16 Oct 2026

காதலின் தீ வளர்ப்பு நிலையங்கள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 68

காதலின் தீ வளர்ப்பு நிலையங்கள்

மாலை நேரம். 

திருவாரூர் கமலாலய குளத்தின் படிக்கட்டுகள்.

வானத்தில் மழைக்கான மேகங்கள் கறுத்துக் கொண்டு வந்தன.

அவன் குளத்தைப் பார்ப்பதும் அவளை எதிர்பார்ப்பதுமாக இருந்தான்.

சரியாக மணி ஐந்து முப்பதைத் தொட்டபோது அவள் வேக வேகமாகப் படிக்கட்டுகளில் இறங்கி வந்தாள்.

கையில் ஒரு பெரிய கோப்பு. அவளது முகம் வழக்கமான புன்னகையை இழந்திருந்தது. சற்றே பதற்றமும், அயர்ச்சியும் தெரிந்தது.

அவள் வந்து அவன் அருகில் படிக்கட்டில் அமர்ந்ததும், அவன் லேசாகச் சிரித்தான். "என்ன? வடக்கு வீதியில் இருக்குற உங்க அலுவலகத்துலேந்து இங்க வர நாற்பது நிமிஷமா?"

அவள் பதில் சொல்லவில்லை. அந்தப் பெரிய கோப்பைப் படிக்கட்டில் ஓரமாக வைத்து விட்டு அவனின் கண்களை நேராகப் பார்த்தாள். "நாம இனிமே இப்படிப் பாத்துக்கிறது, பேசுறது எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு நிறுத்திடலாம்."

அவன் திடீரென்று திகைத்துப் போனான். "திடீர்னு என்ன ஆச்சு? அலுவலகத்துல ஏதாவது பிரச்சனையா?"

"அலுவலகத்தில் இல்லை. நம்மைச் சுத்தி இருக்கிறவங்க, இந்தத் தெருக்காரங்க, இந்தச் சொந்தக்காரங்க. திருவாரூர் முழுக்க நம்மளப் பத்திதான் பேச்சு."

அவன் புருவங்களை உயர்த்தினான். "ஊர் பேசுதா? என்ன பேசுறாங்க? நாம்ம ரெண்டு பேரும் காதலிக்கிறோம், கமலாலயம் படிக்கட்டுல உக்காந்து கடலை போடுறோம்ன்னா? அது உண்மைதானே? இதுல புதுசா என்ன இருக்கு?"

"உனக்கு எல்லாமே விளையாட்டுதான்!" அவள் குரலைத் தாழ்த்தி, ஆனால் அழுத்தமாகச் சொன்னாள். "நேத்து எங்க அத்தை வீட்டுக்கு வந்திருந்தாங்க. உன் பொண்ணு திருவாரூர்ல ஒரு பையன் கூட பைக்ல சுத்துறா, பாக்குறவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? குடும்ப மானம் என்னாகிறதுன்னு அப்பா, அம்மாக்கிட்ட நேராவே கேட்டுட்டாங்க. அப்பா நேத்து ராத்திரி முழுக்க தூங்கல. அம்மா ராத்திரி முழுக்க ஒரே அழுகை. எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு."

அவன் லேசாகப் புன்னகைத்தான். அந்தப் புன்னகை அவளுக்கு மேலும் எரிச்சலூட்டியது. "சிரிக்காதேடா! நான் கோபமா சொல்றேன். நாலு பேர் நாலு விதமா பேசுறாங்க. இந்தப் பழிச்சொல்லும் வதந்தியும் ரொம்ப அசிங்கமா இருக்கு. நாம இதோட நிறுத்திப்போம். கொஞ்ச நாள் பேசாம இருந்தா, எல்லாரும் இதை மறந்துடுவாங்க. நம்ம காதலும் மாறுனாலும் மாறும். பிறகு பாத்துக்கலாம்."

"ஓ! அப்படியா?" அவன் அவளது கைகளைப் பற்ற முயன்றான். அவள் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டாள்.

"நீ என்ன நினைக்கிறேன்னா, ஊரார் பேசுற பழிச்சொல்லுக்குப் பயந்து, நாம ஒதுங்கி இருந்தா, இந்தக் காதல் தானா அடங்கிடும்னு நினைக்கிறே. அப்படித்தானே?"

