பூணூல போட்டிருக்கிறதும் நல்லா தெரியிது. இடுப்புல பளபளான்னு பச்சை நெறத்துல பெல்ட்டு மாதிரிக்கி எதையோ கட்டியிருக்கிறாரு. துணியிலயே அப்பிடி ஒரு வித்தியாசமான பெல்ட்டை அவரு தச்சி வாங்குனாரோ, அப்பிடிக்கி ஒரு பெல்ட்டு கடையில கெடைக்குதோ தெரியில. அதுல பணத்தை வாங்கி வெச்சிக்கிற மாதிரிக்கி ஜிப்பெல்லாம் போட்டு நல்ல தோதா அது இருக்கு. மண்டையில முடிய வளத்து கொண்டையா போட்டிருக்கிறாரு. தோளு, நெஞ்சு, கையின்னு திருநீத்த அள்ளிப் பூசிருக்காரு. அது ஒரு வாசத்தெ அவரு நெருங்கி வர்றப்ப தருது. சுப்பு வாத்தியாரோட நேரம் அவரு அங்க போட்டிருந்த பெஞ்சுல போயி உக்காந்திருக்காரு. மித்தவங்க எல்லாம் அங்க இங்க நின்னுகிட்டு எதையெதையோ பேசிட்டு இருக்காங்க. அவரு வர்றதெ பாத்துட்டு பெஞ்சுல ஓடியாந்து உக்காரப் பாத்தா சுப்பு வாத்தியாருக்கு அடுத்தடுத்தாப்புலத்தாம் உக்கார முடியுது.
            மொத ஆளா பாக்க முடியாதுன்னு நெனைச்சி வந்த சுப்பு வாத்தியாருக்கு மொத ஆளா பாக்குற சந்தர்ப்பம் வாய்க்குது. உள்ள போயி உக்காந்த தேசிகரு, "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! பித்தா பிறைசூடி பெருமானே! ஈஸ்வரா!"ன்னு சொல்லிட்டு ஒரு பெருமூச்சு வுட்டுப்புட்டு உக்காந்தவரு, "வாங்கோ!"ன்னு குரல கொடுக்குறாரு.சுப்பு வாத்தியாரு அந்தக் கீத்துக் கொட்டாயில தலைய குனிஞ்சி உள்ளார நொழைஞ்சி அவர்ரப் பாத்து மஞ்ச பையில கொண்டு போன சாதகத்தெ எடுத்து வைக்கிறாரு. அவரு சாதகத்தெ எடுத்து வெச்சதும் தேசிகரு சாதகத்தெ எடுத்து பவ்வியமாய் கும்பிட்டுகிட்டு கண்ணுல ஒத்திக்கிறாரு. அதுக்கு ரண்டு விநாடி நேரம். டக் டக்குன்னு பொறந்த நேரம், வயசு, நட்சத்திரம், ராசிய எல்லாம் கேட்டுப்புட்டு, "இத்து நாம்ம பாத்துக் கணிச்ச சாதகம் ஆச்சே. அப்பயே சங்கதிக அத்தனையும் சொல்லிருப்பேனே!"ங்றாரு தேசிகரு. அதுக்கு சுப்பு வாத்தியாரு, "சொன்னீங்க! இருந்தாலும் பதினெட்டு பத்தோம்பது வருஷம் ஆவுதுல்ல! கல்யாணத்தெ வைக்கலாமா? தெச இருக்கான்னு பாக்குணுமில்லே!"ங்றாரு. ஒரு ரண்டு நிமிஷத்துல சட்டு புட்டுன்னு கணக்கெ போடுறாரு.
            "எத்தனெ வருஷம் ஆனாலும் ன்னா? சொன்னது சொன்னதுதாம். இருவத்து ஆறு வயசுக்கு மின்னாடி கல்யாணத்தெ பத்தி நெனைக்கக் கூடாது. பண்ணவும் கூடாது. பெரிய படிப்பெல்லாம் படிச்சி முடிச்சித்தாம் கல்யாணம் ஆவணும்னு கணக்கு இருக்கு. ஆனா நாந் நீயின்னு கட்டிக்க மாப்பிள்ள பயலுக வருவானுக. கொஞ்சம் அதுவரைக்கிம் மந்தமாத்தாம் இருக்கும் பொண்ணு. இருவத்து நாலு, இருபத்து அஞ்சு, இருவத்து ஆறு வரைக்குமே சோதனையான காலம். பொண்ணுக்கு உசுரே போனாலும் போனதுதாம். தப்பிப் பொழைக்கிறது தம்பிராம் புண்ணியம். ஒஞ்ஞ மின்னவங்க, நீஞ்ஞ செஞ்ச புண்ணியம்"ங்றாரு தேசிகரு.
            இதென்னடா மவனுக்குக் கல்யாணத்தெ பண்ணிப் பாக்கலாம்னு சாதகத்தெ கொடுத்தா பொண்ணுக்கு உள்ள மாரில்லா சாதகத்‍தெ சொல்றாரு தேசிகருன்னு நீங்ஞ நெனைச்சா அது சரித்தாம். ஏன்னா சுப்பு வாத்தியாரு மவனோட சாதகத்தெ எடுத்துக் கொடுக்கல மொதல்ல. பொண்ணோட சாதகத்தெத்தாம் எடுத்து வைக்கிறாரு மொதல்ல. "படிப்ப பத்தி..."ன்னு இழுக்குறாரு சுப்பு வாத்தியாரு. "படிக்கும் படிக்கும் படிச்சிக்கிட்டே இருக்கும்."ன்னு சொல்லிட்டு அத்தோட நிறுத்திக்கிறாரு. அப்பிடி நிறுத்துனா பணத்தெ எடுத்து வெச்சிட்டு வெளியில கெளம்பிப் போங்கன்னு அர்த்தெம். சுப்பு வாத்தியாரு சட்டைப் பையில கைய விட்டு பணத்தெ எடுக்குறதுக்குப் பதிலா மஞ்சைப் பையில கைய விட்டு இப்பத்தாம் மவனோட சாதக்தெ எடுத்து நீட்டுறாரு.
            தேசிகரு கேக்க வேண்டிய கேள்விகள கேட்டுப்புட்டு, ரண்டு நிமிஷத்துல கட்டத்தெ போட்டு, "ரண்டு வருஷத்துக்கு மின்னாடிலேந்து தெச இருக்கு. சட்டுப்புட்டுன்னு ஆயிடும். பொண்ணு வடமேற்கோ, தென்மேற்கோ இருக்கு. கிழக்க தலெ வெச்சுப் படுக்க வாணாம்."ங்றாரு. "வேற பயலப் பத்தி..."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "முப்பது வயசுக்கு மேல ஞானியப் போல ஆயிடுவாம். பொட்ட புள்ளத்தாம் பொறக்கணும். ஆம்பள புள்ள இந்தப் பயலுக்குப் பொறக்கக் கூடாது. அப்பிடி பொறந்துச்சுன்னா மவனுக்கு அப்பன் கொள்ளி வைக்குறாப்புல ஆயிடும். புரியுதுல்லா? அல்பாயிசுல செத்துப் போயிடும் அந்த ஆம்பளப் புள்ளெ."ங்றாரு தேசிகரு. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போடுது. "அப்போ பேரப் பய நமக்கு?"ங்றாரு சுப்பு வாத்தியாரு. "பேத்தித்தாம் ஒமக்கு நல்லது. அப்பனும், தாத்தனும் இருக்குறப்ப பய செத்தா நல்லாவா இருக்கும்?"ங்றாரு தேசிகரு. தெகைச்சிப் போயி உக்காந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. "இந்த ஆளுகிட்டப் போயி ஏம் மொதல்ல சாதகத்தெ எடுத்து வந்து காட்டுணோம்"ன்னு மனசுல நெனைச்சிக்கிறாரு சுப்பு வாத்தியாரு. அவரு மனசுல நெனைச்சதெ பிடிச்சிட்டது போல தேசிகரு பேசுறாரு, "இன்னும் கல்யாணமே மவனுக்கு ஆவல. அதுக்குல்லா ஸ்கேன் எடுத்த மாதிரிக்கி ன்னா புள்ளே பொறக்கும்னே சொல்றேம்னு நெனைக்குதீயளோ? அத்தாம் நடக்கும். கட்டம் மாறாதுலே. மொத சாதகத்துக்கு ஒரு நூத்து, ரண்டாவது சாதகத்துக்கு ஒரு நூத்து. எரநூத்த எடுத்து வெச்சா வெளியில நெறையப் பேரு இருக்காக. அவுகளயும் காக்க வைக்காம அனுப்புறதுக்கு நல்லாருக்கும்!"ங்றாரு தேசிகரு. சுப்பு வாத்தியாரு சட்டைப் பையில கைய விட்டு ரண்டு நூத்து ரூவாயி நோட்டா எரநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்துட்டு, சாதக நோட்டு எடுத்து மஞ்சப் பையில வெச்சிக்கிட்டு வெளியில வந்து டிவியெஸ்ஸ கெளப்புறாரு.
*****


21 Feb 2020

பொண்ணு கெடைக்குறதாங் கஷ்டம்!

செய்யு - 365

            பய கொஞ்சம் நெதானமாத்தாம் இருக்காங்ற தெளிவு மவனப் பத்தி சுப்பு வாத்தியாருக்கு வந்துச்சு. அவரோட மவனுக்கும், மவளுக்குமான வயசு வித்தியாசம் ஒம்போது வருஷம்ங்ற நீங்க அறிஞ்ச, ஊரறிஞ்ச சங்கதி. மவன் நாலாப்பு படிச்சப்போ சுப்பு வாத்தியாருக்கு மவ பொறந்தா. மவன் ரெண்டாயிரத்து எட்டுல வேலைக்குச் சேந்தப்போத்தாம் அவரோட மவ ப்ளஸ் டூவ முடிச்சா. மவனுக்கு வயசு இருவத்தாறு, இருவத்தேழுன்னு ஓடிட்டு இருந்தப்போ மவளுக்குக் கல்யாணத்த பண்றதா, மவனுக்குக் கல்யாணத்தப் பண்றதாங்ற கொழப்பம் சுப்பு வாத்தியாருக்கு இருந்தத வுட ஊர்ல இருந்தவங்களுக்குத்தாம் அதிகமா இருந்திச்சு. அதுல எதெ மொதல்ல பண்ணணும், எதெ ரெண்டாவதா பண்ணணுங்றதுல சுப்பு வாத்தியாரு ரொம்ப தெளிவா இருப்பாரு. ஆனா விசயத்தெ மட்டும் வெளியில சொல்ல மாட்டாரு. முக்கியமான விசயங்கள்ல ரொம்ப அமுக்குனியான ஆளு அவரு. அமுக்குனின்னா பொண்டாட்டிக்காரி வெங்குகிட்ட கூட சொல்லாத அளவுக்கு அமுக்குனியான ஆளு. அவருக்குன்னு ஒரு கணக்கெ வெச்சிருப்பாரு. அந்தக் கணக்கு கனகச்சிதமா விழுவுறப்பத்தாம் விசயத்தெ வெளியில விடுவாரு. அப்போ பாத்தா என்னவோ ஊருல, சொந்தத்துல எல்லாஞ் சொல்லி அதெ செய்யுறாப்புல அது தெரியும். அதுக்கும் அவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாத மாதிரிக்கி அது தெரியும். ஆனா நடக்குறது எல்லாம் அவரு கணக்குப்படித்தாம் நடக்குதுங்றது அவரெ தவிர யாருக்கும் தெரியாது.
             வேலங்குடி சின்னவரு வேற மவ வயசுக்கு வந்ததிலேர்ந்து மச்சாங்காரரான சுப்பு வாத்தியார்ரு பொண்ண கேட்டுட்டுக் கெடந்தாரு. வேலங்குடி சின்னவரு முடிவே பண்ணியிருந்தாரு அவரோட கடைகுட்டி பையன் தாசுக்கு செய்யுவ கல்யாணத்தப் பண்ணி மருமவளா வூட்டுக்குக் கொண்டுட்டுப் போயிடணும்னு. சுப்பு வாத்தியாருக்குச் சின்னவரு மவனுக்குப் பொண்ண கட்டிக் கொடுக்குறதுல இஷ்டம் இருக்கா இல்லையான்னு தெளிவா தெரியல. அது பத்திக் கேட்டதுக்கு அவரு பெரிசா பதில ஒண்ணும் சொல்லல. ரசா அத்தையும் நேரடியா வந்து தம்பிக்காரரான சுப்பு வாத்தியார்ர கேட்டுப் பாத்துச்சு. அப்படி ரசா அத்தை வந்து கேட்டதுக்கு சுப்பு வாத்தியாரு ஒரு சிரிப்ப சிரிச்சு வெச்சாரே தவிர, பொண்ண கட்டிக் கொடுக்குறேம், இல்லைன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டா எதையும் சொல்லல.
            சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கும், வேலங்குடி சின்னவரு குடும்பத்துக்கும் இப்பத்தாம் கொஞ்சம் நெருக்கம் அதிகமாச்சு. அடிக்கடி சின்னவரும், ரசா அத்தையும் திட்டைக்கு வந்துப் போக ஆரம்பிச்சாங்க. வந்து போற ஒவ்வொரு மொறையும் சின்னவரும், ரசா அத்தையும் பொண்ண பத்திக் கேக்குறதெ விடாம பண்ணிட்டு இருந்தாங்க. அவங்களோட நச்சரிப்பு நாளுக்கு நாளு தாங்கமா போச்சு. அப்போ செய்யு ஆர்குடியில தாயார் மகளிர் கல்லூரியில பி.எஸ்ஸி. மேதமடிக்ஸ் படிச்சிட்டு இருந்தா. அதெயே ஒரு காரணமா சொல்லி, பொண்ணு படிச்சிட்டு இருக்கா அது முடிஞ்ச பிற்பாடு பாக்கலாம்னு மழுப்பலா ஒரு காரணத்தெ சொன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னடா தம்பி! நம்ம குடும்பத்துல பொண்ணு படிச்சிட்டு வந்துத்தாம் குடும்பத்தெ நடத்தணும்னா இருக்கு? வூடு இருக்கு. நெலம் புலம் இருக்கு. ஆடு மாடுக கெடக்கு. அதெ பாக்குறதுக்கு ஆளு கெடையா. மூத்தவந்தாங் சென்னப் பட்டணத்துல கெடக்காம். அவ்வேம் ஆயுசுக்கு இஞ்ஞ வர்றப் போறதில்ல. இவ்வேம் ஒருத்தம் தாசும் அஞ்ஞ கெடந்து வெளிநாட்டுல கெடக்காம். கையி நெறைய சம்பளம். ஒம்போது மாசத்துக்கு வேல. மூணு மாசத்துக்கு ஊருக்கு வந்திடறாம். கூடிய சீக்கரமே ஒம் பொண்ணுக்காக மனையெ போட்டு மாடி வூடா ஆக்கணும்னு ஒத்த காலுல நிக்காம். கட்டிக் கொடுத்தா மவராசிய வந்துக் கொண்டு வெச்சிப்பேம். நமக்கும் வயசு ஆவுதுல்ல. நம்மளப் பாத்துக்க ஆரு யிருக்கா? எம் வூட்டுக்கு அனுப்புனா அவ்வதேம் ராசாத்தி. அவளோட ராசாங்கத்தாம். ஏத்தோ பொங்குன சோத்துல ரவ்வ கஞ்சிய ஊத்துனா போதும் நாமளும், ஒம்மட அத்தனானும் குடிச்சிப்புட்டு ஓரத்துல ஒடுங்கிக்கப் போறேம். மாமியா சண்டெயல்லாம் நாம்ம போடப் போறதில்ல. நாத்தனாரு சண்டெ போட வூட்டுல ஒருத்திக் கெடையா. எல்லாம் கல்யாணங் காச்சி ஆயி கெளம்பியாச்சு. பெறவு என்னடாம்பீ யோஜனெ?" அப்பிடினுச்சு ரசா அத்தை.
            "படிச்சிட்டு இருக்குறப் பொண்ண பாதியில எப்பிடி நிப்பாட்டுறதாம்? அது ஒரு காலம், படிக்காதப் பொண்ணுக இருந்த காலம். இப்போ எந்தப் பொண்ணுக படிக்காம இருக்கு? பயலுகப் படிக்காட்டியும் பொண்ணுக என்னமா படிக்குதுங்க. வயசும் இருவது ஆனாத்தாம் பொண்ணுக குடும்பத்தெ பாக்க கொள்ள செளரியமா இருக்கும்!"ன்னு ஒரு போட போட்டாரு சுப்பு வாத்தியாரு.

            இந்த எடத்துல சின்னவரு பிடிச்சிகிட்டாரு, "அத்தாம் வூட்டுக்கு வர்ற மருமவப் பொண்ணு படிச்சப் பொண்ணா இருக்கணும்னு நெனைக்கிறாரு மாப்ள. அதாஞ் செரி. கெணத்துத் தண்ணிய ஆத்துத் தண்ணியா கொண்டுட்டுப் போவப் போவுது? எம் மச்சாம் பெண்ண பெறத்தியானா கொண்டுட்டுப் போவப் போறாம்? எம்மட வூட்டுப் பொண்ணு அஞ்ஞ இருந்தா ன்னா? இஞ்ஞ இருந்தா ன்னா? இருக்கட்டும். படிச்சி முடிச்சி நல்ல வெதமாவே வரட்டும்! இத்து ஒண்ணாவது டிகிரில்லாம் படிச்ச பொண்ண இருக்கட்டும்!"ன்னாரு.
            இந்தப் பேச்ச வெச்சி மவளுக்கு இப்போ கல்யாணம் இல்லங்றதெ வெங்கு புரிஞ்சிக்கிடுச்சி. அதோட பொண்ண சின்னவரு மவனுக்குக் கட்டிக் கொடுக்க இஷ்டம் இருக்கா இல்லையாங்றதெ பொட்டுன்னுப் போட்டு ஒடைக்காம ஏம் ஓரஞ்சாரமா ஒண்ணு கெடக்க ஒண்ணு சொல்றார்ங்றது வெங்குவுக்குப் புரியல. இது ஒரு வழக்கம், பொண்ணு இருக்குற குடும்பத்துல மவனுக்கு மொதல்ல கல்யாணத்தெ முடிக்க மாட்டாங்க. வர்ற பொண்ணு எப்பிடி இருக்குமோ? நாத்தனாரோட ஒத்துப் போவுமோ போவாதா? அத்தோட வயசுக்கு வந்தப் பொண்ண வெச்சுகிட்டு மவனுக்குக் கல்யாணத்தெ பண்ணி வெக்கக் கூடாதுன்னு ஊருல, சொந்தப் பந்தத்துல பேச்சா பேசுவாய்ங்க. மவனுக்கும் மவளுக்கும் வயசு வித்தியாம் நாலோ அஞ்சோன்னா அவுங்க அப்பிடி பேசுறது சரிபட்டு வரும். ஒம்போது வருஷ வித்தியாசத்துல மவனையும், மவளையும் பெத்து வெச்சிக்கிட்டு அவுங்க பேச்சுக்கு எப்பிடி சமாளிப்பெ தட்டுறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு, இதெ பத்தி ஊருசனம், சொந்தக்கார சனம் என்ன நெனைக்குதுங்றதெ தெரிஞ்சிக்க ஊடால பேச்ச வுட்டுப் பாத்தாரு, "மவனுக்குக் கல்யாணத்தெ முடிச்சிப்புடலாம்னு பாக்குறேம்!"ன்னு.
