11 Oct 2026

கிசுகிசு புராணம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 63

கிசுகிசு புராணம்

இரவு.

மணி பத்து பத்து.

மேஜையின் ஓரத்தில் கிடந்த அவன் அலைபேசி வெளிச்சத்தைக் கக்கியது. திரையில் மிளிர்ந்த்து அவள் பெயர்.

அவளிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் குரல் பதிவு. அப்பதிவின் கால அளவு இரண்டு நிமிடங்கள் முப்பத்து நான்கு நொடிகள்.

அவன் அவளது பதிவுக்குரலை இயக்கினான். சற்றுத் தயக்கமும், அதற்குள் ஒளிந்திருக்கும் ஒரு மெல்லிய குற்ற உணர்ச்சியும் கலந்த குரல் அது.

"இன்னும் தூங்கலையா? நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். இன்னைக்கு மதியம் நம்ம ஆபீஸ் கேன்டீன்ல உனக்கும் எனக்கும் என்னன்னு ஆளாளுக்குக் கேட்டாங்க. நாம ரெண்டு பேரும் ஒரு ப்ராஜெக்ட்ல இருக்குறது, சேர்ந்து காபி குடிக்கிறது, சினிமாவுக்குப் போறதுன்னு எல்லாம் அவுங்க பேச்சுல அடிபடுது. அதையெல்லாம் கேட்க கேட்க எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஆயிடுச்சு. நான் என்னென்னவோ சொல்லி சமாளிச்சுட்டேன். ஆனா, ஆபீஸ் புல்லா நம்மளைப் பற்றித்தான் பேச்சாம். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நம்மளைப் பத்தி ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சா என்ன ஆகுறது?"

அந்தக் குரல் பதிவு முடிந்தது.

அவன் நாற்காலியில் பின்புறமாகச் சாய்ந்தான். ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த திருவாரூர் இரவின் ஈரக்காற்று அவன் முகத்தில் அறைந்தது.

அவள் பயப்படுகிறாள். ஆனால், அவனுக்குள் அந்தப் பயம் துளியும் இல்லை. மாறாக, ஏதோவொரு சிலிர்ப்பு. காலமெல்லாம் வறண்ட நிலத்தில் பெய்த முதல் பெருமழை போன்றதொரு கிறக்கம்.

அவன் உடனே ஒரு குரல் பதிவைப் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் அனுப்பத் தொடங்கினான்.

அவன் குரல் சற்று மெலிதாக, ஆனால் ஆழ்ந்த அதிர்வுடன் ஒத்தது.

"நீ எதைக் நினைத்துப் பயப்படுகிறாயோ, அதுதான் எனக்கு இருக்கிறதிலேயே மிகப்பெரிய சந்தோசம் தெரியுமா? ஊர் நம்மைப் பற்றிப் பேசுகிறது என்கிறாயே, அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் இந்த உலகத்தில் இருக்க முடியுமா என்ன?

நம் காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? என்றுதான் நான் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன். நாம் இன்னும் நம் காதலை நேரில் ஒப்புக்கொள்ளவில்லை. நீ எனக்குக் கடிதம் எழுதவில்லை, நானும் உன்னிடம் மூன்று சொற்களைச் சொல்லவில்லை. ஆனால், நம்மைப் பற்றி ஊரே பேசத் தொடங்கிவிட்டது.

நமக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, காதலும் முழுமையாகப் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. ஆனால், ஊர் நம்மை இணைத்து வைத்துப் பேசுகிறது பாரு. அந்தப் பேச்சு, நமக்குக் கிடைக்காத நம் காதலை, நேரில் அனுபவித்து அடைந்ததைவிட பல மடங்கு அதிகமான இன்பத்தைத் தருகிறது அல்லவா?

இப்பொழுது சொல். நம் ஆபீஸ்ல இருக்கிறவங்க உன்னிடம் அப்படிச் சொன்னபோது, உனக்குள் உண்மையில் என்ன ஓடியது? பயம் மட்டும்தானா? இல்லை. ஒரு சின்ன பெருமிதம்? ஆமாம், நாங்க அப்படித்தான் என்று சொல்ல உனக்குள்ள ஒரு துடிப்பு இருந்ததுதானே?"

இவன் குரல் பதிவு அவளது அலைபேசியைச் சென்றடைந்த அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு அவளிடமிருந்து அழைப்பு வந்த்து.

