18 Apr 2026

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

மூளையும் கட்டைவிரலும் – ஒரு டிஜிட்டல் மரணம்!

நவீன மனிதர்களின் ஆகப்பெரிய துயரம் இதுதான். புத்தகம் படிக்க அவர்களுக்கு நேரமில்லை, ஆனால் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், வாட்ஸ்ஆப், ரீல்ஸ் பார்க்க அவர்களுக்கு நேரம் போதவில்லை.

ஒரு புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பிரித்து, முன்னுரையைப் படிப்பதற்குள் அவர்களுக்குக் கொட்டாவி வருகிறது. இந்த எழுத்தாளர் ஏன் இவ்வளவு நீளமாக எழுதுகிறார்? என்று எரிச்சல் படுகிறார்கள்.

அதே மனிதர், யாரோ ஒரு புண்ணியவான் கேமரா முன்னால் நின்று இடுப்பை ஆட்டுவதையோ அல்லது என்னங்க சமையல் என்று கத்துவதையோ இரண்டு மணிநேரம் இமைக்காமல் பார்க்கிறார்.

புத்தகம் என்பது ஒரு மெதுவான பயணம். அது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும். மூளைக்கு வேலை கொடுப்பது என்பது இன்றைய தேதியில் ஒரு தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இன்ஸ்டா, யூடியூப், ரீல்ஸ்? அது ஒரு துரித உணவு. நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் கட்டைவிரல் மட்டும் இயங்கினால் போதும்.

இந்த யூடியூப்காரர்களும், இன்ஸ்டாகாரர்களும், ரீல்ஸ் மகான்களும் ஒவ்வொரு 15 விநாடிக்கும் ஒரு புதிய உணர்ச்சியை சிரிப்பு, அழுகை, எரிச்சல் என்று உங்கள் நரம்புகளுக்குள் ஊசி போட்டு ஏற்றி இறக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கக் குறைந்தது ஒரு வாரம் ஆகும். ஆனால், அதே ஒரு வாரத்தில் நீங்கள் சுமார் பத்தாயிரம் ரீல்ஸ்களைப் பார்த்து, பத்தாயிரம் விதமான முட்டாள்தனங்களைச் சேமித்து வைத்திருக்க முடியும்.

நேரமே இல்லைங்க என்று சொல்பவர்களிடம் அவர்களின் செல்போனில் இருக்கும் ஸ்கிரீன் டைம் ஆப்ஷனைத் திறந்து காட்டச் சொல்லுங்கள். அதில் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் இன்ஸ்டாகிராமிலோ, யூடியூபிலோ, வாட்ஸ்ஆப்பிலோ கழிந்திருக்கும்.

அறிவு என்பது ஒரு பெரிய சமுத்திரம். ஆனால் அதைத் தேடிப் போக யாருக்கும் விருப்பமில்லை. எல்லாரும் அந்தச் சமுத்திரத்தின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு யாரோ துப்பிய ரீல்ஸில், இன்ஸ்டாவில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புத்தகம் படிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திப்பார்கள். ரீல்ஸ் பார்ப்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் அந்தப் பாட்டுக்கு அந்தப் பொண்ணு என்ன ஸ்டெப் போட்டுச்சு என்பது மட்டும்தான்.

நாளை ஒரு போர் வந்தால், நம் இளைஞர்கள் கையில் துப்பாக்கியைத் தூக்குவதற்குப் பதில், எதிரியின் முன்னால் நின்று செல்பி எடுத்து, கரன்ட் மூட் – வார் என்று ஸ்டேட்டஸ் போடுவார்கள் போலிருக்கிறது.

புத்தகம் படிக்க நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்மையில் சொல்வது இதுதான், எனக்கு யோசிக்க நேரமில்லை, என்னை அப்படியே மந்தையாக வாழ விடுங்கள்.

வாழுங்கள். உங்கள் கட்டைவிரல் தேயும் வரை ரீல்ஸ்களைத் தள்ளிக் கொண்டே இருங்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் மூளை தானாகவே அன்இன்ஸ்டால் ஆகிவிடும். அப்போது உங்களுக்குப் புத்தகங்களும் தேவைப்படாது, இந்த வாழ்க்கையும் புரியாது.

நம் கட்டை விரலை விட மூளையைக் கவனிப்பது முக்கியம். அதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்.

******

No comments:

Post a Comment