1 Mar 2020

பொண்ணு ஒண்ணு பார்க்க...

செய்யு - 374

            தஞ்சாவூர்ல நேரியப்ப பத்தர்னு ஒருத்தரு. ரொம்ப நாளைக்கி வரைக்கும் நகை செய்யுற, விக்குற வேலையிலத்தாம் இருந்தாரு. தொடர்ந்து அந்த வேலைய செய்ய ஒடம்பும், மனசும் ஒத்துழைக்கலன்னு சொல்லி, ஏதோ ஒரு பொழைப்பைப் பாத்தாத்தானே காலத்தை ஓட்ட முடியும்னு கல்யாண தரகு பண்ற வேலைய செய்ய ஆரம்பிச்சாரு. மொதல்ல கொஞ்சம் அலைச்சலான வேலைத்தாம். என்னவோ அப்பிடி அலையுறது அவருக்குப் பிடிச்சிப் போச்சி. அந்த அலைச்சல்ல ஒரு சொகத்தக் கண்டுகிட்டாரோ என்னவோ! இந்தப் பக்கம் நாகப்பட்டினம் வரைக்கும், அந்தப் பக்கம் புதுக்கோட்டை வரைக்கும் பொண்ணு பாத்து விடுறது, மாப்பிள்ளை பாத்து விடுறதுன்னு தரகு வேலையில ரொம்ப பிரபல்யமாயிட்டாரு.
            ஏதோ ஒரு பொழைப்புக்குன்னு ஆரம்பிச்சதுல அவரு இப்போ கொடிகட்டிப் பறக்குறாரு. ஆரம்ப காலத்துல அலைஞ்சி திரிஞ்சி தரகு பண்ணிட்டுக் கெடந்தவரு இப்போ ஆபீஸப் போட்டு உக்காந்துட்டாரு. உக்காந்த எடத்துலயே தரகு பாத்து சம்பாதிக்கிறாரு. "பொண்ணு அமையலையா மாப்புள்ள கெடைக்கலையா நேரியப்பங்கிட்ட போ! கேக்குற மாதிரிக்கே அளவெடுத்துச் செஞ்சு கொடுத்துடுவாப்புல! அங்கங்க அலைஞ்சி காலத்தெ வெரயமாக்குறதுக்கு, நேரியப்பங்கிட்ட போனா நேர்த்தியா காரியத்தெ முடிச்சிடுவாப்புல!"ன்னு இங்க வகையறாக்குள்ள பேச்சாயிக் கெடக்குது. அவருகிட்ட போனாக்கா கல்யாணம் தட்டிக்கிட்டு வரன் அமையாம முத்திப் போயிக் கெடக்குற  கேஸூக்கும் கல்யாணம் எப்பிடியோ அமைஞ்சிப் போயிடும்னு நம்பிக்கெ வேற. அப்பிடி ஒரு அதிர்ஷ்ட கையாவும் இருந்தாரு நேரியப்ப பத்தரு.
            அவரெப் பத்தி மொதல்ல அறிஞ்சி அப்பிடி அதிர்ஷ்ட நாடியப் பாத்தவரு லாலு மாமாத்தாம். அவரோட ரெண்டாவது மவ குயிலியோட சாதகத்தெ அங்க கொடுத்துதாங் குயிலிக்கு மெட்ராஸ்ல ஜாகையா இருக்குற தஞ்சாவூரு ஜில்லா மாப்பிள்ளைய பிடிச்சாரு லாலு மாமா. லாலு மாமாவால நேரியப்ப பத்தரு வடவாதி பகுதியில பேரு பெற்ற ஆளாயிட்டாரு. நேரியப்ப பத்தரு ஆல் இந்தியா ரேடியோலவுல விளம்பரம் கொடுத்திருந்தாலும் அந்த அளவுக்குப் பிரபலம் ஆகியிருக்க மாட்டாரு. லாலு மாமாவோட பொண்ணுக்கு சரியான சாதகத்தெப் பாத்து விட்டதால அம்மாம் பிரபலம் ஆயிட்டாரு. அந்த அளவுக்கு எந்த விஷேஷ சாவு சங்கதிக்குப் போனாலும் அங்க நேரியப்ப பத்தர்ர பத்தியே பேச ஆரம்பிச்சிட்டாரு லாலு மாமா.
            யாருக்கு பொண்ணு மாப்புள்ள அமையலன்னாலும் அவங்களோட சாதகத்தெ வாங்கி நேரியப்ப பத்தரோட டேபிள்ல சேத்துப்புடுவாரு லாலு மாமா. நேரியப்ப பத்தரோட டேபிளுக்கு ஒரு சாதகம் போயிட்டுன்னா மணமேடைக்குப் பொண்ணையோ, மாப்பிள்ளையையோ தயாரு பண்ணியே கொண்டு போயிடலாம். அப்பிடிக் கொண்டு போயி கல்யாணம் நடக்குறப்போ, "நாம்ம பாத்து பண்ணி வெச்சக் கல்லாணம்! நாம்ம மட்டும் இல்லன்ன இப்ப நடந்திருக்குமா இந்தக் கல்லாணம்!"ன்னு சொல்லிக்கிறதுல லாலு மாமாவுக்கு ஒரு பெருமெ. லாலு மாமாவோட மவன் வேலனுக்கும், சுப்பு வாத்தியாரு மவன் விகடுவுக்கும் கிட்டத்தட்ட சம வயசு. கொஞ்சம் முன்னி பின்ன பொறந்தவங்க அவ்வளவுதாங். அவர அவரோட மவனுக்கும் நேரியப்ப பத்தருகிட்டத்தாம் சாதகத்தெ கொடுத்து பொண்ணு தேடிட்டு இருந்தாரு. தஞ்சாரூலேந்து இடையில ஒரு தபா வடவாதி வந்தப்போ சுப்பு வாத்தியார்ர பாத்தப்போ நேரியப்ப பத்தரோட புராணத்தெ பாடி அங்க சாதகத்தெ கொடுக்கச் சொன்னாரு.
            அதெ கேட்டுப்புட்டு, சோசியர்லேந்து, சங்கதி கேள்விப்படுற சொந்தக்கார சனம் வரைக்கும் தஞ்சாரூ, தஞ்சாரூன்னு ஏதோ ஒரு வகையில தஞ்சாரூ பேரே அடிபடுதுன்னே, காலங்காத்தாலேயே தஞ்சாரூக்குப் போற எம்.எல்.ஏ. பஸ்ஸைப் பிடிச்சி, நேரியப்ப பத்தருகிட்டெ சுப்பு வாத்தியாரு போனாக்கா அங்க ஏழேட்டு டேபிள்ல சாதகத்தெ மலை போல அடுக்கி வெச்சிருக்காரு அவரு. ஒவ்வொரு டேபிள்ளயும் ஒவ்வொரு ஏரியாவச் சார்ந்தவங்களோட சாதகத்தெ மாப்பிள்ள, பொண்ணுன்னு வகை பிரிச்சி வெச்சிருக்காரு. அங்க அடுக்கியிருக்க சாதகத்தெ பாத்தாக்கா ஆம்பள புள்ளயோ, பொம்பள புள்ளையோ பொறந்தா மொத வேலையா சாதகத்தெ கொண்டாந்து நேரியப்ப பத்தருகிட்ட கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாப்பாங்க போலருக்கு. அம்புட்டு சாதகம் வாலிப வயசுக்காரவுகளேலந்து, பல்லு போன கெழடுகளுக்கு வரைக்கும் சோடி சேக்குற அளவுக்குக் குமிஞ்சிக் கெடக்கு.
            அந்த சாதக மலையப் பாக்குறப்ப, இன்னாருக்கு இன்னார்ன்னு கடவுளு எழுதி வைக்கிறாரா? யில்‍லே நேரியப்ப பத்தரு எழுதி வைக்கிறார்ன்னு ஒரு மலைப்பு உண்டாவுது சுப்பு வாத்தியாருக்கு. அத்தோட நாட்டுல இம்புட்டுப் பேருக்கா கல்யாணம் ஆவாம‍ கெடக்குதுன்னு ஒரு கேள்வியும் அவரோட மனசுல உண்டாவுது. அப்படி ஒரு கேள்வி எழும்புறப்பவே சரியான எடத்துக்குத்தாம் லாலு வாத்தியாரு வழியக் காட்டி விட்டுருக்கார்ன்னு ஒரு சந்தோஷமும் உண்டாவுது. பட்டிக்காட்டாம் ஒருத்தென் பட்டினத்துப் பாத்து தெகைச்சி நிக்குறாப்புல தன்னோட ஆபீஸ்ல சாதக மலையப் பாத்து தெகைச்சி நிக்குற சுப்பு வாத்தியார்ர பாத்துட்டு நேரியப்ப பத்தரு எதுக்கு வந்தீங்க? எங்கேருந்து வர்றீங்கன்னுல்லாம் கேக்கல. "பொண்ணா? மாப்புள்ளையா?"ன்ன ஒத்தக் கேள்வித்தாம் கேக்குறாரு.
            "பொண்ணுத்தாங்!"றாரு சுப்பு வாத்தியாரு.
            "ன்னா நட்சத்திரம், ராசி, பையேன் ன்னா பண்றாம்ன்னு மட்டும் சொல்லுங்கோ? தஞ்சாரூ பக்கத்துல, திருவாரூ பக்கத்துல, கும்பவோணத்து பக்கத்துல, ஆர்குடி பக்கத்துல, புதுக்கோட்ட பக்கத்துல எந்தப் பக்கத்துல பொண்ணு வேணும்னு மட்டும் சொல்லுங்க?"ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "பையேம் வாத்தியார்ரா இருக்காம். கவர்மெண்டு வேலயிலத்தாம் இருக்காம். பொண்ணு தஞ்சாரூ யில்லன்னா, கும்பவோணம் பக்கத்துல வேணும்"ன்னு சொல்லிட்டு கார்த்தி ஸ்டூடியோவுல டைப்படிச்சிப் போட்டுட்டு வந்த சாதகத்தையும், அத்தோட போட்டாவையும் கொடுக்குறாரு சுப்பு வாத்தியாரு.

            அதெ வாங்கி ஒரு பார்வையப் பாத்துக்கிட்டு, "தஞ்சாரூ ஆளுவோ ஒரு டைப்பு, கும்பவோணம் ஆளுவோ ஒரு டைப்பு. இந்த நட்சத்திர ராசிக்குப் பொருந்தி வர்ற மாதிரின்னா..."ன்னு சொல்லிக்கிட்டே, சுப்பு வாத்தியாரு கொடுத்து சாதகத்துக்குப் பொருந்தி வராப்புல தஞ்சாவூரு சாதகங்க இருக்குற டேபிள்லேந்து மட மடன்னு பத்து பாஞ்சிச் சாதகத்தெ எடுத்துக் கொடுக்குறாரு. அத்தோட கும்பகோணத்து டேபிள்லேந்து பத்து பாஞ்சிச் சாதகத்தெ எடுத்துக் கொடுக்குறாரு. எடுத்துக் கொடுத்துப்புட்டு இந்தச் சாதகம் போதுமா, இன்னுங் கொஞ்சம் சாதகம் வேணுமான்னு கண்ணாலயே ஒரு கேள்வியக் கேக்கறாரு.
            ரெண்டு நிமிஷ நேரத்துக்குள்ள சுப்பு வாத்தியாரு கையில முப்பது சாதகத்துக்குக் கொறையாம இருக்கு. ஒவ்வொரு சாதகத்துல இருக்குற பொண்ணோட பேரு, படிப்பு, அப்பா, அம்மாவோட பேரு, உடன்பிறந்தவங்களோட சங்கதி, நட்சத்திரம், ராசி, அத்தோட ஸ்டேபிளர் போட்டு பின்னால அடிச்சி வெச்சிருக்கிற போட்டோவையும் பாக்குறாரு சுப்பு வாத்தியாரு. எல்லா பொண்ணுகளும் பயங்கரமா படிச்சிருக்குங்க. எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம்., எம்.பில்., அப்பிடின்னு படிப்புக்கு எந்தக் கொறைச்சலும் இல்ல. போட்டோவுல பொண்ணுகளும் பாக்கறதுக்கு அம்சமா லட்சணமாத்தாம் இருக்குதுங்க. சுப்பு வாத்தியாரோட மனகணக்கு வாத்திச்சிப் பொண்ணா பாத்து மவனுக்குக் கட்டி வெச்சா தேவலாம்னுல்லா இருக்கு. அப்பிடி ஒண்ணும் கையில இருக்குற சாதகத்துல இல்லாததால, சுப்பு வாத்தியாரு கொஞ்சம் தயங்குனாப்புல, "வாத்திச்சிய்யா இருக்குற மாதிரிக்கி எதாச்சிம் சாதகம் கெடைக்குமா?"ங்றாரு.
            "அதுவுங் சரித்தாம். வாத்தியாரு பையனுக்கு இப்போ அப்பிடித்தாம் எல்லாம் பாக்குதுங். இருங், அப்பிடிக்கியும் இருக்கு ஏழெட்டு. ஆன்னா... இந்தச் சாதகத்துக்குப் பொருந்துறாப்புல இல்ல. இதுக்குப் பொருந்துறாப்புலயும் ரண்டு இருக்கு. வயசு கூடப் போவுது. அத்தெ தனியா வெச்சிருக்கேம். வயசு பரவாயில்லன்னா சொல்லுங்கோ எடுத்துத் தர்றேம்!"ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "வயசு கம்மியாத்தாம் இருக்கணும். கூட வாணாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்போ கையில வெச்சிருக்கிற சாதகங் தோது படாதுன்னு நெனைக்கிறேம்!"ங்றாரு நேரியப்பரு.
            "யில்ல யில்ல இருக்கட்டும். இதுல நாலஞ்சிப் பரவாயில்ல."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுல ஒண்ணு கூட பிடிக்கலன்னாலும் பரவால்ல. நம்ம ஆபீஸூக்கு வந்து திருப்திப்படாம ஆயிடக் கூடாது. ஒண்ணுங் பெரச்சனெயில்ல. இந்த தஞ்சாரூ, கும்பவோணத்தெ விடுங். அப்பிடி வேதாரண்யம், நாவப்பட்டிணம், சீருகாழின்னு வாருங். எடுத்துப் போடுறேங்."ங்றாரு நேரியப்ப பத்தரு.
            "சோசியரு சொல்லிப்புட்டாரு தஞ்சார்ரோ, கும்பவோணம்தான்னு. அதாங் ஏம் அஞ்ஞ இஞ்ஞன்னு பாத்துக்கிட்டுன்னு நெனைக்கிறேங்"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "செரி அப்பிடியே பாத்துப்புடுவேம். நேத்திக்கிக் கொஞ்சம் சாதவங் வந்திச்சு. அதெ வகையப் பண்ணி இதுல சேக்கல. இருங் அதுல எதாச்சிம் தேருதுன்னா பாக்கிறேங்"ன்னு அவரு உக்காந்திருக்குற நாற்காலிக்குப் பக்கத்துல இருக்கற டேபிள்ல ஒரு கட்டா இருக்குற சாதகத்தெ எடுத்து பார்வைய சரசரன்னு வுட்டு, அதுலேந்து ஏழெட்டு சாதகத்தெ உருவுறாரு. "இதுக எல்லாம் வாத்திச்சிக்கத்தாம் பாருங்க பிடிச்சிருக்கான்னு?"ன்னு அதெ நீட்டுறாரு.
            சுப்பு வாத்தியாரு ஒரு பார்வையப் பாத்துட்டு, "நல்ல பொருத்தமாத்தாங் இருக்கு. இந்த வாத்திச்சிக கவர்மெண்டு வேலையில இருக்குறவங்களா? தனியார்ல இருக்குறவங்களா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அது வேற இருக்கா இதுல? அது எஞ்ஞ நமக்குப் புரியுது?"ன்னு தலையச் சொரியுறாரு நேரியப்பரு.
            "எல்லாம் தனியாரு பள்ளின்னுத்தாம் போட்டிருக்குங்!"றாரு சுப்பு வாத்தியாரு.
            "கவர்மெண்டுல வேலை கெடைச்சாப் போயிடப் போவுதுங்க. வேலையக் கொடுத்தா வேணாமின்னு வூட்டுலயா உக்காந்திருக்கப் போவுதுங்க?"ங்றாரு நேரியப்பரு. அவரு அப்பிடிச் சொல்லிக்கிட்டு இருக்குறப்பவே இடைஇடையில ஆளுங்க வர்றாங்க, சாதத்தெ கொடுக்குறாங்க, சாதகத்தெ வாங்கிப் பாக்குறாங்க. அவுங்களுக்குப் பிடிச்சிருந்தா அந்தச் சாதகத்தெ அங்கயே நகல் பண்ணிக்கிறாங்க. அப்பிடி நகல் பண்ணிக் கொடுக்க ஒரு செராக்ஸ் எந்திரத்தையும், செராக்ஸ் பண்ணிக் கொடுக்கு ஒரு பொம்பள ஆளையும் வேலைக்கிப் போட்டிருக்காரு நேரியப்ப பத்தரு. கொடுக்குற சாதகத்துக்குத் தகுந்தாப்புல ஒரு ரேட்டையும் சொல்லி அதையும் வாங்கி பைக்குள்ள திணிச்சிக்கிறாரு.
            "நீஞ்ஞ சொல்றதுங் சரித்தாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "பெறவென்ன? வாத்திச்சிக்கிப் படிச்சிருக்கிற பொண்ணுவோளோட சாதவத்தையும் பாருங்களேம்! வேலை கெடைச்சா வேலைக்கிப் போயிட்டுப் போவுதுங்க. அதுவுமில்லாம வேலையில இருந்துக்கிட்டுக் கொழந்தையப் பெத்துக்கிட்டு அதுல ஒரு செரமங் இருக்குதில்லா. கொழந்தையல்லாம் பெத்தப் பின்னாடி வேலை கெடைச்சிப் போனாக்க நல்லது பாருங். இதெயும் மனசுல வெச்சிக்கிட்டு வாத்திச்சிக்கிப் படிச்சிருக்கிற பொண்ணா பாருங்!"ங்றாரு நேரியப்பரு.
            "செர்த்தாம்! செர்த்தாம்! அப்பிடி இருந்தாக்க அதயும் கண்ணுல காட்டுங்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்பிடின்னிக்கா ஏகப்பட்டது கெடக்குப் பாருங். தஞ்சாரூ வந்திட்டீயே. தஞ்சாரூர்லயே பிடிச்சிப் போடுறாப்புல எடுத்துப் போடுறேங் பாருங்!"ன்னு பத்து சாதவத்துக்கு மேல எடுத்துத் தர்றாரு.
            அதுல ஒரு சாதகத்தெ எடுத்துப் பாத்த சுப்பு வாத்தியாருக்குத் திருப்திப்படுது. "இத்து ன்னா கொல்லம்பட்டி?"ங்றாரு.
            "அத்து இஞ்ஞ தஞ்சாரூலேந்து பன்னெண்டு மைலு இருக்குங். ஒரத்தநாட்டுலேந்து பத்து மைலு இருக்குங்"றாரு நேரியப்பரு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...