            "செரி பொண்ணப் பாரு. அப்பிடியே பொண்ணுக்கும் மாப்பிள்ளையப் பாரு. ஒரே மேடையில முடிச்சிப் போடு!"ன்னு ஆளாளுக்குச் சொல்ல, சுப்பு வாத்தியாரு அதுக்குச் சொன்னாரு, "படிப்பெ முடிச்சுத்தாம் பொண்ணுக்கு. பயலுக்கு வயசு ஆயிட்டே போவுது. பொண்ணு கதையெ பாத்தா அவ்வேம் முப்பதெ தாண்டிடுவாம். இப்பத்தாம் அவனெ ஒரு நெலைக்குக் கொண்டாந்திருக்கேம். இந்த நெலைய வுட்டுப்புட்டா அவ்வேம் பாட்டுக்கு இஷ்டத்துக்குப் போயிடுவாம். அவ்வேம் கதையெ முடிச்சிடுறததாம் நல்லதுன்னு நெனைக்கிறேம்." அப்பிடிங்றாரு. அதுக்குச் சனங்க சொல்லுது, "செரி! அதெ மொதல்ல பண்ணு. பெறவு ரண்டு வருஷம் கழிச்சி பொண்ணுக்குப் பாத்துக்கிடலாம். ஒனக்கு என்னவ்வே! மச்சாங்கார்ரேம் பையனெ வசமா வளைச்சிப் போட்டு வெச்சிருக்கிறே. அவ்வேம்தாம் பொண்ணக் கொடு பொண்ண கொடுன்னு ஒத்தக் கால்ல நிக்குறாம் போலருக்கு. பொண்ணுக்கு மாப்ளய பாக்குற வேலயும் மிச்சம். பயதானெ‍ கெடக்காம். இந்தக் காலத்துல பொண்ணு கெடைக்குறதுதாம் கஷ்டமா இருக்குவ்வே. பயலுக வெட்டியாத்தான்ன சுத்திக்கிட்டுக் கெடக்குறானுவோ. பொண்ணு இருந்தா நாளைக்கே கல்யாணத்தெ முடிச்சிடலாம் பயலுக தயாரா இருக்கானுவோ. பொண்ணுத்தாம் கெடைக்கிறதில்ல. அதால பய கதையெ மொதல்ல பாரும்வே!"ன்னு அப்பிடின்னு. ஊருல, சொந்தத்துல இப்படி நாலஞ்சு பெரிசுக சொன்னதெ வெச்சி மவனோட கதையெ மொதல்ல முடிக்கப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு.
            பொண்ணோ, மாப்பிள்ளையோ பாக்குறதுக்கு மின்னாடி ஜாதகத்தெ பாக்குறதெ இந்தக் கிராமத்துச் சனங்க ஒரு வழக்கமா வெச்சிருக்காங்க. இதுக்குன்னு டவுன்ல கம்ப்யூட்டருக சோசியரா இருக்குன்னா, இந்த மாதிரிக்கி கிராமங்கள்ல மனுஷங்கத்தாம் சோசியரா இருக்காங்க. அவருகிட்டெ கொண்டு போயி சாதக நோட்டெ கொடுக்குறது மொத வேல. சோசிசயரு சாதக நோட்டெ பாத்துப்புட்டு அப்பிடி இப்பிடின்னு ரண்டு மூணு டிம்மித் தாள பரீட்சை அட்டையில செருகி வெச்சுக்கிட்டு, அந்த டிம்மித் தாளுல ஒரு எடம் வுடாம அங்கன இங்கனன்னு கட்டத்தெ போட்டு, அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா விட்டத்தெ பாத்து யோஜிச்சுக்கிட்டு, நொட்டாங்கையி கட்டை வெரலு நுனியால நொட்டாங்கையில இருக்குற எல்லா வெரலையும் அக்குபஞ்சரு பண்ணுறாப்புல  அமுக்கிக்கிட்டும் கணக்குப் பண்ணிக்கிட்டும் ஒரு ரண்டு மூணு மணி நேரத்தெ காலி பண்ணிட்டு பிரம்மராசன் தலையெழுத்த எழுதுறாப்புல கணக்கெ பண்ணி எழுதிச் சொல்லுவாரு.
            இதுக்குன்னு நல்ல நாளு பாத்து, நல்ல நேரம் பாத்து அந்த நல்ல நேரம் அதிகாலையில இருக்குறாப்புல பாத்துப்புட்டு, சூரியன் கெளம்புறத்துக்கு மின்னாடி மொத ஆளா கெளம்பிப் போவணும்னு இதுலயும் சோசியத்துக்கு மேல சோசியக் கணக்கு இருக்கு. அஷ்டமி, நவமில்ல போவக் கூடாது, பாட்டிமொகத்துல போவக் கூடாதுன்னு அது வேற தனிக்கணக்கு இருக்கு. அன்னிக்கு யாரு மொகத்து எழுந்து முழிக்கணும், யாரு முகத்துல முழிக்கக் கூடாதுன்னு கணக்கு வெச்சிக்கிட்டு போவுற ஆளுகல்லாம் இருக்கு. சோசியத்தெ சரியா பாத்துப்புட்டா கல்யாணம் ஆன மாதிரின்னு கூட சொல்லக் கூடாது, கல்யாணமே முடிஞ்ச மாதிரின்னுத்தாம் சொல்லணும்.
            சோசியர்ர போயிப் பாத்தாத்தாம் கல்யாண தெச இருக்கா இல்லியான்னு தெரியும். கல்யாண தெச இல்லாம பொண்ண தேடுன பொண்ணு கெடைக்காது, மாப்புள்ளைய தேடுனா மாப்புள்ள கெடைக்காது. ஒருவேளை கெடைச்சுக் கல்யாணத்தெ பண்ணி வெச்சாலும் ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துக்காதுங்றது ஒரு நம்பிக்கெ. சமயத்துல சோசியத்தெ போயிப் பாத்து முப்பது வயசு ஆளுக்கு கல்யாண தெச இல்லியே, முப்பத்தஞ்சு வயசுலத்தாம் வாரும்னு சொன்னாக்கா சோலி முடிஞ்சிப் போச்சு. பெறவு அந்த ஆளோ, பொண்ணோ முப்பதஞ்சு வயசுலத்தாம் கல்யாணத்த பண்ணிக்கிடலாம். அதுக்கு எடையில கல்யாணத்தெ பண்ணிக்கிடலாம்னா பெத்தவங்க பண்ணி வுட மாட்டாங்க. யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடிக் கல்யாணத்தெ கட்டிக்கிட்டாத்தாம் உண்டு. இதெ சோசியம் ஒருத்தருக்கு நாப்பது வயசு கடந்துச்சுன்னா செல்லாம போயிடும்னு சோசியக்காரவுகளே சொல்லுவாங்க. அவுங்களுக்குல்லாம் கல்யாண தெசயும் பாக்க வேணாம், பொண்ணு மாப்புள்ளைக்குப் பொருத்தமும் பாக்க வேணாம், கண்ண மூடிட்டுக் கல்யாணத்தெ முடிச்சி வெச்சாலே போதும்னு சொல்லிப்புடுவாங்க. அந்த ஒரு எடத்துலத்தாம் சோசியக்காரவுங்க கருணைக்காரவுங்களா இருப்பாங்க. மித்த மித்த எடங்கள்ல அவுங்க சொல்ற கணக்கும், உருட்டுற உருட்டலும், பயமுறுத்துற பயமுறுத்தலும், பண்ணச் சொல்ற பரிகாரங்களும் பயங்கரமாத்தாம் இருக்கும்.
*****


20 Feb 2020

படியாத பேரம்

செய்யு - 364

            குஞ்சு கவுண்டர் நேரடியா விசயத்து வந்தாரு.
