திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 92
பழி தீர்க்கும் கண்கள்
இரவு மணி இரண்டு.
அந்த அறையின் குளிர்சாதனக் கருவியின்
மெல்லிய முனகல் சத்தத்தைத் தவிர, அங்கே வேறு எந்தச் சத்தமும் இல்லை. படுக்கையறையின்
மேஜை விளக்கு மட்டும் மஞ்சள் நிறத்தில் சோர்ந்து எரிந்து கொண்டிருந்தது.
அவள் படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தாள்.
அவளது கண்கள் திறந்தே இருந்தன. தூக்கம் அவளை விட்டு எட்டு ஊர் தூரம் ஓடியிருந்தது.
இமைகள் எடை கூடிச் சுமையாய் அழுத்தின; ஆனாலும் கண்கள் மட்டும் உறங்க மறுத்தன. ஜன்னல்
வழியே வெளியே தெரிந்த திருவாரூரின் வெறிச்சோடிய வீதி விளக்குகளை அது வெறித்துப் பார்த்துக்
கொண்டிருந்தன.
அவளுக்கு அலுவலகத்தின் அந்த முதல்
சந்திப்பின் நினைவு இப்போது மின்னலாய் வெட்டியது.
அவன் அலுவலகத்தின் புதிய செயல்திட்டத்
தலைமை அதிகாரி. அவன் அலுவலகத்தைப் பார்வையிட்டுக் கொண்டு வந்த போது, எதிர்பாராமல் அவளது
கண்கள் அவன் மீது நிலை குத்தின. என்ன இருந்தது அந்தப் பார்வையில்? ஒரு கணத்தின் மின்னல்.
பெயர் தெரியாத ஓர் ஈர்ப்பு. அவன் தன் வாழ்க்கைக்குள் வரப்போகிறான் என்ற எந்த முன்னறிவிப்பும்
இல்லாமல், அந்த வினாடியில் அவளது கண்கள் அவனைத் தேர்ந்தெடுத்தன.
அதன் பிறகு காதல், வீட்டின் எதிர்ப்புகள்,
தாலி கட்டிக் கொண்ட அந்த மங்களகரமான நாள், கடந்த இரண்டு வருடங்களாக இந்த இல்லத்தில்
அவர்கள் பகிர்ந்து கொண்ட சிரிப்புகள், சிறு சிறு சண்டைகள், ஞாயிறு மாலைகள் என எல்லாமே
கண் மூடித் திறப்பதற்குள் கடந்தது போலிருந்தன.
அவன் கடந்த வாரம் அவசரமாக அலுவலக
வேலையாக அகமதாபாத்துக்கு மூன்று மாதப் பயணமாகச் சென்றுவிட்டான். அவன் இல்லாத இந்த முதல்
வாரம் வீடே அவளை விழுங்குவது போல் இருந்தது.
அவள் மெல்லத் தன் கையை உயர்த்திக்
கண்களைத் தொட்டுப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கி ஈரமாக இருந்தன.
அவளுக்கே அவளது நிலை மீது கோபம்
வந்தது.
"யார் அழுவது? இந்தச் சுவர்களா?
இந்தக் கட்டிலா? இல்லை, இந்தக் கண்கள்தான். ஏன் அழ வேண்டும்? அவர்தான் நான்கு நாளுக்கு
முன்னாடியே சொல்லிட்டுப் போயிட்டாரே, பிறகு எதற்காக இந்த அழுகை?" அவள் தனக்குத்
தானே பேசிக் கொண்டாள்.
அவள் தன் கண்களை இறுக்கமாக மூடிக்
கொண்டாள். ஆனால் மூடிய பிறகும் அந்த இருளுக்குள் அவனது முகமே நிழலாடியது. கோபம் தலைதூக்கியது.
அவள் தன் கண்களையே நோக்கி உரக்கப் பேசத் தொடங்கினாள். அந்த அறைக்குள் அவள் மட்டும்
தனியாக இருந்தாள்.
"உங்களைத்தான் கேட்கிறேன்
என் கண்களே!"
அவளது மனசுக்குள் அந்தச் சொற்கள்
கூர்மையாக உருவெடுத்தன.
"அன்று அந்த அலுவலகத் தாழ்வாரத்தில்
அவரைப் பார்த்த அந்த நொடியில், நீங்க கொஞ்சம் யோசிச்சிருக்கக் கூடாதா? இவர் நம்ம வாழ்க்கைக்குள்
வரப்போறார், இவருடையப் பிரிவை நம்மால் தாங்க முடியாது என்று கொஞ்சமாவது யோசித்தீர்களா?
இல்லையே! அப்போது சும்மா மினுமினுவென்று மை பூசிக் கொண்டு அவரையே பார்த்துச் சிரித்து
விட்டு, இப்போது என்னை இந்தச் சிக்கலில் மாட்டிவிட்டு விட்டீர்களே. இது நியாயம்தானா?"
அவளது கண்கள் இன்னும் அதிகமாகக்
நீரைச் சொரிந்தன. அந்த எரிச்சலிலும் ஒரு இயலாமை அவளை வதைத்தது.
"இப்போது என்னவென்றால்,
அவர் அவன் ஊரை விட்டுப் போய் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அவர் இன்னும் வரலையே, அவர் இன்னும்
அலைபேசியில் அழைக்கவில்லையே, அவர் எங்கே இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ என்று கண்களே
நீங்கள் தேடுவதும் தவிப்பதும் எந்த வகையில் சரி? அன்று நீங்கள் செய்த தவறால்தான், இன்று
நான் தனிமையில் தவித்துக்கொண்டு இருக்கிறேன். அன்று அவசரப்பட்டு அவரைப் பார்த்து ஆசைப்பட்ட
நீங்கள், இப்போது அவர் பிரிவை எண்ணி இப்படித் துடித்து அழுவதில் என்ன விவேகம் இருக்கிறது?
நியாயமாகப் பார்த்தால் உங்களுக்கு அழுவதற்குக் கூட தகுதி கிடையாது."
இப்படியெல்லாம் தனக்குத் தானே
பேசியபடி அவள், தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
வெளியே தூரத்தில் நாய் ஒன்று
குரைக்கும் சத்தம் கேட்டது.
காலம் எவ்வளவு கொடூரமானது? மனிதனை
எங்கு கொண்டு வந்து நிறுத்துகிறது! கண்கள் காதலில் விழுகின்றன; ஆனால் அந்த விழும் காதலுக்கான
ஒட்டுமொத்தத் தண்டனையையும் இந்த மனமும் உடலும் அல்லவா அனுபவிக்க வேண்டியிருக்கிறது?
ஆம், இதுதான் நிஜம். கண்கள் செய்தது
அறியாமை. அந்த அறியாமையின் விளைவுதான் இந்தத் தவிப்பு.
அவள் மெல்லத் தன் கண்களைத் துடைத்துக்
கொண்டாள். உதடுகள் லேசாகப் புன்னகைத்தன. அது அந்தத் தனிமையின் வறண்ட புன்னகை.
கண்கள் இன்னும் தூங்க மறுத்துத்தான்
கொண்டிருந்தன.
அந்த நடுநிசி நேரத்தில் மழை லேசாகத்
தூறலைத் தொடங்கியிருந்தது. நள்ளிரவின் அமைதியைக் குழைக்கும் வண்ணம் அதன் படபடவென்ற
சத்தம் கேட்டது.
அவள் படுக்கையில் புரண்டு படுத்தாள்.
கண்கள் இரண்டும் சுவரில் தொங்கிக்கொண்டிருந்த டிஜிட்டல் கடிகாரத்தின் எண்களை வெறித்துப்
பார்க்கத் துவங்கின.
தூக்கம் மட்டும் ஏதோ வேறு கிரகத்தில்
நடக்கும் காரியம் போல அவளைச் சூழ மறுத்துக் கொண்டே இருந்தது.
மூளை மட்டும் சலிக்காமல் இயங்கிக்
கொண்டிருந்தது. அதை எப்படி நிறுத்துவது என்று அவளுக்குப் புரிந்தபாடில்லை.
இப்போது அந்த மூளை கடந்த ஒரு
வாரமாக நடந்தவை அனைத்தையும் நனைவோடையில் பாய விட்டது.
அவனை அகமதாபாத்திற்குத் தொடர்வண்டி
நிலையத்தில் வழியனுப்பிவிட்டுத் திரும்பியதிலிருந்து, இந்த வீடு அவளுக்கு ஏதோ ஒரு பெரிய
காங்க்ரீட் பெட்டி போல காட்சியளித்தது.
சுவர்களில் தொங்கும் கடிகாரத்தின்
முள் ஓசை கூட இப்போது ஒரு சுத்தியலால் அடிக்கப்படுவது போல் மூளைக்குள் எதிரொலித்தது.
டக்… டக்… என்ற அந்தச் சத்தம் அவளது அமைதியைக் குலைக்கும் போர்ப்பறையாக மாறியது.
சமையலறைக்குச் சென்றால், அவன்
எப்போதுமே சாப்பிடும் தட்டு அங்கே தனியாக மௌனமாக உட்கார்ந்திருந்தது. அவன் சாப்பிடும்
போது பேசும் சின்னச் சின்னப் பிதற்றல்கள், "உப்பு கொஞ்சம் குறைவுதான், பரவாயில்லை."
என்று அவன் உதட்டில் உதிர்க்கும் புன்னகை என அவை எல்லாமே இப்போது காற்றில் கரைந்த கற்பனைக்
கோடுகளாய் அவளை வதைத்தன.
தண்ணீர்க் குவளையைத் தொடப் போனால்,
கைகள் லேசாக நடுங்கின. எதைக் தொட்டாலும் அங்கே அவனது ஸ்பரிசம் உறைந்து கிடப்பது போல
ஒரு பிரமை.
கால்காசு கூடச் செலவழிக்காமல்
அவள் மனம் எங்கே எங்கேவோ சஞ்சரித்தது. அகமதாபாத் தொடர்வண்டி அங்கே போயிருக்குமா? அவருக்குச்
சரியாக இறங்கத் தெரிந்திருக்குமா? சரியான இடத்தைச் சென்று சேர்ந்தருப்பாரா? என்று அவன்
சென்று சேர்வதற்குள் எத்தனையெத்தனை கேள்விகள் அவள் மனதுக்குள்.
அடுத்தடுத்த நாட்களில் அந்த நகரின்
குளிரை அவர் தாங்குவாரா? சாப்பாட்டுக்கு என்ன செய்வார்? நேரா நேரத்துக்குச் சாப்பிடுவாரா?
என்று அவளது கற்பனை இயந்திரமானது இடைவிடாமல் கேள்விகளைத் தயாரித்துத் தள்ளியது. அதற்கான
பதில்கள் எங்குமே இல்லை, வெறுமை மட்டுமே விடையாக நீடித்தது.
அவன் சென்ற பிறகும் காற்று வீசயதுதான்,
மரங்கள், செடிகள், கொடிகள் அசைந்தனதான். ஆனால், அவளுக்கு அவளது பூமி மட்டும் அவனோடு
சேர்ந்து எங்கோ நகர்ந்துவிட்டதைப் போல ஒரு பிரமை. அவளுக்கு மட்டும் காலம் அங்கே அப்படியே
உறைந்துபோய்விட்டது.
பல நேரங்களில் "இன்னும்
எத்தனை நாட்கள்?" என்று வாய்விட்டே அழுதபடி முணுமுணுத்தாள். வெறும் ஏழு நாட்கள்தான்
ஆகியிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கரைந்தது. அவனது அலைபேசி எண்
அவளது கைக்குள் இருந்தது; ஆனால் அழைத்தால் என்ன பேசுவது? அவனது வேலையைக் கெடுக்கக்
கூடாது என்ற சுயக்கட்டுப்பாடு வேறு கால்களைப் பிணைத்தது.
"இந்த மூளையை அணைத்து விட்டுப்
படுக்க, கண்களை மூடி விட்டுப் படுக்க, ஒரு பொத்தான் இல்லையா கடவுளே?" என்று தனக்குள்
ஆற்றாமையுடன் புலம்பினாள்.
அவள் தன் கைகளைக் கட்டிக்கொண்டு
ஜன்னலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைதூரத்தில் ஒரு தொடர்வண்டியின்
வருகைச் சத்தம் காற்றில் மிதந்து வந்தது போலிருந்தது. அந்தச் சத்தம் அவளை மேலும் தீவிரமாய்
அசைத்துப் பார்த்தது. அவனது வரவுக்காகக் காத்திருக்கும் அந்த நெடுந்தூரப் பயணத்தின்
தொடக்கம் இதுவென்று அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
அவள் தலையைத் திருப்பிக் கட்டிலின்
மறுபுறம் பார்த்தாள். அங்கே அவனது தலையணை வெறுமையாகக் கிடந்தது. அவனது வாசனை இன்னும்
அந்தத் தலையணையில் லேசாக ஒட்டியிருந்தது போல ஒரு பிரமை.
கோபம் தலைக்கு ஏறியது. அந்தத்
தனிமை அவளைக் கடித்துத் தின்றது. எதிர்பார்ப்பும், எதார்த்தமும் ஒருசேர அவளை அறைந்தன.
காதலின் ஆரம்பம் எப்போதும் அழகானது; அது எந்தக் கணக்கையும் பார்ப்பதில்லை. ஆனால், அந்த
ஆரம்பம் வைக்கும் ஒரு சிறு புன்னகைப் பொறி, பிற்காலத்தில் எத்தகைய காட்டுத் தீயாக மாறுகிறது
என்பதை மனித மனம் எப்போதுமே உணர்வதில்லை.
தெரிந்து கொள்ளாமல், எதிர்காலத்தைப்
பற்றி யோசிக்காமல், ஒரு நொடியில் விழுந்த பார்வை. ஆனால் அந்தப் பார்வைக்கு இப்போது
தண்டனை அனுபவிப்பது யார்? இந்த மனமும் உடலும் அல்லவா! அதுவும் நள்ளிரவு தொடங்கி, இதோ
அதிகாலையை நோக்கி பொழுது நகரத் தொடங்கும் வரை, தாள முடியாத வேதனையும் வலியும்.
அவள் படுக்கையிலிருந்து மெல்ல
எழுந்து அமர்ந்தாள். ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள். திருவாரூரின் அதிகாலைத்
தூறல் லேசாகத் தெருக்களில் நனைத்துக் கொண்டிருந்தது. வெகு தொலைவில் ஏதோ ஒரு வாகனத்தின்
ஒலிப்பான் சத்தம் மட்டும் கேட்டது.
இல்லை. இப்படி உருகிக் கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை. அவள் எதார்த்தமானவள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகக் கூடாது என்று தனக்குத்
தானே சொல்லிக் கொள்வாள். ஆனால், காதலில் தர்க்கம் வேலை செய்யாது என்பதை அவள் கண்களே
அவளுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தன.
அவள் தன் மேஜை மீதிருந்த அலைபேசியை
எடுத்தாள். திரை வெளிச்சத்தில் அவன் படம் தெரிந்தது. அவன் வேலை விஷயமாக அகமதாபாத் செல்வதற்கு
முன் சிரித்தபடி எடுத்த புகைப்படம்.
அவளது விரல்கள் தாமே இயங்கின.
வாட்ஸ்அப்பைத் திறந்தாள்.
"உங்கள் பிரிவை தாங்க முடியவில்லை
என்று இந்தத் கண்கள் என்னைக் கடித்துக் குதறியபடி சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றன.
சீக்கிரம் வேலையை முடித்து விட்டு வாருங்கள்!" என்று தட்டச்சு செய்துவிட்டு அனுப்புகை
பொத்தானை அழுத்த முற்பட்டவள், சட்டென நிறுத்தினாள்.
அவள் ஒரு மெல்லிய புன்னகையுடன்
அந்தச் செய்தியை அழித்துவிட்டு, வேறு ஒன்றை மாற்றித் தட்டச்சு செய்தாள்:
"சீக்கிரம் வாருங்கள். தனிமையில்
அழுவது கொடுமையானது! உங்கள் மார்பில் முகம் புதைத்து அழுவதே இனிமையானது!"
அனுப்பிவிட்டு அலைபேசியைப் பக்கத்தில்
வைத்தாள். கண்கள் இன்னும் தூங்க மறுத்துத்தான் கொண்டிருந்தன; ஆனாலும், அந்தத் தனிமையின்
நடுவே ஏதோ ஒரு புதிய விடியலின் லேசான வெளிச்சம் அவளுக்குள் பரவத் தொடங்கியிருந்தது.
காலம் பிரிக்கலாம்; தூரம் தடுக்கலாம்.
ஆனால் அந்த முதற் பார்வை விதைத்த வேர்கள் அவ்வளவு எளிதில் அழிந்து விடுவதில்லை! அந்த
வேரிலிருந்து தொடங்கும் கண்ணீர் ஒட்டுமொத்த விருட்சத்தையும் அல்லவா நனைத்து விடுகிறது.
கோடரிக்குக் காம்பாகப் போன ஒரு மரக்கிளையால் ஒட்டுமொத்த மரமே அல்லவா சாய வேண்டியிருக்கிறது.
"தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்."
(குறள், 1172)
-
சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment