2 Mar 2020

ஒத்தக்கையி சட்டைக்காரரு!

செய்யு - 375

            ஏதோ ஒண்ணு மனசுக்குப் பிடிச்சிப் போயிடுது. அந்த பிடிச்சுப் போற ஒண்ணுத்தாம் காரியத்தெ நடத்தி வைக்குது. நேரியப்பரு ஆபீஸ்ல பார்த்த சாதகத்துல சுப்பு வாத்தியாருக்குப் பிடிச்சிப் போன அம்சம் பொண்ணுக்கு ரெண்டு அம்மாங்ற சங்கதித்தாம். சுப்பு வாத்தியாரும் ரெண்டு அம்மாக்கள்ட்ட வளர்ந்த ஆளாச்சே. அவரோட மூத்த அம்மாவான பெரிம்மாவுக்குப் புள்ளைங்க கெடையாது. ரண்டவாது அம்மாவான சின்னம்மாவுக்குத்தாம் இவருல்லாம் புள்ளைங்களா பொறந்தாங்க. அதே  மாதிரிக்கித்தாம் இருக்கு அந்தப் பொண்ணோட குடும்பமும். மூத்தவங்களுக்குப் புள்ளைங்க கெடையாது. ரண்டாவதுக்குத்தாம் புள்ளைங்க இருக்கு. இந்த விவரத்தெ சாதகத்துக்குக் கீழே ஒரு குறிப்பப் போல எழுதியிருக்காங்க. அதெ படிச்சிப் பாத்ததும், "இதென்னடா நம்மட குடும்பத்தெ போல அச்சு அசலா அப்பிடியே யிருக்கே! அப்போ கட்டுனா இந்தக் குடும்பத்துலேந்த்தாம் மவனுக்குப் பொண்ண கட்டி வைக்கணும்"னு முடிவே பண்ணிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            சுப்பு வாத்தியாரு மவனுக்கு ஒரு வாத்திச்சிப் பொண்ணா பாக்கணும்னு போயி இப்பிடி மனசு மாறிட்டாரு. அத்தோட அந்தப் பொண்ணும் வாத்திச்சிக்குப் படிச்சிருக்கு. செரி பரவாயில்ல இந்தப் பொண்ணுத்தாம் சரின்னு ஒரு தீர்க்கத்து வந்த பிற்பாடு நேரியப்பருகிட்ட பேசுறாரு, "ஊருல போயி சாதகத்துப் பொருத்தத்தப் பாக்குறேம். பொருத்தப்பட்டா இந்தப் பொண்ணையே முடிச்சிப்புடலாம்! நீங்கத்தாம் தொணையா இருந்து இதெ முடிச்சித் தரணும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒண்ணுக்கு நூறா சாதகம் நம்மகிட்ட இருக்கு. இன்னும் நாலு சாதகத்து வேணும்னாலும் ஆர அமர பாத்து உக்காந்து எடுத்துட்டுப் போங்க. ஒண்ணும் அவசரமில்லா. ஊருக்குப் போயி வூட்டுல ந்நல்லா கலந்துக்குங்க. திருப்திப்பட்டா... அதுக்குப் பெறவு நமக்குப் போன் பண்ணுங்க. பொன் நம்பரெ எழுதித் தர்றேம். போன் பண்ணித் தகவலச் சொல்லுங்க. அவுங்களும் பொண்ணுக்குக் கல்யாணத்தெ முடிக்கணும்னுத்தாம் நிக்கிங்க. பேசி வுட்டாக்கா காரியம் முடிஞ்சிப் போயிடும். நம்ம ஆபீஸ்க்கு வந்த மொத நாளுல்லயே யோகம் உண்டாச்சுன்னா நமக்கும் சந்தோஷந்தானே!"ங்றாரு நேரியப்பரு.
            சுப்பு வாத்தியாரு தலைய ஆட்டிக்கிட்டு, நேரியப்பரு கேட்ட காசிய அவரு கையில கொடுத்துட்டுக் கெளம்புனவரு, ஊருக்கு வந்து வெங்குகிட்ட கலந்துகிட்டாரு. அவருக்கு ரொம்ப திருப்திப்பட்டுப் போச்சுங்ற சங்கதியெ சுப்பு வாத்தியாரோட பேச்சே காட்டிக் கொடுத்து. அதெ புரிஞ்சிக்கிட்ட வெங்கு, "அப்பிடின்னா! ஊருல நாலு பேரு, சொந்தத்துல நாலு பேர்ர கொண்டுட்டுப் போயி பொண்ண பாத்துட்டு வந்திடுவோமே!"ங்குது வெங்கு.
            "அப்பிடி பண்ண வாணா! மொதல்ல நாமளும், நீயும் நேரியப்பரோட போயி ஒரு பார்வெ பாத்துப்பேம். திருப்திப்பட்டா மவனையும் அழைச்சிக்கிட்டு ஊருல நாலையும், சொந்தத்துல நாலையும் கெளப்பிக்கிட்டுப் போவேம். எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு அஞ்ஞப் போயி, அஞ்ஞ பொண்ணு பிடிக்கலன்னு சொல்லப்படக் கூடாது பாரு. அதுவுமில்லாம பொண்ணுப் பாக்க வர்றேம்னு சொல்லிட்டுப் போறதெ வுட எதுவும் சொல்லாம திடீர்னுப் போயி நிக்குறதாங் பல வெசயங்கள காட்டிப்புடும்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுவுஞ் செரித்தாம். இப்போ விசயத்தெ வெளியில வுட வாணாம். கமுக்கமாவே இருக்கட்டும். மொதல்ல நீஞ்ஞப் போயி நாட்டியத்தாங்குடி ஆளுகிட்டெ சாதகத்தெ காட்டிப் பொருத்தம் இருக்காம்னு பாத்துப்புடுங்க. மேக்கொண்டு இதுல நீஞ்ஞ சொல்றபடியே பாத்துக்கிடலாம்!"ன்னு சொல்லுது வெங்கு.
            "அங்ஙன எடுக்குறப்பவே பொருத்தமுள்ள சாதகமாத்தாம் பாத்து எடுத்துக் கொடுக்குறாரு நேரியப்பரு. இருந்தாலும்நம்ம திருப்திக்கு ஒரு தபா நாட்டியத்தாங்குடிகாரர்கிட்டயும், கொத்தூரார்கிட்டயும் பாத்துப்புடுவேம். கிட்டதட்ட அவுங்க சொன்ன தெசையிலத்தாம் பொண்ணும் அமைஞ்சிருக்கு. அவுங்களே சாதகத்தப் பாத்துப்புட்டுப் பொண்ணு பொருத்தப்படுமா? படதா?ன்னு சொல்லிப்புடட்டுமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            காலங்காத்தாலயே பொழுது புலராத கருக்கல்லயே எழும்பி டிவியெஸ்ஸ கெளப்பிக்கிட்டு நாட்டியத்தாங்குடிக்கு ஒரு நாளும், கொத்தூருக்கு ஒரு நாளும் போனாரு சுப்பு வாத்தியாரு. சொல்லி வெச்சாப்புல ரண்டு பேரும் ஒரே மாதிரிக்கிச் சாதகப் பொருத்தம் நல்லாவே அமைஞ்சிருக்கிறதா சொன்னதுல மேக்கொண்டு ஆவ வேண்டியதெ பாக்குறதுன்னு முடிவுக்கு வந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. ஒடனே போனைப் போட்டு இன்ன தேதிக்கு வர்றதா சொல்லி, வெங்குவையும் அழைச்சிக்கிட்டு தஞ்சாரூக்கு நேரியப்பரோட ஆபீஸூக்குப் போயி நின்னாரு சுப்பு வாத்தியாரு.

            நேரியப்பரு ஒரு காரை ஏற்பாடு பண்ணி அதுல அழைச்சிக்கிட்டுக் கொல்லம்பட்டிக்குப் போனாரு. இவுங்க சொல்லாம கொள்ளாம கொல்லம்பட்டியில போயி பொண்ணு வூட்டுல எறங்குறாங்க. வூடு சுமாரான வூடுதாம். ரயிலு ஓடு போட்ட வூடு. தெக்குப் பாத்த வூடு. வூட்டுக்கு மின்னாடி ஒரு கொளம் இருக்கு. மேற்கால ஒரு புள்ளையாரு கோயிலு இருக்கு. வூட்டுக்கு மின்னாடி கொளமும், பக்கத்துல ஒரு கோயிலும் இருக்குறாப்புலத்தாம் பொண்ணோட வூடு அமையும்னு சோசியம் பாத்தப்ப ஒரு குறிப்பா ரண்டு சோசியக்காரவுகளும் சொன்னது சுப்பு வாத்தியாரு நெனைவுல வந்து மோதுது. "அட! ன்னா கனக்கச்சிதமா கணிச்சிச் சொல்லியிருக்காங்க. அப்போ இந்த வூட்டுப் பொண்ணுத்தாம் நம்மட மருமவ்வே!"ன்னு மறுக்கா தீர்க்கமா முடிவே பண்ணிட்டாரு அவரு மனசுக்குள்ள.
            இவுங்க ஒண்ணுஞ் சொல்லாம வூட்டுக்குள்ள நொழைஞ்ச நேரத்துல பொண்ணு வூட்டு வேலைகளப் பாத்துக்கிட்டு சமைச்சிக்கிட்டு இருக்கு. பொண்ணு ஒடிசலா, நச்சலாத்தாம் இருக்கு. நெறம்ன்னு பாத்தாக்க மாநிறமாத்தாம் இருக்கு. மொகம் களையா இருக்கு. உசரம் நடுத்தரமா இருக்கு. பொண்ணோட ரண்டு அம்மாக்கள்ல ஒண்ணு உக்காந்து மூக்குக் கண்ணாடியில கண்ண உருட்டு தெரட்டிக்கிட்டுத் தினத்தந்தி பேப்பரைப் படிச்சிகிட்டு இருக்கு. இன்னொரு அம்மா சமையல்ல அது வேலையப் பாத்துக்கிட்டு இருக்கு. திடுதிப்புன்னு இப்பிடி ஆளுக‍ நோழையுறதப் பாத்துட்டுக் கொஞ்சம் தெகைச்சாலும், நேரியப்பர்ரப் பாத்ததும் வெசயம் வெளங்கிடுச்சி அவுங்களுக்கு. ஒடனே, "வாஞ்ஞ! வாஞ்ஞ!"ன்னு சொல்லி பாயை எடுத்துப் போட்டு உக்கார வைக்கிறாங்க. பொண்ண பக்கத்தாப்புல இருக்குற ரூமுக்குக் கொண்டு போயி கொஞ்சம் அலங்காரத்தெ பண்ணுறாங்க. அப்பிடி பண்ணிக்கிட்டு இருக்கிறப்பவே, "அப்பங்காரரு கடைத்தெரு வரைக்கிம் போயிட்டு இருக்காரு!"ன்னு சொல்றாங்க. அப்பிடிச் சொல்லிட்டு பொண்ணோட பெரியம்மா அவர்ர அழைச்சிட்டு வார வெளியில கெளம்புது.
            பொண்ணோட அப்பங்காரரு சாமிமலெ ஆச்சாரி. கொல்லம்பட்டியில ஒரு சினை கடை வெச்சிருக்காரு. ஆயி மரச்சாமான் கடைங்றது அதோட பேரு. அப்பிடி ஒரு போர்டையும் வெச்சிருக்காரு. அந்தப் போர்டுலயே விஷேசத் தேவைகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் ஆடரின் பேரில் செய்து தரப்படும், விஷேசத் தேவைகளுக்குத் தேவையான பாத்திரங்கள், நாற்காலிகள் வாடகைக்கு விடப்படும்னு எழுதி வெச்சிருக்காரு. அந்தக் கடையில முக்காலி, நாற்காலி, பீரோ, கட்டில்ன்னு செஞ்சிப் போட்டுக்கிட்டு யேவாரத்தப் பாத்துட்டு இருக்கிறாரு. அத்தோட விஷேச தேவைக்கு சமையல் பாத்திரங்க, ப்ளாஸ்டிக் நாற்காலி, ஸ்டூலு, பந்தி பரிமாறுறதற்கான டேபிளு இதெ வாடகைக்கு வுடுற யேவாரத்தையும் செஞ்சிக்கிறாரு.
            பொண்ணோட அம்மாக்க ரண்டு பேருமே அக்கா, தங்கச்சித்தாம். அவுங்க ரண்டு பேரும் பாப்பாநாட்டுக்குப் பக்கத்துல இருக்குற கோனாட்டுக்காரவுங்க. மூத்தவுகப் பேரு பவளம். இளையவுகப் பேரு திலகம். மொதல்ல அக்காக்காரியான பவளத்தெ கலியாணத்தெ கட்டுனாரு சாமிமலே ஆச்சாரி. அவருக்குப் பவளத்தெ கட்டிக் கொடுக்க முடியாதுன்னுத்தாம் மொதல்ல கோனாட்டுல சொல்லிருக்காங்க. இவருத்தாம் வம்படியா நின்னு கட்டுனா பவளத்தத்தாம் கட்டுவேன்னு ஒத்தக் காலுல்ல நின்னு கட்டிட்டு வந்திருக்காரு. அப்பிடி தம்புடியா நின்னு கட்டிட்டு வந்தவரு பத்து வருஷத்துக்கு மேல ஆகியும் கொழந்தெ இல்லாம போவ,  கோனாட்டுக்குப் போயி, கொழந்தையில்லன்னு பெரிசா பெரச்சனைப் பண்ணிருக்காரு. தாண்டி தலைகுப்புற வுழுந்திருக்காரு. கொழந்தை வேணுங்றதுக்காக இன்னொரு கலியாணத்தெ பண்ணவும் தயங்க மாட்டேன்னு சவடாலு வுட்டுருக்காரு.
            சாமிமலெ ஆச்சாரி பாட்டுக்கு ஏத்தோ ஒரு பொண்ண இழுத்தாந்து குடும்பத்துல கொழப்பம் உண்டாவுறதுக்கு, அடுத்தப் பொண்ணு திலகத்தை‍யேக் கட்டி வெச்சிப்புடுவோம்னு முடிவு பண்ணிருக்காங்க. அப்பிடி கட்டி வெச்சிப்புட்டா அக்காக்காரியும், தங்கச்சிக்காரியுமா கெடந்து எப்பிடியோ சமாளிச்சிகிடட்டும்னு நெனைச்சிக்கிட்டாங்க. அது கட்டெ வண்டி கொஞ்சம் கொஞ்சமா கொறைஞ்சி மாடு இழுக்கறதுக்கு டயர் வண்டி வந்த கால கட்டம். சாமிமலெ ஆச்சாரி நாலு டயர் வண்டியில எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு சுவாமிமலையில போயி ரண்டவாது கலியாணத்தெ பண்ணிருக்காரு. அப்போ திலகம் பன்னெண்டாவதுதாம் படிச்சிக்கிட்டு இருந்திருக்கு. அத்து செரி! அந்தச் சாமிமலெ முருகன் மாதிரிக்கி இவருக்கும் ரண்டு பொண்டாட்டியா போவும்னு தெரிஞ்சித்தாம் பேர்ர சாமிமலென்னு வெச்சிருக்காங்கன்னு கலியாணத்துக்குப் போன சனங்க எல்லாம் உச் கொட்டினாச்சாம் அப்போ.
            இதுல இன்னொரு சங்கதி இந்நேரத்துக்கு ஒங்களுக்குப் புரிஞ்சிப் போயிருக்கும். அத்து என்னான்னா, இப்படி சாமிமலெ ஆச்சாரி பண்ண ரவுசுல பன்னெண்டாவது படிச்சிட்டு இருந்த திலகத்தோட படிப்பெ பாதியிலயே நிறுத்திப்புட்டு கல்யாணத்தெ முடிச்சாங்கங்றதுதாம். நல்ல வேளையா கல்யாணம் ஆயி நாலு வருஷத்துக்குள்ள திலகம் மூணு கொழந்தையப் பெத்துப் போட்டிடுச்சு. இல்லேன்னா சாமிமலெ ஆச்சாரி மூணாவது கலியாணத்துக்கு தயாரா ஆயிருப்பாரு. அந்த மூணு புள்ளைக, அதுல மூத்தப் பொண்ணுத்தாம் ஆயி. இப்போ விகடவுக்குப் பொண்ணு பாக்கறதுக்காக வந்திருக்கிறது. அடுத்ததா ஒரு பையேம் யோகமலெ. அதுக்கு அடுத்ததா இன்னொரு பொண்ணு பாப்பு. அதுக ரண்டும் காலேஜில படிச்சிக்கிட்டுக் கெடக்குதுங்க. ஆயி ஒண்ணுத்தாம் ஒரத்தநாட்டுல இருக்குற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தோட உறுப்புக் கல்லூரியில பி.ஏ.வும், ஒரத்தநாடு பியெட் காலேஜூல பியெட்டும் படிச்சிப்புட்டுப் போதும்டா இந்தப் படிப்புன்னு வூட்டுல இருக்கு.
            இங்க இப்போ கடைத்தெருப் பக்கமா வேக வேகமா மூச்சு இரைக்க பொண்ணோட பெரிம்மா பவளம் வந்து பொண்ணு பாக்க வந்தச் சேதியச் சொன்னதும், சாமிமலே ஆச்சாரி சட்டையெ ஒத்தக் கையில மட்டும் போட்டுக்கிட்டு, டிவியெஸ்ஸூ சாம்பைக் கெளப்பிக்கிட்டு, அதுல பவளத்தையும் உக்கார வெச்சிக்கிட்டு டர்ருன்னு கெளம்பி வர்றாரு. அதென்ன சட்டைய ஒத்தக் கையில மட்டும் மாட்டுறது, இன்னொரு கையில மாட்ட மாட்டாரான்னாக்கா அவரு அப்பிடித்தாம். ரெண்டு கைக்கும் சட்டையில கையெல்லாம் வெச்சித் தச்சித்தாம் இருக்கு. அவர்ர பொருத்த வரைக்கும் சட்டைப் போடுறதுங்றது அபூர்வம்தான். வெளியில கெளம்புறப்ப வாரப்ப போடுறதுக்குத்தாம் சட்டெ. அதுவும் சட்டைய மாட்டி விடுற ஹேங்கர் போல ஒத்தக் கையில மட்டும் மாட்டுக்கிட்டுத்தாம் போவாரு வருவாரு. அது பாதி ஒடம்பத்தாம் மறைக்கும். மீதி ஒடம்பு சட்டையில்லாமத்தாம் கெடக்கும். அத்து அவரோட அடையாளமாவே ஆயிப் போயிடுச்சி, ஒத்தக் கையில மட்டும்சட்டையப் போட்டு, இன்னொரு கைக்குப் போடாதவர்த்தாம் கொல்லம்பட்டி சாமிமலெ ஆச்சாரின்னு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...