22 Apr 2026

குடிமக்கள் Pass ஆகி Boss ஆக…

குடிமக்கள் Pass ஆகி Boss ஆக…

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்துபோன குழந்தையைத் தேடுவது சுலபம். ஒரு மைக்கில் காபி கலர் சட்டை போட்ட பாப்பா, ஐஸ்கிரீம் கடை அருகே நிற்கிறது என்று சொன்னால் போதும், பெற்றோர் ஓடி வந்துவிடுவார்கள். ஆனால், இந்தத் தேர்தல் திருவிழாவில் குடிமக்கள் தொலைந்து போவதுதான் பெரும் சோகம்.

இங்கே ஜனங்கள் இருக்கிறார்கள், ஆனால் குடிமக்கள் எங்கே? ஜுராசிக் பூங்கா டைனோசர்கள் போல அவர்கள் ஒரு கற்பனை உயிரினமாக மாறிவிட்டார்கள் போலிருக்கிறது.

நமது அரசமைப்பின் முகவுரையானது இந்திய மக்களாகிய நாம் என்று சிறப்பாகத் தொடங்குகிறது. நாங்கள்தான் பாஸ் எல்லாம் என்பதுதான் இதன் ஒன் லைன் சம்மரி. ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இந்த வரியின் அர்த்தம் புரியாமலேயே நாம் காலத்தைக் கடத்திவிட்டோம்.

சட்டம் என்ன நினைத்தது? வெகுமக்களைக் குடிமக்களாக மாற்றுவோம் என்று ஆசைப்பட்டது. ஆனால், நடைமுறை என்ன செய்திருக்கிறது? அவர்களை வெறும் ஓட்டு போடும் வாக்காளர்களாகச் சுருக்கி, இப்போது இலவசங்களுக்கு ஏங்கும் பயனாளிகளாகத் தரம் குறைத்திருக்கிறது.

அரசியல் கட்சிகள் இப்போது ஜனநாயக அமைப்புகள் அல்ல, அவை ஒருவிதமான வழிபாட்டுத் தலங்கள். அங்கே கொள்கை, லட்சியம் போன்றவற்றை எல்லாம் பழைய பேப்பரில் கூடத் தேடிப் பிடிக்க முடியாது. அங்கே இருப்பது தலைவர் வழிபாடு மட்டும்தான்.

மக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல, அரசியல் கட்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மக்கள். ஆனால், இப்போது வண்டி மாட்டை ஓட்டுவதில்லை, மாடு வண்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறது.

ஜனநாயகம் என்பது மக்களின் குரல் ஒலிக்கும் இடமாக இருக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்கவும் அனுமதி இருக்க வேண்டும். ஆனால், ஜனநாயகம் என்பது இப்போது சைலண்ட் மோடில் போடப்பட்ட செல்போன் போல அதிர்ந்து கொண்டே இருக்கிறது, சத்தம் வெளியே கேட்பதில்லை.

எல்லாம் போச்சு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கு நடுவில், டிஜிட்டல் உலகம் ஒரு சின்ன நம்பிக்கையைத் தருகிறது. இது ஒரு மாயக் கண்ணாடி போல. தில்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்து, பக்கத்து வீட்டுப் போர் வரை எல்லாவற்றையும் இது ஒருங்கிணைக்கிறது.

அரசியல்வாதிகள் இதை வாட்ஸ்அப் பார்வேர்டு செய்யப் பயன்படுத்துகிறார்கள். நாமோ இதை வாட்ஸ்அப் விசாரணை செய்யப் பயன்படுத்தலாம். நம்மிடம் மூன்று பிரம்மாண்ட ஆயுதங்கள் உள்ளன.

அவையாவன, என் காசு என்னாச்சு? எனக் கேட்க தகவல் உரிமைச் சட்டம், வேலை ஒழுங்கா நடந்ததா? எனப் பார்க்க சமூகத் தணிக்கை, நீதிமன்றக் கதவைத் தட்ட, பொதுநல வழக்குகள்.

ஆயுதம் இருந்தால் மட்டும் போதாது, அதை அன்லாக் செய்யத் தெரிய வேண்டும். இதற்கு இளைய தலைமுறைக்குக் கொஞ்சம் பயிற்சியும், நிறையத் துணிச்சலும் தேவை.

இலங்கையில் நடந்தது ஒரு சான்று. அங்கே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் வெறும் கட்சி ஆட்கள் மட்டுமல்ல, சிவில் சமூகத்தைச் சேர்ந்த சாமானியர்களும்தான்.

தேர்தல் என்பது ஐந்து வருஷத்துக்கு ஒருமுறை விரலில் மை வைக்கும் சடங்கு மட்டுமல்ல. ஓட்டுப் போட்டதுடன் கடமை முடிந்தது என்று நினைப்பது, கல்யாணம் ஆனதும் வாழ்க்கை முடிந்தது என்று நினைப்பதற்குச் சமம்.

உண்மையான ஜனநாயகம் என்பது கண்காணிப்பதில் இருக்கிறது. ஏமாற்றுவதில் பிஹெச்டி முடித்தவர்களைக் கண்காணிக்க, நாமும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக மாற வேண்டும். அப்போதுதான், காணாமல் போன அந்த இந்தியக் குடிமகனை நாம் பேப்பர் விளம்பரம் இல்லாமலேயே கண்டுபிடிக்க முடியும்! பணநாயகம் மாறி ஜனநாயகம் விடியும்!

இப்போது நோட்டை வாங்காமல் ஓட்டைப் போட்டு, அதன் பிறகு ஓட்டுப் போடப்பட்டவர்களை விடாமல் நோட் பண்ணிக் கொண்டிருந்தால், ஜனநாயகத்தில் குடிமக்கள் Pass ஆவது மட்டுமல்ல, எப்போதும் Boss ஆகவே இருப்பார்கள்.

*****

No comments:

Post a Comment