திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 91
கண்ணீருக்குக் காரணங்கள் தேவையில்லை!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின்
வருகைப் பகுதி.
சரியாகச் சொல்லப்போனால், ஐந்தரை
மணி நேர விமானப் பயணம், விமானநிலைய போக்குவரத்து நெரிசல், பயணச் சோர்வு என்று எல்லாமே
அவனது மூளையை ஒரு பெரும் சோர்வில் வைத்திருந்தன. ஆனால், அந்த நீண்ட கண்ணாடிச் சுவருக்கு
அப்பால், கூட்ட நெரிசலில் தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அந்த உருவத்தைப் பார்த்த
கணத்தில், அவனது சோர்வு மொத்தமாய் ஆவியாகி விட்டது.
அவள் அங்கே நின்றிருந்தாள்.
அவள் அணிந்திருந்த மரகதப் பச்சை
நிற சுடிதார் அந்த ஆரவாரமான விமான நிலையக் கூட்டத்தில் தனித்துத் தெரிந்தது. கையில்
ஒரு சிறிய காகிதப் பலகை. அதில் அவனது பெயர் இல்லை. மாறாக, அவனுக்குமட்டும் புரிவது
போல, கண்கள் கண்டால்
வாருங்கள் என எழுதியிருந்தாள்.
அவன் புன்னகையுடன் வாயிற்பகுதியைத்
தாண்டினான். அவனைக் கண்டதும் அவளின் முகம் மலர்ந்தது. வழக்கமாக அவள் செய்யும் அந்தச்
சின்னச் சைகை, இடது கை விரல்களால் காதுக்குப் பின்னால் முடியை ஒதுக்குவது. ஆனால், இந்த
முறை ஒரு சிறிய விபத்து நிகழ்ந்தது. அவளது கண்கள் சட்டென்று கலங்கின. இமைகளுக்குள்
அடங்க மறுத்து, ஒரு துளி நீர் அவளது கன்னத்தில் வழிந்தோடியது.
அவன் தனது பயணப்பையை தோளில் சரிசெய்துகொண்டு
அவளுக்கு அருகில் வந்தான்.
"என்ன இது? என்னை வரவேற்க
இப்படியா எழுதி வைக்கிறது? வித்தியாசமாத்தான் யோசிச்சிருக்கே. ஆனா ஏன் இந்த அழுகை?
நான் என்ன துபாய்ல இருந்து வராம போயிட்டேனா?" என்று வழக்கமான தன் கிண்டல் பாணியில்
கேட்டான்.
அவள் தன் கண்ணீரை வலது கை விரலால்
துடைத்துக்கொண்டே புன்னகைக்க முயன்றாள். "அழுதது நானில்லங்க. இந்தக் கண்கள். எனக்குத்
தெரியாம ஏதோ பண்ணுது."
அவள் சொன்னதைக் கேட்டு அவன்
அவளை விசித்திரமாகப் பார்த்தான். "தெரியாம பண்றதா? உயிரியல் ரீதியாக இதுக்கு ஒரு
காரணம் இருக்கணும். இத்தனை நாள் பிரிஞ்சிருந்ததுனால செரெட்டோனின் அளவு குறைஞ்சிருக்கும்,
இல்லன்னா ஹார்மோன் மாறுபாடு. அதான் உணர்ச்சிவசமாகி இப்படி நடக்குது. விடு, வண்டியில
போறப்ப பேசலாம்."
அவள் கையில் இருந்த பயணப்பொதி
வண்டியை அவன் பற்றிக்கொண்டான். ஆனால், அவன் மனதிற்குள் அந்த வார்த்தைகள் ஓடிக்கொண்டேயிருந்தன.
"தெரியாம பண்றதா? இவ அழல. ஆனால், கண்கள் அழுவுதாம்!'"
இருவரும் வாடகை மகிழ்வுந்தில்
ஏறி அமர்ந்தனர். வாகனம் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டது.
"அதெப்படி? கண்கள் அதுவாக
அழ முடியும்?" அவன் ஆரம்பித்தான்.
"இதயம் என்ன நம்மைக் கேட்டுக்கிட்டா
துடிக்குது? நெருப்பைத் தொட்டா, கேட்டுக்கிட்டா விரல் உடனே விலக்கிக்குது?" அவள்
சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
"இதயம் துடிக்குதுதுன்னா
தானியங்கி இயக்கம். நெருப்பிலிருந்து விரலை விலக்குறதுன்னா அது அனிச்சை செயல். கண்கள்
அதுவா அழுவுதுன்னா, அதுதான் பிடிபட மாட்டேங்குது."
"டக்குன்னு கண்ணுக்கு எதிரே
வேல் வருதுன்னா, கண் நம்மைக் கேட்டுக்கிட்டா மூடிக்கும்?"
"ஓ! கண்ணை வெச்சே கண்ணுக்கு
விளக்கம் சொல்றீயா? அதுவும் அனிச்சைத்தானே."
"அப்படித்தான் வெச்சுக்குங்களேன்.
உங்களைப் பார்த்தால் மலரும். பார்க்க முடியலன்னா அது அழுகும்."
"நீ சொல்றது ஏத்துக்குற
மாதிரியும் இருக்கு. ஏத்துக்க முடியாதது மாதிரியும் இருக்கு."
"பெண்களோட கண்களப் பத்தி,
ஆண்களோட மூளையால அத்தனையையும் புரிஞ்சிக்க முடியாது. அது அதுக்கெல்லாம் அப்பாற்பட்டது."
அவனுக்கு மேற்கொண்டு என்ன சொல்வது
என்று புரியாமல் மழுப்பலாகச் சிரித்தான். இடையிடையே அவள் அவனது துபாய் வாழ்க்கை பற்றி
கேள்விக் கேட்டுக் கொண்டே வந்தாள். அவன் ஏதேதோ பதில்கள் சொல்லிக் கொண்டு வந்தாலும்,
அழும் கண்கள் பற்றிய எண்ணம் மட்டும் மாறவே இல்லை.
திருவாரூர், அணிலாடு முன்றிலார்
நகரில், அவர்களது வீட்டுக்கு முன்பாக வாகனம் நின்றதும் அவர்கள் இறங்கினார்கள். அவன்
அவள் கண்களைப் பார்த்தான். அவள் சொன்னது உண்மைதான், குளத்தில் மலர்ந்த தாமரை மலர்களைப்
போல தற்போது அவை இருந்தன.
மாலையில், நவம்பர் மாதத்து மழைத்
தூறல் தொடங்கியிருந்தது. அவள் சமையலறையில் தேநீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.
அவன் சாப்பாட்டுமேசையில் கிடந்த
பழைய தாள் ஒன்றில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான். அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து
இந்தச் சுயம் உண்டு, எதைக் கண்டாலும் சரிதான், கேட்டாலும் சரிதான் தர்க்கம் பார்ப்பான்.
ஆனால், இன்று அவள் சொன்ன, தானே அழும் கண்கள் என்ற அந்த வரி அவனுக்குள் ஏதோ ஒரு
புதிரைப் போல, விடுவிக்க விடுவிக்க விடுபடாமல் போவது போலிருந்தது.
அவள் தேநீருடன் அவன் அருகில்
நுழைந்தாள். "இன்னும் என்ன யோசனை? மறுபடியும் எப்போ துபாய் கிளம்புலாம்ன்னா?"
அவன் தேநீர் குவளையை வாங்கிக்கொண்டே
அவளை நிமிர்ந்து பார்த்தான். "இல்ல. நீ இன்னைக்கு விமான நிலையத்துல சொன்னியே,
ஒரு வாக்கியம். அது என்னை ரொம்ப யோசிக்க வச்சுது. அறிவியல் ரீதியா யோசிச்சா இதுக்கு
என்ன அர்த்தம் தெரியுமா?"
அவள் மெத்தை இருக்கையில் அமர்ந்து,
தன் முழங்கால்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு புன்னகையுடன் கேட்டாள். "ஓ! அது இன்னும்
முடியலையாக்கும். நான் வண்டியில வர்றப்பவே முடிஞ்சிடுச்சின்னு நெனைச்சேனே. சரி பரவாயில்ல.
சொல்லுங்க. உங்கள் அறிவியல் என்ன சொல்லுதுன்னு கேட்போம்."
"பொதுவா, கண் என்பது ஒரு
ஒளிப்படக் கருவி மாதிரி. லென்ஸ் இருக்கு, ஐரிஸ் இருக்கு, ரெட்டினா இருக்கு. மூளைக்கு
சமிக்ஞை அனுப்புது. துபாய்ல இருந்து நான் விமானம் ஏறும்போதே, என்னைப் பார்க்கப் போறோம்ங்ற
உற்சாகம் உன் மூளைக்குத் தெரியும். அதே நேரத்துல உன் அரை விழிப்புணர்வு நிலையில கடந்த
ஆறு மாதப் பிரிவுத் துயரம் இருக்குது. அது உன் மனசுல உன்னையும் அறியாம உன்னோட ஆழ்நிலை
மனதுல ஆழமா பதிஞ்சிருக்கு."
