29 Sept 2026

காதலர்களின் பிரம்மாஸ்திரம்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 51

காதலர்களின் பிரம்மாஸ்திரம்!

பெயர்தான் மென்பொருள். அதை எழுதும் பணி வன்மையாகவே இருந்தது. அதை விட வன்மையாக அவர்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

அவன் மிக தீவிரமாக அந்த மென்பொருளுக்கான நிரல்களை உருவாக்கிக் கொண்டிருந்தான். அவனருகே வைக்கப்பட்டிருந்த தேநீர் சூட்டை இழந்து அந்தக் குளிர்பதன அறையில் குளிர்பானமாக மாறிக் கொண்டிருந்தது.

எதிரே உட்கார்ந்திருந்தவள், கையில் இருந்த அலைபேசியைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். "உனக்கு எப்போதுமே பிராக்டிகல் அப்ரோச்தான். அதனால தப்பிச்சிடுறே. ஆனா, சில பேருக்குக் காதலிப்பது, தவிப்பது, தூங்காமல் முழிப்பது இதெல்லாம் லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது."

"என்ன லாஜிக் வேண்டும்?" அவன் விசைப்பலகையைத் தட்டிக் கொண்டே அவளைப் பார்த்தான்.

"இப்போ உன்னோட ப்ரெண்ட் நிலைமை இருக்கே. போன வாரம் இன்ஸ்டாகிராமில் எப்டூ டீம்காரி போட்ட அந்த ஒரு ரீல்ஸை பார்த்ததிலிருந்து அவன் தூங்கவே இல்லை. ஆபீஸில் ப்ராஜெக்ட் டெட்லைன் மிஸ் ஆகிவிட்டது. பாஸ் திட்டி விட்டார். இவன் பாட்டுக்கு ரூமுக்குள் உட்கார்ந்து 'நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்' என்று டைப் செய்து டெலீட் பண்ணிக் கொண்டிருக்கிறான். இது என்ன பைத்தியக்காரத்தனம்?"

அவன் கணினித் திரையிலிருந்து பார்வையை விலக்கி கைகளை நீட்டி நெட்டி முறித்தான். பின் முழங்கைகளை மேஜை மீது ஊன்றி, விரல்களைக் கோர்த்துக் கொண்டு சிரித்தான்.

"காதலில் லாஜிக் பார்க்கக் கூடாது. அங்கே எல்லாமே இமேஜினரிதான். இவன் அவளிடம் நேரில் சென்று தன் காதலைச் சொல்லப் பயப்படுகிறான். நோ சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற பயம். அதுவே அவனை உள்ளுக்குள் தின்று கொண்டிருக்கிறது. வள்ளுவர் காலத்தில் இதுக்கு அருமையான ஒரு சொல் இருந்தது. அதுதான் மடல் ஊர்தல்.

"காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்

மடலல்லது இல்லை வலி."                                   (குறள், 1131)

அப்படின்னு ஒரு குறளையே வள்ளுவர் எழுதியிருக்கார்."

"மடல் ஊர்தலா? பனைமட்டையில் குதிரை செய்து ஊர்வதா? இன்றைக்கு யாருப்பா பனைமட்டை வச்சிருக்கா? எல்லாமே டிஜிட்டல் மடல்தான். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்தான்!"

"கரெக்ட்!" அவன் கண்களில் ஒரு சிறு வெளிச்சம் மின்னியது. "இன்றைய டிஜிட்டல் யுகத்தின் மடல் ஊர்தல் என்பது எல்லோரும் பார்க்கும்படி பகிரங்கமாக தனது காதலைச் சொல்வதுதான். மறைத்து மறைத்து அழுவதை விட, ஒரேயடியாகத் துணிந்து களம் இறங்குவது. காமத்தில் உழன்று வருந்தும் ஒருவனுக்கு, அந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமை அந்தத் துணிச்சலில்தான் இருக்கிறது."

அவள் யோசித்தாள். "அதாவது, பயத்தை விடுத்து வெளியே வந்து நிற்கச் சொல்கிறாய்?"

"அதேதான். மறைப்பது பலவீனத்தை வளர்க்கும். வெளிப்படுத்துவது தீர்வைத் தரும். அவனிடம் போனைக்கொடு."

அவன் பேசினான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில்…

அவன் நண்பனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவேறியது. அந்தப் பதிவு இப்படி இருந்தது. "கடந்த மூன்று மாதங்களாக உன்னைச் சுற்றியே என் உலகம் சுழல்கிறது. நீ பேசாத ஒவ்வொரு நிமிடமும் ஒரு நூற்றாண்டு. இந்த மௌனம் இனி என்னால் தாங்க முடியாது. உன்னை எனக்குப் பிடிக்கும். நேரில் சொல்கிறேன். சம்மதமா?"

பதிவு அப்லோட் ஆனது.

அடுத்த பத்து நிமிடம் அறை முழுவதும் ஒரு நிசப்தம். அவள் நகத்தைக் கடித்தாள். அவன் ஆறிய தேநீரைக் குடிக்க முயன்றான், கோப்பை காலியாகியிருந்தது.

அப்போது போன் 'பிங்' என்றது.

அவனது முகத்தில் மின்னல் வெட்டியது. ஸ்கிரீனைப் பார்த்துவிட்டு அவன் நிமிர்ந்தான். கண்கள் பளபளத்தன.

"என்ன?" என்று அவள் ஆவலுடன் கேட்டாள்.

அவன் சிரித்தான். "அவளும் இதேதான் எதிர்பார்த்துக் காத்திருந்தாளாம். போய் வேலையைப் பாரு, நாளைக்கு நேரில் பேசுவோம்ன்னு ரிப்ளை பண்ணியிருக்கா."

அவன் மீண்டும் மென்பொருள் எழுதும் பணியைத் தொடர்ந்தபடி புன்னகைத்தான், "பார்த்தாயா? வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதைத்தான், இன்றைக்கு இந்த அல்காரிதமும் சொல்கிறது. உள்ளதை உள்ளபடி துணிந்து வெளிப்படுத்துங்கள். அதான் ஏமம். அதாவது பாதுகாப்பு!"

"அது சரி! நண்பனை மடலூர வைத்த இவன் எப்போது எனக்காக மடலூர்வான்?" அவனிடம் கேட்க துணிவில்லாமல், அவள் மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment