செய்யு - 365
பய கொஞ்சம் நெதானமாத்தாம் இருக்காங்ற
தெளிவு மவனப் பத்தி சுப்பு வாத்தியாருக்கு வந்துச்சு. அவரோட மவனுக்கும், மவளுக்குமான
வயசு வித்தியாசம் ஒம்போது வருஷம்ங்ற நீங்க அறிஞ்ச, ஊரறிஞ்ச சங்கதி. மவன் நாலாப்பு
படிச்சப்போ சுப்பு வாத்தியாருக்கு மவ பொறந்தா. மவன் ரெண்டாயிரத்து எட்டுல வேலைக்குச்
சேந்தப்போத்தாம் அவரோட மவ ப்ளஸ் டூவ முடிச்சா. மவனுக்கு வயசு இருவத்தாறு, இருவத்தேழுன்னு
ஓடிட்டு இருந்தப்போ மவளுக்குக் கல்யாணத்த பண்றதா, மவனுக்குக் கல்யாணத்தப் பண்றதாங்ற
கொழப்பம் சுப்பு வாத்தியாருக்கு இருந்தத வுட ஊர்ல இருந்தவங்களுக்குத்தாம் அதிகமா இருந்திச்சு.
அதுல எதெ மொதல்ல பண்ணணும், எதெ ரெண்டாவதா பண்ணணுங்றதுல சுப்பு வாத்தியாரு ரொம்ப தெளிவா
இருப்பாரு. ஆனா விசயத்தெ மட்டும் வெளியில சொல்ல மாட்டாரு. முக்கியமான விசயங்கள்ல ரொம்ப
அமுக்குனியான ஆளு அவரு. அமுக்குனின்னா பொண்டாட்டிக்காரி வெங்குகிட்ட கூட சொல்லாத
அளவுக்கு அமுக்குனியான ஆளு. அவருக்குன்னு ஒரு கணக்கெ வெச்சிருப்பாரு. அந்தக் கணக்கு
கனகச்சிதமா விழுவுறப்பத்தாம் விசயத்தெ வெளியில விடுவாரு. அப்போ பாத்தா என்னவோ ஊருல,
சொந்தத்துல எல்லாஞ் சொல்லி அதெ செய்யுறாப்புல அது தெரியும். அதுக்கும் அவருக்கும்
எந்தச் சம்பந்தமும் இல்லாத மாதிரிக்கி அது தெரியும். ஆனா நடக்குறது எல்லாம் அவரு கணக்குப்படித்தாம்
நடக்குதுங்றது அவரெ தவிர யாருக்கும் தெரியாது.
வேலங்குடி சின்னவரு வேற மவ வயசுக்கு வந்ததிலேர்ந்து
மச்சாங்காரரான சுப்பு வாத்தியார்ரு பொண்ண கேட்டுட்டுக் கெடந்தாரு. வேலங்குடி சின்னவரு
முடிவே பண்ணியிருந்தாரு அவரோட கடைகுட்டி பையன் தாசுக்கு செய்யுவ கல்யாணத்தப் பண்ணி
மருமவளா வூட்டுக்குக் கொண்டுட்டுப் போயிடணும்னு. சுப்பு வாத்தியாருக்குச் சின்னவரு
மவனுக்குப் பொண்ண கட்டிக் கொடுக்குறதுல இஷ்டம் இருக்கா இல்லையான்னு தெளிவா தெரியல.
அது பத்திக் கேட்டதுக்கு அவரு பெரிசா பதில ஒண்ணும் சொல்லல. ரசா அத்தையும் நேரடியா
வந்து தம்பிக்காரரான சுப்பு வாத்தியார்ர கேட்டுப் பாத்துச்சு. அப்படி ரசா அத்தை வந்து
கேட்டதுக்கு சுப்பு வாத்தியாரு ஒரு சிரிப்ப சிரிச்சு வெச்சாரே தவிர, பொண்ண கட்டிக்
கொடுக்குறேம், இல்லைன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டா எதையும் சொல்லல.
சுப்பு வாத்தியாரு குடும்பத்துக்கும்,
வேலங்குடி சின்னவரு குடும்பத்துக்கும் இப்பத்தாம் கொஞ்சம் நெருக்கம் அதிகமாச்சு. அடிக்கடி
சின்னவரும், ரசா அத்தையும் திட்டைக்கு வந்துப் போக ஆரம்பிச்சாங்க. வந்து போற ஒவ்வொரு
மொறையும் சின்னவரும், ரசா அத்தையும் பொண்ண பத்திக் கேக்குறதெ விடாம பண்ணிட்டு இருந்தாங்க.
அவங்களோட நச்சரிப்பு நாளுக்கு நாளு தாங்கமா போச்சு. அப்போ செய்யு ஆர்குடியில தாயார்
மகளிர் கல்லூரியில பி.எஸ்ஸி. மேதமடிக்ஸ் படிச்சிட்டு இருந்தா. அதெயே ஒரு காரணமா சொல்லி,
பொண்ணு படிச்சிட்டு இருக்கா அது முடிஞ்ச பிற்பாடு பாக்கலாம்னு மழுப்பலா ஒரு காரணத்தெ
சொன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ன்னடா தம்பி! நம்ம குடும்பத்துல
பொண்ணு படிச்சிட்டு வந்துத்தாம் குடும்பத்தெ நடத்தணும்னா இருக்கு? வூடு இருக்கு. நெலம்
புலம் இருக்கு. ஆடு மாடுக கெடக்கு. அதெ பாக்குறதுக்கு ஆளு கெடையா. மூத்தவந்தாங் சென்னப்
பட்டணத்துல கெடக்காம். அவ்வேம் ஆயுசுக்கு இஞ்ஞ வர்றப் போறதில்ல. இவ்வேம் ஒருத்தம்
தாசும் அஞ்ஞ கெடந்து வெளிநாட்டுல கெடக்காம். கையி நெறைய சம்பளம். ஒம்போது மாசத்துக்கு
வேல. மூணு மாசத்துக்கு ஊருக்கு வந்திடறாம். கூடிய சீக்கரமே ஒம் பொண்ணுக்காக மனையெ
போட்டு மாடி வூடா ஆக்கணும்னு ஒத்த காலுல நிக்காம். கட்டிக் கொடுத்தா மவராசிய வந்துக்
கொண்டு வெச்சிப்பேம். நமக்கும் வயசு ஆவுதுல்ல. நம்மளப் பாத்துக்க ஆரு யிருக்கா? எம்
வூட்டுக்கு அனுப்புனா அவ்வதேம் ராசாத்தி. அவளோட ராசாங்கத்தாம். ஏத்தோ பொங்குன சோத்துல
ரவ்வ கஞ்சிய ஊத்துனா போதும் நாமளும், ஒம்மட அத்தனானும் குடிச்சிப்புட்டு ஓரத்துல ஒடுங்கிக்கப்
போறேம். மாமியா சண்டெயல்லாம் நாம்ம போடப் போறதில்ல. நாத்தனாரு சண்டெ போட வூட்டுல
ஒருத்திக் கெடையா. எல்லாம் கல்யாணங் காச்சி ஆயி கெளம்பியாச்சு. பெறவு என்னடாம்பீ யோஜனெ?"
அப்பிடினுச்சு ரசா அத்தை.
"படிச்சிட்டு இருக்குறப் பொண்ண பாதியில
எப்பிடி நிப்பாட்டுறதாம்? அது ஒரு காலம், படிக்காதப் பொண்ணுக இருந்த காலம். இப்போ
எந்தப் பொண்ணுக படிக்காம இருக்கு? பயலுகப் படிக்காட்டியும் பொண்ணுக என்னமா படிக்குதுங்க.
வயசும் இருவது ஆனாத்தாம் பொண்ணுக குடும்பத்தெ பாக்க கொள்ள செளரியமா இருக்கும்!"ன்னு
ஒரு போட போட்டாரு சுப்பு வாத்தியாரு.
இந்த எடத்துல சின்னவரு பிடிச்சிகிட்டாரு,
"அத்தாம் வூட்டுக்கு வர்ற மருமவப் பொண்ணு படிச்சப் பொண்ணா இருக்கணும்னு நெனைக்கிறாரு
மாப்ள. அதாஞ் செரி. கெணத்துத் தண்ணிய ஆத்துத் தண்ணியா கொண்டுட்டுப் போவப் போவுது?
எம் மச்சாம் பெண்ண பெறத்தியானா கொண்டுட்டுப் போவப் போறாம்? எம்மட வூட்டுப் பொண்ணு
அஞ்ஞ இருந்தா ன்னா? இஞ்ஞ இருந்தா ன்னா? இருக்கட்டும். படிச்சி முடிச்சி நல்ல வெதமாவே
வரட்டும்! இத்து ஒண்ணாவது டிகிரில்லாம் படிச்ச பொண்ண இருக்கட்டும்!"ன்னாரு.
இந்தப் பேச்ச வெச்சி மவளுக்கு இப்போ கல்யாணம்
இல்லங்றதெ வெங்கு புரிஞ்சிக்கிடுச்சி. அதோட பொண்ண சின்னவரு மவனுக்குக் கட்டிக் கொடுக்க
இஷ்டம் இருக்கா இல்லையாங்றதெ பொட்டுன்னுப் போட்டு ஒடைக்காம ஏம் ஓரஞ்சாரமா ஒண்ணு கெடக்க
ஒண்ணு சொல்றார்ங்றது வெங்குவுக்குப் புரியல. இது ஒரு வழக்கம், பொண்ணு இருக்குற குடும்பத்துல
மவனுக்கு மொதல்ல கல்யாணத்தெ முடிக்க மாட்டாங்க. வர்ற பொண்ணு எப்பிடி இருக்குமோ?
நாத்தனாரோட ஒத்துப் போவுமோ போவாதா? அத்தோட வயசுக்கு வந்தப் பொண்ண வெச்சுகிட்டு
மவனுக்குக் கல்யாணத்தெ பண்ணி வெக்கக் கூடாதுன்னு ஊருல, சொந்தப் பந்தத்துல பேச்சா பேசுவாய்ங்க.
மவனுக்கும் மவளுக்கும் வயசு வித்தியாம் நாலோ அஞ்சோன்னா அவுங்க அப்பிடி பேசுறது சரிபட்டு
வரும். ஒம்போது வருஷ வித்தியாசத்துல மவனையும், மவளையும் பெத்து வெச்சிக்கிட்டு அவுங்க
பேச்சுக்கு எப்பிடி சமாளிப்பெ தட்டுறதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு,
இதெ பத்தி ஊருசனம், சொந்தக்கார சனம் என்ன நெனைக்குதுங்றதெ தெரிஞ்சிக்க ஊடால பேச்ச
வுட்டுப் பாத்தாரு, "மவனுக்குக் கல்யாணத்தெ முடிச்சிப்புடலாம்னு பாக்குறேம்!"ன்னு.
"செரி பொண்ணப் பாரு. அப்பிடியே பொண்ணுக்கும்
மாப்பிள்ளையப் பாரு. ஒரே மேடையில முடிச்சிப் போடு!"ன்னு ஆளாளுக்குச் சொல்ல,
சுப்பு வாத்தியாரு அதுக்குச் சொன்னாரு, "படிப்பெ முடிச்சுத்தாம் பொண்ணுக்கு.
பயலுக்கு வயசு ஆயிட்டே போவுது. பொண்ணு கதையெ பாத்தா அவ்வேம் முப்பதெ தாண்டிடுவாம்.
இப்பத்தாம் அவனெ ஒரு நெலைக்குக் கொண்டாந்திருக்கேம். இந்த நெலைய வுட்டுப்புட்டா அவ்வேம்
பாட்டுக்கு இஷ்டத்துக்குப் போயிடுவாம். அவ்வேம் கதையெ முடிச்சிடுறததாம் நல்லதுன்னு
நெனைக்கிறேம்." அப்பிடிங்றாரு. அதுக்குச் சனங்க சொல்லுது, "செரி! அதெ மொதல்ல
பண்ணு. பெறவு ரண்டு வருஷம் கழிச்சி பொண்ணுக்குப் பாத்துக்கிடலாம். ஒனக்கு என்னவ்வே!
மச்சாங்கார்ரேம் பையனெ வசமா வளைச்சிப் போட்டு வெச்சிருக்கிறே. அவ்வேம்தாம் பொண்ணக்
கொடு பொண்ண கொடுன்னு ஒத்தக் கால்ல நிக்குறாம் போலருக்கு. பொண்ணுக்கு மாப்ளய பாக்குற
வேலயும் மிச்சம். பயதானெ கெடக்காம். இந்தக் காலத்துல பொண்ணு கெடைக்குறதுதாம் கஷ்டமா
இருக்குவ்வே. பயலுக வெட்டியாத்தான்ன சுத்திக்கிட்டுக் கெடக்குறானுவோ. பொண்ணு இருந்தா
நாளைக்கே கல்யாணத்தெ முடிச்சிடலாம் பயலுக தயாரா இருக்கானுவோ. பொண்ணுத்தாம் கெடைக்கிறதில்ல.
அதால பய கதையெ மொதல்ல பாரும்வே!"ன்னு அப்பிடின்னு. ஊருல, சொந்தத்துல இப்படி
நாலஞ்சு பெரிசுக சொன்னதெ வெச்சி மவனோட கதையெ மொதல்ல முடிக்கப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு.
பொண்ணோ, மாப்பிள்ளையோ பாக்குறதுக்கு
மின்னாடி ஜாதகத்தெ பாக்குறதெ இந்தக் கிராமத்துச் சனங்க ஒரு வழக்கமா வெச்சிருக்காங்க.