"ஆமாம். நெருப்புல காத்து படாம இருந்தா அணைஞ்சிடும்ல? அதுமாதிரிதான்."

அவன் லேசாகக் கைகளைத் தட்டினான். "தப்பு. வள்ளுவர் இதுக்கு வேற மாதிரி ஒரு சூத்திரம் சொல்லியிருக்கார்."

"வள்ளுவரா? இந்த நேரத்துல உனக்குத் திருக்குறள் கேட்குதா?"

"ஆமாம்.

"நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்."                                     (குறள், 1148)

அப்படின்னு ஒரு குறள் இருக்கு. அப்படின்னா என்ன தெரியுமா? எரியுற தீயை அணைக்கிறதுக்குத் தண்ணியை ஊத்தாம, நெய்யை ஊத்தி அணைக்கப் போறேன்னு சொல்ற மாதிரிதானாம், இந்த ஊரார் பேசுற அலர் தூற்றலுக்குப் பயந்து காதலை அடக்க நினைக்கிறதும்!"

அவள் அவனை விசித்திரமாகப் பார்த்தாள். "நெய்ய ஊத்துனா தீ இன்னும் அதிகமா எரியும்டா."

அவன் படிக்கட்டில் சற்று சாய்ந்து அமர்ந்து கொண்டான். "அதான். அதேதான். நாம விலகி இருக்கணும்னு நினைக்க நினைக்க, இந்த ஊரோட பேச்சும், நம்மைப் பத்தின வதந்தியும் நம்ம மனசுக்குள்ள காதலை இன்னும் அதிகமாகத்தான் எரியவைக்கும். அதை அணைக்கவே முடியாது."

அவள் அமைதியானாள்.

அதே நேரம் மழைக்கான அறிகுறிகள் தீவிரமாக தெரியவே, அவளை அவசர அவசரமாக இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவளது தெரு முனையில் விட்டு விட்டு திரும்பினான் அவன்.

லேசான துறல் மழையில் நனைந்தபடி, அந்தப் பெரிய கோப்பானது நனைந்து விடாதபடி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு பரபரப்புடன் தன் வீட்டின் உள்ளே நுழைந்தாள் அவள்.

வரவேற்பறையில் அவளது அப்பா, "என்ன கண்ணு, கமலாலய படிக்கட்டுச் சந்திப்பெல்லாம் முடிஞ்சதா?"

அவள் திடுக்கிட்டு நின்றாள். "அப்பா! நீங்க?"

"நான் ஒன்னும் உன்னை உளவு பார்க்கல. உங்க அத்தை சொன்னதுக்கு அப்புறம் நான் யோசிச்சேன். அந்தப் பையன் யாரு? அவன் பின்னணி என்னன்னு விசாரிச்சேன். நல்ல பையன்தான், நல்ல வேலையில இருக்கான். ஆனா, இந்த வயசுல வர்ற காதல் எல்லாம் வெறும் வயசுக்கோளாறு. நாலு பேர் நாலு விதமா பேசும்போது, உங்களுக்கே அது சலிச்சுப்போயிடும்."

அவள் தலையைக் குனிந்துகொண்டாள். "அப்பா! நான் அவன்கிட்ட பேசிட்டேன். இனிமே நாங்க பார்க்க மாட்டோம்."

அவளது அப்பா மனதிற்குள் சிரித்துக்கொண்டார். ஆனால், அவருக்குத் தெரியாது, இயற்பியலிலும் சரி, மனித உணர்வுகளிலும் சரி ஓர் அழுத்தத்தைக் கொடுக்கும்போது, அது அதைவிட வீரியமாகத் திரும்பித் தாக்கும் என்று.

அடுத்த பத்து நாட்கள்.

அவனும் அவளும் பேசிக்கொள்ளவில்லை. வாட்ஸ்அப் அனுப்புகைகள் இல்லை. இன்ஸ்டாகிராம் பகிர்வுகள் இல்லை. மாலை நேர கமலாயச் சந்திப்புகள் இல்லை.

ஆனால், அவனின் நினைவுகள் அவளை விட்டு ஒரு கணமும் விட்டு நகரவில்லை.

அவள் வேலை செய்யும் வடக்கு வீதி அலுவலகக் கட்டிடத்தைக் கடந்து செல்லும்போதெல்லாம், அவனின் இருசக்கர வாகன வேகம் தானாகக் குறையும். அவளுக்குப் பிடித்த இளஞ்சிவப்புப் பால் கடையில் நிற்கும்போதெல்லாம், "அவளுக்கு இது ரொம்ப பிடிக்குமே" என்று மனம் ஏங்கும்.

மறுபுறம் அவளுக்கு நிலைமை இன்னும் மோசமாக இருந்தது.

அவள் அவனை மறப்பதற்காக அதிக நேரம் வேலை செய்ய முயன்றாள். ஆனால், கோப்புகளில் எல்லாம் அவனின் சிரித்த முகமே நிழலாடியது. ஊரார் பேச்சுக்குப் பயந்து அவனைத் தவிர்க்க நினைத்த ஒவ்வொரு நொடியும், அவனை அலைபேசியில் அழைத்து, "டேய்! எனக்கு உன்னைப் பார்க்கணும் போல இருக்கு" என்று சொல்லத் துடித்தது அவளது உள்மனம்.

அவள் தோழி ஒரு நாள் கேட்டாள், "என்னடி ஆச்சு? பத்து நாளா ஒரு மாதிரி இருக்க? அவன் கூட சண்டையா?"

"இல்லடி நாங்க பேசிக்கிறதே இல்லை. ஊர்ல எல்லாரும் தப்பா பேசுறாங்கன்னு ஒதுங்கி இருக்கோம். ஆனா..." அவள் நிறுத்தினாள்.

"ஆனா?"

"ஆனா, அவனைப் பார்க்காம இருக்குற ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு அவன் மேல இருக்கிற காதல் அதிகமாகிட்டேதான் போகுது. அவனை முதல்ல பார்த்தப்பக்கூட நான் இவ்வளவு தூரம் அவனை நினைச்சதில்லை. இப்ப அவனைத் தவிர்க்க நினைக்க நினைக்க, பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு."

தோழி சிரித்தாள். "அடிப்பாவி! அதுதான் காதலோட தீப்பிக்கும் தன்மை. நீ அதை அணைக்கப் பார்க்கிற. ஆனா அது இன்னும் பெருசா எரியுது."

அவளுக்கு கமலாலயப் படிக்கட்டில் அவன் சொன்ன அந்தத் திருக்குறள் ஞாபகத்திற்கு வந்தது. "நிஜமாவே அவன் சொன்னது உண்மைதான் போலிருக்கே!" என்று முணுமுணுத்துக்கொண்டாள் அவள்.

பதினோராவது நாள்.

திருவாரூர் நகரையே அச்சுறுத்தும் ஒரு கனமழை நாள். அதிபயங்கர சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது வானிலை நிலையம்.

மதியம் இரண்டு மணிக்கே வானம் இருட்டிவிட்டது. மாலை மூன்று மணிக்கு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்திற்கும் அவசரகால விடுமுறை அளிக்கப்பட்டது.

அவள் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, பேருந்துகள் எதுவும் வரவில்லை. முச்சக்கர வாடகை வாகனங்களும் கிடைக்கவில்லை. மழை தன் ஆட்டத்தை ஆரம்பிக்க துவங்கியிருந்தது.

அவள் விசிறி அடிக்கும் மழையில் நனைந்தபடி கொஞ்ச நேரம் வடக்கு வீதியின் பேருந்து நிறுத்தத்தில் நின்றாள். குளிரில் நடுங்கினாள். அவனுக்கு அழைக்கலாமா என்று அலைபேசியை எடுத்தாள். ஆனால், சுயமரியாதையும், அப்பாவின் முகமும் தடுத்தன.

திடீரென அவளுக்கு முன்னால் அவனின் இருசக்கர வாகனம் வந்து நின்றது.

தலைக்கசவ கண்ணாடியை உயர்த்தியவன், "ஏறு சீக்கிரம்!" என்றான் உரத்த குரலில்.

"நீ எப்படி இங்க?"

"கேள்வி கேட்காம ஏறு! இன்னும் அரை மணி நேரத்துல எல்லா சாலைகளும் ஐந்தடி வெள்ளத்துல மிதக்கும்றாங்க. அப்புறம் வீட்டிக்குப் போக முடியாது."

அவள் யோசிக்கவில்லை. எந்த ஊர் பேச்சுக்குப் பயந்து அவனைத் தவிர்த்தாளோ, அதே ஊர் நடுவே, கொட்டும் மழையில் அவனின் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்து, அவனை இறுகக் கட்டிக்கொண்டாள்.

மழைநீரோடு அவளது கண்ணீரும் சேர்ந்துகொண்டது.

"என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியலடா!" என்று அவனது முதுகில் முகம் புதைத்து அழுதாள்.

அவன் வாகனத்தை ஓட்டிக்கொண்டே சிரித்தான். "நான் தான் அன்னைக்கே சொன்னேனே. ஊர் பேச்சுங்கிறது காதல் நெருப்புக்கு தண்ணி இல்லை, அது நெய்! நாம விலகி இருக்க நினைச்ச பத்து நாளும், என் மனசுக்குள்ள நீ மட்டும்தான் இருந்த."

"ஆமாம்டா! நான் தப்பு பண்ணிட்டேன். ஊர் என்ன வேணா பேசட்டும். எனக்கு நீ வேணும்!"

அவர்களின் இருசக்கர வாகனம் அவளின் வீட்டை நெருங்கியது. வாகனத்தின் சத்தம் கேட்டு அவளது அப்பா வீட்டிற்கு வெளியே வந்தார்.

மழையில் நனைந்தபடி அவளும் அவனும் வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவன் அவளது கையைப் பிடித்துக்கொண்டிருந்தான். இந்த முறை அவள் கையை விலக்கிக்கொள்ளவில்லை.

அவளது அப்பா கோபத்துடன் பார்த்தார். "என்ன கண்ணு இது? உன்னை நான் என்ன சொன்னேன்? ஊர்ல எல்லாரும்..."

அவன் குறுக்கிட்டான். "ஐயா! ஒரு நிமிஷம் நான் பேசுறதைக் கேளுங்க."

அவர் அமைதியானார்.

"நீங்க உங்க பொண்ணோட எதிர்காலத்தைப் பத்தியும், ஊராரோட பழிச்சொல்லைப் பத்தியும் பயந்தது நியாயம்தான். ஆனா, அந்தப் பயத்தால எங்களை பிரிக்க நினைச்சீங்க பாருங்க. அதுதான் தப்பு."

"என்னப்பா தத்துவமா பேசுற?"

"இல்லை ஐயா! இதுதான் அறிவியலும் இலக்கியமும் சொல்றது. ஒரு நெருப்பை அணைக்க நெய்யை ஊத்துனா என்ன ஆகும்? தீ வீறிட்டு எரியும். அதே மாதிரிதான், ஊர் பேசுதுன்னு நாங்க விலகி இருந்த இந்த பத்து நாளும், எங்களுக்குள்ள இருந்த காதல் இன்னும் பல மடங்கு அதிகமாகி இருக்கு. இனிமே நாங்க ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்கவே முடியாதுங்கிற அளவுக்கு அந்த நெய் எங்க காதலை எரிய வச்சிருச்சு."

அவர் அவனையும், அவனது கையை உறுதியாகப் பற்றியிருந்த தன் மகளையும் பார்த்தார். அவளின் கண்களில் பயமில்லை; ஒரு தெளிவும், உறுதியும் மட்டுமே இருந்தது.

அவருக்குப் புரிந்தது. தான் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. ஊர் பேச்சுக்கு பயந்து ஒதுக்கி வைக்க நினைத்தால் காதல் அழியும் என்று நினைத்தது எவ்வளவு பெரிய அறியாமை!

அவர் ஒரு பெருமூச்சு விட்டார். "சரி! உள்ள வந்து துண்டை எடுத்து தலை துவட்டுங்க ரெண்டு பேரும். அப்புறம் உங்க வீட்லேர்ந்து வந்து சீக்கிரம் பொண்ணு கேட்கிற வழியைப் பாரு!" என்று சொல்லிவிட்டு உள்ளே நடந்தார்.

வெளியே மழைத்துளிகள் மேகமே வெடித்துக் கொட்டுவது போலத் தங்கள் தீவிரத்தைத் தொடங்கியிருந்தன, அதுவரை காதல் தீயால் தகித்துக் கொண்டிருந்த அவர்களைத் தணிவிப்பதைப் போல.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment