15 Jul 2026

அணுசக்தியை விட அவசியமான ஆற்றல் சக்தி!

அணுசக்தியை விட அவசியமான ஆற்றல் சக்தி!

உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒன்று, பட்டாசு வெடித்தாலே காதை மூடிக்கொள்பவர்கள். இரண்டு, அணுகுண்டு வெடித்தால் மட்டுமே உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்கும் என்று நம்புபவர்கள். நாம் இரண்டாம் வகை.

1998 இல் ராஜஸ்தான் பாலைவனத்தில் மணல் துகள்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, இந்தியா ஆபரேஷன் சக்தியை நிகழ்த்தியது. இந்தச் சக்தியைக் காட்டியபோது, உலக நாடுகள் சிலவற்றுக்கு அழுகையே வந்துவிட்டது.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ செயற்கைக்கோள்கள் வானத்தில் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. ஆனால், நம் ஆட்கள் அந்தச் செயற்கைக்கோள்களுக்கே நாமம் போட்டுவிட்டு, அவை தூங்கும் நேரத்தில் ரகசியமாகச் சோதனையை முடித்தார்கள்.

“அப்போது, நாங்கள் பல ஆண்டுகளாகக் கவனித்தோம், ஆனால் இதைக் கவனிக்க மறந்துவிட்டோம்”, என்று அமெரிக்கா சொன்னபோது, ஒரு சராசரி இந்தியனுக்குக் கிடைத்த ஆத்ம திருப்தி இருக்கிறதே, அது 5ஜி வேகத்தை விட அதிகமானது.

இந்தியா அணு ஆயுதப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்தவுடன், உலகம் ஐயையோ, இது பாவம் என்று தடைகளை விதித்தது. ஜப்பானும் அமெரிக்காவும் பொருளாதார ரீதியாக முறுக்கிக்கொண்டன.

ஆனால் தடைகள் வந்தபோதுதான் நமக்குச் சுயபுத்தி வந்தது என்பதுதான் வரலாற்றுச் சோகம்.

மேடம் க்யூரி நோபல் பரிசு வாங்குவதற்கு முன்பே, அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிய கதைகள் நம்மிடம் உண்டு. இருந்தாலும் கலாம் போன்ற இந்திய விஞ்ஞானிகளின் கனவுகள் மற்றும் முயற்சிகள் எல்லாம் சேர்ந்து சேர்ந்து அணு சக்தி என்பது வெறும் அழிவுக்கான கருவியாக இல்லாமல், இந்தியாவின் கெத்துக்கான குறியீடாக மாறியது.

இன்று நாம் சந்திரயான் 3 மூலம் நிலவின் தென துருவத்தில் சைடு ஸ்டாண்ட் போட்டு நிற்கிறோம். மங்கள்யான் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விசிட் அடித்தோம். ஆட்டோ ரிக்‌ஷா கட்டணத்தை விடக் குறைவான செலவில் விண்வெளிக்குப் போகும் வித்தை தெரிந்த ஒரே இனம் நாம்தான். 104 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏற்றி, இன்னும் இடம் இருக்கு, தள்ளி உட்காருங்க, என்று சொல்லாத குறையாக விண்வெளிக்குப் பார்சல் அனுப்புகிறோம்.

இன்று நம்மிடம் 5ஜி இருக்கிறது, அக்னி ஏவுகணைகள் இருக்கின்றன, பிரம்மோஸ் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்த ஆண்டு ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப்போகிறோம்.

தொழில்நுட்பம் என்பது கத்தியைப் போன்றது. அதை வைத்து காய்கறியும் நறுக்கலாம், கைவிரலையும் பதம் பார்க்கலாம். உலகம் ஒரு சுழற்சி. அன்று அணுவைத் துளைத்தோம், இன்று குவாண்டம் கணினியைத் துளைக்கிறோம்.

முன்னேற்றம் என்பது மொபைல் போனை அடிக்கடி மாற்றுவது அல்ல, நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டை எங்கே கொண்டு செல்கிறது என்பதில் தான் இருக்கிறது.

நிலவுக்குப் போன நாம், ஊரில் இருக்கும் சாலைக் குழிகளைச் சரிசெய்யும் தொழில்நுட்பத்தை எப்போது கண்டுபிடிக்கப் போகிறோம்? ஏனென்றால், அதுதான் அணுசக்தியை விட உண்மையான ஆற்றல் மிக்க சக்தி!

*****

No comments:

Post a Comment