16 Apr 2026

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

டயக்னோசிஸ் – எல்லா நாடுகளிலும் ஓர் எட்டாக்கனி!

நோய்க் கண்டறிதல் என்பது எல்லா நாடுகளிலும் எட்டாக் கனியாகவே உள்ளது. அது அமெரிக்காவாகவே இருந்தாலும் சரிதான். அமெரிக்கா என்றால் நமக்குத் தெரிந்தது அதிநவீன மருத்துவமனைகளும், கண்ணிமைக்கும் நேரத்தில் மரபணுவை வரிசைப்படுத்தும் மெஷின்களும்தான். ஆனால், அங்கும் லட்சக்கணக்கான மனிதர்கள் ஒரு விசித்திரமான நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நரகத்தின் பெயர், பெயரிடப்படாத நோய்.

அலெக்ஸாண்ட்ரா சிபர்லின் எழுதிய தி எலுசிவ் பாடி என்ற புத்தகத்தைப் படித்தால், நீங்கள் இந்த உண்மையை அறியலாம்.

ஏழு வருடங்களாகத் திரட்டிய தகவல்களை வைத்து அவர் ஒரு டயக்னோசிஸ் க்ரைஸிஸ் சித்திரத்தை வரைந்திருக்கிறார்.

புத்தகத்தில் வரும் ப்ராக்டர் உடன்பிறப்புகளின் கதை பகீர் ரகம். அவர்களுக்கு ஒரு மரபணு மாற்றம். விளைவு? அவர்களின் தசைநார்கள் மெல்ல மெல்ல சிமெண்ட் போலக் கல்லாக மாறுகின்றன.

இன்னொரு பக்கம் 30 வயது மார்க். ஒரு காலத்தில் சைக்கிளிங் செய்தவர், இப்போது மூன்று சக்கர வண்டியில் கூட பேலன்ஸ் செய்ய முடியாமல் தள்ளாடுகிறார்.

டாக்டர்களிடம் போனால், உங்களுக்கு ஒன்றுமில்லை, எல்லாம் மனப்பிரமை, என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள். அல்லது, ஒரு ஸ்பெஷலிஸ்ட்டிடம் இருந்து இன்னொரு ஸ்பெஷலிஸ்ட்டுக்கு பந்து போலத் தட்டி விடுகிறார்கள்.

பொதுவாக இது போன்ற புத்தகங்களில் டாக்டர்கள் எல்லாம் மோசமானவர்கள், நோயாளிகள் பாவம் என்கிற ரீதியில்தான் எழுதுவார்கள். ஆனால் சிபர்லின் அப்படிச் செய்யவில்லை. அவருக்கும் டாக்டர்கள் மேல் அனுதாபம் இருக்கிறது.

நிமிடத்திற்கு நிமிடம் ஓடும் கார்ப்பரேட் மருத்துவ உலகில், ஒரு நோயாளியின் கதையை நிதானமாக உட்கார்ந்து கேட்க டாக்டர்களுக்கு நேரமில்லை.

ஒரு எக்ஸ்ரே எடுப்பதற்கான நேரம்தான் இன்று டயக்னோசிஸ் செய்ய ஒதுக்கப்படுகிறது, என்கிறார்கள் நோயாளிகள் பக்கம் நின்று வாதாடும் அனுதாபிகள்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் பீடியாட்ரிக் நியூராலஜிஸ்ட் டயானா செஜாஸ். அவரே ஒரு டாக்டர். தன் கழுத்தில் ஒரு கட்டி இருப்பதை அவரே கண்டுபிடித்துச் சொல்கிறார். சக டாக்டர்கள் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். கடைசியில் அது கேன்சர் என்று தெரிய வருகிறது. ஒரு டாக்டருக்கே இந்த நிலை என்றால், சாதாரண ஆசாமியின் கதி?

அமெரிக்கா மருத்துவத்திற்காக வாரி இறைக்கும் பணம் உலகிலேயே அதிகம். ஆனால், அங்கே நோயைக் கண்டுபிடிப்பதிலேயே இத்தனை ஓட்டைகள்.

இந்தப் புத்தகம் சொல்லும் செய்தி ஒன்றுதான். மருத்துவ உலகம் வெறும் மெஷின்களையும் டெஸ்ட்டுகளையும் மட்டும் நம்பாமல், நோயாளியின் கதையைக் கேட்க மீண்டும் பழக வேண்டும்.

கண்டுபிடிக்கப்படாத நோய் என்பது ஓர் இருட்டு அறை. அதில் டார்ச் அடித்துத் தேடும் முயற்சியே இந்தப் புத்தகத் தேடல்.

உங்கள் உடம்பில் ஏதோ ஒன்று சரியில்லை என்று உங்கள் உள்ளுணர்வு சொன்னால், அதை ஒரு டாக்டர் மறுத்தால், இன்னொரு டாக்டரிடம் போங்கள்.

சில நேரம் மெஷின்களை விட உங்கள் உடம்பு சொல்வது உண்மையாக இருக்கும்!

*****

No comments:

Post a Comment