            சுப்பு வாத்தியாருக்கும், விநாயகம் வாத்தியாருக்கும் நெலமை புரிஞ்சிப் போச்சு. மறுக்கா வேதாளம் முருங்கெ மரத்துல ஏறுன கதையா விகடு திரும்பவும் பங்குச் சந்தைப் பக்கம் போறேம்னு எதாச்சிம் பண்ணிப் புடுவானோங்ற பயம் ரண்டு பேத்துக்கும் வந்திடுச்சி. அவுங்க ரண்டு பேரும் நின்னபடியே கையப் பிசைஞ்சிகிட்டு இருக்காங்க. விகடுவும் நின்னுகிட்டுத்தாம் இருக்காம். ரண்டு பேத்துக்கு மேல போடுறதுக்கு அங்க நாற்காலி யில்ல. இருந்த ரண்டு நாற்காலியில குஞ்சு கவுண்டரும், ரித்தேஸூம் உக்காந்திருக்காங்க. மின்னாடி போட்டு இருக்குற ஸ்டூல்ல டீத்தண்ணி ரண்டு தம்ப்ளர்லயும், பிஸ்கோத்து ரண்டு சின்ன தட்டுலயும் இருக்கு. அதெ போட்டு வெச்சிட்டு வெங்கு சுவத்துக்குப் பின்னாடி அதுக்குத் தொணையா இருக்குறாப்புல போயி உக்காந்துட்டு.
            சுப்பு வாத்தியார்ரே நேரடியா, "மவனெ எதுலயும் போட்டு இழுத்துப்புடாதீங்க!"ன்னு சொல்லலாமான்னு வாயெடுக்கிறாரு. விநாயகம் வாத்தியாரு சுப்பு வாத்தியாரோட கையை இறுக்கப் பிடிச்சிக்கிட்டு, ஒண்ணும் சொல்ல வாணாங்ற மாதிரி தலைய ஆட்டி குறிப்பெ கொடுக்குறாரு. வெளியில கொட்ட இருந்த வார்த்தையே உள்ளார முழுங்கிக்கிறாரு சுப்பு வாத்தியாரு. விகடு என்னத்தாம் பதிலெச் சொல்லப் போறாம், அவ்வேம் மனசுல முழுசா என்னத்தாம் இருக்குங்றதெ இந்தச் சந்தர்ப்பத்துல தெரிஞ்சிக்கிடலாங்ற கணக்கு விநாயகம் வாத்தியாருக்கு. அதால அவரு சுப்பு வாத்தியார்கிட்ட எதுவும் சொல்லாம சும்முனாச்சியும் கொஞ்ச நேரத்துக்கு இருங்கோன்னு சொல்றாப்புல மறுக்காவும் ஒரு குறிப்பெ கொடுக்குறாரு.
            "இன்னிக்கு நீயி நம்மகிட்ட வேலை பாக்காம இருக்கோலாம். நீயி ஆரம்பிச்சி நீயி வேலை பாத்த பிராஞ்சு, நாளைக்கி இருக்குமா இல்லையோ தெரியல. நாலு பயலுக்கு, நாலு குட்டியோளுக்குக் கெடைக்கிற வேலை போவூது. கெழக்குக் கோட்டையார்கிட்ட பேசி சமாளிச்சி வுட்டீன்னா யப்பா வெகடு நல்லாருக்கும்! அதாங் வூடு தேடி வந்திருக்கேம்! யாரு வூட்டுலயும் இப்பிடிப் போயி நின்னவெங் கெடையாது இந்தக் குஞ்சு கவுண்டேம்!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            எங்க ஆரம்பிக்கிறது? எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னு இருந்த ரித்தேஸூம் இப்போ பிடிச்சிக்கிறாரு. "மார்கெட்டுல ஒண்ணும் நடக்காதது நடக்கல. நம்மோட நூத்து முப்பது பிராஞ்சுல எஞ்ஞயும் இப்பிடி ஒரு பெரச்சனையில்ல. இத்து ஒண்ணு, திருவாரூ இன்னொண்ணு. அதுல இத்து ரொம்ப மோசம். ன்னா பண்றதுன்னு எங்களுக்குமே ரொம்ப கன்பியூசன்னாத்தாம் இருக்கு! வக்கீலை வெச்சும் பேசிப் பாத்தாச்சி. கெழக்குக் கோட்டையாரு ம்ஹூம்! அசைஞ்சு கொடுக்க மாட்டேங்றாரு! எ மிராக்கிள் மேன்!"ங்றாரு ரித்தேஸ்.
              "நாம்ம இதுலேந்து வெளியில வந்துட்டேம். திரும்ப உள்ள நொழைய வாண்டாம்னு நெனைக்கிறேம்! வூட்டுல யாருக்கும் இஷ்மில்ல நாம்ம இதுல இருக்குறதில்ல! பிதுக்குன பேஸ்ட்ட உள்ள தள்ளுறதுல பிரயோசனமில்ல!"ங்றான் விகடு.
            "நூத்து முப்பதுல ஒண்ணு போச்சுன்னா மசுரு போச்சுதேன்னு இருப்பேம். அத்து நமக்குப் பெரிசில்ல. கெட்டப் போராயிப் போவப் படாதுன்னு பாக்கிறேம். இப்போ மூடுனா அத்து தொண்டாமுத்தூரு கேப்பிட்டலுக்கே அசிங்கம்னு நெனைக்கிறேம். இந்தாரு வெகடு! நாம்ம ஓப்பனா பேசுறேம். பிராஞ்ச நீயே எடுத்து நடத்து. ஒம்மட இஷ்டத்துக்கு விட்டுப்புடுறேம். ஒரு வார்த்தெ! ஒத்த வார்த்தெ ஏம் இப்பிடி நடத்துறே, அப்பிடி நடத்துறேன்னு கேக்க மாட்டேம். ஹெட் ஆபீஸூக்குத் தர வேண்டிய கமிஷம் கூட வாணாம். அம்புட்டயும் நீயே எடுத்துக்கோ. தம்பிடி வாணாம். கெட்ட பேர்ர வாங்கி ஒரு பிராஞ்ச மூடிடக் கூடாது பாத்துக்கோ!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "வக்கீல வெச்சிப் பேசியிருக்கீங்க! டேரக்டரு ரித்தேஸூ அய்யாவும் பேசியிருப்பாரு! போலீஸ்லயும் ஒஞ்ஞ சார்பாத்தாம் பேசிருப்பாங்க. பெறவு எப்பிடி நாம்ம பேசுனா அத்தெ மட்டும் ஏத்துக்கிட்டுக் கெழக்குக் கோட்டையாரு ஒத்துகிட்டு ஆபீஸத் தொறக்க சம்மதிப்பார்னு நெனைக்கிறீங்கன்னு புரியல?"ங்றாம் விகடு.
            "கிளையண்ட்ஸ் எல்லாம் அதாங் சொல்றாங்க. நீயி உள்ள வந்தீன்னா அவுங்க எல்லாரும் திரும்ப என்டெர் ஆவத் தயார்ங்றாங்க. இல்லன்னா அக்கெளண்ட முடிச்சிக் கொடுங்கன்னு ஒத்த கால்ல நிக்குறாங்க. கெழக்குக் கோட்டையார்ர பகைச்சுக்கிட்டு யாரும் ஆபீஸ்ல காலடி எடுத்து வைக்க யோசிக்கிறாங்க. ஆனா நீயிப் போயி பேசுனா கெழக்குக் கோட்டையாரு மனசு சம்மதப்படுவார்னும் சொல்றாங்க!"ங்றாரு ரித்தேஸ்.
            "எல்லாத்துக்கும் காசு பெரிசா இழப்பு ஆயிருக்கும். அதெ கூட மொறையா முதலீடு பண்ணி மீட்டுப்புடுலாம்னு வெச்சிக்கலாம். ஊர்ர காலிப் பண்ணிட்டு கொஞ்ச பேத்துப் போயிருக்காங்க. அவுங்கள கூட பேசி திரும்ப வார வெச்சிடலாம்னு வெச்சிக்கலாம். உசுருங்க போயிருக்கு. அதெ எப்பிடித் திருப்பிக் கொடுக்குறதுன்னு சொன்னீங்கன்னா தேவலாம்!"ங்றான் விகடு.
            "வருஷத்துக்கு நாலு பேராவது சாவுறாம்லா தப்புத் தப்பா டிரேட் பண்ணி பங்குச் சந்தையில. நாப்பது குடும்பமாவது நாட்டுல நடுத்தெருவுக்குத்தாம்லா வருது. நம்ம டேரக்டரு ரித்தேஸூ பரதேசியா திரிஞ்சிருக்காரு. அருவா பிடிக்க தெரியாதவம் தப்பா பிடிச்சா பிடிச்சவனைத்தாம்லா போட்டுத் தள்ளும் அருவா. வெவரம் புரிஞ்சவம் அலுங்காம கொள்ளாம இதுலத்தாம்லா சம்பாதிக்கிறாம் லட்சம் லட்சமா, கோடி கோடியா. எதுல நல்லது கெட்டது யில்ல. எல்லாத்திலயும்தாம்லா இருக்கு. கத்திய வெச்சி கொலையப் பண்றவனும் இருக்கிறாம். ஆபரேஷனப் பண்ற டாக்கடரும்தாம்லா இருக்காரு. நீயி ரண்டையும் ஒண்ணுன்னு ஆக்கிப்புடுவே போலருக்குல்லா!"ங்றாரு கவுண்டரு.
            "ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலுன்னு நம்மாள முடியாதுங்க மொதலாளி! அத்தோட அந்தப் பக்கம் தலைவெச்சிப் படுக்குறதில்லன்னு வூட்டுல சத்தியம் வரைக்கும் பண்ணிக் கொடுத்திட்டேம். ஆள விடுங்க!"ன்னு கும்புடு போட்டாம் விகடு.
            "வூடு தேடி வந்துட்டேன்னு எளக்காரமா நெனைச்சிட்டுப் பேசுதீயா?"ங்றாரு கவுண்டரு.
            "இதுல எளக்காரத்துக்கு ன்னா எடம் இருக்கு? முடியுமா? முடியாதா?ன்னு கேக்குறீங்க. நாம்ம முடியாதுங்றேம். முடிஞ்சா முடியும்னு சொல்லப் போறேம். இதுல எளக்காரம் எஞ்ஞ வந்துதான்னுத்தாம் நமக்குப் புரியல!"ங்றாம் விகடு.

            "வாத்தி வேலையப் பாத்து வாத்தி சம்பளத்தெ வாங்கி மட்டும் மின்னேற முடியாதுடீயேய். எந்த வாத்திய்யா வாத்தி வேலைய மட்டும் பாக்குறாங்? சம்பாதிக்கிறதுன்னு ஒண்ண வெச்சிக்கிட்டு இதெ சைடுலத்தாம் பாக்குறாங். நீயி ன்னம்மோ அதிசயமால்லோ பேசுறே? வாத்தி வேலையப் பாத்து வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்க வேண்டியதில்லா. வெவசாயத்தப் பாத்துக்கிட்டு மல்லுக்கு நிக்க வேண்டயதில்லா. டியூஷன கட்டிக்கிட்டு மாரடிக்க வேண்டியதில்லா. பிராஞ்செ விட்டுத் தர்றேம். அதுல வர்ற அத்தனெயும் ஒமக்குத்தாம். ஒண்ணோ ரண்டோ ஆள போட்டுக்கோ ஆபரேட்டர்ரா. வாரத்துக்கு ஒரு நாளு சாயுங்காலமா வந்து பாத்துக்கிட்டாலும் போதும் ஆபீஸ்ஸ. நாந்தேம் காசிய கொடுத்து ஆபீஸ்ஸ வெல பேசி வாங்குனேம். வெல பேசி வாங்குன அதெ ஒமக்கு அப்பிடியே வெல வைக்காம தர்றேம். நமக்கு ஒரு பிராஞ்சு கொறையக் கூடாது. அதுவும் கெட்டப் பேரோட மூடப் படாது. அவ்வளவுதாங். ஒண்ணுக்கு நாலு தட‍வெயா நெதானமா யோஜிச்சிச் சொல்லுடா வெகடு. ஒங் கையில ஜாக்பாட்டையே வைக்கிறேம். வித்துக் காசிய பாத்த ஆபீஸூ இன்னிக்குக் காசியப் போடாம கைக்கு வருது. நீயி அதிஷ்டக்கார பயடா வெகடு. இந்தக் குஞ்சு கவுண்டேம் இந்த அளவுக்கு எறங்கி வந்து பேசுனதில்ல. நீயி பேச வைக்கிறே!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "நீஞ்ஞ ஒஞ்ஞ அத்தனெ பிராஞ்சையும் தந்தாலும் வாணாம். நாம்ம இதுலேந்து ஒதுங்கிக்கிறதா முடிவு பண்ணிட்டேம்! எஞ்ஞ அப்பங்காரருக்குப் பிடிக்கல."ங்றாம் விகடு.
