15 Apr 2026

ஞானபீடக் கூத்து – ஒரு கவித்துவமான அனர்த்தம்!

ஞானபீடக் கூத்து – ஒரு கவித்துவமான அனர்த்தம்!

வழக்கம்போல ஒரு விபத்து நடந்திருப்பதாகச் சிறுபத்திரிகைகள் அலறுகின்றன. இந்த முறை வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கப்பட்டிருப்பதை தீவிர எழுத்தாளர்கள் ஏற்கவில்லை. இது தமிழ் இலக்கியப்பரப்பில் இது ஒரு பூகம்பத்தைக் கிளப்பியிருக்க வேண்டும். ஆனால், உண்மையில் இது ஒரு தேநீர்க்கோப்பைக்குள் விழுந்த ஈயைப் போன்ற சலசலப்பையே உருவாக்கியிருக்கிறது.

சுமார் இருநூறு எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு கண்டன அறிக்கையைத் தட்டச்சு செய்திருக்கிறார்கள். இது தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்கிறார்கள். பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை, ஞானபீடம் என்பது இலக்கியத் தகுதிக்கு வழங்கப்படும் விருதல்ல, அது ஒரு லாபி விளையாட்டுக்கான சான்றிதழ் என்பது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அகிலன் வாங்கியபோது சுந்தர ராமசாமி கிழித்த அதே கிழிப்பை, இப்போதும் யாரோ ஒருவரேனும் பழைய பைலில் இருந்து எடுத்து தூசி தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அகிலன் அன்று பாக்கெட் நாவல் ரகம் என்றால், வைரமுத்து இன்று ரைமிங் ரகம். தரம் மாறவில்லை, தளம் மாறியிருக்கிறது, அவ்வளவுதான்.

ஜெயமோகன் இப்போது ஆக்ரோஷமாக இருக்கிறார். வைரமுத்துவுக்குக் கொடுத்தது அவமானம் என்கிறார். ஆனால், அதே ஜெயமோகனின் பழைய முன்னுரைகளை எடுத்துப் பார்த்தால், வைரமுத்துவின் கவிதைகளில் வெயில் பளீச்சென்று அடிக்கிறதாம். ஒருவேளை, அந்த வெயிலில் ஜெயமோகனின் பழைய நிலைப்பாடுகள் காய்ந்து கருவாடாகிவிட்டன போலும்.

கவிப்பேரரசு மீது மீடூ பாலியல் புகார்கள் ஒரு பக்கம் ஹார்ட் டிஸ்க் போலத் தேங்கிக் கிடக்கின்றன. ஆனால், வைரமுத்துவை இதெல்லாம் பாதிப்பதே இல்லை. அவர் ஒரு டெப்லான் கோட்டிங் மனிதர். புகார்கள் ஒட்டாது, ஆனால் விருதுகள் மட்டும் பிசின் போல ஒட்டிக்கொள்ளும்.

தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல வைரமுத்துவுக்கு ஆரத்தி எடுக்கின்றன. ஆங்கில ஊடகங்கள் கத்தினாலும், நம்மூர் கவிப்பேரரசு விசுவாசிகள் அதைக் காதில் வாங்கிக்கொள்வதில்லை.

அரசு அவரைத் தழுவிக்கொள்கிறது. அறிஞர்கள் அவரைத் தள்ளிவைக்கிறார்கள். ஆனால், இறுதியில் அவரிடம் இருப்பது பதினோரு லட்ச ரூபாயும் ஒரு வாக்தேவி சிலையும்தான்.

நல்ல இலக்கியம் என்பது குடத்தில் இட்ட விளக்கு என்பார்கள். தமிழைப் பொறுத்தவரை, விளக்கு குடத்துக்குள்ளேயே மூச்சு முட்டிச் செத்துப்போக வேண்டும். குடத்தின் மேல் ஏறி நின்று பாட்டுப் பாடுபவருக்கே ஞானபீடம் கிடைக்கும்.

வாழ்த்துக்கள் கவிஞரே, நீங்கள் வைரமாக ஜொலிக்கிறீர்களோ இல்லையோ, ஒரு முத்தாக ஞானபீடத்தைக் கவ்விக்கொண்டீர்கள்!

*****

No comments:

Post a Comment