27 Sept 2026

தர்க்கத்தின் எல்லை மீறும் இமைகள்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 49

தர்க்கத்தின் எல்லை மீறும் இமைகள்!

திருவாரூர், செந்தமிழ் நகரில் இருக்கும் பைந்தமிழ்ப் பூங்கா.

பகலா, இரவா என்று இனம் பிரித்துச் சொல்ல முடியாத அந்தி மயங்கும் அந்த மாலைப் பொழுது.

சுற்றிலும் குழந்தைகள், இளைஞர்கள், நடுத்தர வயதினர், பெரியவர்கள், கூடவே ஆங்காங்கே சில காதலர்கள் என இவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் மரங்களும், செடிகளும், பூங்கொடிகளும்  அமைதியாய்த் தென்றலை மெல்லிசையைப் போல வழங்கிக் கொண்டிருந்தன.

அவர்கள் இருவரும் அந்தப் பூங்காவிற்குள் வந்து அரை மணி நேரம் இருக்கும்.

அந்த முப்பது நிமிடங்களும் கண் இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவன் புரியாதவனைப் போல, "என்னச்சு உனக்கு? கண்ணில் ஏதும் காண்டாக்ட் லென்ஸ் ஒட்டிருக்கியா? ஏன் இப்படி ஸ்டெடி கேமரா மாதிரி முழிச்சுக்கிட்டே இருக்கே?" என்றான்.

அவள் சட்டென்று திடுக்கிட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு கொள்ளை அழகு இருந்தது.

"கண் சிமிட்டக் கூடாதுடா!" என்றாள் சிணுங்கலாக.

"ஏன்? ஐ பவர் ஏதும் ஏறிடுச்சா? டாக்டர் கிட்டப் போகலாமா?" ஒரு தர்க்கவாதியின் பதற்றம் அவனிடம் உடனடியாக வெளிப்பட்டது.

"இல்லைடா உன்னை நினைச்சுகிட்டு இருந்தேன். கண் சிமிட்டுற அந்த ஒரு மைக்ரோ செகண்டுல நீ என் கண்ணைவிட்டு மறைஞ்சு போயிட்டீன்னா, அந்தப் பிரிவு கூட என்னால் தாங்க முடியாது."

அவன் ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்தான். பிறகு சத்தமாகச் சிரித்துவிட்டான்.

"ரொம்ப ஓவராப் போகுது. கண் சிமிட்டுறது பயாலஜிக்கல் நீட். நீ இப்படி கண் சிமிட்டாம இருந்தா  ஐ ஸ்ட்ரெயின் வரும். சும்மா சென்டிமென்ட் பேசி கண்ணைக் கெடுத்துக்காத."

அவள் அவனது கையைப் பிடித்துக் கொண்டாள். அவளது விரல்கள் சில்லிட்டிருந்தன.

"உனக்கு தர்க்கம் மட்டும்தான்டா தெரியும். காதல் தெரியாது."

மறுநாள் மாலை.

திருவாரூர் விளமல் சாலையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டிருந்தான் அவன். வானங்கள் ஒவ்வொன்றும் விரைவதற்காக விர் விர் என்று சத்தத்துடன் காத்துக் கொண்டிருந்தன.

அவன் தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடியே அந்த நெருக்கடியான நெரிசலிலும் கூட தர்க்க ரீதியாக அவள் சொன்னதை அசை போட்டுக் கொண்டிருந்தான்.

"மனித மூளை என்பது ஒரு பயங்கரமான காம்ப்ளக்ஸ் நெட்வொர்க். எல்லாவற்றுக்கும் ஒரு பரிணாம வளர்ச்சிப் பின்னணி உண்டு. காதலும் அப்படித்தான். ஹார்மோன்களின் கெமிக்கல் ரியாக்சன்! ஆக்சிடோசின், டோபமைன். அவ்வளவுதானே?"

இருந்தாலும், மனதின் ஓர் ஓரத்தில் அவளின் அந்தப் பார்வை ஒரு முள் மாதிரி உறுத்திக் கொண்டே இருந்தது.

"சரி, நிஜமாவே கண் சிமிட்டாம இருந்தா என்னதான் நடக்கும்? ஒரு பத்து செகண்ட் டெஸ்ட் பண்ணிப் பார்ப்போமே!" அவனுக்குத் தோன்றியது.

அவன் போக்குவரத்து நெரிசலில் இருப்பதை மறந்து, தனது அலைபேசியை எடுத்து அதில் நேரத்தை அமைத்துக் கொண்டு அதையே உற்றுப் பார்த்தான்.

ஒன்று, இரண்டு, மூன்று... பத்து விநாடிகள் கடந்தன. காற்று நேரடியாகக் கண்ணில் பட்டதால் கண்கள் எரிய ஆரம்பித்தன. பதினொன்றாவது வினாடி தாங்க முடியாத எரிச்சல். அவனது உடலின் சுயகட்டுப்பாடு மீறி, இமைகள் வெடித்துத் தானாக மூடிக்கொண்டன.

அந்த ஒரு நொடி இருள் கவிழ்ந்தபோது, அவனுக்குச் சட்டென்று அந்தக் குறளின் வரிகள் நினைவுக்கு வந்தன.

"இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும்இவ் ஊர்."                                    (குறள், 1129)

கண்களை இமைக்கும் அந்தச் சிறிய இடைவெளியில் கூட எதிரில் இருப்பவன் தன்னை விட்டு மறைந்துவிடுவானோ என்று அஞ்சும் அந்தக் காதல் இருக்கிறதே. அது எவ்வளவு ஆழமானது!

திடிரென்று சைகை பச்சை விளக்கில் ஒளிர, வாகனங்களின் ஒலிப்பான் சத்தங்கள் அலற, தன் நினைவுக்கு வந்தவனாய், வண்டியைக் கிளப்பினான்.

வண்டியோடு வண்டியாக அவனது யோசனைகளும் நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் வேகமெடுக்கத் தொடங்கின.

அவள் கண் சிமிட்டாமல் இருப்பதற்குக் காரணம் பயம் அல்ல; அந்த ஒரு நொடிப் பிரிவு கூட அவளுக்குத் துயரமாக இருக்கிறது. ஆனால், இதைப் புரிந்து கொள்ளாமல் சுற்றியிருக்கும் உலகமும், ஏன் அவனும் கூட அவளை ஏதோ விசித்திரமாகப் பார்க்கிறார்கள். தர்க்கத்தின் அளவுகோலைக் கொண்டு அன்பின் ஆழத்தை அளக்க முடியாது என்பதை அவன் அப்போது உணர்ந்தான்.

திருவாரூர், பைந்தமிழ் பூங்காவிற்குள் வண்டியைச் செலுத்தியவன், அவளைச் சுற்றும் முற்றும் தேடினான். அங்கேயிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி இவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். தொலைவிலிருந்தும் அந்த இமைக்கா விழிகள் இவனுக்குப் பளிச்சென்று தெரிந்தன.

அவன் மெல்ல அவளது அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான். அவள் நெற்றியில் வழிந்து கிடந்த முடியை மென்மையாக ஒதுக்கிவிட்டான். காற்றில் அவளது மூச்சுக்காற்று அவன் கைகளில் பட்டது.

அவன் மெலிதாக அவளது காதருகே சொன்னான்:

"சாரிடி! நான் என்னை ஏதோ ஒரு பெரிய தர்க்கவாதின்னு நினைச்சேன். ஆனா, இப்போ நீ என்னை விட ரொம்பப் பெரிய தர்க்கவாதின்னு புரிஞ்சுகிட்டேன். உன்னோட இந்த அன்பின் தர்க்கத்தை அளக்க, இந்தப் பிரபஞ்சத்தின் எந்தத் தர்க்க சூத்திரத்தாலும் முடியாது!"

அப்போதும், அவள் தன் இமைகளை அசைக்காமல், மெலிதாகப் புன்னகைத்தாள். அவளது அந்தப் புன்னகையில் தர்க்கமும் காதலும் ஒன்றாகக் கரைந்து நின்றன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment