3 Sept 2026

வேட்ட பொழுதும் காதல் விழுதும்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 25

வேட்ட பொழுதும் காதல் விழுதும்!

மழை மேகத்தின் கருமையை அப்படியே திருடிச் சுருட்டி வைத்தது போன்ற அடர்ந்த கூந்தல் அவளுக்கு. திருவாரூர் ராயல் பார்க்கின் கண்ணாடி ஜன்னலோரம், வெளியே தூறிக்கொண்டிருந்த மழையின் ஈரத்தோடு அவளது தலையிலிருந்த மல்லிகைப் பூ மணமும் கலந்து காற்றில் மிதந்தது.

"ரொம்ப நேரமா வெயிட்டிங்கா?" என்று கேட்டபடியே, பேருந்து நிலையம் மற்றும் மேம்பால சாலை போக்குவரத்து நெருக்கடியில் அலைந்து, ராயல் என்பீல்டை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு உள்ளே வந்த அவன், அவளது எதிரே இருந்த மேஜையில் அமர்ந்தான்.

மாலை ஐந்து மணி.

போக்குவரத்து நெருக்கடி தந்த எரிச்சல், அவளது தோள்களில் புரண்ட அந்த அடர்ந்த கூந்தலைப் பார்த்ததும் ரசாயன மாற்றம் போல நொடியில் காற்றில் மறைந்தது.

"இல்ல, பத்து நிமிஷம். என்ன இன்னைக்கு லேட்?" என்றாள் அவள்.

"ட்ராபிக். அப்புறம் உன் தோள் மேல விழற இந்த தலைமுடியை பார்க்கிற ஒரு க்ளோஸ் அப் ஷாட்டுக்காக!" என்றான் அவன்.

அவள் தன் தோளின் மீது கிடந்த அடர்ந்த கூந்தலை மெல்ல பின்னுக்கு ஒதுக்கி, அவனைக் குறும்போடு நிமிர்ந்து பார்த்தாள். "என்னடா, திடீர்னு சினிமா டைரக்டர் மாதிரி பேசற?"

"இல்லடி. வள்ளுவர் அன்னைக்கே இதை எழுதி வச்சிட்டு போயிருக்கார் தெரியுமா?

''வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்''    (குறள், 1105)

அப்படின்னு. இதோட நியூரோ பயாலஜிக்கல் அர்த்தம் தெரியுமாடி உனக்கு?"

''என்னடா! சினிமா டைரக்டர் மாதிரி ஆரம்பிச்சு திடீர்ன்னு சயின்டிஸ்ட் மாதிரி பேசுறே? நார்மலத்தானே இருக்கே?''

"ஐயம் நார்மல். ஆனா, விஷயம் இருக்கும். மனித மூளையில் நூறு பில்லியன் நியூரான்கள் இருக்கு. மனசு ஆசைப்பட ஆசைப்பட என் நியூரான்களுக்கு உன் கூந்தலும் தோளும் எனக்கு அவ்வளவு ஸ்பெஷலா தெரியுமாம்! அது உண்டாக்குற டோபமைன் எபெக்ட் இருக்கே. அதை வார்த்தைகள்ல சொல்ல முடியாது. இருந்தாலும் வள்ளுவர் சொல்றார், காதலிக்கும்போது, அவளோட தோள்கள்ல சாய்ஞ்சிருக்கும்போது, அந்தந்தக் கணத்தில் மனசு என்னவெல்லாம் ஆசைப்படுதோ, அந்த இன்பங்களை எல்லாம் அந்தத் தோள்களே கொடுத்துருமாம்! டொபமைன் ஹை பீக்ல இருக்குமாம்."

"ஓ! அப்போ உன் மூளையோட டோபமைன் அளவைப் பொறுத்துதான் என் அழகும் இன்பமும் தீர்மானிக்கப்படுதா மிஸ்டர்? அது குறைஞ்சா என் அழகு குறைஞ்சிடுமா? அப்புறம், நான் அந்த அளவுக்குச் சந்தோஷம் கொடுக்க மாட்டேனா?"

"அதுதான் மேட்டரே! காதலிக்கிற கணத்துல மூளை சுரக்குற அந்த கெமிக்கல் ரியாக்சன் குறையவே குறையாதுங்கறதுதான் இந்த குறளோட சீக்ரெட் கோட்!"

"அடப்பாவி! இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு ரொமாண்டிக்கா யோசிச்சிருக்காரா மனுஷன்?"

"பின்னே என்ன? காதலனைப் பொறுத்தவரை அவனோட காதலிதான் ஆல் இன் ஒன் எண்டர்டெயின்மெண்ட் சிஸ்டம்னு சொல்லாம சொல்றாரு!"

அவள் சத்தமாகச் சிரித்தாள். அவள் சிரித்துத் தலைசாய்க்கும் போது, பூச்சூடிய கூந்தல் அவனது தோளில் லேசாக உரசியது. ராயல் பார்க் சூழலில் மெல்லிய பாடலின் இசை மிதக்க, வெளியே மழைத் துளிகள் தாளமிட்டன.

கொஞ்ச நேரத்திற்கு முன் அவன் ஆசைப்பட்ட அத்தனை சுகமும், அவளுடைய அந்தச் சிறிய தோள் தொடுதலுக்குள் அடங்கியிருப்பதை அவனது நூறு பில்லியன் நியூரான்களும் ஒரே நேரத்தில் இப்போது உண்மை ஒன்று நிரூபிக்கப்படுவதைப் போல அப்படியே உணர்ந்தன.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment