5 Mar 2020

தாய்மாமனில்லாம கெளம்புது வண்டி!

செய்யு - 378

            போனை எடுக்காட்டி என்னா... நேர்ல போயே கூப்புட்டுட்டு வந்துடுவோம்ன்னு சுப்பு வாத்தியாரு, வேனை நிப்பாட்டிட்டு எறங்கி குமரு மாமாவ கூப்புடப் போறாரு.
            "யாரும் வேன வுட்டு எறங்கிப் போயிட வாணாம். நேரம் ஆயிட்டு இருக்கு. ஆர்குடிக்குப் போயி ஒண்ணா சாப்புடுறதெல்லாம் சாப்புட்டுக்கிடலாம்."ன்னு சொல்லிப்புட்டு விடுவிடுன்னு நடந்துப் போறாரு.
            குமரு மாமா வூடு உள்ளார பூட்டிக் கெடக்குது. "யம்பீ! யம்பீ!"ன்னு கொரலக் கொடுத்துப் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. யாரும் வந்து தெறக்குறாப்புல தெரியல. அழைப்பு மணி‍யையும் அழுத்திப் பாக்குறாரு. அதுவும் கத்த மாட்டேங்குது. அவரு அழுத்துற அழுத்தத்துக்கே அது கதறி அழுவணும். ம்ஹூம் செத்த சவமாட்டம் இருக்குது அந்த அழைப்பு மணி. இவரு மறுக்கா மறுக்கா கத்திப் பாக்குறாரு. ஒண்ணும் பதிலு வர்றாப்புல தெரியல. ஞாயித்துக் கெழமையா இருக்குறதால, எழுந்திரிக்கக் கொள்ள நேரமாவுமோன்னு வேற யோசனெ போவுது சுப்பு வாத்தியாருக்கு. அப்பிடியிருந்தா இந்நேரத்துக்கு எழும்பி, எப்ப கெளம்பி வேனுக்கு வர்றதுன்னு தெகைப்பா இருக்கு அவருக்கு. செரி, அப்பிடியிருந்தாலும் பரவாயில்ல, வெளியில வந்து கேட்டைத் தெறந்து ஒரு சேதியச் சொன்னா கூட போதுமேன்னு நெனைக்குறாரு. வூட்டுக்குள்ள சனங்க இருக்குறதுக்கான அறிகுறியே தெரியாத மாதிரிக்கி நிசப்தத்துல மயங்கிக் கெடக்குது வூடு.
            தூங்குறவனெ கூட எழுப்பிப்புடலாம், தூங்குற மாதிரிக்கி நடிக்கிறவென எழுப்ப முடியாதுன்னு சொல்லுவாங்களே! அப்பிடி அந்தக் கணக்குக்கு உள்ளார வூட்டுக்குள்ள நெசமாத்தாம் தூங்கிட்டுக் கெடக்கறாங்களா? யில்லே, தூங்குற மாதிரிக்கி நடிச்சிக்கிட்டுக் கெடக்குறாங்களா? ஒண்ணும் புரியல சுப்பு வாத்தியாருக்கு. இப்போ என்ன முடிவெடுக்குறதுன்னு தடுமாற்றமா இருக்கு. இருந்தாலும் திரும்ப திரும்ப கத்திக்கிட்டு இருக்காரு, "யம்பீ! வேனு வந்து பட்டறெ வாசல்ல கெடக்குது. கெளம்பி வந்தவங்க எல்லாரும் காத்துகிட்டு கெடக்குறாங்க. வூட்டுல யாரும் இருக்கீங்களா? இல்லியா?"ன்னு காட்டுக் கத்தலா கத்துறாரு. கடெசி முயற்சியா கேட்டுக் கதவையும் தடதடன்னு ஆட்டிப் பாக்குறாரு. சத்தம் படார் படார் தடார் தடார்ன்னு கேக்குது. எதுக்கும் எதுவும் நடக்குறாப்புல தெரியல.
            அக்கம் பக்கத்துல பாத்துட்டுப் போறவங்களும் அவங்க பாட்டுக்குப் பேறாங்களே தவுர யாரும் வந்து ஒத்தாசைக்குக் கூட ஒத்தெ வார்த்தை கேக்குறாப்புல தெரியல. இப்பிடி ஒரு நாளைக்கி நாலு மனுஷங்க வந்து குமரு மாமா வூட்டுக்கு மின்னாடி நின்னு சத்தம் போடுறதும், எவ்வளவு சத்தம் போட்டும் கேட்டு பூட்டியே கெடக்கறதும் அவுங்களுக்குப் பாத்துப் பாத்துச் சலிச்சிப் போயிடுச்சு. சரித்தாம் குமரு வூடுன்னா இப்பிடித்தாம்ன்னு அவுங்களுக்கு ஒரு மனநிலைக்கு வந்து வருஷக் கணக்குல ஆயிடுச்சு.
            சுப்பு வாத்தியாரு வந்து கத்தி கத்தி பத்து நிமிஷத்துக்கு மேல ஆவப் போவுது. வேனு ஓடிக்கிட்டுக் கெடந்தா சனங்க ஒண்ணுஞ் சொல்லாம, எதாச்சிம் பேசிக்கிட்டோ, வேனுல போடுற பாட்டெ கேட்டுக்கிட்டோ போவுமுங்க. நிக்குற வேனுல புழுக்கத்துல சனங்க எம்மாம் நேரம் உக்காந்திருக்குமுங்க. அதது பாட்டுக்கு ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சிட்டு வாரேம், கொஞ்சம் ஒண்ணுக்கு அடிச்சிட்டு வர்றேம், ஒரு பீடிய வலிச்சிட்டு வர்றேம்ன்னு ஆளாளுக்கு ஒரு காரணத்தெ சொல்லிட்டு அதது தெசைக்குப் போறதுலல்ல நிக்குமுங்க. அப்பிடிப் போனதுகள வேனைக் கெளப்புறதுக்கு மின்னாடி அங்கங்க  அலைஞ்சித் திரிஞ்சித்தாம் கொண்டாரணும். அது ஒரு பெரிய சொலியா வேற போயிடும். அழைச்சிட்டு வந்துப்புட்டு யாரையும் வுட்டுப்புட்டு போவ முடியாதுல்ல.
            நேரம் ஆவ ஆவ விகடுவெ கெளம்பி வேனுலேந்து எழுந்திரிச்சி, "நானும் போயி வேணும்னா மாமாவையும், மாமியையும் அழைச்சிட்டு வாராட்டுமா?"ங்றாம்.
            "நீயி என்னத்தாடா பெரிய மனுஷனாட்டம்? அதாங் அப்பாரு போயிருக்குல்ல. அவரு போயி அழைச்சிட்டு வந்துப்புடுவாரு. கொஞ்சம் முன்ன பின்னத்தாம் ஆவும். பொண்ணு பாக்க வர்ற பயெ அங்கயிங்க போயிட்டு இருக்கப்படாது!"ங்குது வெங்கு. எழும்ப நெனைச்ச விகடு அப்படியே உக்காந்துட்டாம்.
            சின்ன மாமாவான வீயெம் மாமாத்தாம் இப்போ எழுந்திரிச்சி, "நாம்ம வேணுன்னா போயி பாத்து கெளப்பிட்டு வர்றேம். அத்தாங் இப்பிடித்தாம் மச மசன்னு எஞ்ஞ போனாலும் நைய நைய்யான்னு பேசிக்கிட்டு, போனாமோ காரியத்தெ முடிச்சோமான்னு திரும்ப மாட்டாரு. நாம்ம போயி வெரசா கொண்டார்ரேம் பாரு!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புது.
            "நீஞ்ஞ சித்தே ச்சும்மா உக்காருங்க. அதாங் போயிருக்காங்களே. அழைச்சிட்டு வாரட்டும். நம்மள மதிக்காதவங்க வூட்டுக்கு நாம்ம போயி நிக்கக் கூடாது. அவுங்க வந்தா வாராங்க, வாராம போனாக்காப் போறாங்க! ஒங்களுக்கென்ன?" அப்பிடிங்கிது கோகிலா மாமி.

            "ச்சே! ச்சும்மா கெடடி! பேசுறா பாரு பேச்சு!" அப்பிடின்னு சொல்லிட்டு வீயெம் மாமா ஒரு முறைப்பைக் காட்டிப்புட்டு, வேனிலேந்து கதவைத் தொறந்துகிட்டு போவுது. அது பொன்னியம்மன் கோயிலைக் கடந்து திரும்பி பாதி தூரம் போனாக்கா, சுப்பு வாத்தியாரு வெறுங்கையி, வீசுனா கையா எதிருல்ல வர்றாரு.
            "ன்னத்தாம்! எஞ்ஞ பெரியவேம்?" அப்பிடிங்கிது வீயெம் மாமா.
            "நாம்ம கூப்புட்டுட்டுப் பாத்திட்டேம் யம்பீ! வூட்டுல யாரும் இருக்குறாங்களா? இல்லையான்னே தெரியல. உள்ளாக்கப் பூட்டிக் கெடக்கு. ஒரு வேள தம்பி மட்டும் எதாச்சியும் வெளியில விஷேசத்துக்குப் போயிருக்குமோ என்னவோ? வூட்டுக்குள்ள மேகலா மட்டும் இருக்குமோ என்னவோ! அப்பிடி இருந்தாலும் கதவெ தொறந்துகிட்டு வெளியில வந்து சங்கதி என்னான்னாவது சொல்லலாமில்ல. அதுவுஞ் சொல்லுறாப்புல தெரியல. எம்மாம் நேரம்தாங் வூட்டுக்கு மின்னாடி சத்தம் போட்டுக்கிட்டுக் கெடக்குறது? தெருவுல போறவங்க வர்றவங்க எல்லாம் ஒரு மாதிரியா பாக்குறாங்க. அதாங் அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாம திரும்பிட்டேம். நாம்ம இதுக்கு மேல ன்னா பண்றது யம்பீ!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞ போங்கத்தாம். போயி வேனுல உக்காருங்கத்தாம். அவனெ எப்டிக் கூப்புடறதுன்னு நமக்குத் தெரியும். மொதல்லயே நாம்ம கெளம்பி வந்திருக்கணும். அதாங் தப்பா போச்சுது. அவ்வேம் வூட்டுக்குள்ளத்தாம் இருப்பாம். இந்த மாதிரிக்கித்தாம் அவ்வேம் பல பேருகிட்டே செஞ்சிக்கிட்டுக் கெடக்குறாம் கிறுக்கப் பயெ!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு வேக வேகமாகப் போவுது வீயெம் மாமா. அது போற வேகத்துக்கு எப்பிடியும் குமரு மாமாவ அடிச்சிப் போட்டாவது தோளுல்ல வெச்சுத் தூக்கிட்டு வந்துடும்ங்ற மாதிரிக்கித் தெரியுது. மொதல்ல சோர்ந்து வந்த சுப்பு வாத்தியாரு இப்போ கொஞ்சம் தெம்பா  இருக்கறாப்புல நடந்துப் போறாரு.
            சுப்பு வாத்தியாரு வேனுல போயி கொஞ்ச நிமிஷத்துலயே வீயெம் மாமாவும் ஒத்தையா வந்து வேகமா வேனுல ஏறுது. "எங்கம்பீ! பெரியம்பீ?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அவ்வேம் வர மாட்டாம் அத்தாம். பயெ வூட்டுக்குள்ளத்தாம் இருக்காம். நாமளும் சத்தம் போட்டுப் பாத்துட்டேம். கேவலமா பேசியும் பாத்துட்டேம். சொரணெ கெட்ட பயெ. பொண்டாட்டி மேல வுழுந்து நேரங் கெட்ட நேரத்துல பொரண்டுட்டுக் கெடப்பாம். ச்சைய் மனுஷனா அவ்வேம்? எல்லாத்தியும் கேட்டுக்கிட்டு வூட்டுக்குள்ள படுத்துக்கிட்டு இருக்கானே தவுர வெளியில வந்து ஏன்னு என்னான்னு ஒரு வார்த்தெய வுட மாட்டேங்றாம். அவ்வேம் இப்பிடித்தாம் அத்தாம். அவனுக்கு ஒரு பொண்ணெ வேற பாத்துக் கட்டி வெச்சீங்க பாருங்க. அதெச் சொல்லணும். என்னவோ பெரிய ரதியெ கட்டி வெச்ச மாதிரிக்கி அவனுக்கு ஒரு நெனைப்பு. அத்து என்னவோ அதுக்கு ஒண்ணுமில்லாத பயலுக்குக் கழுத்தெ நீட்டுனது போல ஒரு கெராக்கியப் பண்ணிக்கிட்டு வலிப்பு வலிச்சிக்கிட்டு நிக்குது. அவ்வேம் அடிக்கடி வூட்டுக்குள்ள வந்துப் பண்ணிட்டுக் கெடக்குற காரியத்தெ கேள்விப்பட்டு ஊரே நாறிக் கெடக்குதுத்தாம்!"ன்னு சலிச்சிக்கிட்டே அதுவும் வேனுல ஏறி உக்காருது.
            "யிப்போ! என்னாம்பீ பண்றது?" அப்பிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "சீப்பே ஒளிச்சி வெச்சிட்டா, அய்யர்ர மறைச்சி வெச்சிட்டா அதுக்காக கலியாணமா நின்னுடப் போவுது? அவ்வேம் கெடக்குறாங் வுடுங்க. அவனும் தாய் மாமம்தாம், நாமளும் தாய் மாமம்தானே பயலுக்கு. பாத்துக்கிடலாம் வாங்க." அப்பிடிங்கிது வீயெம் மாமா.
            "நீஞ்ஞ ன்னா சொல்ல வர்றீங்கன்னு புரியலீயே யம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யெப்பாடி டிரைவரு! நீரு வண்டிய எடுப்பா! இஞ்ஞ காத்துக் கெடக்குறதுல்ல புண்ணியங் இல்லீ! இதெ அத்தாம்கிட்ட சொல்லி நாம்ம புரிய வைக்குறதுக்குள்ளு கலியாணம் ஆயி பேரப் புள்ளையே பொறந்துடும்!"ங்குது வீயெம் மாமா.
            "பெரியம்பீ யில்லாமலயே கெளப்பிறார்லாங்றீங்ளா?"ங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நேரமாவுது அத்தாம்! சோலி முடிஞ்சா அவுங்கவுங்களும் திரும்ப வந்து அவுங்கவுங்க வேலயப் பாத்துட்டுக் கெடப்பாய்ங்க பாருங்க. அவுங்கள வேற புடிச்சிப் அடைச்சிப் போட்டுக்கிட்டு ஏம் அழகு பாத்துக்கிட்டு? இப்பிடி நடக்குறதெல்லாம் பொண்ணு பாக்கப் போறப்போ, மாப்புள்ள பாக்கப் போறப்ப சகஜம். அதெல்லாம் ஒண்ணுஞ் சொல்லி, எதுவும் பண்ணித் தடுக்க முடியா. அவனெ வூட்டுலேந்து கெளப்புணம்னு நெனைச்சா நாம்ம இன்னிக்கு பொண்ண பாக்க முடியா. இன்னும் ஒரு பத்து நாளு ஆவும். பழக்க வழக்கமெல்லாம் அவனுக்குப் பத்தாது அத்தாம். காசி இருந்துட்டா போதும், எதெ வேணும்னாலும் பண்ணலாம்ன்னு நெனைக்கிற பயெ அத்தாம் அவ்வேன்! இன்னிக்கு ஒரு நாளு பொண்ணு பாக்க வந்துப்புட்டா, ஒரு நாளு வேலெ, அந்த வேலையால போற சம்பளம்னு கணக்குப் போட்டுப் பாக்குற பயெ அத்தாம் அவ்வேம்! இன்னிக்கு ஒரு நாளு கொல்லம்பட்டியில மரம் பாப்பேம்ன்னு சொன்னாக்கா கெளம்பி வருவாம். அத்தாம் மவனுக்கு மருமவனுக்குப் பொண்ண பாக்கணும்னு சொன்னாக்கா நமக்கு வேற வேல சோலி இல்லியான்னு நெனைப்பாம் அத்தாம் அவ்வேம்!" அப்பிடிங்கிது வீயெம் மாமா.
            "போறது போறேம். ஒத்தப் படையில போறப்பத்தாம் எண்ணிக்கெ கணக்குல்லாம். ரெட்டப் படையில எண்ணிக்கெ வந்திடுச்சின்னா எந்தக் கணக்கும் யில்ல. அப்பிடி கணக்கு இடிக்குதுன்னா டிரைவரு யம்பீய ஒரு கணக்கா வெச்சிப்பேம். சரியா வந்துடுமில்லா!"ங்குது ரசா அத்தை.
            "அவ்வளவுதாங்‍ பேசிட்டே நிக்குறதுல பிரயோசனமில்லே. வண்டிப் போயிட்டே இருக்கட்டும், நாம்ம பேசிட்டே போவலாம்!"ங்குது வீயெம் மாமா.
            "ஆமாம்பீ! போதும்பீ! சேட்ட மூட்டெ செவ்வாய் கெழமையல்லாம் தூக்கி வண்டியில போட்டுட்டு போவுறாப்புல ஆயிடப் போவுது. இப்போ இருக்குற சனங்களே போதும். கெளம்புவோம் யம்பீ!" அப்பிடிங்கிறாரு இப்போ வேலங்குடி சின்னவரு. வேனுல இருக்குற ஆளாளுக்குக் குமரு மாமாவ திட்ட ஆரம்பிக்கிறாங்க இப்போ. "இப்பிடியும் ஒரு மனுஷம் இருப்பானா?"ங்குது முருகுவோட அம்மா.
            "செரி! இத்து இப்பிடித்தாம் நடக்கணும்னு இருந்தா அதெ யாரு வந்து என்னத்தெ மாத்துறது?"ங்றாரு சுப்பு வாத்தியாரு. இருந்தாலும் அவரு மனசுக்குள்ள குமரு மாமா ஏம் இப்பிடிப் பண்ணுதுன்னு ஒரே கொழப்பமா இருக்குது. மலையேறணும்னாலும் மச்சான் தயவு வேணும்பாங்க. இங்க மச்சாம் தயவு வேணும்னா மலையே கொண்டு வாரணும் போலருக்கு. 
            இப்போத்தாம் வேன் கொல்லம்பட்டிய நோக்கி குமரு மாமாவோட பட்டறையிலேந்து கெளம்ப ஆரம்பிக்கிது குமரு மாமா மட்டும் இல்லாம.
*****


4 Mar 2020

யார்ர கேட்டுப் பொண்ண பாத்தீங்க?

செய்யு - 377

            மவனுக்குப் பாத்துருக்குற பொண்ண அவனெ அழைச்சிட்டுக் கொண்டு போயி காட்டிட்டா தேவலாம்னு நினைக்குறாரு சுப்பு வாத்தியாரு. அப்படிப் பாக்கப் போறப்ப பெரும்பிடியா சொந்தப் பந்தத்த கொண்டுட்டுப் போவாட்டியும் நெருக்கமான சொந்த பந்தங்களையாவது அழைச்சிட்டுப் போவணுமேன்னு ஒரு யோசனெ ஓடுது அவருக்கு. எப்பிடியிருந்தாலும் தாய் மாமன்கள அழைச்சிட்டுப் போயி ஆவணும். தன்னோட சொந்தத்துலயும் யாரையாச்சியும் அழைச்சிட்டுப் போவணும். இப்படிப் போறப்ப வேனைப் பிடிச்சிட்டு அதுக்கு ஏத்தாப்புல ஆட்களைப் பிடிக்கிறதும் உண்டு. ஆட்களைப் பிடிச்சிட்டு அதுக்கு ஏத்தாப்புல வேன்களைப் பிடிக்கிறதும் உண்டு. சுப்பு வாத்தியாரு ஒரு வேன் கொள்ளுறாப்புல ஆட்கள் இருந்தாப் போதும்னு ஒரு முடிவுக்கு வர்றாரு.
            தாய்மாமனுங்க குடும்பம் ரெண்டு, தன்னோட குடும்பத்துல நாலு டிக்கெட்டு, இப்போ நெருக்கமா இருக்குற வேலங்குடி ரசா அத்தைக் குடும்பத்துல அத்தையும் மாமாவும், விகடுவோட சோக்காளிகளா இந்தத் தெருவுல இருக்குற முருகுவும், முருகுவோட அப்பாவும், அம்மாவும், பெறவு சின்னுவோட அம்மா, மன்னு வூட்டுலேந்து ஒருத்தரு, பரமுவோட வூட்டுலேந்து ஒருத்தருன்னு பதினாறு பேர்ர அழைச்சிட்டுப் போவலாமுன்னு ஒரு திட்டத்தெ உண்டு பண்ணிக்கிறாரு.
            தாய்மாமனுங்கள மூத்தவரு குமரு மாமா. அவர்ர வூட்டுல போயிப் பாக்குறதா, பட்டறையில போயிப் பாக்குறதான்னு மொதக் கொழப்பம் வருது சுப்பு வாத்தியாருக்கு. வூட்டுலப் போயி பாத்தாக்கா, அங்கல்லாம் ஏம் வந்தீங்கன்னு கேக்க கூடிய ஆளு அவரு. சரின்னு பட்டறையில பாத்தா, இதெல்லாங் பட்டறையில வெச்சிப் பேசுற விசயமான்னு கேட்டு மூக்கெ ஒடைக்கிற ஆளு அவரு. தன்னோட வூட்டுல மொத கல்யாணத் தேவைக்கு அச்சாரமான காரியத்துக்குப் போயிப் பட்டறையிலயா சேதியச் சொல்லுவாங்கன்னு நெனைச்சிக்கிட்டு, என்னா ஆனாலும் பரவாயில்லன்னு சுப்பு வாத்தியாரு, பாஞ்சாலம்மன் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கற வூட்டுலயே போயிச் சொல்லிப்புடலாம்னு போனாக்கா, வூட்டுக்கு முன்னாடி கேட்டு, கேட்டுக்கு பின்னாடி உள்ளாக்கப் பூட்டு மாட்டித் தொங்குது.
            வெளியில இருக்குற காலிங் பெல்லை அடிச்சா, அதுவும் சத்தம் போட்டுக் கூப்புட மாட்டேங்குது, வெளியில நின்னுகிட்டு சத்தத்தெ கொடுத்தா அதுவும் உள்ளார போயிச் சேர மாட்டேங்குது. வேற வழியில்லாம சுப்பு வாத்தியாரு கிரில் கேட்டப் பிடிச்சி தட தடன்னு ஆட்டுறாரு. அப்பத்தாம் வீடே ஆடுற மாரில்லா சத்தம் கேக்குதுன்னு வூட்டுக்குள்ளேயிருந்து குமரு மாமா கட்டுன வேட்டியோட, மேல ஒரு துண்டெ தூக்கிப் போட்டுக்கிட்டு, கதவெ தொறந்துகிட்டு வெளியில வருது. வெளியில அத்தாங்காரர்ரு நிக்குறதெ பாத்ததும் காணாததெ கண்டது போல அதோட மொகத்துல ஆச்சரியமும், அதிர்ச்சியுமா ஒரு உணர்ச்சி உண்டாவுது. அதுக்குள்ள சட்டுன்னு சுதாரிச்சாப்புல மொகம் மாறுது.
            "வாங்கத்தாம்! வாங்கத்தாம்!"ன்னு சொல்லிகிட்டே கிரில் கேட்டுக்கு உள்ளாரப் போட்டுருக்கிற பூட்டைத் தொறந்துகிட்டு கூப்புடுது. உள்ள வந்த சுப்பு வாத்தியார்ர அழைச்சிட்டுப் போயி ஹால்ல இருக்குற சோபாவுல உக்கார வைக்குது. உக்கார வெச்சிக்கிட்டு உள்ளார கொரலக் கொடுக்குது. "மேகலா! அத்தாம் வந்திருக்காக! டீத்தண்ணியப் போட்டுக் கொண்டுட்டு வாவே!"ங்குது. மேகலா மாமி மொகத்தெ ஒரு சுளிப்பு சுழிச்சிக்கிட்டு, ஏம்டா இங்கெல்லாம் வந்தேங்ற மாதிரிக்கி, "வாஞ்ஞ! வாஞ்ஞ!"ங்குது. அப்பிடிச் சொல்லிப்புட்டு அது பாட்டுக்கு அப்படியே சமையலுகட்டுப் பக்கமே திரும்பிப் போயிடுச்சி.
            "கொல்லப் பக்கம் கொஞ்சம் வேலத்தாம்! இந்தக் காலத்துல யார நம்பி கதவத் தொறந்துப் போட முடியுதுங்றீங்க? அத்தாங் அத்தாம் வூட்டுக்கு உள்ளார இருந்தா உள்ளாக்கா பூட்டெ போட்டுக்கிறது. வெளியில போனாக்கா வெளியில பூட்டெ போட்டுக்கிறது. காலங் கெட்டுப் போயிக் கெடக்கிது அத்தாங்க. ஒருத்தரையும் நம்ப முடியலெ. எவ்வேம் வூட்டுல பூந்து எதெ தூக்குவாம்னு தெர்யல! சொல்லுங்கத்தாம்! ஏத்தோ வெசயமாத்தாம் வந்திருக்கீங்கன்னுப் புரியுது!" அப்பிடிங்கிது குமரு மாமா.
            "அத்து வந்து ன்னான்னா... மவனுக்குப் பொண்ணு பாத்திருக்கு. ஒரு நல்ல நாளா பாத்து ஒங்கள எல்லாத்தியும் அழைச்சிட்டுப் ‍போயி பாத்துட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேம். அதாங்."றாரு சுப்பு வாத்தியாரு.
            "யார்ர கேட்டுட்டுப் போண்ண பாத்தீங்க?"ன்னு குமரு மாமா கேட்க, சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போடுது, ன்னாடா இத்து ஆரம்பமே இப்பிடி தடாலடியா இருக்குன்னு.
            "இல்லம்பீ! மவனுக்கும் வயசு ஆயிட்டுப் போவுது! அததெ காலா காலத்துல முடிச்சாத்தாம்னே ந்நல்லா யிருக்கும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கில்லத்தாம்! நாம்ம ஒருத்தேம் இஞ்ஞ அக்கா மவனுக்காக பொண்ணு பாக்கணும்னு நம்ம சேக்காளி மாணிக்கவிநாயகத்தையும், நம்ம கூட்டாளி அழகிரிசாமியையும் வெச்சுக்கிட்டு சல்லடை போட்டுச் சலிச்சிக்கிட்டு இருக்கேம். இப்பிடி திடுதிப்புன்னு வந்து உக்காந்துட்டுப் பொண்ண பாத்துட்டேம் அது இதுன்னா எப்பிடி?"ங்குது குமரு மாமா.

            "யம்பீ! பொண்ண பாக்கத்தாம் போறேம். பாத்துப் புடிச்சாத்தாம் மத்தது எல்லாம். காரியத்தெ முடிச்சிட்டு வந்து நாம்ம சொல்லல. நாம்மப் போயிப் பாத்த பிற்பாடுதாம் காரியமெ."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "கல்யாண காரியெம் அத்தாம். அவசரப்பட்டு எறங்கிப்புட கூடாது. செரி பரவாயில்லெ. ஆனது ஆயிப் போச்சு. பொண்ணு எந்தப் பக்கம்?"ங்குது குமரு மாமா.
            "தஞ்சாரூ ஜில்லா, ஒரத்தநாடு பக்கம், கொல்லம்பட்டி!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் இஞ்ஞ அக்கம் பக்கத்துல பொண்ணு இல்லன்னா அஞ்ஞ போயி பிடிச்சிருக்கீங்க? சரியான ஆளு அத்தாம் நீங்க புத்திக் கெட்ட தனமா! அந்தப் பக்கமுல்லாம் போயி பொண்ணு பாக்கக் கூடாது. நாம்ம அஞ்ஞல்லாம் வேல பாத்த ஆளு. ஒரத்தநாடு பீயெட்டு காலேஜூ யாரு வேல? தெர்யும்ல!" அப்பிடிங்கிது குமரு மாமா.
            "இல்லம்பீ! நாட்டியத்தாங்குடி சோசியரும் செரி, கொத்தூருகாரரும் செரி அஞ்ஞத்தாம் அமையும்னு தெச பாத்துச் சொன்னாக. அதாங்."றாரு சுப்பு வாத்தியாரு. அவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்குறதுக்குள்ள மேகலா மாமி ஒரு தட்டுல ரண்டு சின்ன தம்பளரா வெச்சி அதுல டீத்தண்ணிய கலந்து கொண்டாந்து டீப்பாயில வைக்குது.
            "சாப்புடுங்க அத்தாம்! பெறவு பேசுவோம்!"ங்குது குமரு மாமா. சுப்பு வாத்தியாரு அதுல ஒண்ண கையில எடுத்துக்கிறாரு. எடுத்துக்கிட்டு அதெ தூக்கி வாயில வைக்கிறாரு. வாயில வைக்க முடியாத அளவுக்கு அம்புட்டுக் கசப்பா இருக்கு. குமரு மாமா பேசுற கசப்புக்கு, டீத்தண்ணியோட கசப்பு பரவாயில்லன்னு மருந்தெ ஒரு மடக்குல முழுங்குற கணக்கா சுப்பு வாத்தியாரு டீத்தண்ணிய வாயில படாமா நேரடியா வயித்துக்குள்ள எறக்கிடுறாரு. இதெ வேற குடிக்காமப் போயி அது வேற குமரு மாமாவுக்குக் கோவத்தெ உண்டு பண்ணிடக் கூடாதுங்றதுக்குத்தாம் அதெ குடிச்சி வைக்கிறாரு.
            "செரி பாத்தது பாத்துப்புட்டீங்க! அதுவும்தாம் எப்பிடி இருக்குதுன்னு பாத்துப்புட்டு வந்துப்புடுவேம்! என்னிக்குன்னு சொல்லுங்க?"ங்குது குமரு மாமா.
            "வர்ற ஞாயித்துக் கெழம கூட நாளு நல்லாத்தாம் இருக்கு. ஒங்களுக்குத் தோதுபட்டா சொல்லுங்க அன்னிக்கே வேனெ தயாரு பண்ணிட்டுப் போயிட்டு வந்துப்புடலாம். நீஞ்ஞளும், பாப்பாவும் மவராசனும், மவராசியுமா வந்துட்டுப் போவணும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பொண்ண பாக்கத்தான போறேம்! அதுக்கு ஏம் அத்து? அதுக்கு வூட்டு வேல நெறயக் கெடக்கு. நாம்ம மட்டும் வர்றேம் அத்தாம். மொதல்ல பாத்துப்புட்டு வந்துப்புடுவேம். நீஞ்ஞ வெனை கெளப்பிக்கிட்டுப் பட்டறைக்கு வந்துப்புடுங்க. அஞ்ஞயிருந்து கெளம்பிப் போயிப் பாத்துப்புட்டு, பெறக்கா ஒரு முடிவு பண்ணிக்கிட்டு ஓலெ எழுதுறப்ப எல்லாத்தையும் கொண்டுட்டுப் போவேம்!"ங்குது குமரு மாமா.
            "அதுவுஞ் சரித்தாம்பீ!"ன்னு சொல்றதெ தவிர வேற ஒண்ணையும் சொல்ல முடியாம, மேக்கொண்டு என்ன பேசுறதுன்னு புரியாம, "பெறவு நாம்ம கெளம்புறேம்பீ!"ன்னு சொல்லிப்புட்டு அங்கேயிருந்து கெளம்பி பக்கத்துல இருக்குற ரெண்டாவது விகடுவோட ரெண்டாவது தாய்மாமானான வீயெம் மாமா வூட்டுக்குப் போனாக்கா அத்து இந்த மாரில்லாம் பேசல. "ந்நல்ல காரியம்த்தாம். வர்ற ஞாயித்துக் கெழமத்தான. நாம்ம அஞ்ஞ ஒஞ்ஞ வூட்டக்கே திட்டைக்கே வந்துப்புடுறோம்."ன்னு சொல்லுது வீயெம் மாமா. பரவாயில்ல ரண்டு ஆப்பையில ரண்டும் கெழண்ட ஆப்பையில்ல, ஒண்ணு நல்லாத்தாம் இருக்குன்னு கொஞ்சம் திருப்திபடுது சுப்பு வாத்தியாருக்கு.
            ஒரு வழியா யாரு யாருக்குச் சொல்லணும்னு நெனைச்சாரோ அத்தனெ பேருக்கும் சேதியச் சொல்லி முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. அதுல குமரு மாமாவெ தவித்து எல்லா சனமும் வூட்டுக்கே வந்துப்புடறதா சொல்லி ஞாயித்துக் கெழம காலங்காத்தாலேயே திட்டையில இருக்குற சுப்பு வாத்தியாரு வூட்டுக்குப் வந்துப்புட்டாங்க.  பொதுவா விஷேசங்கள ஞாயித்துக் கெழமையா பாத்து அமைச்சிக்கிறதுல்ல பல செளகரியங்க இருக்கத்தாம் செய்யுது. இங்க ஞாயித்துக் கெழமையா பாத்து பொண்ணு பாக்குற சங்கதியெ முடிவு பண்ணதுக்கு ஒரு காரணம் என்னான்னா, விகடு ஒத்த ஆளா கோட்டகம் பள்ளியோடத்துல வேல பாத்ததால, மித்த பள்ளியோடம் இருக்குற நாள்ல வெச்சா, ஒண்ணு பள்ளியோடத்துக்கு லீவு வுடுறாப்புல ஆயிடும், அப்பிடி இல்லன்னா ஏயிவோகிட்ட சொல்லி பதிலி வாத்தியார்ர வர்ற சொல்லி மனு போடுறாப்புல ஆயிடும்.
            கோட்டகம் பள்ளியோடத்துக்குப் பதிலி வாத்தியார்ர வர்றதுன்னா ச்சும்மாவா! மேடு, பள்ளம், ஆத்தெ கடந்துல்லா வந்தாவணும். ரோட்டப் பத்திச் சொல்ல வேண்டியதில்ல. ரோடுங்ற பேருக்கு அது இருக்கு அவ்வளவுதாங். மித்தபடி அத்து சேதாரப்பட்டு, சின்னாபின்னாபட்டுத்தாங் கெடக்குது கப்பி கெழண்டு போயி, மறெ கழண்டு போயி. அதால கோட்டகம் பள்ளியோடத்துக்குப் பதிலி வாத்தியார்ன்னாவே மித்த மித்த பள்ளியோடத்து வாத்தியாருங்க தெகைச்சிப் போயி, தெறிச்சிக் கலங்கிப் போயிடுவாங்க. அப்பிடி ஒரு செரமத்தெ, கலக்கத்தெ, தெகைப்ப யாருக்கும் கொடுத்துப்புடக் கூடாதேன்னும் ஞாயித்துக் கெழமையே தெர்வு பண்ணி பாக்க வேண்டியதாப் போச்சு. 
            இது மாதிரியான காரியங்கள்ல ஒண்ணு வேனு சரியான நேரத்துக்கு வந்தா, சனங்க வந்து சேர்ந்திருக்க மாட்டாங்க. சனங்க சரியான நேரத்துக்கு வந்தா வேனு சரியான நேரத்துக்கு வாராது. அப்பிடியில்லாம சனங்க முன்கூட்டியே வந்து, ஞாயித்துக் கெழமெ சொன்ன நேரத்துக்கு வேனும் வந்ததுல, அதுல எல்லாரையும் கெளப்பிக்கிட்டு எட்டு மணி வாக்குல குமரு மாமா பட்டறைக்குப் பக்கத்துல கொண்டு போயி நிறுத்திக்கிட்டு, குமரு மாமா வூட்டுக்குப் போனைப் போட்டாக்கா போன்ல ரிங்கு போயிட்டே இருக்குதே தவுர, யாரும் எடுக்குறாப்புல தெரியல.
*****


3 Mar 2020

காட்டுல, மேட்டுல, ஆத்துல வுழுந்து ஒரு சோதனெ!

செய்யு - 376

            மாப்புள்ள பையன் வாத்தியாரு வேலையில இருக்குறாம்னு கேள்விப்பட்டதுமே சாமிமலெ ஆச்சாரிக்கு எல்லாமும் பிடிச்சிப் போச்சு. கேக்குற நகையை, சீர் சனத்தியெ போட்டு கல்யாணத்தெ முடிச்சி வைக்கிறேம்ங்றாரு. பேச்சு கொஞ்சம் தெனாவெட்டான பேச்சாத்தாம் இருக்கு.
            "ஒஞ்ஞ பொண்ணு. ஒங்களால முடிஞ்சதெ செஞ்சிப் போட்டு அனுப்பி வெச்சா போதும். இத்து வேணும்னு, அத்து வேணும்னுலாம் கேக்க மாட்டேம்." அப்பிடின்னு வெங்கு சொன்னதுக்கு, "அப்பிடில்லாம் சொல்லப் படாது. என்ன வேணும்னு சொன்னாக்கா அதெ அப்பிடியே செய்வாம் இந்தச் சாமிமலெ ஆச்சாரி! சாதாரணமா நெனைச்சிப்புடாதீங்க சாமிமலெ ஆச்சாரிய. கொல்லம்பட்டியில வெசாரிச்சிப் பாத்தீங்கன்னா தெரியும்"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "அதெல்லாம் பெறவு. நீஞ்ஞளும் ஒரு தபா வந்து பையனெ பாத்துக்கிட்டீங்கன்னா, பையன ஒஞ்ஞளுக்குப் பிடிச்சிப் போச்சின்னா பையனெ அழைச்சாந்து காட்டி பொண்ணு பிடிச்சிருக்கான்னு கேட்டுப்புடலாம். நீஞ்ஞளும் பையனெ பிடிச்சிருக்கான்னு பொண்ணுகிட்டெ கேட்டுக்கிடலாம். நம்ம காலம் மாரி இல்லா இப்போ. புள்ளீக மனசுல ஆயிரத்தெ வெச்சிருக்குதுங்க. அதால அதுகளோட சம்மதமும் தேவைப்படுதுல்லா!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம நம்ம பொண்ண அப்பிடி வளக்கல. இதாங் பையம்னு காட்டுனா கட்டுற தாலிக்குக் கழுத்தெ நீட்டியாவணும். பின்னே கஷ்டப்பட்டு காசிய சேத்து நகை நெட்டு சீரு சனத்திய செஞ்சி கட்டி வைக்கப் போறவேம் நாம்ம. நாம்ம காட்டுற பையனெ கட்டிக்க தோது ல்லன்னா அதுகளா சம்பாதிச்சி காசிய சேத்துக்கிட்டு அதுக பிடிச்சப் பையனெ கட்டிக்கிடணும்லா!"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "இந்தக் காலத்து புள்ளீக. ரொம்பல்லாம் கட்டாயம் பண்ணக் கூடாது. பொண்ண பொருத்தமட்டுல எஞ்ஞளுக்குத் திருப்தி. மொதல்ல பாக்க வந்தது ஒஞ்ஞ பொண்ணுத்தாம். அதுவே திருப்தியா அமைஞ்சிப் போச்சிது. ஒஞ்ஞளுக்கு வந்துப் பாத்து திருப்தின்னா மேக்கொண்டு பாக்கலாம்!"ன்னு சொல்லிட்டு உக்காந்திருந்த பாயிலேந்துக் கெளம்ப எழுந்திரிக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "யாரும் எழுந்திரிக்கக் கூடாது. நம்ம வூட்டுல கைய நனைச்சிட்டுத்தாம் எழுந்திரிக்கணும். சுளுவா பலகாரத்தையும், டீத்தண்ணியையும் கொண்டாருங்க பொண்டுகளா!"ன்னு உள்ள சத்தத்தெ கொடுக்குறாரு.
            "சம்பந்தம் முழுசா முடியாம கை நனைக்கிறது நம்ம வகையறாவுல வழக்கத்துல கெடையாதுல்லா!"ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "அத்து வேற. சம்பந்தியா ஆவுறோம், ஆவல, அத்த வுட்டுத் தள்ளுங்க. நம்ம வூட்டுக்கு அவுக வந்திருக்காக. அவுக வூட்டுக்கு நாம்ம போவப் போறேம். வூட்டுக்கு வந்த விருந்தாளிய வெறு வாயோட அனுப்பிச்சிட முடியா. நீஞ்ஞ எஞ்ஞ வூட்டுக்குப் பொண்ணு பாக்க வந்ததாவே நெனைக்கல. விருந்தாடியத்தாம் நம்ம சொந்தக்கார சனம் வந்திருக்கிறதாவே நெனைக்கிறேம். சொந்தக்கார சனம் வர்றப்ப ச்சும்மா ஒண்ணும் பண்ணாம அனுப்பிட முடியுமா?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.        
            "நமக்கு ஒண்ணும் அட்டியில்ல. நீஞ்ஞ கொண்டாறதெ கொண்டாங்க. சாப்புட்டுட்டே கெளம்புறோம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. அப்பிடி பலவாரத்தையும், டீத்தண்ணியையும் சாப்பிட்டே கெளம்புறாங்க பொண்ண பாக்க வந்த மூணு பேரும்.
            கெளம்புறப்ப, "ஒரு வாரத்துல வந்துப் பாக்குறேம்!"ன்னு சொன்ன சாமிமலெ ஆச்சாரி, ஊர்லேந்து ஒரு ஆளையும் துணைக்குக் கெளப்பிக்கிட்டு ரண்டே நாள்ல விடியக் கருக்கால்லா திட்டையில டிவியெஸ் சாம்புல வந்து நிக்குறாரு. ரொம்ப தூரம் வாராதால என்னவோ ஒத்தக் கையில மட்டும் சட்டைய போடாம ரெண்டு கையிலயும் மொறையா போட்டிருக்காரு. அவரு வந்து நின்னப்பா நேரத்தப் பாத்தா ஆறு மணி கூட ஆவல. விடிஞ்சிம் விடியாம அவரு ஒரு ஆளோட வந்து நின்னதெ பாக்குறப்ப, இப்பிடியா ஒரு மனுஷன் அம்மாம் தூரத்துக்கு டிவியெஸ் சாம்புலயே, எப்பிடியும் அம்பது மைலுக்கு மேல இருக்கும் தூரத்தெ கடந்து வந்து, அதுவும் நடுராத்திரியில தூங்காம கொள்ளாம கெளம்பி வந்து நிப்பாம்னு மனசுக்குள்ள கேள்வி எழும்புது. அதெ அவரே வெளிப்படையா சொல்லவும் செஞ்சாரு.
            "நீஞ்ஞ வந்துப் பாத்துட்டுப் போன ரண்டு நாளா சரியான ராத்தூக்கமில்லெ. பையனெ வந்துப் பாத்துப்புட்டு ஒரு முடிவுக்கு வந்தாத்தாம் தூக்கம் வாரும் போலருக்கு. அதாங் கெளம்பி வந்துட்டேம். இத்து ஒண்ணுக்குக் கதெயெ கட்டி விட்டுப்புட்டேம்னா அடுத்தடுத்துக் கதையெ கட்டி வுட ஒரு வழி கெடைக்குது பாருங்க. குடும்பத்துல மூத்ததுக்கு எல்லாம் ஆயிட்டுன்னா மித்ததுக்கு எல்லாம் ஆயிடும்பாங்க. பையெம் எழுந்திரிச்சிட்டாப்புலயா? இந்தக் காலத்துப் புள்ளீவோ காலையில சட்டுன்னு எழுந்திரிக்காதுல்லா!"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            அவர்ர வாங்க வாங்கன்னு கூப்புடுறதுக்குள்ள இவ்வளவையும் படபடன்னு பேசி முடிக்கிறாரு. அவர்ர வூட்டுக்குள்ள கொண்டாந்து உக்கார வெச்சி, "அவ்வேம் நாலு மணிக்குல்லாம் எழுந்திரிக்கிற கேஸூங்க. எழுந்திரிச்சி அவ்வேம் வேலைகளப் பாத்துப்புட்டு, தெடலு பக்கம் ஒரு நடை நடந்துட்டுத்தாம் ஏழு ஏழரை மணி வாக்குல வருவாம். வந்தாம்ன்னா குளிச்சிட்டுச் சாப்பிட்டுட்டு எட்டரைக்கெல்லாம் கெளம்பிடுவாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு. வந்த ஒடனேயே பாத்துட்டுப் பேசிட்டுக் கெளம்பிடலாம்னு நெனைச்ச சாமிமலெ ஆச்சாரிக்கு அப்பிடி முடியாமப் போயிடுச்சி. அவரு விகடு வர்ற வரைக்கும் உக்காந்து பாக்குறாப்புல ஆயிடுச்சு. அப்படி உக்காந்து பேசுறுப்ப பல சங்கதிகள பேசுறாரு. பேசிக்கிட்டெ, "பையெம் பள்ளியோடத்துக்குப் போறதுல்லாம் பைக்குலத்தாம்னே?"ங்றாரு.
            "யில்ல சைக்கிளு. அவனுக்கு பைக்குல்லாம் வுடத் தெரியாது!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்லப் போவ, சாமிமலெ ஆச்சாரிக்கு சந்தேகமாப் போயி, போறி தட்டிடுச்சிப் போலருக்கு. "இந்தக் காலத்துல எவ்வம்டா வாத்தியாரு பைக்கு இல்லாம இருக்காம்? பைக்குல போனாத்தாம்லா கவர்மெண்டு வாத்தியாரு. ஒரு வேள இவுங்க கவர்மெண்டு வாத்தியாருன்னு பொய் சொல்லி பையனெ எம்மட பொண்ணுக்குக் கட்டி வைக்கப் பாக்குறாங்களா? இதெ மொதல்ல கண்டுபிடிச்சி ஆவணுமே!"ன்னு மனசுக்குள்ளயே நெனைச்சிட்டு இருந்திருப்பாரு போல.
            அவரு அப்பிடி நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்பவே ஏழு மணி வாக்குல தெடலுக்குப் போயிட்டு நடந்துட்டு வந்த விகடு வர்றாம். சாமிமலெ ஆச்சாரி விகடு வந்துதும் பாக்குறாரு. இவனும் அவர்ர பாத்துப்புட்டு ஒரு கும்புடு போட்டாம். அவ்வளவுதாம். மித்தபடி வாங்கன்னு ஒரு வாத்‍தெ கூட சொல்லல. "நாஞ்ஞ கொல்லம்பட்டி. ஒங்கள பாக்குறதுக்குத்தாம் வந்திருக்கேம்!" அப்பிடிங்கிறாரு சாமிமலெ ஆச்சாரி. அதுக்கு விகடு சரிங்றது போல ஒரு தலையாட்டுத்தாம். அவ்வேம் இப்பிடி பண்றதெப் பாத்துப்புட்டு, பேச்சு வருமாங்ற சந்தேகம் சாமிமலெ ஆச்சாரிக்கு வந்திருக்கணும். "தம்பீ! எஞ்ஞ சோலி பாக்குறாவோ?"ன்னு ஒரு கேள்வியப் போடுறாரு. "கோட்டகம்"ன்னு ஒத்த வார்த்தெதாம் அதுக்குப் பதிலா விகடுவோட வாயிலேந்து வருது.
            "பையன் மனசுக்கு நெறைவாத்தாம் இருக்காம். ன்னா பேச்சுத்தாம் ரொம்ப பேச மாட்டேங்றாம். நாலு வார்த்தைக்கு ஒத்த வார்த்தை வாங்குறது கஷ்டமா இருக்கு. வாத்தியார்ரா இருக்குறவேம் இந்த மாதிரிக்கி பேயாமல்லாம் இருக்க மாட்டாம். ஒத்த வார்த்தைக்கி நாலு வாத்தையில்லா வெளக்கம் கொடுக்குறாப்புல பேசுவாம். இப்பிடி இருக்கிறவேம் புள்ளைகளுக்கு ன்னாத்தா பாடத்தெ சொல்லிக் கொடுப்பாம்? இவ்வேம் நடைமொறையப் பாத்தாக்கா இவ்வேம் வாத்தியாருதான்னா ன்னான்னு தெரியலயே. இவ்வேம் வாத்தியாராத்தாம் இருக்கானான்னு சோதனெ பண்ணிப்புட்டா மித்ததெ பாத்துகிடலாம்! இந்தக் காலத்துல ஆர்ர நம்பு முடியுது?"ன்னு நெனைச்சிக்கிறாரு.

            இப்பிடி ஒரு சந்தேகம் அவரு மனசுக்குள்ள வந்த பிற்பாடு, அவருக்குன்ன எடுத்து வெச்ச பலவாரத்தையும், டீத்தண்ணியையும் குடிக்காம, "காலையிலேந்து வவுறு ஒரு மாரியா இருக்கு. ராத்திரியே எழும்பிக் கெளம்புனதுல ஒடம்புக்குக் கொஞ்சம் முடியாம இருக்கு! சாப்புட்டா செரிபட்டு வாராதுன்னு நெனைக்கிறேம்!"ன்னு ஒரு பொய்யை அவுத்து விடுறாரு. கூட அழைச்சாந்த ஆளையும் அதே மேனிக்கி அவுத்து வுடுறாங் மாதிரி கண்ணால சாடையக் காட்டிப்புட்டு ஒண்ணுஞ் சாப்புடாமலே கெளம்புறாரு. ஒருவேளை கைய நனைச்சுப்புட்டா சந்தேகத்தெ நெவர்த்திப் பண்ணாம சம்பந்தம் பண்ணிப்புட்டதா ஆயிடுமேன்னு சாமர்த்தியமா அப்பிடி நடந்துக்கிறதா அவருக்கு ஒரு நெனைப்பு.
            "ஊருல வேல சொலி நெறையக் கெடக்குதுங்க. ராத்தூக்கம் பிடிக்காததால போட்ட வேலைய போட்டப்படி போட்டுக்கிட்டு ஓடியாந்திட்டேம். காலங்காத்தால கடையெ தொறக்குறதுக்கு மின்னாடி நாலு பேரு வந்து நிப்பாம் இன்னிக்கு. அதால நாங்க கெளம்புறேம். வூட்டுலயும் கலந்துகிட்டு நாம்ம ஒஞ்ஞளுக்கு ஒரு தகவலெ கூடிய சீக்கிராத்தால சொல்லிப்புடறேம்!"ன்னுட்டு கெளம்புறாரு சாமிமலெ ஆச்சாரி. அப்படிச் சொல்லிட்டு டிவியெஸ் சாம்ப கெளப்பிக்கிட்டு, அழைச்சாந்த ஆளோட நேரா கோல்லம்பட்டிக்குப் போவல. ஊருக்குப் போறாப்புல போயி அப்பிடியே திரும்பி அங்க இங்க பையனெ பத்தி விசாரிச்சிப்புட்டு திட்டைக் கடைத்தெருவுல நின்னுகிட்டு இருக்காரு. கடைத்தெருவுலேந்து ஒரு தெரு தள்ளி உள்ளார போற ரோட்டுலேந்துதாம் விகடு சைக்கிள்ல கோட்டகம் பள்ளியோடத்துக்குப் போயாவணுங்றதெ விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டவரு,  பள்ளியோடத்துலயும் ஒரு பார்வெ பாத்துப்புடணும்னு முடிவோட நிக்குறாரு.
            எட்டரை மணி வாக்குல சைக்கிள்ல அந்த எடத்தெ விகடு கடந்துப் போறப்ப அவருக்கு ஒரு நம்பிக்கைப் பொறக்குது. அவரும், அவரு பின்னாடி வந்த ஆளும் டிவியெஸ் சாம்புல விகடுவுக்குத் தெரியாம பின்தொடர்ந்து போறாங்க.  அத்து வெள்ளையாத்துல தண்ணி வராத ஜூன் மாசத்தோட கடெசி. ஆத்துல தண்ணி வர்ற வரைக்கும் களிமங்கலத்துலேந்து கோட்டகத்துக்குப் போறதுக்கு வெள்ளையாத்துப் பாலத்துல யாரும் போறதில்லெ. வெள்ளையாத்துக்குள்ளயே எறங்கித்தாம் போவாங்க. தண்ணிக் கொறைஞ்சால வெள்ளையாத்துல எறங்கிப் போற சனங்களாச்சே. ஆறு வறண்டு கெடக்குறப்ப யாரு பாலத்துல போவாங்க? அதுவும் அந்த மூங்கிப் பாலத்துல?
            விகடு சைக்கிள்ல போற வேகம் அபாராம இருக்கும். ரொம்ப வேகமாத்தாம் சைக்கிள மிதிப்பாம். சைக்கிளுக்கு ஒரு ஸ்பீடோ மீட்டரு வெச்சா அத்து எப்படியும் அந்த வேகத்துக்கு இருவத்தஞ்சு கிலோ மீட்டரு வேகத்தெ காட்டும். அதெ வேகத்துல களிமங்கலத்து ரோட்டுலேந்து வெள்ளையாத்து கரையோராமா ஒடைச்சித் திருப்புறாம். அப்பவும் வேகம் கொறையல. அதே வேகத்தோட அப்பிடிக் கரையோராமா ஒரு நுறு தப்படி போயி ஆத்துல வண்டிய சர்ருன்னு எறக்கி சர்ருன்னு ஏத்துறாம் விகடு. சைக்கிளு ஏறுனா, "ஹோய்"ன்னு புள்ளைகளோட சத்தம் காதெ கிழிக்குது. ஆத்துல எறங்கி ஏத்த வேண்டிய சைக்கிள எறங்காம ஏறுனவேம், சைக்கிள்ல ஏறிப் போவ வேண்டிய ரோட்டுல ஏறிப் போவாம புள்ளைகளோட எறங்கி நடந்துப் போறாம்.
            வெள்ளையாத்துக் கரையோராம மூங்கிக் காடா அதுக்கு இடையில ஒத்தையடிப் பாதையப் போலத்தாம் வழி போவும்.         பின்னாலயே கொஞ்சம் தூரத்துலயே வந்து இதெ பாத்துக்கிட்டே வர்ற சாமிமலெ ஆச்சாரி, "இவ்வேம் ன்னா காட்டுக்குள்ள பூந்து, மேட்டுல ஏறி, ஆத்துக்குள்ளல்லாம் சைக்கிள எறக்கிக் கண்டமேனிக்கிப் போறாம். நெசமா இவ்வேம் வாத்தியாரு வேலைத்தாம் பாக்குறானாம்? இப்பிடி ஒரு ஊருக்குள்ள பள்ளியோடம்லாம் இருக்குமா?"ன்னு சந்தேகமாயிப் போவுது சாமிமலெ ஆச்சாரிக்கு. அதே சந்தேகத்தோட அவரும் அந்த ஒத்தையடிப் பாதையில டிவியெஸ் சாம்ப உள்ளார வுட்டு, அங்கங்க நீட்டிக்கிட்டு இருக்குற மூங்கி விளாருல்ல ஒடம்பு படாம சாமர்த்தியமா வளைஞ்சு நெளிஞ்சு வண்டிய வுட்டு, ஆத்துக்குள்ள வண்டிய எறக்கி ஏத்துன்னா வண்டி ஏற மாட்டேங்குது. நின்னுப் போயிடுச்சு. இதென்னடா மோட்டாரு வண்டி எறங்கி ஏற முடியாத ஆத்துக்குள்ள ஒருத்தெம் சைக்கிள்ல எறங்கி ஏறுறாம்னு அவரு நெனைச்சிக்கிட்டு இருக்கிறப்பவே கோட்டகத்து ஆளுங்க நாலைஞ்சுப் பேத்துங்க அதெ மாதிரிக்கி சைக்கிள்ல எறங்கி ஏறுறாங்க. அத்து செரி இத்து இவுங்களுக்குப் பழகிப் போயிடுச்சிப் போலருக்குன்னு நெனைச்சிக்கிறாரு சாமிமலெ ஆச்சாரி.
            பின்னால உக்கார வெச்சி அழைச்சிட்டு வந்த ஆளெ எறங்கச் சொல்லி, அவரும் எறங்கி வண்டிய மறுக்கா ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு, பின்னாடி வந்த ஆளெ வண்டியப் பிடிச்சி தள்ள சொல்லிக்கிட்டு, இவரு ஆக்ஸிலேட்டர்ர கொடுத்துக்கிட்டு வண்டிய தள்ளிக்கிட்டே கரைக்கு மேல கொண்டாந்தா அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. மூச்செ வாங்கிகிட்டே பின்னாடி வந்து ஆளுகிட்டெ சொல்றாரு, "இப்பிடியுமாடா நாட்டுல கெராமம் இருக்கி? ஆத்துக்கு ஒரு பாலமே இல்லாத கெராமத்துல எவ்வம்டா பள்ளியோடத்தெ கட்டி வெச்சிருக்கப் போறாம்? ஒண்ணுமே புரிலயடா ஒலகநாதா! வந்தது வந்தாச்சி. முழுசா பாத்துப்புடுவேம். சைக்கிளு எந்தத் தெசையில போனிச்சி. இந்தத் தெசையிலயா? அந்தத் தெசையிலயா?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி. அதுக்குப் பின்னாடி வந்த ஆளு, "இப்பிடிதாங் கெழக்கால! அக்கரையிலேந்து பாத்தப்போ புள்ளீவோ கொஞ்சம் சேந்துப் போனாப்புல தெரிஞ்சுதுங்களே"ன்னு கையக் காட்டுறாரு. சரின்னு கெழக்கால வண்டியக் கெளப்பிக்கிட்டு கொஞ்ச தூரம் போனாக்கா வடக்கால வெளிர் நீல நெறத்துல காம்பெளண்டு, அதுக்குள்ள நீல நெறத்துல கட்டடம் எல்லாம் தெரியுது. "ன்னடா இத்து! ஒண்ணுமே இல்லாத ஊருக்கு இப்பிடிக் காம்பெளண்டு, கட்டடமெல்லாம் சோக்கா பெயிண்டு எல்லாம் அடிச்சி? நெசமாலுமே பைய்யேம் வாத்தியாருத்தாம் போலருக்கு."ன்னு நெனைச்சிக்கிட்டு அங்கன இங்கன நின்ன ஆளுகள விகடுவோட பேர்ர சொல்லி விசாரிச்சாக்கா, "யாரு வாத்தியாரம்பீயக் கேக்குறீங்களா? நம்ம பள்ளியோடத்து வாத்தியாரம்பீல! நீஞ்ஞ?"ங்றாரங்க அவுங்க.
            "நாஞ்ஞ ஒறவுக்காரவுங்க. அதாங்! கொஞ்சம் பாத்துப் பேசணும்னு வந்தேம்."ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "ம்ஹூம்! பேசுனாப்புலத்தாம்!"ன்னு சொல்லிப்புட்டுச் சிரிக்கிறாங்க அவுங்க.
            "ஏஞ் சிரிக்கிறீங்?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "புள்ளியோளுக்குப் பாடம் நடத்த மட்டும்தாம் பேச்சு வரும் வாத்தியாரம்பீக்கு. மித்தபடி பெறத்தியாரோட நாலு வார்த்தெ சேந்தாப்புல பேச்ச வாராது. அளந்து வெச்சாப்புலல்லா பேசும் வாத்தியாரம்பீ! அதுகிட்டே போயி பேசி வார்த்தைய வாங்குறதுக்கு செவுட்டுப் பயகிட்ட பேசி வார்த்தையெ வாங்கிப்புடலாம். காரியத்துலல்லாம் கண்ணாத்தாம் இருக்கும். வெளிப்பழக்கமுல்லாம் பத்தாது. அது உண்டு வேலையுண்டுன்னு கெடக்குற ஆளும்பீங்க அத்து."ங்றாங்க அந்த ஆளுங்க.
            இதெ கேட்டதும் இனுமே விசாரிக்க ஒண்ணுமில்லைன்னு தோணுடிச்சி சாமிமலெ ஆச்சாரிக்கு. அப்பிடி‍யே வண்டிய திருப்புறாரு.
            "ஏங் வண்டிய திருப்பதீரு? ச்சும்மா போயிப் பாருங். பேசுவாப்புல யம்பீ!"ங்றாங்க ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிக்கிட்டு.
            "யில்ல! நாஞ்ஞ அவுங்க அப்பாருகிட்டயே பேசிக்கிறேம்!"ன்னு சொல்லிப்புட்டு சாமிமலெ ஆச்சாரி, "இந்த ஊர்லேந்து வெளிக் கெளம்புணும்ன்னா ஆத்துல வுழுந்துத்தாம் கெளம்புணுமா?"ங்றாரு. 
            "இப்பிடிக்கி இந்தக் கரையோரமாவே நேராக்க போனாக்க ஓகையூரு வாரும். அஞ்ஞயிருந்து பிடிச்சி வடக்கால போனாக்கா மூலங்கட்டளெ. தெக்கால போனாக்க வடவாதி. பிடிச்ச தெசையில போயிக்கிடலாம். குறுக்கால அந்தாண்ட போவணும்னா ஆத்துல வுழுந்துத்தாம் போவணும்."ங்றாங்க.
            இப்பிடி காட்டுல, மேட்டுல, ஆத்துல வுழுந்து எறங்கி மாப்பிள்ளப் பையனெ சோதிக்க வேண்டிருக்கேன்னு நெனைச்சிக்கிட்டு, டிவியெஸ் சாம்ப ஓகையூரு பக்கமா திருப்பி, அப்பிடியே மூலங்கட்டளெ வழியே ஆர்குடி போயி ஊரு போன சாமிமலெ ஆச்சாரி, மறுநாளுலேந்து, "எப்ப பையனெ அழைச்சிட்டுப் பொண்ண பாக்க வர்றீங்க?"ன்னு நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாரு.
*****


2 Mar 2020

ஒத்தக்கையி சட்டைக்காரரு!

செய்யு - 375

            ஏதோ ஒண்ணு மனசுக்குப் பிடிச்சிப் போயிடுது. அந்த பிடிச்சுப் போற ஒண்ணுத்தாம் காரியத்தெ நடத்தி வைக்குது. நேரியப்பரு ஆபீஸ்ல பார்த்த சாதகத்துல சுப்பு வாத்தியாருக்குப் பிடிச்சிப் போன அம்சம் பொண்ணுக்கு ரெண்டு அம்மாங்ற சங்கதித்தாம். சுப்பு வாத்தியாரும் ரெண்டு அம்மாக்கள்ட்ட வளர்ந்த ஆளாச்சே. அவரோட மூத்த அம்மாவான பெரிம்மாவுக்குப் புள்ளைங்க கெடையாது. ரண்டவாது அம்மாவான சின்னம்மாவுக்குத்தாம் இவருல்லாம் புள்ளைங்களா பொறந்தாங்க. அதே  மாதிரிக்கித்தாம் இருக்கு அந்தப் பொண்ணோட குடும்பமும். மூத்தவங்களுக்குப் புள்ளைங்க கெடையாது. ரண்டாவதுக்குத்தாம் புள்ளைங்க இருக்கு. இந்த விவரத்தெ சாதகத்துக்குக் கீழே ஒரு குறிப்பப் போல எழுதியிருக்காங்க. அதெ படிச்சிப் பாத்ததும், "இதென்னடா நம்மட குடும்பத்தெ போல அச்சு அசலா அப்பிடியே யிருக்கே! அப்போ கட்டுனா இந்தக் குடும்பத்துலேந்த்தாம் மவனுக்குப் பொண்ண கட்டி வைக்கணும்"னு முடிவே பண்ணிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு மவனுக்கு ஒரு வாத்திச்சிப் பொண்ணா பாக்கணும்னு போயி இப்பிடி மனசு மாறிட்டாரு. அத்தோட அந்தப் பொண்ணும் வாத்திச்சிக்குப் படிச்சிருக்கு. செரி பரவாயில்ல இந்தப் பொண்ணுத்தாம் சரின்னு ஒரு தீர்க்கத்து வந்த பிற்பாடு நேரியப்பருகிட்ட பேசுறாரு, "ஊருல போயி சாதகத்துப் பொருத்தத்தப் பாக்குறேம். பொருத்தப்பட்டா இந்தப் பொண்ணையே முடிச்சிப்புடலாம்! நீங்கத்தாம் தொணையா இருந்து இதெ முடிச்சித் தரணும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒண்ணுக்கு நூறா சாதகம் நம்மகிட்ட இருக்கு. இன்னும் நாலு சாதகத்து வேணும்னாலும் ஆர அமர பாத்து உக்காந்து எடுத்துட்டுப் போங்க. ஒண்ணும் அவசரமில்லா. ஊருக்குப் போயி வூட்டுல ந்நல்லா கலந்துக்குங்க. திருப்திப்பட்டா... அதுக்குப் பெறவு நமக்குப் போன் பண்ணுங்க. பொன் நம்பரெ எழுதித் தர்றேம். போன் பண்ணித் தகவலச் சொல்லுங்க. அவுங்களும் பொண்ணுக்குக் கல்யாணத்தெ முடிக்கணும்னுத்தாம் நிக்கிங்க. பேசி வுட்டாக்கா காரியம் முடிஞ்சிப் போயிடும். நம்ம ஆபீஸ்க்கு வந்த மொத நாளுல்லயே யோகம் உண்டாச்சுன்னா நமக்கும் சந்தோஷந்தானே!"ங்றாரு நேரியப்பரு.
            சுப்பு வாத்தியாரு தலைய ஆட்டிக்கிட்டு, நேரியப்பரு கேட்ட காசிய அவரு கையில கொடுத்துட்டுக் கெளம்புனவரு, ஊருக்கு வந்து வெங்குகிட்ட கலந்துகிட்டாரு. அவருக்கு ரொம்ப திருப்திப்பட்டுப் போச்சுங்ற சங்கதியெ சுப்பு வாத்தியாரோட பேச்சே காட்டிக் கொடுத்து. அதெ புரிஞ்சிக்கிட்ட வெங்கு, "அப்பிடின்னா! ஊருல நாலு பேரு, சொந்தத்துல நாலு பேர்ர கொண்டுட்டுப் போயி பொண்ண பாத்துட்டு வந்திடுவோமே!"ங்குது வெங்கு.
            "அப்பிடி பண்ண வாணா! மொதல்ல நாமளும், நீயும் நேரியப்பரோட போயி ஒரு பார்வெ பாத்துப்பேம். திருப்திப்பட்டா மவனையும் அழைச்சிக்கிட்டு ஊருல நாலையும், சொந்தத்துல நாலையும் கெளப்பிக்கிட்டுப் போவேம். எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு அஞ்ஞப் போயி, அஞ்ஞ பொண்ணு பிடிக்கலன்னு சொல்லப்படக் கூடாது பாரு. அதுவுமில்லாம பொண்ணுப் பாக்க வர்றேம்னு சொல்லிட்டுப் போறதெ வுட எதுவும் சொல்லாம திடீர்னுப் போயி நிக்குறதாங் பல வெசயங்கள காட்டிப்புடும்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுவுஞ் செரித்தாம். இப்போ விசயத்தெ வெளியில வுட வாணாம். கமுக்கமாவே இருக்கட்டும். மொதல்ல நீஞ்ஞப் போயி நாட்டியத்தாங்குடி ஆளுகிட்டெ சாதகத்தெ காட்டிப் பொருத்தம் இருக்காம்னு பாத்துப்புடுங்க. மேக்கொண்டு இதுல நீஞ்ஞ சொல்றபடியே பாத்துக்கிடலாம்!"ன்னு சொல்லுது வெங்கு.
            "அங்ஙன எடுக்குறப்பவே பொருத்தமுள்ள சாதகமாத்தாம் பாத்து எடுத்துக் கொடுக்குறாரு நேரியப்பரு. இருந்தாலும்நம்ம திருப்திக்கு ஒரு தபா நாட்டியத்தாங்குடிகாரர்கிட்டயும், கொத்தூரார்கிட்டயும் பாத்துப்புடுவேம். கிட்டதட்ட அவுங்க சொன்ன தெசையிலத்தாம் பொண்ணும் அமைஞ்சிருக்கு. அவுங்களே சாதகத்தப் பாத்துப்புட்டுப் பொண்ணு பொருத்தப்படுமா? படதா?ன்னு சொல்லிப்புடட்டுமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            காலங்காத்தாலயே பொழுது புலராத கருக்கல்லயே எழும்பி டிவியெஸ்ஸ கெளப்பிக்கிட்டு நாட்டியத்தாங்குடிக்கு ஒரு நாளும், கொத்தூருக்கு ஒரு நாளும் போனாரு சுப்பு வாத்தியாரு. சொல்லி வெச்சாப்புல ரண்டு பேரும் ஒரே மாதிரிக்கிச் சாதகப் பொருத்தம் நல்லாவே அமைஞ்சிருக்கிறதா சொன்னதுல மேக்கொண்டு ஆவ வேண்டியதெ பாக்குறதுன்னு முடிவுக்கு வந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. ஒடனே போனைப் போட்டு இன்ன தேதிக்கு வர்றதா சொல்லி, வெங்குவையும் அழைச்சிக்கிட்டு தஞ்சாரூக்கு நேரியப்பரோட ஆபீஸூக்குப் போயி நின்னாரு சுப்பு வாத்தியாரு.

            நேரியப்பரு ஒரு காரை ஏற்பாடு பண்ணி அதுல அழைச்சிக்கிட்டுக் கொல்லம்பட்டிக்குப் போனாரு. இவுங்க சொல்லாம கொள்ளாம கொல்லம்பட்டியில போயி பொண்ணு வூட்டுல எறங்குறாங்க. வூடு சுமாரான வூடுதாம். ரயிலு ஓடு போட்ட வூடு. தெக்குப் பாத்த வூடு. வூட்டுக்கு மின்னாடி ஒரு கொளம் இருக்கு. மேற்கால ஒரு புள்ளையாரு கோயிலு இருக்கு. வூட்டுக்கு மின்னாடி கொளமும், பக்கத்துல ஒரு கோயிலும் இருக்குறாப்புலத்தாம் பொண்ணோட வூடு அமையும்னு சோசியம் பாத்தப்ப ஒரு குறிப்பா ரண்டு சோசியக்காரவுகளும் சொன்னது சுப்பு வாத்தியாரு நெனைவுல வந்து மோதுது. "அட! ன்னா கனக்கச்சிதமா கணிச்சிச் சொல்லியிருக்காங்க. அப்போ இந்த வூட்டுப் பொண்ணுத்தாம் நம்மட மருமவ்வே!"ன்னு மறுக்கா தீர்க்கமா முடிவே பண்ணிட்டாரு அவரு மனசுக்குள்ள.
            இவுங்க ஒண்ணுஞ் சொல்லாம வூட்டுக்குள்ள நொழைஞ்ச நேரத்துல பொண்ணு வூட்டு வேலைகளப் பாத்துக்கிட்டு சமைச்சிக்கிட்டு இருக்கு. பொண்ணு ஒடிசலா, நச்சலாத்தாம் இருக்கு. நெறம்ன்னு பாத்தாக்க மாநிறமாத்தாம் இருக்கு. மொகம் களையா இருக்கு. உசரம் நடுத்தரமா இருக்கு. பொண்ணோட ரண்டு அம்மாக்கள்ல ஒண்ணு உக்காந்து மூக்குக் கண்ணாடியில கண்ண உருட்டு தெரட்டிக்கிட்டுத் தினத்தந்தி பேப்பரைப் படிச்சிகிட்டு இருக்கு. இன்னொரு அம்மா சமையல்ல அது வேலையப் பாத்துக்கிட்டு இருக்கு. திடுதிப்புன்னு இப்பிடி ஆளுக‍ நோழையுறதப் பாத்துட்டுக் கொஞ்சம் தெகைச்சாலும், நேரியப்பர்ரப் பாத்ததும் வெசயம் வெளங்கிடுச்சி அவுங்களுக்கு. ஒடனே, "வாஞ்ஞ! வாஞ்ஞ!"ன்னு சொல்லி பாயை எடுத்துப் போட்டு உக்கார வைக்கிறாங்க. பொண்ண பக்கத்தாப்புல இருக்குற ரூமுக்குக் கொண்டு போயி கொஞ்சம் அலங்காரத்தெ பண்ணுறாங்க. அப்பிடி பண்ணிக்கிட்டு இருக்கிறப்பவே, "அப்பங்காரரு கடைத்தெரு வரைக்கிம் போயிட்டு இருக்காரு!"ன்னு சொல்றாங்க. அப்பிடிச் சொல்லிட்டு பொண்ணோட பெரியம்மா அவர்ர அழைச்சிட்டு வார வெளியில கெளம்புது.
            பொண்ணோட அப்பங்காரரு சாமிமலெ ஆச்சாரி. கொல்லம்பட்டியில ஒரு சினை கடை வெச்சிருக்காரு. ஆயி மரச்சாமான் கடைங்றது அதோட பேரு. அப்பிடி ஒரு போர்டையும் வெச்சிருக்காரு. அந்தப் போர்டுலயே விஷேசத் தேவைகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் ஆடரின் பேரில் செய்து தரப்படும், விஷேசத் தேவைகளுக்குத் தேவையான பாத்திரங்கள், நாற்காலிகள் வாடகைக்கு விடப்படும்னு எழுதி வெச்சிருக்காரு. அந்தக் கடையில முக்காலி, நாற்காலி, பீரோ, கட்டில்ன்னு செஞ்சிப் போட்டுக்கிட்டு யேவாரத்தப் பாத்துட்டு இருக்கிறாரு. அத்தோட விஷேச தேவைக்கு சமையல் பாத்திரங்க, ப்ளாஸ்டிக் நாற்காலி, ஸ்டூலு, பந்தி பரிமாறுறதற்கான டேபிளு இதெ வாடகைக்கு வுடுற யேவாரத்தையும் செஞ்சிக்கிறாரு.
            பொண்ணோட அம்மாக்க ரண்டு பேருமே அக்கா, தங்கச்சித்தாம். அவுங்க ரண்டு பேரும் பாப்பாநாட்டுக்குப் பக்கத்துல இருக்குற கோனாட்டுக்காரவுங்க. மூத்தவுகப் பேரு பவளம். இளையவுகப் பேரு திலகம். மொதல்ல அக்காக்காரியான பவளத்தெ கலியாணத்தெ கட்டுனாரு சாமிமலே ஆச்சாரி. அவருக்குப் பவளத்தெ கட்டிக் கொடுக்க முடியாதுன்னுத்தாம் மொதல்ல கோனாட்டுல சொல்லிருக்காங்க. இவருத்தாம் வம்படியா நின்னு கட்டுனா பவளத்தத்தாம் கட்டுவேன்னு ஒத்தக் காலுல்ல நின்னு கட்டிட்டு வந்திருக்காரு. அப்பிடி தம்புடியா நின்னு கட்டிட்டு வந்தவரு பத்து வருஷத்துக்கு மேல ஆகியும் கொழந்தெ இல்லாம போவ,  கோனாட்டுக்குப் போயி, கொழந்தையில்லன்னு பெரிசா பெரச்சனைப் பண்ணிருக்காரு. தாண்டி தலைகுப்புற வுழுந்திருக்காரு. கொழந்தை வேணுங்றதுக்காக இன்னொரு கலியாணத்தெ பண்ணவும் தயங்க மாட்டேன்னு சவடாலு வுட்டுருக்காரு.
            சாமிமலெ ஆச்சாரி பாட்டுக்கு ஏத்தோ ஒரு பொண்ண இழுத்தாந்து குடும்பத்துல கொழப்பம் உண்டாவுறதுக்கு, அடுத்தப் பொண்ணு திலகத்தை‍யேக் கட்டி வெச்சிப்புடுவோம்னு முடிவு பண்ணிருக்காங்க. அப்பிடி கட்டி வெச்சிப்புட்டா அக்காக்காரியும், தங்கச்சிக்காரியுமா கெடந்து எப்பிடியோ சமாளிச்சிகிடட்டும்னு நெனைச்சிக்கிட்டாங்க. அது கட்டெ வண்டி கொஞ்சம் கொஞ்சமா கொறைஞ்சி மாடு இழுக்கறதுக்கு டயர் வண்டி வந்த கால கட்டம். சாமிமலெ ஆச்சாரி நாலு டயர் வண்டியில எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு சுவாமிமலையில போயி ரண்டவாது கலியாணத்தெ பண்ணிருக்காரு. அப்போ திலகம் பன்னெண்டாவதுதாம் படிச்சிக்கிட்டு இருந்திருக்கு. அத்து செரி! அந்தச் சாமிமலெ முருகன் மாதிரிக்கி இவருக்கும் ரண்டு பொண்டாட்டியா போவும்னு தெரிஞ்சித்தாம் பேர்ர சாமிமலென்னு வெச்சிருக்காங்கன்னு கலியாணத்துக்குப் போன சனங்க எல்லாம் உச் கொட்டினாச்சாம் அப்போ.
            இதுல இன்னொரு சங்கதி இந்நேரத்துக்கு ஒங்களுக்குப் புரிஞ்சிப் போயிருக்கும். அத்து என்னான்னா, இப்படி சாமிமலெ ஆச்சாரி பண்ண ரவுசுல பன்னெண்டாவது படிச்சிட்டு இருந்த திலகத்தோட படிப்பெ பாதியிலயே நிறுத்திப்புட்டு கல்யாணத்தெ முடிச்சாங்கங்றதுதாம். நல்ல வேளையா கல்யாணம் ஆயி நாலு வருஷத்துக்குள்ள திலகம் மூணு கொழந்தையப் பெத்துப் போட்டிடுச்சு. இல்லேன்னா சாமிமலெ ஆச்சாரி மூணாவது கலியாணத்துக்கு தயாரா ஆயிருப்பாரு. அந்த மூணு புள்ளைக, அதுல மூத்தப் பொண்ணுத்தாம் ஆயி. இப்போ விகடவுக்குப் பொண்ணு பாக்கறதுக்காக வந்திருக்கிறது. அடுத்ததா ஒரு பையேம் யோகமலெ. அதுக்கு அடுத்ததா இன்னொரு பொண்ணு பாப்பு. அதுக ரண்டும் காலேஜில படிச்சிக்கிட்டுக் கெடக்குதுங்க. ஆயி ஒண்ணுத்தாம் ஒரத்தநாட்டுல இருக்குற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோட உறுப்புக் கல்லூரியில பி.ஏ.வும், ஒரத்தநாடு பியெட் காலேஜூல பியெட்டும் படிச்சிப்புட்டுப் போதும்டா இந்தப் படிப்புன்னு வூட்டுல இருக்கு.
            இங்க இப்போ கடைத்தெருப் பக்கமா வேக வேகமா மூச்சு இரைக்க பொண்ணோட பெரிம்மா பவளம் வந்து பொண்ணு பாக்க வந்தச் சேதியச் சொன்னதும், சாமிமலே ஆச்சாரி சட்டையெ ஒத்தக் கையில மட்டும் போட்டுக்கிட்டு, டிவியெஸ்ஸூ சாம்பைக் கெளப்பிக்கிட்டு, அதுல பவளத்தையும் உக்கார வெச்சிக்கிட்டு டர்ருன்னு கெளம்பி வர்றாரு. அதென்ன சட்டைய ஒத்தக் கையில மட்டும் மாட்டுறது, இன்னொரு கையில மாட்ட மாட்டாரான்னாக்கா அவரு அப்பிடித்தாம். ரெண்டு கைக்கும் சட்டையில கையெல்லாம் வெச்சித் தச்சித்தாம் இருக்கு. அவர்ர பொருத்த வரைக்கும் சட்டைப் போடுறதுங்றது அபூர்வம்தான். வெளியில கெளம்புறப்ப வாரப்ப போடுறதுக்குத்தாம் சட்டெ. அதுவும் சட்டைய மாட்டி விடுற ஹேங்கர் போல ஒத்தக் கையில மட்டும் மாட்டுக்கிட்டுத்தாம் போவாரு வருவாரு. அது பாதி ஒடம்பத்தாம் மறைக்கும். மீதி ஒடம்பு சட்டையில்லாமத்தாம் கெடக்கும். அத்து அவரோட அடையாளமாவே ஆயிப் போயிடுச்சி, ஒத்தக் கையில மட்டும்சட்டையப் போட்டு, இன்னொரு கைக்குப் போடாதவர்த்தாம் கொல்லம்பட்டி சாமிமலெ ஆச்சாரின்னு.
*****


1 Mar 2020

பொண்ணு ஒண்ணு பார்க்க...

செய்யு - 374

            தஞ்சாவூர்ல நேரியப்ப பத்தர்னு ஒருத்தரு. ரொம்ப நாளைக்கி வரைக்கும் நகை செய்யுற, விக்குற வேலையிலத்தாம் இருந்தாரு. தொடர்ந்து அந்த வேலைய செய்ய ஒடம்பும், மனசும் ஒத்துழைக்கலன்னு சொல்லி, ஏதோ ஒரு பொழைப்பைப் பாத்தாத்தானே காலத்தை ஓட்ட முடியும்னு கல்யாண தரகு பண்ற வேலைய செய்ய ஆரம்பிச்சாரு. மொதல்ல கொஞ்சம் அலைச்சலான வேலைத்தாம். என்னவோ அப்பிடி அலையுறது அவருக்குப் பிடிச்சிப் போச்சி. அந்த அலைச்சல்ல ஒரு சொகத்தக் கண்டுகிட்டாரோ என்னவோ! இந்தப் பக்கம் நாகப்பட்டினம் வரைக்கும், அந்தப் பக்கம் புதுக்கோட்டை வரைக்கும் பொண்ணு பாத்து விடுறது, மாப்பிள்ளை பாத்து விடுறதுன்னு தரகு வேலையில ரொம்ப பிரபல்யமாயிட்டாரு.
            ஏதோ ஒரு பொழைப்புக்குன்னு ஆரம்பிச்சதுல அவரு இப்போ கொடிகட்டிப் பறக்குறாரு. ஆரம்ப காலத்துல அலைஞ்சி திரிஞ்சி தரகு பண்ணிட்டுக் கெடந்தவரு இப்போ ஆபீஸப் போட்டு உக்காந்துட்டாரு. உக்காந்த எடத்துலயே தரகு பாத்து சம்பாதிக்கிறாரு. "பொண்ணு அமையலையா மாப்புள்ள கெடைக்கலையா நேரியப்பங்கிட்ட போ! கேக்குற மாதிரிக்கே அளவெடுத்துச் செஞ்சு கொடுத்துடுவாப்புல! அங்கங்க அலைஞ்சி காலத்தெ வெரயமாக்குறதுக்கு, நேரியப்பங்கிட்ட போனா நேர்த்தியா காரியத்தெ முடிச்சிடுவாப்புல!"ன்னு இங்க வகையறாக்குள்ள பேச்சாயிக் கெடக்குது. அவருகிட்ட போனாக்கா கல்யாணம் தட்டிக்கிட்டு வரன் அமையாம முத்திப் போயிக் கெடக்குற  கேஸூக்கும் கல்யாணம் எப்பிடியோ அமைஞ்சிப் போயிடும்னு நம்பிக்கெ வேற. அப்பிடி ஒரு அதிர்ஷ்ட கையாவும் இருந்தாரு நேரியப்ப பத்தரு.
            அவரெப் பத்தி மொதல்ல அறிஞ்சி அப்பிடி அதிர்ஷ்ட நாடியப் பாத்தவரு லாலு மாமாத்தாம். அவரோட ரெண்டாவது மவ குயிலியோட சாதகத்தெ அங்க கொடுத்துதாங் குயிலிக்கு மெட்ராஸ்ல ஜாகையா இருக்குற தஞ்சாவூரு ஜில்லா மாப்பிள்ளைய பிடிச்சாரு லாலு மாமா. லாலு மாமாவால நேரியப்ப பத்தரு வடவாதி பகுதியில பேரு பெற்ற ஆளாயிட்டாரு. நேரியப்ப பத்தரு ஆல் இந்தியா ரேடியோலவுல விளம்பரம் கொடுத்திருந்தாலும் அந்த அளவுக்குப் பிரபலம் ஆகியிருக்க மாட்டாரு. லாலு மாமாவோட பொண்ணுக்கு சரியான சாதகத்தெப் பாத்து விட்டதால அம்மாம் பிரபலம் ஆயிட்டாரு. அந்த அளவுக்கு எந்த விஷேஷ சாவு சங்கதிக்குப் போனாலும் அங்க நேரியப்ப பத்தர்ர பத்தியே பேச ஆரம்பிச்சிட்டாரு லாலு மாமா.
            யாருக்கு பொண்ணு மாப்புள்ள அமையலன்னாலும் அவங்களோட சாதகத்தெ வாங்கி நேரியப்ப பத்தரோட டேபிள்ல சேத்துப்புடுவாரு லாலு மாமா. நேரியப்ப பத்தரோட டேபிளுக்கு ஒரு சாதகம் போயிட்டுன்னா மணமேடைக்குப் பொண்ணையோ, மாப்பிள்ளையையோ தயாரு பண்ணியே கொண்டு போயிடலாம். அப்பிடிக் கொண்டு போயி கல்யாணம் நடக்குறப்போ, "நாம்ம பாத்து பண்ணி வெச்சக் கல்லாணம்! நாம்ம மட்டும் இல்லன்ன இப்ப நடந்திருக்குமா இந்தக் கல்லாணம்!"ன்னு சொல்லிக்கிறதுல லாலு மாமாவுக்கு ஒரு பெருமெ. லாலு மாமாவோட மவன் வேலனுக்கும், சுப்பு வாத்தியாரு மவன் விகடுவுக்கும் கிட்டத்தட்ட சம வயசு. கொஞ்சம் முன்னி பின்ன பொறந்தவங்க அவ்வளவுதாங். அவர அவரோட மவனுக்கும் நேரியப்ப பத்தருகிட்டத்தாம் சாதகத்தெ கொடுத்து பொண்ணு தேடிட்டு இருந்தாரு. தஞ்சாரூலேந்து இடையில ஒரு தபா வடவாதி வந்தப்போ சுப்பு வாத்தியார்ர பாத்தப்போ நேரியப்ப பத்தரோட புராணத்தெ பாடி அங்க சாதகத்தெ கொடுக்கச் சொன்னாரு.
            அதெ கேட்டுப்புட்டு, சோசியர்லேந்து, சங்கதி கேள்விப்படுற சொந்தக்கார சனம் வரைக்கும் தஞ்சாரூ, தஞ்சாரூன்னு ஏதோ ஒரு வகையில தஞ்சாரூ பேரே அடிபடுதுன்னே, காலங்காத்தாலேயே தஞ்சாரூக்குப் போற எம்.எல்.ஏ. பஸ்ஸைப் பிடிச்சி, நேரியப்ப பத்தருகிட்டெ சுப்பு வாத்தியாரு போனாக்கா அங்க ஏழேட்டு டேபிள்ல சாதகத்தெ மலை போல அடுக்கி வெச்சிருக்காரு அவரு. ஒவ்வொரு டேபிள்ளயும் ஒவ்வொரு ஏரியாவச் சார்ந்தவங்களோட சாதகத்தெ மாப்பிள்ள, பொண்ணுன்னு வகை பிரிச்சி வெச்சிருக்காரு. அங்க அடுக்கியிருக்க சாதகத்தெ பாத்தாக்கா ஆம்பள புள்ளயோ, பொம்பள புள்ளையோ பொறந்தா மொத வேலையா சாதகத்தெ கொண்டாந்து நேரியப்ப பத்தருகிட்ட கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாப்பாங்க போலருக்கு. அம்புட்டு சாதகம் வாலிப வயசுக்காரவுகளேலந்து, பல்லு போன கெழடுகளுக்கு வரைக்கும் சோடி சேக்குற அளவுக்குக் குமிஞ்சிக் கெடக்கு.
            அந்த சாதக மலையப் பாக்குறப்ப, இன்னாருக்கு இன்னார்ன்னு கடவுளு எழுதி வைக்கிறாரா? யில்‍லே நேரியப்ப பத்தரு எழுதி வைக்கிறார்ன்னு ஒரு மலைப்பு உண்டாவுது சுப்பு வாத்தியாருக்கு. அத்தோட நாட்டுல இம்புட்டுப் பேருக்கா கல்யாணம் ஆவாம‍ கெடக்குதுன்னு ஒரு கேள்வியும் அவரோட மனசுல உண்டாவுது. அப்படி ஒரு கேள்வி எழும்புறப்பவே சரியான எடத்துக்குத்தாம் லாலு வாத்தியாரு வழியக் காட்டி விட்டுருக்கார்ன்னு ஒரு சந்தோஷமும் உண்டாவுது. பட்டிக்காட்டாம் ஒருத்தென் பட்டினத்துப் பாத்து தெகைச்சி நிக்குறாப்புல தன்னோட ஆபீஸ்ல சாதக மலையப் பாத்து தெகைச்சி நிக்குற சுப்பு வாத்தியார்ர பாத்துட்டு நேரியப்ப பத்தரு எதுக்கு வந்தீங்க? எங்கேருந்து வர்றீங்கன்னுல்லாம் கேக்கல. "பொண்ணா? மாப்புள்ளையா?"ன்ன ஒத்தக் கேள்வித்தாம் கேக்குறாரு.
            "பொண்ணுத்தாங்!"றாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னா நட்சத்திரம், ராசி, பையேன் ன்னா பண்றாம்ன்னு மட்டும் சொல்லுங்கோ? தஞ்சாரூ பக்கத்துல, திருவாரூ பக்கத்துல, கும்பவோணத்து பக்கத்துல, ஆர்குடி பக்கத்துல, புதுக்கோட்ட பக்கத்துல எந்தப் பக்கத்துல பொண்ணு வேணும்னு மட்டும் சொல்லுங்க?"ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "பையேம் வாத்தியார்ரா இருக்காம். கவர்மெண்டு வேலயிலத்தாம் இருக்காம். பொண்ணு தஞ்சாரூ யில்லன்னா, கும்பவோணம் பக்கத்துல வேணும்"ன்னு சொல்லிட்டு கார்த்தி ஸ்டூடியோவுல டைப்படிச்சிப் போட்டுட்டு வந்த சாதகத்தையும், அத்தோட போட்டாவையும் கொடுக்குறாரு சுப்பு வாத்தியாரு.

            அதெ வாங்கி ஒரு பார்வையப் பாத்துக்கிட்டு, "தஞ்சாரூ ஆளுவோ ஒரு டைப்பு, கும்பவோணம் ஆளுவோ ஒரு டைப்பு. இந்த நட்சத்திர ராசிக்குப் பொருந்தி வர்ற மாதிரின்னா..."ன்னு சொல்லிக்கிட்டே, சுப்பு வாத்தியாரு கொடுத்து சாதகத்துக்குப் பொருந்தி வராப்புல தஞ்சாவூரு சாதகங்க இருக்குற டேபிள்லேந்து மட மடன்னு பத்து பாஞ்சிச் சாதகத்தெ எடுத்துக் கொடுக்குறாரு. அத்தோட கும்பகோணத்து டேபிள்லேந்து பத்து பாஞ்சிச் சாதகத்தெ எடுத்துக் கொடுக்குறாரு. எடுத்துக் கொடுத்துப்புட்டு இந்தச் சாதகம் போதுமா, இன்னுங் கொஞ்சம் சாதகம் வேணுமான்னு கண்ணாலயே ஒரு கேள்வியக் கேக்கறாரு.
            ரெண்டு நிமிஷ நேரத்துக்குள்ள சுப்பு வாத்தியாரு கையில முப்பது சாதகத்துக்குக் கொறையாம இருக்கு. ஒவ்வொரு சாதகத்துல இருக்குற பொண்ணோட பேரு, படிப்பு, அப்பா, அம்மாவோட பேரு, உடன்பிறந்தவங்களோட சங்கதி, நட்சத்திரம், ராசி, அத்தோட ஸ்டேபிளர் போட்டு பின்னால அடிச்சி வெச்சிருக்கிற போட்டோவையும் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. எல்லா பொண்ணுகளும் பயங்கரமா படிச்சிருக்குங்க. எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம்., எம்.பில்., அப்பிடின்னு படிப்புக்கு எந்தக் கொறைச்சலும் இல்ல. போட்டோவுல பொண்ணுகளும் பாக்கறதுக்கு அம்சமா லட்சணமாத்தாம் இருக்குதுங்க. சுப்பு வாத்தியாரோட மனகணக்கு வாத்திச்சிப் பொண்ணா பாத்து மவனுக்குக் கட்டி வெச்சா தேவலாம்னுல்லா இருக்கு. அப்பிடி ஒண்ணும் கையில இருக்குற சாதகத்துல இல்லாததால, சுப்பு வாத்தியாரு கொஞ்சம் தயங்குனாப்புல, "வாத்திச்சிய்யா இருக்குற மாதிரிக்கி எதாச்சிம் சாதகம் கெடைக்குமா?"ங்றாரு.
            "அதுவுங் சரித்தாம். வாத்தியாரு பையனுக்கு இப்போ அப்பிடித்தாம் எல்லாம் பாக்குதுங். இருங், அப்பிடிக்கியும் இருக்கு ஏழெட்டு. ஆன்னா... இந்தச் சாதகத்துக்குப் பொருந்துறாப்புல இல்ல. இதுக்குப் பொருந்துறாப்புலயும் ரண்டு இருக்கு. வயசு கூடப் போவுது. அத்தெ தனியா வெச்சிருக்கேம். வயசு பரவாயில்லன்னா சொல்லுங்கோ எடுத்துத் தர்றேம்!"ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "வயசு கம்மியாத்தாம் இருக்கணும். கூட வாணாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்போ கையில வெச்சிருக்கிற சாதகங் தோது படாதுன்னு நெனைக்கிறேம்!"ங்றாரு நேரியப்பரு.
            "யில்ல யில்ல இருக்கட்டும். இதுல நாலஞ்சிப் பரவாயில்ல."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுல ஒண்ணு கூட பிடிக்கலன்னாலும் பரவால்ல. நம்ம ஆபீஸூக்கு வந்து திருப்திப்படாம ஆயிடக் கூடாது. ஒண்ணுங் பெரச்சனெயில்ல. இந்த தஞ்சாரூ, கும்பவோணத்தெ விடுங். அப்பிடி வேதாரண்யம், நாவப்பட்டிணம், சீருகாழின்னு வாருங். எடுத்துப் போடுறேங்."ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "சோசியரு சொல்லிப்புட்டாரு தஞ்சார்ரோ, கும்பவோணம்தான்னு. அதாங் ஏம் அஞ்ஞ இஞ்ஞன்னு பாத்துக்கிட்டுன்னு நெனைக்கிறேங்"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "செரி அப்பிடியே பாத்துப்புடுவேம். நேத்திக்கிக் கொஞ்சம் சாதவங் வந்திச்சு. அதெ வகையப் பண்ணி இதுல சேக்கல. இருங் அதுல எதாச்சிம் தேருதுன்னா பாக்கிறேங்"ன்னு அவரு உக்காந்திருக்குற நாற்காலிக்குப் பக்கத்துல இருக்கற டேபிள்ல ஒரு கட்டா இருக்குற சாதகத்தெ எடுத்து பார்வைய சரசரன்னு வுட்டு, அதுலேந்து ஏழெட்டு சாதகத்தெ உருவுறாரு. "இதுக எல்லாம் வாத்திச்சிக்கத்தாம் பாருங்க பிடிச்சிருக்கான்னு?"ன்னு அதெ நீட்டுறாரு.
            சுப்பு வாத்தியாரு ஒரு பார்வையப் பாத்துட்டு, "நல்ல பொருத்தமாத்தாங் இருக்கு. இந்த வாத்திச்சிக கவர்மெண்டு வேலையில இருக்குறவங்களா? தனியார்ல இருக்குறவங்களா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அது வேற இருக்கா இதுல? அது எஞ்ஞ நமக்குப் புரியுது?"ன்னு தலையச் சொரியுறாரு நேரியப்பரு.
            "எல்லாம் தனியாரு பள்ளின்னுத்தாம் போட்டிருக்குங்!"றாரு சுப்பு வாத்தியாரு.
            "கவர்மெண்டுல வேலை கெடைச்சாப் போயிடப் போவுதுங்க. வேலையக் கொடுத்தா வேணாமின்னு வூட்டுலயா உக்காந்திருக்கப் போவுதுங்க?"ங்றாரு நேரியப்பரு. அவரு அப்பிடிச் சொல்லிக்கிட்டு இருக்குறப்பவே இடைஇடையில ஆளுங்க வர்றாங்க, சாதத்தெ கொடுக்குறாங்க, சாதகத்தெ வாங்கிப் பாக்குறாங்க. அவுங்களுக்குப் பிடிச்சிருந்தா அந்தச் சாதகத்தெ அங்கயே நகல் பண்ணிக்கிறாங்க. அப்பிடி நகல் பண்ணிக் கொடுக்க ஒரு செராக்ஸ் எந்திரத்தையும், செராக்ஸ் பண்ணிக் கொடுக்கு ஒரு பொம்பள ஆளையும் வேலைக்கிப் போட்டிருக்காரு நேரியப்ப பத்தரு. கொடுக்குற சாதகத்துக்குத் தகுந்தாப்புல ஒரு ரேட்டையும் சொல்லி அதையும் வாங்கி பைக்குள்ள திணிச்சிக்கிறாரு.
            "நீஞ்ஞ சொல்றதுங் சரித்தாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவென்ன? வாத்திச்சிக்கிப் படிச்சிருக்கிற பொண்ணுவோளோட சாதவத்தையும் பாருங்களேம்! வேலை கெடைச்சா வேலைக்கிப் போயிட்டுப் போவுதுங்க. அதுவுமில்லாம வேலையில இருந்துக்கிட்டுக் கொழந்தையப் பெத்துக்கிட்டு அதுல ஒரு செரமங் இருக்குதில்லா. கொழந்தையல்லாம் பெத்தப் பின்னாடி வேலை கெடைச்சிப் போனாக்க நல்லது பாருங். இதெயும் மனசுல வெச்சிக்கிட்டு வாத்திச்சிக்கிப் படிச்சிருக்கிற பொண்ணா பாருங்!"ங்றாரு நேரியப்பரு.
            "செர்த்தாம்! செர்த்தாம்! அப்பிடி இருந்தாக்க அதயும் கண்ணுல காட்டுங்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்பிடின்னிக்கா ஏகப்பட்டது கெடக்குப் பாருங். தஞ்சாரூ வந்திட்டீயே. தஞ்சாரூர்லயே பிடிச்சிப் போடுறாப்புல எடுத்துப் போடுறேங் பாருங்!"ன்னு பத்து சாதவத்துக்கு மேல எடுத்துத் தர்றாரு.
            அதுல ஒரு சாதகத்தெ எடுத்துப் பாத்த சுப்பு வாத்தியாருக்குத் திருப்திப்படுது. "இத்து ன்னா கொல்லம்பட்டி?"ங்றாரு.
            "அத்து இஞ்ஞ தஞ்சாரூலேந்து பன்னெண்டு மைலு இருக்குங். ஒரத்தநாட்டுலேந்து பத்து மைலு இருக்குங்"றாரு நேரியப்பரு.
*****