16 Nov 2026

நடுநிசி வலிகள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 89

நடுநிசி வலிகள்

மழை விட்டும் விடாமல் லேசான தூறல் விழுந்துகொண்டிருந்தது. சென்னை, கோடம்பாக்கம், ஒரு கடையின் தகரக் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்துகொண்டிருந்த சத்தம் மட்டும் அந்த அமைதியான நள்ளிரவில் அமானுஷ்யமான ஒலியோடு கேட்டது.

கையில் இருந்த அலைபேசியின் திரையின் வெளிச்சத்தில் அவன் முகம் மட்டும் நீல நிறமாகத் தெரிந்தது. மணி நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.

"இப்ப எதுக்கு இந்த மாதிரி செய்தி அனுப்புறா?" என்று முணுமுணுத்துக்கொண்டான் அவன்.

அலைபேசித் திரையில் அவள் அனுப்பிய செய்தி மிளிர்ந்தது.  "நீங்க பக்கத்தில் இல்லாமல் இருப்பது பெரிய வலி. அதை விட பெரிய வலி நீங்க இல்லாத இந்த இரவு. இந்த இரவு நீண்டு நீண்டு துடிக்க துடிக்க எனக்கு வலியெடுக்கச் செய்து என்னைக் கொன்று விடும் போலிருக்கிறது."

அவன் மூளையில் அவளைக் குறித்த நினைவுகள் சுழல ஆரம்பித்தன. கல்யாணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டன. இப்போது அலுவலகப் பணி நிமித்தமாக மூன்று நாட்கள் சென்னை வந்திருக்கிறான் அவன்.

இதோ இரண்டு நாட்கள் முடிந்து விட்டன.

நாளை அந்தச் செயல்திட்டக் கோப்பை விளக்கி அதிகாரிகள் முன் ஒரு சுருக்க உரை நிகழ்த்தி விட்டால் வேலை முடிந்தது.

பிறகு ஊர் திரும்ப வேண்டியதுதான்.

இது அவளுக்கும் தெரியும்தான்.

எல்லாவற்றையும் சொல்லி விட்டு, அவள் அனுமதியோடுதான் சென்னைக்குக் கிளம்பினான்.

"உங்களைப் பிரிஞ்சி, நான் தைரியமா இருப்பேன். உணர்ச்சிவசப்பட மாட்டேன். ஆமாம், நான் உணர்ச்சிவசப்பட்டு உங்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து உங்க வேலைக்கு எந்தப் பாதிப்பும் உண்டு பண்ண மாட்டேன். உங்களை அலைபேசியில கூட அழைக்க மாட்டேன். ஒரு செய்தி கூட அனுப்ப மாட்டேன். நீங்க முழு மனசையும் வேலையில வெச்சு, சீக்கிரமா முடிச்சிட்டு வந்துடுங்க. ஆனா, நீங்க வர்ற மூணு நாளைக்கும் உங்க நினைப்பாத்தான் இருப்பேன். மறுபடியும் சத்தியமா சொல்றேன், உங்களைக் கூப்பிட்டு எந்தத் தொந்தரவும் பண்ண மாட்டேன்." இப்படியெல்லாம் சொல்லி வழி அனுப்பியவள்தான்.

ஆனால், சென்னை வந்த மறுநாளே, அவனுக்கே மனம் கேட்காமல் சில முறைகள் அவளுக்கு அழைத்தும் அந்த அழைப்பை அவள் எடுக்கவில்லை.

இப்போது ஏன் இப்படி செய்தி அனுப்பியிருக்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவள் எப்போதுமே கவிதைகளையோ, இலக்கியத்தையோ தீவிரமாகப் பார்த்தவள் அல்ல. பொருட்கள் வாங்குதல், உணவு விடுதியில் சாப்பிடுதல், அலைபேசியில் குறுங்காணொளிகள் பார்ப்பது, வீட்டுவேலைகளை ஒன்று விடாமல் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்ப்பது, அப்புறம் அவனிடம் செல்லமாகச் சண்டை போடுவது என இதுதான் அவளது உலகம். பேசுவதும், பழகுவதும் எதார்த்தமாகத்தான் இருக்கும். ஆனால் இன்று அவள் அனுப்பிய அந்த வரிகள் அவனை உணர்ச்சிவசப்பட வைத்தது.

உடனடியாக அவன் அவளுக்கு அழைத்தான். அவள் அலைபேசியை எடுக்கவில்லை. அவளுக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினான். "உன்னோட பேசணும். அழைப்பை ஏற்றுப் பேசு." அவன் செய்தி அனுப்பிய அடுத்த நொடியே நீலநிற சரிகுறி விழுந்தது. தட்டச்சு செய்வதற்கான மூன்று புள்ளிகள் வந்தன, பின் நின்றன, பின் முன்று புள்ளிகள் வந்தன, நின்றன.  அதைத் தவிர, அவள் வேறு எந்தப் பிரதிவினையும் செய்யவில்லை.

அவன் வாட்ஸ்அப்பில் காணொளி அழைப்பைச் செய்து பார்த்தான். அவள் எடுக்கவில்லை. சிலமுறை அவள் எண்ணுக்கு அழைத்துப் பார்த்தான். அழைப்பொலி போய்க் கொண்டிருந்ததே தவிர எடுத்தபாடில்லை.

அவள் வேண்டுமென்றேதான் அவனுக்குத் தொந்தரவாய் இருக்கும் என்று நினைத்து எடுக்காமல் இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அவன் மகிழ்வுந்தில் ஏறி அமர்ந்தான். இயந்திரத்தை இயக்கினான்.

"எதுக்குடா இந்த நேரத்தில் வேலை இல்லாத வேலை? நாளைக்குக் காலையில உயர் அதிகாரிகள் கூட்டம் இருக்கு," என்று அவனது இன்னொரு மனம் எச்சரித்தது. ஆனால், கால்கள் தானாகவே மகிழ்வுந்தின் தடையிலிருந்து விலகி, முடுக்கியை அழுத்தத் தொடங்கின.

சென்னை சாலைகள் நள்ளிரவில் வெறிச்சோடிக்கிடந்தன. ஒவ்வொரு மேம்பாலத்தைக் கடக்கும் போதும், கீழே உறங்கிக் கொண்டிருக்கும் மாநகரம் ஒரு பிரம்மாண்டமான எந்திரம் போலத் தெரிந்தது. இந்த எந்திரத்திற்குள்ளே கோடிக்கணக்கான மனிதர்கள். எல்லோருக்கும் தனித்தனியான கவலைகள், கனவுகள், பிரிவுகள்.

அதே சமயம், மகிழ்வுந்தின் இசையொலிப்பானிலும் எதுவும் ஓடவில்லை. காரின் சக்கரங்கள் தார்ச் சாலையில் உரசும் சத்தம் மட்டுமே ஒற்றை ஒலியாய் ஒலித்தது.

சென்னையிலிருந்து நான்கரை மணி நேரம், மகிழ்வுந்தின் உறுமல், மற்றும் சக்கரத்தின் விரையும் சத்தத்தோடு திருவாரூர், தெற்குவீதி, செந்தமிழ் அடுக்கத்தின் முன்னர் நின்றான் அவன்.

இரண்டாவது மாடியின் அடுக்ககம் இருட்டாக இருந்தது. ஆனால், உள்ளே ஒரு மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அவள் தூங்கவில்லை என்பது உறுதி.

அவன் மகிழ்வுந்திலிருந்து இறங்கி, நேராகப் படிகட்டுகளில் ஏறி இரண்டாவது மாடிக்குச் சென்றான். அழைப்பு மணியை அழுத்தலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு, லேசாகக் கதவைத் தட்டினான்.

சட்டெனக் கதவு திறந்தது.

அவள் நின்றுகொண்டிருந்தாள். தலைவிரி கோலமாக, கண்களில் தூக்கக் கலக்கமும், அதே நேரம் எதையோ பறிகொடுத்தாற் போன்ற ஒரு வெறிச்சோடலும் இருந்தன. அவள் அணிந்திருந்த இரவாடை நள்ளிரவுச் குளிருக்கு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.

"நீங்க... நீங்க இங்க எப்படி?" அவள் குரல் நடுங்கியது.

"செய்தி அனுப்புனியே. அதான் வந்தேன்," என்றான் அவன் இயல்பாகப் பேச முயன்று, குரல் கம்மியபடியே.

அவள் விலகி உள்ளே வழிவிட்டாள். உள்ளே நுழைந்ததும் அவனுக்கு அவன் வீடு பழக்கப்பட்டதாகவே இருந்தது. ஆனால், இப்போது அங்கே ஒருவிதமான அந்நியத் தன்மை ஒட்டியிருந்தது. ஆங்காங்கே துணிகள் கிடந்தன. தேநீர் கோப்பைகள் மேசையில் காய்ந்திருந்தன. அவள் வீட்டை அப்படி வைத்திருக்கக் கூடியவளே அல்லள்.

"ஏன் இப்படி திடீர்ன்னு வந்தீங்க? என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?" அவள் மெத்தை இருக்கையில் உட்கார்ந்துகொண்டு தனது முழங்கால்களை நெஞ்சோடு சேர்த்துக் கட்டிக்கொண்டாள்.

"நீ அனுப்புன அந்தச் செய்தி. எனக்கு ரொம்ப வலிச்சது."

அவள் கசப்பாகச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் வறண்ட உதடுகள் லேசாக வெடித்திருந்தன.

"அதுக்கா இப்படி பதறியடிச்சிட்டு நடுராத்திரியில கிளம்பி வந்தீங்க. அதுக்கு மேல என்னால முடியலங்க. எதாச்சும் பண்ணலன்னா எனக்கு நெஞ்சே வெடிச்சரும் போல இருந்துச்சு. அதான் என்னப் பண்றதுன்னு புரியாம அனுப்பிட்டேன். அனுப்ப வேண்டாம்ன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். அதெ அழிக்கவும் பார்த்தேன். ஆனா, என்ன நடந்துச்சுன்னே புரியல. அனுப்புகை பொத்தானை நான் அழுத்துனேனா, அதுவா போயிட்டுதான்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியல. நீங்க போனதுக்குப் பிறகு, நீங்க இல்லாம இந்த உலகம் எவ்வளவு சாதாரணமா நகருதுன்னு பார்க்கும்போதுதான் அந்தத் தனிமை கொடூரமா மாறுது. அதுவும் ஒவ்வொரு நாளும் ராத்திரியும். நான் செத்தே போயிட்டேன்."

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது. அவள் பேசட்டும் என்பது போல, அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

"பகல்ல வீட்டுவேலை, பக்கத்து வீட்டுப் பெண்களோட அரட்டை, கடைக்குப் போறது, வாரதுன்னு எப்படியோ நேரம் ஓடிடுது. ஆனா, இந்த இரவு. அது ரொம்ப நீளமானது. கடக்கவே முடியல. அது ரொம்ப மோசமானது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு வருடமா நகருது. உங்க நினைப்பு, நீங்க இல்லாத பிரிவு எல்லாமே இந்த இரவை இன்னும் கொடூரமாக்குது."

அவன் கைகளை மடக்கிக் கட்டிக்கொண்டு யோசித்தான்.

"எனக்குத் தெரியும். தெரிஞ்சுதானே மூணு நாள், மூணே நாள் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நீயும் அதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லன்னு சொல்லித்தானே அனுப்பி வெச்சே?" என்று திடீரென்று கேட்டான்.

அவள் நிமிர்ந்தாள். "என்னால முடியும்னுதான் நெனைச்சேன். அது ரொம்ப சாதாரணம்ன்னு தப்பா எடை போட்டுட்டேன். எனக்கு என் பக்கத்துலயே நீங்க இருக்கணும். எங் கூடவே இருக்கணும். என்னால உங்களை விட்டு தனியா இருக்க முடியாது. அதுவும் ராத்திரி, என்னால சுத்தமா முடியாது."

"சரிதான், நான் நெனைச்சேன். எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா, நீ என்னவோ பெரிய தைரியசாலி மாதிரி பேசி அனுப்புனே பாரு. அதெ எப்படியோ நம்பிட்டேன். இல்லேன்னா நான் போயிருக்கவே மாட்டேன். உன்னோட தைரியத்தெ நம்பித்தான் நான் ஏமாந்துட்டேன்."

அவன் எழுந்து அவளுக்கு அருகில் வந்து நின்றான்.

"தெரியுமா உனக்கு? நீ அந்த செய்தி அனுப்புனதுக்கு அப்புறம் நானும் தூங்கல. வண்டியில உக்காந்த நான்தான், இப்போ உன் பக்கத்துல உக்காந்திருக்கேன். உனக்கு ஏதோ ஆயிடும்னு பயம் வேற. அதே யோசனையோட வந்துக்கிட்டு இருக்கிறப்பத்தான் நான் ஒன்றைக் கண்டுபிடிச்சேன்."

அவள் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். "என்ன கண்டுபிடிச்சீங்க?"

"ஒண்ணுமில்ல." என்றான் அவன் மெல்லிய புன்னகையுடன்.

"இல்ல, நீங்க மறைக்கிறீங்க. அதெ நீங்க சொல்லணும்."

"நீ ஒரு தைரியசாலி இல்லன்னு கண்டுபிடிச்சேன்."

"தைரியசாலியா இல்லாமத்தான் போன வாரம், வீடு தேடி வந்து உங்கள மிரட்டுன, நம்ம பகுதி ரௌடியைச் செருப்ப கழட்டி வீசி விரட்டியடிச்சேனா?"

"ரௌடியை விரட்டியடிச்சே சரி! ராத்திரிகிட்டெ பயந்துல்ல போயிட்டே."

அவள் மௌனித்தாள். அறையில் நிசப்தம் கவ்வியது.

ஜன்னல் வழியே வெளியே எப்போதோ நின்ற தூறல் மீண்டும் லேசாகச் சாரலாக அடிக்க ஆரம்பித்தது. தூரத்தில் ஏதோவொரு நாயின் குரைப்புச் சத்தம் அந்த நள்ளிரவின் மௌனத்தைக் கிழித்துச் சென்றது.

அவள் எழுந்து நின்றாள். அவளுக்கும் அவனுக்கும் இடையே இப்போது சில அடிகள்தான் இடைவெளி.

"இப்போ என்ன சொல்ல வர்றீங்க? இந்த ராத்திரியை விரட்டியடிக்கணுமா?"

"வேண்டவே வேண்டாம்."

"ஏன்?"

"இந்த ராத்திரி மட்டும் இல்லன்னா, நீ எனக்கு செய்தி அனுப்பியிருக்க மாட்டேதானே, நானும் வந்திருக்க மாட்டேன்தானே?"

"அப்படில்லாம் இல்ல. நீங்க இல்லாதப்ப மட்டும் நீண்டதா இருக்கு இந்த ராத்திரி. நீங்க வந்ததும் பாருங்க சட்டுன்னு முடியப் பார்க்குது."

அவன் சில விநாடிகள் அவளையே உற்றுப் பார்த்தாள். அவளது முகத்தில் இருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளரத் தொடங்கியது. அந்த நீண்ட, கொடூரமான நள்ளிரவு இப்போது அர்த்தமுள்ளதாக மாறத் தொடங்கியிருப்பதை அவளது கண்கள் உணர்த்தின.

அவள் மெல்லப் புன்னகைத்தாள். கண்ணீர்த் துளிகளுடன் கூடிய அந்தப் புன்னகை, அந்த அறையின் இருளைத் துரத்தியது.

ஜன்னலுக்கு வெளியே கிழக்கு வானத்தில் இருள் மெல்லக் கரைய ஆரம்பித்திருந்தது. கரிய நிறத்தில் இருந்த நள்ளிரவு வானம், கருமை வெளுத்த நிறத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருந்தது.

"கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா."                                (குறள், 1169) 

என்று வள்ளுவர் சூத்திரம் வகுத்த அந்த நெடிய கழியும் இரா ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. இரவின் கொடுமை விலகி, ஒரு புதிய விடியலின் வெளிச்சம் அறையின் குட்டி ஜன்னல் வழியே உள்ளே நுழைந்தது.

அவன் அவளின் கைகளைப் பற்றிக்கொண்டான். இந்த முறை கைகள் நடுங்கவில்லை; உறுதியாக இருந்தன.

"தேநீர் போடவா?" என்று கேட்டாள் அவள், குரலில் புதிய உற்சாகம் ஒலிக்க.

"கண்டிப்பா," என்றான் அவன். "ஆனா, சர்க்கரை கொஞ்சம் கம்மியாவே இருக்கட்டும்."

இருவரும் சமையலறையை நோக்கி நடந்தனர். அந்த விடியற்காலையில், அவர்களின் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் மெல்லத் தொடங்கிக் கொண்டிருந்தது.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment