3 Mar 2020

காட்டுல, மேட்டுல, ஆத்துல வுழுந்து ஒரு சோதனெ!

செய்யு - 376

            மாப்புள்ள பையன் வாத்தியாரு வேலையில இருக்குறாம்னு கேள்விப்பட்டதுமே சாமிமலெ ஆச்சாரிக்கு எல்லாமும் பிடிச்சிப் போச்சு. கேக்குற நகையை, சீர் சனத்தியெ போட்டு கல்யாணத்தெ முடிச்சி வைக்கிறேம்ங்றாரு. பேச்சு கொஞ்சம் தெனாவெட்டான பேச்சாத்தாம் இருக்கு.
            "ஒஞ்ஞ பொண்ணு. ஒங்களால முடிஞ்சதெ செஞ்சிப் போட்டு அனுப்பி வெச்சா போதும். இத்து வேணும்னு, அத்து வேணும்னுலாம் கேக்க மாட்டேம்." அப்பிடின்னு வெங்கு சொன்னதுக்கு, "அப்பிடில்லாம் சொல்லப் படாது. என்ன வேணும்னு சொன்னாக்கா அதெ அப்பிடியே செய்வாம் இந்தச் சாமிமலெ ஆச்சாரி! சாதாரணமா நெனைச்சிப்புடாதீங்க சாமிமலெ ஆச்சாரிய. கொல்லம்பட்டியில வெசாரிச்சிப் பாத்தீங்கன்னா தெரியும்"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "அதெல்லாம் பெறவு. நீஞ்ஞளும் ஒரு தபா வந்து பையனெ பாத்துக்கிட்டீங்கன்னா, பையன ஒஞ்ஞளுக்குப் பிடிச்சிப் போச்சின்னா பையனெ அழைச்சாந்து காட்டி பொண்ணு பிடிச்சிருக்கான்னு கேட்டுப்புடலாம். நீஞ்ஞளும் பையனெ பிடிச்சிருக்கான்னு பொண்ணுகிட்டெ கேட்டுக்கிடலாம். நம்ம காலம் மாரி இல்லா இப்போ. புள்ளீக மனசுல ஆயிரத்தெ வெச்சிருக்குதுங்க. அதால அதுகளோட சம்மதமும் தேவைப்படுதுல்லா!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம நம்ம பொண்ண அப்பிடி வளக்கல. இதாங் பையம்னு காட்டுனா கட்டுற தாலிக்குக் கழுத்தெ நீட்டியாவணும். பின்னே கஷ்டப்பட்டு காசிய சேத்து நகை நெட்டு சீரு சனத்திய செஞ்சி கட்டி வைக்கப் போறவேம் நாம்ம. நாம்ம காட்டுற பையனெ கட்டிக்க தோது ல்லன்னா அதுகளா சம்பாதிச்சி காசிய சேத்துக்கிட்டு அதுக பிடிச்சப் பையனெ கட்டிக்கிடணும்லா!"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "இந்தக் காலத்து புள்ளீக. ரொம்பல்லாம் கட்டாயம் பண்ணக் கூடாது. பொண்ண பொருத்தமட்டுல எஞ்ஞளுக்குத் திருப்தி. மொதல்ல பாக்க வந்தது ஒஞ்ஞ பொண்ணுத்தாம். அதுவே திருப்தியா அமைஞ்சிப் போச்சிது. ஒஞ்ஞளுக்கு வந்துப் பாத்து திருப்தின்னா மேக்கொண்டு பாக்கலாம்!"ன்னு சொல்லிட்டு உக்காந்திருந்த பாயிலேந்துக் கெளம்ப எழுந்திரிக்கிறாரு சுப்பு வாத்தியாரு.
            "யாரும் எழுந்திரிக்கக் கூடாது. நம்ம வூட்டுல கைய நனைச்சிட்டுத்தாம் எழுந்திரிக்கணும். சுளுவா பலகாரத்தையும், டீத்தண்ணியையும் கொண்டாருங்க பொண்டுகளா!"ன்னு உள்ள சத்தத்தெ கொடுக்குறாரு.
            "சம்பந்தம் முழுசா முடியாம கை நனைக்கிறது நம்ம வகையறாவுல வழக்கத்துல கெடையாதுல்லா!"ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "அத்து வேற. சம்பந்தியா ஆவுறோம், ஆவல, அத்த வுட்டுத் தள்ளுங்க. நம்ம வூட்டுக்கு அவுக வந்திருக்காக. அவுக வூட்டுக்கு நாம்ம போவப் போறேம். வூட்டுக்கு வந்த விருந்தாளிய வெறு வாயோட அனுப்பிச்சிட முடியா. நீஞ்ஞ எஞ்ஞ வூட்டுக்குப் பொண்ணு பாக்க வந்ததாவே நெனைக்கல. விருந்தாடியத்தாம் நம்ம சொந்தக்கார சனம் வந்திருக்கிறதாவே நெனைக்கிறேம். சொந்தக்கார சனம் வர்றப்ப ச்சும்மா ஒண்ணும் பண்ணாம அனுப்பிட முடியுமா?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.        
            "நமக்கு ஒண்ணும் அட்டியில்ல. நீஞ்ஞ கொண்டாறதெ கொண்டாங்க. சாப்புட்டுட்டே கெளம்புறோம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு. அப்பிடி பலவாரத்தையும், டீத்தண்ணியையும் சாப்பிட்டே கெளம்புறாங்க பொண்ண பாக்க வந்த மூணு பேரும்.
            கெளம்புறப்ப, "ஒரு வாரத்துல வந்துப் பாக்குறேம்!"ன்னு சொன்ன சாமிமலெ ஆச்சாரி, ஊர்லேந்து ஒரு ஆளையும் துணைக்குக் கெளப்பிக்கிட்டு ரண்டே நாள்ல விடியக் கருக்கால்லா திட்டையில டிவியெஸ் சாம்புல வந்து நிக்குறாரு. ரொம்ப தூரம் வாராதால என்னவோ ஒத்தக் கையில மட்டும் சட்டைய போடாம ரெண்டு கையிலயும் மொறையா போட்டிருக்காரு. அவரு வந்து நின்னப்பா நேரத்தப் பாத்தா ஆறு மணி கூட ஆவல. விடிஞ்சிம் விடியாம அவரு ஒரு ஆளோட வந்து நின்னதெ பாக்குறப்ப, இப்பிடியா ஒரு மனுஷன் அம்மாம் தூரத்துக்கு டிவியெஸ் சாம்புலயே, எப்பிடியும் அம்பது மைலுக்கு மேல இருக்கும் தூரத்தெ கடந்து வந்து, அதுவும் நடுராத்திரியில தூங்காம கொள்ளாம கெளம்பி வந்து நிப்பாம்னு மனசுக்குள்ள கேள்வி எழும்புது. அதெ அவரே வெளிப்படையா சொல்லவும் செஞ்சாரு.
            "நீஞ்ஞ வந்துப் பாத்துட்டுப் போன ரண்டு நாளா சரியான ராத்தூக்கமில்லெ. பையனெ வந்துப் பாத்துப்புட்டு ஒரு முடிவுக்கு வந்தாத்தாம் தூக்கம் வாரும் போலருக்கு. அதாங் கெளம்பி வந்துட்டேம். இத்து ஒண்ணுக்குக் கதெயெ கட்டி விட்டுப்புட்டேம்னா அடுத்தடுத்துக் கதையெ கட்டி வுட ஒரு வழி கெடைக்குது பாருங்க. குடும்பத்துல மூத்ததுக்கு எல்லாம் ஆயிட்டுன்னா மித்ததுக்கு எல்லாம் ஆயிடும்பாங்க. பையெம் எழுந்திரிச்சிட்டாப்புலயா? இந்தக் காலத்துப் புள்ளீவோ காலையில சட்டுன்னு எழுந்திரிக்காதுல்லா!"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            அவர்ர வாங்க வாங்கன்னு கூப்புடுறதுக்குள்ள இவ்வளவையும் படபடன்னு பேசி முடிக்கிறாரு. அவர்ர வூட்டுக்குள்ள கொண்டாந்து உக்கார வெச்சி, "அவ்வேம் நாலு மணிக்குல்லாம் எழுந்திரிக்கிற கேஸூங்க. எழுந்திரிச்சி அவ்வேம் வேலைகளப் பாத்துப்புட்டு, தெடலு பக்கம் ஒரு நடை நடந்துட்டுத்தாம் ஏழு ஏழரை மணி வாக்குல வருவாம். வந்தாம்ன்னா குளிச்சிட்டுச் சாப்பிட்டுட்டு எட்டரைக்கெல்லாம் கெளம்பிடுவாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு. வந்த ஒடனேயே பாத்துட்டுப் பேசிட்டுக் கெளம்பிடலாம்னு நெனைச்ச சாமிமலெ ஆச்சாரிக்கு அப்பிடி முடியாமப் போயிடுச்சி. அவரு விகடு வர்ற வரைக்கும் உக்காந்து பாக்குறாப்புல ஆயிடுச்சு. அப்படி உக்காந்து பேசுறுப்ப பல சங்கதிகள பேசுறாரு. பேசிக்கிட்டெ, "பையெம் பள்ளியோடத்துக்குப் போறதுல்லாம் பைக்குலத்தாம்னே?"ங்றாரு.
            "யில்ல சைக்கிளு. அவனுக்கு பைக்குல்லாம் வுடத் தெரியாது!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்லப் போவ, சாமிமலெ ஆச்சாரிக்கு சந்தேகமாப் போயி, போறி தட்டிடுச்சிப் போலருக்கு. "இந்தக் காலத்துல எவ்வம்டா வாத்தியாரு பைக்கு இல்லாம இருக்காம்? பைக்குல போனாத்தாம்லா கவர்மெண்டு வாத்தியாரு. ஒரு வேள இவுங்க கவர்மெண்டு வாத்தியாருன்னு பொய் சொல்லி பையனெ எம்மட பொண்ணுக்குக் கட்டி வைக்கப் பாக்குறாங்களா? இதெ மொதல்ல கண்டுபிடிச்சி ஆவணுமே!"ன்னு மனசுக்குள்ளயே நெனைச்சிட்டு இருந்திருப்பாரு போல.
            அவரு அப்பிடி நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்பவே ஏழு மணி வாக்குல தெடலுக்குப் போயிட்டு நடந்துட்டு வந்த விகடு வர்றாம். சாமிமலெ ஆச்சாரி விகடு வந்துதும் பாக்குறாரு. இவனும் அவர்ர பாத்துப்புட்டு ஒரு கும்புடு போட்டாம். அவ்வளவுதாம். மித்தபடி வாங்கன்னு ஒரு வாத்‍தெ கூட சொல்லல. "நாஞ்ஞ கொல்லம்பட்டி. ஒங்கள பாக்குறதுக்குத்தாம் வந்திருக்கேம்!" அப்பிடிங்கிறாரு சாமிமலெ ஆச்சாரி. அதுக்கு விகடு சரிங்றது போல ஒரு தலையாட்டுத்தாம். அவ்வேம் இப்பிடி பண்றதெப் பாத்துப்புட்டு, பேச்சு வருமாங்ற சந்தேகம் சாமிமலெ ஆச்சாரிக்கு வந்திருக்கணும். "தம்பீ! எஞ்ஞ சோலி பாக்குறாவோ?"ன்னு ஒரு கேள்வியப் போடுறாரு. "கோட்டகம்"ன்னு ஒத்த வார்த்தெதாம் அதுக்குப் பதிலா விகடுவோட வாயிலேந்து வருது.
            "பையன் மனசுக்கு நெறைவாத்தாம் இருக்காம். ன்னா பேச்சுத்தாம் ரொம்ப பேச மாட்டேங்றாம். நாலு வார்த்தைக்கு ஒத்த வார்த்தை வாங்குறது கஷ்டமா இருக்கு. வாத்தியார்ரா இருக்குறவேம் இந்த மாதிரிக்கி பேயாமல்லாம் இருக்க மாட்டாம். ஒத்த வார்த்தைக்கி நாலு வாத்தையில்லா வெளக்கம் கொடுக்குறாப்புல பேசுவாம். இப்பிடி இருக்கிறவேம் புள்ளைகளுக்கு ன்னாத்தா பாடத்தெ சொல்லிக் கொடுப்பாம்? இவ்வேம் நடைமொறையப் பாத்தாக்கா இவ்வேம் வாத்தியாருதான்னா ன்னான்னு தெரியலயே. இவ்வேம் வாத்தியாராத்தாம் இருக்கானான்னு சோதனெ பண்ணிப்புட்டா மித்ததெ பாத்துகிடலாம்! இந்தக் காலத்துல ஆர்ர நம்பு முடியுது?"ன்னு நெனைச்சிக்கிறாரு.

            இப்பிடி ஒரு சந்தேகம் அவரு மனசுக்குள்ள வந்த பிற்பாடு, அவருக்குன்ன எடுத்து வெச்ச பலவாரத்தையும், டீத்தண்ணியையும் குடிக்காம, "காலையிலேந்து வவுறு ஒரு மாரியா இருக்கு. ராத்திரியே எழும்பிக் கெளம்புனதுல ஒடம்புக்குக் கொஞ்சம் முடியாம இருக்கு! சாப்புட்டா செரிபட்டு வாராதுன்னு நெனைக்கிறேம்!"ன்னு ஒரு பொய்யை அவுத்து விடுறாரு. கூட அழைச்சாந்த ஆளையும் அதே மேனிக்கி அவுத்து வுடுறாங் மாதிரி கண்ணால சாடையக் காட்டிப்புட்டு ஒண்ணுஞ் சாப்புடாமலே கெளம்புறாரு. ஒருவேளை கைய நனைச்சுப்புட்டா சந்தேகத்தெ நெவர்த்திப் பண்ணாம சம்பந்தம் பண்ணிப்புட்டதா ஆயிடுமேன்னு சாமர்த்தியமா அப்பிடி நடந்துக்கிறதா அவருக்கு ஒரு நெனைப்பு.
            "ஊருல வேல சொலி நெறையக் கெடக்குதுங்க. ராத்தூக்கம் பிடிக்காததால போட்ட வேலைய போட்டப்படி போட்டுக்கிட்டு ஓடியாந்திட்டேம். காலங்காத்தால கடையெ தொறக்குறதுக்கு மின்னாடி நாலு பேரு வந்து நிப்பாம் இன்னிக்கு. அதால நாங்க கெளம்புறேம். வூட்டுலயும் கலந்துகிட்டு நாம்ம ஒஞ்ஞளுக்கு ஒரு தகவலெ கூடிய சீக்கிராத்தால சொல்லிப்புடறேம்!"ன்னுட்டு கெளம்புறாரு சாமிமலெ ஆச்சாரி. அப்படிச் சொல்லிட்டு டிவியெஸ் சாம்ப கெளப்பிக்கிட்டு, அழைச்சாந்த ஆளோட நேரா கோல்லம்பட்டிக்குப் போவல. ஊருக்குப் போறாப்புல போயி அப்பிடியே திரும்பி அங்க இங்க பையனெ பத்தி விசாரிச்சிப்புட்டு திட்டைக் கடைத்தெருவுல நின்னுகிட்டு இருக்காரு. கடைத்தெருவுலேந்து ஒரு தெரு தள்ளி உள்ளார போற ரோட்டுலேந்துதாம் விகடு சைக்கிள்ல கோட்டகம் பள்ளியோடத்துக்குப் போயாவணுங்றதெ விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டவரு,  பள்ளியோடத்துலயும் ஒரு பார்வெ பாத்துப்புடணும்னு முடிவோட நிக்குறாரு.
            எட்டரை மணி வாக்குல சைக்கிள்ல அந்த எடத்தெ விகடு கடந்துப் போறப்ப அவருக்கு ஒரு நம்பிக்கைப் பொறக்குது. அவரும், அவரு பின்னாடி வந்த ஆளும் டிவியெஸ் சாம்புல விகடுவுக்குத் தெரியாம பின்தொடர்ந்து போறாங்க.  அத்து வெள்ளையாத்துல தண்ணி வராத ஜூன் மாசத்தோட கடெசி. ஆத்துல தண்ணி வர்ற வரைக்கும் களிமங்கலத்துலேந்து கோட்டகத்துக்குப் போறதுக்கு வெள்ளையாத்துப் பாலத்துல யாரும் போறதில்லெ. வெள்ளையாத்துக்குள்ளயே எறங்கித்தாம் போவாங்க. தண்ணிக் கொறைஞ்சால வெள்ளையாத்துல எறங்கிப் போற சனங்களாச்சே. ஆறு வறண்டு கெடக்குறப்ப யாரு பாலத்துல போவாங்க? அதுவும் அந்த மூங்கிப் பாலத்துல?
            விகடு சைக்கிள்ல போற வேகம் அபாராம இருக்கும். ரொம்ப வேகமாத்தாம் சைக்கிள மிதிப்பாம். சைக்கிளுக்கு ஒரு ஸ்பீடோ மீட்டரு வெச்சா அத்து எப்படியும் அந்த வேகத்துக்கு இருவத்தஞ்சு கிலோ மீட்டரு வேகத்தெ காட்டும். அதெ வேகத்துல களிமங்கலத்து ரோட்டுலேந்து வெள்ளையாத்து கரையோராமா ஒடைச்சித் திருப்புறாம். அப்பவும் வேகம் கொறையல. அதே வேகத்தோட அப்பிடிக் கரையோராமா ஒரு நுறு தப்படி போயி ஆத்துல வண்டிய சர்ருன்னு எறக்கி சர்ருன்னு ஏத்துறாம் விகடு. சைக்கிளு ஏறுனா, "ஹோய்"ன்னு புள்ளைகளோட சத்தம் காதெ கிழிக்குது. ஆத்துல எறங்கி ஏத்த வேண்டிய சைக்கிள எறங்காம ஏறுனவேம், சைக்கிள்ல ஏறிப் போவ வேண்டிய ரோட்டுல ஏறிப் போவாம புள்ளைகளோட எறங்கி நடந்துப் போறாம்.
            வெள்ளையாத்துக் கரையோராம மூங்கிக் காடா அதுக்கு இடையில ஒத்தையடிப் பாதையப் போலத்தாம் வழி போவும்.         பின்னாலயே கொஞ்சம் தூரத்துலயே வந்து இதெ பாத்துக்கிட்டே வர்ற சாமிமலெ ஆச்சாரி, "இவ்வேம் ன்னா காட்டுக்குள்ள பூந்து, மேட்டுல ஏறி, ஆத்துக்குள்ளல்லாம் சைக்கிள எறக்கிக் கண்டமேனிக்கிப் போறாம். நெசமா இவ்வேம் வாத்தியாரு வேலைத்தாம் பாக்குறானாம்? இப்பிடி ஒரு ஊருக்குள்ள பள்ளியோடம்லாம் இருக்குமா?"ன்னு சந்தேகமாயிப் போவுது சாமிமலெ ஆச்சாரிக்கு. அதே சந்தேகத்தோட அவரும் அந்த ஒத்தையடிப் பாதையில டிவியெஸ் சாம்ப உள்ளார வுட்டு, அங்கங்க நீட்டிக்கிட்டு இருக்குற மூங்கி விளாருல்ல ஒடம்பு படாம சாமர்த்தியமா வளைஞ்சு நெளிஞ்சு வண்டிய வுட்டு, ஆத்துக்குள்ள வண்டிய எறக்கி ஏத்துன்னா வண்டி ஏற மாட்டேங்குது. நின்னுப் போயிடுச்சு. இதென்னடா மோட்டாரு வண்டி எறங்கி ஏற முடியாத ஆத்துக்குள்ள ஒருத்தெம் சைக்கிள்ல எறங்கி ஏறுறாம்னு அவரு நெனைச்சிக்கிட்டு இருக்கிறப்பவே கோட்டகத்து ஆளுங்க நாலைஞ்சுப் பேத்துங்க அதெ மாதிரிக்கி சைக்கிள்ல எறங்கி ஏறுறாங்க. அத்து செரி இத்து இவுங்களுக்குப் பழகிப் போயிடுச்சிப் போலருக்குன்னு நெனைச்சிக்கிறாரு சாமிமலெ ஆச்சாரி.
            பின்னால உக்கார வெச்சி அழைச்சிட்டு வந்த ஆளெ எறங்கச் சொல்லி, அவரும் எறங்கி வண்டிய மறுக்கா ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு, பின்னாடி வந்த ஆளெ வண்டியப் பிடிச்சி தள்ள சொல்லிக்கிட்டு, இவரு ஆக்ஸிலேட்டர்ர கொடுத்துக்கிட்டு வண்டிய தள்ளிக்கிட்டே கரைக்கு மேல கொண்டாந்தா அவருக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது. மூச்செ வாங்கிகிட்டே பின்னாடி வந்து ஆளுகிட்டெ சொல்றாரு, "இப்பிடியுமாடா நாட்டுல கெராமம் இருக்கி? ஆத்துக்கு ஒரு பாலமே இல்லாத கெராமத்துல எவ்வம்டா பள்ளியோடத்தெ கட்டி வெச்சிருக்கப் போறாம்? ஒண்ணுமே புரிலயடா ஒலகநாதா! வந்தது வந்தாச்சி. முழுசா பாத்துப்புடுவேம். சைக்கிளு எந்தத் தெசையில போனிச்சி. இந்தத் தெசையிலயா? அந்தத் தெசையிலயா?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி. அதுக்குப் பின்னாடி வந்த ஆளு, "இப்பிடிதாங் கெழக்கால! அக்கரையிலேந்து பாத்தப்போ புள்ளீவோ கொஞ்சம் சேந்துப் போனாப்புல தெரிஞ்சுதுங்களே"ன்னு கையக் காட்டுறாரு. சரின்னு கெழக்கால வண்டியக் கெளப்பிக்கிட்டு கொஞ்ச தூரம் போனாக்கா வடக்கால வெளிர் நீல நெறத்துல காம்பெளண்டு, அதுக்குள்ள நீல நெறத்துல கட்டடம் எல்லாம் தெரியுது. "ன்னடா இத்து! ஒண்ணுமே இல்லாத ஊருக்கு இப்பிடிக் காம்பெளண்டு, கட்டடமெல்லாம் சோக்கா பெயிண்டு எல்லாம் அடிச்சி? நெசமாலுமே பைய்யேம் வாத்தியாருத்தாம் போலருக்கு."ன்னு நெனைச்சிக்கிட்டு அங்கன இங்கன நின்ன ஆளுகள விகடுவோட பேர்ர சொல்லி விசாரிச்சாக்கா, "யாரு வாத்தியாரம்பீயக் கேக்குறீங்களா? நம்ம பள்ளியோடத்து வாத்தியாரம்பீல! நீஞ்ஞ?"ங்றாரங்க அவுங்க.
            "நாஞ்ஞ ஒறவுக்காரவுங்க. அதாங்! கொஞ்சம் பாத்துப் பேசணும்னு வந்தேம்."ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "ம்ஹூம்! பேசுனாப்புலத்தாம்!"ன்னு சொல்லிப்புட்டுச் சிரிக்கிறாங்க அவுங்க.
            "ஏஞ் சிரிக்கிறீங்?"ங்றாரு சாமிமலெ ஆச்சாரி.
            "புள்ளியோளுக்குப் பாடம் நடத்த மட்டும்தாம் பேச்சு வரும் வாத்தியாரம்பீக்கு. மித்தபடி பெறத்தியாரோட நாலு வார்த்தெ சேந்தாப்புல பேச்ச வாராது. அளந்து வெச்சாப்புலல்லா பேசும் வாத்தியாரம்பீ! அதுகிட்டே போயி பேசி வார்த்தைய வாங்குறதுக்கு செவுட்டுப் பயகிட்ட பேசி வார்த்தையெ வாங்கிப்புடலாம். காரியத்துலல்லாம் கண்ணாத்தாம் இருக்கும். வெளிப்பழக்கமுல்லாம் பத்தாது. அது உண்டு வேலையுண்டுன்னு கெடக்குற ஆளும்பீங்க அத்து."ங்றாங்க அந்த ஆளுங்க.
            இதெ கேட்டதும் இனுமே விசாரிக்க ஒண்ணுமில்லைன்னு தோணுடிச்சி சாமிமலெ ஆச்சாரிக்கு. அப்பிடி‍யே வண்டிய திருப்புறாரு.
            "ஏங் வண்டிய திருப்பதீரு? ச்சும்மா போயிப் பாருங். பேசுவாப்புல யம்பீ!"ங்றாங்க ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிக்கிட்டு.
            "யில்ல! நாஞ்ஞ அவுங்க அப்பாருகிட்டயே பேசிக்கிறேம்!"ன்னு சொல்லிப்புட்டு சாமிமலெ ஆச்சாரி, "இந்த ஊர்லேந்து வெளிக் கெளம்புணும்ன்னா ஆத்துல வுழுந்துத்தாம் கெளம்புணுமா?"ங்றாரு. 
            "இப்பிடிக்கி இந்தக் கரையோரமாவே நேராக்க போனாக்க ஓகையூரு வாரும். அஞ்ஞயிருந்து பிடிச்சி வடக்கால போனாக்கா மூலங்கட்டளெ. தெக்கால போனாக்க வடவாதி. பிடிச்ச தெசையில போயிக்கிடலாம். குறுக்கால அந்தாண்ட போவணும்னா ஆத்துல வுழுந்துத்தாம் போவணும்."ங்றாங்க.
            இப்பிடி காட்டுல, மேட்டுல, ஆத்துல வுழுந்து எறங்கி மாப்பிள்ளப் பையனெ சோதிக்க வேண்டிருக்கேன்னு நெனைச்சிக்கிட்டு, டிவியெஸ் சாம்ப ஓகையூரு பக்கமா திருப்பி, அப்பிடியே மூலங்கட்டளெ வழியே ஆர்குடி போயி ஊரு போன சாமிமலெ ஆச்சாரி, மறுநாளுலேந்து, "எப்ப பையனெ அழைச்சிட்டுப் பொண்ண பாக்க வர்றீங்க?"ன்னு நச்சரிக்க ஆரம்பிச்சிட்டாரு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...