அவள் புன்னகையுடன் அவனைக் கேட்டுக்
கொண்டிருந்தாள். அவளது கண்கள் இன்னும் ஈரமாகத்தான் மின்னின.
அவன் தொடர்ந்தான், "நீ விமான
நிலையத்துக்கு வந்து நின்னப்போ, என்னை நேரில் பார்த்த உடனே, உன் கண்கள் என்ன செஞ்சது
தெரியுமா? கடந்த ஆறு மாசமா உனக்குள்ள இருந்த அந்தப் பிரிவுத் துயரத்தின் பிம்பத்தை,
என்னை நேரில் பார்த்த அந்த நிமிஷம் உன்னோட கண்கள்தான் எனக்குக் காமிச்சுச்சு. நீ எத்தனை
நாள் தவிச்சேங்றதெ எனக்கு உணர்த்துனது உன் கண்கள்."
"ஓஹோ! அப்போ நானா எதுவும்
காட்டலையா?" என்று புருவத்தை உயர்த்தினாள் அவள்.
"இரு, என்னை முழுசா பேச
விடு." என்றான் அவன், தன் தர்க்கத்தைக் இன்னும் கொஞ்சம் தீவிரமாக்கிக் கொண்டு.
"உன் கண்கள்தான் என்னை உனக்கு
முதன் முதல்ல காமிச்சது. அப்படிக் காமிச்ச அந்தக் கண்கள்தான் அந்தப் பிரிவோட வலியை
ஞாபகப்படுத்திச்சு. அந்தச் சமயத்துல, அந்தத் துயரத்தை எதிர்கொள்ள முடியாம, உன் கண்கள்
தாமே அழுதுது. உடம்புல வலின்னா கண்கள் அழுவுறது ஒரு காரண காரியம். கண்கள்ல தூசு பட்டாலும்
அது அழுவுறதுல ஒரு காரண காரியம் இருக்கு. ஒருவேளை கண் எரிச்சல், எதாவது கண் நோய்ன்னாலும்
அது அழுவுறதுல ஒரு காரண காரியம் இருக்கும். இது எதுவுமே இல்லாம, பிரிவை நினைச்சு அதுவா
அழுவுதுன்னா, அதுவும் உன் மனசு அதைப் பத்தி நினைக்காமலேயே, அது அழுவுதுன்னா, இங்கே
காரணமே இல்லையே. காரியம் மட்டும் எப்படி?"
அவள் தேநீர்க் குவளையை மேசையில்
வைத்துவிட்டுச் சிரித்தாள். அவளது சிரிப்பு அந்த அமைதியான அறையில் ஒரு சித்திரை வசந்தம்
போலப் பரவியது.
"உங்களுக்கு எல்லாத்துக்கு
ஒரு காரண காரியம் வேணும். அப்படித்தானே? ஆனா காதல் அப்படிப்பட்டதல்ல."
அவள் அவனுக்கு அருகில் உட்கார்ந்து,
அவனது கையைப் பற்றிக் கொண்டாள். அவளது விரல்களின் சூடு அவனுக்குள் ஒரு மின்சாரப் பாய்ச்சலை
ஏற்படுத்தியது.
"நீங்க துபாய்க்குப் போனப்போ,
என் அழுகையை நீங்க பாக்கல. ஒவ்வொரு நாளும் நீங்க காணொளியில வரும்போது, திரையில உங்களைக்
காமிச்சது இந்தக் கண்கள் மட்டும்தான். நீங்க பேசி முடிச்சப்பறம், நீங்க இல்லாத இந்த
அறை, நீங்க இல்லாத இந்த மெத்தை இருக்கை, நீங்க குடிக்காத தேநீர் என எல்லாத்தையும் நினைச்சு
நினைச்சு அழுதது இந்தக் கண்கள்தான். அதனாலயோ என்னவோ பிரிவோடு அத்தனை துயரத்தையும் கண்கள்தான்
சுமந்துச்சு."
அவளின் குரல் லேசாகத் தழுதழுத்தது.
"இன்னைக்கு விமான நிலையத்துல
உங்களைப் பார்த்த உடனே, என் கண்கள் என்ன நினைச்சுது தெரியுமா? இவ்வளவு நாளா நாங்க சுமந்த
வலி இதானா? இவரைக் காணாமலா இத்தனை நாள் தவிச்சோம்? அப்படின்னு கண்களுக்கு ஓர் ஆச்சரியம்.
அந்த ஆச்சரியமும், அந்த மகத்தான மகிழ்ச்சியும் ஒண்ணு சேர்ந்துதான் கண்ணீரா வெளிப்பட்டுச்சு.
நான் அழலங்க. இத்தனை நாளா உங்களைத் தேடித் தவிச்ச இந்தக் கண்கள், உங்களைப் பார்த்த
உடனே அழுது தன் பாரத்தை இறக்கி வச்சது. அது மட்டுமில்லாம, உங்களைப் பார்க்காத அத்தனை
நாளும் பாரத்தை எப்படி இறக்கி வெக்கிறதுன்னு தெரியாமலும் அழுதுச்சு."
அவன் அமைதியாக இருந்தான். அவனது
மூளை காரணங்களைத் தேடுவதை நிறுத்திவிட்டது. அந்த மௌனத்தில், மழைச் சத்தம் இன்னும் தெளிவாகக்
கேட்டது.
மறுநாள் காலை.
அவன் தாளை எடுத்துக் கொண்டு மீண்டும்
கிறுக்க ஆரம்பித்தான். ஆனால், இன்னும் ஏதோ ஒன்று புரிபடாமல் இருப்பது போலத்தான் தோன்றியது.
அப்போதுதான் மேசை ஓரமாக இருந்த குறள் நூல் அவன் கண்களில் பட்டது. அவன் புரட்டினான்.
கண் விதுப்பழிதல் என்று கண்ணுக்கு ஒரு அதிகாரமே அவர் எழுதியிருப்பதைப் பார்த்து, அவன்
கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
அவன் அந்தக் குறளைப் பார்த்தான்.
பார்த்து முடித்ததும், சமையலறையை நோக்கித் திரும்பினான். அங்கே அவள் காதுகளில் ஜிமிக்கி
ஆடிக்கொண்டிருக்க, அவளது கண்கள் ஜன்னலுக்கு வெளியே பறக்கும் சிட்டுக்குருவியைப் பார்த்துக்கொண்டிருந்தன.
அவன் தாளின் மீது ஒரு குவளையைத்
தூக்கி வைத்துவிட்டு எழுந்து வந்தான். அவளுக்குப் பின்னால் வந்து நின்று, அவளது தோள்களில்
கைகளைப் போட்டான். கண்ணாடியில் அவர்களின் பிம்பம் தெரிந்தது.
"என்னங்க இன்னும் உங்களோட
தர்க்கம் தீர்ந்த பாடில்லையா?" என்றாள் அவள் கண்ணாடியில் அவனைக் பார்த்தபடியே.
"அது இல்லை." என்றான்
அவன் மெல்லிய குரலில்.
"பின்ன என்ன?"
"ஒரு சின்ன திருத்தம் பண்ணனும்."
"என்னது?"
"நீ நேத்து சொன்னியே. கண்கள்
அதுவாவே அழுதுச்சுன்னு. அதுதான் உண்மையான கண்களோட இயல்பு. மனிதனோட கண்கள்ல இருக்கிற
லாக்ரிமல் க்ளாண்ட்ஸ் வெறும் நீரை மட்டும் சுரக்குறது இல்ல. அது மனிதனின் உச்சக்கட்ட
உணர்ச்சிகளான மகிழ்ச்சி, பிரிவு, வலி எல்லாத்தையும் தரவுகளைப் போல சேமிச்சு வச்சுக்குது."
அவள் தன் முகத்தைத் திருப்பி
அவனைக் குழப்பமாகப் பார்த்தாள். "என்ன சொல்ல வர்றீங்க?"
அவன் புன்னகையுடன் அவளது கன்னத்தைத்
தொட்டான். அவனது கண்கள் அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தன.
"நீ அழுதுட்டேன்னு நான்
உன்னைத் தப்பா நினைச்சேன். ஆனா, உன் கண்கள் என்னைத் தேடித் தவிச்ச தவிப்புதான், இன்னைக்கு
என்னை உன்கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு. வள்ளுவர் இதை பல நூறு வருஷங்களுக்கு முன்னாடியே
கண்டுபிடிச்சுட்டார்.
"கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது."
(குறள், 1171)
நீயும் நானும் அந்தக் கண்டுபிடிப்புக்கு
வெறும் நிரூபணங்கள்தான். ஆனா இந்தத் தமிழ் இலக்கியம் இருக்கே, அது மனித உணர்வுகளோட
மாபெரும் கண்டுபிடிப்புகளின் தொகுப்பு!"
அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பில் கடந்த ஆறு மாதத் தனிமையும், பிரிவுத் துயரமும் அடித்துச் செல்லப்பட்டிருந்தன.
இப்போது, அவர்களின் கண்கள் எதையும்
பேசிக்கொள்ளவில்லை. ஆனால், அந்த மௌனத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட மொழியை எந்தக்
காவியமும் எழுதியிருக்க முடியாது.
-
சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment