3 Sept 2026

மனித குலத்திற்கு எச்சரிக்கை மணி!

மனித குலத்திற்கு எச்சரிக்கை மணி

செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ மனித குலத்திற்கு உதவியாக இருக்குமா அல்லது பேராபத்தாக முடியுமா என்ற விவாதம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவில் நடந்துள்ள சம்பவம் ஒன்று அந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் சரடோவ் நகரில் உள்ள பிரபல மின்னணு பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் சியோமா என்ற அதிநவீன ரோபோ வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தது. ஏஐ வித்தையால் இயங்கும் இந்த மனித உருவிலான ரோபோ, கடையில் இருந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னை லேசாகத் தள்ளியதும், சட்டென்று நிமிர்ந்து அவரைத் தாக்க முயன்றுள்ளது. தன் காலை உயர்த்தி வாடிக்கையாளரை உதைக்க வந்த ரோபோவின் அசைவுகளைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த கடை ஊழியர்கள், உடனடியாக அதன் செயல்பாட்டைச் செயலிழக்கச் செய்து பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளனர்.

இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும் இந்த வீடியோ, "இது மனிதர்களுக்கு எதிராக ரோபோக்கள் திரும்பும் போரின் தொடக்கமா?" என்ற கேள்வியை உலக அளவில் எழுப்பியுள்ளது.

இதை சாதாரணமாக எடுத்துக்  கொள்ள முடியாததற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

மனிதர்களுக்கு உதவ வடிவமைப்பு செய்யப்படும் ஏஐ அமைப்புகள், எதிர்பாராத சூழல்களில் கோபம் அல்லது தற்காப்பு போன்ற ஆபத்தான நடத்தைகளை வெளிப்படுத்துவது தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. இது முதல் காரணம்.

ஏஐ ரோபோக்கள் சூழலுக்கு ஏற்ப சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறன் கொண்டவை. மனிதர்களின் எதிர்மறை நடத்தைகளை அவை தவறாகப் புரிந்துகொண்டு திருப்பித் தாக்கத் தொடங்கினால் அது பெரும் பேரழிவிற்கு வழிவகுக்கும். இது இரண்டாவது காரணம்.

மனிதர்களுடன் நேரடியாகப் பழகும் ரோபோக்களுக்குக் கண்டிப்பான பாதுகாப்பு நெறிமுறைகளும், அவசர காலக் கட்டுப்பாடுகளும் முழுமையாக உறுதிசெய்யப்படாமல் போனால் அது மனிதன் மற்றும ரோபோக்களின் போருக்கு வழிவகுக்கும். இது மூன்றாவது காரணம்.

இந்தச் சம்பவம் ஒரு தொழில்முறைத் தவறுதானா அல்லது திட்டமிடப்பட்ட விளம்பர உத்தியா என்ற ஐயம் ஒருபுறம் இருந்தாலும், மனித சமுதாயத்திற்கு இது ஒரு தெளிவான எச்சரிக்கை செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மனிதனுக்குச் சேவை செய்ய உருவான தொழில்நுட்பம், நாளை மனிதனையே அடிமைப்படுத்தும் நிலைக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது.

அப்புறம் ஒரு சுவாரசியமான உண்மை என்னவென்றால், மனிதன் உருவாக்குவது எதுவுமே அவனை விடப் பூரணமானது அல்ல. ஏனெனில், அதை உருவாக்கிய மனிதனே பூரணமானவன் இல்லை.

நிச்சயமாக ரஷ்யாவில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கை மணி என்பதில் சந்தேகமில்லை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் ரோபோக்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகள் என்பது மிகவும் முக்கியம்.

"ஒரு ரோபோ மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது" என்ற ஐசக் அசிமோவின் புகழ்பெற்ற விதியை வெறும் அறிவியல் புனைகதையாக மட்டும் வைக்காமல், ரோபோக்களுக்குக் கோடிங் எழுதும் ஒவ்வொரு பொறியாளனும் தன் மனசாட்சியில் எழுத வேண்டிய நேரம் இது.

அதுமட்டுமல்லாமல், அந்த சியோமா எனும் ரோபோ உதைக்க மட்டும் வரவில்லை; "என்னைச் சரியாக டிசைன் செய்யுங்கள்!" என்று மனித குலத்தை எச்சரிக்க வந்திருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கடைசியாக விசயம் இதுதான். ரோபோக்கள் நம்மை ஆளுமா என்பது கேள்வி அல்ல; அவற்றை ஆளும் அளவுக்கு மனிதன் புத்திசாலியாக இருப்பானா என்பதுதான் உண்மையான கேள்வி!

*****

No comments:

Post a Comment