ஜனநாயகக் கடமையும் கதவு இல்லாத கழிப்பறைகளும்!
நமது நாட்டில் தேர்தல் என்பது ஒரு திருவிழா
என்கிறார்கள். திருவிழா என்றால் அங்கே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இருக்க வேண்டும்.
ஆனால், இந்தத் திருவிழாவை முன்னின்று நடத்தும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்
இது ஒரு கட்டாயக் கலைநிகழ்ச்சி போலத்தான் இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த 1,302 கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு தொகுதிக்குச் சராசரியாக ஐந்தரை கோடி ரூபாய். இவ்வளவு
பணம் இருந்தும், தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு பல இடங்களில் ஒழுங்கான கழிவறை
மற்றும் குளியலறை வசதி கூட கிட்டுவதில்லை என்பதுதான் இந்த டிஜிட்டல் இந்தியாவின் ஆகச்சிறந்த
நகைச்சுவை.
ஏன் இந்தக் கழிவறை மற்றும் குளியலறை வசதி குறித்துக்
குறிப்பிட்டுப் பேச வேண்டியிருக்கிறது என்றால், தற்போதைய தேர்தல் பணியில் 60 சதவீதத்திற்கும்
அதிகமானோர் பெண்கள்.
தேர்தலுக்கு முதல் நாளே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்குச்
சென்று தங்க வேண்டும். அது பெரும்பாலும் ஒரு கிராமத்துத் தொடக்கப் பள்ளியாக இருக்கும்.
அங்கே இருக்கும் கழிப்பறைகள் எல்.கே.ஜி குழந்தைகளுக்கு ஏற்ற அளவில் இருக்குமே தவிர,
வளர்ந்த மனிதர்களுக்கு அல்ல.
ஆண்கள் எப்படியோ சமாளித்து விடுவார்கள். திறந்தவெளி
அவர்களுக்கு உதவலாம். ஆனால், பெண்கள் அதிகாலையில் இயற்கை உபாதைகளுக்காகவும், குளிப்பதற்கும்
பக்கத்து வீடுகளில் தஞ்சம் புக வேண்டியிருக்கிறது. ஜனநாயகத்தின் தூண்கள், அக்கம் பக்கத்து
வீடுகளில் குளிப்பதற்கு அனுமதி கேட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
தேர்தல் ஆணையம் ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக
இருக்கிறது. எந்த ஊழியருக்கு எந்த வாக்குச்சாவடி என்று கடைசி நிமிடம் வரை சொல்வதில்லை.
இது எதற்கு என்றால் முறைகேடுகளைத் தடுக்க! நியாயமான காரணம்தான்.
ஆனால், கிளைமாக்ஸ் எப்படி இருக்கிறது என்றால்,
திடீரென ஒரு மலைக் கிராமத்தையோ அல்லது பேருந்து வசதியே இல்லாத குக்கிராமத்தையோ ஒதுக்கும்
போது, எப்படியோ பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் அந்த டார்கெட்டை ரீச்சாக வேண்டும். அதை
ரீச் செய்வது என்பது ஹைட் அன்ட் சீக் ஒளிந்து விளையாடும் விளையாட்டு போலவே இருக்கும்.
இந்த முறை அந்த விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் மேப் வரை போட்டுக்
கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.
வாக்குச்சாவடியை அடைந்த பிறகு, அங்கு முதல்
நாள் ஏற்பாடுகளை முடித்து விட்டு, மறுநாள் அதாவது தேர்தல் நாளன்று காலை 7 மணி முதல்
மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் வேலை செய்ய வேண்டும். பிறகு பெட்டிகள் எடுக்கும் வரை
காத்திருந்து அந்த ஊருக்கு பை பை சொல்லி விட்டு விடைபெற வேண்டும். அதுவரை பெண்கள்,
அதுவரை பார்த்தறியாக அந்தப் பகுதியில், சரியான கழிவறை வசதி இல்லாமல் போனால், தங்கள்
இயற்கை உபாதைகளோடு ஈடுகொடுத்து நின்றாக வேண்டும்.
தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு வாக்காளர்
விழிப்புணர்வு செய்கிறது. இந்த முறை தேர்தல் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு அடிப்படை
வசதிகள் முறையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்விலும் இருக்கிறது.
1,302 கோடி ரூபாயில் ஒரு சில ஆயிரம் ரூபாய்களைக்
கொஞ்சம் தண்ணீர் வசதிக்கும், கழிப்பறைக்கும் செலவு செய்யும் போது ஜனநாயகம் நன்றாகவே
இருக்கும். அந்தக் கிராமத்து வாக்குச்சாவடிகளான பள்ளிகளும் கொஞ்சம் அடிப்படை வசதிகள்
பெறும்.
இந்த முறை அப்படியான மாற்றங்கள் இருக்கும்
என்று சொல்லப்படுகிறது. அந்த மாற்றம் எப்படி இருந்தது என்பது பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள்
தேர்தல் பணி முடித்து விட்டு வரும் போதுதான் தெரிய வரும்.
*****

No comments:
Post a Comment