22 Feb 2020

நாட்டியத்தாங்குடி சோசியரு!

செய்யு - 366

            கல்யாண தெச இருக்கா இல்லியாங்றதுக்கு ஒண்ணுக்கு ரெண்டா சோசியர்ரப் பாக்குறது ஒரு வழக்கம். ரெண்டு சோசியர்ரும் ஒரே மாதிரிக்கி சொன்னா அது சரி. ரெண்டு பேரும் ரெண்டு வெதமா சொன்னா மூணாவதா ஒரு சோசியர்ர பாக்குறதும் உண்டு. இங்க சுற்று வட்டாரத்துல அப்பிடி ரெண்டு சோசியர்ருங்க பெரிய ஆளுங்க. சொன்னா சொன்னபடிக்கி நடக்கும். அதுல ஒருத்தரு நாட்டியத்தாங்குடியில இருக்குறவரு. இன்னொருத்தரு கொத்தூர்ல இருக்குறவரு.
            நாட்டியத்தாங்குடியில இருக்குறவரு கிட்ணாமூர்த்தி தேசிகரு. ஆளு நல்லா ஓங்கு தாங்கலா இருப்பாரு. சேப்புன்னா சேப்பு அப்பிடி ஒரு சேப்பு. கணிச்சுச் சொன்னார்னா அப்பிடியே நடக்கும்னு ஒரு பேச்சு இருக்கு. என்னா ஒரு கொணம் இவர்கிட்டன்னா சாதக்கத்தெ பார்த்தார்ன்னா சட்டு புட்டுன்னு கணிச்சி முடிச்சிடுவாரு. மொதல்ல வயசு சரியான்னு பொறந்த வருஷத்துலேந்து கணக்கப் போட்டு ஒரு கேள்விய கேப்பாரு. அவரு சொல்றதுக்கு சரின்னு நாம்ம சொன்னாக்கா, நட்சத்திரத்தெ சொல்லி அது சரியாம்பாரு. அதுவும் சரின்னு சொன்னாக்கா ராசிய சொல்லி அதுவும் சரியாம்பாரு. அதுவும் சரின்னு சொன்னாக்கா பொறந்த நேரத்த சொல்லி அதுவும் சரியாம்பாரு. அதுவும் சரின்னு சொன்னாக்கா பெறவு சரவெடி வெடிக்கும் பாருங்க, அப்பிடி வெடிக்க ஆரம்பிச்சிடுவாரு. நல்லது கெட்டதுன்னு பாக்க மாட்டாரு சாதகக் கட்டத்துல என்ன தெரியுதோ அதெ அப்பிடியே சொல்லிடுவாரு.
            பெரும்பாலான சோசியருங்க நல்ல வெதமா தெரிஞ்சாத்தாம் அதெ சொல்லுவாங்க. நல்ல வெதமா தெரியலன்னா கொஞ்சம் மழுப்புனாப்புல சொல்லி ஒரு வருஷம் கழிச்சிப் பாக்கலாம், ரண்டு வருஷம் கழிச்சிப் பாக்கலாம்னு சொல்லுவாங்க. அதுலயே சோசியத்தெ பாக்க வந்தவங்க புரிஞ்சிக்கணும். கிட்ணாமூர்த்தி தேசிகருகிட்ட அப்பிடி ஒரு கொணம் கெடையாது. பொட்டுல அடிச்சாப்புல சாதகத்தெ பாக்கறப்ப தோணுறதெ சொல்லுவாரு. உதாரணத்துக்கு ஒரு கதையெ சொல்லணும்னா... இப்பிடித்தாம் கிட்ணாமூர்த்தி தேசிகர நம்பி மாயூரத்துலேந்து பொண்ணுக்கு சாதகம் பாக்க வந்திருக்காங்க. மாயூரம் எங்க இருக்கு? நாட்டியாத்தாங்குடி எங்க இருக்கு? ரொம்ப தூரம்தாம். இருந்தாலும் அவர்ர அப்பிடி பாக்க வர்ற ஆளுங்க இருக்காங்க. அதுக்குக் காரணம் அவரும் சொல்றபடித்தாம் நடக்குங்ற நம்பிக்கெ உண்டாயிப் போயிடுச்சு.
            மாயூரத்துலேந்து வந்தவங்களோட பொண்ணுக்கான சாதகத்தெ பாத்திருக்காரு தேசிகரு. பாத்து முடிச்சவரு சாதக நோட்டெ தூக்கி மின்னாடி இருந்த மேசையில பொட்டுன்னு போட்டுருக்காரு. அப்பிடிப் போட்டா சாதகம் நல்ல வெதமா இல்லேங்றது ஒரு குறிப்பு. அப்பிடிப் போட்டுட்டார்ன்னா அதெ பாத்துப்புட்டு வெளியில கெளம்பி ஓடியாந்திடறது நல்லது. கெட்ட விசயமா சொல்லப் போறார்ன்னு அதுக்கு அர்த்தம். என்னா இப்பிடி நோட்டெ பொட்டுன்னு தூக்கிப் போட்டுட்டார்ரேன்னு மாயூரத்துக்காரங்க தெகைச்சிப் போனாக்கா, தேசிகரு சொல்லிருக்காரு, "ஒஞ்ஞ பொண்ணுக்கு நீஞ்ஞ கல்லாணம் பண்ணி வைக்க முடியாது. அப்பிடி ஒரு ஆசெ ஒஞ்ஞளுக்கு வாணாம்"ன்னு.
            "புரியலீங்களே!"ன்னு மாயூரத்துக்காரவங்க தலையச் சொரிஞ்சிருக்காங்க.
            "பொண்ணே மாப்பிள்ளையப் பாத்திடுச்சி. அத்து ஓடிப் போயிடும்!"ன்னுருக்காரு.
            மாயூரத்துக்காரவங்களுக்குக் கோவம் வந்து அடிக்கப் பாய்ஞ்சிருக்காங்க. "போங்கய்யா! ஓடிப் போவப் போற பொண்ண காபந்து பண்ண பாக்குறதெ விட்டுப்புட்டு நம்மள அடிக்க வர்றீங்களே!"ன்னு தேசிகரும் அடிக்க பாய்ஞ்சிருக்காரு. ஒரே களேபரமாப் போயி அக்கம் பக்கத்துல இருந்தவங்க சமாதானம் பண்ணி வெச்சி மாயூரத்துக்காரவங்கள அனுப்பியிருக்காங்க. இந்தச் சேதி ஊரு பூரா பரவிப் போயி, அந்த மாயூரத்துக்குகாரவங்களோட பொண்ணுக்கு இவரு சொல்ற மாதிரித்தாம் நடக்குதா? யில்ல வேற மாதிரி நடக்குதா?ன்னு ரொம்ப எதிர்பார்ப்பு ஆயிடுச்சு. இதுக்குன்னே ஆளாளுக்கு அவங்கவங்களுக்கு மாயூரத்துல இருக்குற சொந்தக்காரவங்கள்கிட்ட இந்த மாதிரிக்கிச் சேதின்னு சொல்லி, என்னா நடக்குதுன்னு வெவரத்தெ சொல்லுங்கன்னுச் சொல்லி வெச்சி விசாரிக்கிற அளவுக்கு ஆயிப் போயிடுச்சி. பிற்பாடு நடந்தது அப்பிடித்தாம் தேசிகரு சொன்னது போல ஆயிப் போச்சி. அப்பிடி ஆயிப் போன பிற்பாடு அந்த மாயூரத்துக்காரவங்களே தேசிகர்ர வந்துப் பாத்து அவரோட கால்ல வுழுந்து மன்னிப்புக் கேட்டது ஒரு கதெ. இதுல இன்னும் ரொம்ப பிரபலமா ஆயிட்டாரு கிட்ணாமூர்த்தி தேசிகரு. பிரபலமாயிட்டார்ன்னு சொன்னா எப்பிடின்னா ஒரு மாடி வூடே கட்டிக்கிற அளவுக்கு ஆயிப்புடுச்சி அவரோட சோசியச் சம்பாத்தியம். அந்த வூட்டுக்குப் பக்கத்ததுல ஒரு கீத்துக் கொட்டகெ. அதுதாம் அவரோட ஆபீஸூ.
            வெளியிலேந்து யாரு சாதகெம் பாக்குறதுன்னாலும் தனி ரேட்டு. ஊருகாரவுங்களுக்கு தனி ரேட்டு. வெளியாளுங்களுக்கான அந்த ரேட்ட ஒரு போர்டாவே எழுதி மாட்டி வெச்சிருக்காரு, சாதகம் கணிக்க இம்மாம், பொருத்தம் பார்க்க இம்மாம், பரிகாரம் பண்ணி வுட இம்மாம்னு. அதுப்படித்தாம் வசூலிக்கிறாரு. சோதிடச் சக்கரவர்த்தின்னு சமீபத்துல பட்டத்தெ அவருக்கு அவரே கொடுத்து பேர்ர போட்டு போர்டையும் வெச்சிருக்காரு. அவருகிட்டத்தாம் சுப்பு வாத்தியார்ரு சாதகத்தெ எடுத்துகிட்டுப் போவலாம்னு முடிவுல இருக்காரு. கூட்டம்னா கூட்டம் அள்ளுது. ஒரு டாக்குடருகிட்ட உக்காந்துப் பாக்குற மாதிரித்தாம் அவருகிட்ட உக்காந்துப் பாக்க வேண்டிருக்கு. எம்மாம் கூட்டமா இருந்தாலும் சட்புட்டுன்னு கணிச்சிச் சொல்லி அனுப்பிக்கிட்டே இருப்பாரு மிஷினு மாதிரி. ஒரு சாதகத்தெ பாத்துக் கணிக்க அவருக்கு ரண்டு நிமிஷம் போதும். அடுத்த ரண்டு நிமிஷத்துல விசயத்தெ சொல்லிப்புடுவாரு. அடுத்த ஒரு நிமிஷத்துல சாதகத்தெப் பத்திக் கேக்க வந்தவங்க பணத்தெ கொடுத்துப்புட்டு எடத்தை காலி பண்ணியாவணும். இப்பிடி கால அட்டவணைப் போட்டுக்கிட்டு அவரு சாதகத்தெ பாத்துக்கிட்டு இருக்காரு.

            சுப்பு வாத்தியாரு வூட்டுல யாருகிட்டேயும் சொல்லாம அதிகாலையில டிவியெஸ்ஸ எடுக்குறார்ன்னா ஏதோ முக்கியமான சங்கதின்னு அர்த்தெம். ஏம் இப்பிடி காலாங் காத்தாலயே கெளம்புறீங்கன்னு அவருகிட்ட கேக்க முடியாது. கேட்டாலும் சொல்ல மாட்டாரு. உம்மானாம்மூஞ்சியாட்டம் அவரு பாட்டுக்குக் கெளம்பிப் போயிட்டே இருப்பாரு. முக்கியமான சோலி விசயமா கெளம்புறப்போ அவருகிட்டே யாரும் அது பத்திக் கேக்கக் கூடாது. அவர்ரா சோலியெல்லாம் முடிஞ்சி பிற்பாடுத்தாம் சொல்லுவாரு. அது வரைக்கிம் வூட்டுல இருக்குறவங்க வெயிட்டிங்கிலத்தாம் இருந்தாவணும். இவரு திட்டையில வண்டிய கெளப்பிக்கிட்டு நாட்டியத்தாங்குடி போறப்ப மணி அஞ்சரை இருக்கும். பொழுது விடிஞ்ச மாதிரிக்கும், விடியாத மாதிரிக்கும் இருக்குது. அந்த நேரத்துலயும் நாட்டியத்தாங்குடி சோசியரு வீட்டுக்கு மின்னாடி நாலஞ்சு காருக, ரெண்டு சக்கர வாகனங்க மூணு நாளு கெடக்குது. மொத ஆளா சாதக்தெ பாத்துப்புட்டுக் கெளம்பிடணும்னு நெனைச்சு வந்த சுப்பு வாத்தியாருக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு.
            மொத ஆளா பாக்க முடியாது போலருக்கேன்னு நெனைச்சா அப்பத்தாம் நல்ல வேளையா கிட்ணாமூர்த்தி தேசிகரு பக்திப் பழம் மாதிரிக்கி குளிச்சி முடிச்சிட்டு வேட்டியக் கட்டிக்கிட்டு மேலுக்கு ஒரு வேட்டிய போர்த்திக்கிட்டு வர்றாரு. கழுத்துல உத்திராட்ச மாலை தொங்குது. கையில பஞ்சலோகத்துல ‍செஞ்ச மொடா காப்பு. மேலுக்குப் போத்தியிருக்கிற வேட்டிக்கு எடையில அவர பூணூல போட்டிருக்கிறதும் நல்லா தெரியிது. இடுப்புல பளபளான்னு பச்சை நெறத்துல பெல்ட்டு மாதிரிக்கி எதையோ கட்டியிருக்கிறாரு. துணியிலயே அப்பிடி ஒரு வித்தியாசமான பெல்ட்டை அவரு தச்சி வாங்குனாரோ, அப்பிடிக்கி ஒரு பெல்ட்டு கடையில கெடைக்குதோ தெரியில. அதுல பணத்தை வாங்கி வெச்சிக்கிற மாதிரிக்கி ஜிப்பெல்லாம் போட்டு நல்ல தோதா அது இருக்கு. மண்டையில முடிய வளத்து கொண்டையா போட்டிருக்கிறாரு. தோளு, நெஞ்சு, கையின்னு திருநீத்த அள்ளிப் பூசிருக்காரு. அது ஒரு வாசத்தெ அவரு நெருங்கி வர்றப்ப தருது. சுப்பு வாத்தியாரோட நேரம் அவரு அங்க போட்டிருந்த பெஞ்சுல போயி உக்காந்திருக்காரு. மித்தவங்க எல்லாம் அங்க இங்க நின்னுகிட்டு எதையெதையோ பேசிட்டு இருக்காங்க. அவரு வர்றதெ பாத்துட்டு பெஞ்சுல ஓடியாந்து உக்காரப் பாத்தா சுப்பு வாத்தியாருக்கு அடுத்தடுத்தாப்புலத்தாம் உக்கார முடியுது.
            மொத ஆளா பாக்க முடியாதுன்னு நெனைச்சி வந்த சுப்பு வாத்தியாருக்கு மொத ஆளா பாக்குற சந்தர்ப்பம் வாய்க்குது. உள்ள போயி உக்காந்த தேசிகரு, "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! பித்தா பிறைசூடி பெருமானே! ஈஸ்வரா!"ன்னு சொல்லிட்டு ஒரு பெருமூச்சு வுட்டுப்புட்டு உக்காந்தவரு, "வாங்கோ!"ன்னு குரல கொடுக்குறாரு.சுப்பு வாத்தியாரு அந்தக் கீத்துக் கொட்டாயில தலைய குனிஞ்சி உள்ளார நொழைஞ்சி அவர்ரப் பாத்து மஞ்ச பையில கொண்டு போன சாதகத்தெ எடுத்து வைக்கிறாரு. அவரு சாதகத்தெ எடுத்து வெச்சதும் தேசிகரு சாதகத்தெ எடுத்து பவ்வியமாய் கும்பிட்டுகிட்டு கண்ணுல ஒத்திக்கிறாரு. அதுக்கு ரண்டு விநாடி நேரம். டக் டக்குன்னு பொறந்த நேரம், வயசு, நட்சத்திரம், ராசிய எல்லாம் கேட்டுப்புட்டு, "இத்து நாம்ம பாத்துக் கணிச்ச சாதகம் ஆச்சே. அப்பயே சங்கதிக அத்தனையும் சொல்லிருப்பேனே!"ங்றாரு தேசிகரு. அதுக்கு சுப்பு வாத்தியாரு, "சொன்னீங்க! இருந்தாலும் பதினெட்டு பத்தோம்பது வருஷம் ஆவுதுல்ல! கல்யாணத்தெ வைக்கலாமா? தெச இருக்கான்னு பாக்குணுமில்லே!"ங்றாரு. ஒரு ரண்டு நிமிஷத்துல சட்டு புட்டுன்னு கணக்கெ போடுறாரு.
            "எத்தனெ வருஷம் ஆனாலும் ன்னா? சொன்னது சொன்னதுதாம். இருவத்து ஆறு வயசுக்கு மின்னாடி கல்யாணத்தெ பத்தி நெனைக்கக் கூடாது. பண்ணவும் கூடாது. பெரிய படிப்பெல்லாம் படிச்சி முடிச்சித்தாம் கல்யாணம் ஆவணும்னு கணக்கு இருக்கு. ஆனா நாந் நீயின்னு கட்டிக்க மாப்பிள்ள பயலுக வருவானுக. கொஞ்சம் அதுவரைக்கிம் மந்தமாத்தாம் இருக்கும் பொண்ணு. இருவத்து நாலு, இருபத்து அஞ்சு, இருவத்து ஆறு வரைக்குமே சோதனையான காலம். பொண்ணுக்கு உசுரே போனாலும் போனதுதாம். தப்பிப் பொழைக்கிறது தம்பிராம் புண்ணியம். ஒஞ்ஞ மின்னவங்க, நீஞ்ஞ செஞ்ச புண்ணியம்"ங்றாரு தேசிகரு.
            இதென்னடா மவனுக்குக் கல்யாணத்தெ பண்ணிப் பாக்கலாம்னு சாதகத்தெ கொடுத்தா பொண்ணுக்கு உள்ள மாரில்லா சாதகத்‍தெ சொல்றாரு தேசிகருன்னு நீங்ஞ நெனைச்சா அது சரித்தாம். ஏன்னா சுப்பு வாத்தியாரு மவனோட சாதகத்தெ எடுத்துக் கொடுக்கல மொதல்ல. பொண்ணோட சாதகத்தெத்தாம் எடுத்து வைக்கிறாரு மொதல்ல. "படிப்ப பத்தி..."ன்னு இழுக்குறாரு சுப்பு வாத்தியாரு. "படிக்கும் படிக்கும் படிச்சிக்கிட்டே இருக்கும்."ன்னு சொல்லிட்டு அத்தோட நிறுத்திக்கிறாரு. அப்பிடி நிறுத்துனா பணத்தெ எடுத்து வெச்சிட்டு வெளியில கெளம்பிப் போங்கன்னு அர்த்தெம். சுப்பு வாத்தியாரு சட்டைப் பையில கைய விட்டு பணத்தெ எடுக்குறதுக்குப் பதிலா மஞ்சைப் பையில கைய விட்டு இப்பத்தாம் மவனோட சாதக்தெ எடுத்து நீட்டுறாரு.
            தேசிகரு கேக்க வேண்டிய கேள்விகள கேட்டுப்புட்டு, ரண்டு நிமிஷத்துல கட்டத்தெ போட்டு, "ரண்டு வருஷத்துக்கு மின்னாடிலேந்து தெச இருக்கு. சட்டுப்புட்டுன்னு ஆயிடும். பொண்ணு வடமேற்கோ, தென்மேற்கோ இருக்கு. கிழக்க தலெ வெச்சுப் படுக்க வாணாம்."ங்றாரு. "வேற பயலப் பத்தி..."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "முப்பது வயசுக்கு மேல ஞானியப் போல ஆயிடுவாம். பொட்ட புள்ளத்தாம் பொறக்கணும். ஆம்பள புள்ள இந்தப் பயலுக்குப் பொறக்கக் கூடாது. அப்பிடி பொறந்துச்சுன்னா மவனுக்கு அப்பன் கொள்ளி வைக்குறாப்புல ஆயிடும். புரியுதுல்லா? அல்பாயிசுல செத்துப் போயிடும் அந்த ஆம்பளப் புள்ளெ."ங்றாரு தேசிகரு. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போடுது. "அப்போ பேரப் பய நமக்கு?"ங்றாரு சுப்பு வாத்தியாரு. "பேத்தித்தாம் ஒமக்கு நல்லது. அப்பனும், தாத்தனும் இருக்குறப்ப பய செத்தா நல்லாவா இருக்கும்?"ங்றாரு தேசிகரு. தெகைச்சிப் போயி உக்காந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. "இந்த ஆளுகிட்டப் போயி ஏம் மொதல்ல சாதகத்தெ எடுத்து வந்து காட்டுணோம்"ன்னு மனசுல நெனைச்சிக்கிறாரு சுப்பு வாத்தியாரு. அவரு மனசுல நெனைச்சதெ பிடிச்சிட்டது போல தேசிகரு பேசுறாரு, "இன்னும் கல்யாணமே மவனுக்கு ஆவல. அதுக்குல்லா ஸ்கேன் எடுத்த மாதிரிக்கி ன்னா புள்ளே பொறக்கும்னே சொல்றேம்னு நெனைக்குதீயளோ? அத்தாம் நடக்கும். கட்டம் மாறாதுலே. மொத சாதகத்துக்கு ஒரு நூத்து, ரண்டாவது சாதகத்துக்கு ஒரு நூத்து. எரநூத்த எடுத்து வெச்சா வெளியில நெறையப் பேரு இருக்காக. அவுகளயும் காக்க வைக்காம அனுப்புறதுக்கு நல்லாருக்கும்!"ங்றாரு தேசிகரு. சுப்பு வாத்தியாரு சட்டைப் பையில கைய விட்டு ரண்டு நூத்து ரூவாயி நோட்டா எரநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்துட்டு, சாதக நோட்டு எடுத்து மஞ்சப் பையில வெச்சிக்கிட்டு வெளியில வந்து டிவியெஸ்ஸ கெளப்புறாரு.
*****


No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...