14 Nov 2026

மதுரை தனிஷ்க் நகைக் கடை – கொள்ளை நடந்தது எப்படி?

நம்பிக்கையின் விரிசல்களும் விழிப்புணர்வின் தேவையும்

மனித மனம் எப்போதும் ஆச்சரியங்களின் ஊற்று. அது அறத்தின் வழி நின்றால் இமயமாய் உயரும்; பேராசையின் பிடியில் சிக்கினால் அதலபாதாளத்தில் சரியும். சமீபத்தில் தூங்கா நகரமாம் மதுரையில் நிகழ்ந்த ஒரு துணிகரக் கொள்ளைச் சம்பவம், வெறும் குற்றச் செய்தியாக மட்டும் கடந்து போகாமல், நமது அவசரகதி வாழ்க்கை முறைக்கும், அலட்சியத்திற்கும் விடப்பட்ட ஒரு கசப்பான பாடமாகவே அமைந்துள்ளது.

பண்டிகைக் கால வியாபாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு, எழுபது விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவுற்ற நிலையில் ஒரு பிரம்மாண்ட நகைக்கடையின் கதவுகள் திறக்கப்படுகின்றன.

இலாபம் எனும் ஒற்றை இலக்கு முன்னால் நிற்கும்போது, பாதுகாப்பு எனும் அடிப்படைக் கவசம் பின்னுக்குத் தள்ளப்படுவது இயல்பாகிவிடுகிறது.

முழுமையடையாத கட்டுமானமும், திறந்திருந்த மின்தூக்கிப் பாதையும், பாதுகாப்பு உணர்விகள் பொருத்தப்படாத கண்ணாடிப் பேழைகளும் திருடனுக்குத் தாமரைக் கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கின்றன.

இதில் மிகப்பெரிய முரண் என்னவென்றால், அந்த மர்ம நபர் முதல்முறையாக அந்தக் கடைக்குள் நுழையவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பே அவன் ஒத்திகை பார்த்திருக்கிறான்; தன் முயற்சியில் தோல்வியும் கண்டிருக்கிறான்.

ஆனால், கண்காணிப்புப் படக்கருவிகளின் கண்களில் பதிவான அந்த எச்சரிக்கை மணியை நிர்வாகம் கவனிக்கத் தவறியதே, பத்து கிலோ தங்கமும் ஒரு கிலோ வைரமும் சாக்குப்பையில் கட்டிச் செல்லப்படக் காரணமாக அமைந்துவிட்டது.

"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்"                             (குறள், 435)

என்ற வள்ளுவரின் வாக்கு எத்துணை சத்தியமானது!

சிறு பொறியை அலட்சியம் செய்தால், அது மாளிகையையே சாம்பலாக்கிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சி. சிறு ஓட்டையை அலட்சியப்படுத்திக் கப்பலில் ஏறி கடலில் பயணித்தால், எத்தகைய பெரிய கப்பலும் கடலில் மூழ்கி விடும்.

இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தும் வாழ்வியல் தத்துவம் ஆழமானது. வெளிப்பகட்டுக்கும், விரைவான வெற்றிக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அடித்தளத்தின் உறுதிக்கும் பாதுகாப்பிற்கும் கொடுப்பதில்லை.

ஒரு கட்டிடத்தின் உட்புற அமைப்பை நன்கறிந்தவர்களே அதன் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் நம்பிக்கை துரோகத்தின் நிழல் எப்போதும் நம் அருகிலேயே உலவுவதை இச்சம்பவம் உள்ளங்கை நெல்லிக்கனியெனக் காட்டுகிறது.

இன்று காவல்துறையின் தனிப்படைகள் பல திசைகளில் விரைந்துள்ளன; குற்றவாளி நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்குவான். ஆனால், இழந்த பொருளை மீட்பதைவிட, இதனால் கிடைத்திருக்கும் பாடத்தை உணர்வதே முக்கியம்.

எந்தவொரு செயலிலும் முழுமை இல்லாமல் அவசரப்படுவதும், எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கவனிக்கத் தவறுவதும் எப்போதும் ஆபத்திலேயே முடியும். விழிப்புணர்வு என்பது கண்களில் மட்டுமல்ல, நமது ஒவ்வொரு செயலிலும் இருக்க வேண்டும் என்பதே இச்சம்பவம் நமக்குச் சொல்லும் செய்தி.

*****

No comments:

Post a Comment