செய்யு - 368
நடக்கக் கூடாத ஒரு விசயம் ஒரு மனுஷனுக்கு
நடக்குறப்போ மனுஷனோட பகுத்தறிவு போற எடம் தெரியாம போயிடுது. அப்படி ஏன் தனக்கு
மட்டும் நடக்குதுன்னு அது சதா யோசிக்க ஆரம்பிச்சு அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும்னு
மூட நம்பிக்கையான ஒரு காரணத்துல அது சிக்கிக்கும் போலருக்கு. சங்கு சுப்பிரமணியெம்
வாழ்க்கையில அப்படி ஒரு சம்பவம் ஆகிப் போச்சு. அதுக்குப் பிறவுத்தாம் அவரு பகுத்தறிவையெல்லாம்
தூக்கி துர வெச்சிப்புட்டு பக்திப் பழமா மாறி சோசியக்காரரு ஆயிட்டாரு.
வாழ்க்கையில சில சம்பவங்க நடக்கறப்ப நாம்ம
என்னத்தாம் செய்ய முடியுது? எம்மாம் பெரிய பயில்வானா இருந்தாலும் சரித்தாம், எம்மாம்
பெரிய புத்திசாலியா இருந்தாலும் சரித்தாம் நடக்குறது நடந்துதாம் தீருது. வாழ்க்கையில
எல்லாமுமா மனுஷனோட கட்டுல இருக்கு. மனுஷனோட கட்டுல இல்லாத எவ்வளவோ விசயங்க இருக்கே.
ஒரு புயலு அடிக்கிது, ஒரு பூகம்பம் வருது. இதெல்லாம் மனுசனோட கட்டுல இருக்குற விசயங்களா
என்னா? இது எல்லாத்தியும் விட மனுசனோட கட்டுல இருக்க முடியாத ஒரு விசயம்ன்னா பிறத்தியாரோட
மனசுதாம். ஒரு புயல சமாளிச்சிடலாம், ஒரு பூகம்பத்த சமாளிச்சிப்புடலாம், பிறத்தியில
இருக்குற ஒரு மனச சமாளிக்க முடியாது. அது என்ன முடிவு எடுக்குதோ அதாங் அதுக்கு எல்லாமே.
அதெ கட்டுப்படுத்திக் கொண்டு வர்றதுங்றது இமய மலைய உருட்டிப் பெரட்டிக் கொண்டு வர்றது
போலத்தாம். அந்த மனசுல இருக்குற ரகசியம் இருக்கே. அதெ ஆரு அறிஞ்சிக்க முடியும்? மனசுல
ஒரு ரகசியத்த வெச்சிக்கிட்டுப் பிறத்தியில ஒருத்தரு ஒண்ணு பண்றதுக்கு யாரு என்னா பண்ண
முடியும்? ஆனா மனசு இருக்கே அது அப்பிடியா யோசிக்கும்? அப்படி யோசிக்காது. கொஞ்சம்
கவனமா இருந்திருந்தா சரி பண்ணிருக்கலாமுன்னுல்லா யோசிக்கும்.
ஊருல பல பேருக்குக் கல்யாணங் காட்சிய பண்ணி
வெச்சி சந்தோஷப்பட்ட சங்கு சுப்பிரமணியத்துக்குப் பொண்ணு பாத்தாச்சின்னா ஊரு எப்பிடி
அல்லோகலப்பட்டிருக்கும்னு சொல்லவா வேணும்? பொண்ணு பாத்து முடிஞ்சதும் மாப்புள்ளயப்
பாத்து நிச்சயத்த எழுத பொண்ணு வூட்டுக்கார ஆளுக கொத்தூருக்கு வாராங்க. அப்போ பொண்ணு
ஊரு சனங்க வண்டி கட்டிக்கிட்டும், சைக்கிள்லயுமா வாராங்க. சங்கு சுப்பிரமணியத்து வூட்டுக்கு
மின்னாடி மாட்டு வண்டியுமா, சைக்கிளுமா கெடக்குது. தன்னோட சிஷ்யப்புள்ளைக்கிக் கல்யாணம்னு
மூலங்கட்டளெ வாத்தியாரும் வந்திருக்காரு. வந்தவரு அங்கன இங்கன நின்னுகிட்டு பேசிட்டு
இருந்தவரு, நிப்பாட்டியிருந்த சைக்கிளு கேரியர்ல சித்தெ உக்காந்தாரு பாருங்க.