            "வூடு தேடி வந்த ராசலட்சுமிய வாணாம்னு சொன்ன மொத ஆளுடா நீயி! இந்த ராசலட்சுமிய வுட்டுப்புட்டு ஒஞ்ஞ அப்பாரு வேற எஞ்ஞப் போயி இன்னொரு லட்சுமியப் பிடிக்கப் போறாராக்கும்! என்னம்மோ அவனவேம் சுழி. ஆரு சொல்லி ஆரு கேக்கறா? வர்றதெ வாணாம்பானுவோ. வாராதத வேணும்பானுவோ. பணங்றது ரொம்ப முக்கியமாக்கும். இப்போ பெரிசா தெரியாது வாலிவத்துல. வாலிவம் கரைஞ்சாத்தாம் தெரியும். அப்போ எவனும் தேடி வந்தெல்லாம் இத்து மாதிரி பேசிட்டு இருக்க மாட்டானாக்கும். ன்னாடா புள்ளீவோ நீஞ்ஞ? அரசாங்கத்துல வேல பாத்து எவம்டா சம்பாதிச்சாம்? மாசச் சம்பளக்காரம் மின்னேற முடியுமாடா? அதுக்கு நீயி அதிகாரியல்லோ வேல பாக்கணும். மித்தபடி யேவாரம் பண்ணாத்தாம் நாலு காசிய நலுங்காம பாக்க முடியும். அரசாங்கத்துல அதிகாரி சம்பாதிக்கிறதெ யேவாரித்தாம் சம்பாதிப்பாம். நீயி எப்பவும் நம்ம பேச்சிய கேக்குற ஆளில்லடா. ஒம் போக்குக்கு போற ஆளில்லோ நீயி. அட கருமத்தெ நீயி எப்படியாச்சியும் போயித் தொல. ஒங்கிட்ட பேச வந்தேம் பாரு. எம் புத்தியெ சோட்டால அடிச்சிக்கோணும். யய்யா இந்தாரு ரித்தேஸூ இந்தப் பிராஞ்சு போனா போவுது. வுட்டுப்புட்டு திருவாரூர்ர பாப்பேம்."ன்னு கோவமா எழுந்திரிச்சிப் போறாரு குஞ்சு கவுண்டரு.
            விநாயகம் வாத்தியாரு சுப்பு வாத்தியார்ர பேச வாண்டாம்னு சொன்ன குறிப்புக்கு இப்போ அர்த்தத்தோட அவரப் பாத்துச் சிரிக்கிறாரு. ஸ்டூலு மேல கொண்டாந்து வெச்ச டீத்தண்ணி, பிஸ்கோத்து எல்லாம் அப்பிடியே இருக்கு. அதுலேந்து ஒரு துண்டெ கூட பிட்டு வாயில போட்டக்கல குஞ்சுக் கவுண்டரும், ரித்தேஸூம். குஞ்சுக் கவுண்டரு வெளியில போறதப் பாத்துப்புட்டு கைய பிசைஞ்சிகிட்டு ரித்தேஸூம் வெளியில போறாரு.
            "கொஞ்சத்தெ டீயாவது குடிச்சிட்டுப் போவாலாமேங்கய்யா!"ங்றாம் விகடு வெளியில போற ரித்தேஸ்கிட்ட. அது மின்னாடி போயிட்டு இருக்குற குஞ்சுக் கவுண்டரு காதுல விழுவுது. "பிடிக்காதவேம் வூட்டுல கைய நனைக்க மாட்டாம் இந்தக் கவுண்டம். வந்துப் பேசுறேம்னு ஒத்த வார்த்தெ சொல்லட்டும். உக்காந்து விருந்தே சாப்பிட்டுக் கெளம்புறேம்னு சொல்லும்யா ரித்தேஸூ!"ங்றாரு குஞ்சுக் கவுண்டரு. ஒரு நிமிஷம் அதுக்காவவும் நின்னுப் பாக்குறாரு கவுண்டரு. விகடுகிட்டேயிருந்து ஒரு வார்த்தை வரல. கல்லுளி மங்கன் கணக்கா நின்னுட்டாம். இன்னோவா காரு கதவெ டிரைவரு ஓடியாந்து தொறக்குறதுக்கு மின்னாடி அவரே தொறந்து அறைஞ்சி சாத்துனவருதாம், அந்தச் சத்தம் பத்து வூடுகளுக்குக் கேக்காத கொறைதாம். பின்னாடி வந்த ரித்தேஸூக்கு டிரைவரு மறுக்கா கதவெ தொறந்து விட்டு மறுக்கா சாத்துற மாதிரி ஆயிடுச்சி. இன்னோவா காரு கெளம்பிப் போன வேகம் தெரியாத அளவுக்கு காணாம போயிடுச்சி. அது கெளப்பி விட்ட புழுதி மட்டும் காணாம போகாம அப்பிக்கிட்டு அங்கயே நிக்குது. அந்தப் புழுதியப் பாக்கப் பிடிக்காம விகடு உள்ளார வந்தா, குஞ்சுக் கவுண்டருக்கும், ரித்தேஸூக்கும் வெச்ச டீத்தண்ணியையும், பிஸ்கோத்தையும் சுப்பு வாத்தியாரும், விநாயகம் வாத்தியாரும் காலு மேல காலு போட்டுக்கிட்டு உக்காந்துச் சாப்பிட்டுக்கிட்டும் சிரிச்சிக்கிட்டும் கெக்கலி கொட்டிக்கிட்டு இருக்காங்க. "பயெ பெரண்டுடுவான்னு நெனைச்சேம். வந்தவங்கள பெரள விட்டு அனுப்பிச்சிட்டாம்."ன்னு வெடிச் சிரிப்பா சிரிக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "வந்தவங்கள நாமளாவது மல்லுகிட்டு ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சிட்டுப் போவ வெச்சிருக்கலாம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "நல்ல கதையெ கெடுத்தீங்க போங்க வாத்தியார்ரே! கூத்தாநல்லூர்ல பத்துப் பாஞ்சு குடும்பம் போச்சு இந்தக் கருமாத்தால. போன வரைக்கும் நல்லதுதாங் போங்க வாத்தியார்ரே!"ங்றாரு அதுக்குச் சுப்பு வாத்தியாரு. அப்பாரு முகத்துல ஒரு திருப்தியப் பாக்குறாம் விகடு. அதுக்கு மேல ஒண்ணும் பேசாம ரூமுக்குள்ள போறாம் விகடு. ரூமுக்குள்ளேயிருந்து கேக்குறுப்போ விநாயகம் வாத்தியாரும், சுப்பு வாத்தியாரும் சிரிச்சிப் பேசுறது தெரியுது. "அது செரி! பேச வந்தவனுவோ ஒரு வார்த்தே நம்மளப் பாத்து மவனெ அனுப்பிச்சி வுடுங்கன்னு கேட்டானுவோளான்னு பாருங்க!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. "அத்தாம் நம்ம முகத்துலயே அனுப்பி வுட மாட்டேம்னு எழுதி ஒட்டிருக்கே. எப்பிடிக் கேப்பானுக?!"ன்னு அதுக்குச் சொல்லிட்டுச் சிரிக்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
            கெழக்குக் கோட்டையாரால தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட கூத்தாநல்லூரு பிராஞ்சை மூட முடிஞ்சிதே தவிர வேற ஒண்ணும் பண்ண முடியல. பங்கு யேவாரத்துல வாடிக்கை பண்ண வர்றவங்ககிட்ட வரும் போதே அது பத்தின அத்தனெ விசயங்களுக்கும் பின்னாடி பாதிப்பு ஏற்படாத அளவுக்கு கையெழுத்து வாங்கியாயிடும். பங்குச் சந்தையில இருக்குற சந்தை அபாயங்களுக்கு உட்பட்டுத்தாம் அவரு ஒரு தினசரி யேவாரம் பண்ற ஆளாவோ, முதலீடு பண்ற ஆளாவோ ஆவுறாருன்னு அதுக்கு அர்த்தம். அப்பிடி கையெழுத்துல்லாம் போட்டாத்தாம் சந்தையில யேவாரம்லாம் பண்ண முடியும். யேவாரம் பண்ணவும் அனுமதிப்பாங்க. அது ஒரு மொறை. அப்பிடி கையெழுத்துல்லாம் போட்டுக் கொடுத்துப்புட்டு பங்குச் சந்தை நம்மள சாய்ச்சிப்புட்டு, காச கரைச்சிப்புட்டுன்னு எந்தக் கோர்ட்டுல போயி நின்னாலும் அது எப்பிடி எடுபடும்? அதால இதுல சட்டரீதியா மேக்கொண்டு எதையும் பண்றதுக்கு இல்ல. அப்பிடி பண்ண முடியாத அளவுக்கு கிளையண்டுக்கும், ஆபீஸூக்கும் அக்ரிமெண்ட்ல்லாம் போட்டு கையெழுத்துப் போட்டு ஆயிடுறதால கெழக்குக் கோட்டையாரால மேக்கொண்டு ஒண்ணும் பண்ண முடியாம போயிடுச்சி.
            குஞ்சு கவுண்டரு நெனைச்சிருந்தா அவரு வீம்புக்கு கூத்தாநல்லூரு பிராஞ்சை நடத்தியிருக்க முடியும். ஆனா அவரு நஷ்டத்துக்கு எந்தப் பிராஞ்சையும் நடத்துற ஆளு கெடையாது. ரொம்ப நேக்கா காய நவுத்துற ஆளு வேற. கெழக்குக் கோட்டையாரு வேற மாதிரி எதாச்சிம் கொடைச்சல் கொடுத்தா அதெயெல்லாம் சமாளிச்சிக்கிட்டுக் கெடக்குணும்னு அவசியமில்லன்னு முடிவு பண்ணிட்டாரு. மொத்தத்துல தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட ஒரு பிராஞ்ச் கூத்தாநல்லூர்ர வுட்டு ஒழிஞ்சிதுன்னு ஆயிடுச்சி.
            திருவாரூ பிராஞ்சுக்கு அந்த மாதிரி பெரிய சிக்கலு இல்லன்னாலும் அதெயும் தொடர்ந்து நடத்துறதுல சில பிரச்சனைகள் இருந்துச்சு. அதுலயும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்குகள வாங்கி நெறைய பேரு நஷ்டப்பட்டு அதால வெளியில போயிருந்தாங்க. நல்ல தெறமையான ஆளப் போட்டா ஆபீஸ மறுபடி நல்ல வெதமா கொண்டாந்துடலாங்றது குஞ்சுக் கவுண்டருக்கு நல்லா தெரியும். திருவாரூ ஆபீஸ்ல அந்த விசயத்துல ஒரு தப்ப பண்ணியிருந்தாரு அவரு.
            லெனினைத் தூக்கி கூத்தாநல்லூரு பிராஞ்சுக்கு மேனேஜர்ர போட்டவரு, அதுக்கு அடுத்தாப்பு அங்க இருந்த கோபிய தூக்கி மேனேஜர்ரா போட்டிருக்கணும். அப்பிடித்தாம் ஒரு நடைமுறை எல்லா பிராஞ்சுலயும் இருக்கு. ஆனா அவரு கோயம்புத்தூர்லேந்து ஒரு ஆள பிடிச்சி திருவாரூ பிராஞ்சுக்கு மேனேஜர்ர போட்டிருந்தாரு. அந்தக் கடுப்புல வெலைய விட்டுட்டுப் போயி ஒரு டெம்போ வேனை வாங்கி வெச்சுகிட்டு ஓ.என்.ஜி.சி.க்கு ஒப்பந்த அடிப்படையில அதெ ஓட்டிக்கிட்டு இருக்குற வேலையப் பாத்துட்டு இருந்தாரு கோபி. இந்த சத்யம் கம்ப்யூட்டரு பங்குகள வாங்கி உண்டான பிரச்சனையில குஞ்சு கவுண்டரு மேனேஜர்ரா போட்டிருந்த அந்த ஆளு சொல்லாம கொள்ளாமல தலைமறைா ஆயிட்டாம்.
            ஆபரேட்டர்ரா வேலை பாத்துட்டு இருந்த சுபாவுக்கும் கலியாணம் ஆயி அதுவும் வேலைய விட்டுட்டுப் போனதால, நெரந்தரமா எந்த ஆபரேட்டரும் இல்லாம மாறி மாறி புதுப்புது ஆளுகள வேல பாத்துட்டு இருந்தாங்க திருவாரூ பிராஞ்சுல. திருவாரூ பிராஞ்சே இதுல குட்டிச்சுவரா ஆயிருந்திச்சு. ஒரு நேரத்துல திருவாரூர்ல இருந்த டிரேடிங் ஆபீஸ்லயே ஓகோன்னு ஓடுன டிரேடிங் ஆபீஸூ இப்போ இருக்குமா, இருக்காதாங்ற நெலைக்கு வந்திடுச்சி. இத்து மாதிரி எத்தனெ பிரச்சனைகளப் பாத்திருப்பாரு குஞ்சு கவுண்டரு. அவருக்குத் தெரியாத வித்தைகளா? எப்பிடி இதெ சரிகட்டணும்னு அவருக்குத் தெரியாததா என்னா? விகடுவெ எப்படி வூட்டுல போயி பாத்தாரோ குஞ்சு கவுண்டரு, அதே போல கோபியையும் போயி வூட்டுல பாத்தாரு. சம்பளத்தெ கூடப் போட்டுத் தர்றதா சொல்லி, கமிஷன் காசிலயும் ஒரு பங்கு தர்றதா சொல்லி கோபிய கொண்டாந்து மேனேஜராக்கி திருவாரூ பிராஞ்சை சரி பண்ணாரு. கூத்தாநல்லூரு பிராஞ்சை மூடுனதால அங்க க்ளோஸ் பண்ணாம இருந்த கணக்குகள அப்பிடியேவா விட்டுட முடியும்? அதெ எல்லாம் திருவாரூ பிராஞ்சுக்கு மாத்தி விட்டாரு. விகடுவோட அம்மா வெங்கு பேர்ல இருந்த பங்குச் சந்தை கணக்கு இப்போ கூத்தாநல்லூரு பிராஞ்சிலேந்து திருவாரூ பிராஞ்சுக்கு மாறிடுச்சு.
*****