20 Feb 2020

படியாத பேரம்

செய்யு - 364

            குஞ்சு கவுண்டர் நேரடியா விசயத்து வந்தாரு.
            சுப்பு வாத்தியாருக்கும், விநாயகம் வாத்தியாருக்கும் நெலமை புரிஞ்சிப் போச்சு. மறுக்கா வேதாளம் முருங்கெ மரத்துல ஏறுன கதையா விகடு திரும்பவும் பங்குச் சந்தைப் பக்கம் போறேம்னு எதாச்சிம் பண்ணிப் புடுவானோங்ற பயம் ரண்டு பேத்துக்கும் வந்திடுச்சி. அவுங்க ரண்டு பேரும் நின்னபடியே கையப் பிசைஞ்சிகிட்டு இருக்காங்க. விகடுவும் நின்னுகிட்டுத்தாம் இருக்காம். ரண்டு பேத்துக்கு மேல போடுறதுக்கு அங்க நாற்காலி யில்ல. இருந்த ரண்டு நாற்காலியில குஞ்சு கவுண்டரும், ரித்தேஸூம் உக்காந்திருக்காங்க. மின்னாடி போட்டு இருக்குற ஸ்டூல்ல டீத்தண்ணி ரண்டு தம்ப்ளர்லயும், பிஸ்கோத்து ரண்டு சின்ன தட்டுலயும் இருக்கு. அதெ போட்டு வெச்சிட்டு வெங்கு சுவத்துக்குப் பின்னாடி அதுக்குத் தொணையா இருக்குறாப்புல போயி உக்காந்துட்டு.
            சுப்பு வாத்தியார்ரே நேரடியா, "மவனெ எதுலயும் போட்டு இழுத்துப்புடாதீங்க!"ன்னு சொல்லலாமான்னு வாயெடுக்கிறாரு. விநாயகம் வாத்தியாரு சுப்பு வாத்தியாரோட கையை இறுக்கப் பிடிச்சிக்கிட்டு, ஒண்ணும் சொல்ல வாணாங்ற மாதிரி தலைய ஆட்டி குறிப்பெ கொடுக்குறாரு. வெளியில கொட்ட இருந்த வார்த்தையே உள்ளார முழுங்கிக்கிறாரு சுப்பு வாத்தியாரு. விகடு என்னத்தாம் பதிலெச் சொல்லப் போறாம், அவ்வேம் மனசுல முழுசா என்னத்தாம் இருக்குங்றதெ இந்தச் சந்தர்ப்பத்துல தெரிஞ்சிக்கிடலாங்ற கணக்கு விநாயகம் வாத்தியாருக்கு. அதால அவரு சுப்பு வாத்தியார்கிட்ட எதுவும் சொல்லாம சும்முனாச்சியும் கொஞ்ச நேரத்துக்கு இருங்கோன்னு சொல்றாப்புல மறுக்காவும் ஒரு குறிப்பெ கொடுக்குறாரு.
            "இன்னிக்கு நீயி நம்மகிட்ட வேலை பாக்காம இருக்கோலாம். நீயி ஆரம்பிச்சி நீயி வேலை பாத்த பிராஞ்சு, நாளைக்கி இருக்குமா இல்லையோ தெரியல. நாலு பயலுக்கு, நாலு குட்டியோளுக்குக் கெடைக்கிற வேலை போவூது. கெழக்குக் கோட்டையார்கிட்ட பேசி சமாளிச்சி வுட்டீன்னா யப்பா வெகடு நல்லாருக்கும்! அதாங் வூடு தேடி வந்திருக்கேம்! யாரு வூட்டுலயும் இப்பிடிப் போயி நின்னவெங் கெடையாது இந்தக் குஞ்சு கவுண்டேம்!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            எங்க ஆரம்பிக்கிறது? எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னு இருந்த ரித்தேஸூம் இப்போ பிடிச்சிக்கிறாரு. "மார்கெட்டுல ஒண்ணும் நடக்காதது நடக்கல. நம்மோட நூத்து முப்பது பிராஞ்சுல எஞ்ஞயும் இப்பிடி ஒரு பெரச்சனையில்ல. இத்து ஒண்ணு, திருவாரூ இன்னொண்ணு. அதுல இத்து ரொம்ப மோசம். ன்னா பண்றதுன்னு எங்களுக்குமே ரொம்ப கன்பியூசன்னாத்தாம் இருக்கு! வக்கீலை வெச்சும் பேசிப் பாத்தாச்சி. கெழக்குக் கோட்டையாரு ம்ஹூம்! அசைஞ்சு கொடுக்க மாட்டேங்றாரு! எ மிராக்கிள் மேன்!"ங்றாரு ரித்தேஸ்.
              "நாம்ம இதுலேந்து வெளியில வந்துட்டேம். திரும்ப உள்ள நொழைய வாண்டாம்னு நெனைக்கிறேம்! வூட்டுல யாருக்கும் இஷ்மில்ல நாம்ம இதுல இருக்குறதில்ல! பிதுக்குன பேஸ்ட்ட உள்ள தள்ளுறதுல பிரயோசனமில்ல!"ங்றான் விகடு.
            "நூத்து முப்பதுல ஒண்ணு போச்சுன்னா மசுரு போச்சுதேன்னு இருப்பேம். அத்து நமக்குப் பெரிசில்ல. கெட்டப் போராயிப் போவப் படாதுன்னு பாக்கிறேம். இப்போ மூடுனா அத்து தொண்டாமுத்தூரு கேப்பிட்டலுக்கே அசிங்கம்னு நெனைக்கிறேம். இந்தாரு வெகடு! நாம்ம ஓப்பனா பேசுறேம். பிராஞ்ச நீயே எடுத்து நடத்து. ஒம்மட இஷ்டத்துக்கு விட்டுப்புடுறேம். ஒரு வார்த்தெ! ஒத்த வார்த்தெ ஏம் இப்பிடி நடத்துறே, அப்பிடி நடத்துறேன்னு கேக்க மாட்டேம். ஹெட் ஆபீஸூக்குத் தர வேண்டிய கமிஷம் கூட வாணாம். அம்புட்டயும் நீயே எடுத்துக்கோ. தம்பிடி வாணாம். கெட்ட பேர்ர வாங்கி ஒரு பிராஞ்ச மூடிடக் கூடாது பாத்துக்கோ!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "வக்கீல வெச்சிப் பேசியிருக்கீங்க! டேரக்டரு ரித்தேஸூ அய்யாவும் பேசியிருப்பாரு! போலீஸ்லயும் ஒஞ்ஞ சார்பாத்தாம் பேசிருப்பாங்க. பெறவு எப்பிடி நாம்ம பேசுனா அத்தெ மட்டும் ஏத்துக்கிட்டுக் கெழக்குக் கோட்டையாரு ஒத்துகிட்டு ஆபீஸத் தொறக்க சம்மதிப்பார்னு நெனைக்கிறீங்கன்னு புரியல?"ங்றாம் விகடு.
            "கிளையண்ட்ஸ் எல்லாம் அதாங் சொல்றாங்க. நீயி உள்ள வந்தீன்னா அவுங்க எல்லாரும் திரும்ப என்டெர் ஆவத் தயார்ங்றாங்க. இல்லன்னா அக்கெளண்ட முடிச்சிக் கொடுங்கன்னு ஒத்த கால்ல நிக்குறாங்க. கெழக்குக் கோட்டையார்ர பகைச்சுக்கிட்டு யாரும் ஆபீஸ்ல காலடி எடுத்து வைக்க யோசிக்கிறாங்க. ஆனா நீயிப் போயி பேசுனா கெழக்குக் கோட்டையாரு மனசு சம்மதப்படுவார்னும் சொல்றாங்க!"ங்றாரு ரித்தேஸ்.
            "எல்லாத்துக்கும் காசு பெரிசா இழப்பு ஆயிருக்கும். அதெ கூட மொறையா முதலீடு பண்ணி மீட்டுப்புடுலாம்னு வெச்சிக்கலாம். ஊர்ர காலிப் பண்ணிட்டு கொஞ்ச பேத்துப் போயிருக்காங்க. அவுங்கள கூட பேசி திரும்ப வார வெச்சிடலாம்னு வெச்சிக்கலாம். உசுருங்க போயிருக்கு. அதெ எப்பிடித் திருப்பிக் கொடுக்குறதுன்னு சொன்னீங்கன்னா தேவலாம்!"ங்றான் விகடு.
            "வருஷத்துக்கு நாலு பேராவது சாவுறாம்லா தப்புத் தப்பா டிரேட் பண்ணி பங்குச் சந்தையில. நாப்பது குடும்பமாவது நாட்டுல நடுத்தெருவுக்குத்தாம்லா வருது. நம்ம டேரக்டரு ரித்தேஸூ பரதேசியா திரிஞ்சிருக்காரு. அருவா பிடிக்க தெரியாதவம் தப்பா பிடிச்சா பிடிச்சவனைத்தாம்லா போட்டுத் தள்ளும் அருவா. வெவரம் புரிஞ்சவம் அலுங்காம கொள்ளாம இதுலத்தாம்லா சம்பாதிக்கிறாம் லட்சம் லட்சமா, கோடி கோடியா. எதுல நல்லது கெட்டது யில்ல. எல்லாத்திலயும்தாம்லா இருக்கு. கத்திய வெச்சி கொலையப் பண்றவனும் இருக்கிறாம். ஆபரேஷனப் பண்ற டாக்கடரும்தாம்லா இருக்காரு. நீயி ரண்டையும் ஒண்ணுன்னு ஆக்கிப்புடுவே போலருக்குல்லா!"ங்றாரு கவுண்டரு.
            "ஆத்துல ஒரு காலு, சேத்துல ஒரு காலுன்னு நம்மாள முடியாதுங்க மொதலாளி! அத்தோட அந்தப் பக்கம் தலைவெச்சிப் படுக்குறதில்லன்னு வூட்டுல சத்தியம் வரைக்கும் பண்ணிக் கொடுத்திட்டேம். ஆள விடுங்க!"ன்னு கும்புடு போட்டாம் விகடு.
            "வூடு தேடி வந்துட்டேன்னு எளக்காரமா நெனைச்சிட்டுப் பேசுதீயா?"ங்றாரு கவுண்டரு.
            "இதுல எளக்காரத்துக்கு ன்னா எடம் இருக்கு? முடியுமா? முடியாதா?ன்னு கேக்குறீங்க. நாம்ம முடியாதுங்றேம். முடிஞ்சா முடியும்னு சொல்லப் போறேம். இதுல எளக்காரம் எஞ்ஞ வந்துதான்னுத்தாம் நமக்குப் புரியல!"ங்றாம் விகடு.

            "வாத்தி வேலையப் பாத்து வாத்தி சம்பளத்தெ வாங்கி மட்டும் மின்னேற முடியாதுடீயேய். எந்த வாத்திய்யா வாத்தி வேலைய மட்டும் பாக்குறாங்? சம்பாதிக்கிறதுன்னு ஒண்ண வெச்சிக்கிட்டு இதெ சைடுலத்தாம் பாக்குறாங். நீயி ன்னம்மோ அதிசயமால்லோ பேசுறே? வாத்தி வேலையப் பாத்து வட்டிக்கு விட்டுச் சம்பாதிக்க வேண்டியதில்லா. வெவசாயத்தப் பாத்துக்கிட்டு மல்லுக்கு நிக்க வேண்டயதில்லா. டியூஷன கட்டிக்கிட்டு மாரடிக்க வேண்டியதில்லா. பிராஞ்செ விட்டுத் தர்றேம். அதுல வர்ற அத்தனெயும் ஒமக்குத்தாம். ஒண்ணோ ரண்டோ ஆள போட்டுக்கோ ஆபரேட்டர்ரா. வாரத்துக்கு ஒரு நாளு சாயுங்காலமா வந்து பாத்துக்கிட்டாலும் போதும் ஆபீஸ்ஸ. நாந்தேம் காசிய கொடுத்து ஆபீஸ்ஸ வெல பேசி வாங்குனேம். வெல பேசி வாங்குன அதெ ஒமக்கு அப்பிடியே வெல வைக்காம தர்றேம். நமக்கு ஒரு பிராஞ்சு கொறையக் கூடாது. அதுவும் கெட்டப் பேரோட மூடப் படாது. அவ்வளவுதாங். ஒண்ணுக்கு நாலு தட‍வெயா நெதானமா யோஜிச்சிச் சொல்லுடா வெகடு. ஒங் கையில ஜாக்பாட்டையே வைக்கிறேம். வித்துக் காசிய பாத்த ஆபீஸூ இன்னிக்குக் காசியப் போடாம கைக்கு வருது. நீயி அதிஷ்டக்கார பயடா வெகடு. இந்தக் குஞ்சு கவுண்டேம் இந்த அளவுக்கு எறங்கி வந்து பேசுனதில்ல. நீயி பேச வைக்கிறே!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "நீஞ்ஞ ஒஞ்ஞ அத்தனெ பிராஞ்சையும் தந்தாலும் வாணாம். நாம்ம இதுலேந்து ஒதுங்கிக்கிறதா முடிவு பண்ணிட்டேம்! எஞ்ஞ அப்பங்காரருக்குப் பிடிக்கல."ங்றாம் விகடு.
            "வூடு தேடி வந்த ராசலட்சுமிய வாணாம்னு சொன்ன மொத ஆளுடா நீயி! இந்த ராசலட்சுமிய வுட்டுப்புட்டு ஒஞ்ஞ அப்பாரு வேற எஞ்ஞப் போயி இன்னொரு லட்சுமியப் பிடிக்கப் போறாராக்கும்! என்னம்மோ அவனவேம் சுழி. ஆரு சொல்லி ஆரு கேக்கறா? வர்றதெ வாணாம்பானுவோ. வாராதத வேணும்பானுவோ. பணங்றது ரொம்ப முக்கியமாக்கும். இப்போ பெரிசா தெரியாது வாலிவத்துல. வாலிவம் கரைஞ்சாத்தாம் தெரியும். அப்போ எவனும் தேடி வந்தெல்லாம் இத்து மாதிரி பேசிட்டு இருக்க மாட்டானாக்கும். ன்னாடா புள்ளீவோ நீஞ்ஞ? அரசாங்கத்துல வேல பாத்து எவம்டா சம்பாதிச்சாம்? மாசச் சம்பளக்காரம் மின்னேற முடியுமாடா? அதுக்கு நீயி அதிகாரியல்லோ வேல பாக்கணும். மித்தபடி யேவாரம் பண்ணாத்தாம் நாலு காசிய நலுங்காம பாக்க முடியும். அரசாங்கத்துல அதிகாரி சம்பாதிக்கிறதெ யேவாரித்தாம் சம்பாதிப்பாம். நீயி எப்பவும் நம்ம பேச்சிய கேக்குற ஆளில்லடா. ஒம் போக்குக்கு போற ஆளில்லோ நீயி. அட கருமத்தெ நீயி எப்படியாச்சியும் போயித் தொல. ஒங்கிட்ட பேச வந்தேம் பாரு. எம் புத்தியெ சோட்டால அடிச்சிக்கோணும். யய்யா இந்தாரு ரித்தேஸூ இந்தப் பிராஞ்சு போனா போவுது. வுட்டுப்புட்டு திருவாரூர்ர பாப்பேம்."ன்னு கோவமா எழுந்திரிச்சிப் போறாரு குஞ்சு கவுண்டரு.
            விநாயகம் வாத்தியாரு சுப்பு வாத்தியார்ர பேச வாண்டாம்னு சொன்ன குறிப்புக்கு இப்போ அர்த்தத்தோட அவரப் பாத்துச் சிரிக்கிறாரு. ஸ்டூலு மேல கொண்டாந்து வெச்ச டீத்தண்ணி, பிஸ்கோத்து எல்லாம் அப்பிடியே இருக்கு. அதுலேந்து ஒரு துண்டெ கூட பிட்டு வாயில போட்டக்கல குஞ்சுக் கவுண்டரும், ரித்தேஸூம். குஞ்சுக் கவுண்டரு வெளியில போறதப் பாத்துப்புட்டு கைய பிசைஞ்சிகிட்டு ரித்தேஸூம் வெளியில போறாரு.
            "கொஞ்சத்தெ டீயாவது குடிச்சிட்டுப் போவாலாமேங்கய்யா!"ங்றாம் விகடு வெளியில போற ரித்தேஸ்கிட்ட. அது மின்னாடி போயிட்டு இருக்குற குஞ்சுக் கவுண்டரு காதுல விழுவுது. "பிடிக்காதவேம் வூட்டுல கைய நனைக்க மாட்டாம் இந்தக் கவுண்டம். வந்துப் பேசுறேம்னு ஒத்த வார்த்தெ சொல்லட்டும். உக்காந்து விருந்தே சாப்பிட்டுக் கெளம்புறேம்னு சொல்லும்யா ரித்தேஸூ!"ங்றாரு குஞ்சுக் கவுண்டரு. ஒரு நிமிஷம் அதுக்காவவும் நின்னுப் பாக்குறாரு கவுண்டரு. விகடுகிட்டேயிருந்து ஒரு வார்த்தை வரல. கல்லுளி மங்கன் கணக்கா நின்னுட்டாம். இன்னோவா காரு கதவெ டிரைவரு ஓடியாந்து தொறக்குறதுக்கு மின்னாடி அவரே தொறந்து அறைஞ்சி சாத்துனவருதாம், அந்தச் சத்தம் பத்து வூடுகளுக்குக் கேக்காத கொறைதாம். பின்னாடி வந்த ரித்தேஸூக்கு டிரைவரு மறுக்கா கதவெ தொறந்து விட்டு மறுக்கா சாத்துற மாதிரி ஆயிடுச்சி. இன்னோவா காரு கெளம்பிப் போன வேகம் தெரியாத அளவுக்கு காணாம போயிடுச்சி. அது கெளப்பி விட்ட புழுதி மட்டும் காணாம போகாம அப்பிக்கிட்டு அங்கயே நிக்குது. அந்தப் புழுதியப் பாக்கப் பிடிக்காம விகடு உள்ளார வந்தா, குஞ்சுக் கவுண்டருக்கும், ரித்தேஸூக்கும் வெச்ச டீத்தண்ணியையும், பிஸ்கோத்தையும் சுப்பு வாத்தியாரும், விநாயகம் வாத்தியாரும் காலு மேல காலு போட்டுக்கிட்டு உக்காந்துச் சாப்பிட்டுக்கிட்டும் சிரிச்சிக்கிட்டும் கெக்கலி கொட்டிக்கிட்டு இருக்காங்க. "பயெ பெரண்டுடுவான்னு நெனைச்சேம். வந்தவங்கள பெரள விட்டு அனுப்பிச்சிட்டாம்."ன்னு வெடிச் சிரிப்பா சிரிக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "வந்தவங்கள நாமளாவது மல்லுகிட்டு ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சிட்டுப் போவ வெச்சிருக்கலாம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "நல்ல கதையெ கெடுத்தீங்க போங்க வாத்தியார்ரே! கூத்தாநல்லூர்ல பத்துப் பாஞ்சு குடும்பம் போச்சு இந்தக் கருமாத்தால. போன வரைக்கும் நல்லதுதாங் போங்க வாத்தியார்ரே!"ங்றாரு அதுக்குச் சுப்பு வாத்தியாரு. அப்பாரு முகத்துல ஒரு திருப்தியப் பாக்குறாம் விகடு. அதுக்கு மேல ஒண்ணும் பேசாம ரூமுக்குள்ள போறாம் விகடு. ரூமுக்குள்ளேயிருந்து கேக்குறுப்போ விநாயகம் வாத்தியாரும், சுப்பு வாத்தியாரும் சிரிச்சிப் பேசுறது தெரியுது. "அது செரி! பேச வந்தவனுவோ ஒரு வார்த்தே நம்மளப் பாத்து மவனெ அனுப்பிச்சி வுடுங்கன்னு கேட்டானுவோளான்னு பாருங்க!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. "அத்தாம் நம்ம முகத்துலயே அனுப்பி வுட மாட்டேம்னு எழுதி ஒட்டிருக்கே. எப்பிடிக் கேப்பானுக?!"ன்னு அதுக்குச் சொல்லிட்டுச் சிரிக்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
            கெழக்குக் கோட்டையாரால தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட கூத்தாநல்லூரு பிராஞ்சை மூட முடிஞ்சிதே தவிர வேற ஒண்ணும் பண்ண முடியல. பங்கு யேவாரத்துல வாடிக்கை பண்ண வர்றவங்ககிட்ட வரும் போதே அது பத்தின அத்தனெ விசயங்களுக்கும் பின்னாடி பாதிப்பு ஏற்படாத அளவுக்கு கையெழுத்து வாங்கியாயிடும். பங்குச் சந்தையில இருக்குற சந்தை அபாயங்களுக்கு உட்பட்டுத்தாம் அவரு ஒரு தினசரி யேவாரம் பண்ற ஆளாவோ, முதலீடு பண்ற ஆளாவோ ஆவுறாருன்னு அதுக்கு அர்த்தம். அப்பிடி கையெழுத்துல்லாம் போட்டாத்தாம் சந்தையில யேவாரம்லாம் பண்ண முடியும். யேவாரம் பண்ணவும் அனுமதிப்பாங்க. அது ஒரு மொறை. அப்பிடி கையெழுத்துல்லாம் போட்டுக் கொடுத்துப்புட்டு பங்குச் சந்தை நம்மள சாய்ச்சிப்புட்டு, காச கரைச்சிப்புட்டுன்னு எந்தக் கோர்ட்டுல போயி நின்னாலும் அது எப்பிடி எடுபடும்? அதால இதுல சட்டரீதியா மேக்கொண்டு எதையும் பண்றதுக்கு இல்ல. அப்பிடி பண்ண முடியாத அளவுக்கு கிளையண்டுக்கும், ஆபீஸூக்கும் அக்ரிமெண்ட்ல்லாம் போட்டு கையெழுத்துப் போட்டு ஆயிடுறதால கெழக்குக் கோட்டையாரால மேக்கொண்டு ஒண்ணும் பண்ண முடியாம போயிடுச்சி.
            குஞ்சு கவுண்டரு நெனைச்சிருந்தா அவரு வீம்புக்கு கூத்தாநல்லூரு பிராஞ்சை நடத்தியிருக்க முடியும். ஆனா அவரு நஷ்டத்துக்கு எந்தப் பிராஞ்சையும் நடத்துற ஆளு கெடையாது. ரொம்ப நேக்கா காய நவுத்துற ஆளு வேற. கெழக்குக் கோட்டையாரு வேற மாதிரி எதாச்சிம் கொடைச்சல் கொடுத்தா அதெயெல்லாம் சமாளிச்சிக்கிட்டுக் கெடக்குணும்னு அவசியமில்லன்னு முடிவு பண்ணிட்டாரு. மொத்தத்துல தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட ஒரு பிராஞ்ச் கூத்தாநல்லூர்ர வுட்டு ஒழிஞ்சிதுன்னு ஆயிடுச்சி.
            திருவாரூ பிராஞ்சுக்கு அந்த மாதிரி பெரிய சிக்கலு இல்லன்னாலும் அதெயும் தொடர்ந்து நடத்துறதுல சில பிரச்சனைகள் இருந்துச்சு. அதுலயும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்குகள வாங்கி நெறைய பேரு நஷ்டப்பட்டு அதால வெளியில போயிருந்தாங்க. நல்ல தெறமையான ஆளப் போட்டா ஆபீஸ மறுபடி நல்ல வெதமா கொண்டாந்துடலாங்றது குஞ்சுக் கவுண்டருக்கு நல்லா தெரியும். திருவாரூ ஆபீஸ்ல அந்த விசயத்துல ஒரு தப்ப பண்ணியிருந்தாரு அவரு.
            லெனினைத் தூக்கி கூத்தாநல்லூரு பிராஞ்சுக்கு மேனேஜர்ர போட்டவரு, அதுக்கு அடுத்தாப்பு அங்க இருந்த கோபிய தூக்கி மேனேஜர்ரா போட்டிருக்கணும். அப்பிடித்தாம் ஒரு நடைமுறை எல்லா பிராஞ்சுலயும் இருக்கு. ஆனா அவரு கோயம்புத்தூர்லேந்து ஒரு ஆள பிடிச்சி திருவாரூ பிராஞ்சுக்கு மேனேஜர்ர போட்டிருந்தாரு. அந்தக் கடுப்புல வெலைய விட்டுட்டுப் போயி ஒரு டெம்போ வேனை வாங்கி வெச்சுகிட்டு ஓ.என்.ஜி.சி.க்கு ஒப்பந்த அடிப்படையில அதெ ஓட்டிக்கிட்டு இருக்குற வேலையப் பாத்துட்டு இருந்தாரு கோபி. இந்த சத்யம் கம்ப்யூட்டரு பங்குகள வாங்கி உண்டான பிரச்சனையில குஞ்சு கவுண்டரு மேனேஜர்ரா போட்டிருந்த அந்த ஆளு சொல்லாம கொள்ளாமல தலைமறைா ஆயிட்டாம்.
            ஆபரேட்டர்ரா வேலை பாத்துட்டு இருந்த சுபாவுக்கும் கலியாணம் ஆயி அதுவும் வேலைய விட்டுட்டுப் போனதால, நெரந்தரமா எந்த ஆபரேட்டரும் இல்லாம மாறி மாறி புதுப்புது ஆளுகள வேல பாத்துட்டு இருந்தாங்க திருவாரூ பிராஞ்சுல. திருவாரூ பிராஞ்சே இதுல குட்டிச்சுவரா ஆயிருந்திச்சு. ஒரு நேரத்துல திருவாரூர்ல இருந்த டிரேடிங் ஆபீஸ்லயே ஓகோன்னு ஓடுன டிரேடிங் ஆபீஸூ இப்போ இருக்குமா, இருக்காதாங்ற நெலைக்கு வந்திடுச்சி. இத்து மாதிரி எத்தனெ பிரச்சனைகளப் பாத்திருப்பாரு குஞ்சு கவுண்டரு. அவருக்குத் தெரியாத வித்தைகளா? எப்பிடி இதெ சரிகட்டணும்னு அவருக்குத் தெரியாததா என்னா? விகடுவெ எப்படி வூட்டுல போயி பாத்தாரோ குஞ்சு கவுண்டரு, அதே போல கோபியையும் போயி வூட்டுல பாத்தாரு. சம்பளத்தெ கூடப் போட்டுத் தர்றதா சொல்லி, கமிஷன் காசிலயும் ஒரு பங்கு தர்றதா சொல்லி கோபிய கொண்டாந்து மேனேஜராக்கி திருவாரூ பிராஞ்சை சரி பண்ணாரு. கூத்தாநல்லூரு பிராஞ்சை மூடுனதால அங்க க்ளோஸ் பண்ணாம இருந்த கணக்குகள அப்பிடியேவா விட்டுட முடியும்? அதெ எல்லாம் திருவாரூ பிராஞ்சுக்கு மாத்தி விட்டாரு. விகடுவோட அம்மா வெங்கு பேர்ல இருந்த பங்குச் சந்தை கணக்கு இப்போ கூத்தாநல்லூரு பிராஞ்சிலேந்து திருவாரூ பிராஞ்சுக்கு மாறிடுச்சு.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...