லவ் இன்சூரன்ஸ் கம்பெனி –
பிரீமியம் கட்டினால் காதல் கிடைக்குமா?
எல்ஐகே – ஒரு திரைப்பார்வை
விக்னேஷ் சிவன் எப்போதுமே ஒரு கலர்புல் உலகத்தைத்தான் சமைப்பார்.
இந்த முறையும் அதையே செய்திருக்கிறார். ஆனால், இதில் கொஞ்சம் பியூச்சரிஸ்டிக் மசாலா
மிக்சிங் பண்ணியிருக்கிறார். அவர் எப்போதுமே காதல் எனும் பழைய ஊறுகாயை புது ஜாடியில்
போட்டுத் தருவதில் கில்லாடி. இந்த முறை ஜாடி கொஞ்சம் காஸ்ட்லி. 2040 ஆம் வருடத்தில் உலகம் முழுவதும் செல்போனுக்குள்
சுருங்கிவிட்டதாம். இப்போதும் அப்படித்தானே இருக்கிறது என்று லாஜிக் பேசக்கூடாது!
காதலுக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் ஒரு நிறுவனம். அதாவது, உங்கள்
காதலி உங்களைக் கழற்றிவிட்டால் அல்லது காதல் தோல்வியடைந்தால், அதற்கு ஒரு செட்டில்மென்ட்
கிடைக்கும் என்பதுதான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் கான்செப்ட். ஆனால், உண்மையில் படத்தின்
கரு என்னவென்றால், எல்லாவற்றிற்கும் இன்சூரன்ஸ்
எடுக்கலாம், ஆனால் எடுத்த இன்சூரன்ஸை க்ளைம் செய்வதற்குள் நமக்கு உயிர் போய்விடும்
என்பதுதான்.
படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் இன்னும் அந்த லவ் டுடே ஹேங்ஓவரிலேயே
இருக்கிறார். அது அவருக்கு செட் ஆகிறது என்பதுதான்
உண்மை. ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞனின் பதற்றத்தையும், குழப்பத்தையும் அவர் அப்படியே
பிரதிபலிக்கிறார். ஆனால், சில இடங்களில் அவர் ஓவர்-ஆக்டிங் செய்கிறாரா அல்லது கேரக்டர்
அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. கவனிக்க வேண்டிய
குறிப்பு என்னவென்றால், இன்சூரன்ஸ் தொகை அவ்வளவு வராது! கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு
அவர் வளைந்து நெளிந்து கொடுக்கும் போஸ்கள் இருக்கிறதே. அது ஒரு தனி கலை. டியூட் கதாபாத்திரங்களுக்கு
இவர்தான் இப்போது ஆஸ்தான நடிகர் போல.
படத்தின் நாயகி கிரித்தி செட்டி திரையில் வந்து போகிறார். அழகாக
இருக்கிறார். விக்னேஷ் சிவன் படங்களில் நாயகிகளுக்கு அதிக வேலை இருக்காது, நாயகனைச்
சுற்றி ஒரு அழகான வளையமாக இருந்தால் போதும். இதில் கிரித்தி அந்த வேலையைச் செவ்வனே
செய்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் சில சமயம் இழுவையாக இருந்தாலும், எமோஷன் காட்சிகளில்
க்ளிக் ஆகிறார். ஒரு போன் மெமரி புல்லானால் வரும் பதற்றம் அவர் முகத்தில் அச்சு அசலாகத்
தெரிகிறது.
வில்லன் எஸ்.ஜே.சூர்யா. படத்திற்கு ஆக்சிஜன் இவர்தான். அந்த
அலப்பறையான நடிப்பு, பாடி லாங்குவேஜ் எனத் திரையை ஆக்கிரமிக்கிறார். படத்தில் அதிகமாக
கத்துகிறார். ஆனால், ரசிக்க முடிகிறது. படத்தில் அவருக்குப் பெயர் சூரியன். ஆனால் அவர்
பேசுவது, கத்துவது எல்லாம் எரிமலையிலிருந்து வரும் சத்தம் போல இருக்கிறது. டிராகன்
போல சீறுகிறார். மனிதர் எனர்ஜியில் மட்டும் இன்னும் 2024 ஆம் வருடத்திலேயே நிற்கிறார்.
படத்தின் பாதி பலம் அனிருத்தின் மியூசிக். பிஜிஎம்மில் காது
கிழிகிறது, ஆனால் அது ஒரு பெப்பி பீலைத் தருகிறது. அனிருத் ஒரு ரோபோவுக்குக் குரல்
கொடுத்திருக்கிறார். பாடுவது போதாதென்று இப்போது
பேசவும் ஆரம்பித்துவிட்டார். நல்லவேளை, அது ஸ்வீட் சர்ப்ரைஸ்!
காதலுக்கும் இன்சூரன்ஸ் பாலிசிக்கும் முடிச்சுப் போட்ட விதம்
சுவாரஸ்யம். சில காட்சிகள் ஜவ்வாக இழுக்கின்றன. எடிட்டர் கத்தரி போடத் தயங்கியது தெரிகிறது.
ஒரு சயின்ஸ் பிக்ஷன் கலந்த காமெடி என்பதால் லாஜிக் பார்க்கக்கூடாது என இயக்குநர் ஒரு
டிஸ்கிளைமர் போட்டிருக்கலாம்.
நீங்கள் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் டைப்
படங்களை ரசிப்பவர் என்றால், இந்த எல்ஐகே பாலிசி உங்களுக்கு லாபகரமானது.
படத்தின் மைனஸ் பாய்ண்ட் என்னவென்றால், ஒரு ரீல்ஸில் சொல்ல வேண்டிய
விஷயத்தை ஒரு மணி நேரமாக இழுத்திருக்கிறார்கள். பிளாஸ்பேக் ஆழமே இல்லாமல் வந்து போகிறது.
ஏதோ அவசரமாக எடுத்த ஷார்ட் பிலிம் போல இருக்கிறது.
விக்னேஷ் சிவன் நிறைய ஐடியாக்களை வைத்திருக்கிறார், ஆனால் அதை
ஒழுங்காக மூட்டை கட்டத்தான் கொஞ்சம் சோம்பேறித்தனம் காட்டியிருக்கிறார்.
காதலுக்கு இன்சூரன்ஸ் அவசியமோ இல்லையோ, இந்தப் படத்தைப் பார்க்கும்போது
இடைவேளையில் ஒரு காபி குடிப்பதற்கு நல்ல லைப் இன்சூரன்ஸ் அவசியம். விக்னேஷ் சிவன் இன்ஸ்டால்
செய்திருக்கும் இந்த உலகத்தை ஒருமுறை லைக் செய்யலாம், ஆனால் ஷேர் செய்வதற்கு யோசிக்க
வேண்டும்!
சீரியஸாக படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு ரிஸ்க் ஆன முதலீடு!
படத்தை ஒருமுறை பார்க்கலாம். ஆனால், க்ளைம் கிடைக்காது! பாலிசிதாரர்களுக்குப் பாதி
லாபம்!
படத்துக்குப் பத்துக்கு 5½ மார்க்
கொடுக்கலாம் படத்திற்கு, அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா எதற்கென்றால், ரோபோவை நல்ல
நடிகராக்கியதற்கு.
*****

No comments:
Post a Comment