இதுக்குன்னு டவுன்ல கம்ப்யூட்டருக சோசியரா இருக்குன்னா, இந்த மாதிரிக்கி கிராமங்கள்ல
மனுஷங்கத்தாம் சோசியரா இருக்காங்க. அவருகிட்டெ கொண்டு போயி சாதக நோட்டெ கொடுக்குறது
மொத வேல. சோசிசயரு சாதக நோட்டெ பாத்துப்புட்டு அப்பிடி இப்பிடின்னு ரண்டு மூணு டிம்மித்
தாள பரீட்சை அட்டையில செருகி வெச்சுக்கிட்டு, அந்த டிம்மித் தாளுல ஒரு எடம் வுடாம அங்கன
இங்கனன்னு கட்டத்தெ போட்டு, அஞ்சு நிமிஷத்துக்கு ஒருக்கா விட்டத்தெ பாத்து யோஜிச்சுக்கிட்டு,
நொட்டாங்கையி கட்டை வெரலு நுனியால நொட்டாங்கையில இருக்குற எல்லா வெரலையும் அக்குபஞ்சரு
பண்ணுறாப்புல அமுக்கிக்கிட்டும் கணக்குப் பண்ணிக்கிட்டும்
ஒரு ரண்டு மூணு மணி நேரத்தெ காலி பண்ணிட்டு பிரம்மராசன் தலையெழுத்த எழுதுறாப்புல கணக்கெ
பண்ணி எழுதிச் சொல்லுவாரு.
இதுக்குன்னு நல்ல நாளு பாத்து, நல்ல நேரம்
பாத்து அந்த நல்ல நேரம் அதிகாலையில இருக்குறாப்புல பாத்துப்புட்டு, சூரியன் கெளம்புறத்துக்கு
மின்னாடி மொத ஆளா கெளம்பிப் போவணும்னு இதுலயும் சோசியத்துக்கு மேல சோசியக் கணக்கு
இருக்கு. அஷ்டமி, நவமில்ல போவக் கூடாது, பாட்டிமொகத்துல போவக் கூடாதுன்னு அது வேற
தனிக்கணக்கு இருக்கு. அன்னிக்கு யாரு மொகத்து எழுந்து முழிக்கணும், யாரு முகத்துல
முழிக்கக் கூடாதுன்னு கணக்கு வெச்சிக்கிட்டு போவுற ஆளுகல்லாம் இருக்கு. சோசியத்தெ
சரியா பாத்துப்புட்டா கல்யாணம் ஆன மாதிரின்னு கூட சொல்லக் கூடாது, கல்யாணமே முடிஞ்ச
மாதிரின்னுத்தாம் சொல்லணும்.
சோசியர்ர போயிப் பாத்தாத்தாம் கல்யாண
தெச இருக்கா இல்லியான்னு தெரியும். கல்யாண தெச இல்லாம பொண்ண தேடுன பொண்ணு கெடைக்காது,
மாப்புள்ளைய தேடுனா மாப்புள்ள கெடைக்காது. ஒருவேளை கெடைச்சுக் கல்யாணத்தெ பண்ணி வெச்சாலும்
ஒண்ணுக்கு ஒண்ணு ஒத்துக்காதுங்றது ஒரு நம்பிக்கெ. சமயத்துல சோசியத்தெ போயிப் பாத்து
முப்பது வயசு ஆளுக்கு கல்யாண தெச இல்லியே, முப்பத்தஞ்சு வயசுலத்தாம் வாரும்னு சொன்னாக்கா
சோலி முடிஞ்சிப் போச்சு. பெறவு அந்த ஆளோ, பொண்ணோ முப்பதஞ்சு வயசுலத்தாம் கல்யாணத்த
பண்ணிக்கிடலாம். அதுக்கு எடையில கல்யாணத்தெ பண்ணிக்கிடலாம்னா பெத்தவங்க பண்ணி வுட மாட்டாங்க.
யாரையாவது இழுத்துக்கிட்டு ஓடிக் கல்யாணத்தெ கட்டிக்கிட்டாத்தாம் உண்டு. இதெ சோசியம்
ஒருத்தருக்கு நாப்பது வயசு கடந்துச்சுன்னா செல்லாம போயிடும்னு சோசியக்காரவுகளே சொல்லுவாங்க.
அவுங்களுக்குல்லாம் கல்யாண தெசயும் பாக்க வேணாம், பொண்ணு மாப்புள்ளைக்குப் பொருத்தமும்
பாக்க வேணாம், கண்ண மூடிட்டுக் கல்யாணத்தெ முடிச்சி வெச்சாலே போதும்னு சொல்லிப்புடுவாங்க.
அந்த ஒரு எடத்துலத்தாம் சோசியக்காரவுங்க கருணைக்காரவுங்களா இருப்பாங்க. மித்த மித்த
எடங்கள்ல அவுங்க சொல்ற கணக்கும், உருட்டுற உருட்டலும், பயமுறுத்துற பயமுறுத்தலும்,
பண்ணச் சொல்ற பரிகாரங்களும் பயங்கரமாத்தாம் இருக்கும்.
*****
No comments:
Post a Comment