"சீ! லூசு மாதிரி பேசாதடா! ஆபீஸ்ல எல்லாரும் நம்மைப் பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க. நமக்கு வேலை முக்கியம். இப்படி எல்லாரும் பேசினால், நாம்ம வேலை பார்க்கிறோமா இல்லையாங்ற சந்தேகம் வந்து வேலையை விட்டுத் தூக்கிட்டா என்ன பண்றது?"

"தூக்குனா தூக்கட்டுமே! உனக்குத் தெரியுமா? நான் காலையில் ஆபிஸ்க்கு வரும்போதெல்லாம் உன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு வருவேன். நீ வேலை பார்க்கிற அந்த ஸ்டைல், நீ பேசுற பேச்சு, நீ சிரிக்கிற சிரிப்பு என எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், நாம் இருவரும் நேரில் பேசிக்கொள்ளும் நேரமோ மிகக் குறைவு. நம் மனதுக்குள் என்ன ஓடுகிறது என்பது நமக்குத் தெரியும். ஆனா, உலகத்தின் ஆர்ப்பாட்டம் என்பது காதலர்களுக்கு ஒரு மேடை மாதிரி.

என் அம்மா ஒருமுறை என்னிடம் கேட்டார், ஏன்டா இப்போல்லாம் அப்செட் ஆன மாதிரி இருக்க, என்ன விஷயம்? என்று. நான் அவரிடம் எதையும் சொல்லவில்லை. ஆனால், என் பாக்கெட்டில் நீ மறந்து வைத்துவிட்டுப் போன ஹேர்பின் ஒண்ணு இருக்கு. அதைத் தொட்டுக் கொள்ளும் போதெல்லாம், நீ எனக்கு அருகில் இருப்பது போன்றதொரு பிரமை.

ஊர் நம்மைப் பற்றிப் பேசுகிறது என்றால், நம் இருவரின் நிழல்களும் இந்தச் சமூகத்தின் கண்களில் பட்டுவிட்டன என்று அர்த்தம். ஒரு காதலன் எதை விரும்புவான்? தன் காதலி தனக்குத்தான் என்று உலகம் கை நீட்டிக் காட்ட வேண்டும் என்றுதானே துடிப்பான். இன்று ஆபிஸ்ல இருக்குறவங்க அதைக் காட்டியிருக்கிறார்கள். நாளை ஊர் காட்டும். அப்புறம் இந்த உலகமே நம்மை இணைத்து வைத்துப் பேசும் அந்தத் தருணம் இருக்கிறதே. அதுதான் காதலின் உச்சம்!"

அவன் பேச பேச அவள், அலைபேசியைக் காது அருகில் வைத்துக் கொண்டு, கம்பளிப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டாள். அவள் கன்னத்தில் லேசான வெட்கச் சிவப்பு ஏறியிருந்தது. "உனக்கு எப்போதும் தத்துவம்தான்டா. எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது. நம்ம குடும்பங்களப் பத்தி உனக்குத் தெரியும்தானே? ஊரில் யாராவது காதுக்குப் போனால்..."

"போகட்டும்! பேசட்டும்!" அவன் குரல் இப்போது இன்னும் அழுத்தமாக மாறியது.

"ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் உண்மையானதாக இருந்தால், அந்த ரகசியத்தை நீண்ட நாள் மூடி வைத்திருக்க முடியாது. அது ஒரு பூவின் வாசனையைப் போன்றது. நீ எவ்வளவுதான் பாக்கெட்டுக்குள் போட்டுக் பொத்திப் பொத்தி வைத்தாலும், அதன் நறுமணம் வெளியே வந்துதானே தீரும்?

இப்போது ஊர் நம்மைப் பற்றிப் பேசுகிறது என்றால், நம் காதலின் நறுமணம் இந்த ஆபீஸ் சுவர்களைத் தாண்டி வெளியேறிவிட்டது என்று அர்த்தம். யோசித்துப் பார். உன்னையும் என்னையும் சேர்த்து வைத்து உங்கிட்ட கேட்ட போது, உனக்குக் கோபம் வந்ததா? இல்லை. ஒருவேளை இவங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்லையே என்று அவள் ஒதுங்கிப் போயிருந்தால் உனக்குக் கொஞ்சமாவது ஏமாற்றம் இருந்திருக்குமா, இல்லையா? உண்மையைச் சொல்."

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அவளது பெருமூச்சு அலைபேசியின் வழியே அவனின் காதுகளில் விழுந்தது.

"ஆமாம்!" என்று மிக மெலிதாகச் சொன்னாள் அவள். அத்துடன், "எல்லாரும் நம்மைப் பத்திப் பேசும்போது, ஏதோ ஒரு விதத்தில் அது உண்மை ஆகிவிடக் கூடாதா என்ற ஒரு சிறு ஆசையும் மனசுக்குள்ள ஓடியது. அதுதான் பயமாகவும் மாறியது." என்றாள்.

"அவ்வளவுதான்!" அவன் உற்சாகமாக மேலும் தொடர்ந்தான், "அந்த பயமும், அந்த சிலிர்ப்பும் கலந்த கலவைதான் உண்மையான காதல். சாதாரணமாக ஒருவன் ஒருத்தியைக் காதலிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், உலகமே அவர்களை விரல் நீட்டிக் காட்டி, இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சுத்துறாங்கப்பா என்று சொல்லும்போது, அந்த உறவுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது.

நாம் பேசிக்கொள்ளாத வார்த்தைகளை, இந்த ஊர் நமக்காகப் பேசுகிறது. நாம் அனுபவிக்காத அந்தத் தருணங்களை, ஊரே நமக்குக் கற்பனை செய்து தருகிறது. இதைவிட நமக்கு என்ன வேண்டும்?

இப்போ தூங்கு. நாளைக்குக் காலைல ஒன்பது மணிக்கு ஆபீஸ்ல பார்க்கலாம். ஆபீஸே நம்மள பார்க்குதா இல்லையான்னு பார்க்கலாம். யார் என்ன பேசினாலும் கவலைப்படாதே. நாம் இருவரும் நாமாக இருக்கிறோம். ஊர் பேசட்டும். அந்தப் பேச்சுதான் நமக்குக் காதல் பொக்கிஷம்."

மறுநாள் காலை, விளமல், தியாகராய நகரில் அமைந்திருக்கும் அவர்களது அலுவலகம்.

வழக்கமான பரபரப்பு.

அவள் தன் கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அவளது தோழியும்  செயல்திட்ட பிரிவு மேலாளர் ஒருவரும் கிசுகிசுத்துக் கொள்வது கண்ணில் பட்டது. பேசிக் கொண்டே அவளது தோழி அவளைப் பார்த்து ஒரு குறும்புச் சிரிப்பு சிரித்தாள்.

அவளுக்கு இதயம் வேகமாகத் துடித்தது. ஆனால், முகத்தில் நேற்று இருந்த அந்தப் பயத்திற்குப் பதிலாக ஒரு புதிய பூரிப்பு இருந்தது.

அவள் நேராக உள்ளறைக்கு நடந்தாள். அங்கே அவன் ஒரு கையில் கோப்புடனும் மறுகையில் அலைபேசியுடனும் நின்று கொண்டிருந்தான். அவள் அவனைக் நெருங்கியதும், அவன் கண்களில் ஒரு மின்னல் வெட்டியது.

அவனுக்கு அருகில் வந்ததும், அவள் மெலிந்த குரலில் கேட்டாள், "இன்றைக்கு ஊர் இன்னும் கொஞ்சம் அதிகமாவே பேசும் போலிருக்கே. என்ன செய்யப் போறோம்?"

அவன் கோப்பை மேஜை மேல் வைத்துவிட்டு, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான். "பேசட்டும். வள்ளுவர் அன்றைக்கே எழுதி வைத்து விட்டார்,

"உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து."                (குறள், 1143)

அப்படின்னு. ஊரறியப்போகும் இந்தத் கிசுகிசுப்பு இருக்கே, அது காதலை, இப்போதே கையில் பிடித்துவிட்டது போன்றதொரு பரவசத்தைத் தரட்டும்!"

அவள் அவனைக் முறைக்க முயன்றாள், ஆனால் அதற்குள் அவளது உதடுகள் தாமாகவே புன்னகையில் விரிந்தன. ஆடி அசைந்து படிப்படியாக முன்னேறும் திருவாரூர் ஆழித்தேரின் அழகைப் போல அவர்களின் காதல் காற்று இப்போது அந்த அலுவலகம் கடந்து வெளியுலகிற்கும் மெல்ல பரவத் தொடங்கியிருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment