5 Mar 2020

தாய்மாமனில்லாம கெளம்புது வண்டி!

செய்யு - 378

            போனை எடுக்காட்டி என்னா... நேர்ல போயே கூப்புட்டுட்டு வந்துடுவோம்ன்னு சுப்பு வாத்தியாரு, வேனை நிப்பாட்டிட்டு எறங்கி குமரு மாமாவ கூப்புடப் போறாரு.
            "யாரும் வேன வுட்டு எறங்கிப் போயிட வாணாம். நேரம் ஆயிட்டு இருக்கு. ஆர்குடிக்குப் போயி ஒண்ணா சாப்புடுறதெல்லாம் சாப்புட்டுக்கிடலாம்."ன்னு சொல்லிப்புட்டு விடுவிடுன்னு நடந்துப் போறாரு.
            குமரு மாமா வூடு உள்ளார பூட்டிக் கெடக்குது. "யம்பீ! யம்பீ!"ன்னு கொரலக் கொடுத்துப் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. யாரும் வந்து தெறக்குறாப்புல தெரியல. அழைப்பு மணி‍யையும் அழுத்திப் பாக்குறாரு. அதுவும் கத்த மாட்டேங்குது. அவரு அழுத்துற அழுத்தத்துக்கே அது கதறி அழுவணும். ம்ஹூம் செத்த சவமாட்டம் இருக்குது அந்த அழைப்பு மணி. இவரு மறுக்கா மறுக்கா கத்திப் பாக்குறாரு. ஒண்ணும் பதிலு வர்றாப்புல தெரியல. ஞாயித்துக் கெழமையா இருக்குறதால, எழுந்திரிக்கக் கொள்ள நேரமாவுமோன்னு வேற யோசனெ போவுது சுப்பு வாத்தியாருக்கு. அப்பிடியிருந்தா இந்நேரத்துக்கு எழும்பி, எப்ப கெளம்பி வேனுக்கு வர்றதுன்னு தெகைப்பா இருக்கு அவருக்கு. செரி, அப்பிடியிருந்தாலும் பரவாயில்ல, வெளியில வந்து கேட்டைத் தெறந்து ஒரு சேதியச் சொன்னா கூட போதுமேன்னு நெனைக்குறாரு. வூட்டுக்குள்ள சனங்க இருக்குறதுக்கான அறிகுறியே தெரியாத மாதிரிக்கி நிசப்தத்துல மயங்கிக் கெடக்குது வூடு.
            தூங்குறவனெ கூட எழுப்பிப்புடலாம், தூங்குற மாதிரிக்கி நடிக்கிறவென எழுப்ப முடியாதுன்னு சொல்லுவாங்களே! அப்பிடி அந்தக் கணக்குக்கு உள்ளார வூட்டுக்குள்ள நெசமாத்தாம் தூங்கிட்டுக் கெடக்கறாங்களா? யில்லே, தூங்குற மாதிரிக்கி நடிச்சிக்கிட்டுக் கெடக்குறாங்களா? ஒண்ணும் புரியல சுப்பு வாத்தியாருக்கு. இப்போ என்ன முடிவெடுக்குறதுன்னு தடுமாற்றமா இருக்கு. இருந்தாலும் திரும்ப திரும்ப கத்திக்கிட்டு இருக்காரு, "யம்பீ! வேனு வந்து பட்டறெ வாசல்ல கெடக்குது. கெளம்பி வந்தவங்க எல்லாரும் காத்துகிட்டு கெடக்குறாங்க. வூட்டுல யாரும் இருக்கீங்களா? இல்லியா?"ன்னு காட்டுக் கத்தலா கத்துறாரு. கடெசி முயற்சியா கேட்டுக் கதவையும் தடதடன்னு ஆட்டிப் பாக்குறாரு. சத்தம் படார் படார் தடார் தடார்ன்னு கேக்குது. எதுக்கும் எதுவும் நடக்குறாப்புல தெரியல.
            அக்கம் பக்கத்துல பாத்துட்டுப் போறவங்களும் அவங்க பாட்டுக்குப் பேறாங்களே தவுர யாரும் வந்து ஒத்தாசைக்குக் கூட ஒத்தெ வார்த்தை கேக்குறாப்புல தெரியல. இப்பிடி ஒரு நாளைக்கி நாலு மனுஷங்க வந்து குமரு மாமா வூட்டுக்கு மின்னாடி நின்னு சத்தம் போடுறதும், எவ்வளவு சத்தம் போட்டும் கேட்டு பூட்டியே கெடக்கறதும் அவுங்களுக்குப் பாத்துப் பாத்துச் சலிச்சிப் போயிடுச்சு. சரித்தாம் குமரு வூடுன்னா இப்பிடித்தாம்ன்னு அவுங்களுக்கு ஒரு மனநிலைக்கு வந்து வருஷக் கணக்குல ஆயிடுச்சு.
            சுப்பு வாத்தியாரு வந்து கத்தி கத்தி பத்து நிமிஷத்துக்கு மேல ஆவப் போவுது. வேனு ஓடிக்கிட்டுக் கெடந்தா சனங்க ஒண்ணுஞ் சொல்லாம, எதாச்சிம் பேசிக்கிட்டோ, வேனுல போடுற பாட்டெ கேட்டுக்கிட்டோ போவுமுங்க. நிக்குற வேனுல புழுக்கத்துல சனங்க எம்மாம் நேரம் உக்காந்திருக்குமுங்க. அதது பாட்டுக்கு ஒரு வாயி டீத்தண்ணிய குடிச்சிட்டு வாரேம், கொஞ்சம் ஒண்ணுக்கு அடிச்சிட்டு வர்றேம், ஒரு பீடிய வலிச்சிட்டு வர்றேம்ன்னு ஆளாளுக்கு ஒரு காரணத்தெ சொல்லிட்டு அதது தெசைக்குப் போறதுலல்ல நிக்குமுங்க. அப்பிடிப் போனதுகள வேனைக் கெளப்புறதுக்கு மின்னாடி அங்கங்க  அலைஞ்சித் திரிஞ்சித்தாம் கொண்டாரணும். அது ஒரு பெரிய சொலியா வேற போயிடும். அழைச்சிட்டு வந்துப்புட்டு யாரையும் வுட்டுப்புட்டு போவ முடியாதுல்ல.
            நேரம் ஆவ ஆவ விகடுவெ கெளம்பி வேனுலேந்து எழுந்திரிச்சி, "நானும் போயி வேணும்னா மாமாவையும், மாமியையும் அழைச்சிட்டு வாராட்டுமா?"ங்றாம்.
            "நீயி என்னத்தாடா பெரிய மனுஷனாட்டம்? அதாங் அப்பாரு போயிருக்குல்ல. அவரு போயி அழைச்சிட்டு வந்துப்புடுவாரு. கொஞ்சம் முன்ன பின்னத்தாம் ஆவும். பொண்ணு பாக்க வர்ற பயெ அங்கயிங்க போயிட்டு இருக்கப்படாது!"ங்குது வெங்கு. எழும்ப நெனைச்ச விகடு அப்படியே உக்காந்துட்டாம்.
            சின்ன மாமாவான வீயெம் மாமாத்தாம் இப்போ எழுந்திரிச்சி, "நாம்ம வேணுன்னா போயி பாத்து கெளப்பிட்டு வர்றேம். அத்தாங் இப்பிடித்தாம் மச மசன்னு எஞ்ஞ போனாலும் நைய நைய்யான்னு பேசிக்கிட்டு, போனாமோ காரியத்தெ முடிச்சோமான்னு திரும்ப மாட்டாரு. நாம்ம போயி வெரசா கொண்டார்ரேம் பாரு!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புது.
            "நீஞ்ஞ சித்தே ச்சும்மா உக்காருங்க. அதாங் போயிருக்காங்களே. அழைச்சிட்டு வாரட்டும். நம்மள மதிக்காதவங்க வூட்டுக்கு நாம்ம போயி நிக்கக் கூடாது. அவுங்க வந்தா வாராங்க, வாராம போனாக்காப் போறாங்க! ஒங்களுக்கென்ன?" அப்பிடிங்கிது கோகிலா மாமி.

            "ச்சே! ச்சும்மா கெடடி! பேசுறா பாரு பேச்சு!" அப்பிடின்னு சொல்லிட்டு வீயெம் மாமா ஒரு முறைப்பைக் காட்டிப்புட்டு, வேனிலேந்து கதவைத் தொறந்துகிட்டு போவுது. அது பொன்னியம்மன் கோயிலைக் கடந்து திரும்பி பாதி தூரம் போனாக்கா, சுப்பு வாத்தியாரு வெறுங்கையி, வீசுனா கையா எதிருல்ல வர்றாரு.
            "ன்னத்தாம்! எஞ்ஞ பெரியவேம்?" அப்பிடிங்கிது வீயெம் மாமா.
            "நாம்ம கூப்புட்டுட்டுப் பாத்திட்டேம் யம்பீ! வூட்டுல யாரும் இருக்குறாங்களா? இல்லையான்னே தெரியல. உள்ளாக்கப் பூட்டிக் கெடக்கு. ஒரு வேள தம்பி மட்டும் எதாச்சியும் வெளியில விஷேசத்துக்குப் போயிருக்குமோ என்னவோ? வூட்டுக்குள்ள மேகலா மட்டும் இருக்குமோ என்னவோ! அப்பிடி இருந்தாலும் கதவெ தொறந்துகிட்டு வெளியில வந்து சங்கதி என்னான்னாவது சொல்லலாமில்ல. அதுவுஞ் சொல்லுறாப்புல தெரியல. எம்மாம் நேரம்தாங் வூட்டுக்கு மின்னாடி சத்தம் போட்டுக்கிட்டுக் கெடக்குறது? தெருவுல போறவங்க வர்றவங்க எல்லாம் ஒரு மாதிரியா பாக்குறாங்க. அதாங் அதுக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாம திரும்பிட்டேம். நாம்ம இதுக்கு மேல ன்னா பண்றது யம்பீ!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞ போங்கத்தாம். போயி வேனுல உக்காருங்கத்தாம். அவனெ எப்டிக் கூப்புடறதுன்னு நமக்குத் தெரியும். மொதல்லயே நாம்ம கெளம்பி வந்திருக்கணும். அதாங் தப்பா போச்சுது. அவ்வேம் வூட்டுக்குள்ளத்தாம் இருப்பாம். இந்த மாதிரிக்கித்தாம் அவ்வேம் பல பேருகிட்டே செஞ்சிக்கிட்டுக் கெடக்குறாம் கிறுக்கப் பயெ!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு வேக வேகமாகப் போவுது வீயெம் மாமா. அது போற வேகத்துக்கு எப்பிடியும் குமரு மாமாவ அடிச்சிப் போட்டாவது தோளுல்ல வெச்சுத் தூக்கிட்டு வந்துடும்ங்ற மாதிரிக்கித் தெரியுது. மொதல்ல சோர்ந்து வந்த சுப்பு வாத்தியாரு இப்போ கொஞ்சம் தெம்பா  இருக்கறாப்புல நடந்துப் போறாரு.
            சுப்பு வாத்தியாரு வேனுல போயி கொஞ்ச நிமிஷத்துலயே வீயெம் மாமாவும் ஒத்தையா வந்து வேகமா வேனுல ஏறுது. "எங்கம்பீ! பெரியம்பீ?" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "அவ்வேம் வர மாட்டாம் அத்தாம். பயெ வூட்டுக்குள்ளத்தாம் இருக்காம். நாமளும் சத்தம் போட்டுப் பாத்துட்டேம். கேவலமா பேசியும் பாத்துட்டேம். சொரணெ கெட்ட பயெ. பொண்டாட்டி மேல வுழுந்து நேரங் கெட்ட நேரத்துல பொரண்டுட்டுக் கெடப்பாம். ச்சைய் மனுஷனா அவ்வேம்? எல்லாத்தியும் கேட்டுக்கிட்டு வூட்டுக்குள்ள படுத்துக்கிட்டு இருக்கானே தவுர வெளியில வந்து ஏன்னு என்னான்னு ஒரு வார்த்தெய வுட மாட்டேங்றாம். அவ்வேம் இப்பிடித்தாம் அத்தாம். அவனுக்கு ஒரு பொண்ணெ வேற பாத்துக் கட்டி வெச்சீங்க பாருங்க. அதெச் சொல்லணும். என்னவோ பெரிய ரதியெ கட்டி வெச்ச மாதிரிக்கி அவனுக்கு ஒரு நெனைப்பு. அத்து என்னவோ அதுக்கு ஒண்ணுமில்லாத பயலுக்குக் கழுத்தெ நீட்டுனது போல ஒரு கெராக்கியப் பண்ணிக்கிட்டு வலிப்பு வலிச்சிக்கிட்டு நிக்குது. அவ்வேம் அடிக்கடி வூட்டுக்குள்ள வந்துப் பண்ணிட்டுக் கெடக்குற காரியத்தெ கேள்விப்பட்டு ஊரே நாறிக் கெடக்குதுத்தாம்!"ன்னு சலிச்சிக்கிட்டே அதுவும் வேனுல ஏறி உக்காருது.
            "யிப்போ! என்னாம்பீ பண்றது?" அப்பிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "சீப்பே ஒளிச்சி வெச்சிட்டா, அய்யர்ர மறைச்சி வெச்சிட்டா அதுக்காக கலியாணமா நின்னுடப் போவுது? அவ்வேம் கெடக்குறாங் வுடுங்க. அவனும் தாய் மாமம்தாம், நாமளும் தாய் மாமம்தானே பயலுக்கு. பாத்துக்கிடலாம் வாங்க." அப்பிடிங்கிது வீயெம் மாமா.
            "நீஞ்ஞ ன்னா சொல்ல வர்றீங்கன்னு புரியலீயே யம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யெப்பாடி டிரைவரு! நீரு வண்டிய எடுப்பா! இஞ்ஞ காத்துக் கெடக்குறதுல்ல புண்ணியங் இல்லீ! இதெ அத்தாம்கிட்ட சொல்லி நாம்ம புரிய வைக்குறதுக்குள்ளு கலியாணம் ஆயி பேரப் புள்ளையே பொறந்துடும்!"ங்குது வீயெம் மாமா.
            "பெரியம்பீ யில்லாமலயே கெளப்பிறார்லாங்றீங்ளா?"ங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "நேரமாவுது அத்தாம்! சோலி முடிஞ்சா அவுங்கவுங்களும் திரும்ப வந்து அவுங்கவுங்க வேலயப் பாத்துட்டுக் கெடப்பாய்ங்க பாருங்க. அவுங்கள வேற புடிச்சிப் அடைச்சிப் போட்டுக்கிட்டு ஏம் அழகு பாத்துக்கிட்டு? இப்பிடி நடக்குறதெல்லாம் பொண்ணு பாக்கப் போறப்போ, மாப்புள்ள பாக்கப் போறப்ப சகஜம். அதெல்லாம் ஒண்ணுஞ் சொல்லி, எதுவும் பண்ணித் தடுக்க முடியா. அவனெ வூட்டுலேந்து கெளப்புணம்னு நெனைச்சா நாம்ம இன்னிக்கு பொண்ண பாக்க முடியா. இன்னும் ஒரு பத்து நாளு ஆவும். பழக்க வழக்கமெல்லாம் அவனுக்குப் பத்தாது அத்தாம். காசி இருந்துட்டா போதும், எதெ வேணும்னாலும் பண்ணலாம்ன்னு நெனைக்கிற பயெ அத்தாம் அவ்வேன்! இன்னிக்கு ஒரு நாளு பொண்ணு பாக்க வந்துப்புட்டா, ஒரு நாளு வேலெ, அந்த வேலையால போற சம்பளம்னு கணக்குப் போட்டுப் பாக்குற பயெ அத்தாம் அவ்வேம்! இன்னிக்கு ஒரு நாளு கொல்லம்பட்டியில மரம் பாப்பேம்ன்னு சொன்னாக்கா கெளம்பி வருவாம். அத்தாம் மவனுக்கு மருமவனுக்குப் பொண்ண பாக்கணும்னு சொன்னாக்கா நமக்கு வேற வேல சோலி இல்லியான்னு நெனைப்பாம் அத்தாம் அவ்வேம்!" அப்பிடிங்கிது வீயெம் மாமா.
            "போறது போறேம். ஒத்தப் படையில போறப்பத்தாம் எண்ணிக்கெ கணக்குல்லாம். ரெட்டப் படையில எண்ணிக்கெ வந்திடுச்சின்னா எந்தக் கணக்கும் யில்ல. அப்பிடி கணக்கு இடிக்குதுன்னா டிரைவரு யம்பீய ஒரு கணக்கா வெச்சிப்பேம். சரியா வந்துடுமில்லா!"ங்குது ரசா அத்தை.
            "அவ்வளவுதாங்‍ பேசிட்டே நிக்குறதுல பிரயோசனமில்லே. வண்டிப் போயிட்டே இருக்கட்டும், நாம்ம பேசிட்டே போவலாம்!"ங்குது வீயெம் மாமா.
            "ஆமாம்பீ! போதும்பீ! சேட்ட மூட்டெ செவ்வாய் கெழமையல்லாம் தூக்கி வண்டியில போட்டுட்டு போவுறாப்புல ஆயிடப் போவுது. இப்போ இருக்குற சனங்களே போதும். கெளம்புவோம் யம்பீ!" அப்பிடிங்கிறாரு இப்போ வேலங்குடி சின்னவரு. வேனுல இருக்குற ஆளாளுக்குக் குமரு மாமாவ திட்ட ஆரம்பிக்கிறாங்க இப்போ. "இப்பிடியும் ஒரு மனுஷம் இருப்பானா?"ங்குது முருகுவோட அம்மா.
            "செரி! இத்து இப்பிடித்தாம் நடக்கணும்னு இருந்தா அதெ யாரு வந்து என்னத்தெ மாத்துறது?"ங்றாரு சுப்பு வாத்தியாரு. இருந்தாலும் அவரு மனசுக்குள்ள குமரு மாமா ஏம் இப்பிடிப் பண்ணுதுன்னு ஒரே கொழப்பமா இருக்குது. மலையேறணும்னாலும் மச்சான் தயவு வேணும்பாங்க. இங்க மச்சாம் தயவு வேணும்னா மலையே கொண்டு வாரணும் போலருக்கு. 
            இப்போத்தாம் வேன் கொல்லம்பட்டிய நோக்கி குமரு மாமாவோட பட்டறையிலேந்து கெளம்ப ஆரம்பிக்கிது குமரு மாமா மட்டும் இல்லாம.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...