12 Oct 2026

களைப்படையாத கிசுகிசு சங்கம்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 64

களைப்படையாத கிசுகிசு சங்கம்

இரண்டு மாதங்களுக்கு முன்பு.

மழை பெய்து நின்ற ஈரம்.

திருவாரூர் தெற்கு வீதி பேருந்து நிறுத்தம்.

மழைக்கு ஒதுங்கிய கூட்டத்தின் நெரிசல்.

அவன் மழையில் நனைந்த ஆடையுடன் அவசரமாகப் பேருந்துக்காகக் காத்திருந்தான்.

அவள் அதே நிழற்குடையின் கீழ், தன் குடையை மூட முயன்று முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள்.

"கொடுங்க. நான் மடக்கித் தர்றேன்."

அவன் கை நீட்டினான்.

அவள் தயங்கினாள்.

அந்தத் தயக்கம்தான் அவளை அவனிடம் இழுத்துப் போட்டது.

கடைசியில் குடை மடக்கப்பட்டது.

மழையின் ஈர வாடையுடன் அங்கே ஒரு வாஞ்சையும் சேர்ந்து கொண்டது.

அடுத்தடுத்த வாரங்களில் அது காதலாக மாறியது.

காதலாக மாறிய வேகத்திலேயே அவளது வீட்டுக்குத் தெரியவந்தது.

வீட்டுக்குத் தெரியவந்த வேகத்தில் அது ஊரெல்லாம் பரவியது.

திருவாரூருக்கே உரிய சாபக்கேடு என்னவென்றால், இங்கு யாருக்கும் எந்தக் கவலையும் இருக்காது. அடுத்தவர்களின் கவலைதான் இங்கே பெரிய பொழுதுபோக்கு. ஒவ்வொரு வீட்டின் சமையற்கட்டிலும் கரண்டியைத் தட்டிக் கொண்டே அவளைப் பற்றி விவாதித்தனர், "என்னமோ சொல்றாங்க, அந்தப் பையனோட ரோட்ல போனாளாமே!"

அந்தப் பேச்சுக்கள் அவளைக் குத்திக் கிழித்தன.

ஆனால், அவனுக்கு அவை உற்சாகத்தைத் தந்தன.

இதோ,

இன்று.

திருவாரூரின் மேல வீதி.

மாலை ஐந்தரை மணி வெயில்.

அந்த வெயில் சாலைக் கடையில் நின்றுகொண்டிருந்தோர் மீது பட்டுத் தெறித்துக் கொண்டிருந்தது.

"டீ. ஸ்பெஷல். ரெண்டு."

அவன் சொன்னான்.

அவனுக்கு எதிரில் நின்றுகொண்டிருந்தாள் அவள்.

அவள் முகத்தில் ஓர் அழுத்தம். மனதில் இருந்த அழுத்தம் அப்படியே முகத்தில் பிரதிபலித்தது. அவளுடைய அந்த அழுத்தம் நிறைந்த முகம்தான் அவனுக்கு அவளிடம் பிடித்த முதல் விஷயம்.

அவளுக்கு அவனைப் பிடிப்பதற்கான காரணத்தை அவளே பலமுறை யோசித்துப் பார்த்திருக்கிறாள். கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை. அதுதான் காதலின் முதல் விதி. காரணமின்றித் தொடங்குவதுதான் காதல்; காரணம் தேடித் தோற்பதுதான் வாழ்க்கை.

"சொல்லுங்க மிஸ்டர்! என்னை ஏன் திடீர்ன்னு இங்க வரச் சொன்னீங்க? அக்கம் பக்கம் எல்லாரும் பாக்குறாங்க. நம்ம ஊருக்கு வேற வேலை கிடையாது. நம்மளைப் பத்தி பேசுறதுதான் அவங்களோட முழு நேர வேலை." அவளது குரலில் லேசான நடுக்கமும், அதை மறைக்க முயலும் கோபமும் கலந்திருந்தன.

அவன் முகத்தில் ஒரு மெல்லிய, அலட்சியமான சிரிப்பு. "பேசட்டுமே. பேசலைன்னா அப்புறம் ஊருக்கு எதுக்கு மைக் செட்? நம்ம காதல் உயிரோடு இருக்குன்னா, அதுக்குக் காரணமே இந்த ஊர்தான். அவங்க தூத்துற அலர்தான் இந்தச் செடிக்கு உரம், தண்ணி, வெயில் எல்லாமே!"

அவள் முறைத்தாள். "என்ன தத்துவம் இது? ஊர்ல நாலு பேரு பேசுறதால நமக்கு என்ன சந்தோஷமா கிடைக்குது? போன வாரம் என் அத்தை நம்மளை பேருந்து நிறுத்தத்துலல பார்த்ததை எங்க அம்மாகிட்ட போட்டு உடைச்சிட்டாங்க. வீட்ல மூணு நாள் சாப்பாட்டைப் புறக்கணிச்சு, ராத்திரி மட்டும் வெறும் ரசம் சாதம். இதுதான் உரமா?"

அவன் தேநீரை அவளிடம் நீட்டியபடி சொன்னான், "யோசிச்சுப் பார். ஒருவேளை நம்மளை யாருமே கண்டுக்கலைன்னு வச்சுப்போம். நீயும் நானும் பூங்காவுல உக்காந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டா யாருக்கு என்ன? அதுல என்ன திகில் இருக்கு? உலகமே நம்மளைத் தப்புன்னு விரல் நீட்டும்போது, நாம ரெண்டு பேரும் கை கோர்த்து நிக்கிறோமே. அதுதான் காதலின் விளையாட்டு!"

"உனக்குக் கொஞ்சம் கூட பயமா இல்ல? எனக்கு ஒரு மாதிரி எரிச்சலாவும் பயமாவும் அசிங்கமாவும் இருக்கும். நம்ம தனிப்பட்ட வாழ்க்கை ஏன் மத்தவங்களுக்குப் பொதுச் சொத்தாகணும்? நம்ம சிரிக்குறது, பேசுறது, எங்கேயாவது டீ குடிக்கிறது. இதுல அவங்களுக்கு என்ன வந்துச்சு?"

அவன் லேசாகப் புன்னகைத்தான். தன் கையிலிருந்த தேநீர்க் குவளையைக் கையில் சுழற்றினான். "நீ சொல்றது லாஜிக்கல். காதல்ல லாஜிக் வேலை செய்யாது. யோசிச்சுப் பார். ஒருவேளை ஊரு நம்மளைப் பத்திப் பேசவே இல்லைன்னு வச்சுப்போம். யாரும் கண்டுக்கலை. வீட்ல சம்மதிச்சிட்டாங்க. சொந்தக்காரங்க வந்து ஜோடி பொருத்தமா இருக்குன்னு கை தட்டி ஆசீர்வாதம் பண்றாங்க. கல்யாணம் நடக்குது. தாலியைக் கட்டுறோம். அப்புறம் என்ன நடக்கும்?"

அவள் அவனைக் திரும்பிப் பார்த்தாள். அவளது கண்கள் லேசாக விரிந்தன. உதட்டில் புன்னைகை அரும்பியது. "அப்புறம் என்ன? வழக்கம் போலத்தான். வாழ்க்கை வழக்கம் போல ஆகிடும்."

"வழக்கம். அதுதான் காதலின் மரணம். நம்ம காதலை உயிரோட வச்சிருக்கிறது யார் தெரியுமா? அந்தப் பாற்கடலில் விஷம் கலக்குற மாதிரி, நம்ம காதல்ல தினமும் வந்து விஷம் துப்புற அந்தக் கிசுகிசுதான்! இந்தக் கிசுகிசு மட்டும் இல்லன்னா, நம்ம காதலுக்கு என்ன அர்த்தம்? எப்பவுமே ஈஸியா கிடைக்கிற விஷயம் மேல யாருக்கும் ஆர்வம் இருக்காது. இப்போ பாரு. உன் வீட்டுல உன்னை திட்டுறாங்க, என் வீட்ல என்னை முறைச்சுப் பார்க்கிறாங்க, ரோட்ல போறவன் திரும்பிப் பார்க்கிறான். இதெல்லாம் சேர்ந்து நம்ம காதலை எவ்ளோ ஸ்பெஷல் ஆக்குது? நம்ம ரெண்டு பேர் உலகத்துக்கு எதிரா நிக்கிறோம்! இதுல ஒரு போருக்குச் செல்லும் வீராதி வீரனோட உணர்வு இருக்குல்ல?"

அவள் அவனைச் சற்று நேரம் முறைத்துப் பார்த்தாள். பிறகு மெல்லச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கோபம் போய் ஒரு விவரிக்க முடியாத நிம்மதி இருந்தது.

"நீ ஒரு ராஸ்கல்!"

"நன்றி! இதுதான் எனக்குக் கிடைக்குற ரொம்ப பெரிய விருது."

"ஆனாலும், நீ சொல்றதுல ஒரு சின்ன உண்மை இருக்குன்னு நினைக்கிறேன். அன்னைக்கு எங்க அம்மா நம்மளைப் பத்தி சொன்னப்போ, எனக்கு உன்னை விட்டுடணும்னுதான் தோணுச்சு. ரொம்ப பயந்துட்டேன். ஆனா, இரவு அறையில தனியா உக்காந்து யோசிச்சப்போ, நீ இல்லாம என்னால இருக்க முடியுமான்னு எனக்குள்ளே ஒரு கேள்வி வந்துச்சு. அந்த பயம்தான் உன்னை எனக்கு எவ்வளவு முக்கியம்னு உணர்த்திச்சு."

அவன் அவளது கையைப் பற்றினான். "பார்த்தியா? அதான் நான் சொல்றேன். இந்த ஊர் இல்லன்னா, நம்மளோட ஆழம் நமக்குத் தெரிஞ்சிருக்காது. அவங்க தூற்றட்டும். அவங்களோட அலர்தான் நமக்கு மலர் மாலை சூடப் போற நாளுக்கான அழைப்பிதழ்."

அவர்கள் அமைதியாகச் சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒரு பேருந்து மெலிதான வெளிச்சத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது.

"அப்புறம்?"

"சொல்லு."

"ஒருவேளை. கல்யாணத்துக்கு அப்புறமும் ஊர் பேசினா என்ன பண்றது?"

அவன் உரக்கச் சிரித்தான்.

"கல்யாணத்துக்கு அப்புறமா? அப்போ இன்னும் ஜாலியா இருக்கும்! அப்போ நம்ம காதலை அவங்க வேற மாதிரி பேசுவாங்க. பாருடா, கல்யாணம் பண்ணிட்டு எப்படி சுத்துறாங்கம்பாங்க. லவ் மேரேஜ் பண்ணிட்டு சண்டை போட்டா, தெரியலையா அப்பவேம்பாங்க. ஜாலியான பொழுதுபோக்கு நமக்கு இலவசமா கிடைச்சிட்டே இருக்கும். கவலையே படாதே! நம்ம காதலுக்கு எப்போதுமே கடைசி வரை ஒரு சிறப்பு உண்டு. அதுக்கு இந்த ஊரோட அலர்தான் பாஸ்போர்ட், விசா எல்லாம்!"

அவள் தன் கைகளால் அவனது கைகளை இறுக்க பிடித்துக் கொண்டாள். அந்தச் சிறிய கணத்தில், உலகமே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவும், ஆனால் அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் கவலைப்படாமல் இருப்பது போலவும் ஒரு பேரானந்தம் உருவானது.

வள்ளுவரின் வரிகள் அந்த மாலை நேரத்தில், ஒரு புதிய அர்த்தத்தோடு காற்றில் மிதந்து சென்றன,

"கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து."                           (குறள், 1144)

ஊரார் அலர் தூற்றட்டும்; காதல் வளரட்டும் என்பதைப் போல!

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment