15 Jul 2026

நுகர்வுப் பெருவெளியின் நனவிலிப் பிரஜைகள்

சீரழித்த சினிமா – 40

பாய்ஸ்

நுகர்வுப் பெருவெளியின் நனவிலிப் பிரஜைகள்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச குடும்பக் கட்டுப்பாடுகளுக்கும், கலாச்சார ஒழுக்கத்திற்கும் ஒட்டுமொத்தமாகக் குட்பை சொல்லி விட்டு ஆபாசங்களுக்கு அட்டகாசமாக வெல்கம் சொல்லலாம் என்று நுகர்வுப் பெருவெளியில் உதிர்ந்து போன ஒழுக்கவியலை புதிய தத்துவப் பாடமாக ஓதிய திரைப்படம்தான் பாய்ஸ்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய "கல்லூரிக்குச் செல்லும் பருவத்தில் ஒழுங்காகப் படித்துப் பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டும்" என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, "பதினெட்டு வயது இளைஞர்கள் ஐந்து பேர் சேர்ந்தால், குட்டிச் சுவரில் அமர்ந்து குட்டிச் சுவராகலாம், கல்வியில் ரேட்டிங்கை ஒதுக்கி வைத்து விட்டு டேட்டிங் போகலாம், குடும்ப ஒழுக்கத்தைக் குப்பையில் எறிந்து விட்டு ஆபாச வெளிகளோடு உலவலாம், பாலியல் தொழிலாளியிடம் போகலாம், நடுரோட்டில் நிர்வாணமாக ஓடலாம்" என்ற ஒரு புதுவிதமான வளரிளம் பருவ வக்கிர அத்துமீறலைத் தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, பாய்ஸ் திரைப்படத்திற்கு உண்டு.

இத்திரைப்படம் திரைக்கு வந்தபோது தியேட்டர்களில் டிஜிட்டல் சவுண்ட் அதிர இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால், அது தியேட்டருக்கு வெளியே ஏற்படுத்திய சமுதாய, உளவியல் அதிர்வுகள் கொஞ்சம் விசித்திரமானவை, ஆபத்தானவை.

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமல்ல; அது சமூகத்தின் நனவிலி மனதிற்குள் விஷத்தையோ அமுதத்தையோ மிக மெதுவாக இறக்கும் ஒரு ஊசி. பாய்ஸ் திரைப்படம் வெளியான காலகட்டம், தமிழகம் உலகமயமாக்கலின் முதல் அலைகளை எதிர்கொண்டு, ஐடி கலாச்சாரத்தின் பளபளப்பில் கண்கள் கூசி நின்ற தருணம். அந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் பதின்ம பருவத்தினரின் ஹார்மோன்களின் பெருவெடிப்பைக் கொண்டு நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் மீது நிகழ்த்திய உளவியல் அத்துமீறல்கள் சாதாரணமானவை அல்ல.

பதின்ம வயதுக் காதல் மற்றும் இளமைத் துடிப்பு என்கிற பெயரில், தமிழ் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் நிம்மதியைக் குலைப்பதற்காகத் தயாரித்து வெளியிட்ட ஒரு மோசமான சமூக உளவியல் பரிசோதனையான பாய்ஸ் திரைப்படம் ஏற்படுத்திய சீரழிவுகளைச் சற்று ஆழமாகக் கூறு போட்டுக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த குடும்பவியல் மற்றும் குடிமையியல் கல்வி என்ன தெரியுமா?

நீங்கள் வாலிப வயதில் இருந்தால் போதும்; உங்களுக்குச் சமூக ஒழுக்கமோ, சட்டதிட்டங்களோ தேவையில்லை. நீங்கள் ஐந்து பேர் ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு நடுரோட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், தெருவில் வருவோர் போவோல் தட்டிக் கேட்போரைக் கேலி செய்யலாம், பெண்களை ஆபாசக் கண்ணோட்டத்தோடு மட்டுமே அணுகலாம் என்பதுதான்.

இதனால், பொது இடங்களில் அநாகரிகமாக நடப்பது குற்றமல்ல, அது ஹார்மோன்களின் உந்துதலால் ஏற்படும் வாலிபக் குறும்பு என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

அத்துடன் வீட்டை விட்டு ஓடிப்போய், கையில் காசில்லாமல், திருட்டுத்தனமாகத் திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை ஏதோ உலக மகா புரட்சி போல இத்திரைப்படம் சித்தரித்தது.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் பெற்றோரின் உழைப்பை மதிக்காமல், கேங்காக சுற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதையே பாய்ஸ் கெத்து என்று நினைத்துத் திரியும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதலன் படத்தில் பிரேக் டான்ஸைக் கொண்டாடினார்கள், 7ஜியில் ஸ்டாக்கிங்கை ரசித்தார்கள் என்றால், பாய்ஸ் படத்தில் ஒட்டுமொத்தப் பொறுப்பற்ற தனத்தையுமே இசைத் திறமை என்ற போலிப் போர்வையைப் போர்த்திக் கமர்ஷியலாக விற்றார்கள்.

நாயகனும் அவனது நண்பர்களும் எந்த வேலைவெட்டியும் இல்லாமல், படிக்காமலும், உருப்படியாக எதுவும் செய்யலாமலும், ஆபாசத் தனமாக நடந்து கொள்வார்கள். ஆனால், அவர்கள் பாய்ஸ் என்ற பெயரில் ஒரு மியூசிக் பேண்ட் ஆரம்பித்து, ஒரே ஒரு மேடைப் பாடலின் மூலம் உலகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக மாறிவிடுவார்கள்.

இந்த உறைபனியூட்டும் குறுக்குவழிப் பாதையை, மிக வண்ணமயமான, பளபளப்பான கிராபிக்ஸ் காட்சிகளாலும், மேற்கத்திய இசையாலும் மூடி மறைத்து, அவங்க சொந்தக் கால்ல நின்னு ஜெயிச்சிட்டாங்க என்று பார்ப்போரைப் பந்தாவாக ஏமாற்றினார் இயக்குனர்.

உழைப்பையும், முறையான கல்வியையும் விடுத்து, அதிர்ஷ்டத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் மாஸ் என்று காட்டி, பார்ப்பவனுக்குப் பகுத்தறிவின் மீதான தேவையையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

அந்நியன் படத்தில் கொலையை ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தை வைத்து காமெடியாக்கியது போல, பாய்ஸ் படத்திலும் அதே நகைச்சுவைப் பாத்திரத்தை வைத்து இளைஞர்களின் அத்தனை ஒழுக்கக்கேடுகளையும் மிகச் சாதாரணமாகக் கடந்து போக வைத்தது இத்திரைப்படம்.

வீட்டை விட்டு ஓடிவந்து நடுத்தெருவில் நிற்கும் பூர்வாங்க பொறுக்கிகளுக்கு அந்த நகைச்சுவைப் பாத்திரம்தான் வழிகாட்டி. அவர் அவர்களுக்கு வாழ்க்கைத் தத்துவம் என்ற பெயரில், எப்படிக் காரியவாதியாக வாழ வேண்டும், எப்படிப் பெண்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற குப்பைகளைக் கற்றுக்கொடுப்பார்.

சமூகச் சீரழிவைச் சரிசெய்ய வேண்டிய திரைப்படங்கள், அத்தனைச் சமுகச் சீரழிவுகளையும் காமெடி மீற்றும் ஆபாச பீஸாக்கித் திரையில் ஜொலிக்க விட்டால், நீங்கள் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே கைதட்டி ரசிக்க வேண்டும் என்ற வக்கிரமான மரத்துப்போன பொதுப்புத்தியைத் தமிழனிடம் வளர்த்தெடுத்தது இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த சினிமாட்டிக் டிராப்.

வழக்கமான தமிழத் திரைப்படங்கள் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. இப்படத்தில் நாயகியின் கதாபாத்திரம், மிகவும் வசதியான, மாடர்ன் பெண்ணாகக் காட்டப்படும். ஆனால், அந்தப் பாத்திரத்துக்கு தன் எதிர்காலத்தைப் பற்றிய குறைந்தபட்சப் பகுத்தறிவு கூட இருக்காது. கையில் ஐந்து பைசா இல்லாத, உருப்படாத நாயகனைத் துணிந்து காதலித்து, அவனோடு ஓடிவந்து, அப்பாவிக் கோமாளியாக இருப்பதாகவே அப்பாத்திரம் படத்தில் சுருக்கப்படும்.

பெண் என்பவள் தனக்கென ஒரு சுய சிந்தனையோ, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும் திறனோ இல்லாதவள்; அவளிடம் டேட்டிங் பேசி, பாய்ஸ்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டில் ஹெல்மெட் மாட்டாதே என்று பாடினால், அவள் தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கழற்றி எறிந்துவிட்டு நடுத்தெருவுக்கு வந்துவிடுவாள் என்ற ஆணாதிக்க நுகர்வோர் வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது.

உழைப்பு, பொறுமை, குடும்பப் பொறுப்பு போன்ற விஷயங்களை எல்லாம் அவுட்டேட்டட் எனக் கேலிப் பொருளாக்கிவிட்டு, இன்பார்மேஷன் டெக்னாலஜியும், இன்ஸ்டன்ட் வெற்றியும், கட்டுப்பாடு இல்லாத காமமும் மட்டுமே வாழ்க்கை என்கிற மாயையை விதைத்துச் சென்றது பாய்ஸ்.

பாய்ஸ் பாக்ஸ் ஆபீஸில் சுமாராகவேனும் வசூலைக் குவித்து, ஐந்து புதிய ஹீரோக்களைத் தமிழ் சினிமாவுக்குத் தந்து, அதன் இயக்குநரை மீண்டும் பிரமாண்ட நாற்காலியில் ஏற்றிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படிப்பு, கரியர் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்போது ஹார்மோன் சொல்வதைக் கேள், என்பது போல ஒரு மாயையை உருவாக்கியது பாய்ஸ். ஆனால், நிஜ வாழ்க்கை என்பது கேமரா ஆங்கிளோ, பிஜிஎம்மோ இல்லாதது. இந்தத் திரைக்கதை நிஜ உலக பதின்பருவத்தினரின் சிந்தனையை அப்படியே மழுங்கடித்து, வாழ்க்கையின் மிக முக்கியமான பில்டிங் பிளாக்ஸ் எனப்படும் கல்வி, ஒழுக்கம் இரண்டையும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது.

திரைப்படத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளாத, வெறும் பண இயந்திரங்களாக அல்லது அடக்குமுறை செய்பவர்களாகவே சித்தரிக்கப்படுவர். இது நிஜ வாழ்க்கையிலும் இளைஞர்களிடையே "பெற்றோர்கள் நம் எதிரிகள்" என்ற பிம்பத்தை வலுப்படுத்தியது. பெற்றோர்கள் என்பவர்கள் தங்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்கும் வில்லன்கள் என்ற பிம்பத்தை இளைய சமூகத்தின் மனதில் ஆழமாகப் பதிய வைத்தது பாய்ஸ்.

தமிழ் சமூகத்தின் ஆகச்சிறந்த பலம் மற்றும் சில நேரங்களில் பலவீனம் பெற்றோர் பிள்ளை உறவுதான். தன் வாழ்நாளின் அத்தனை வியர்வையையும் பிள்ளைகளின் கல்விக்காகத் தாரைவார்க்கும் நடுத்தர வர்க்கத் தந்தையர், தாயாரின் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அவர்களின் நியாயமான பதற்றங்கள் யாவும் ஒற்றைப் பரிமாணத்தில் சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகக் காட்டப்பட்டது பெரும் உளவியல் விபரீதம். இது குடும்பங்களுக்குள் இருந்த மெல்லிய உரையாடல்களைக் கொன்று, தேவையற்ற கசப்புகளையும், தலைமுறை இடைவெளிகளையும் அசுர வேகத்தில் அதிகப்படுத்தியது.

"படிப்பு, வேலை, குடும்பம் எல்லாமே சலிப்பானது; இன்றைய பொழுது மட்டுமே முக்கியம்" என்ற தத்துவம் இளைஞர்களிடம் இத்திரைப்படத்தால் விதைக்கப்பட்டது. இது வாழ்வின் ஆழமான விழுமியங்களை அழித்து, எல்லாவற்றையும் அர்த்தமற்றதாகப் பார்க்கும் ஓர் ஆபத்தான மனநிலையை உருவாக்கியது.

டீன் ஏஜ் பருவத்தின் இயல்பான ஈர்ப்பை தாண்டி, பெண்களை வெறும் உடலியல் நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் பார்வையை இத்திரைப்படம் ஊக்குவித்தது. இது இளம்பருவத்தினரின் பாலியல் ஒழுக்க நெறிகளில் பெருமளவில் அதீத சிதைவை ஏற்படுத்தியது.

ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது அதன் பாலியல் முதிர்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால், பாய்ஸ் திரைப்படம் பதின்பருவத்து இளைஞர்களின் பாலியல் தவிப்புகளை மிகக் கீழ்த்தரமான, வக்கிரமான வணிகப் பொருளாக மாற்றியது.

பெண் என்பவள் ஒரு சக உயிர், அவளுக்கென்று ஒரு தனித்துவமான ஆளுமை இருக்கிறது என்ற புரிதலைத் தராமல், அவளை வெறும் கவர்ச்சிப் பொருளாகவும், ஆண்களின் பாலியல் வேட்கையைத் தணிக்கும் வடிகாலாகவும் மட்டுமே காட்டியது. காதல் என்பது அகம் சார்ந்த ஓர் உன்னத உணர்வு நிலை என்பதிலிருந்து விலகி, அது உடல்களின் வேதியியல் கவர்ச்சி மட்டுமே என்ற பாலியல் வறுமையை அது இளைஞர்களின் நனவிலி மனதில் பதியவைத்தது.

இப்படத்தின் மிக அபாயகரமான உளவியல் தாக்கம் அதன் பின்பாதியில் இருந்தது. எந்தவித முறையான பயிற்சியோ, உழைப்போ, கலையின் மீதான அர்ப்பணிப்போ இல்லாமல் வெறும் அதிர்ஷ்டத்தாலும், ஒரு சில தந்திரங்களாலும் ஒரே இரவில் பாப் இசை உலகையே ஆட்டிப்படைக்கும் சூப்பர் ஸ்டார்களாக அந்த இளைஞர்கள் மாறுவார்கள். இது இளைஞர்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியை வழங்கியது. அந்த வகையில் இத்திரைப்படம் உழைப்பின்றிப் பெறும் வெற்றியே உன்னதமானது என்ற குறுக்குவழி மனப்பான்மை சமூகத்தின் இயல்பான உழைப்புச் சங்கிலியை அறுத்துப்போட்டது.

மேலும், எந்தவித உழைப்போ, அர்ப்பணிப்போ இன்றி, ஒரே ஓர் ஆல்பம் பாடல் மூலமாக ஒரே இரவில் பெரும் பணக்காரர்களாகவும் நட்சத்திரங்களாகவும் மாற முடியும் என்ற உடனடி வெற்றி கலாச்சாரத்தை இத்திரைப்படம் முன்மொழிந்தது. இது உழைப்பு, பொறுமை, தொடர் முயற்சி போன்ற மனிதகுலப் பரிணாமத்தின் அடிப்படை விழுமியங்களை இளைஞர்களின் மனதில் சிறுமைப்படுத்தியது.

பாய்ஸ் திரைப்படம் இளைஞர்களின் சுதந்திரப் போக்கைக் கொண்டாடுவதாக நினைத்துக்கொண்டு, பொறுப்பின்மை, உடனடி இன்பம் மற்றும் குடும்ப சமூக அமைப்புகளுக்கு எதிரான கலகக்குரல் ஆகியவற்றை மிகைப்படுத்திக் காட்டியது. இது தமிழ் திரையுலகிலும், நிஜ சமூகத்திலும் இளைஞர்களின் இருத்தலியல் நோக்கங்களை திசைதிருப்பி, ஒரு தற்காலிக சமூக உளவியல் சீரழிவிற்கு வித்திட்டது என்றால் அது மிகையல்ல.

பாய்ஸ் திரைப்படம் தமிழ் சமூகத்திற்குத் தந்த உளவியல் கொடை என்பது, தன்னல நுகர்வுவாதம், குடும்ப உறவுகளின் மீதான அவநம்பிக்கை மற்றும் பாலியல் ஒழுக்கமின்மை போன்றவையே. ஒரு சமூகத்தின் ஆன்மாவைச் சிதைத்து, அதை வெறும் நுகர்வுப் பெருவெளியின் கூட்டமாக மாற்றுவதற்குத் திரைக்கலை எவ்விதம் பயன்படக்கூடும் என்பதற்கான ஒரு கசப்பான வரலாற்று ஆவணம் இந்தத் திரைப்படம்.

பெற்றோரை எதிர்ப்பதுதான் சுதந்திரம் என்றும், பொறுப்பின்றித் திரிவதே வாலிபத்தின் ஆகச்சிறந்த உத்தி என்றும், ஒட்டுமொத்த தமிழனின் நிஜ வாழ்க்கைக்கான குடும்ப அமைப்பையும் ஒழுக்கத்தையும் அடியோடு சீரழிப்பதுதான் புதிய சினிமா என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற ஹார்மோன் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment