1 Aug 2026

வடக்கிலிருந்து வந்த லவட்டல் தேவதைகள்!

வடக்கிலிருந்து வந்த லவட்டல் தேவதைகள்!

உலகத்தில் எத்தனையோ விதமான டூரிஸ்ட்டுகளைப் பார்த்திருப்போம். ஆனால், மத்திய பிரதேசத்தில் இருந்து "வாருங்கள்! தென்னகத்தின் நகைகளைச் செதுக்குவோம் மற்றும் லவட்டுவோம்!" என்று டூர் பேக்கேஜ் போட்டு வந்திருக்கும் மூன்று லவட்டல் தேவதைகள் தமிழகத்துக்குக் கொஞ்சம் புதியவர்கள்.

அந்த மூன்று லவட்டல் தேவதைகள்தான் குஷ்பு, மீனாட்சி, லட்சுமி.

போலீஸ் அவங்களுக்கு வைத்த பெயர் த்ரீ ரோஸ்!

த்ரீ ரோஸ் டீ குடித்தால் ஸ்ட்ராங்காக இருக்கின்ற மாதிரி, இவர்கள் திருடினால் நகைகள் அனைத்தும் ஸ்ட்ராங்காக காலி ஆகி விடும் போலிருக்கிறது. என்ன ஒரு பிராண்ட் நேம்!

இவர்களின் ‘நகை லவட்டல்’ ஸ்டைலே தனி.

முதலில் ஜவுளிக்கடைக்குள் அமைதியாக, சாதுவாக நுழைய வேண்டியது.

அடுத்து, துணி எடுப்பது மாதிரி சீன் போட வேண்டியது.

கிளைமாக்ஸாகப் பக்கத்தில் இருப்பவர்களின் கவனத்தைத் திசை திருப்பி, நகை மற்றும் பணத்தை சுவாஹா பண்ண வேண்டியது!

சென்னை மாம்பலம் துணிக்கடைகளில் இவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட்டு, சிசிடிவி கேமராவில் தங்கள் பொன்னான முகத்தையும் காட்டி விட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டு இருந்தார்கள்.

அதற்குப் பிறகு, சென்னை போலீஸ் பதறிப்போய், "அடடே நம்ம த்ரீ ரோஸ் மேடம்களை நேரடி தரிசனம் பண்ண முடியவில்லையே!" என்று அண்டை மாநிலங்களுக்கெல்லாம் அவர்களின் போட்டோவை வாட்ஸ்அப் குரூப்ல ஷேர் பண்ணி தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தத் திரி ரோஸ் மேடம்களின் ஸ்பெஷாலிட்டியே, திருடிய பொருட்களை எல்லாம் உடனே பக்காவாகப் பேக்கேஜில் போட்டு மத்திய பிரதேசத்துக்கு கொரியர் பண்ணி விடுவார்களாம்!

அடடே, என்ன ஒரு பிசினஸ் டெக்னிக்!

அமேசான், பிளிப்கார்ட் காரன்கூட இவ்வளவு ஸ்பீடா டெலிவரி பண்ணுவார்களா என்பது சந்தேகம்தான்!

ஆந்திரா, தமிழ்நாடு என இரண்டு மாநில போலீஸையும் சுற்றலில் விட்டு, சுற்றுலா பாணியில் கலக்கிக் கொண்டிருந்த த்ரீ ரோஸ் டீம், புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்குள்  நுழைந்து தங்கள் தரிசனத்தைத் தந்த போதுதான் அலேக்காகத் தூக்கப்பட்டிருருக்கிறார்கள்.

அங்கே புதுச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் சாதா டிரஸ்ஸில் வாடிக்கையாளர்கள் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்த மூன்று பேரும் அடுத்த டார்கெட் என மப்டி போலீஸை டார்கெட் பண்ண, கையும் களவுமாகத் த்ரீ ரோஸ்களையும் கிள்ளி விட்டது போலீஸ்.

அப்புறம் என்ன?

திருடி திருடி நகைகளை மத்திய பிரதேசத்துக்குப் பார்சல் பண்ணிக் கொண்டிருந்தவர்களைச் சென்னை மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பார்சல் பண்ணி அனுப்பி வைத்து விட்டார்கள்.

இப்போது இன்னொரு செய்தி.

நியூசிலாந்து அரசு வெளிநாடுகளிலிருந்து ஏவுகணைகளுக்கு மாற்றாக, இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பாத, குறைந்த செலவிலான ஒன் வே தாக்குதல் டிரோன்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாம்.

இந்த நேரத்தில், நியூசிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ஒரு சிறப்பான யோசனை என்னவென்றால், "மதிப்பிற்குரிய அமைச்சரே! நீங்கள் எதற்காகக் கோடிக்கணக்கான டாலர்களைச் செலவிட்டு டிரோன்களை வாங்க வேண்டும்? அதற்குப் பதிலாக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த த்ரீ ரோஸ் பெண்களை உங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள். எதிரிகளின் ஆயுதங்கள் அனைத்தையும் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஒன் வே முறையில் திருடிக்கொண்டு வந்துவிடுவார்கள்! பணமும் மிச்சம், வேலையும் கச்சிதம்!"

வடமாநிலத்திலிருந்து வந்து தென்னகத்தில் தன் கைவரிசையைக் காட்டிய த்ரீ ரோஸ் திருட்டுக் கும்பல், தற்போது சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கிறது. அந்தத் தேநீர் த்ரீ ரோஸ்ஸா? சக்ரா கோல்டா? அல்லது வேறு எதுவுமா? என்பது தெரியவில்லை.

இனிமேலாவது அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று, நேர்மையான வழியில் ஏதேனும் தொழில் செய்து பிழைப்பார்கள் என நம்புவோம்!

*****

No comments:

Post a Comment