திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 62
வதந்திகள் தரும் வசந்தகாலம்!
வெயில் கொளுத்தும் அந்த மதிய
வேளையில் தன் இருசக்கர வாகனத்தில் திருவாரூரின் விளமல் முக்கிய சாலையில் பச்சை விளக்கிற்காகக்
காத்துக் கொண்டிருந்தான் அவன். பின்னிருக்கையில் அவன் நண்பன் அமர்ந்திருந்தான்.
அவன் தோள்பட்டையை இறுகப் பற்றியபடி
நண்பன் கேட்டான், "டேய்! இந்தக் கொளுத்துற வெயில்ல நீ என்னடான்னா கூலா எந்த டென்சனும்
இல்லாம இருக்க. அங்க ஆபீஸ்ல என்ன பேசிட்டு இருக்காங்க தெரியுமா? அந்தப் பொண்ணும் நீயும்
ஒண்ணா சாப்பிடுறது, வெளியில போறதை வச்சு பெரிய பஞ்சாயத்தே வச்சுட்டாங்க. உன்னை உடனே
தூரத்துக் கிராமத்துக்கு டிரான்ஸ்பர் பண்ண்ணும்னு ரிப்போர்ட்டே போயிடுச்சு. டிரான்ஸ்பர்
ஆர்டர் தயாரா இருக்கு. உனக்குக் கொஞ்சமாவது பயம் இருக்கா?"
அவன் தன் திறன்பேசியை எடுத்து,
அதில் வாட்ஸ்ஆப்பில் அவள் அனுப்பியிருந்த செய்தியை நண்பனிடம் காட்டினான்.
"இந்த
ஊர்க்காரங்க பேசுறதைப் பத்தியோ, ஆபீஸ்ல பேசுறதைப் பத்தியோ நீ கவலைப்படாத. ஆனா ஒண்ணு
தெரியுமா? இவங்க எல்லாரும் சேர்ந்து நம்ம ரெண்டு பேரைப் பத்தியும் வம்பளந்து பேசுனதுதான்,
என் மனசுல என்ன இருக்குனு எனக்குச் புரிய வச்சது. இதெ காரணமாக வெச்சு உன்னை டிரான்ஸ்பர்
பண்ணா, நான் அங்கேயும் வருவேன்."
அதைப் படித்துப் பார்த்த நண்பன்
தன் புருவங்களை உயர்த்தினான். "என்னடா இது? நீதான் லூசா இருக்கென்னு நினைச்சா,
அது உன்னை விட லூசா இருக்கும் போல. கொஞ்சம் கூட இதுல இருக்குற ஆபத்து புரியுதா உங்களுக்கு?"
"நீ பயப்படுற மாதிரி இது
ஆபத்து கிடையாது. இது ஒரு பக்காவான வாய்ப்பு!"
நண்பன் எரிச்சலோடு தன் தலைமுடியைக்கோதிவிட்டுக்
கேட்டான், "என்னடா வாய்ப்பு? ஊரு உலகமே உன்னைத் தப்பாப் பேசுது; உன்னை ஊரை விட்டுத்
துரத்தப் பார்க்குது. இதுல என்ன வாய்ப்பு இருக்கு?"
"உனக்குத் திருக்குறள் தெரியுமா?
பள்ளிக்கூடத்துல மனப்பாடம் பண்ணி பரிட்சையில எழுதுனதோட சரி, அதோட அர்த்தம் யாருக்குமே
புரியறது இல்லை. குறிப்பா வள்ளுவர் சொன்ன அந்த ஒரு குறள் இருக்கு பாரு. அது இந்தச்
சூழ்நிலைக்கு அச்சு அசலா பொருந்தும்டா!"
"எந்தக் குறள்?"
"எந்தக் குறள்ன்னா,
"மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் ஊர்."
(குறள், 1142)
அப்படிங்ற குறள்."
நண்பன் சற்று யோசித்தான்.
"இதன் அர்த்தம் என்ன? மலர் போன்ற கண்களை உடையவளின் பெருமையை அறியாமல், இந்த ஊர்தான்
தவறான வதந்தியைப் பரப்பியதுனு அர்த்தம்தானே? இதுல என்ன பெருமை?"
அதே நேரத்தில் போக்குவரத்து சமிக்ஞையில்
பச்சை விளக்கு எரிய, வண்டியைக் கிளப்பிக் கொண்டே பேசினான் அவன், "அங்கதான் நீ
தப்பு பண்ற! அவளோட அருமை யாருக்குத் தெரியும்? நிச்சயம் உங்களுக்குத் தெரியாது. ஆனா,
எனக்குத் தெரியும்! ஆனா, அவகிட்ட என் காதலைச் சொல்ல எனக்கு ஒரு சின்னத் தயக்கம் இருந்தது.
ஒருவேளை நோ சொல்லிட்டா என்ன பண்றதுங்கிற பயம். அந்த நேரத்துலதான் இந்த ஊர்க்காரங்களும்
ஆபிஸ்ல இருக்குற பக்கிப் பன்னாடைகளும் அலர் கிளப்புனாங்க. அதாவது, இவங்க ரெண்டு பேரும்
காதலிக்கிறாங்க, அப்படின்னு ஆபீஸ் முழுக்க ஒரு வதந்தியைத் தீயா பரப்புனாங்க."
"அது வதந்திதானே? அது உனக்கு
எப்படி உதவியாச்சு?"
"அதுதான்டா ட்விஸ்ட்! ஊர்க்காரங்க
நம்மளைப் பத்திப் பேசின அந்த வதந்தி இல்லன்னா, அவளுக்குள்ள இருக்கிற தயக்கம் உடைஞ்சிருக்கவே
முடியாது. அவங்க பேசுறதை நினைச்சு அவ பயந்துடுவான்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா உண்மை
அதுவல்ல. அந்த அலர்தான், ஆமா நாங்க காதலிக்கிறோம், அதுல என்ன தப்புன்னு அவளோட ஆழ்மனசுல
ஒரு தைரியத்தைக் கொடுத்துச்சு. என் மேல அவளுக்கு இருக்கிற காதலை அவ வெளிப்படையா ஒப்புக்கொள்ள
அந்த வதந்தி ஒரு வாய்ப்பா அமைஞ்சது!"
நண்பன் அவனைப் பார்த்து வியந்து
போனான். "டேய்! நீ காதலைக்கூட ஒரு டேட்டா சயின்ஸ் ப்ராஜெக்ட் மாதிரி அனலைஸ் பண்றடா!"
"காதல்ங்கிறது முழுக்க முழுக்க
சைக்காலஜி அண்ட் டைமிங்டா. நான் கடந்த ஆறு மாசமா அவகிட்டெ பேசின ஒவ்வொரு முறையும் அவகிட்ட
ஒரு ஈர்ப்பு இருந்தது. ஆனா, ரெண்டு பேருமே ஸ்டேட்டஸ், ஜாப், சொசைட்டின்னு எதையோ நினைச்சு
தயங்கி நின்னோம். இந்த ஊர்க் கோமாளிகள் எங்களைப் பத்தி வம்பு பேசினப்பதான், அட, எங்க
ரெண்டு பேருக்கும் இடையில ஒரு நேசம் இருக்கறது வெளியில இருக்கிறவங்களுக்கே தெரியுதே,
அப்போ நாம ஏன் காதலை மறைக்கணும்னு ஒரு தெளிவு பிறந்தது. இந்த ஊரு எங்களைச் பிரிக்கணும்னு
நினைச்சு விஷத்தை வச்சது, ஆனா அதுவே எங்க காதலுக்கான அமிர்தமா மாறிடுச்சு."
நண்பன் சிரித்துக்கொண்டே,
"சரி சரி, உன் தத்துவப் பிரசங்கத்தை நிப்பாட்டு. இப்போ உன்னோட அடுத்த ஸ்டெப் என்ன?
இப்போது தூரத்துக் கிராமத்துக்கு டிரான்ஸ்பர் ஆகப் போறதை என்ன பண்ணப் போற?"
"போறேன். கண்டிப்பாப் போறேன்.
ஆனா சிங்கிளா இல்லை. அவளையும் என்னோட சேர்ந்து அந்தக் கிராமத்துக்கு மாத்த சொல்லி யாருகிட்டெ
பேசணுமோ அங்கேயே பேசிட்டேன். அந்த ஊர்ல இருக்கிற அமைதியான சூழல் எங்க காதலுக்கு இன்னும்
செட் ஆகும்."
அப்போது அவன் அலைபேசி சிணுங்கியது.
அவளின் குறுஞ்செய்தி திரையில் பளிச்சிட்டது, "சாயுங்காலம் ஐந்து மணிக்கு நறுந்தொகை
உணவகத்தில் காத்திருப்பேன். தப்பிக்கப் பார்க்காதே!"
அவன் சொன்னான், "பாத்தியா?
ஊர் கிளப்பிவிட்ட அலர், இன்னைக்கு எங்களை நிரந்தரமா ஒண்ணுசேர்த்து வச்சிருக்கு. நான்
போவணுமே!"
நண்பன் தலையில் அடித்துக்கொண்டே
சொன்னான், "போ. போய் உன் திருக்குறள் காதலைக் காப்பாத்து! என்னை இப்படியே ஓரமா
இறக்கி விடு. நான் ஆட்டோ பிடிச்சுப் போயிக்கிறேன்."
- சூத்திரங்கள்
தொடரும்!
*****

No comments:
Post a Comment