ஒரு நவீன காதலர்களின் சாகசம்!
உலகத்தில்
எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள். சிலர் நிம்மதியாய் வாழ்கிறார்கள், சிலர் ஆடம்பரமாக
வாழ ஆசைப்படுகிறார்கள். ஆனால், கோவை கே.ஜி. சாவடியில் எம்.பி.ஏ. படிக்கும் பரணிதரனும்,
அவர் தோழி சிந்துவும் "ஆடம்பரமாக வாழ்வது எப்படி?" என்பதற்கு ஒரு புதிய மேலாண்மைச்
சூத்திரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
எம்.பி.ஏ.
வகுப்பில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் என்று ஒரு பாடம் உண்டு. பரணிதரன் அதை வகுப்பறையில் கவனிக்காமல்,
வெள்ளலூர் பஸ் ஸ்டாண்டில் நடைமுறைப்படுத்தத் துணிந்ததுதான் இங்கு நடந்த அசம்பாவிதம்.
காதலிக்கு
ஆடம்பரமாகச் செலவு செய்ய ரூ.75 ஆயிரம் கடன் வாங்குவது வரை பரவாயில்லை, அது பெரும்பாலான
கல்லூரி இளைஞர்களின் பாரம்பரிய வழக்கம்தான். ஆனால், அந்த கடனை அடைக்கவும், புதிதாக
ஒரு கார் வாங்கி ஜாலியாகச் சுற்றவும் அவர்கள் போட்ட திட்டம்தான் மிக விசித்திரமானது.
ரோட்டில்
நடந்து போகும் மூதாட்டியிடம் நான்கு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தால், அதில் ஒரு
புது கார் வாங்கிவிடலாம் என்று எந்தக் கணக்குப்பாடம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது
எனத் தெரியவில்லை. ஒருவேளை அது ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தின் பக்க விளைவோ என்னவோ!
அவர்களின்
திட்டம் இதுதான். முதலில் பரணிதரன் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் போய் பேச்சுக்கொடுக்க
வேண்டும். அடுத்து முகமூடி அணிந்த சிந்து திடீரெனச் சங்கிலியைப் பறிக்க வேண்டும். அதைத்
தொடர்ந்து இருவரும் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் பேச்சுத்
திறமை – வேகமும் துரிதமும் – செயல்பாட்டு மேலாண்மை எனும் எம்பிஏ பாடங்களில் வருமோ என்னவோ!
மேற்படி
திட்டத்தைக் கேட்பதற்கு மிக கச்சிதமான கார்ப்பரேட் வியூகம் போலத்தான் இருக்கிறது. ஆனால்,
அவர்கள் மறந்துபோன ஒரு சின்ன விஷயம், அந்த தெருமுனையில் இருந்த சிசிடிவி கேமரா!
"முதல்
முயற்சியிலேயே சிக்கிக்கொண்டனர்" என்று போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் மிக
வருத்தத்துடன் அல்லது சிரிப்புடன் கூறியிருக்கிறார். சிசிடிவியில் வண்டியின் பதிவு
எண் அப்பட்டமாகத் தெரிய, 24 மணி நேரத்திற்குள் போலீஸ் இருவரையும் விடுதியிலேயே போய்
வளைத்து காப்பு கட்டி விட்டது.
இப்போது
நான்கு பவுன் சங்கிலி போயாயிற்று, இரண்டு செல்போன்கள் போயாயிற்று, ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரும்
போயாயிற்று. காரில் சொகுசாகச் சுற்ற நினைத்தவர்கள், இப்போது போலீஸ் வேனில் கம்பீரமாகச்
சென்று கொண்டிருக்கிறார்கள்.
மனித
குலத்திற்கு இந்த ஜோடி சொல்லாமல் சொல்லிச் சென்ற பாடம் ஒன்றுதான், அது என்னவென்றால்,
"எம்.பி.ஏ. படிப்பது சுலபம்; ஆனால், ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு சிசிடிவி கேமராவில்
சிக்காமல் தப்பிப்பது அதை விடக் கடினம்!"
இப்போது
உள்ள கல்லூரி மாணவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! நினைத்துப் பார்க்கும் போதே
கண்ணைக் கட்டுகிறதுதானே!
*****

No comments:
Post a Comment