சென்டிமென்ட் – ஒரு காஸ்ட்லி வைரஸ்!
சின்னப்பனுக்குச் சின்ன வயதிலேயே சேமிப்பு
வியாதி உண்டு. உடைந்த பொம்மை, பேட், பந்து, பேனா, ஸ்கேல், ஷார்ப்பனர் என எல்லாவற்றையும்
வரிசை கட்டி அலமாரியில் பொக்கிஷம் மாதிரி வைத்திருப்பான்.
அப்பா கத்துவார், ஏன்டா இந்தக் குப்பையைத்
தூக்கி ஷோகேஸில் வச்சிருக்க என்று.
இது சித்தப்பா கொடுத்தது, பெரியம்மா கொடுத்தது,
அத்தை கொடுத்தது, மாமா கொடுத்தது, தாத்தா தந்தது ,பாட்டி தந்தது என ஒவ்வொன்றுக்கும்
ஒரு கதை சொல்லுவான். சரியான சென்டிமென்ட் செக்குமாடாக இருந்தான்.
அப்படித்தான் ஊரில் பாரம்பரியமாக இருந்த வீட்டை
அண்ணன், தம்பி, அக்கா, தங்கைகளோடு பாகம் போட்டு விற்க மனம் வரவில்லை. தாத்தா கட்டியது
என இவன் மட்டும் அடம் பிடிக்க, அந்தக் கிராமத்து வீட்டை அப்படியே போட வேண்டியதாயிற்று.
வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போய் இரண்டு
நாள் தங்குவதற்கு பத்து நாள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. செலவு ஐம்பதாயிரம்.
அவன் மனைவி ரங்கமணி டென்ஷனானாள், ஏங்க, இத விட கம்மி காசுல ஹோட்டல்ல ரூம் எடுத்துத்
தங்கியிருக்கலாம். இங்கே தூசியில தும்மி தும்மி என் நுரையீரல் பஞ்சராகுது என்று.
அவள் சொன்னது பிராக்டிகல். சின்னப்பன் பார்த்தது
சென்டிமென்ட்.
கடைசியில் இப்போது கணக்குப் பார்த்த்தால் ஊருக்குப்
போயே பத்தாண்டுகளாகி விட்டன. விளைவு, பத்தாண்டுகளில் அந்த வீடு கறையானுக்கு சிறந்த
உணவானது. ஓட்டடைகளுக்கும், கரப்பான் பூச்சிகளுக்கும், பல்லிகள், வௌவால்கள் மற்றும்
பாம்புகளுக்கும் மாளிகையானது.
அன்று எல்லாரும் சொன்னதைக் கேட்டு வீட்டை விற்று
பாகம் போட்டிருந்தால் எப்படியும் சின்னப்பன் கைக்கு பத்து அல்லது பதினைந்து லட்சம்
வந்திருக்கும்.
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவன்
சைட் பிசினஸ். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த டிவிடி, விசிடி பிசினஸ். இப்போது
அப்படி ஒன்று இருந்ததைச் சொன்னால், பொடிசுகள் கூட அங்கே இங்கே போய் சிரிக்காமல், அந்த
இடத்திலேயே சிரிக்கும். இப்போதெல்லாம் அவற்றைச் சீண்ட எலி கூட வருவதில்லை. ஆனாலும்,
தான் மொத மொதல்ல ஆரம்பிச்ச தொழில் என்கிற சென்டிமென்ட்டில் வருஷா வருஷம் நஷ்டத்தை இன்குபேட்டரில்
வைத்துப் பராமரித்து வருகிறான் சின்னப்பன். அதிலும் ஒரு பத்து அல்லது பதினைந்து லட்சத்துக்கு
மேல் காலி.
ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் ரங்கமணி
எரிச்சலாகச் சொன்னாள், இந்தச் சென்டிமென்ட் உங்களை நடுத்தெருவுல விடப்போகுது. முதல்ல
கடையை மூடுங்க என்று.
சரியாகத்தான் சொன்னாள் ரங்கமணி. கணக்குத் தெரியாத
சென்டிமென்ட் என்பது ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றுவது போல.
யோசித்த பார்த்த போது, அடுத்த வாரம் கடையை
மூடுவது, பூர்வாங்க வீட்டை தற்போது கைக்கு ஐந்து லட்சம் கிடைத்தாலும் போதும் விற்பது
என்ற முடிவுக்கு வந்தான் சின்னப்பன்.
உத்தேச கணக்கு போட்டுப் பார்த்தால் இருபது
முதல் முப்பது லட்சம் வரை தேவையற்ற நட்டம் அவனுக்கு. அதை அப்படியும் சொல்ல முடியாது.
ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொள்ள சின்னப்பன் கொடுத்தடியூஷன் பீஸ்.
இனிமேல் சின்னப்பன் எதையும் சென்டிமென்ட் கண்ணாடியால்
பார்க்கப் போவதில்லை. கணக்குப் போட்டுப் பார்த்துதான் மூச்சு விடப்போகிறான். இப்போதெல்லாம்,
யாராவது வந்து இது உங்க தாத்தா காலத்து என்று ஆரம்பித்தால், உடனே மார்க்கெட் வேல்யூ
என்ன என்று கேட்க ஆரம்பித்து விட்டான் சின்னப்பன்.
இனிமேல் யார் கேட்டாலும் பிசினஸ் இஸ் பிசினஸ்தான்
சின்னப்பனுக்கு.
*****

No comments:
Post a Comment