திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 69
பழியில் கரையும் பொழுதுகள்
திருவாரூரின் அக்டோபர் மாதத்து
மாலைப் பொழுதுகளுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது மழையும் இல்லாமல், வெயிலும் இல்லாமல்
ஒருவிதமான அனிச்சையான மௌனத்தைப் போர்த்திக்கொள்ளும்.
பழைய பேருந்து நிலையம் அருகே
இருந்த பூம்பொழில் சிற்றுண்டியகத்தின் மூலையில், சுவரோரம் இருந்த மேஜையில் அவள் அமர்ந்திருந்தாள்.
அவளது அலைபேசித் திரையில் எண்மக் கடிகாரம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருந்தது. அவன்
வருவதாகச் சொன்ன நேரம் கடந்து விட்டிருந்தது.
கையிலிருந்த பனிக்கூழ் கோப்பையைச்
சிறுகரண்டியில் எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள். அவளது மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.
ஆறு மாதங்கள் இருக்கும்.
சரியாக இன்றோடு 184 நாட்கள்.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதே
சிற்றுண்டியகத்தில் இதே மேஜையில்தான் அவன் அவளது கைகளைப் பற்றிச் சொன்னான், "அமெரிக்காவுக்கு
ஒரு மென்பொருள் செயல்திட்டம் தொடர்பாக ஆறு மாசம் போறேன். என் அலுவலகத்துல சில சட்டப்பூர்வ
நடைமுறைகள் முடியணும். அதுவரைக்கும் வீட்ல நம்ம கல்யாண விஷயத்தைப் பேச முடியாது. ஆனா
ஒன்னு மட்டும் நினைச்சுக்கோ. அஞ்சாதே. நான் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன். திரும்ப
வந்ததும் முதல் வேலையா உன்னை கரம் பிடிப்பேன்."
அவன் கண்களில் இருந்த அந்தத்
தீவிரமான வெளிச்சத்தையும், அந்த அழுத்தமான நம்பிக்கையையும் பார்த்து அவள் சரி என்றாள்.
ஆனால், அவன் போன அடுத்த இரண்டாவது
மாதத்திலிருந்தே அலைபேசி அழைப்புகள் சுருங்கத் தொடங்கின. அனுப்பிய செய்திகளும் பதிலின்றிப்
போயின. கடந்த ஐந்து மாதங்களாக அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
இதற்கிடையில் ஊர் சும்மா இருக்குமா?
முதலில் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின்
மின்தூக்கியில் தொடங்கிய கிசுகிசு, அப்புறம் அலுவலக சிற்றுண்டியகம், பிறகு நண்பர்களின்,
உறவினர்களின் வாட்ஸ்அப் குரூ எனப் பரவியது.
"பார்த்தியா! அந்தப் பையன்
அமெரிக்கா போனதும் பொண்ணைக் கழட்டி விட்டுட்டான் போல!"
"அவனாவது இவளைக் கல்யாணம்
பண்ணிக்கிறதாவது? சும்மா ஏமாத்திட்டுப் போயிருக்கான்."
"இன்னும் அவன் வருவான்னு
காத்துட்டு இருக்கா. பாவம் பொண்ணு, லூசு மாதிரி நம்பிக்கிட்டு இருக்கு!"
இப்படி தினம் தினம் ஏதோ ஒன்றைக்
கேட்டு கேட்டு அவள் காதுகள் வெந்தப் புண்ணில் வேல் பாயும் நிலைமைக்கு ஆளாகி விட்டது.
ஆனாலும், இதையெல்லாம் அவள் தாங்கிக்கொண்டாள்.
அவன் சொன்ன அந்த ஒரே ஒரு வார்த்தையான, "அஞ்சாதே!" அவள் மனதில் திரும்ப திரும்ப
எதிரொலித்துக் கொண்டே இருந்தது, அவள் மனக்காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டே இருந்தது.
அவன் வருவான், நிச்சயம் வருவான்
என்ற ஒரே ஒரு மெல்லிய நம்பிக்கைதான் அவள் இதயத்தைத் தாங்கிப் பிடிக்கும் தூணாக இருந்தது.
"ஊர் ஆயிரம் பேசட்டும். அவன் வந்ததும் எல்லாரும் வாயை மூடுவாங்க." என்று
தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
ஆனால், நாட்கள் நகர நகர அவள்
நம்பிக்கை மெல்ல மெல்லத் தேயத் தொடங்கியது.
"ஏய்! இன்னும் எவ்வளவு நேரம்
அந்த போனையே பார்த்துட்டு இருப்ப?" எதிரே வந்து உட்கார்ந்தாள் அவளது நெருங்கிய
தோழி. கொஞ்சம் எதார்த்த குணம் கொண்டவள். சற்றே நவீன எண்ணங்கள் கொண்ட பெண்ணும் கூட.
"அவன் என்னை இந்த இடத்தில
சந்திக்கிறதா சொன்ன நாள் இன்னைக்கு. ஆனா போன் பண்ணா அஞ்சு மாசமாவே ஸ்விட்ச் ஆப்னு வருது."
அவளின் குரல் நடுங்கியது.
"அவன் உன்னை மறந்தாச்சு!
இல்லன்னா கைவிட்டாச்சு! ஊர்ல உன்னைப் பத்தி எவ்வளவோ பேசுறாங்க. அவன் கைவிட்டுட்டான்,
இவ ஏமாந்துட்டான்னு எல்லாரும் கேலி பேசுறாங்க. நீ இன்னும் அவனை நம்பி, அவனுக்காக இங்க
வந்து காத்துட்டு இருக்க?"
அவள் ஜன்னல் வழியே வெறித்துப்
பார்த்தாள். வெளியே லேசாகத் தூறல் போடத் தொடங்கியிருந்தது.
"அவன் வருவான்னு நம்பிதானே
நான் இத்தனை நாளா ஊர் பேசுற பழிச்சொல்லையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருந்தேன்? ஆனா, அவன்
சொன்ன நேரத்துக்கு வராம, என்னை இப்படி நடுவழியில தவிக்க விடுறானே. அதை நினைக்கும்போதுதான்
எனக்கு அசிங்கமா இருக்கு. அவன் அஞ்சாதேன்னு
சொன்னதை நம்பி நான் இந்த ஊர் சொன்ன பழிச்சொற்களையெல்லாம் எதிர்கொண்டேன். ஆனா,
அவனே என்னை மறந்தது போல இருக்கும்போது, இந்த ஊர்மக்கள் என்னைச் சுட்டிக்காட்டிச் சிரிக்கும்
அந்த சிரிப்புக்கு முன்னாடி, நான் வெட்கப்பட்டுத் தலைகுனியாம வேற என்ன பண்ண முடியும்?
என் மானமும் நாணமும் என்னை உறுத்துதே!"
தோழி அவள் கைகளைப் பற்றிக்கொண்டாள்.
"திருவள்ளுவர் ஒரு குறள் சொல்லியிருப்பார் தெரியுமா?
"அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை." (குறள், 1149)
அப்படின்னு. அதாவது, அஞ்சாதேன்னு
சொன்னவன், ஊரே பார்க்கும்படி உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டான். அப்படிப்பட்டவன்
இன்னும் வராம இருக்கும்போது, இந்த ஊர் பேசுற பழிச்சொல்லுக்கு நீ வெட்கப்படாமல் இருக்க
முடியுமா? முடியாதே! அப்படின்னு தலைவி ஒருத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவா. நீ இப்போ
அதே நிலைமையிலதான் இருக்க!"
"அப்போ, நான் ஏமாந்துட்டேனா?"
அவளின் குரலில் உடைந்த பிம்பங்களின் அதிர்வு.
அதே நேரம்.
"இல்லை!"
பின்னால் இருந்து ஒரு கம்பீரமான
குரல் கேட்டது. அவளும் அவளது தோழியும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கே அவன்
நின்றுகொண்டிருந்தான்!
அவன் கையில் ஒரு கட்டு. அதில்
பெரிய காயங்கள். அவனது பயணப் பை கிழிந்து போய், ஆடைகளில் அழுக்கு. அவன் முகம் சோர்விலும்
தாடியிலும் மூழ்கியிருந்தது. ஆனால் அவனது கண்களில் அதே பழைய வெளிச்சம்!
"ஐயோ! என்னடா இது? என்னாச்சு
உனக்கு?" அவள் அதிர்ந்து போய் எழுந்து நின்றாள்.
அவன் மூச்சுவாங்கியபடி அவளது
மேஜைக்கு அருகில் வந்தான்.
"என்னை மன்னிச்சிடு. மூணு
மணி நேரம் தாமதம்."
"அது இருக்கட்டும். நீ ஏன்
இப்படி இருக்குறே?"
"அலுவலகச் செயல்திட்டம்
தொடர்பா அமெரிக்கா போன ஒரு மாசத்துல ஒரு பெரிய மகிழ்வுந்து விபத்து. என் மகிழ்வுந்து
தலைகீழா கவிழ்ந்துடுச்சு. போன் உடைஞ்சு போச்சு. மருத்துவமனையில அஞ்சு மாசமா கோமா நிலையில
இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி கண் முழிச்சதும் என் மனசுல இருந்த ஒரே விஷயம்.
இன்னைக்கு மாலை 4 மணிக்கு நீ பூம்பொழில் சிற்றுண்டியகத்துல காத்துக்கிட்டு இருப்பேங்ற
அந்த ஒரு விசயம் மட்டும்தான். எனக்கு வேறு எதுவும் தோணல. கடவுச்சீட்டை மட்டும் எடுத்துட்டு,
எந்த விமானம் கிடைக்குதோ அதுல ஏறி, சென்னை விமான நிலையத்துல இறங்கி, மகிழ்வுந்து பிடிச்சு
நேரா இங்க வந்துட்டேன்!" இதைச் சொன்னபடி தன் பையிலிருந்து ஒரு கசங்கிய ரோஜாவை
எடுத்தான். "என்னால இந்த நெருக்கடியிலயும் அவசரத்துலயும் வேற எதையும் வாங்க முடியல
இந்த ரோஜாவைத் தவிர. என் சூழ்நிலை அப்படியாச்சு. நான் முழுவதுமா என்னிலை இழந்துட்டேன்.
நான் உன்கிட்ட சொன்ன வார்த்தை பொய் இல்லை! அஞ்சாதேன்னு சொன்ன நான் உன்னை ஒருநாளும்
கைவிட மாட்டேன்!"
அவள் அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும்
உறைந்துபோனாள். அவளுக்கு வார்த்தைகள் எதுவும் தோன்றாமல் அப்படியே உறைந்து போனாள். அதைப்
புரிந்து கொண்ட அவளது தோழி புன்னகையோடு பின்னகர்ந்தாள்.
அவன் அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டான்.
"ஊர் என்னென்னவோ பேசியிருக்கும்னு எனக்குத் தெரியும். நான் ஏமாத்திட்டேன்னு கண்டிப்பா
பழி சொல்லி தூற்றியிருக்கும். நீயும் இவன் வராம நம்மள மானபங்கப்படுத்திட்டானேன்னு நாணிக்
குறுகிப் போயிருப்ப. ஆனா, அது எல்லாத்தையும் உடைக்கத்தான் உன் முன்னே இப்போ உயிருடன்
வந்து நிக்கிறேன்.!"
அவள் அவன் நெஞ்சில் தலை சாய்த்துக்
கொண்டாள். அவளால் இப்போதும் கூட எதுவும் பேச முடியவில்லை. பேச முடியாத வாய்க்காக அவளது
கண்கள் பேசிக் கொண்டிருந்தன முத்து முத்தாக உதிரும் கண்ணீர்த் துளிகளால். அதே போழ்தில்
வெளியே மழை இப்போது பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. அந்தச் சிற்றுண்டியகத்தின் வெளிப்புற
கண்ணாடிகளில் மழைத்துளிகள், அவள் கன்னத்தில் வழியும் கண்ணீரைப் போலவே முத்து முத்தாக
இறங்கின.
இத்தனை நாளாக அவளை உறுத்திக்கொண்டிருந்த
அந்த நாணமும், ஊரின் அலரும் அந்த நிமிடத்தில் இருந்த இடம் தெரியாமல் அப்படியே காற்றில்
கரைந்துபோயின.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment