1 Oct 2026

காதல் செய்வீர்! மானத்தைத் துறப்பீர்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 53

காதல் செய்வீர்! மானத்தைத் துறப்பீர்!

மணி காலை ஏழரை.

அவன் கண் விழித்ததோ அதிகாலை மூன்றரை.

நான்கு மணி நேரமாக அவனால் தூங்கவும் முடியவில்லை. அங்கே இங்கே அசையக் கூட முடியவில்லை. ஏதோ இரும்புக் கயிற்றால் கட்டிப் போட்டது போன்ற இயலாமை.

மேசையில் கிடந்தது, அவனது கல்லூரிக் காலத்து நாட்குறிப்பு.

அதில் அவன் கையெழுத்தில்இப்படி எழுதியிருந்தான்.

"எனக்கு எப்போதுமே தன்முனைப்பு அதிகம். யார் எதற்காகவும் நம் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. கோபம் வந்தால் நேருக்கு நேர் நிற்பேன். தவறு என்றால் தட்டி கேட்பேன். இதுதான் ஆண்மை. இதுதான் கௌரவம்."

இப்போது அதை நினைத்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.

என்ன ஒரு இரும்பு மனிதன்! கடந்த நான்காண்டுகளில் அலுவலகத்தில் எத்தனையோ அழுத்தங்கள், நெருக்கடிகள், பிரச்சனைகள். ஆனால் எதற்காகவும் தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவன்.

ஆனால், இன்றைக்கு?

அவன் அலைபேசி ஒளிர்ந்தது. வாட்ஸ்ஆப் அறிவிப்பு.

அவள் இன்னும் இணைப்பில் இருக்கிறாள். நேற்றிரவு நடந்த சண்டை இன்னும் அவனின் நெஞ்சில் நெருஞ்சில் முள் மாதிரி குத்திக்கொண்டிருந்தது. சாதாரணமாக ஒரு தேநீர் நிலையத்தில் தொடங்கிய ஒரு சிறிய புரிதலற்ற உரையாடல், எங்கேயோ போய் முடிந்தது.

அவள் சொன்ன வார்த்தை, "உனக்கு உன் ஈகோ தவிர வேற ஒன்னும் தெரியாதுடா. என் பீலிங்ஸ் உனக்கு ஒரு பொருட்டே இல்லைடா!"

அவன் உடனே அங்கேயே ஏதாவது ஒரு பதில் சொல்லியிருக்க வேண்டும். அல்லது வீட்டிற்கு வந்த பிறகாவது வாட்ஸ்ஆப்பில் சமாதான செய்தி அனுப்பியிருக்க வேண்டும். அவனுக்குத் தன்முனைப்பு என்பது கவசம். செய்தியைத் தட்டச்சு செய்வதும் அழிப்பதுமாக இரவு இரண்டு மணி வரை செய்தவன், தன்னையறியாமல் அயர்ந்து, மூன்றரைக்குக் கண் விழித்து, இப்போது எதையும் செய்ய முடியாமல் கை நடுங்கும் நிலைக்கு வந்து விட்டான்.

அவனுக்கு அழ வேண்டும் போல இருந்தது. ஒரு சொட்டு நீர் கூட சிந்த முடியாது என்று கண்கள் இரண்டும் அடம் பிடித்தன.

"எங்கு போனது என் அந்தப் பழைய நாணம்? எங்கு போனது என் அந்த பண்டைய நல்லாண்மை?" அவனக்குக் காட்டுக் கத்தலாகக் கத்த வேண்டும் போலிருந்தது.

இப்போது அவனிடம் மிச்சமிருப்பது ஒன்றே ஒன்றுதான். அது காதல் மட்டும்தான். அந்தக் காதலைக் காப்பாற்றிக்கொள்ள, அவளிடம் கெஞ்சி நிற்கவும் தயார் என்ற அந்தப் பரிதாப நிலையில் இருந்தான் அவன்.

பழங்காலத்துத் தமிழர்கள் தன் காதலை ஊருக்குச் சொல்ல பனை ஓலையால் குதிரை செய்து ஊர் நடுவே வருவார்கள். மானம், ரோஷம், வெட்கம், சூடு, சொரணை என  எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, "அவள் இல்லை என்றால் நான் செத்து விடுவேன்" என்று ஊர் அறிய கத்துவார்கள்.

அவன் நிலை இப்போது அப்படித்தான் இருந்தது. ஆனால் அவன் உடல் மடலேறவில்லை. அவனின் மனது மடலேறித் திரிந்துகொண்டிருந்தது.

அவன் இப்போது அந்தப் பழைய நாட்குறிப்பை எடுத்து அதற்குக் கீழே இருந்த இடத்தில் இப்படி எழுதினான். "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்... இன்று? அவளின் ஒரு சின்ன 'செய்திக்காக ஏங்கித் தவிக்கும் பிச்சைக்காரன்!"

எழுதி விட்டு அலைபேசித் திரையைப் பார்த்தான்.

கீழே சிறு எழுத்துக்களில் மிளிர்ந்தது, "Typing..." அவள்தான்.

அந்த மூன்று புள்ளிகள் குதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவனின் இதயத்துடிப்பு எகிறியது.

அவள் சாதாரணமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்.

"வேண்டாம்டா. நம் வழி தனித்தனி. பிரிஞ்சிடுவோம்."' என்று சொன்னால் போதும், அவன் மொத்தமாக உடைந்துபோய்விடுவான் என்பது அவனுக்கே புரிந்தது.

காதலில் எப்போதுமே ஒரு பலவீனமானவன் உண்டு. அந்தப் பலவீனத்தின் உச்சத்தில் இப்போது அவன் நின்றுகொண்டிருந்தான்.

இப்போது அவன் இதற்கு மேல் எதையும் யோசிக்கத் தயாராக இல்லை. அந்த "Typing..." செய்தியும் வந்தப் பாடாகத் தெரியவில்லை. அது வரப்  போவதாகவும் அவனுக்கு நம்பிக்கையில்லை.

அவன் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அவள் கோபம் குறைய வேண்டும். அவளது சிரித்த முகம் மீண்டும் தன் கண் முன்  தோன்ற வேண்டும்.

இதற்கு முன் அவனிடம் இருந்த மொத்த தன்முனைப்பும், ஆண்மையும் இப்போது ஒரு செப்புக்காசுக்குக் கூட பெறாது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

அவன் அலைபேசியை எடுத்தான்.

"எல்லாருக்கும் வணக்கம். நம் அலுவலக பொதுகுழுவில் இதைப் போடுவதற்கு எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. அவள் என்னை மன்னிக்கணும்ங்றதுக்காகத்தான இதை இங்கே போடுறேன். அவளோட மௌனத்தை என்னால தாங்க முடியல. காதலில் ஆண்மை என்பது அந்த ஆண்மையைத் தூக்கிப் போட்டு விட்டு மன்னிப்பு கேட்பதுதான். இது என்ன முட்டாள்தனம்ன்னு நீங்க கேட்கலாம்? ஆனா, வள்ளுவர் இப்படித்தான் சொல்றார்,

"நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்

காமுற்றார் ஏறும் மடல்."                           (குறள், 1133)

நான் மடலேற பனையோலை குதிரை கிடைக்கல. நம்ம குழுதான் கிடைச்சது. இதை நான் அவளுக்கே தனிப்பட்ட முறையில அனுப்பியிருக்காம்லன்னு நீங்க கேட்கலாம். ஆனா, எனக்குத் தெரியும். அப்பவும் அவள் என்னோட பேச மாட்டா. இப்போ பேசுவான்னு நினைக்கிறேன். அப்படியும் பேசலன்னா இந்தக் குழுவுல இருக்குற நீங்க எனக்காக அவகிட்டெ பேசி, அவள பேச வைப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு. என்னோட மானம் கப்பலேறிப் போறதுல எனக்கு எந்த கவலையோ, வருத்தமோ இல்ல, சந்தோசம்தான். இதை பொதுவான குழுவுல போட்டதுக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்குற மாதிரி உங்க எல்லார்கிட்டேயும் மறுபடியும் திரும்ப ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கிறேன்."

அவன் வாட்ஸ்ஆப்பின் அனுப்புகை பொத்தானைத் தொட்டான்.

அவன் நவீன முறையில் மடலேறி விட்டான்.

அடுத்த நொடி குழுவில் ஒரு நிசப்தம். யார் அந்தப் பெண் என்ற சலசலப்பு அந்தக் குழுவில் இருந்த ஒவ்வொருவர் மனதிலும் உண்டானது.

அதே நேரத்தில் அவளது அழைப்பு அவனுக்கு வந்தது. அழைப்பை ஏற்றான். "லூசாடா நீ? ஏன்டா இப்படி உன்னோட மானத்தையும் காத்துலு விட்டுட்டு, என்னோட மானத்தையும் வாங்குற. உடனே கிளம்பி நம்மாழ்வார் தேநீர் நிலையத்துக்கு வாடா!"

அவன் மூச்சை வெளியே விட்டான். அவனது உதடுகள் தாமாகவே ஒரு புன்னகையைச் சிந்தின.

அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான். "அந்தக் காலத்தில் மடலேறுவது தப்பில்லை. இந்தக் காலத்தில் வாட்ஸ்ஆப்பில் மானம் போவதில் தப்பில்லை. காதலில் அதுதான் உச்சம்!"

தன் அலைபேசியை முழுநீள கால்சிராய் பைக்குள் திணித்தபடி, இருசக்கர வாகனத்தை நோக்கி ஓடினான் அவன்.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment