17 Apr 2026

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

வீட்டுக்குள் நிம்மதியாக இருத்தல்!

மனிதர்களைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ரிடையர்மென்ட் ஆகும் வரை வாடகை வீட்டில் வசிப்பவர்கள். வாடகை வீட்டுக்குப் பயந்து ஹோம் லோன் போட்டு இஎம்ஐ கட்டும் இன்ஸ்டால்மென்ட் வீட்டில் வசிப்பவர்கள்.

இரண்டுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் ஒன்றுமில்லை. முதல் வகையினர் அறுபது வயது வரை வாடகை வீட்டில் ஓனர் தரும் டார்ச்சரை அனுபவிப்பார்கள். இரண்டாம் வகையினர் அறுபது வயது வரை பேங்க் மேலாளர் தரும் இஎம்ஐ டார்ச்சரை அனுபவிப்பார்கள். முன்னது உடல்நலத்துக்குக் கேடு, பின்னது மனநலத்துக்குக் கேடு.

இன்றைய இளைஞர்களுக்குச் சொந்த வீடு என்பது ஒரு சென்டிமென்ட் அல்ல, அது ஒரு இருபது காலத் தண்டனை. வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் ஆண்டிலேயே ஹோம் லோன் எடுத்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் அலுவலகத்தில் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களின் இஎம்ஐ அவர்களை தானாகவே அடிமையாக்கிவிடும். மேனேஜர் திட்டும்போது கோபப்படத் தோன்றும், ஆனால் பாத்ரூம் டைல்ஸின் விலை நினைவுக்கு வந்து கோபத்தைத் தணிக்கும்.

இவர்களுக்குச் சுதந்திரம் என்பது என்ன? அடுத்த இருபது வருஷத்துக்கு வேலையை விடமாட்டேன் என்று வங்கிக்கு எழுதித் தருவதுதான்!

இன்னொரு ரகம் உண்டு. அரசு வேலை முடிஞ்சு, வர்ற காசுல ஒரு சின்னதா நாலு செவுரு எழுப்பி நிம்மதியா சாகணும் என்று கனவு காண்பவர்கள். அறுபது வயதில் வீடு கட்டி முடிக்கும்போது, அவர்களுக்குப் பால் காய்ச்சத் தெம்பிருக்காது. அந்த வீட்டு ஹாலில் நடக்கக் கூட மூட்டு வலி அனுமதி தராது. ஒரு வழியாகக் கட்டி முடித்த வீட்டில் அவர்கள் நிம்மதியாக உட்காரும்போது, அவர்களின் பையன் அந்த வீட்டை இடித்துவிட்டு அப்பார்ட்மென்ட் கட்டத் திட்டம் போட்டுக்கொண்டிருப்பான்.

விசயம் என்னவென்றால்,

நீங்கள் வாங்குவது 1200 சதுர அடியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உண்மையில் வாழ்வது அந்த வங்கியின் கணக்குப் புத்தகத்தில் இருக்கும் எண்களுக்குள்தான்.

உங்கள் வீட்டின் சுவருக்கு நீங்கள் அடிக்கும் பெயிண்ட், உண்மையில் உங்கள் ரத்தத்தின் நிறமாகக்கூட இருக்கலாம்.

வாடகை வீட்டில் இருக்கும்போது எப்போ சொந்த வீடு வரும்? என்கிற கவலை இருக்கும். சொந்த வீடு வந்த பிறகு எப்போ லோன் முடியும்? என்கிற கவலை வரும்.

கடைசியில் பார்த்தால், இரண்டு வகையினருமே தங்கள் வாழ்க்கையை ஒரு கான்கிரீட் பெட்டிக்காக அடகு வைக்கிறார்கள். பூமிக்கு மேலே ஒரு வீடு கட்டுவதற்காக, பூமிக்கு அடியில் போவதற்குள் போதும் போதுமென்றாகிவிடுகிறது.

வாடகை வீடாக இருந்தால் என்ன, லோன் வீடாக இருந்தால் என்ன? எப்படியும் ஒரு நாள் எல்லாரும் காலி செய்துவிட்டுப் போகப்போகிற கெஸ்ட் ஹவுஸ்தான் இது. அதற்காக ஏன் இத்தனை முக்கல் முனகல்கள்? வீட்டில் ரொம்ப காசைப் போட்டு அவஸ்தைக்கு ஏன் ஆளாக வேண்டும்?

வீட்டுக்குள் நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். அந்த வீடே உங்கள் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது.

சொந்த வீடா? வாடகை வீடா?

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாடகை வீடு எப்போதும் பெஸ்ட். நீங்கள் வீட்டுக்குப் பெய்ண்ட் அடிக்க வேண்டியதில்லை, பிளம்பிங், எலெக்ட்ரிக் மெயின்டெனன்ஸ் செய்ய வேண்டியதில்லை, டேங்க் கிளினிங் பண்ண வேண்டியதில்லை, எல்லாவற்றையும் ஓனர் பார்த்துக் கொள்வார்.

ஆகவே, இந்த ஓனர் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு ஓனர். வீட்டைக் கட்டிப் போட்டு விட்டு, வெளிநாட்டில் இருக்கும் ஓனர்களும் இருக்கிறார்கள். அவர்கன் வீட்டைப் பிடியுங்கள். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போகும்.

*****

No comments:

Post a Comment