மறுதேர்வு என்னும் மரண லீலை
மனிதன் பிறக்கிறான்; வாழ முயல்கிறான்; ஆனால்
இடையில் ஏதோ ஒரு புள்ளியில் அவன் ஒரு வட்டத்திற்குள் அடைக்கப்படுகிறான். அந்த வட்டத்தை
ஓஎம்ஆர் தாள் என்கிறார்கள். அந்த வட்டத்தை ஒழுங்காகக் கருக்கினால், அதாவது கருப்பாக்கினால்
மட்டுமே மனிதன் இருக்கிறான்.
அதாவது, இந்தியத் துணைக் கண்டத்தில் எதிர்காலம்
என்பது ஒரு மூன்று மணி நேரத் தேர்வு அறையில், நான்கு பக்கக் கேள்விகளுக்கு நடுவே, கருப்பு
மை பேனாவால் வட்டமிடும் புள்ளிகளில் ஒளிந்திருக்கிறது.
இந்த நம்பிக்கையின் உச்சகட்டக் கூத்தே நீட்.
தேர்வு நடக்கும், மதிப்பெண் வரும், இடம் கிடைக்கும்
என்ற எளிய சமன்பாட்டை மாற்றி, தேர்வு நடக்கும், லீக் ஆகும், ரத்தாகும், மீண்டும் நடக்கும்
என்ற புதிய மறுதேர்வு விளையாட்டைத் தேர்வு முகமை அறிமுகப்படுத்திய உடனே, நாடு முழுவதும்
15 மாணவர்கள் தங்கள் வாழ்க்கையையே ரத்து செய்துகொண்டு விட்டார்கள். அதாவது, தற்கொலை
செய்து கொண்டு விட்டார்கள்.
இதில் தமிழ்நாட்டின் தருமபுரி, கிருஷ்ணகிரி
மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் அடக்கம்.
ஆல்பர்ட் காம்யு சிசிபஸ் என்றொரு கிரேக்கக்
கதாபாத்திரத்தைப் பற்றி எழுதியிருப்பார். சாபத்தின் காரணமாக அவன் ஒரு பெரும் பாறையை
உருட்டிக்கொண்டு மலை உச்சிக்குச் செல்வான். உச்சியை அடைந்ததும் அந்தப் பாறை தானாகக்
கீழே உருண்டுவிடும். மீண்டும் அவன் கீழே வந்து அதை மேலே உருட்ட வேண்டும். இது முடிவில்லாத,
அர்த்தமற்ற ஒரு சுழற்சி.
நமது தருமபுரி, கிருஷ்ணகிரி மாணவர்களின் நிலையும்
இதுதான். அவர்கள் பாறையை அதாவது, பாடப்புத்தகங்களை உருட்டிக்கொண்டு மலை உச்சிக்கு அதாவது,
தேர்வுத் தேதிக்கு நகர்கிறார்கள். உச்சியைத் தொடும் வேளையில், கேள்வித்தாள் கசிந்துவிட்டது
என்று சிஸ்டம் அந்தப் பாறையைக் கீழே தள்ளிவிடுகிறது. மீண்டும் முதலிலிருந்து உருட்டு,
அதற்குப் பெயர் மறுதேர்வு என்கிறது தேர்வு முகமை.
மனிதன் பாறையை உருட்டலாம். ஆனால், பாறையே அவனைக்
கேலி செய்யத் தொடங்கும்போதுதான் இருத்தலின் ஆகப்பெரும் வழுக்கல் நிகழ்கிறது. நீ படித்துக்கொண்டே
இரு, நான் ரத்து செய்துகொண்டே இருப்பேன் என்று ஒரு தேர்வு முகமை சொல்லும்போது, வாழ்தல்
என்பது அதாவது தேர்வு என்பது வெறும் அபத்த நாடகமாகிவிடுகிறது. 15 பேர் அந்த மேடையிலிருந்து
பாதியிலேயே இறங்கிவிட்டார்கள். அவர்களுக்கு நாடகம் பிடிக்கவில்லை என்பதை விட, அதன்
முட்டாள்தனம் அலுத்துவிட்டது என்பதே உண்மை.
ஜீன் பால் சார்த்தர் சொன்னது போல, "மனிதன்
சுதந்திரமாக இருக்க தண்டிக்கப்பட்டிருக்கிறான்." ஆனால், இங்குள்ள கல்வி முறையோ,
"நீ சுதந்திரமாகத் தற்கொலை செய்து கொள்ளவாவது அனுமதிக்கப்படுகிறாய்" என்ற
விசித்திரமான தத்துவத்தை முன்வைக்கிறது.
மரணங்கள் எப்போதும் எண்களாக மாற்றப்படும்போதுதான்
அரசாங்கங்களுக்கு எளிதாகப் புரிகிறது. 15 என்பது வெறும் இரண்டு இலக்க எண்தான். ஆனால்,
அந்த எண்களுக்குப் பின்னால் 15 வீடுகளின் அடுப்பங்கரைகளில் இனி ஒருபோதும் வேகாத சோறும்,
எரியாத விளக்குகளும் இருக்கின்றன.
நமது கல்வி முறையின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு
என்னவென்றால், அது மாணவர்களுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, அழுத்தத்தை
மிகத் துல்லியமாகக் கையாளக் கற்றுக் கொடுத்துவிடுகிறது. ஆனால், அந்த அழுத்தமே ஒரு கட்டத்தில்
மரணப் பாசமாக மாறும் என்பதை யாரும் கணக்கில் கொள்வதே இல்லை.
*****

No comments:
Post a Comment