30 Sept 2026

மடலூர்தல் 2.0

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 52

மடலூர்தல் 2.0

"நீ ரொம்ப லாஜிக்கா யோசிக்கிற. இது ஒண்ணும் கம்பெனி ப்ராஜெக்ட் கிடையாது; காதல்டா!"

நண்பன் தேநீரை குடித்துக் கொண்டே சொன்னான். அதை கேட்டபடி, விரல்களால் மனஉளைச்சலோடு மேஜையைத் தட்டிக்கொண்டிருந்தான் அவன்.

"இல்ல. அவ எனக்கு மெசேஜ் பண்ணி மூணு நாள் ஆச்சு. ப்ளூ டிக் விழுகுது, ஆனா ரிப்ளை இல்லை. நேர்ல பார்த்தா கண்ணைத் திருப்பிக்கிறா. அவ என்னைத் தவிர்க்குற மாதிரி தெரியுது. லாஜிக் படி பார்த்தா, அவளுக்கு என் மேல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. கேம் ஓவர்."

நண்பன் சிரித்தான். "உன் பிரச்சனை என்னன்னா, காதலையும் எக்செல் ஷீட் மாதிரி போடப் பார்க்குற. வள்ளுவர் எப்போவோ சொல்லிட்டுப் போயிட்டார்டா.

"நோனா உடம்பும் உயிரும் மடலேறும்

நாணினை நீக்கி நிறுத்து."                          (குறள், 1132)

"இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு?"  நண்பன் கேட்டான்.

"தெரியும். காதலோட வலியைத் தாங்க முடியாத உடல் மெலிஞ்சுடும், உயிர் போயிடும். ஊருக்குப் பயப்படுற வெட்கத்தை உதறிட்டு, காதலன் தன் காதலி வீட்டுக்கு முன்னாடி பனைமடலில் குதிரை செய்து ஏறி உட்கார்ந்து ஊருக்கே வெளிப்படையா தன் காதலைச் சொல்வான். இப்போ யாருமே மடலேறுறது இல்ல, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்கிறாங்க!" என்றான் அவன் நக்கல் கலந்த கலக்கத்துடன்.

"கரெக்ட். ஆனா, வள்ளுவர் என்ன சொல்றார்னா, அந்த நாணத்தை நீக்கி, உன் காதலை மனசுல உறுதியா நிறுத்துங்றார். நீ என்ன பண்ணப் போற? அவ மெசேஜ் பண்ணலன்னு இங்கயே உருகி செத்துப்போகப் போறியா?"

அவன் அமைதியாக இருந்தான். அவன் கண்களில் பயம் இருந்தது. சமூகம் என்ன நினைக்கும் என்ற குழப்பம் மனதில் கூத்தாடியது. அவள் மறுத்துவிட்டால் தன்னால் தாங்க முடியுமா என்று அவன் ஒட்டுமொத்த சிந்தையும் தள்ளாடியது.

அவனது மௌனத்தைப் பார்த்த நண்பன், "ரொம்ப யோசிக்காதடா. தலைக்கு மேல வெள்ளம் போறப்போ, சாண் போனா என்ன? முழம் போனா என்ன? இதுக்கு மேல் அதெ உனக்குள்ள அழுத்தி வெச்சீன்னா, என்ன வேணாலும் நடக்கலாம். எதுவும் உன் கட்டுபாட்டுல இல்லாம, ஏதோ ஒண்ணு நடக்க போறப்ப, நீ மட்டும் ஏன் கூச்சம், வெட்கம், தயக்கம்ன்னு ஒரு கட்டுபாட்டுல இருக்கணும். அதெ உடைச்சு எறியுற. இன்னிக்குச் சாயுங்காலம் நீ மடலேறுனாலும் சரி, அவ கால்லயே விழுந்தாலும் சரி. ஏதோ ஒண்ணைச் செய்யுற."

அன்று மாலை.

அந்தி வெயில் மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில் அவன் லிப்ட்டுக்காகக் காத்திருந்தான். கைகள் லேசாக நடுங்கின. "நண்பன் சொல்றது சரிதானா? மடலேறுறதுக்கு இப்போ பனையோலை குதிரை இல்ல. ஆனா, கையில அதுக்குப் பதிலா பனையோலையில எழுதுன அந்த வாசகம் இருக்கு. பேச முடியாட்டாலும் இதை அவகிட்டெ காட்டுறதுல என்ன தப்பு?" என்று மனம் யோசித்தது.

அப்போது லிப்ட் கதவு திறக்க, உள்ளிருந்து அவள் வெளியே வந்தாள்.

அவளைப் பார்த்ததும் அவனுடைய மூச்சுத் திணறியது.

குறள் சொன்னது போல அந்த நோனா உடம்பு உண்மையிலேயே தளர்ந்தது போலிருந்தது.

அவள் அவனைக் கண்டதும் சட்டெனத் தன் பார்வையைத் திருப்பிக்கொண்டு நகர்ந்தாள்.

அவன் யோசிக்கவில்லை. ஒரு செகண்ட் மூச்சை உள்ளிழுத்துவிட்டு, அவளது பெயரை உச்சரிக்க முயன்று, நாக்குக் குழறிப் போய், அதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாமல் சத்தமிட்டான், "ஏய்!"

அவள் நின்றாள். என்னடா என்பது போல திரும்பிப் பார்த்தாள். அந்தப் பனையோலையை அவள் முன் நீட்டியவன், அது பொதுஇடம் என்றும் பாராமல் அப்படியே மண்டியிட்டான்.

அந்தப் பனையோலையில் ஸ்கெட்ச் பேனாவால் இப்படி எழுதியிருந்தது. "மூணு நாளா ஏன் ரிப்ளை பண்ணல?"

அவள் கோபமாகவும் அழுகையுமாகச் சொன்னாள், "இதைக் கூட உனக்கு வாயைத் திறந்து கேட்கத் தெரியாது இல்ல. என் வீட்ல வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்க. எனக்கு உன்னை விட்டுடப் பயமா இருக்கு. ஆனா, உன்கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியாம நாணப்பட்டு, பயந்துட்டுக் கிடந்தேன். நீ என்னன்னா அமைதியா இருந்த."

அவனுடைய முகத்தில் அந்தத் தற்காலிக பயம் அப்படியே வடிந்து, ஒரு தெளிவு பிறந்தது. அவனுக்குப் புரிந்தது, காதலில் தோற்பதை விட, சொல்லாமலேயே விலகி நிற்பதுதான் பெரிய முட்டாள்தனம். நாணம், ஈகோ, பயம் எல்லாமே ஒரு அவுட்டேட்டட் பயர்வால். அதைத் தூக்கி எறிந்தால் மட்டுமே காதலில் இணைப்பு கிடைக்கும்.

அவள் அவனைத் தூக்கி நிறுத்தினாள். "இனிமேலாவது பேசுவியா? இல்ல, எல்லாத்துக்கும் இப்படி பனையோலையையே நீட்டிட்டு இருப்பீயா?"

அப்போதும் அவனுக்கு என்ன பேசுவதென்று புரியாமல், பேந்த பேந்த விழித்தபடி அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment