அன்புக்குத் தர வேண்டிய சுதந்திரம்
என்னுடைய
மனதிலிருந்து விடுபடுவது
எனக்குக்
கடினமாக இருக்கிறது
இப்படியே
போய்க் கொண்டிருந்தால்
விரைவில்
நான் சலித்து விடுவேன்
எப்போதும்
உன்னிடம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
நான்
நிச்சயம் அலுத்து விடுவேன்
எதற்கு
நான் மாற வேண்டும்
ஏன்
நான் மாற்ற வேண்டும்
மாற்ற
வேண்டும் என்பது பிரச்சனை
அப்படியே
ஏற்றுக் கொள்கிறேன்
உன்னை
என்னை இந்த உலகை
அதனால்
பிரச்சனை ஒன்றும் வந்து விடப் போவதில்லை
எப்போதும்
மாற்றுவதா வேண்டாமா என்பதுதான் பிரச்சனை
அந்தப்
பிரச்சனைக்குள் ஏன் போக வேண்டும்
இப்போது
நான் எனக்குச் சலிப்பாக இருக்க மாட்டேன்
உனக்கு
நான் அலுத்துப் போக மாட்டேன்
நீ நீயாக
இருக்கப் போகிறாய்
நான்
நானாக இருக்கப் போகிறேன்
எனக்கேற்ப
நான் என்னையறியாமல்
மாறிக்
கொள்வேன்
உனக்கேற்ப
நீ உன்னையறியாமல்
மாறிக்
கொள்வாய்
யாருக்காகவும்
யாரும் மாறப் போவதில்லை
அவரவர்
அவரவராக இருக்கையில்
சேர்ந்திருப்பதோ
பிரிந்திருப்பதோ
யாருக்காகவும்
யாரும் எந்த முடிவையும் எடுக்க வேண்டியதில்லை
அவரவர்
முடிவை அவரவர் எடுத்துக் கொள்வது
அன்புக்கு
ஒவ்வொருவரும் தர வேண்டிய சுதந்திரம்
*****
No comments:
Post a Comment