"எவம்டா அது? நம்ம வண்டியோட கேரியர்ல உக்காந்திருக்கிறது?" அப்பிடின்னு
ஒரு கொரலு கேட்டதுதாம் தாமசம். அந்தக் கொரலக் கொடுத்த ஆளப் பிடிச்சி வாத்தியாரோட
சிஷ்யப் புள்ளைங்க ஆளுங்க அடிச்சாங்க பாருங்க அடி. ஒங்க வூட்டு அடி, எங்க வூட்டு அடியில்ல,
ஒங்க ஊரு அடி, எங்க ஊரு அடியில்ல அப்பிடி அடியோ அடியின்னு அடிச்சதோட வுட்டுத் தொலையாம
நஞ்சாக்கெ வேற சுத்திகிட்டு அந்த ஆளோட மொகரைப் பேந்துப் போறாப்புல சுத்திக்கிட்டே
அவனெ வெரட்டிக்கிட்டே போறாங்க. அவ்வேம் கொத்தூரோட அத்தென தெருவுலயும் பூந்து ஆளு
தப்பிச்சாம் பொழைச்சாம் போதும்னு ஓடுறாங். தொரத்துற கூட்டமும் அவனெ விட்டாம் பாருன்னு
தொரத்திக்கிட்டு ஓடுது.
இதுல இந்த நாஞ்சாக்கெ சுத்தி அடிக்கிற
சங்கதியப் பத்தி பேசியாவணும். சங்கு சுப்பிரமணியெம் கம்பு, குஸ்தி, சுருளு, மான்கொம்புன்னு
கத்து கொடுத்துட்டு இருந்தப்போ, கொத்தூர்லேந்து ஒறவுக்கார கலியாணத்துக்குக் கோயம்புத்தூரு
போன ஆளு ஒருத்தெம் அங்க கராத்தே கத்துக் கொடுக்குறப் பாத்து அதுல ஆசெ வந்து அங்கயே
தங்கி கராத்தேயைக் கத்துக்கிட்டு ஊரு வந்து சேந்தாம். வந்துச் சேந்தவெம் கையில நஞ்சாக்கை
வெச்சிச் சுத்திக்கிட்டு கராத்தெ கத்துக்கிட்டவம்தான் பெரிய வஸ்தாத்து, கம்பு சுத்துறவெல்லாம்
தம்மா துண்டு வஸ்தாத்துத்துன்னு வாயளக்க ஆரம்பிச்சிட்டாம். இந்த சேதி சங்குவோட காதுல
விழப் போவ, அந்தப் பயலெ வரவெச்சி, "நீயி ன்ன பெரிய வஸ்தாத்து? செஞ்சிக் காட்டுடா
ஒம்மட வித்தைய?"ன்னுட்டாரு. சங்கதியெ கேள்விப்பட்டு ஊரு பயலுக அத்தென பேரும் கூடிட்டானுவோ.
அந்தப் பய "ஹம் ஹூம்"ன்னு மூச்செ ஒரு மாதிரி பண்ணிக்கிட்டு அப்படியும் இப்படியுமா
கராத்தேயில குத்து விட்டுக் காட்டுறாம்.
இதாங் சங்கதியான்னு பிடிச்சிக்கிட்ட சங்கு
என்ன பண்றார்ன்னா குஸ்தியில அத்து மாதிரிக்கி இருக்குறதெ செஞ்சிக் காட்டி, "இதாம்லா
கராத்தேயில ஹம் ஹூம்னு பண்ணுறாம்!"ன்னு சொல்லப் போவ, அந்தப் பய ச்சும்மா இருக்காம,
யாய், ஹியாய்ன்னு வரிசெ போட்டு கையி காலு வெச்சி பிடியில்லாம் போட்டு காட்டியிருக்காம்.
பிடி போடுறதுல சங்கு சுப்பிரமணியெம் பெரிய்ய ஆளு. ஆனா அதெ செஞ்சிக் காட்டவும் மாட்டாரு,
சொல்லிக் கொடுக்கவும் மாட்டாரு. சில பிடிகளப் போட்டு ஒரு முறுக்கு முறுக்குனா போதும்
எதிராளி ஆளு செத்துப் போயிடுவாம். அப்பிடிப்பட்ட கொரங்குப் புடி, உடும்பு புடியெல்லாம்
அவரு அறிஞ்சவரு. மூலங்கட்டளெ வாத்தியாரும் அந்தப் பிடிகள சங்கு சுப்பிரமணியத்தெ தவுர
வேற யாருக்கும் பெரிசா சொல்லிக் கொடுக்கல. பேருக்கு ரண்டு பிடிய சொல்லிக் கொடுப்பாரே
தவுர முக்கியமான பிடியச் சொல்லிக் கொடுக்க மாட்டாரு.
"வாடா பயலே வரிசெய கட்டி!"ன்னு
வேட்டிய தார்ப்பாச்சால கட்டிக்கிட்டு கோதாவுல எறங்கிட்டாரு சங்கு சுப்பிரமணியெம்.
அந்தப் பயலும் வெவரம் புரியாம கைய கால ஆட்டிக்கிட்டு ஆய், ஹாய், ஹியாய்ன்னு கத்திக்கிட்டு
வந்து ஹம் ஹூம்னு மூச்செ பிடிச்சிக்கிட்டு வரிசையெ கட்டுனா, ஒரே பிடித்தாம் அவனெ, பய
கைய கிய்ய ஆட்ட முடியாம அவனோட ரண்டு கையும் அவனோட பொரடிக்குப் பின்னால சங்கு சுப்பிரமணியத்தோட
கையில இருக்கு. முன்னால இருந்த கையில எப்பிடி பின்னால முறுக்கிக்கிட்டு போச்சுன்னு
ஒருத்தருக்கும் புரியல. எல்லாம் கண்ணு இமைக்குற நேரத்துல நடந்து முடிஞ்சிடுச்சி. பயெ
வசமா மாட்டிக்கிட்டாம். சங்கு சுப்பிரமணியெம் ஒரு இறுக்கு இறுக்குனா போதும் அவ்வேம்
கையால அவ்வேம் கழுத்து நெரிஞ்சிப் போயி பரலோகம் போவ வேண்டியதுதாம். "ன்னடா
பயலே?"ங்றாரு இப்போ சங்கு. "விட்டுடுங்க வாத்தியாரே!"ங்றாம் அவ்வேம்
குரலு கம்மிப் போயி.
இப்போ நெசமாவே பய வாயடைச்சிப் போயிட்டாம்.
அவ்வேம் அத்தோட வாயடைச்சிப் போயி நிக்காம, நாஞ்சாக்கெ பத்தி அடுத்ததா எடுத்து வுட்டுச்
சுத்திக் காட்டியிருக்கிறாம். தோளு பட்டைக்கு உள்ளார விட்டு, வெளியில வுட்டு, காலு
கவுட்டிக்கு உள்ளார வுட்டு, வெளியில வுட்டு, தலையைச் சுத்தி, ஒடம்பைச் சுத்தி அப்பிடி
இப்பிடின்னு ரவுண்டு கட்டியிருக்கிறாம். பாத்த சங்குக்குக் கொஞ்சம் பிரமிப்புத்தாம்.
பய அந்த அளவுக்குப் பெரமாதமா நாஞ்செக்கெ சுத்துறாம், சுத்திக்கிட்டே அப்பிடியும் இப்படியுமா
நகர்ந்து எதிராளிய எப்டியெல்லாம் தாக்கணுங்றதெ வரிசைப் போட்டுச் செஞ்சிக் காட்டுறாம்.
அதெ பாத்துப்புட்டு நெத்தியச் சுருக்குன சங்கு அவங்கிட்டெ, "மறுக்கா ஒரு தபா செஞ்சிக்
காட்டு!" அப்பிடின்னிருக்காரு.
அந்தப் பயெ செரித்தாம் இப்போ சங்கு அசந்துப்
போயிட்டார்ன்னு நெனைச்சிக்கிட்டு மறுக்கா சுத்திக் காட்டியிருக்கிறாம். சங்கு அவ்வேம்
நஞ்சாக்கெ சுத்துறதெ நல்லா கவனிச்சிக்கிட்டாரு. முழிய அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
திருப்பல. அவ்வேம் நஞ்சாக்கெ சுத்தி முடிச்சதெ நிப்பாட்டுனதும், சங்கு பக்கத்தால இருந்த
ஆளுகிட்டெ சிலம்பக் கம்ப கொண்டு வாரச் சொல்லிருக்காரு. கம்பு அவரு கைக்கு வந்ததும்
ஏது சங்கு கம்போட சண்டைக்கித்தாம் வாரப் போறாரோன்னு அந்தப் பயெ நெனைச்சிக்கிட்டு
இருக்கிறப்போ, சங்கு கம்பெ வெச்சிக்கிட்டு அந்தப் பெய நஞ்சாக்குல சுத்துன அத்னெ சுத்தையும்
வரிசையையும் செஞ்சுக் காட்டுனாரு பாருங்கோ, பயெ அசந்துப் போயி சங்குவோட கால்ல விழுந்துப்புட்டாம்.
"மன்னிச்சிப் போடுங்க வாத்தியாரய்யா! நம்ம மண்ணோட கலைய பெரிசில்லன்னு நெனைச்சிக்கிட்டு
சீமைக்கார்ரேங் கலைய பெரிசா நெனைச்சிக்கிட்டு ஒங்களையும், நம்ம மண்ணோட கலையையும் மருவாதிக்
கொறைவா பண்ணுறாப்புல நடந்துக்கிட்டேம்!"ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாம்.
சங்கு அவ்வேம் முதுகுல தட்டிக் கொடுத்துப்புட்டு,
"பரவால்லடா பயலே! கோவம்புத்தூருக்குப் போயி ச்சும்மா வேடிக்கெ பாத்துட்டு வந்துடாம
அத்தெ கத்துக்கிட்டு ஊரு வந்துச் சேந்தே பாரு அத்தாம்டா இந்த மண்ணோட கொணம். எந்தக்
கலையா இருந்தாலும் அத்தெ கத்துக்கணும்டா. நம்மோட கலைத்தாம் ரொம்ப பெரிசின்னு மண்டெ
கனமா இருந்துப்புடக் கூடாது. நீயி நஞ்சாக்கெ பிடிச்சி சுத்துனதப் பாத்தப்ப நமக்கே ஆசெ
வந்துப்புட்டுடா. கம்பு, சுருளு, மான் கொம்போட அத்தெயும் சேத்து நாம்ம சொல்லிக்
கொடுப்போம்லா!"ன்னுருக்காரு. அந்தப் பயலுக்குச் சந்தோஷம்னா சந்தோஷம். சுத்தி
நின்ன ஆளுகளுக்கும் கொண்டாட்டம்.
சரித்தாம் இந்த நாஞ்சாக்கெ எங்ஙன வாங்குறது,
என்ன வெலைக்கி வாங்குறதுன்னு சங்கு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்பவே, சங்கு நாஞ்சாக்கெ
வித்தையச் சொல்லிக் கொடுக்குறதுல சேத்துக்கிட்டாருங்ற சங்கதி ஊரு முழுக்கப் பரவி
மறுநாளே அவனவனும் கயித்துலயும், எருமை மாட்ட கட்டுற சங்கலியிலயும் கம்பையும், அங்கன
இங்கன கெடந்த இரும்புத் துண்டையும் ரண்டுப் பக்கத்துக்கும் கட்டிக்கிட்டு வெத வெதமா
அவனுங்களே தயாரு பண்ண நஞ்சாக்கோட வந்து நின்னுக்கிட்டு, "கத்துக் கொடுங்க வாத்தியாரய்யா!"ன்னு
நிக்குறானுவோ. அவனவனும் அவனுகளா செஞ்சிக்கிட்டு வந்து நின்ன நஞ்சாக்கெ பாத்ததும் சங்குவுக்குச்
சிரிப்பு காங்கல. சர்தாம் பயலுகளோட ஆர்வத்தெ கொறைச்சிப்புடக் கூடாதுன்னு அன்னிக்கே
மாட்டு வண்டிய கட்டிக்கிட்டு ஆர்குடி, திருவாரூன்னு அப்போ அலைஞ்சி அங்கன எங்கயும்
கெடைக்காம நேரா வண்டிய தஞ்சாரூக்கு வுட்டு அங்கனத்தாம் கராத்தே சொல்லிக் கொடுக்கற
ஆளுகளுகிட்ட நஞ்சாக்கெ இருக்குறதெ கேள்விப்பட்டு அம்பது நஞ்சாக்கெ வெல கொடுத்து வாங்கிட்டு
வந்தாரு.
அன்னியிலேந்து இந்த ஊருக்கார பயலுவோலுக்கு
நஞ்சாக்கெ சுத்துறதுன்னா அல்வா சாப்புடுற மாதிரிக்கி ஆயிடுச்சி. பொழுது போகாம அங்கன
இங்கன போற பயலுக கூட இடுப்புல நஞ்சாக்கெ சொருவி வெச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாம்.
ச்சும்மா நடந்து திரியுறப்போ அப்பிடி இப்பிடி போறப்பயே கைய காத்துல வீசி நாஞ்சாக்கெ
சுத்துறாப்புல அவனுங்க பண்ணுன அலப்பறை இருக்கே அதெ வார்த்தையில சொல்லிட முடியாது.
இப்போ கிரிக்கெட்டு வெளையாடுற சுடுகுஞ்சி வரைக்கும் ச்சும்மா நடந்துக்கிட்டு போறப்ப
பந்து வீசுறாப்புல, பேட்டிங் பண்ணுறாப்புல கைய காத்துல வீசுவானுங்கோ பாருங்கோ அந்த
மாதிரிக்கி அப்போ நாஞ்சாக்குப் பித்துப் பிடிச்சி அலைஞ்சானுவோ கொத்தூர்ல கெடந்த
அத்தனெ பயலுகளும்.
அந்த நஞ்சாக்கெ வெச்சித்தாம் மூலங்கட்டளெ
வாத்தியார்ர ஒரு வார்த்தைக் கேட்டுப்புட்டார்ன்னு ஊருக்காரனுவோ சைக்கிள்காரனெ அந்த
வெரட்டு வெரட்டு வெரட்டுனானுவோ. அந்த ஆளோட மூஞ்சி மொகரையெல்லாம் ரத்தம்னா ரத்தம்
அம்மாம் ரத்தம். அவ்வேம் வடவாதி வரைக்கும் ஓடிக் களைச்சி பிற்பாடுதாம் பின்னாடி ஓடி
வந்த மூலங்கட்டளெ வாத்தியாரால கூட்டத்தெ பிடிக்க முடிஞ்சிது. கூட்டத்தெ பிடிச்சி நிறுத்துனா
மூலங்கட்டளெ வாத்தியாரு தோளுல போட்டு இருந்த துண்டால அத்தனெ பயலுகளயும் விசிறி விசிறி
அடிக்கிறாரு. அவரு அப்பிடி அடிக்க அடிக்க ஒவ்வொரு பயலும் சிரிக்கின்னா சிரிக்கி அப்பிடிச்
சிரிக்கிறாம். பின்னெ அவரு கம்பாலே அடிச்சாலே பயலுக பம்மிக்கிட்டு நிப்பானுவோ வலி
தெரியாத மாதிரிக்கி. துண்டால அடிச்சா அவனுகளுக்கு எம்மாத்திரம் அது.
அடிபட்ட ஆளெ பிடிச்சிக்கிட்டு கூட்டத்தெ
பாத்துப் பேசுனாரு, "எலே வித்தெக்காரனுக்கு பெரிய வீரம்னா கோவத்தக் கட்டுப்படுத்துறதாங்.
நெதானம்டா பெரிய வித்தெ. அமைதிய்யா இருக்கோணும்டா. அதாங் வித்தெ. ஒமக்கு வித்தெ தெரிஞ்சிருக்குன்னு
வெளியில ஒரு ஈயி காக்காயிக்குத் தெரியப்படாது. அவ்வேம்தாம் வித்தைக்கார்ரேம். கோவப்பட்டு
வித்தையே எடுத்து வெளியில வுடுறவேம் வித்தெக்காரனெ கெடையா தெரிஞ்சிக்கோங்க. எவ்வம்டா
அத்து நஞ்சாக்கெ மொதல்ல தூக்குனது?"ங்றாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
வித்தையெ காட்டுறப்போ ஒருத்தனுக்கொருத்தெம்
விரோதி மாதிரிக்கி அடிச்சிப்பானுங்களே தவுர ஒரு தப்பு நடந்துப் போச்சின்ன்னா ஒருத்தனெ
காட்டிக் கொடுக்காம, நமக்கு தெரியா, ஒமக்குத் தெரியான்னு நிக்குற பயலுகளாச்சே இவுனுங்க.
ஒரு பயலும் காட்டிக் கொடுக்குற மாட்டேங்றானுவோ. அத்தென பயலுக கையிலயும் நஞ்சாக்கு
வேற இருக்குது. எவ்வேம் மொதல்ல அடிச்சான்னு எப்பிடிக் கண்டுபிடிக்கிறது? இதெப் பேச
இப்போ நேரமில்லன்னு மூலங்கட்டளெ வாத்தியார்ரே வடவாதியில இருந்த வாடவைச் சைக்கிளு கடையில
ஒரு சைக்கிள எடுத்துக்கிட்டு அதுல அடிவாங்குன ஆளெ பின்னாத்துல உக்கார வெச்சி பக்கத்துல
அப்போ சாத்தனூர்ல இருந்த கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கி மிதிக்கிறாரு. கூட்டத்துல இருந்த
அத்தன பேரும் பின்னாலயே ஓடி வர்றானுவோ அந்த ஆளையும் பிடிச்சிக்கிட்டு, சைக்கிளையும்
தள்ளிக்கிட்டு. மூலங்கட்டளெ வாத்தியாரு சைக்கிள மிதிக்குறதுக்குத் தேவையில்லாம தள்ளிக்கிட்டு
ஓடுறானுவோ கூட்டத்துல.
அங்ஙன ஆஸ்பத்திரியில வெச்சி கட்டுக்கிட்டுல்லாம்
போட்டுட்டு ஊருக்கு வர்றப்பத்தாம் கேக்குறாரு, "எலே சங்கய்யாவுக்குக் கலியாணச்
சோலியில இப்பிடி பண்ணுனா பொண்ணு வூட்டுக்காரனுவோ பொண்ணு கொடுப்பானுவோளா மாட்டானுவோளா?
நீஞ்ஞ இப்பிடி பண்ணி வெச்சிருக்கீங்களீயேடா! அஞ்ஞ என்னா சங்கெதி நடந்திருக்கோன்னு
வேற தெர்யலையடா! பொண்ணு தர்ற மாட்டேன்னுப்புட்டானுவோனா நம்மாள கல்லாணம் நின்னது மாதிரில்லடா
ஆயிப்புடும்டா!"ன்னு குசுகுசுன்னு சத்தம் போட்டுக்கிட்டு வர்றாரு.
"எஞ்ஞ வாத்தியாரிக்கி வாத்தியாரு
நீஞ்ஞ. ஒஞ்ஞள ஒரு வார்த்தெ பேசுனா ச்சும்மா விட்டுப்புடுவோமா! ஒடம்புல உசுர தங்குனது
பெரிசிங்கய்யா வாத்தியாரய்யா!" அப்பிடிங்கிறானுவோ கூட்டத்துல ஆளாளுக்கு.
"அடிச் செருப்பால!"ங்றாரு மூலங்கட்டளெகாரரு.
"அதாங் வாத்தியார்ரே! ஒங்க கையால
அடிபட்டா அவ்வேம் பெரிய வித்தெக்காரனாயிடுவோனுவோ. அடிங் வாத்தியார்ரே!"ன்னு
அவனவனும் முன்னால வந்து நிக்குறாம்.
"போக்கத்த பயலுவோளா! எஞ் சிஷ்யெம்
சங்கய்யா பாருங்கடா! வித்தெ தெரிஞ்சவம்தாம். ஒரு சண்டென்னா அந்த எடத்துல அவனெ பாக்க
முடியா. அத்தாம்டா வித்தெக்கார்ரேம். ஞாயம் இல்லாம ஒரு சம்பவெம் நடக்குறப்பத்தாம் ஞாயத்தெ
நெலநாட்ட வித்தைய கையில எடுக்கணும். ஒங் கோவத்துக்கு, ஒங் ஆசா பாசத்துக்குல்லாம் கையில
எடுக்குறதுக்கு வித்தெ ஒம்மட இஷ்டத்துக்கு ஆடுற மசுராடா?"ங்றாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
ஒரு பயலும் ஒண்ணும் பேசல. எல்லாப் பயலும் மூஞ்சியிலயும் ஈயாடல. என்ன ஆவப் போவுதோ,
ஏது ஆவப் போவுதோ? நெலமைய சமாளிக்க எப்பிடி வார்த்தைய வுடுறதுன்னு வரிசெ பண்ணிக்கிட்டு
மூலங்கட்டளெ வாத்தியாரு கொத்தூருக்கு வந்தா, பொண்ணு வூட்டுக்காரனுவோ எந்தக் கொறையும்
சொல்லாம மூலங்கட்டளெ வாத்தியாரு கைய பிடிச்சிக்கிட்டு, "தப்பு நடந்துப் போச்சி.
மன்னிக்கோணும்!"ங்றாங்க. மூலங்கட்டளெ வாத்தியாருக்கு ஒண்ணும் புரியல. "யப்பா
அடிச்சிது நம்மப் பயலுக! நாமுல்லா மன்னிப்புக் கேக்கோணும். நீஞ்ஞ மன்னிப்புக் கேட்டு
நம்மள வுட உசரத்துல நிக்குதீயேளே?"ங்றாரு.
"அடிபட்ட பயெ சண்டியரு கணக்கா ஊருல
திரியுற பயெ. ரொம்ப அட்டாதுட்டி பண்ணிட்டு திரியுறவேம். ஊருல ஒருத்தெம் சொல்ல கேக்குறதில்ல.
ஊருல அவனெ தட்டி வைக்கணும்னு அவனவனும் நிக்குறாம். ஆனா எவ்வேம் தட்டி வைக்கிறது? ஆரு
பூனைக்கி மணியக் கட்டுறதுன்னு யோஜனெ. அவ்வேம் கொத்தூரு வந்து தட்டுப்படணும்னு இருந்திருக்கு.
நல்ல சங்கதிதாங் நடந்திருக்கு. மெத்த சந்தோஷமுங்க. இனுமேலாவது அந்தப் பயெ ஒழுங்கு
மருவாதிய இருப்பாம். இனுமே ஊர்ல பேச வாயெடுக்கட்டும், கொத்தூர்ல போயிக் கொட்டுப்பட்ட
பயதானேம்ன்னே கெக்கலி கொட்டுவோம்லா!"ங்றாங்க பொண்ணு வூட்டுக்காரவுங்க.
"அடடா கெட்ட வெசயத்திலயும் ஒரு நல்ல வெசயம்! அதானெ பாத்தேம்! நம்ம சிஷ்யக்கார
பயலுவோ அந்த மாதிரிக்கி தப்பா எதெயும் செஞ்சிப்புட மாட்டோனுவோளே!"ன்னு பெருமூச்செ
ஒண்ணு விட்டுக்கிட்டாரு மூலங்கட்டளெ வாத்தியாரு.
பெறவு என்னா? கலியாணச் சோலித்தாம். கலியாணச்
சாப்பாடுதாம். இந்தக் கல்யாணம்தாம் சங்குச் சுப்பிரமணியத்தெ சோசியக்காரரா மாத்திச்சு.
ஒரே மூச்சுல அந்தக் கதெய முடிச்சிப்புடலாம்னு பாத்தா முடியல பாருங்க! இன்னொரு மூச்செ
இழுத்து விட்டுத்தாம் சொச்சக் கதெய சொல்லியாவணும்.
*****
No comments:
Post a Comment