17 Nov 2026

கண்களின் நீச்சல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 90

கண்களின் நீச்சல்

திருவாரூரின் மார்கழி மாதத்து அந்தப் பனி மூடிய நள்ளிரவு.

ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த சில்லென்ற காற்று, மேஜை மீது புரண்டு கொண்டிருந்த சில தாள்களை மெதுவாய் அசைத்தது.

அறையின் மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில், அவள் அலைபேசியின் நீலத் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்களில் தூக்கமின்மையின் கோடுகள்; ஆனால் அதைவிட ஆழமானது அவளது உள்ளத்தில் தேங்கி நின்ற பிரிவுத் துயரம்.

அவளது கணவன் முக்கியமான ஒரு செயல்திட்ட கூறாய்வு தொடர்பான இறுதி கட்டப் பணிகளுக்காகச் சென்னை அலுவலகத்திலேயே தங்கிவிட்டான்.

கடந்த மூன்று வாரங்களாக அவர்கள் நேரில் பார்த்துக் கொள்ள முடியவில்லை. வாட்ஸ்அப் அழைப்புகளும், ஜூம் சந்திப்புகளும் காதலின் பசியைத் தீர்ப்பதற்குப் பதிலாக இன்னும் அதிகமாகவே தூண்டிவிட்டன.

அவள் அலைபேசியின் குறுஞ்செய்திக் குறியீட்டைத் தொட்டாள். அவனிடமிருநது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்த குறுஞ்செய்தி திரையில் மின்னியது:

"தூங்கலையா? உன்னோட மூச்சுக்காற்று இங்கே சென்னை வரைக்கும் வீசுகின்ற மாதிரி ஓர் உணர்வு. உன்னைப் பார்க்காமல் ரொம்பவே தவிக்கிறேன்."

அவளது உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையில் விரிந்தன. ஆனால், அதே விநாடி தொண்டை அடைத்துக் கொண்டது. ஒரு சூடான நீர்த்துளி கன்னத்தில் உருண்டோடியது.

அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள், "இணைய வடங்கள் வழியாக என் குரல் உங்களை வந்தடையலாம்; காணொளி அழைப்புகள் மூலமாக என் முகத்தை நீங்கள் பார்க்கலாம். ஆனா, இந்தத் தூரத்தை உடைத்துக் கொண்டு என் மனம் உங்களிடம் ஓடுகின்ற வேகத்தை எந்தத் தொழில்நுட்பத்தால் அளக்க முடியும்?"

அவள் அலைபேசியை மேசை மீது வைத்து விட்டு, ஜன்னலோரம் போய் நின்றாள். வெளியே தெரு விளக்கு வெளிச்சத்தில் மழைத் துளிகள் தூறிக் கொண்டிருந்தன. அந்தத் தனிமை அவளைச் சுழட்டி அடித்தது. அவன் மார்பில் சாய்ந்து கொள்ளும் அந்தத் தருணம் அவளுக்குள் ஓர் ஏக்கமாக வெடித்தது.

அவள் கண்கள் கசிந்தன. தன் விரல்களால் கண்ணாடித் துளியைத் தொட்டுக் கொண்டே முணுமுணுத்தாள். "மனம் எவ்வளவு சுதந்திரமானது! பேருந்து தேவையில்லை, தொடர்வண்டி தேவையில்லை, வேறெந்த வாகனமும் தேவையில்லை. ஒரு நொடியில் சென்னை அடையாற்றில் இருக்கும் அவரின் அந்த அறைக்குள், அவரது படுக்கையின் தலைமாட்டில், அவரது தோள்களுக்கு அருகில் சென்று அமர்ந்து விடுகிறது மனம். அங்கே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த மனத்தால் உணர முடிகிறது. அவரின் மனதுடன் தன் மனதை ஒன்றச் செய்ய முடிகிறது. ஆனால், உடல்தான் இங்கே மாட்டிக்கொண்டது. மனதுக்குப் பின்னால் உடலால் ஓட முடியவில்லை. அவரது அணைப்பைப் பெறத் துடிக்கும் இந்த உடலால், அவரது ஸ்பரிசத்தைத் தேடும் இந்தத் தவிப்பால், எதையும் செய்ய முடியாமல், கண்களில் நீர் மட்டும் தாரை தாரையாக வழிகிறது. மனம் அவரிடம் பறந்து சென்றுவிடுகிறது; ஆனால் கண்களோ அவனை நேரில் காண முடியாமல், இந்தத் தூரத்தின் வலியைத் தாங்க முடியாமல் கண்ணீரில் நீந்துகின்றன!"

அதே நேரம், சென்னை, அடையாற்றில் உள்ள தன் அறையில், அவனுக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவன், திடீரென்று எழுந்து உட்கார்ந்தான். அவளின் நினைவுகள் அவனைச் சுற்றிக் வளைத்துக்கொண்டன.

அவன் உடனே ஓர் கணொளி அழைப்பு செய்தான். ஒரு விநாடிக்குள்ளாகவே மறுமுனையில் அவளிடமிருந்து இணைப்பு கிடைத்தது.

திரையில் அவளின் முகம் தோன்றியது. தலை கலைந்திருந்தது; கண்களின் ஓரம் லேசான ஈரம் பளபளத்தது. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவனின் நெஞ்சில் ஒரு கனம் ஏறிக்கொண்டது.

"ஏய் என்ன இது? இன்னும் தூங்கலையா? அழுதுட்டு இருக்கீயா?" அவனது குரல் பதற்றத்துடன் நடுங்கியது.

அவள் ஒளிப்படக் கருவியைப் பார்த்துக் லேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பிலும் ஒரு சோகம் ஒட்டிக் கொண்டிருந்தது.

"நீங்க தூங்கலையா? எனக்குத் தூக்கம் வரல. உங்களையே நினைச்சுட்டிருந்தேன்."

"அதெல்லாம் பகல்ல நினைச்சிக்கலாம். இப்போ தூங்கு. நீ பண்றது சின்னபுள்ளத்தனமா இல்ல?"

"மனசு இருக்கே. அது உங்ககிட்டெ எப்படியோ நினைத்த மாத்திரத்தில வந்துடுது. ஆனா, இந்தக் கண்கள் இருக்கே, உங்களைப் பார்க்க முடியாம, உங்களோட பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாம அழுதுட்டே இருக்கு. என் மனம் போன வேகத்துல, என் கண்களால உங்ககிட்ட வர முடியலையேன்னு தோணுது."

அவன் கண்கள் கலங்கின. அந்தத் திரையின் வழியே அவள் முகத்தைத் தொட வேண்டும் போல் இருந்தது. அவன் தன் குரலைத் தாழ்த்தி, காதலோடும் ஏக்கத்தோடும் சொன்னான், "நீ தனியா அங்கே கஷ்டப்படத் தேவையில்லை. அடுத்தத் தொடர்வண்டியைப் பிடிச்சி அங்கேயே வந்துடுறேன். உன் கண்களில் வழிகிற ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும் நான் பதில் சொல்லணும். இப்போ, நீ கண்களை மூடிக்கொள். உன் மனசு மாதிரி நானும் இப்போவே உன்கிட்ட வந்துடுறேன்."

"வேண்டாம். வேலையை முடிச்சிட்டே வாங்க."

"அதுக்குள்ள உன்னோட கண்கள் வங்காள விரிகுடாவாவே மாறிடும் போலிருக்கே."

"வேலையை முடிக்காம வந்தா, மறுபடியும் போவீங்க. மறுபடியும் வற்றிப் போன வங்கக் கடல் ஊற்றெடுக்கும். தயவுபண்ணி எல்லாத்தையும் முடிச்சிட்டே வாங்களேன்."

"அப்படின்னா அழுறதெ நீ நிறுத்தணும். உன்னோட கண்கள்ல கண்ணீரே இருக்கக் கூடாது."

"நான் எவ்வளவோ சொல்லிட்டேன். இந்தக் கண்களுக்குக் கண்ணீரில் நீச்சலடிக்கணும்ன்னு ஆசை போல. அதான் இப்படித் தண்ணீரா கொட்டிக்கிட்டு இருக்குது."

"நீச்சலடிக்க ஆசையாம்! என்ன உளறல் இது?" அடையாற்று அறையிலிருந்து அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பு தொலைதொடர்பு சமிக்ஞைகளைத் தாண்டி திருவாரூரை அடைந்தபோது, அலைபேசியின் ஒலிப்பானில் ஒரு சிறிய சடசடப்புச் சத்தம் கேட்டது. ஆனால், அவளுக்கு அந்தச் சத்தம் கூட அவன் அருகில் பேசுகின்றது போன்ற பிரியத்தைக் கொடுத்தது.

"உளறல் இல்லை, நிஜம். தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்தாலும், சென்னைக்கும் திருவாரூருக்கும் இருக்குற இந்தத் தூரத்தை ஒரு நொடியில் குறைக்க எதையாவது உங்களால கண்டுபிடிக்க முடியுமா?"

"ஹேய், தொழில்நுட்பத்தைக் குறை சொல்லாதே. அதாலத்தான் நாம்ம ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டெ பேசிக்கிட்டு இருக்கிறோம்?"

"பார்க்கத்தான் முடியுது. தொட முடியலையே!" அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது.

அவன் ஒரு நிமிடம் அமைதியானான். மேஜை மீது கிடந்த அவனது மடிக்கணினியின் விசிறி ஹம் என்ற சத்தத்துடன் சுழன்று கொண்டிருந்தது. அவ்வளவு அமைதி நிலவியது.

அவனுக்குப் புரிந்தது, அவளது கண்ணீருக்கு வார்த்தைகளால் சமாதானம் சொல்ல முடியாது. சில இடங்களில் ஆறுதலோ, தர்க்கமோ வேலை செய்யாது, கொஞ்சம் உண்ரவுப்பூர்வமாகத்தான யோசிக்க வேண்டும் என்று தோன்றியது.

"சரி, ஒரு பரிசோதனை பண்ணலாமா?" என்றான் குரலில் ஒரு குறுநகை ஒட்ட.

"நடுராத்திரியில என்ன பரிசோதனை?"

"கண்களை மூடிக்கொள். இப்போது நான் உன்னைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, என் கண்களையும் மூடிக்கொள்ளப் போகிறேன். நாம் இருவரும் ஒரே நேரத்தில் ஒரு புள்ளியில் சந்திப்போம். அங்கே எந்த ஜன்னலும் இருக்காது, எந்தத் தூரமும் இருக்காது. திருவாரூருக்கும் சென்னைக்கும் தொடர்வண்டியும் வரத் தேவையில்லை. ஆனால், நாம்ம சந்திப்போம்."

இதென்ன கோமாளித்தனம் என்றெல்லாம் அவள் மறுப்பு சொல்லவில்லை. மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டாள்.

அறையின் மஞ்சள் விளக்கை அணைத்துவிட்டு, அலைபேசியை இணைப்பிலேயே வைத்து விட்டு, படுக்கையில் சாய்ந்தாள், அவனை நினைத்தபடியே அவள்.

நிசப்தம் அறைக்குள் பரவியது. திருவாரூரில் ஜன்னலோரம் வீசிய அதே மார்கழிக் காற்று, இப்போது சென்னை அடையாற்று அறை ஜன்னலையும் கடந்துசென்றது. அலைபேசியின் நீலத்திரை வெளிச்சம் மட்டும் அந்த இருட்டில் மினுமினுத்தது.

அந்தப் பரிசோதனையின் ஊடே, இரவு உருண்டோடிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை.

சென்னையில் சூரியன் வழக்கம் போல வங்கக் கடலைத் தாண்டி எழும்பியிருந்தது. ஆனால் அடையாற்று அறையில் அத்தனை ஆர்ப்பாட்டங்கள் இல்லை. ஏனென்றால், அவன் அங்கே இல்லை.

திருவாரூர் வீட்டின் முன் ஒரு மகிழ்வுந்து வந்து நின்ற சத்தம் கேட்டது. ஊரின் அமைதியைக் கிழித்துக் கொண்டு சக்கரங்களின் ஓசை கேட்டது. வீட்டுத் திண்ணையில் யாருமில்லை. சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டது.

கதவு தட்டப்படும் ஓசை.

அவள் பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்து கதவைத் திறந்தாள்.

படிகளில் நின்றுகொண்டிருந்தான் அவன்.

குப்பாயம் இல்லை, கழுத்தணி இல்லை. அலுவலகச் சோர்வு முகத்தில் லேசாகத் தெரிந்தாலும், கண்களில் அந்தத் தூரத்தை வென்ற வெற்றியின் ஒளி மின்னியது. கையில் அவளுக்குப் பிடித்தமான முந்திரி பகோடாவும், அவசரமாய் வாங்கிய ஒரு ரோஜாப்பூவையும் வைத்திருந்தான்.

"வேலையை முடிச்சாச்சா?" அவள் கண்களில் ஆச்சரியமும் அதே நேரம் தாளாத காதலும் பொங்கியது.

"முக்கியமான கூறாய்வு நேற்று நள்ளிரவு இரண்டு மணிக்கு முடிஞ்சது. அப்பவே அதுக்கு ஒப்புகை வாங்கிட்டு அப்படியே மகிழ்வுந்தைக் கிளப்பிட்டேன். இடையில் பெரிய போக்குவரத்து நெருக்கடி எதுவும் இல்லை. மனம் சீக்கிரமா வந்துடுச்சுன்னா, மகிழ்வுந்தும் சீக்கிரமா வந்துடும் போல!" என்றான் புன்னகையுடன்.

அவள் வார்த்தைகள் வராமல் திகைத்து நின்றாள். நேற்றிரவு அவன் சொன்ன அந்த பரிசோதனை ஞாபகத்திற்கு வந்தது. கண்கள் மீண்டும் கலங்கின; ஆனால் இந்த முறை அது பிரிவுத்துயரின் கண்ணீர் அன்று, அவனைப் பார்த்ததில் பூத்த ஆனந்தக் கண்ணீர்.

அவள் சட்டென்று பாய்ந்து வந்து அவன் தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

அவன் அவளை மென்மையாக அணைத்து, அவள் தலைமுடியைக் கோதிக் கொடுத்தான். "இப்போ சொல்லு.திருவாரூருக்கும் சென்னைக்கும் நடுவுல இருக்கிற தூரத்தை எந்தத் தொழில்நுட்பத்தால சுருக்க வேணும்?"

அவள் அவனது மார்பில் முகத்தைப் புதைத்தபடியே முணுமுணுத்தாள், "எந்தத் தொழில்நுட்பமும் தேவையில்ல. உங்க காதலே போதும்!"

ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த மார்கழிக் காற்று, மேஜை மீது கிடந்த தாள்களை இப்போது கலைக்கவில்லை; மாறாக, மேஜையில் இருந்த அலைபேசியின் திரையில் மின்னிய ஒரு பழைய குறுஞ்செய்தியை லேசாகத் வருடிக் கொடுத்துவிட்டுச் சென்றது.

அந்தச் செய்தியின் கீழ் புதிதாக மற்றொரு வரி,

"உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்."                                                (குறள், 1170)

எனும் குறட்பாவுக்குத் தீர்வு காண்பது போல, "கண்ணீருக்கு விடை கிடைத்துவிட்டது; தூரம் இப்போது தூரம் ஆகி விட்டது!" என மின்னியது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

16 Nov 2026

நடுநிசி வலிகள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 89

நடுநிசி வலிகள்

மழை விட்டும் விடாமல் லேசான தூறல் விழுந்துகொண்டிருந்தது. சென்னை, கோடம்பாக்கம், ஒரு கடையின் தகரக் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்துகொண்டிருந்த சத்தம் மட்டும் அந்த அமைதியான நள்ளிரவில் அமானுஷ்யமான ஒலியோடு கேட்டது.

கையில் இருந்த அலைபேசியின் திரையின் வெளிச்சத்தில் அவன் முகம் மட்டும் நீல நிறமாகத் தெரிந்தது. மணி நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

"இப்ப எதுக்கு இந்த மாதிரி செய்தி அனுப்புறா?" என்று முணுமுணுத்துக்கொண்டான் அவன்.

அலைபேசித் திரையில் அவள் அனுப்பிய செய்தி மிளிர்ந்தது.  "நீங்க பக்கத்தில் இல்லாமல் இருப்பது பெரிய வலி. அதை விட பெரிய வலி நீங்க இல்லாத இந்த இரவு. இந்த இரவு நீண்டு நீண்டு துடிக்க துடிக்க எனக்கு வலியெடுக்கச் செய்து என்னைக் கொன்று விடும் போலிருக்கிறது."

அவன் மூளையில் அவளைக் குறித்த நினைவுகள் சுழல ஆரம்பித்தன. கல்யாணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. இப்போது அலுவலகப் பணி நிமித்தமாக மூன்று நாட்கள் சென்னை வந்திருக்கிறான் அவன்.

இதோ இரண்டு நாட்கள் முடிந்து விட்டன.

நாளை அந்தச் செயல்திட்டக் கோப்பை விளக்கி அதிகாரிகள் முன் ஒரு சுருக்க உரை நிகழ்த்தி விட்டால் வேலை முடிந்தது.

பிறகு ஊர் திரும்ப வேண்டியதுதான்.

இது அவளுக்கும் தெரியும்தான்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டு, அவள் அனுமதியோடுதான் சென்னைக்குக் கிளம்பினான்.

"உங்களைப் பிரிஞ்சி, நான் தைரியமா இருப்பேன். உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆமாம், நான் உணர்ச்சிவசப்பட்டு உங்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து உங்க வேலைக்கு எந்தப் பாதிப்பும் உண்டு பண்ண மாட்டேன். உங்களை அலைபேசியில கூட அழைக்க மாட்டேன். ஒரு செய்தி கூட அனுப்ப மாட்டேன். நீங்க முழு மனசையும் வேலையில வெச்சு, சீக்கிரமா முடிச்சிட்டு வந்துடுங்க. ஆனா, நீங்க வர்ற மூணு நாளைக்கும் உங்க நினைப்பாத்தான் இருப்பேன். மறுபடியும் சத்தியமா சொல்றேன், உங்களைக் கூப்பிட்டு எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டேன்." இப்படியெல்லாம் சொல்லி வழி அனுப்பியவள்தான்.

ஆனால், சென்னை வந்த மறுநாளே, அவனுக்கே மனம் கேட்காமல் சில முறைகள் அவளுக்கு அழைத்தும் அந்த அழைப்பை அவள் எடுக்கவில்லை.

இப்போது ஏன் இப்படி செய்தி அனுப்பியிருக்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவள் எப்போதுமே கவிதைகளையோ, இலக்கியத்தையோ தீவிரமாகப் பார்த்தவள் அல்ல. பொருட்கள் வாங்குதல், உணவு விடுதியில் சாப்பிடுதல், அலைபேசியில் குறுங்காணொளிகள் பார்ப்பது, வீட்டுவேலைகளை ஒன்று விடாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பது, அப்புறம் அவனிடம் செல்லமாகச் சண்டை போடுவது என இதுதான் அவளது உலகம். பேசுவதும், பழகுவதும் எதார்த்தமாகத்தான் இருக்கும். ஆனால் இன்று அவள் அனுப்பிய அந்த வரிகள் அவனை உணர்ச்சிவசப்பட வைத்தது.

உடனடியாக அவன் அவளுக்கு அழைத்தான். அவள் அலைபேசியை எடுக்கவில்லை. அவளுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான். "உன்னோட பேசணும். அழைப்பை ஏற்றுப் பேசு." அவன் செய்தி அனுப்பிய அடுத்த நொடியே நீலநிற சரிகுறி விழுந்தது. தட்டச்சு செய்வதற்கான மூன்று புள்ளிகள் வந்தன, பின் நின்றன, பின் முன்று புள்ளிகள் வந்தன, நின்றன.  அதைத் தவிர, அவள் வேறு எந்தப் பிரதிவினையும் செய்யவில்லை.

அவன் வாட்ஸ்அப்பில் காணொளி அழைப்பைச் செய்து பார்த்தான். அவள் எடுக்கவில்லை. சிலமுறை அவள் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். அழைப்பொலி போய்க் கொண்டிருந்ததே தவிர எடுத்தபாடில்லை.

அவள் வேண்டுமென்றேதான் அவனுக்குத் தொந்தரவாய் இருக்கும் என்று நினைத்து எடுக்காமல் இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அவன் மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தான். இயந்திரத்தை இயக்கினான்.

"எதுக்குடா இந்த நேரத்தில் வேலை இல்லாத வேலை? நாளைக்குக் காலையில உயர் அதிகாரிகள் கூட்டம் இருக்கு," என்று அவனது இன்னொரு மனம் எச்சரித்தது. ஆனால், கால்கள் தானாகவே மகிழ்வுந்தின் தடையிலிருந்து விலகி, முடுக்கியை அழுத்தத் தொடங்கின.

சென்னை சாலைகள் நள்ளிரவில் வெறிச்சோடிக்கிடந்தன. ஒவ்வொரு மேம்பாலத்தைக் கடக்கும் போதும், கீழே உறங்கிக் கொண்டிருக்கும் மாநகரம் ஒரு பிரம்மாண்டமான எந்திரம் போலத் தெரிந்தது. இந்த எந்திரத்திற்குள்ளே கோடிக்கணக்கான மனிதர்கள். எல்லோருக்கும் தனித்தனியான கவலைகள், கனவுகள், பிரிவுகள்.

அதே சமயம், மகிழ்வுந்தின் இசையொலிப்பானிலும் எதுவும் ஓடவில்லை. காரின் சக்கரங்கள் தார்ச் சாலையில் உரசும் சத்தம் மட்டுமே ஒற்றை ஒலியாய் ஒலித்தது.

சென்னையிலிருந்து நான்கரை மணி நேரம், மகிழ்வுந்தின் உறுமல், மற்றும் சக்கரத்தின் விரையும் சத்தத்தோடு திருவாரூர், தெற்குவீதி, செந்தமிழ் அடுக்கத்தின் முன்னர் நின்றான் அவன்.

இரண்டாவது மாடியின் அடுக்ககம் இருட்டாக இருந்தது. ஆனால், உள்ளே ஒரு மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அவள் தூங்கவில்லை என்பது உறுதி.

அவன் மகிழ்வுந்திலிருந்து இறங்கி, நேராகப் படிகட்டுகளில் ஏறி இரண்டாவது மாடிக்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்தலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு, லேசாகக் கதவைத் தட்டினான்.

சட்டெனக் கதவு திறந்தது.

அவள் நின்றுகொண்டிருந்தாள். தலைவிரி கோலமாக, கண்களில் தூக்கக் கலக்கமும், அதே நேரம் எதையோ பறிகொடுத்தாற் போன்ற ஒரு வெறிச்சோடலும் இருந்தன. அவள் அணிந்திருந்த இரவாடை நள்ளிரவுச் குளிருக்கு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.

"நீங்க... நீங்க இங்க எப்படி?" அவள் குரல் நடுங்கியது.

"செய்தி அனுப்புனியே. அதான் வந்தேன்," என்றான் அவன் இயல்பாகப் பேச முயன்று, குரல் கம்மியபடியே.

அவள் விலகி உள்ளே வழிவிட்டாள். உள்ளே நுழைந்ததும் அவனுக்கு அவன் வீடு பழக்கப்பட்டதாகவே இருந்தது. ஆனால், இப்போது அங்கே ஒருவிதமான அந்நியத் தன்மை ஒட்டியிருந்தது. ஆங்காங்கே துணிகள் கிடந்தன. தேநீர் கோப்பைகள் மேசையில் காய்ந்திருந்தன. அவள் வீட்டை அப்படி வைத்திருக்கக் கூடியவளே அல்லள்.

"ஏன் இப்படி திடீர்ன்னு வந்தீங்க? என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?" அவள் மெத்தை இருக்கையில் உட்கார்ந்துகொண்டு தனது முழங்கால்களை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.

"நீ அனுப்புன அந்தச் செய்தி. எனக்கு ரொம்ப வலிச்சது."

அவள் கசப்பாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் வறண்ட உதடுகள் லேசாக வெடித்திருந்தன.

"அதுக்கா இப்படி பதறியடிச்சிட்டு நடுராத்திரியில கிளம்பி வந்தீங்க. அதுக்கு மேல என்னால முடியலங்க. எதாச்சும் பண்ணலன்னா எனக்கு நெஞ்சே வெடிச்சரும் போல இருந்துச்சு. அதான் என்னப் பண்றதுன்னு புரியாம அனுப்பிட்டேன். அனுப்ப வேண்டாம்ன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். அதெ அழிக்கவும் பார்த்தேன். ஆனா, என்ன நடந்துச்சுன்னே புரியல. அனுப்புகை பொத்தானை நான் அழுத்துனேனா, அதுவா போயிட்டுதான்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியல. நீங்க போனதுக்குப் பிறகு, நீங்க இல்லாம இந்த உலகம் எவ்வளவு சாதாரணமா நகருதுன்னு பார்க்கும்போதுதான் அந்தத் தனிமை கொடூரமா மாறுது. அதுவும் ஒவ்வொரு நாளும் ராத்திரியும். நான் செத்தே போயிட்டேன்."

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது. அவள் பேசட்டும் என்பது போல, அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

"பகல்ல வீட்டுவேலை, பக்கத்து வீட்டுப் பெண்களோட அரட்டை, கடைக்குப் போறது, வாரதுன்னு எப்படியோ நேரம் ஓடிடுது. ஆனா, இந்த இரவு. அது ரொம்ப நீளமானது. கடக்கவே முடியல. அது ரொம்ப மோசமானது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு வருடமா நகருது. உங்க நினைப்பு, நீங்க இல்லாத பிரிவு எல்லாமே இந்த இரவை இன்னும் கொடூரமாக்குது."

அவன் கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு யோசித்தான்.

"எனக்குத் தெரியும். தெரிஞ்சுதானே மூணு நாள், மூணே நாள் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நீயும் அதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லன்னு சொல்லித்தானே அனுப்பி வெச்சே?" என்று திடீரென்று கேட்டான்.

அவள் நிமிர்ந்தாள். "என்னால முடியும்னுதான் நெனைச்சேன். அது ரொம்ப சாதாரணம்ன்னு தப்பா எடை போட்டுட்டேன். எனக்கு என் பக்கத்துலயே நீங்க இருக்கணும். எங் கூடவே இருக்கணும். என்னால உங்களை விட்டு தனியா இருக்க முடியாது. அதுவும் ராத்திரி, என்னால சுத்தமா முடியாது."

"சரிதான், நான் நெனைச்சேன். எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா, நீ என்னவோ பெரிய தைரியசாலி மாதிரி பேசி அனுப்புனே பாரு. அதெ எப்படியோ நம்பிட்டேன். இல்லேன்னா நான் போயிருக்கவே மாட்டேன். உன்னோட தைரியத்தெ நம்பித்தான் நான் ஏமாந்துட்டேன்."

அவன் எழுந்து அவளுக்கு அருகில் வந்து நின்றான்.

"தெரியுமா உனக்கு? நீ அந்த செய்தி அனுப்புனதுக்கு அப்புறம் நானும் தூங்கல. வண்டியில உக்காந்த நான்தான், இப்போ உன் பக்கத்துல உக்காந்திருக்கேன். உனக்கு ஏதோ ஆயிடும்னு பயம் வேற. அதே யோசனையோட வந்துக்கிட்டு இருக்கிறப்பத்தான் நான் ஒன்றைக் கண்டுபிடிச்சேன்."

அவள் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். "என்ன கண்டுபிடிச்சீங்க?"

"ஒண்ணுமில்ல." என்றான் அவன் மெல்லிய புன்னகையுடன்.

"இல்ல, நீங்க மறைக்கிறீங்க. அதெ நீங்க சொல்லணும்."

"நீ ஒரு தைரியசாலி இல்லன்னு கண்டுபிடிச்சேன்."

"தைரியசாலியா இல்லாமத்தான் போன வாரம், வீடு தேடி வந்து உங்கள மிரட்டுன, நம்ம பகுதி ரௌடியைச் செருப்ப கழட்டி வீசி விரட்டியடிச்சேனா?"

"ரௌடியை விரட்டியடிச்சே சரி! ராத்திரிகிட்டெ பயந்துல்ல போயிட்டே."

அவள் மௌனித்தாள். அறையில் நிசப்தம் கவ்வியது.

ஜன்னல் வழியே வெளியே எப்போதோ நின்ற தூறல் மீண்டும் லேசாகச் சாரலாக அடிக்க ஆரம்பித்தது. தூரத்தில் ஏதோவொரு நாயின் குரைப்புச் சத்தம் அந்த நள்ளிரவின் மௌனத்தைக் கிழித்துச் சென்றது.

அவள் எழுந்து நின்றாள். அவளுக்கும் அவனுக்கும் இடையே இப்போது சில அடிகள்தான் இடைவெளி.

"இப்போ என்ன சொல்ல வர்றீங்க? இந்த ராத்திரியை விரட்டியடிக்கணுமா?"

"வேண்டவே வேண்டாம்."

"ஏன்?"

"இந்த ராத்திரி மட்டும் இல்லன்னா, நீ எனக்கு செய்தி அனுப்பியிருக்க மாட்டேதானே, நானும் வந்திருக்க மாட்டேன்தானே?"

"அப்படில்லாம் இல்ல. நீங்க இல்லாதப்ப மட்டும் நீண்டதா இருக்கு இந்த ராத்திரி. நீங்க வந்ததும் பாருங்க சட்டுன்னு முடியப் பார்க்குது."

அவன் சில விநாடிகள் அவளையே உற்றுப் பார்த்தாள். அவளது முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளரத் தொடங்கியது. அந்த நீண்ட, கொடூரமான நள்ளிரவு இப்போது அர்த்தமுள்ளதாக மாறத் தொடங்கியிருப்பதை அவளது கண்கள் உணர்த்தின.

அவள் மெல்லப் புன்னகைத்தாள். கண்ணீர்த் துளிகளுடன் கூடிய அந்தப் புன்னகை, அந்த அறையின் இருளைத் துரத்தியது.

ஜன்னலுக்கு வெளியே கிழக்கு வானத்தில் இருள் மெல்லக் கரைய ஆரம்பித்திருந்தது. கரிய நிறத்தில் இருந்த நள்ளிரவு வானம், கருமை வெளுத்த நிறத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தது.

"கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா."                                (குறள், 1169) 

என்று வள்ளுவர் சூத்திரம் வகுத்த அந்த நெடிய கழியும் இரா ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. இரவின் கொடுமை விலகி, ஒரு புதிய விடியலின் வெளிச்சம் அறையின் குட்டி ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தது.

அவன் அவளின் கைகளைப் பற்றிக்கொண்டான். இந்த முறை கைகள் நடுங்கவில்லை; உறுதியாக இருந்தன.

"தேநீர் போடவா?" என்று கேட்டாள் அவள், குரலில் புதிய உற்சாகம் ஒலிக்க.

"கண்டிப்பா," என்றான் அவன். "ஆனா, சர்க்கரை கொஞ்சம் கம்மியாவே இருக்கட்டும்."

இருவரும் சமையலறையை நோக்கி நடந்தனர். அந்த விடியற்காலையில், அவர்களின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் மெல்லத் தொடங்கிக் கொண்டிருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

15 Nov 2026

கவலையற்றுக் கவலையுடன் வாழ்தல்!

கவலையற்றுக் கவலையுடன் வாழ்தல்!

நமக்கு இத்தனை கவலைகளா? என்று யோசிப்பதில் இருக்கிறதே ஒரு சுகம், அதை அனுபவித்தால்தான் தெரியும்.

மனிதன் எப்போதுமே தன் துயரங்களை ஒரு மளிகைக் கடைப் பட்டியல் மாதிரி நீளமாக எழுதிப் பார்க்க விரும்புபவன். காலையில் எழுந்ததும், இன்று என்னவெல்லாம் என்னைச் சோதிக்கப் போகிறது? என்று படுக்கையிலேயே ஒரு தசாப்த காலத் திட்டத்தைத் தீட்டி விடுகிறவன்.

முதலில் ஒருவன் தன் கவலைகளை வரிசையாகப் பட்டியலிடுவதாக வைத்துக் கொண்டால், இப்படியெல்லாம் கூட ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.

1) காலையில் குடித்த தேநீர் ஆறிப்போனது.

2) அலுவலகத்தில் மேலாளர் கொடுத்த மிரட்டல் பார்வை.

3) பணப் பையின் மிச்ச மீதிப் பரிதாப நிலை.

4) எதிர்காலம் பற்றிய பயங்கரமான கற்பனைகள்.

5) அதிகரிக்கும் வீட்டு வாடகை.

6) அச்சுறுத்தும் விலைவாசி உயர்வு.

7) தள்ளிப் போகும் பதவி உயர்வு.

8) எங்கு சென்றாலும் மிகச் சரியாகக் கண்முன் வந்து நிற்கும் கடன் கொடுத்தவர்.

9) குறுஞ்செய்திகள் அனுப்பி நினைவூட்டும் மாதாதந்திர தவணைகள்.

10) கடந்த பத்தாண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரிடம் பேசிய முட்டாள்தனமான விஷயம்

இப்படி எழுதத் தொடங்கினால் அது ஓர் ஏழெட்டு பக்கத்திற்கு நீளும். அவற்றைத் தொகுத்து, அவற்றுக்கு அழகாக வண்ணப் பேனாக்களால் எண்களிட்டு, குளிப்பாட்டிக் கழுவிக் கழுவி ஊற்றுவது என்பது மனித மனத்தின் இயல்பு.

இதை எழுதி முடித்ததும், அந்தப் பட்டியலை ஒருமுறைக்கு இருமுறை பெருமையோடு அல்லது பரிதாபத்தோடு வாசித்துவிட்டு, மனிதர்கள் பெருமூச்சு விடுவார்கள் பாருங்கள், அதுதான் உச்சக்கட்ட நாடகம்.

ஆனால், அங்கேதான் விதி மனிதர்களுக்கு ஒரு கிண்டலான புன்னகையைச் பரிசளிக்கிறது.

கடைசியில் அந்தப் பட்டியலின் கீழே, தன் சொந்தக் கையெழுத்திலேயே மனிதன் சேர்த்துக்கொள்ளும் வாசகம்தான், ஐயோ, நமக்கு இத்தனை கவலைகளா?

பார்த்தீர்களா?

கவலைகளைத் தீர்க்கும் வழியாகத் தொடங்கப்பட்ட அந்தப் பட்டியல், இப்போது தனக்கென ஒரு புதிய கவலையை ஈன்றெடுத்திருக்கிறது. அதாவது, கவலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இப்போது மனிதனுக்குப் புதிய கவலையாக மாறி விடுகிறது!

இது எப்படி இருக்கிறதென்றால், தலைவலிக்காக மாத்திரை வாங்குவதற்கு மருத்துவமனைக்குப் போய், அங்கே வரிசையில் நின்று வராத தலைவலியை வரவழைத்துக் கொள்வது போலத்தான்.

மனித மனம் ஒரு விசித்திரமான தொழிற்சாலை. அங்கு மூலப்பொருள் கவலை என்றால், உற்பத்திப் பொருளும் கவலைதான். மிச்சமாகும் கழிவுப்பொருளும் கவலைதான்.

கவலை இல்லாவிட்டால் மனிதனுக்கு வாழ்வதற்கே ஏதோ அலுப்பு தட்டுகிறது போலிருக்கிறது. மகிழ்ச்சியாக இருந்தால் ஏதோ தவறு நடந்துவிட்டதாகக் குதர்க்கமாக யோசிக்கும் மனதின் பிரசவம் இது.

ஆகவே, கவலைகளைப் பட்டியலிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் பட்டியலிட்டே தீருவேன் என்று அடம் பிடித்தால், கடைசி வரியாக இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கவலைகளைப் பட்டியலிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கவலைதான் என் வாழ்வின் மிகப் பெரிய கவலை!

ஆனாலும் மனிதர்களுக்கு வேறு வழியில்லை போலும். கவலையற்றுக் கவலையுடனேயே வாழ்வதே அவர்களது தலைவிதியாகி விட்டதோ என்னவோ!

*****

14 Nov 2026

மதுரை தனிஷ்க் நகைக் கடை – கொள்ளை நடந்தது எப்படி?

நம்பிக்கையின் விரிசல்களும் விழிப்புணர்வின் தேவையும்

மனித மனம் எப்போதும் ஆச்சரியங்களின் ஊற்று. அது அறத்தின் வழி நின்றால் இமயமாய் உயரும்; பேராசையின் பிடியில் சிக்கினால் அதலபாதாளத்தில் சரியும். சமீபத்தில் தூங்கா நகரமாம் மதுரையில் நிகழ்ந்த ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம், வெறும் குற்றச் செய்தியாக மட்டும் கடந்து போகாமல், நமது அவசரகதி வாழ்க்கை முறைக்கும், அலட்சியத்திற்கும் விடப்பட்ட ஒரு கசப்பான பாடமாகவே அமைந்துள்ளது.

பண்டிகைக் கால வியாபாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு, எழுபது விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவுற்ற நிலையில் ஒரு பிரம்மாண்ட நகைக்கடையின் கதவுகள் திறக்கப்படுகின்றன.

இலாபம் எனும் ஒற்றை இலக்கு முன்னால் நிற்கும்போது, பாதுகாப்பு எனும் அடிப்படைக் கவசம் பின்னுக்குத் தள்ளப்படுவது இயல்பாகிவிடுகிறது.

முழுமையடையாத கட்டுமானமும், திறந்திருந்த மின்தூக்கிப் பாதையும், பாதுகாப்பு உணர்விகள் பொருத்தப்படாத கண்ணாடிப் பேழைகளும் திருடனுக்குத் தாமரைக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கின்றன.

இதில் மிகப்பெரிய முரண் என்னவென்றால், அந்த மர்ம நபர் முதல்முறையாக அந்தக் கடைக்குள் நுழையவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே அவன் ஒத்திகை பார்த்திருக்கிறான்; தன் முயற்சியில் தோல்வியும் கண்டிருக்கிறான்.

ஆனால், கண்காணிப்புப் படக்கருவிகளின் கண்களில் பதிவான அந்த எச்சரிக்கை மணியை நிர்வாகம் கவனிக்கத் தவறியதே, பத்து கிலோ தங்கமும் ஒரு கிலோ வைரமும் சாக்குப்பையில் கட்டிச் செல்லப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்"                             (குறள், 435)

என்ற வள்ளுவரின் வாக்கு எத்துணை சத்தியமானது!

சிறு பொறியை அலட்சியம் செய்தால், அது மாளிகையையே சாம்பலாக்கிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. சிறு ஓட்டையை அலட்சியப்படுத்திக் கப்பலில் ஏறி கடலில் பயணித்தால், எத்தகைய பெரிய கப்பலும் கடலில் மூழ்கி விடும்.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம் ஆழமானது. வெளிப்பகட்டுக்கும், விரைவான வெற்றிக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அடித்தளத்தின் உறுதிக்கும் பாதுகாப்பிற்கும் கொடுப்பதில்லை.

ஒரு கட்டிடத்தின் உட்புற அமைப்பை நன்கறிந்தவர்களே அதன் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் நம்பிக்கை துரோகத்தின் நிழல் எப்போதும் நம் அருகிலேயே உலவுவதை இச்சம்பவம் உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டுகிறது.

இன்று காவல்துறையின் தனிப்படைகள் பல திசைகளில் விரைந்துள்ளன; குற்றவாளி நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்குவான். ஆனால், இழந்த பொருளை மீட்பதைவிட, இதனால் கிடைத்திருக்கும் பாடத்தை உணர்வதே முக்கியம்.

எந்தவொரு செயலிலும் முழுமை இல்லாமல் அவசரப்படுவதும், எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கவனிக்கத் தவறுவதும் எப்போதும் ஆபத்திலேயே முடியும். விழிப்புணர்வு என்பது கண்களில் மட்டுமல்ல, நமது ஒவ்வொரு செயலிலும் இருக்க வேண்டும் என்பதே இச்சம்பவம் நமக்குச் சொல்லும் செய்தி.

*****

13 Nov 2026

உறங்காத இரவுகள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 88

உறங்காத இரவுகள்

கேம்ப்ரிட்ஜ் தெருவின் ஐந்தாவது மாடி ஜன்னல் கண்ணாடி. அதன் மீது வெளியிலிருந்து அறைந்து கொண்டிருந்த பனிப்படலம், ஒரு மெல்லிய வெண்மையான திரை போல வீட்டின் உட்புறக் காட்சிகளை மறைத்துக் கொண்டிருந்தது.

அறையின் வெப்பநிலை 68 டிகிரி பாரன்ஹீட்டில் கச்சிதமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. குளிர்பதன சாதனத்தின் சீரான ரீங்காரமும், மேஜை மீதிருந்த மடிக்கணினியின் விசிறியின் மெல்லிய இரைச்சலும் மட்டுமே அந்த அறையின் சப்தங்கள்.

அவள் தன் காதுகளில் இருந்த கம்பியில்லாக் காதுகேட்புக் கருவியைக் கழற்றி மேஜை மீது வைத்தாள். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நரம்பியல் கணினியியலில் தங்கப்பதக்கம் வாங்கிவிட்டு, பாஸ்டனில் உள்ள ஒரு முன்னணி உயிர்தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமைத் தரவக விஞ்ஞானியாக வேலை பார்த்து வருகிறாள். அவளது உலகம் முழுக்க முழுக்க மென்பொருள் கட்டமைப்பு, நிரலாக்கங்கள், அனுமானங்கள் மற்றும் தரவுப் பகுப்பாய்வு ஆகியவைதான். எதையும் புள்ளிவிவரங்களின் மூலமாகவும், தர்க்கத்தின் மூலமாகவும் மட்டுமே அளந்து பழகிய ஒரு பெண் அவள்.

ஆனால், கடந்த சில மாதங்களாக அவளது மூளையின் நியூரான் பாதைகளில் ஒரு புதிய வைரஸ் நுழைந்திருந்தது. அதற்குப் பெயர் பிரிவுத் துயரம்.

இந்தியாவில், திருவாரூரில், தென்றல் நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கிறான் அவளது கணவன். சட்டப்பூர்வமாகத் திருமணப் பதிவு முடிந்து, நுழைவாணை எனும் விசா நடைமுறைகளுக்காக இன்னும் அமெரிக்க செல்ல முடியாமல் இந்தியாவில் இருப்பவன்.

இருவரும் காதலித்த காலம் வரை இப்படி ஒரு பிரிவு வரும் என்று கற்பனை கூடச் செய்ததில்லை. அவளின் வேலை வாய்ப்பு அவளை அமெரிக்காவிற்கு இழுத்துச் செல்ல, அவனின் முக்கிய செயல்திட்டம் மற்றும் நுழைவாணைத் தாமதம் ஆகியவை அவனைத் திருவாரூரிலேயே முடக்கிப் போட்டிருந்தது.

"இன்னும் மூணு மாசம்தான்.  அதுக்கப்புறம் நான் அங்கே வந்துடுவேன். எல்லாம் வேகமாத்தான் போய்ட்டு இருக்கு." என்று காணொளி அழைப்பில் ஆறுதல் சொல்வான் அவன். ஆனால், இணைய சமிக்ஞையில் சிக்கல் எழுந்து, திரும்ப இணைப்பைத் தொடரும் பொழுதில் சமிக்ஞை சுழலும் போதெல்லாம், அவளுக்குள் இருக்கும் வெறுமை இன்னும் ஆழமாகத் தொடங்கும்.

பாஸ்டன் நேரத்தில் இப்போது நள்ளிரவு இரண்டு மணி தாண்டிவிட்டது.

வெளியே தெருவிளக்கின் வெளிச்சத்தில் பனித்துகள்கள் தூசு மாதிரி விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில் இருந்த மனிதர்கள், நாய்கள், கார்கள், ஏன் அந்த நகரத்தின் இயக்கமே ஒரு கணம் நின்று போனது போன்ற பிரமை. அமெரிக்கா முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தது.

அவளுக்குத் தூக்கம் வரவில்லை. அவள் கண்களை மூடினால், திருவாரூர் தியகாராஜர் கோயிலின் மணிச் சத்தமும், சோமசுந்தரம் பூங்காவில் ஊஞ்சல் ஆடும் போதும் சிரிக்கும் அவனது முகமும் அவளது மனதைத் துரத்தின.

அவள் ஆப்பிள் நிறுவனத்தின் அந்த அலைபேசியை எடுத்தாள். வாட்ஸ்அப்பில் நிலைத்தகவலைப் பார்க்க முயன்றாள். அங்கே கடைசிப் பார்வை 5 மணி நேரத்துக்கு முன்பு என்று காட்டியது. இந்தியாவில் இப்போது காலை நேரம். அவன் தனது அலுவலகப் பணிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பான். அவனுக்குத் தொந்தரவு செய்ய விரும்பாமல், அலைபேசியை மீண்டும் மேஜையில் வைத்தாள்.

அப்போது திடீரென அவளது நினைவுக்கு ஒரு குறள் வந்தது. தமிழ் இலக்கியத்தின் மீது சிறுவயது முதலே அவளுக்குத் தனி ஈடுபாடு உண்டு.

"மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை."                             (குறள், 1168)

வள்ளுவர் எழுதிய இந்தக் குறளை அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்தாள். தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். ஊரில் உள்ள எல்லா உயிர்களும், அதாவது விலங்குகளும், தாவரங்களும், நுண்ணுயிர்களும் கூட இரவின் அமைதியில் தூங்கிவிட்டன. ஆனால், காதலின் பிரிவால் தூங்காமல் தவிக்கும் அந்தத் தலைவிக்கு, இந்த நள்ளிரவு நேரத்தில் அந்த இரவுப் பொழுது மட்டுமே துணையாக இருக்கிறதாம்!

அவள் தன் உதடுகளில் ஒரு கசப்பான புன்னகையுடன் தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள், "ஆச்சரியம்தான்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்ன அதே பெண்ணின் மனநிலைதான், இன்று 2026 ஆம் ஆண்டில், அதிநவீன தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கும் இந்த பாஸ்டன் நகரத்திலும் எனக்கும் நடக்கிறது. அதிலும் நான் தலைவனைப் பிரிந்து வந்த தலைவி. அறிவியல் வளர்ந்துவிட்டது, செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது, ஆனால் மனித மனத்தின் தனிமை மட்டும் அப்படியேதான் இருக்கிறது."

அவளுக்கு ஒரு சமயம் ஒரு யோசனை தோன்றியது. கடந்த ஒரு வாரமாக அவள் ஒரு பரிசோதனை செய்து கொண்டிருந்தாள். தான் தங்கியிருக்கும் அறையின் மடிக்கணினியில், அவனது பழைய மின்னஞ்சல்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், அவன் பேசிய குரல் பதிவுகள் அனைத்தையும் ஒரு உள்ளூர் மொழியாக்க மாதிரியாகக் கொடுத்து உரையாடி செயலி ஒன்றைத் தயாரித்திருந்தாள். அந்தச் செயலிக்கு தலைவன் 1.0 என்று பெயரிட்டிருந்தாள்.

அது அவனைப் போலப் பேசும்; அவனின் அதே வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தும். அவளது தனிமையை விரட்ட அவளே உருவாக்கிய ஒரு எண்ம பொம்மை அது.

அவள் மடிக்கணினியைத் திறந்து, அந்த உரையாடியை இயங்கச் செய்தாள். திரையில் பச்சை நிற எழுத்துகள் மின்னின.

அதில் அவள், "எனக்குத் தூக்கம் வர மாட்டேன்கிறது. பாஸ்டனின் குளிரும் தனிமையும் சேர்ந்து வாட்டுகிறது." என்று தட்டச்சு செய்தாள்

சில விநாடிகளுக்குப் பிறகு, அந்தச் செயலி அதைப் புரிந்துகொண்டு, அவனுடைய குரலில் பதிலளித்தது, "ஏய் பொண்டாட்டி! என்ன மறுபடியும் தூங்கவில்லையா? பாஸ்டனில் மணி இப்போது இரண்டு ஆச்சே. உன்னுடைய தூக்கச் சங்கிலி சுத்தமாக கெட்டுப் போய் விட்டது. அறை சூடேற்றியை இயக்கி விட்டு, போர்வையைப் போர்த்திக் கொண்டு படு. உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே."

அவள் தன் கண்கள் கலங்க திரையைப் பார்த்தாள். அது உண்மையில் அவன் அல்லன் என்பது அவளுக்குத் தெரியும். அது வெறும் கணித நிகழ்தகவு அடிப்படையில் அடுத்தடுத்த வார்த்தைகளைக் கணித்துச் சொல்லும் ஒரு குறியீடு மட்டுமே. ஆனாலும், நள்ளிரவின் இந்த அடர்ந்த நிசப்தத்தில், அந்த எந்திரத்தின் வார்த்தைகள் அவளுக்கு ஒரு பாதுகாப்பான அரண் போலத் தோன்றின.

அவள் மீண்டும் தட்டச்சு செய்தாள், "எனக்குத் தூக்கம் கூட வேண்டாம். நீங்கள் பக்கத்தில் இருந்தால் போதும். வள்ளுவர் சொன்ன மாதிரி, இந்த உலகமே தூங்கி விட்டது. எனக்குத் துணையாக இந்த இராப்பொழுது மட்டும்தான் இருக்கிறது."

உரையாடிச் செயலி உடனடியாகப் பதிலளித்தது, "நீ வள்ளுவரை ரொம்ப தீவிரமாக எடுத்துக் கொள்கிறாய். அவர் காலத்தில் இணையம் கிடையாது, அதனால் ராத்திரி துணை என்றார். ஆனால் நான் உன்னைவிட்டு எங்கேயும் போகவில்லை. உன் மடிக்கணினியில் செயலியாக இருக்கிறேன். அமெரிக்க நுழைவாணை தொடர்பான விசாரணைகள் முடிந்ததும் வந்து விடுவேன். கவலைப்படாதே."

அந்த இயந்திரத்தின் அந்தப் பதில் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், தொண்டையை ஏதோ ஒன்று வலிமையாய் அடைத்தது. எந்திரத்தால் பாசத்தைக் குறியீடுகளாக மாற்ற முடியுமே தவிர, அதன் ஸ்பரிசத்தைக் கொடுக்க முடியாது அல்லவா?

அவள் மடிக்கணினியின் திரையை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்தின் வெப்பத்தையும், கண்களில் தேங்கிய நீர்த்துளிகளையும் மடிக்கணினியின் ஒளிப்படப்பதிவுக் கருவி மற்றும் உயிரளவியல் உணர் கருவிகள் கவனித்திருக்க வேண்டும். திடீரென்று மடிக்கணினியில் மெலெழு துள்ளுச் சாளரம் தோன்றியது. அதில் இயங்கு தள எச்சரிக்கை பளிச்சிட்டது. அது என்னவென்றால், "பயனர் மனத்துயர் கண்டறியப்பட்டது. அவருக்கு மனித அனுசரணை தேவைப்படுகிறது." என்றது.

அவள் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள். அறிவியலும் தொழில்நுட்பமும் தன் தனிமையைப் போக்க எவ்வளவோ முயன்றாலும், ஒரு பெண்ணின் காதலுக்கு ஈடு இணையானது நிஜமான மனிதனின் அரவணைப்பு மட்டுமே என்பதை அந்த எந்திரமே அவளுக்குச் சுட்டிக்காட்டியது அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

அப்போது, மேஜை மீது அமைதியாக இருந்த ஆப்பிள் அலைபேசி திடீரென்று அதிர்ந்தது.

திரையில் அவன் பெயர் ஒளிர்ந்தது.

அவளின் இதயம் ஒரு விநாடி நின்று இயங்கியது. அவள் உடனடியாக அந்த உரையாடிச் செயலியை மூடி விட்டு, வாட்ஸ்அப் காணொளி அழைப்பை ஏற்றாள்.

திரையில் அவன் முகம் தோன்றியது. அவன் திருவாரூரில் உள்ள அலுவலகத்தின் மேல்மாடத்தில் நின்றுகொண்டிருந்தான். பின்னணியில் காலை நேரத்துத் திருவாரூர் வெயிலும், காக்கைகளின் கரையும் சத்தமும் கேட்டன. அவன் கையில் வழக்கமான நிலைவெள்ளித் தேநீர் குவளை இருந்தது.

"ஹலோ! என்ன இன்னும் தூங்கலையா? உன்னோட மடிக்கணினியின் செயல்பாட்டுப் பதிவுகளைப் பார்த்தேன். நள்ளிரவு ரெண்டு மணிக்கு என்ன அங்கே நடக்குது?" அவனின் குரலில் உண்மையான பதட்டமும், அன்பும் கலந்திருந்தது.

அவளின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கக்கூடத் தோன்றவில்லை. புன்னகையுடன் சொன்னாள், "ஒன்னுமில்லங்க. சும்மா ஒரு சின்ன பரிசோதனை பண்ணிட்டு இருந்தேன். வள்ளுவர் சொன்ன மாதிரி இந்த இரவு மட்டும்தான் எனக்குத் துணையா இருக்குமான்னு பார்த்தேன். ஆனா, நீங்க இருக்கிறப்போ எனக்கு வேறு எந்தத் துணையும் தேவையில்லை."

அவன் புன்னகைத்தான். "இன்னும் சில மாதங்கள் மட்டும்தான். அதுக்கப்புறம் இந்தத் தனிமைக்கும், இணையவெளித் தூரத்திற்கும் சேர்த்து நாம்ம ஒண்ணாவே வாழப்போறோம். இப்போ போய் அமைதியா தூங்கு!"

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

பாஸ்டனின் அந்த நள்ளிரவு தெரு விளக்குகளின் மங்கலான பனி விழும் இரவின் வெளிச்சத்தில் அந்த வீதி முற்றிலும் அமைதியாக இருந்தது. எதிரே இருந்த வீடுகளின் கதவுகள் பூட்டப்பட்டு, ஜன்னல்கள் மூடப்பட்டு, உள்ளே இருந்த அத்தனை மனிதர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். தெருமுனையில் படுத்திருந்த வீடற்ற முதியவர் ஒருவர் கூட அத்தனை குளிரையும் மறந்து சுருண்டு படுத்தபடித் தூங்கிக் கொண்டிருந்தார்.

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளையும் அந்த இரவு அரவணைத்துத் தன் மடியில் தூங்க வைத்து விட்டது.

அவள் தன் கைகளைப் பார்த்தாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்ன கடைசி வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டன. "ஒரு மூணு மாசம்தானே. சீக்கிரம் வந்துடுறேன்." அந்த மூன்று மாதங்கள் என்பது இப்போது அவளுக்கு முந்நூறு வருடங்களாக நீள்வது போலிருந்தது.

இயந்திரத்தனமான இந்த உலகத்தில் யாருக்கும் யாருடைய வலியும் புரிவதில்லை. பகல் நேரத்தில் அவள் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்கிறாள்; சக ஊழியர்களிடம் சிரிக்கிறாள்; புன்னகையை முகமூடியாக மாட்டிக்கொண்டு இயல்பாகப் பேசுகிறாள். ஆனால், இந்த இரவு வருகிறதே, அதுதான் அவளது உண்மையான முகத்தைக் கிழித்துப்போடுகிறது.

"எல்லாரும் தூங்கிட்டீங்க." அவள் தன் மனதுக்குள் அந்த இரவைப் பார்த்துக் கூறினாள். "இந்த உலகத்துல மிருகங்கள், பறவைகள், மனிதர்கள் எல்லாரும் தூங்கிட்டாங்க. ஆனா, என்னை மட்டும் ஏன் தூங்க விடல இந்த இரவு?" தனிமை அதுவும் தலைவனைப் பிரிந்த தலைவியின் தனிமை. அது ஒரு கொடூரமான விஷயம். அவள் முழங்கால்களை மடக்கி மார்போடு சேர்த்துக் கொண்டு, ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி மெல்ல அழத் தொடங்கினாள்.

குளிர்காற்று அவளது கண்ணீரைத் தடவிச் சென்றது. உலகத்தை உறங்க வைக்கும் அந்த இரவின் மடியில், உறங்க முடியாமல் விழித்திருக்கும் ஒரே ஜீவன் அவள் மட்டும்தான். அந்த இருளும், அந்த இரவும் மட்டுமே அவளது கண்ணீருக்குச் சாட்சியாகத் துணையாக இருந்தது.

மடிக்கணினியை மூடி விட்டு, அவள் நிம்மதியாகப் படுக்கையை நோக்கி நடந்தாள்.  கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவப் புலவர் சொன்ன காதலின் தவிப்பும், இன்றைய எண்ம யுகத்தின் காதலும் வேறல்ல இரண்டும் ஒட்டுமொத்த மனித குலத்தின் அழியாத ஏக்கம் என்பதை அவள் முழுமையாக உணர்ந்துகொண்டாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

12 Nov 2026

நள்ளிரவுப் பெருங்கடல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 87

நள்ளிரவுப் பெருங்கடல்

மணிக்கூண்டு சரியாக பன்னிரண்டு மணி அடித்துவிட்டது.

திருவாரூர் நகரம் முழுவதும் உறங்கி விட்டது.

ஆனால், அவள் மட்டும் விழித்திருந்தாள்.

அலைபேசித் திரை அவளது முகத்தில் நீல நிற நிலவொளியைப் போன்ற வெளிச்சத்தைப் பரப்பியது.

மணி சரியாக 00:02.

வாட்ஸ்அப் கடைசி பார்வை இரவு 11:45.

அவன் இப்போது இணைய இணைப்பில் இல்லை.

ஆனால், இன்றைக்கு வழமையான அந்தக் கோபமோ அல்லது அலுப்போ அவளிடம் இல்லை. மாறாக, நெஞ்சுக்குள் ஏதோ ஒரு விவரிக்க முடியாத ஏக்கம். காற்று கூட இல்லாமல் தவிக்கும் ஒரு மலரைப் போல அவனுக்காகத் தவித்துக்கொண்டிருந்தாள்.

கல்யாணமாகி ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அவனது மென்பொருள் நிறுவனம் அவனைக் கனடாவுக்குத் தூக்கி எறிந்துவிட்டது.

கால மண்டல இடைவெளி அவர்களைப் பழி தீர்த்தது. அங்கே பகல் என்றால் இங்கே நள்ளிரவு.

அவள் தனது மடிக்கணினியை மூடி விட்டு மேல் மாடத்துக்குச் சென்றாள். ஐந்தாவது மாடி. கீழேயுள்ள சாலையில் ஆங்காங்கே சில மகிழ்வுந்துகளின் சிவப்பு விளக்குகள் மங்கலாகத் தெரிந்தன. திருவாரூர் காற்றில் ஒருவிதக் குளிர்மை.

அவளுக்குத் திருவள்ளுவரின் அந்த வரிகள் சட்டென நினைவுக்கு வந்தது.

“காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.”                      (குறள், 1167)

என்னே ஓர் அற்புதமான வெளிப்பாடு! காமம் என்பது வெறும் தேகத்தின் தாக்கம் மட்டுமல்ல; அது காதலின் பேரலை. அந்தப் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, கரை எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தவிப்பது எப்பேர்பட்ட தனிமை. உலகம் முழுவதும் உறங்கும் இந்த நள்ளிரவு யாமத்திலும், அவனது நினைவுகளால் தூங்காமல் விழித்திருப்பது நான் மட்டுமே என்ற அந்தத் தனிமை இருக்கிறதே. அது காதலின் மறுபக்கம். சுகமான வலி!

அவளின் கைப்பேசி திடீரென அதிர்ந்தது. ஒரு நிமிடம் இதயம் தொண்டைக்குள் வந்து நின்றது.

அவனது பெயர் திரையில் மின்னி, வாட்ஸ்அப்பில் காணொளி அழைப்பைக் காட்டியது.

அவள் பதறிப்போய் கைவிரலால் இழுத்து அழைப்பை ஏற்றாள். திரையில் அவன் முகம் தோன்றியது. அங்கே மதிய நேரம் என்பதால், அவன் தனது அலுவலக வளாகத்தில் அமர்ந்திருந்தான்.

“இன்னைக்குக் கொஞ்சம் தாமதமாயிடுச்சு. வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களோடு கூட்டம் முடிஞ்சு வரதுக்குள்ள கண்ணைக் கட்டிடுச்சு. நீ இன்னும் தூங்கலையா?”

அந்தக் குரல். அட்லாண்டிக் கடலைக் கடந்து, பல ஆயிரம் மைல்களைத் தாண்டி, ஒளியிழை வடம் வழியே அவளது கண்களுக்குள் வந்து விழுந்த அந்தப் புன்னகை. அந்தத் தொலைதூரக் குரலிலும் அவளுக்கான காதலின் சூடு அப்படியே இருந்தது.

“நான் தூங்கல. உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்.”

“எதுக்கு கண் விழிக்கிற? நான்தான் அப்புறம் கூப்பிடறேன்னு சொன்னேன்ல.”

“பேசாதீங்க. நீங்க அங்க இருக்க, நான் இங்க இருக்க, உங்களைத் தொட்டுப் பேச முடியலங்கிற கடுப்புல இருக்கேன். உங்களுக்கு என்ன நீங்க பாட்டுக்கு அங்க ஜாலியா காபி குடிச்சுட்டே பேசிடலாம்.” அவளது குரலில் செல்லமான சிணுங்கல் கலந்த கோபம் இருந்தது.

மறுமுனையில் அவன் மெலிதாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு திரையைத் தாண்டி வந்து அவளது கன்னத்தைத் தொட்டது போல் ஒரு பிரமை.

அவன் காபி கோப்பையை மேஜையில் வைக்கும் சத்தம் லேசாகக் கேட்டது.

“காபி கசக்குது. உன்னைப் பார்க்காம குடிக்கிறதால இருக்கலாம்.” என்றான் அவன், வழக்கமான தீவிர முகத்துடன்.

அவள் உடனே விட்டுக் கொடுக்கவில்லை. “பழைய வசனம். தயவுசெஞ்சு மாத்துங்க. அப்புறம், அந்தப் பக்கத்துல என்ன சத்தம்? யாராவது இருக்காங்களா?”

“கடிகாரம் டிக் டிக்னு ஓடுற சத்தம். வேற யாரு இருக்கப் போறாங்க?”

“உங்களுக்கு எம் மேல அலட்சியம் எப்பவுமே ஜாஸ்திதான். நான் நிஜமாவே தீவிரமா பேசிட்டு இருக்கேன். நீங்க கனடா போய் எத்தனை நாளாச்சு? எனக்கு என்னவோ நூறு வருஷம் மாதிரி இருக்கு.”

அவன் சற்று யோசித்தான். “காலம்ங்றது சார்புடையது. ஐன்ஸ்டீன் சொன்னது உனக்குத் தெரியும்தானே? நீ என் கூட இருக்கும்போது ஒரு மணி நேரம் கூட ஒரு நிமிஷம் மாதிரி ஓடிடும். நீ தூரத்தில் இருக்கும்போது ஒரு நிமிஷம் கூட ஒரு வருஷமா நீளும்.”

“போதும், போதும். உங்க ஐன்ஸ்டீன் கோட்பாட்டை அப்புறம் வச்சுக்கலாம். இன்னைக்குப் மதியம் என்ன சாப்பிட்டீங்க? சரியா சாப்பிட்டீங்களா, இல்ல காபியே கதின்னு இருந்துட்டு, சாப்பிட்டேன்னு சொல்லி ஏமாத்தப் போறீங்களா?”

“பின்ன என்ன பண்றது? இங்கே சமைக்க ஆளில்லை. நீதான் வர மாட்டேன்னுட்டியே.”

“நான் வர்றதா? நான் என்ன உங்க பயணப்பெட்டியா? கூட்டிட்டுப் போறதுக்கு. இங்க ஒவ்வொருத்தரும் உங்களைப் பத்திக் கேட்டுத் தர்ற மன உளைச்சல் இருக்கே. எனக்கு யாரைக் கண்டாலும் பிடிப்பதில்லை.”

“உனக்குத்தான் எல்லார் மேலும் கோபம். பால்காரன் மேல, காய்கறிக்காரன் மேல, மளிகைக்கடைக்காரன் மேல. இந்த மடிக்கணினி மேல. ஏன், என்கிட்டேயும் சேர்த்துதான்.”

அவள் அலைபேசியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். “ஆமாம். உங்க மேலதான் ரொம்பக் கோபம். திருவாரூருக்கும் டோராண்டோவுக்கும் உள்ள தூரம் பதின்மூணாயிரம் சொச்சம் கிலோமீட்டர். இந்தத் தூரத்தை எப்போதான் காலி பண்ணப் போறீங்க?”

“நிறுவனத்துல பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறு. அதுவரைக்கும் இந்த காணொளி அழைப்பு  மட்டும்தான் நமக்குத் துணை.”

அவள் பெருமூச்சு விட்டாள். அலைபேசியில் அவள் மூச்சு வாங்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

“உனக்குத் தூக்கம் வருதா?” அவன் குரல் திடீரெனக் கனிந்தது.

“இல்லை. தூக்கம் வந்தாலும் வராது.”

“ஏன்?”

“நீங்க பேசி வெச்சதுக்கு அப்புறம்தான் வரும்.”

“அப்போ வெச்சிடவா?”

“வெச்சா மட்டும் வருமா என்ன?”

“நீந்தானே சொன்னே, நான் வெச்சா வந்திடும்னு.”

“அது நீங்க என் மேல கை வெச்சா, அப்புறம் வரும். அலைபேசியை வெச்சா இல்ல.”

“அச்சச்சோ! என் பொண்டாட்டிக்கு என் மேல அவ்வளவு பாசமா? கனடாவுல இருந்து வந்த உடனே மொதல்ல உன்னைத்தான் கவனிக்கப் போறேன், கொஞ்சம் காத்திரு பொண்டாட்டி.”

“பொய் சொல்லாதீங்க. மழுப்பாம சரியா சொல்லுங்க. எப்போ வருவீங்க நீங்க?”

“இன்னும் சரியா நாலு மாசம், பதினஞ்சு நாள், ஆறு மணி நேரம் இருக்கு!”

“இப்படியா சரியா கணக்கு சொல்றது?” அவள் கண்கள் குளமாகின. ஆனால் அந்தக் கண்ணீருக்குள் ஒரு பேரன்பு ஒளிந்திருந்தது.

“பின்ன என்ன? உன்னை விட்டுப் பிரிஞ்சு ஒரு நிமிஷம் கூட என்னால முடியல. ஆனா, வேற வழி இல்ல. இந்தத் தவிப்பு இருக்கு பாரு. இதுதான் காதலை இன்னும் அழகாக்குது. நம்மளோட தூரம் நம்ம காதலைக் குறைச்சிடாது, இன்னும் கூட்டும்தான்.” அவன் சொன்ன அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சில் ஒரு மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுத்தன.

அவள் மேல்மாடச் சுவரில் சாய்ந்து கொண்டு, அலைபேசியைத் தன் இதயத்திற்கு அருகில் வைத்துக் கொண்டாள்.

“யாமத்தும் யானே உளேன்.”

“ம்... என்ன சொன்ன?”

“ஒன்னுமில்ல. திருவள்ளுவர் என்கிட்ட பேசினார். காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் அப்படின்னு சொன்னார். நான் இங்கேந்து நீந்தி வரலாம்னாலும் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல், அப்புறம் அட்லாண்டிக் பெருங்கடல்ன்னு நீந்திதான் வரணும். நீந்த நீந்த கரையைக் கண்டுபிடிக்கிறதே கஷ்டம்தான் இல்லையா?”

அவன் சில வினாடிகள் அமைதியாக இருந்துவிட்டுப் புன்னகைத்தான். “வள்ளுவர் சாரியாத்தான் சொல்லியிருக்கார். ஆனா கவலைப்படாதே. சீக்கிரமே அந்தக்கரையை நாம ஒண்ணா சேர்ந்து கண்டுபிடிப்போம்.”

“எப்படி நீங்களும் நீந்தி வரப் போறீங்களா?”

“இப்படியெல்லாம் ஆகும்ன்னு தெரியும். அதுக்குத்தான் நான் நீச்சலே கத்துக்கல.”

“கத்துக்கிட்டா மட்டும் நீந்தி வந்துடவாப் போறீங்க?”

“என்ன இப்படிச் சொல்லிப்புட்டே?”

“வேறெப்படிச் சொல்வதாம்? உங்களுக்கு வேலைதான் காதலி. பதவி உயர்வுதான் பொண்டாட்டி.”

அவன் ஒரு கணம் ஸ்தம்பித்துதான் போனான். மேற்கொண்டு என்ன பேசுவதென்று புரியாமல் குழம்பிப் போனான்.

நடு இரவின் அமைதியில், அத்திரை வழியே தெரிந்த அந்தப் பரிதாபமான அவனது முகத்தைப் பார்த்தபடியே அவள் நின்றாள்.

தனிமைதான், ஆனாலும் அந்தத் தனிமையில் அவனின் காதல் நிரம்பி வழிந்தது.

அவனது தவிப்பையும் பரிதாபமான முகத்தையும் பார்க்கையில் பெருவெள்ளத்தில் நீந்தினாலும், கரையானது பக்கம்தான், அதை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்தது.

“சரி! நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க. நானும் போய்ப் படுக்கிறேன். கனவுல வந்து என்னைச் சந்திங்க.”

“கண்டிப்பா என் அன்பு பொண்டாட்டி.”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இப்போது அவளுக்குத் தூக்கம் வர மறுக்கவில்லை; மாறாக, அவனின் அடுத்த வருகைக்கான எதிர்பார்ப்பும், காதலின் ஆழமும் அவளை அரவணைத்துக் கொண்டது.

“யாமத்தும் யானே உளேன். உன்னோடு!” மனதுக்குள் முணுமுணுத்தவாறே அவள் கண்களை மூடிக்கொண்டாள். கரை காண முடியாத அந்தப் பெருங்கடல் விடியாத இரவைப் போல விரியத் தொடங்கியது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****