திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 50
ஊர், உலகம் அறியாத இருத்தலியல்!
திருவாரூர், செந்தமிழ்க் கல்லூரியின், சிற்றுண்டியகம்.
சாதாரணமாக அங்கு மற்ற மேஜைகளில் காதுகளைக் குடையும் திரைப் பாடல்களும், “டேய்
என்னடா லூசு மாதிரி பண்ற?” என்கிற அலறல்களும் கேட்கும். ஆனால் இந்த மூலையில் அது இல்லை.
அவன் ஒரு மூலையில் மடிக்கணினியில் எதையோ தட்டிக்கொண்டிருந்தான். அவள் இன்னொரு
மூலையில் குறிப்பேட்டில் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.
சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் எரிச்சலோடு விவாதித்தது.
"என்ன ஜோடிப்பா இது? இன்ஸ்டாவில் ஒரு ரீல்ஸ் கிடையாது, வாட்ஸ்அப்பில் ஒரு
ஹார்ட் சிம்பல் கிடையாது. பார்க்குறதுக்கு ஏதோ எதிரிகள் மாதிரி இருக்காங்க. இது என்ன
லவ்?" என்றான் நண்பர்களில் ஒருவன் அலுப்பாக.
அவர்களில் ஒருத்தி காபி கோப்பையை வைத்துவிட்டுச் சொன்னாள், "இவங்க ரெண்டு
பேருக்கும் இடையில கெமிஸ்ட்ரியே ஒர்க் அவுட் ஆகல. கண்டிப்பா சீக்கிரம் பிரேக் அப் தான்."
ஊர் அப்படித்தான் நினைத்தது. வெளிப்படையான சலசலப்புகளும், பொதுவெளியில் காதல்
காட்சிகளும் இல்லாததால், அருகருகே அமர்ந்தாலும் அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளாததால்
அவர்கள் இருவரும் மனதளவில் பிரிந்துவிட்டதாகவே அந்தச் சமூகம் நம்பியது. ஏதிலர் என்று
அவர்களைப் பழித்தது.
அவர்கள் அப்படி நினைப்பதற்கேற்ப, குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த அவள் சட்டென்று
அவனிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வேறு சட்டென்று கிளம்பினாள்.
அவள் வேகமாகத் தன் ஸ்கூட்டியில் கல்லூரியை விட்டு வெளியே வந்து, கும்பகோணம்
சாலையில் பயணித்து, துர்க்காலயா சாலை வழியாக விரைந்து, கமலாலயத் தென் கரையில் நுழையும்
போதுதான் அது நடந்தது.
கமலாலயத்தைச் சுற்றியிருந்த வானம் திடீரென கருக்கிக் கொண்டது. வழக்கமான மேகக்
கூட்டங்கள் அல்ல; மழையை அப்படியே அள்ளி வீசப் போகிற மாதிரி ஒரு மிரட்டலான இருள்.
'ப்ளாப்'
ஸ்கூட்டியின் டயர் வெடித்த சத்தம் இடிச் சத்தம் போலக் கேட்டது.
மழை வேறு சடசடவென்று பெய்யத் தொடங்கியது.
நிமிஷ நேரத்திற்குள் கமலாலயக் குளம் தார்ச்சாலை மேல் ஏறி வந்து விட்டது போல
ஆனது. அவளுக்குத் திருவாரூர் மைய நூலகத்தில் ஒரு கருத்தரங்கம் இருந்தது. அதன் முக்கிய
கருத்தாளர்களில் அவளும் ஒருத்தி. இன்னும் இருபது நிமிடங்களில் அங்கே இருக்க வேண்டும்.
அவசரமாக் அலைபேசியை, மின்கலத்தின் மின்சாரமின்றி அது இருளைப் போர்த்திக் கொண்டது போலக்
கிடந்தது. வேலைப்பளுவில் மின்சாரம் ஏற்ற மறந்திருந்தாள்.
பதற்றம் அவளைக் கவ்வியது. தொண்டை அடைத்தது. குளிர்மழையின் நடுக்கமா அல்லது உரிய
நேரத்திற்குப் போக முடியுமா என்ற ஐயப்பாட்டின் நடுக்கமா எனப் புரியாமல் அவள் உடலும்
மனதும் நடுங்கத் தொடங்கி விட்டன.
அதே விநாடி, கல்லூரியின் சிற்றுண்டியகத்தில் மடிக்கணினியை மூடிக்கொண்டிருந்த
அவனுக்குள் திடீரென ஏதோவொரு நரம்பு சுருக்கியது. அலைபேசியில் எவ்வித அழைப்பு வரவில்லைதான்.
ஆனால், அவளது அந்தத் தவிப்பு, துடிப்பு, நடுக்கம் எப்படியோ காற்றில் பயணம் செய்து இவனது
மனதின் ஆழமான மூலையைத் தொட்டதோ என்னவோ!
அவன் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை. மடிக்கணினியைத் தன் தோள்மாட்டித் தோல்பையில்
திணித்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மழையில் நனைந்தபடி எந்தத் திசையில் அவள் இருப்பாள்
என்று மனசு காட்டிய வழியில் பறந்தான். அவன் செல்லும் வேகத்தில சாலையில் தேங்கியிருந்த
மழைநீர் சாலையின் இரு புறத்திலும் தெறித்துச் சிதறியது.
ஐந்து நிமிடங்களில் அவள் நின்றுகொண்டிருந்த கமலாலய தென்கரையின் சாலை ஓரத்தை
அடைந்தான்.
மழையில் நனைந்து, கலங்கிப் போய் நின்றுகொண்டிருந்தவள் அவனைப் பார்த்தாள். அவள்
முகத்தில் இருந்த அந்தப் பயம், நடுக்கம் எல்லாம் ஒரு விநாடியில் அப்படியே கரைந்துபோயின.
அவன் ஒரு வார்த்தைதான் கேட்டான். "நேரமாயிட்டா?"
அவள் ஆம் என்றும் சொல்லாமலும், இல்லை என்றும் மறுக்காமலும் சட்டென்று அவனது
வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். ஈரமான முடிகள் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கச் சொன்னாள்,
"நீ வருவேன்னு எனக்குத் தெரியும்."
"எப்படித் தெரியும்?"
"தெரியும். அவ்வளவுதான்."
அவன் தன் பையிலிருந்து ஒரு சிறிய மின்சேமிப்புக்கலத்தைக் கொடுத்தபடி, லேசான
புன்சிரிப்புடன் சொன்னான், "காதல்ங்கிறது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மட்டும் இல்லயில்ல.
எவ்வளவு தூரம் தள்ளியிருந்தாலும் ஒருத்தருடைய
துடிப்போ, தவிப்போ அது நிச்சயம் இன்னொருத்தருக்குக் கேட்கும்"
அப்போதுதான் அந்தத் திருக்குறள் அங்கே காற்றோடு கலந்தது,
"உவந்துறைவர்
உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர்
என்னும்இவ் வூர்." (குறள்,
1130)
வெறுமனே பார்க்கும் காட்சிகளை வைத்துக் கொண்டோ அல்லது சமூக வலைதள கணக்குகளை
வைத்துக் கொண்டோ காதலை அளக்கும் ஊருக்கு என்ன தெரியுமா, அவர்கள் இருவரும் எப்போதும்
ஒருவருக்கொருவர் உள்ளத்தின் ஆழத்தில் பிணைக்கப்பட்டே இருக்கிறார்கள் என்று!
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment