செய்யு - 377
மவனுக்குப் பாத்துருக்குற பொண்ண அவனெ
அழைச்சிட்டுக் கொண்டு போயி காட்டிட்டா தேவலாம்னு நினைக்குறாரு சுப்பு வாத்தியாரு.
அப்படிப் பாக்கப் போறப்ப பெரும்பிடியா சொந்தப் பந்தத்த கொண்டுட்டுப் போவாட்டியும்
நெருக்கமான சொந்த பந்தங்களையாவது அழைச்சிட்டுப் போவணுமேன்னு ஒரு யோசனெ ஓடுது அவருக்கு.
எப்பிடியிருந்தாலும் தாய் மாமன்கள அழைச்சிட்டுப் போயி ஆவணும். தன்னோட சொந்தத்துலயும்
யாரையாச்சியும் அழைச்சிட்டுப் போவணும். இப்படிப் போறப்ப வேனைப் பிடிச்சிட்டு அதுக்கு
ஏத்தாப்புல ஆட்களைப் பிடிக்கிறதும் உண்டு. ஆட்களைப் பிடிச்சிட்டு அதுக்கு ஏத்தாப்புல
வேன்களைப் பிடிக்கிறதும் உண்டு. சுப்பு வாத்தியாரு ஒரு வேன் கொள்ளுறாப்புல ஆட்கள்
இருந்தாப் போதும்னு ஒரு முடிவுக்கு வர்றாரு.
தாய்மாமனுங்க குடும்பம் ரெண்டு, தன்னோட
குடும்பத்துல நாலு டிக்கெட்டு, இப்போ நெருக்கமா இருக்குற வேலங்குடி ரசா அத்தைக் குடும்பத்துல
அத்தையும் மாமாவும், விகடுவோட சோக்காளிகளா இந்தத் தெருவுல இருக்குற முருகுவும், முருகுவோட
அப்பாவும், அம்மாவும், பெறவு சின்னுவோட அம்மா, மன்னு வூட்டுலேந்து ஒருத்தரு, பரமுவோட
வூட்டுலேந்து ஒருத்தருன்னு பதினாறு பேர்ர அழைச்சிட்டுப் போவலாமுன்னு ஒரு திட்டத்தெ
உண்டு பண்ணிக்கிறாரு.
தாய்மாமனுங்கள மூத்தவரு குமரு மாமா. அவர்ர
வூட்டுல போயிப் பாக்குறதா, பட்டறையில போயிப் பாக்குறதான்னு மொதக் கொழப்பம் வருது
சுப்பு வாத்தியாருக்கு. வூட்டுலப் போயி பாத்தாக்கா, அங்கல்லாம் ஏம் வந்தீங்கன்னு கேக்க
கூடிய ஆளு அவரு. சரின்னு பட்டறையில பாத்தா, இதெல்லாங் பட்டறையில வெச்சிப் பேசுற விசயமான்னு
கேட்டு மூக்கெ ஒடைக்கிற ஆளு அவரு. தன்னோட வூட்டுல மொத கல்யாணத் தேவைக்கு அச்சாரமான
காரியத்துக்குப் போயிப் பட்டறையிலயா சேதியச் சொல்லுவாங்கன்னு நெனைச்சிக்கிட்டு, என்னா
ஆனாலும் பரவாயில்லன்னு சுப்பு வாத்தியாரு, பாஞ்சாலம்மன் கோயிலுக்குப் பக்கத்துல இருக்கற
வூட்டுலயே போயிச் சொல்லிப்புடலாம்னு போனாக்கா, வூட்டுக்கு முன்னாடி கேட்டு, கேட்டுக்கு
பின்னாடி உள்ளாக்கப் பூட்டு மாட்டித் தொங்குது.
வெளியில இருக்குற காலிங் பெல்லை அடிச்சா,
அதுவும் சத்தம் போட்டுக் கூப்புட மாட்டேங்குது, வெளியில நின்னுகிட்டு சத்தத்தெ கொடுத்தா
அதுவும் உள்ளார போயிச் சேர மாட்டேங்குது. வேற வழியில்லாம சுப்பு வாத்தியாரு கிரில்
கேட்டப் பிடிச்சி தட தடன்னு ஆட்டுறாரு. அப்பத்தாம் வீடே ஆடுற மாரில்லா சத்தம் கேக்குதுன்னு
வூட்டுக்குள்ளேயிருந்து குமரு மாமா கட்டுன வேட்டியோட, மேல ஒரு துண்டெ தூக்கிப் போட்டுக்கிட்டு,
கதவெ தொறந்துகிட்டு வெளியில வருது. வெளியில அத்தாங்காரர்ரு நிக்குறதெ பாத்ததும் காணாததெ
கண்டது போல அதோட மொகத்துல ஆச்சரியமும், அதிர்ச்சியுமா ஒரு உணர்ச்சி உண்டாவுது. அதுக்குள்ள
சட்டுன்னு சுதாரிச்சாப்புல மொகம் மாறுது.
"வாங்கத்தாம்! வாங்கத்தாம்!"ன்னு
சொல்லிகிட்டே கிரில் கேட்டுக்கு உள்ளாரப் போட்டுருக்கிற பூட்டைத் தொறந்துகிட்டு
கூப்புடுது. உள்ள வந்த சுப்பு வாத்தியார்ர அழைச்சிட்டுப் போயி ஹால்ல இருக்குற சோபாவுல
உக்கார வைக்குது. உக்கார வெச்சிக்கிட்டு உள்ளார கொரலக் கொடுக்குது. "மேகலா!
அத்தாம் வந்திருக்காக! டீத்தண்ணியப் போட்டுக் கொண்டுட்டு வாவே!"ங்குது. மேகலா
மாமி மொகத்தெ ஒரு சுளிப்பு சுழிச்சிக்கிட்டு, ஏம்டா இங்கெல்லாம் வந்தேங்ற மாதிரிக்கி,
"வாஞ்ஞ! வாஞ்ஞ!"ங்குது. அப்பிடிச் சொல்லிப்புட்டு அது பாட்டுக்கு அப்படியே
சமையலுகட்டுப் பக்கமே திரும்பிப் போயிடுச்சி.
"கொல்லப் பக்கம் கொஞ்சம் வேலத்தாம்!
இந்தக் காலத்துல யார நம்பி கதவத் தொறந்துப் போட முடியுதுங்றீங்க? அத்தாங் அத்தாம்
வூட்டுக்கு உள்ளார இருந்தா உள்ளாக்கா பூட்டெ போட்டுக்கிறது. வெளியில போனாக்கா வெளியில
பூட்டெ போட்டுக்கிறது. காலங் கெட்டுப் போயிக் கெடக்கிது அத்தாங்க. ஒருத்தரையும் நம்ப
முடியலெ. எவ்வேம் வூட்டுல பூந்து எதெ தூக்குவாம்னு தெர்யல! சொல்லுங்கத்தாம்! ஏத்தோ
வெசயமாத்தாம் வந்திருக்கீங்கன்னுப் புரியுது!" அப்பிடிங்கிது குமரு மாமா.
"அத்து வந்து ன்னான்னா... மவனுக்குப்
பொண்ணு பாத்திருக்கு. ஒரு நல்ல நாளா பாத்து ஒங்கள எல்லாத்தியும் அழைச்சிட்டுப் போயி
பாத்துட்டு வந்துடலாம்னு நெனைக்கிறேம். அதாங்."றாரு சுப்பு வாத்தியாரு.
"யார்ர கேட்டுட்டுப் போண்ண பாத்தீங்க?"ன்னு
குமரு மாமா கேட்க, சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போடுது, ன்னாடா இத்து ஆரம்பமே
இப்பிடி தடாலடியா இருக்குன்னு.
"இல்லம்பீ! மவனுக்கும் வயசு ஆயிட்டுப்
போவுது! அததெ காலா காலத்துல முடிச்சாத்தாம்னே ந்நல்லா யிருக்கும்!"ங்றாரு சுப்பு
வாத்தியாரு.
"அதுக்கில்லத்தாம்! நாம்ம ஒருத்தேம்
இஞ்ஞ அக்கா மவனுக்காக பொண்ணு பாக்கணும்னு நம்ம சேக்காளி மாணிக்கவிநாயகத்தையும், நம்ம
கூட்டாளி அழகிரிசாமியையும் வெச்சுக்கிட்டு சல்லடை போட்டுச் சலிச்சிக்கிட்டு இருக்கேம்.
இப்பிடி திடுதிப்புன்னு வந்து உக்காந்துட்டுப் பொண்ண பாத்துட்டேம் அது இதுன்னா எப்பிடி?"ங்குது
குமரு மாமா.
"யம்பீ! பொண்ண பாக்கத்தாம் போறேம்.
பாத்துப் புடிச்சாத்தாம் மத்தது எல்லாம். காரியத்தெ முடிச்சிட்டு வந்து நாம்ம சொல்லல.
நாம்மப் போயிப் பாத்த பிற்பாடுதாம் காரியமெ."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"கல்யாண காரியெம் அத்தாம். அவசரப்பட்டு
எறங்கிப்புட கூடாது. செரி பரவாயில்லெ. ஆனது ஆயிப் போச்சு. பொண்ணு எந்தப் பக்கம்?"ங்குது
குமரு மாமா.
"தஞ்சாரூ ஜில்லா, ஒரத்தநாடு பக்கம்,
கொல்லம்பட்டி!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"ஏம் இஞ்ஞ அக்கம் பக்கத்துல பொண்ணு
இல்லன்னா அஞ்ஞ போயி பிடிச்சிருக்கீங்க? சரியான ஆளு அத்தாம் நீங்க புத்திக் கெட்ட தனமா!
அந்தப் பக்கமுல்லாம் போயி பொண்ணு பாக்கக் கூடாது. நாம்ம அஞ்ஞல்லாம் வேல பாத்த ஆளு.
ஒரத்தநாடு பீயெட்டு காலேஜூ யாரு வேல? தெர்யும்ல!" அப்பிடிங்கிது குமரு மாமா.
"இல்லம்பீ! நாட்டியத்தாங்குடி சோசியரும்
செரி, கொத்தூருகாரரும் செரி அஞ்ஞத்தாம் அமையும்னு தெச பாத்துச் சொன்னாக. அதாங்."றாரு
சுப்பு வாத்தியாரு. அவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்குறதுக்குள்ள மேகலா மாமி ஒரு தட்டுல
ரண்டு சின்ன தம்பளரா வெச்சி அதுல டீத்தண்ணிய கலந்து கொண்டாந்து டீப்பாயில வைக்குது.
"சாப்புடுங்க அத்தாம்! பெறவு பேசுவோம்!"ங்குது
குமரு மாமா. சுப்பு வாத்தியாரு அதுல ஒண்ண கையில எடுத்துக்கிறாரு. எடுத்துக்கிட்டு அதெ
தூக்கி வாயில வைக்கிறாரு. வாயில வைக்க முடியாத அளவுக்கு அம்புட்டுக் கசப்பா இருக்கு.
குமரு மாமா பேசுற கசப்புக்கு, டீத்தண்ணியோட கசப்பு பரவாயில்லன்னு மருந்தெ ஒரு மடக்குல
முழுங்குற கணக்கா சுப்பு வாத்தியாரு டீத்தண்ணிய வாயில படாமா நேரடியா வயித்துக்குள்ள
எறக்கிடுறாரு. இதெ வேற குடிக்காமப் போயி அது வேற குமரு மாமாவுக்குக் கோவத்தெ உண்டு
பண்ணிடக் கூடாதுங்றதுக்குத்தாம் அதெ குடிச்சி வைக்கிறாரு.
"செரி பாத்தது பாத்துப்புட்டீங்க!
அதுவும்தாம் எப்பிடி இருக்குதுன்னு பாத்துப்புட்டு வந்துப்புடுவேம்! என்னிக்குன்னு
சொல்லுங்க?"ங்குது குமரு மாமா.
"வர்ற ஞாயித்துக் கெழம கூட நாளு நல்லாத்தாம்
இருக்கு. ஒங்களுக்குத் தோதுபட்டா சொல்லுங்க அன்னிக்கே வேனெ தயாரு பண்ணிட்டுப் போயிட்டு
வந்துப்புடலாம். நீஞ்ஞளும், பாப்பாவும் மவராசனும், மவராசியுமா வந்துட்டுப் போவணும்!"ங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"பொண்ண பாக்கத்தான போறேம்! அதுக்கு
ஏம் அத்து? அதுக்கு வூட்டு வேல நெறயக் கெடக்கு. நாம்ம மட்டும் வர்றேம் அத்தாம். மொதல்ல
பாத்துப்புட்டு வந்துப்புடுவேம். நீஞ்ஞ வெனை கெளப்பிக்கிட்டுப் பட்டறைக்கு வந்துப்புடுங்க.
அஞ்ஞயிருந்து கெளம்பிப் போயிப் பாத்துப்புட்டு, பெறக்கா ஒரு முடிவு பண்ணிக்கிட்டு
ஓலெ எழுதுறப்ப எல்லாத்தையும் கொண்டுட்டுப் போவேம்!"ங்குது குமரு மாமா.
"அதுவுஞ் சரித்தாம்பீ!"ன்னு
சொல்றதெ தவிர வேற ஒண்ணையும் சொல்ல முடியாம, மேக்கொண்டு என்ன பேசுறதுன்னு புரியாம,
"பெறவு நாம்ம கெளம்புறேம்பீ!"ன்னு சொல்லிப்புட்டு அங்கேயிருந்து கெளம்பி
பக்கத்துல இருக்குற ரெண்டாவது விகடுவோட ரெண்டாவது தாய்மாமானான வீயெம் மாமா வூட்டுக்குப்
போனாக்கா அத்து இந்த மாரில்லாம் பேசல. "ந்நல்ல காரியம்த்தாம். வர்ற ஞாயித்துக்
கெழமத்தான. நாம்ம அஞ்ஞ ஒஞ்ஞ வூட்டக்கே திட்டைக்கே வந்துப்புடுறோம்."ன்னு சொல்லுது
வீயெம் மாமா. பரவாயில்ல ரண்டு ஆப்பையில ரண்டும் கெழண்ட ஆப்பையில்ல, ஒண்ணு நல்லாத்தாம்
இருக்குன்னு கொஞ்சம் திருப்திபடுது சுப்பு வாத்தியாருக்கு.
ஒரு வழியா யாரு யாருக்குச் சொல்லணும்னு
நெனைச்சாரோ அத்தனெ பேருக்கும் சேதியச் சொல்லி முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. அதுல
குமரு மாமாவெ தவித்து எல்லா சனமும் வூட்டுக்கே வந்துப்புடறதா சொல்லி ஞாயித்துக் கெழம
காலங்காத்தாலேயே திட்டையில இருக்குற சுப்பு வாத்தியாரு வூட்டுக்குப் வந்துப்புட்டாங்க. பொதுவா விஷேசங்கள ஞாயித்துக் கெழமையா பாத்து அமைச்சிக்கிறதுல்ல
பல செளகரியங்க இருக்கத்தாம் செய்யுது. இங்க ஞாயித்துக் கெழமையா பாத்து பொண்ணு பாக்குற
சங்கதியெ முடிவு பண்ணதுக்கு ஒரு காரணம் என்னான்னா, விகடு ஒத்த ஆளா கோட்டகம் பள்ளியோடத்துல
வேல பாத்ததால, மித்த பள்ளியோடம் இருக்குற நாள்ல வெச்சா, ஒண்ணு பள்ளியோடத்துக்கு லீவு
வுடுறாப்புல ஆயிடும், அப்பிடி இல்லன்னா ஏயிவோகிட்ட சொல்லி பதிலி வாத்தியார்ர வர்ற
சொல்லி மனு போடுறாப்புல ஆயிடும்.
கோட்டகம் பள்ளியோடத்துக்குப் பதிலி வாத்தியார்ர
வர்றதுன்னா ச்சும்மாவா! மேடு, பள்ளம், ஆத்தெ கடந்துல்லா வந்தாவணும். ரோட்டப் பத்திச்
சொல்ல வேண்டியதில்ல. ரோடுங்ற பேருக்கு அது இருக்கு அவ்வளவுதாங். மித்தபடி அத்து சேதாரப்பட்டு,
சின்னாபின்னாபட்டுத்தாங் கெடக்குது கப்பி கெழண்டு போயி, மறெ கழண்டு போயி. அதால கோட்டகம்
பள்ளியோடத்துக்குப் பதிலி வாத்தியார்ன்னாவே மித்த மித்த பள்ளியோடத்து வாத்தியாருங்க
தெகைச்சிப் போயி, தெறிச்சிக் கலங்கிப் போயிடுவாங்க. அப்பிடி ஒரு செரமத்தெ, கலக்கத்தெ,
தெகைப்ப யாருக்கும் கொடுத்துப்புடக் கூடாதேன்னும் ஞாயித்துக் கெழமையே தெர்வு பண்ணி
பாக்க வேண்டியதாப் போச்சு.
இது மாதிரியான காரியங்கள்ல ஒண்ணு வேனு
சரியான நேரத்துக்கு வந்தா, சனங்க வந்து சேர்ந்திருக்க மாட்டாங்க. சனங்க சரியான நேரத்துக்கு
வந்தா வேனு சரியான நேரத்துக்கு வாராது. அப்பிடியில்லாம சனங்க முன்கூட்டியே வந்து, ஞாயித்துக்
கெழமெ சொன்ன நேரத்துக்கு வேனும் வந்ததுல, அதுல எல்லாரையும் கெளப்பிக்கிட்டு எட்டு
மணி வாக்குல குமரு மாமா பட்டறைக்குப் பக்கத்துல கொண்டு போயி நிறுத்திக்கிட்டு, குமரு
மாமா வூட்டுக்குப் போனைப் போட்டாக்கா போன்ல ரிங்கு போயிட்டே இருக்குதே தவுர, யாரும்
எடுக்குறாப்புல தெரியல.
*****
No comments:
Post a Comment