திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 90
கண்களின் நீச்சல்
திருவாரூரின் மார்கழி மாதத்து
அந்தப் பனி மூடிய நள்ளிரவு.
ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த சில்லென்ற
காற்று, மேஜை மீது புரண்டு கொண்டிருந்த சில தாள்களை மெதுவாய் அசைத்தது.
அறையின் மஞ்சள் நிற விளக்கு வெளிச்சத்தில்,
அவள் அலைபேசியின் நீலத் திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்களில் தூக்கமின்மையின் கோடுகள்;
ஆனால் அதைவிட ஆழமானது அவளது உள்ளத்தில் தேங்கி நின்ற பிரிவுத் துயரம்.
அவளது கணவன் முக்கியமான ஒரு செயல்திட்ட
கூறாய்வு தொடர்பான இறுதி கட்டப் பணிகளுக்காகச் சென்னை அலுவலகத்திலேயே தங்கிவிட்டான்.
கடந்த மூன்று வாரங்களாக அவர்கள்
நேரில் பார்த்துக் கொள்ள முடியவில்லை. வாட்ஸ்அப் அழைப்புகளும், ஜூம் சந்திப்புகளும்
காதலின் பசியைத் தீர்ப்பதற்குப் பதிலாக இன்னும் அதிகமாகவே தூண்டிவிட்டன.
அவள் அலைபேசியின் குறுஞ்செய்திக்
குறியீட்டைத் தொட்டாள். அவனிடமிருநது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வந்த குறுஞ்செய்தி
திரையில் மின்னியது:
"தூங்கலையா? உன்னோட மூச்சுக்காற்று
இங்கே சென்னை வரைக்கும் வீசுகின்ற மாதிரி ஓர் உணர்வு. உன்னைப் பார்க்காமல் ரொம்பவே
தவிக்கிறேன்."
அவளது உதடுகள் ஒரு மெல்லிய புன்னகையில்
விரிந்தன. ஆனால், அதே விநாடி தொண்டை அடைத்துக் கொண்டது. ஒரு சூடான நீர்த்துளி கன்னத்தில்
உருண்டோடியது.
அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்,
"இணைய வடங்கள் வழியாக என் குரல் உங்களை வந்தடையலாம்; காணொளி அழைப்புகள் மூலமாக
என் முகத்தை நீங்கள் பார்க்கலாம். ஆனா, இந்தத் தூரத்தை உடைத்துக் கொண்டு என் மனம் உங்களிடம்
ஓடுகின்ற வேகத்தை எந்தத் தொழில்நுட்பத்தால் அளக்க முடியும்?"
அவள் அலைபேசியை மேசை மீது வைத்து
விட்டு, ஜன்னலோரம் போய் நின்றாள். வெளியே தெரு விளக்கு வெளிச்சத்தில் மழைத் துளிகள்
தூறிக் கொண்டிருந்தன. அந்தத் தனிமை அவளைச் சுழட்டி அடித்தது. அவன் மார்பில் சாய்ந்து
கொள்ளும் அந்தத் தருணம் அவளுக்குள் ஓர் ஏக்கமாக வெடித்தது.
அவள் கண்கள் கசிந்தன. தன் விரல்களால்
கண்ணாடித் துளியைத் தொட்டுக் கொண்டே முணுமுணுத்தாள். "மனம் எவ்வளவு சுதந்திரமானது!
பேருந்து தேவையில்லை, தொடர்வண்டி தேவையில்லை, வேறெந்த வாகனமும் தேவையில்லை. ஒரு நொடியில்
சென்னை அடையாற்றில் இருக்கும் அவரின் அந்த அறைக்குள், அவரது படுக்கையின் தலைமாட்டில்,
அவரது தோள்களுக்கு அருகில் சென்று அமர்ந்து விடுகிறது மனம். அங்கே அவர் என்ன செய்து
கொண்டிருக்கிறார், எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அந்த மனத்தால் உணர
முடிகிறது. அவரின் மனதுடன் தன் மனதை ஒன்றச் செய்ய முடிகிறது. ஆனால், உடல்தான் இங்கே
மாட்டிக்கொண்டது. மனதுக்குப் பின்னால் உடலால் ஓட முடியவில்லை. அவரது அணைப்பைப் பெறத்
துடிக்கும் இந்த உடலால், அவரது ஸ்பரிசத்தைத் தேடும் இந்தத் தவிப்பால், எதையும் செய்ய
முடியாமல், கண்களில் நீர் மட்டும் தாரை தாரையாக வழிகிறது. மனம் அவரிடம் பறந்து சென்றுவிடுகிறது;
ஆனால் கண்களோ அவனை நேரில் காண முடியாமல், இந்தத் தூரத்தின் வலியைத் தாங்க முடியாமல்
கண்ணீரில் நீந்துகின்றன!"
அதே நேரம், சென்னை, அடையாற்றில்
உள்ள தன் அறையில், அவனுக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவன்,
திடீரென்று எழுந்து உட்கார்ந்தான். அவளின் நினைவுகள் அவனைச் சுற்றிக் வளைத்துக்கொண்டன.
அவன் உடனே ஓர் கணொளி அழைப்பு
செய்தான். ஒரு விநாடிக்குள்ளாகவே மறுமுனையில் அவளிடமிருந்து இணைப்பு கிடைத்தது.
திரையில் அவளின் முகம் தோன்றியது.
தலை கலைந்திருந்தது; கண்களின் ஓரம் லேசான ஈரம் பளபளத்தது. அவளைப் பார்த்த மாத்திரத்தில்
அவனின் நெஞ்சில் ஒரு கனம் ஏறிக்கொண்டது.
"ஏய் என்ன இது? இன்னும்
தூங்கலையா? அழுதுட்டு இருக்கீயா?" அவனது குரல் பதற்றத்துடன் நடுங்கியது.
அவள் ஒளிப்படக் கருவியைப் பார்த்துக்
லேசாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பிலும் ஒரு சோகம் ஒட்டிக் கொண்டிருந்தது.
"நீங்க தூங்கலையா? எனக்குத்
தூக்கம் வரல. உங்களையே நினைச்சுட்டிருந்தேன்."
"அதெல்லாம் பகல்ல நினைச்சிக்கலாம்.
இப்போ தூங்கு. நீ பண்றது சின்னபுள்ளத்தனமா இல்ல?"
"மனசு இருக்கே. அது உங்ககிட்டெ
எப்படியோ நினைத்த மாத்திரத்தில வந்துடுது. ஆனா, இந்தக் கண்கள் இருக்கே, உங்களைப் பார்க்க
முடியாம, உங்களோட பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாம அழுதுட்டே இருக்கு. என் மனம் போன வேகத்துல,
என் கண்களால உங்ககிட்ட வர முடியலையேன்னு தோணுது."
அவன் கண்கள் கலங்கின. அந்தத்
திரையின் வழியே அவள் முகத்தைத் தொட வேண்டும் போல் இருந்தது. அவன் தன் குரலைத் தாழ்த்தி,
காதலோடும் ஏக்கத்தோடும் சொன்னான், "நீ தனியா அங்கே கஷ்டப்படத் தேவையில்லை. அடுத்தத்
தொடர்வண்டியைப் பிடிச்சி அங்கேயே வந்துடுறேன். உன் கண்களில் வழிகிற ஒவ்வொரு கண்ணீர்த்துளிக்கும்
நான் பதில் சொல்லணும். இப்போ, நீ கண்களை மூடிக்கொள். உன் மனசு மாதிரி நானும் இப்போவே
உன்கிட்ட வந்துடுறேன்."
"வேண்டாம். வேலையை முடிச்சிட்டே
வாங்க."
"அதுக்குள்ள உன்னோட கண்கள்
வங்காள விரிகுடாவாவே மாறிடும் போலிருக்கே."
"வேலையை முடிக்காம வந்தா,
மறுபடியும் போவீங்க. மறுபடியும் வற்றிப் போன வங்கக் கடல் ஊற்றெடுக்கும். தயவுபண்ணி
எல்லாத்தையும் முடிச்சிட்டே வாங்களேன்."
"அப்படின்னா அழுறதெ நீ நிறுத்தணும்.
உன்னோட கண்கள்ல கண்ணீரே இருக்கக் கூடாது."
"நான் எவ்வளவோ சொல்லிட்டேன்.
இந்தக் கண்களுக்குக் கண்ணீரில் நீச்சலடிக்கணும்ன்னு ஆசை போல. அதான் இப்படித் தண்ணீரா
கொட்டிக்கிட்டு இருக்குது."
"நீச்சலடிக்க ஆசையாம்! என்ன
உளறல் இது?" அடையாற்று அறையிலிருந்து அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பு தொலைதொடர்பு
சமிக்ஞைகளைத் தாண்டி திருவாரூரை அடைந்தபோது, அலைபேசியின் ஒலிப்பானில் ஒரு சிறிய சடசடப்புச்
சத்தம் கேட்டது. ஆனால், அவளுக்கு அந்தச் சத்தம் கூட அவன் அருகில் பேசுகின்றது போன்ற
பிரியத்தைக் கொடுத்தது.
"உளறல் இல்லை, நிஜம். தொழில்நுட்பம்
எவ்வளவோ வளர்ந்தாலும், சென்னைக்கும் திருவாரூருக்கும் இருக்குற இந்தத் தூரத்தை ஒரு
நொடியில் குறைக்க எதையாவது உங்களால கண்டுபிடிக்க முடியுமா?"
"ஹேய், தொழில்நுட்பத்தைக்
குறை சொல்லாதே. அதாலத்தான் நாம்ம ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டெ பேசிக்கிட்டு இருக்கிறோம்?"
"பார்க்கத்தான் முடியுது.
தொட முடியலையே!" அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது.
அவன் ஒரு நிமிடம் அமைதியானான்.
மேஜை மீது கிடந்த அவனது மடிக்கணினியின் விசிறி ஹம் என்ற சத்தத்துடன் சுழன்று கொண்டிருந்தது.
அவ்வளவு அமைதி நிலவியது.
அவனுக்குப் புரிந்தது, அவளது
கண்ணீருக்கு வார்த்தைகளால் சமாதானம் சொல்ல முடியாது. சில இடங்களில் ஆறுதலோ, தர்க்கமோ
வேலை செய்யாது, கொஞ்சம் உண்ரவுப்பூர்வமாகத்தான யோசிக்க வேண்டும் என்று தோன்றியது.
"சரி, ஒரு பரிசோதனை பண்ணலாமா?"
என்றான் குரலில் ஒரு குறுநகை ஒட்ட.
"நடுராத்திரியில என்ன பரிசோதனை?"
"கண்களை மூடிக்கொள். இப்போது
நான் உன்னைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, என் கண்களையும் மூடிக்கொள்ளப் போகிறேன். நாம்
இருவரும் ஒரே நேரத்தில் ஒரு புள்ளியில் சந்திப்போம். அங்கே எந்த ஜன்னலும் இருக்காது,
எந்தத் தூரமும் இருக்காது. திருவாரூருக்கும் சென்னைக்கும் தொடர்வண்டியும் வரத் தேவையில்லை.
ஆனால், நாம்ம சந்திப்போம்."
இதென்ன கோமாளித்தனம் என்றெல்லாம்
அவள் மறுப்பு சொல்லவில்லை. மெதுவாகக் கண்களை மூடிக்கொண்டாள்.
அறையின் மஞ்சள் விளக்கை அணைத்துவிட்டு,
அலைபேசியை இணைப்பிலேயே வைத்து விட்டு, படுக்கையில் சாய்ந்தாள், அவனை நினைத்தபடியே அவள்.
நிசப்தம் அறைக்குள் பரவியது.
திருவாரூரில் ஜன்னலோரம் வீசிய அதே மார்கழிக் காற்று, இப்போது சென்னை அடையாற்று அறை
ஜன்னலையும் கடந்துசென்றது. அலைபேசியின் நீலத்திரை வெளிச்சம் மட்டும் அந்த இருட்டில்
மினுமினுத்தது.
அந்தப் பரிசோதனையின் ஊடே, இரவு
உருண்டோடிக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை.
சென்னையில் சூரியன் வழக்கம் போல
வங்கக் கடலைத் தாண்டி எழும்பியிருந்தது. ஆனால் அடையாற்று அறையில் அத்தனை ஆர்ப்பாட்டங்கள்
இல்லை. ஏனென்றால், அவன் அங்கே இல்லை.
திருவாரூர் வீட்டின் முன் ஒரு
மகிழ்வுந்து வந்து நின்ற சத்தம் கேட்டது. ஊரின் அமைதியைக் கிழித்துக் கொண்டு சக்கரங்களின்
ஓசை கேட்டது. வீட்டுத் திண்ணையில் யாருமில்லை. சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தம்
கேட்டது.
கதவு தட்டப்படும் ஓசை.
அவள் பதறி அடித்துக்கொண்டு ஓடி
வந்து கதவைத் திறந்தாள்.
படிகளில் நின்றுகொண்டிருந்தான்
அவன்.
குப்பாயம் இல்லை, கழுத்தணி இல்லை.
அலுவலகச் சோர்வு முகத்தில் லேசாகத் தெரிந்தாலும், கண்களில் அந்தத் தூரத்தை வென்ற வெற்றியின்
ஒளி மின்னியது. கையில் அவளுக்குப் பிடித்தமான முந்திரி பகோடாவும், அவசரமாய் வாங்கிய
ஒரு ரோஜாப்பூவையும் வைத்திருந்தான்.
"வேலையை முடிச்சாச்சா?"
அவள் கண்களில் ஆச்சரியமும் அதே நேரம் தாளாத காதலும் பொங்கியது.
"முக்கியமான கூறாய்வு நேற்று
நள்ளிரவு இரண்டு மணிக்கு முடிஞ்சது. அப்பவே அதுக்கு ஒப்புகை வாங்கிட்டு அப்படியே மகிழ்வுந்தைக்
கிளப்பிட்டேன். இடையில் பெரிய போக்குவரத்து நெருக்கடி எதுவும் இல்லை. மனம் சீக்கிரமா
வந்துடுச்சுன்னா, மகிழ்வுந்தும் சீக்கிரமா வந்துடும் போல!" என்றான் புன்னகையுடன்.
அவள் வார்த்தைகள் வராமல் திகைத்து
நின்றாள். நேற்றிரவு அவன் சொன்ன அந்த பரிசோதனை ஞாபகத்திற்கு வந்தது. கண்கள் மீண்டும்
கலங்கின; ஆனால் இந்த முறை அது பிரிவுத்துயரின் கண்ணீர் அன்று, அவனைப் பார்த்ததில் பூத்த
ஆனந்தக் கண்ணீர்.
அவள் சட்டென்று பாய்ந்து வந்து
அவன் தோள்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
அவன் அவளை மென்மையாக அணைத்து,
அவள் தலைமுடியைக் கோதிக் கொடுத்தான். "இப்போ சொல்லு.திருவாரூருக்கும் சென்னைக்கும்
நடுவுல இருக்கிற தூரத்தை எந்தத் தொழில்நுட்பத்தால சுருக்க வேணும்?"
அவள் அவனது மார்பில் முகத்தைப்
புதைத்தபடியே முணுமுணுத்தாள், "எந்தத் தொழில்நுட்பமும் தேவையில்ல. உங்க காதலே
போதும்!"
ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த மார்கழிக்
காற்று, மேஜை மீது கிடந்த தாள்களை இப்போது கலைக்கவில்லை; மாறாக, மேஜையில் இருந்த அலைபேசியின்
திரையில் மின்னிய ஒரு பழைய குறுஞ்செய்தியை லேசாகத் வருடிக் கொடுத்துவிட்டுச் சென்றது.
அந்தச் செய்தியின் கீழ் புதிதாக
மற்றொரு வரி,
"உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின்
வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்." (குறள்,
1170)
எனும் குறட்பாவுக்குத் தீர்வு
காண்பது போல, "கண்ணீருக்கு விடை கிடைத்துவிட்டது; தூரம் இப்போது தூரம் ஆகி விட்டது!"
என மின்னியது.
- சூத்திரங்கள்
தொடரும்!
*****

No comments:
Post a Comment