23 Feb 2020

கம்புல கட்சி வளத்தவரு!

செய்யு - 367

            கொத்தூரு திட்டைக்குத்‍ தெற்கால நாலு மைலு தொலைவுல இருக்குற ஊரு. அங்க ஒரு சோசியரு சங்கு சுப்பிரமணியெம். அவரு குடும்பத்துல யாரும் முன்ன பின்ன சோசியரு கெடையாது. அவர்தாம் மொத சோசியரு. அவரு சோசியரு ஆன கதெய சுத்துப்பட்டுல எல்லாரும் பேசிக்கிறது உண்டு. சங்கு சுப்பிரமணியெம் ஆளு கட்டையாத்தாம் இருப்பாரு. நல்ல செவப்பு. ஒடம்பு நல்ல கனத்த ஒடம்பு. கம்பு விளையாட்டுல பெரிய ஆளு. மூலங்கட்டளை சிலம்ப வாத்தியார்கிட்ட கம்பு கத்துகிட்டவரு. இவரு ஒருத்தருதாம் வாத்தியார்கிட்டயிருந்து சுருளு சுத்துறது, மான்கொம்புல வெளையாடுறது, குஸ்திப் போடுறதுக்கான சலாம் வரிசைப் போடுறதுன்னு அத்தனையும் கத்து முடிச்சவரு. மித்தபடி வந்தவங்க எல்லாம் சிலம்பத்துல மயங்கி அதெ மட்டும் கத்துக்கிட்டு போனவங்கத்தாம். மூலங்கட்டளை சிலம்ப வாத்தியாரோட தலைப்புள்ள வரிசையில அதாச்சி மொத செட்டு வகையறாவுல வர்றவங்கள்ல இவரும் ஒருத்தரு. அதுக்குப் பெறவு ஏழெட்டு செட்டுகளுக்குப் பெறவுதாம் ரகுநாதெம்லாம் வாத்தியார்கிட்ட வந்து சிலம்பம் கத்துகிட்டது.
            சங்கு சுப்பிரமணியெம் வாத்தியார்கிட்ட கத்துக்கிட்டதோட எங்க சிலம்பம், குஸ்தின்னு கேள்விப்பட்டாலும் அரிக்கேன் லைட்டைக் கொளுத்திக்கிட்டு கையோட நாலைஞ்சு ஆளுகளப் புடிச்சிப் போட்டுக்கிட்டு வண்டிக் கட்டிகிட்டுக் கெளம்பிடுவாரு. அங்கப் போயி தன்னோட வாத்தியாரோட பெருமைய நெலைநாட்டுறதுல ஒரு வெறித்தனம் அவருக்கு. அப்போல்லாம் இன்னின்ன வாத்தியார்கிட்ட கத்துக்கிட்ட ஆளுங்கள்ல நாம் பெரிசா? நீயி பெரிசா? ஒம்மட வாத்தியாரு பெரிசா? எம்மட வாத்தியாரு பெரிசா?ன்னு போட்டி பந்தா நடக்குறது சகஜம். அதுலப் போயி செயிச்சிட்டு வந்து அதெ கதை கதையா அளக்குறது அவங்களுக்கு ஒரு சந்தோஷம். அப்பிடிச் செயிக்கிறப்போ எந்த ஊர்ல போயி செயிக்குறாங்களோ அந்த ஊருக்காரவு பண்ணுற மருவாதிய அவுங்கச் சொல்றதெ கேக்குறப்ப கம்பு வெளையாட்டப் பத்தி ஒண்ணும் தெரியாத பயலும் கம்பு சுத்துறதெ கத்துக்கிடணும்னு கெளம்பிடுவாம். சில ஊர்கள்ல மூலங்கட்டளெ வாத்தியாரோட சிஷ்யப் புள்ளேங்றதெ கேள்விப்பட்ட ஒடனே எதிரு சுத்து சுத்த வர்ற ஆளு மெரண்டுப் போயி துண்டக் காணும் துணியக் காணும்னு ஓடுறதெ ரொம்ப சிரிக்காட்டிச் சொல்லுவாரு சங்கு.
            சங்கு சுப்பிரமணியெம் ஆளும் கொத்தூருல பெருங்கையி. கொத்தூர்ல மொத மாடி வூட்டக் கட்டுனவரு இவருதாம். சொத்துப் பத்து நெல நீச்சுக்கு ஒண்ணும் கொறைவில்ல. இவரோட வயலுகள்ல வேலை பாக்குற அத்தனை ஆளுகளும் இவருகிட்ட சிலம்பம் கத்தாவணும்ங்றது எழுதப்படாத கட்டளெ. கத்துக்கிட்டு இவரோட மோதிப் பாத்தாவணும். அத்தனெ ஆளுகளுக்கும் நீல நெறத்துல குழாய்க் கால் சட்டெ, அதெ நீல நிறத்துல கை வெச்ச பனியன் மாதிரியான சட்டெ அவரோட காசுல வாங்கி தச்சிக் கொடுத்து வெச்சிருப்பாரு. அதெ போட்டுக்கிட்டுத்தாம் வயலு வேலையா இருந்தாலும், கம்பு சுத்துறதா இருந்தாலும் வந்தவாணும். அந்தக் காலத்துலயே இப்பிடி தங்கிட்ட வேலை பாக்குற ஆளுகளுக்குச் சீருடைய அறிமுகம் பண்ணுன ஆளு அநேகமா இவராத்தாம் இருந்தாவணும். இவருகிட்டே அப்பிடிக் கம்பு வெளையாட்டைக் கத்துக்கிட்டு கரும்புக் கொல்லைக் காவலுக்குச் சுத்துப்பட்டு ஊர்கள்ல வேலைக்கிப் போயி சம்பாதிச்ச ஆளுங்க நெறைய இருக்காங்க. மூலங்கட்டளெ வாத்தியாரோட சிஷ்யப்புள்ள சங்கு வகையறா கம்பு சுத்துற ஆளுங்கன்னால பண்ணையக்காரவுங்க மறுபேச்சில்லாம கரும்புக்கொல்ல காவலுக்குச் சேத்துக்கிடுவாங்க.
            சங்கு சுப்பிரமணியெம் ஆளு கொஞ்சம் முற்போக்கான ஆளு. அண்ணா கட்சி ஆரம்பிச்ச காலத்துலேந்து திராவிட முன்னேற்றக் கழகத்துல முக்கியமான பொறுப்புல இருந்த ஆளு வேற. அதால அவருக்கு ஆம்பளெ, பொம்பளென்னு பிரிச்சிப் பாக்கக் கூடாது, சாதி வேத்துமையெல்லாம் பாக்கக் கூடாதுன்னு நெனைக்கிற ஆளு. அதால அவரு எப்பிடி ஆம்பளெ ஆளுகளுக்கு நீல நெறத்துல குழாய்க் கால் சட்டெ, அதெ நீல நிறத்துல சட்டை வாங்கித் தச்சிக் கொடுத்தாரோ அதே போல பொம்பளெ புள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுத்து பொம்பளெ புள்ளைகளையும் சிலம்பத்துலயும், குஸ்திலயும் தயாரு பண்ணி வெச்சிருந்தாரு. இப்பிடி ஆம்பளெ, பொம்பளென்னு வேத்துமெ இல்லாம உடுப்புல ஒரு குக்கிராமத்துல பெரிய புரட்சியையே பண்ணவரு.வடவாதியில திராவிட முன்னேற்றக் கழகத்தோட கூட்டம்னா போதும் கொத்தூர்லேந்து ஆளுங்க கம்புச் சுத்திக்கிட்டுக் கெளம்பிடும். மூணு நாலு மைலு தூரம் வரைக்கும் ஆம்பளெ, பொம்பளென்னு கம்புச் சுத்திக்கிட்டு போறதுன்னா சும்மாவா? எந்த ஆளும் அசராது.
            அதுல கம்புல வெத வெதமான கலர் கலரு நாடாவையெல்லாம் கட்டி அப்போ கம்பெ சுத்துறப்போ பாக்குறப்போ ரொம்ப ரம்மியமா வேற இருக்கும். சங்கு சுப்பிரமணியெம் முன்னால முன்னத்தியா சுத்திட்டுப் போவாரு. அவரு கம்புல முன்னயும், பின்னயும் கருப்பு, சேப்பு நாடா கட்டியிருக்கும். தாங் கட்சிக்கார ஆளுங்றதெ அதுலயும் காட்டியாவணும் அவருக்கு. எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் சுத்திட்டுப் போனாலும் அலுப்போ, சலிப்போ அவங்களுக்கு வாராதான்னு பாக்கற சனங்க மூக்குல வெரல வைக்கும்.

            அப்போ திராவிட முன்னேற்றக் கழகத்துப் பேச்சாளர்களோட பேச்சக் கேக்கறதுக்குன்னே கட்சிப் பேதமில்லாம பெருங்கூட்டம் கெளம்பி வரும்னா, சங்கு சுப்பிரமணியத்தோட ஆளுக சுத்துற கம்பு வெளையாட்டைப் பாக்குறதுக்குன்னே ஒரு பெருங்கூட்டம் தெரண்டு வரும். அதுலயும் அவருகிட்ட கம்பு உசரம் இல்லாத பொடிசுக சுத்துற கம்பு வெளையாட்டப் பாக்குறதுக்கு ரொம்பவே வேடிக்கையா இருக்கும். அதெ பாக்குறதுக்குன்னெ ஊருல கெடக்குற பொட்டுப் பொடிசுக எல்லாம் கூட்டத்துக்கு வர்ற ஆளுகள நூலு பிடிச்சி வந்து நிக்குமுங்க. வர்ற கூட்டத்துல முக்காவாசிக் கூட்டம் கம்பு வெளையாட்டைப் பாக்கறதுக்குன்னு சொன்னாக்கா அத்து சரியாத்தாம் இருக்கும். அப்பிடி கம்ப வெச்சி கட்சி வளத்த ஆளு.
            அத்தோட மேடையில பேச்சாளரு பேசுறதுக்கு மின்னாடி சங்கோட குஸ்தி வரிசை ஒண்ணு நடக்கும். அதெ பாக்குறதுக்குக் கூட்டம் அள்ளும். வேட்டிய தார்ப்பாய்ச்சால வரிச்சிக் கட்டிக்கிட்டு, ஒடம்பெல்லாம் வேர்வே மினுமினுக்க அவரு போடுற ஆட்டம் கெட்ட ஆட்டமா, செம்ம காரம்மாத்தாம் இருக்கும். அதெ பாத்துப்புட்டு அதே மாதிரிக்கி ஊருக்கு வந்த பிற்பாடு பாத்தவெம் போட்டுப் பாத்தா அத்து வராது. அப்பிடி அதுல பல நுணுக்கங்கள பண்ணி வெச்சிருப்பாரு மனுஷம். அதாலயே பாத்தாக்கா அவர மேடைய வுட்டு எறங்குன ஒடனே ஒரு கூட்டம் அவர்ர சுத்திக்கும். இந்த வரிசையெ எப்பிடிப் போட்டீங்க வாத்தியாரய்யா? அந்த வரிசையெ எப்பிடிப் போட்டீங்க வாத்தியாரய்யா?ன்னு கேள்விக் கேட்டு அவர்ரப் போட்டுத் தொலைச்சிப்புடுமுங்க. பேச வர்ற பேச்சாளரும், இதெ சொல்லிப்புட்டுத்தாம் பேச்சே தொடங்குவாரு, "முதலில் ‍‍மேடையில் நிகழ்ந்ததோ மல்யுத்தம். இனி நடக்க இருப்பதோ சொல்யுத்தம். அந்தக் காலத்திலே யுத்தக் களத்தில் நடந்ததோ வில் யுத்தம். ஆகவே மல்லுக்கு நிற்பதோ, சொல்லுக்கு நிற்பதோ தமிழனிடம் ஆகாது. ஆகவே ஆகாது" அப்பிடின்னு தொடங்குனா கைதட்டலு நிக்குறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஆவும்.
            அப்பிடிக்கி கம்பு வெளையாட்டுலயும், கட்சி மேலயும் அம்புட்டு ஆசெ சங்குவுக்கு. இதுக்குன்னே சென்னைப் பட்டணத்துக்குப் போயி அண்ணாகிட்டேயும், கலைஞர்கிட்டயும் கம்பு வெளையாட்ட ஆடிக் காட்டி அவங்க ரசிச்சுப் பாராட்டுனதெ எப்பயும் சொல்லிக்கிட்டே இருப்பாரு சங்கு சுப்பிரமணியெம். அதெ பாத்ததுலேந்து அண்ணாவோ, கலைஞரோ திருவாரூ பக்கமோ, தஞ்சாவூரு பக்கமோ வந்தா இவர்ரப் பத்தி கேக்காம இருக்க மாட்டாங்க. அப்பிடிக் கேட்குறப்பவே அவுங்க மின்னாடி போயி இந்தா இருக்கேன்னு நானுன்னு போயி முகத்தெ நீட்டுவாரு சங்கு. தமிழ்நாட்டுல எங்க கட்சியோட பெருங்கூட்டம்னாலும் அங்கப் போயி தலையில காட்டலன்னா அவருக்குத் தூக்கம் வாராதுன்னுத்தாம் சொல்லணும். அதுக்கு அவரு மட்டும் போவா நாலு பேத்தையாவது செலவு பண்ணி வேற அழைச்சிட்டுப் போவாரு.
            எங்க கம்பு வெளையாட்டோ, குஸ்தி வெளையாட்டோ நடந்தாலும் வண்டிக் கட்டிக்கிட்டுல்லா போவாருன்னு சொன்னோம்ல. அங்கப் போயி அங்க மல்லுக்கு நின்னு சோலியக் காட்டிப்புட்டுத்தாம் திரும்புவாரு ஆளுகளோட சங்கு. ஒருவேள இவுகளுக்குத் தெரியாத சங்கெதி எதாச்சிம் இருந்துப் போச்சின்னா வண்டியோட அங்கேயே டேராவப் போட்டு அதெ கத்துக்கிட்டுத்தாம் ஊரு திரும்புறது. வண்டியில போறப்பயும், வர்றப்பயும் வாய்க்கா ஓரமா கெடக்குற கோரைப்புல்லுன்னு சொல்லுவாங்களே அந்தக் கோரையப் பிடிடுங்கி வண்டியோட ஆளுக வெச்சாவணும். சங்கோட கையிச் சும்மா இருக்காது. வண்டி போயிட்டு இருக்கிறப்பவே கோரைய ரண்டு கையிலயும் எடுத்து வெச்சி கம்பு போல சுத்துவாரு. சங்கப் பொருத்த வரைக்கும் கோரைய கையில வெச்சி சுத்துறதுதாம் கம்பு வெளையாட்டுக்கு மொத பயிற்சி. அதெ நல்லா சுத்த வந்தாத்தாம் மணிக்கட்டு நல்ல பெரளும்பாரு. சங்கீத ஆளுங்க சாதகம் பண்றாப்புலத்தாம் கோரைய வெச்சுக்கிட்டு சுத்துறதுங்றது அவரோட கருத்து. அப்பிடிக் கோரைய வெச்சிக்கிட்டு சுத்துறப்போ புதுப்புது மொறைகள கண்டுபிடிக்க முடியுங்றது அவரோட இன்னொரு கருத்து. அதுவும் வண்டியோடிட்டு இருக்குறப்போ அதுல உக்காந்துகிட்டு கோரையச் சுத்துனா அவருக்குப் புதுப்புது மொறைகளா தோணிக்கிட்டே இருக்கும்.
            வழக்கமா கம்பு வெளையாட்டுக்குன்னு பெரம்பு கம்புகள வெச்சி பயிற்சிப் பண்ணுனா, சங்கு சுப்பிரமணியெம் அதுலயும் வித்தியாசமா நல்லா எடையா உள்ள கல்லு மூங்கிக் கழியா தயாரு பண்ணி நெருப்புல கொடுத்து வாட்டி வெச்சிருப்பாரு. அதெ வெச்சி சொழட்டுறதுன்னா அதுக்கே ஒரு பலம் கைக்கு வேணும். அதெ வெச்சி சுத்துறதெ இரும்புக் கம்பிய வெச்சு சுத்துறாப்புல இருக்கும். அதெ சுத்தி முடிச்சிட்டு மணிக்கெட்ட பாத்தா வலியில விண்ணு விண்ணுன்னு தெறிச்சிட்டு இருக்கும். ஒரு நாளு இப்பிடி பயிற்சிக்கு வர்றவேம் மறுநாளு வர மாட்டாம். அவ்வேம் வராட்டியும் என்னா சங்கு அவ்வேம் வூட்டுக்கு மின்னாடி நின்னு கொண்டாந்துடுவாரு. இப்பிடிப் பயிற்சிக் கொடுத்துப்புட்டுத்தாம் பெரம்புக் கம்ப கையில கொடுப்பாரு. அப்போ கம்ப சுத்துறப்போ பெரம்புக் கம்பு காத்த விசிறி அடிக்கும் பாருங்க. அத்து அப்பிடியே புயலுக் காத்தப் போல இருக்கும். அந்தக் காத்துச் சத்தத்துக்கே எதிர்த்து நின்னு கம்பச் சுத்துறவேம் அரண்டு போயி காலுல விழுந்துடுவாம்.
            கம்புச் சுத்துறவேனுக்குக் கையி பலத்தோட காலு பலம் முக்கியம்பாரு சங்கு. அதுக்குன்னே உசரத்துல மூங்கில கட்டி வெச்சி அதுல கால மாட்டிக்கிட்டு தெனமும் அரை மணி நேரத்துக்குத் தொங்க வெச்சிப்புடுவாரு. தொங்க தொங்க வலியில உசுருப் போவும். அந்த வலிய தாங்கிட்டு வந்தா கொட்டி வெச்சிருக்கிற களிமண்ணு சகதியில வழுக்கிக்காம சகதிய மிதிச்சாவணும். அது ஒரு அரை மணி நேரத்துக்குச் செஞ்சாவணும். கம்பு வெளையாட்டுல காலு பெரள்றது ரொம்ப முக்கியம். அப்பிடி பெரளுறதுக்கும், பெரளுறப்போ எக்காரணத்தெ கொண்டும் தடுமாறி விழுந்திடப் படாதுன்னும் இப்பிடி ஒரு பயிற்சியெ கொடுக்கிறதா சொல்லுவாரு.
            கம்பு சுத்துறப்போ கையடிய விட, காலடியத்தாம் ரொம்ப உன்னிப்பா பாப்பாரு சங்கு. காலடி வந்துப்புட்டா கையடி வந்துடுங்றது அவரோட கணக்கு. காலடிய தப்பா அவரு பாக்க வெச்சிப்புட்டா வெச்சவெம் தொலைஞ்சாம். அதுக்கு தரையில வரைபடம் மாதிரிக்கி போட்டு ரண்டு வட்டக்காலு ஆட்டம், மூணு வட்டக்காலு ஆட்டம், நாலு வட்டக்காலு ஆட்டம்னு நாளு பூராக்கிச் செய்ய வெச்சிடுவாரு. இப்பிடி பயிற்சியிலத்தாம் ஆளு கொடூரமா நடந்துப்பாரே தவிர ரொம்ப இரக்கமனசுக்காரரு சங்கு சுப்பிரமணியெம். கம்பு வெளையாட்டுல ரொம்ப கறாரா இருந்தாலும் வம்பு தும்புன்னா ஆளு ஏழு கடலு, ஏழு மலையத் தாண்டியப் போயிடுவாரு. அட்டாதுட்டின்னா அவருக்குப் பிடிக்காது. ஒதவின்னு வந்துட்டா மொத ஆளா நிக்குறவரு அவரு. பல பேத்தோட கல்யாணத்தெ காசு பணம் பாக்காம பண்ணி வெச்சிருக்கிறாரு. அத்தனெ கல்யாணமும் சீர்திருத்த கல்யாணம்தாம். கல்யாணச் சாப்பாடுல்லாம் இவரு செலவுதாம். எல்லாத்திலயும் ரொம்ப பகுத்தறிவா வேற சிந்திக்குற மனுஷம். இப்பிடிச் சீர்திருத்தக் கல்யாணமும், பகுத்தறிவும் பேசுனவரு எப்பிடி சோசியரா ஆனாருங்றதுலத்தாம் கதெயே இருக்கு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...