கவலையற்றுக் கவலையுடன் வாழ்தல்!
நமக்கு
இத்தனை கவலைகளா? என்று யோசிப்பதில் இருக்கிறதே ஒரு சுகம், அதை அனுபவித்தால்தான் தெரியும்.
மனிதன்
எப்போதுமே தன் துயரங்களை ஒரு மளிகைக் கடைப் பட்டியல் மாதிரி நீளமாக எழுதிப் பார்க்க
விரும்புபவன். காலையில் எழுந்ததும், இன்று என்னவெல்லாம் என்னைச் சோதிக்கப் போகிறது?
என்று படுக்கையிலேயே ஒரு தசாப்த காலத் திட்டத்தைத் தீட்டி விடுகிறவன்.
முதலில்
ஒருவன் தன் கவலைகளை வரிசையாகப் பட்டியலிடுவதாக வைத்துக் கொண்டால், இப்படியெல்லாம் கூட
ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.
1) காலையில்
குடித்த தேநீர் ஆறிப்போனது.
2) அலுவலகத்தில்
மேலாளர் கொடுத்த மிரட்டல் பார்வை.
3) பணப்
பையின் மிச்ச மீதிப் பரிதாப நிலை.
4) எதிர்காலம்
பற்றிய பயங்கரமான கற்பனைகள்.
5) அதிகரிக்கும்
வீட்டு வாடகை.
6) அச்சுறுத்தும்
விலைவாசி உயர்வு.
7) தள்ளிப்
போகும் பதவி உயர்வு.
8) எங்கு
சென்றாலும் மிகச் சரியாகக் கண்முன் வந்து நிற்கும் கடன் கொடுத்தவர்.
9) குறுஞ்செய்திகள்
அனுப்பி நினைவூட்டும் மாதாதந்திர தவணைகள்.
10)
கடந்த பத்தாண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரிடம் பேசிய முட்டாள்தனமான விஷயம்
இப்படி
எழுதத் தொடங்கினால் அது ஓர் ஏழெட்டு பக்கத்திற்கு நீளும். அவற்றைத் தொகுத்து, அவற்றுக்கு
அழகாக வண்ணப் பேனாக்களால் எண்களிட்டு, குளிப்பாட்டிக் கழுவிக் கழுவி ஊற்றுவது என்பது
மனித மனத்தின் இயல்பு.
இதை
எழுதி முடித்ததும், அந்தப் பட்டியலை ஒருமுறைக்கு இருமுறை பெருமையோடு அல்லது பரிதாபத்தோடு
வாசித்துவிட்டு, மனிதர்கள் பெருமூச்சு விடுவார்கள் பாருங்கள், அதுதான் உச்சக்கட்ட நாடகம்.
ஆனால்,
அங்கேதான் விதி மனிதர்களுக்கு ஒரு கிண்டலான புன்னகையைச் பரிசளிக்கிறது.
கடைசியில்
அந்தப் பட்டியலின் கீழே, தன் சொந்தக் கையெழுத்திலேயே மனிதன் சேர்த்துக்கொள்ளும் வாசகம்தான்,
ஐயோ, நமக்கு இத்தனை கவலைகளா?
பார்த்தீர்களா?
கவலைகளைத்
தீர்க்கும் வழியாகத் தொடங்கப்பட்ட அந்தப் பட்டியல், இப்போது தனக்கென ஒரு புதிய கவலையை
ஈன்றெடுத்திருக்கிறது. அதாவது, கவலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இப்போது மனிதனுக்குப்
புதிய கவலையாக மாறி விடுகிறது!
இது
எப்படி இருக்கிறதென்றால், தலைவலிக்காக மாத்திரை வாங்குவதற்கு மருத்துவமனைக்குப் போய்,
அங்கே வரிசையில் நின்று வராத தலைவலியை வரவழைத்துக் கொள்வது போலத்தான்.
மனித
மனம் ஒரு விசித்திரமான தொழிற்சாலை. அங்கு மூலப்பொருள் கவலை என்றால், உற்பத்திப் பொருளும்
கவலைதான். மிச்சமாகும் கழிவுப்பொருளும் கவலைதான்.
கவலை
இல்லாவிட்டால் மனிதனுக்கு வாழ்வதற்கே ஏதோ அலுப்பு தட்டுகிறது போலிருக்கிறது. மகிழ்ச்சியாக
இருந்தால் ஏதோ தவறு நடந்துவிட்டதாகக் குதர்க்கமாக யோசிக்கும் மனதின் பிரசவம் இது.
ஆகவே,
கவலைகளைப் பட்டியலிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் பட்டியலிட்டே தீருவேன்
என்று அடம் பிடித்தால், கடைசி வரியாக இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கவலைகளைப் பட்டியலிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தக் கவலைதான் என் வாழ்வின் மிகப் பெரிய கவலை!
ஆனாலும்
மனிதர்களுக்கு வேறு வழியில்லை போலும். கவலையற்றுக் கவலையுடனேயே வாழ்வதே அவர்களது தலைவிதியாகி
விட்டதோ என்னவோ!
*****

No comments:
Post a Comment