திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 61
பழிதூற்றும் பாக்கியவான்கள்!
அக்டோபர் மழை தூறிக்கொண்டிருந்தது.
அந்த ஒதுக்குப்புறமான பேருந்து நிலையத்தில் அவனும் அவளும்.
அவள் கண்களில் வழ வழவென்று பயம்;
உதடுகள் நடுங்கின.
"நம்ம காதலைப் பத்தி அப்பார்ட்மென்ட்
புல்லா பேசிக்கிறாங்க. உங்கப்பாவோட பிரெண்ட்ன்னு ஒருத்தரு நேத்து நேர்ல வந்து எங்கம்மாவைப்
பார்த்துப் பேசி பயமுறுத்திட்டுப் போயிருக்காரு. வீட்லயும் ரொம்ப நெருக்கடியாக இருக்கு.
வெளியில தலைகாட்டவே முடியல. எனக்கு வாழவே பிடிக்கல. செத்துப் போயிடலாமான்னு இருக்கு."
என்றாள் குரல் கம்ம.
அவன் சட்டென்று நிமிர்ந்தான்.
அவனுடைய வழக்கமான எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் அசாத்தியப் புன்னகை அவன் முகத்தில்
மின்னியது.
"நீ ரொம்ப சாதாரணமா யோசிக்கிற.
இது பிரச்சனை இல்ல, வாய்ப்பு!" என்றான் அவன், அவள் கண்களை நோக்கியபடி.
"புரியல?"
"இப்போ ஊருக்கே நம்ம மேல
ஒரு கண்ணு. நம்ம காதலைப் பத்தி தப்பா பேசுறாங்க, பழி தூற்றுறாங்க, மைக் வச்சுப் பிரச்சாரம்
பண்ணாத குறைதான். சரியா?"
"ஆமா. அதேதான் இதை எத்தனை
நாள் தாக்குப் பிடிக்கிறது?"
"இப்போ பாரு. இயற்பியல்
விதி ஒன்னு இருக்கு. ஒரு பொருள் மேல விசை அதிகமா கொடுக்க கொடுக்க, அதுக்குச் சம்மா
எதிர்விசையும் உருவாகும். அதே போலத்தான் ஊரு
நம்மளைத் தப்பா பேசப் பேச, நம்ம காதலுக்கு இருக்கற பப்ளிசிட்டியும் பல மடங்கு அதிகமாகும்.
காதலிக்கிறவங்களுக்கு எதிரி எது தெரியுமா? அமைதிதான். யாருமே கண்டுக்காம விட்டுட்டா
வெளியில எடுத்து வெச்ச பனிக்கட்டி மாதிரி அதுவாவே கரைஞ்சு ஒண்ணும் இல்லாம போயிடும்.
ஆனா, ஊரே நம்மளைப் பத்தித் தப்பா பேசுதுன்னா, நம்ம காதல் அவ்வளவு பலமா இருக்குன்னு
அர்த்தம்."
"இதெல்லாம் சொல்றதுக்கு
சரிதான். நடைமுறைக்கு சரிபட்டு வருமா?"
"சரிபட்டு வராதுன்னா,
"அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்." (குறள், 1141)
அப்படின்னு திருவள்ளுவர் ஏன்
ஒரு சூத்திரத்தை எழுதணும் சொல்லு?"
"முதல்ல இயற்பியல், இப்போ
குறள். எனக்கு ஒண்ணுமே பிடிபடல."
"ஊர் அதாவது, இந்த அபார்ட்மென்டுகாரனுங்க
என்னதான் நம்மளைப் பத்தி எதிர்மறையா கத்தினாலும் கதறினாலும், அந்தப் பப்ளிசிட்டியே
நம்ம உயிரை இன்னும் கெட்டியா தாங்கிப் பிடிச்சிருக்கும். இது நம்ம காதலோட பாக்கியம்;
இதை இந்தச் சில்லறை ஊருக்காரங்க அதாவது இந்த அல்பதனமான அபார்ட்மென்ட்காரனுங்க புரிஞ்சுக்க
மாட்டாங்க!"
அவள் வாயடைத்துப் போய் அவனைப்
பார்த்தாள். "என்னடா இது? இந்த சூழ்நிலையிலயும் உன்னால் எப்படி இப்படிக் காமெடி
பண்ண முடியுது?"
"இது காமெடி இல்ல. ரியாலிட்டி
அதாவது உண்மை! ஊர் நம்மளைப் பத்திப் பேசப் பேசத்தான், நம்ம விஷயம் எல்லா இடங்களுக்கும்
ரொம்ப எளிமையா போகும். நாம்ம ரெண்டு பேருமே மேஜர், மைனர் இல்ல. அது அப்படியே போலீஸ்
ஸ்டேஷன் வரைக்கும் போனாலும் சரிதான், கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் போனாலும் சரிதான், கோர்ட்
வரைக்கும் போனாலும் சரிதான். நமக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைச்சிடும். ஆக, ஊரு
நம்ம காதலைப் பழிதூற்றத் தூற்றத்தான், நம்ம காதல் செத்துடக் கூடாதுன்னு நம்மோட ஆருயிர்
இன்னும் வைராக்கியத்தோட நின்னுட்டு இருக்கும். இது பல பேருக்குத் தெரியாது. அது நம்ம
பாக்கியம்! அதனால பழிதூற்றுற அபார்ட்மெண்ட்காரனுங்க ஒவ்வொருத்தனும் நமக்கான பாக்கியவான்கள்."
சரியாக அப்போது, மழை நின்றது.
மேகங்கள் விலகி, சூரிய ஒளி பளிச்சென்று படர்ந்தது.
அவள் முகத்தில் லேசான நம்பிக்கை
ஒளிக்கீற்றாய்ப் படர்ந்தது. அவள் தன் கையை நீட்டி, அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.
"சரி. அப்போ ஊர் வாயை மூட
வைக்க வேண்டாமா?"
"ஆணியையே பிடுங்கவே வேண்டாம்.
அதாவது, வாயை மூடவே வைக்க வேண்டாம்! அவங்களே மைக் போட்டு நம்ம கல்யாணத்துக்கு அனௌன்ஸ்மென்ட்
பண்ற வரைக்கும் வெயிட் பண்ணுவோம்!" என்றான் அவன்.
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment